Pages

யரலவளழ

சில வருடங்களுக்கு முன்பு, நான் வேலை பார்த்த அலுவலகத்தில், ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட ஒரு மேலாளர் ஆங்கிலத்தில் எழுதும் அலுவலகக் கடிதங்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும். “சில்லி மிஸ்டேக்” எனப்படும் அற்பமான தவறுகள் இருக்கும். உதாரணமாக, I comes என்று எழுதுவார். 

சுதந்திரத்திற்கு முன், இந்தியர்கள் எழுதிய ஆங்கிலத்தை பார்த்து அலறித்தான், வெள்ளைக்காரர்கள் இந்தியாவை விட்டு ஓடிவிட்டார்கள் என்று பரிகாசம் செய்வதுண்டு. ஆனால், ஒருவர் தன் தாய்மொழியிலேயே தப்புந்தவறுமாய் எழுதுவது எனக்கு அப்போது ஜீரணிக்க முடியாத ஒன்றாக இருந்தது. பின்னர் வலையுலகிற்கு வந்தபிறகுதான்,  தமிழன்னையும் சில தமிழர்களிடம் இப்படித்தான் பாடாய்ப் படுகிறாள் எனத் தெரிய வந்தது.

நான் ஒன்றும் தமிழில் வித்தகி இல்லைதான். எழுதும்போது நானறியாமல் தவறுகள் நேர்ந்திருக்கலாம். ஆனாலும், வலைப்பக்கங்களிலோ, முகப்பதிவுகளிலோ சிலர் தமிழில் அதிகப் பிழையுடன் எழுதியிருப்பதைப் பார்க்கும்போது, தெரிந்தவர்களாக இருந்தால், சுட்டிக் காட்டுவதுண்டு.

ஆனால், வழக்கமாகவே பிழையுடன் எழுதப்படுவதைப் பார்க்கும்போது நமக்குக் கோபம் வருவது இயல்பு.

தமிழ் தெரிந்த நமக்கு, தமிழ் பிழையாகப் பேசப்படுவதைக் கேட்கும்போதும்  எரிச்சல் வரும். வட்டார வழக்குகள் வேறுபடலாம், அதில் தவறில்லை. ஆனால் எழுத்து உச்சரிப்புகள் மாறாதல்லவா?

வாழைப்பழம் என்பதை, ‘வாயப்பயம்’ என்று சொல்வதைக் கேட்கும்போது நாராசமாக இருக்கும்.  இதை கல்வியறிவில்லாதவர் சொன்னாலோ, ஏன் கற்றவரே ஆனாலும் தனிப்பட்ட உரையாடல்களின்போது இப்படி உச்சரித்தாலோ நாம் கண்டுகொள்வதில்லை. ஆனால், ஒரு மேடைப் பேச்சின்போது அல்லது முக்கியக் கலந்துரையாடலின்போது அல்லது உரையாற்றும்போதோ  இவ்வாறு பேசினால் எப்படி இருக்கும்??

செந்தமிழில்தான் பேச எழுத வேண்டுமென்று எதிர்பார்க்கவில்லை; ஆனால், கொடுந்தமிழ் ஆக்காமலிருக்க வேண்டுமல்லவா?


ழுதுவதை விடுங்கள், அதில் தவறுகள் நேர்வது ஒன்றும் உலக அதிசயமல்ல. இப்போதெல்லாம் கையால் எழுதுவதை விட, கணினியில் டைப் செய்வதே அதிகம். அதை எழுதும்போதே திருத்தித் தர செயலிகளும் உள்ளன. அதையும் மீறி தவறு இருந்தால், “மொபைல் டைப்பிங்” என்று சமாதானம் சொல்லிக்கலாம்.

ஆனால், ஆங்கிலமோ, தமிழோ - எழுதியிருப்பதைப் பார்த்து வாசிக்கும்போதும் தப்புந்தவறுமாக வாசித்தால், கேட்பவருக்கு எப்படியிருக்கும்?  ”மணிமேகலை”  எழுதிய சீத்தலைச் சாத்தனார், இம்மாதிரி பிழையான பாடல்களைக் கேட்டால், தம் தலையில் எழுத்தாணியால் குத்தி, தலையைப் புண்ணாக்கிக் கொள்வாராம் என்று ஒரு வதந்தி உண்டு. அதேபோல, நமக்கும் சுவற்றில் முட்டிக் கொள்ளலாமா என்றுதான் இருக்கும். (சீத்தலை = சீர்+தளை)

ஒரு படத்தில் விவேக் செய்தி வாசிப்பாளராக நேர்முகத் தேர்விற்குச் செல்லும் காட்சி நினைவுக்கு வருகிறது. அதில் அவர் சொல்லும், “தமிழ் மேலே புல்டோசர் விட்டு ஏற்றுவது” என்கிற வசனம்தான் இங்கு பொருந்தும்.சுமார் 30 வருடங்களாக குர் ஆனை அரபு மொழியில் ஓதி வருகிறேன். பிறந்ததிலிருந்து பேசி, எழுதி, படித்து, சுவாசித்து வரும் தமிழிலேயே நான் புலமை பெறவில்லை எனும்போது, கேள்வியறிவைக் கொண்டு மட்டுமே வாசித்து வரும் அரபு மொழியில் புலமை இருக்குமா என்ன?  தமிழர்களாகிய நாம் ஆங்கிலம் அல்லது ஹிந்தி பேசும்போது, தமிழின் சாயல் வருவது தவிர்க்க முடியாது. அந்தந்த மொழிக்குறிய சிறப்பு எழுத்துகளை மிகச் சரியாக உச்சரிப்பதற்கு, அந்த மொழியைப் பேசுபவர்களுடன் பழகினால்தான் ஓரளவு திருத்தமாக உச்சரிக்க முடியும்.
 

அரபுக்கும் அதேதான். இணையம் வந்தபின்பு, வீடியோக்களில் சரியான உச்சரிப்புடன் குர் ஆன் ஓதப்படுவதைக் கேட்டு முடிந்தவரை திருத்திக் கொள்ள நினைப்பதுண்டு.  தனியாக நாமே ஓதிக்கொள்வதால், நம் உச்சரிப்பைச் சரி செய்துவிட்டதாகத்தான் நமக்கு தோன்றும்.  ஆனால்,  உரிய ஆசிரியர்களிடம் பயிற்சி எடுத்தால்தான் உரிய உச்சரிப்பு கைவரும் - ஐ மீன் - நாக்கில் வரும்.


ஏனெனில் அரபி மொழிக்கென பல சிறப்பு எழுத்துகள் உண்டு. தமிழுக்கு ல-ள-ழ போல. நமக்குப் பரிச்சயமான தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில்  அவற்றிற்குச் சமமான எழுத்துகள் இல்லை என்பதால், ஆரம்பத்திலேயே பழகாவிட்டால் பின்னர் சரியான உச்சரிப்பு கொண்டு வருவது மிகச் சிரமமானது.

சமீபத்தில், இதற்கான பயிற்சி வகுப்பில் சேர்ந்திருக்கிறேன். நான் ஓதுவதைப் பார்த்து - கேட்டு, ஆசிரியர் ஓடிவிடுவாரோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. அப்படியாக இருக்கிறது என் உச்சரிப்பு!!  என் உச்சரிப்பைத் திருத்த அவர் படும் பாட்டைப் பார்க்க எனக்கே பாவமாக இருக்கிறது. ஐந்தில் வளையாத நாக்கு, ஐம்பதென்ன, நாற்பதில்கூட வளைவது ‘மலையைப் புரட்டுவதை’விட கடினமானது.

ஒவ்வொரு முறை நான் ஓதிக் காட்டுவதும், அவர் திருத்துவதும்....  ‘இம்சை அரசன்’ படத்தின் “ஞானப் பால் - ஆனைப்பால்” காட்சி தான் ஞாபகம் வருகிறது. ஆனால், இங்கே “முடியல...” என்று அலுத்துக் கொள்வது நான்தானே தவிர, ஆசிரியை அல்ல. இந்தப் பணியில் பல வருடங்களாக இருக்கும் அவர் என்னைப் போல எத்தனைப் பேரைப் பார்த்திருப்பார்!!முதல் வகுப்பிலேயே ஆசிரியை சொன்னார், பிறப்பால் அரபிகளாகிய அவர்களிலேயே அரபியைச் சரியாக உச்சரிப்பவர்கள் மிகக் குறைவு என்றும், ஆகையால் நாங்கள் மனந்தளர வேண்டாம் என்று. அதுவும், சமீபகால ஆங்கில மோகத்தால், இளைய தலைமுறை அரபி மொழி பேசுவது குறைந்து வருவதாகவும் வருத்தப்பட்டார். அட, நீங்களுமா!! என்று நினைத்துக் கொண்டேன்.

வகுப்பில் நாங்கள் ஓதிக்காட்டும்போது அவர் முகத்தில் என்னென்னவோ உணர்ச்சிகள் தோன்றும். சின்னப் பிள்ளைகளாக இருந்தாலாவது, தலையில் குட்டி அல்லது திட்டி திருத்தலாம். நாலு கழுதை வயசில் உள்ள என் போன்ற மாணவிகளை, திட்டவும் முடியாமல் கோபப்படவும் முடியாமல் அவர் தவிக்கிற தவிப்பு இருக்கே... அதுக்காகவாவது சீக்கிரம் திருத்திக்கணும்.   பேச்சு சரியா வராத சின்னக் குழந்தைகளுக்கு நாக்கில் வசம்பு தடவினா திருத்தமா பேச்சு வரும்னு சொல்லுவாங்க. இந்த வயசுக்கு அது வொர்க் அவுட் ஆகுமான்னு தெரியலையே!!

அதுலயும்,  சரியாக அவர் எனக்கு சொல்லித் தரும்போதுதான், நடிகர் விஜயகாந்தின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து வலையில் காணப்படும் போஸ்டர்கள் வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது!! சரியாக உச்சரிக்கத் தெரியவில்லையே என்கிற அவமான உணர்ச்சி ஒருபக்கம்; இந்த ஜோக் விவகாரங்கள் வேறு நினைவுக்கு வந்து தொலைவதால் சிரிப்பைக் கஷ்டப்பட்டு அடக்கவேண்டிய நிலை ஒருபக்கம்.இந்த மாதிரி ஜோக்குகள் எழுதலைன்னாலும், அதைப் பார்த்து சிரிச்ச பாவத்துக்குத்தான் இப்படி படுறேன் போல.  நல்லவேளை அரேபியர்களுக்கு இந்த விஜயகாந்த் மேட்டர்லாம் தெரியாது. இல்லைன்னா, நம்மளை வச்சும் இந்த மாதிரி காமெடி போஸ்டர்கள் பண்ணிருப்பாங்க!!

Post Comment

முகமலர் இற்றைகள் - 3
எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும். ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம். நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க. தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.

September 12, 2013

“.... அவனே (யாவருக்கும்) உணவளிக்கிறான்; அவனுக்கு எவராலும் உணவளிக்கப் படுவதில்லை”

”இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை;” — feeling amused.
September 15, 2013
சென்ற தி.மு.க. ஆட்சியில் தினமும் நான்கு மணிநேரம் கரண்ட் கட். ‘நாங்க ஆட்சிக்கு வந்தா மின்சாரத் தடையே இருக்காது’ன்னு சொன்ன அ.தி.மு.க.வின் ஆட்சியில், அது ”வளர்ச்சி” அடைந்து 12-14 மணி நேரம் வரை ஆனதால், தமிழர்கள் ஆற்காட்டாரிடம் மானசீகமாகவும், போஸ்டர் அடிச்சு ஒட்டியும் மன்னிப்பு கேட்டார்கள்.

#பெட்ரோல்_விலை_மற்றும்_வரவிருக்கும்_எலெக்‌ஷன்!!
#சூடு_கண்ட_பூனைfeeling determined.


September 23, 2013
அவ்வப்போது மகன்களை அதீத பாசத்துடன் ”அறிவுக்கொழுந்து” என்று “பாராட்டுவது” உண்டு. எப்போது கேட்டுக் கொண்டு சும்மா இருக்கும் பெரியவன், இன்று திடீரென்று “வேப்பங்கொழுந்து தெரியும்; (மாசத்துக்கொருக்க சாப்பிடுவதால்) அதென்ன அறிவுக் கொழுந்து?” என்று கேட்டதில் கொஞ்சம் திக்குமுக்காடித்தான் போனேன். உடனே சமாளித்து, ”கொழுந்துன்னா அப்பதான் வளர்ந்து வரும் இளம் இலைன்னு அர்த்தம். ஆள் மரம் மாதிரி வளந்திருந்தாலும், அறிவு மட்டும் இன்னும் கொழுந்து ரேஞ்சுக்கே இருக்க்கிறவங்கதான் அறிவுக்கொழுந்துகள்!!!”

#ஃபீலிங்_தமிழம்மா....

(அடுத்த பகுதிகளில் ‘மடச்சாம்பிராணி’, ‘விளக்கெண்ணெய்’ ஆகியவற்றுக்கான விளக்கங்களைப் பார்க்கலாம்.)

October 2, 2013

மீட்டிங், ட்ரெயினிங், பார்ட்டி என்ற பெயரில் வாரத்துக்கு ஒருநாளாவது ‘நல்ல’ சாப்பாடு கிடைத்து விடுகிறது - அவருக்கு. — feeling jealous.

September 29, 2013

பாலிலிருந்து வெண்ணெய் செய்வது(?) எப்படி என்று தெரியும்தானே? பாலைத் தயிராக்கி, மோராக்கி, மோரைக் கடைந்தால் கிடைப்பது வெண்ணெய் - Butter!! டயட்டிங் ஆரம்பித்தபின் செய்த ஆராய்ச்சியில், “Peanut butter" எனப்படும் வேர்க்கடலையிலிருந்து கிடைக்கும் ‘வெண்ணெய்’ டயட்டுக்கு உகந்தது என்றறிந்ததில், அதுவும் தினப்படி காலை உணவில் சேர்ந்துகொண்டது.

பாலிலிருந்து வெண்ணெய் எடுக்கும் முறை மட்டுமே தெரியும் என்பதால், ‘வேர்க்கடலை வெண்ணெய்’ என்பதும் இதே போல ‘கஷ்ஷ்ட்ட்டமான செய்முறை’ கொண்டது என்றே நினைத்திருந்தேன். அதனால் அதன் செய்முறை பற்றி ஆர்வம் காட்டவில்லை.

சமீபத்தில், @Geetha.achalrecipes தனது பதிவில், Almond butter - பாதாம் வெண்ணெய் செய்முறையைப் பதிந்திருந்தார். மிக மிக இலகுவாய் இருந்தது. அதைப் பார்த்ததும்தான் இந்த ட்யூப்லைட்டுக்குள்ளும் ஒரு ஃப்ளாஷ்!! அப்ப, ‘வேர்க்கடலை வெண்ணெயும்’ இப்படித்தான் ஈஸியா இருக்குமோன்னு இணையத்தில் தேடியதில்... ஆமாம், பயங்கர ஈஸி!! வேர்க்கடலையை மட்டும் மிக்ஸியில் போட்டு சிறிது நேரம் அரைத்தால், "Peanut Butter!!" தயார்!!

இதுவரை நான் வாங்கிவந்த சுவையான ரெடிமேட் வேர்க்கடலை வெண்ணெயில் சேர்க்கப்பட்ட பொருட்கள் கீழே:

Sugar
Corn syrup
Hydrogenated oils
Molasses
Salt
Citric acid
Pectin
Pottasium Sorbate
Sodium Citrate
Flavour

நான் செய்ததில் இது எதுவுமே இல்லை, வேர்க்கடலை மட்டுமே!! எந்த additive-ம் இல்லை என்பதால், உடல்நலத்திற்குக் கேடு இல்லை; அதே சமயம் சுவையும் இல்லை!! அவ்வ்வ்வ்..... ஆமாம், இதுதான் ஒரிஜினல் செய்முறை என்றாலும், இதுவரை “கூடுதல் சுவையூட்டும் பொருட்கள்” சேர்த்துச் செய்தவற்றையே உண்டு பழகிவிட்டதால், இது சுவை குறைவாக இருக்கிறது!!!

இருந்தாலும், இதையே இனி பின்பற்றலாம் என்றிருக்கிறேன். இது மட்டுமல்ல, பீட்ஸா, நக்கெட்ஸ், பர்கர்.... ஏன் பட்டர் சிக்கன், நாண் இந்திய வகைகள்கூட வீட்டில் செய்யும்போது கடையில் வாங்கும் சுவை வருவதில்லை. இருப்பினும், ஆரோக்கியம் கருதி நாக்கைக் கொஞ்சம் சுருட்டி ஓரமா வச்சுகிட்டு சாப்பிட்டுகிடுறோம்.

”சப்புனு இருந்தாலும், நானே செஞ்சது”

feeling accomplished.


October 9, 2013

அம்மா சாப்பிடட்டும்னு பிள்ளைகள் விட்டு வச்சிருந்த (கடையில் வாங்கிய) கடைசி இனிப்பு...
......
பிணைமா னினிதுண்ண வேண்டிக் - கலைமாத்தன்
கள்ளத்தி னூச்சுஞ் சுரமென்பர் காதல
ருள்ளம் படர்ந்த நெறி.

இதுவும் காதலே..... — feeling blessed.
இதுவே வீட்டுல செஞ்சதுன்னா, முழுசையும் எனக்கே விட்டுக் கொடுத்துருவாங்க!! பாசக்காரப் பயலுவோ...

October 10, 2013

மறைந்த விநோதினியின் தாய் சரஸ்வதியின் தற்கொலை குறித்து விகடனில்::
_________________________________________
''...சிகிச்சையின்போது உதவுவதற்காக, 'ஹெல்ப் வினோதினி டாட் காம்’ என்ற வெப்சைட் ஆரம்பித்தனர் அவரது உறவினர்கள். ஏராளமான வெளிநாடு மற்றும் உள்நாட்டு தமிழ் அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் அளித்த நன்கொடை கோடிகளைத் தாண்டியது. பிரதமர் ந¤வாரண ந¤தி, முதல்வர் நிவாரண நிதி என அரசு தரப்பில் இருந¢தும் உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில்தான் குடிப்பழக்கம் கொண்ட வினோதினியின் தந்தை ஜெயபால், பணத¢தை எடுத்து செலவு செய்திருக்கிறார். கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவுகிற வகையில்தான் இதை செலவுசெய்ய வேண்டும் என்று சரஸ்வதியும் கண்டிப்புக் காட்டியுள்ளார். ... இறந்த பிறகும் பணத்தை எடுத்து செலவு செய்திருக்கிறார்கள்.

... எல்லாவற்றையும் நிர்வகிப்பது அவர்களது தூரத்து உறவுக்காரரான ரமேஷ். வங்கிக் கணக்கில் இப்போது 67 லட்சத்துக்கு மேல் இருக்கிறது. இவர்கள் எடுத்து செலவுசெய்ததைப் பார்த்து வங்கியினர், 'வினோதினி ஆசிட் வீச்சு வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால், இப்போது பணத்தை எடுக்க முடியாது’ என தடை விதித்தனர். நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான், வினோதினி பெயரில் ஆரம்பிக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சட்டப்படி உரிமம் வாங்கி இருக்கிறார்கள்.”
_____________________________________________

பணம், பத்து என்ன அதுக்கு மேலேயும் செய்யுமாம். — feeling depressed.

October 14, 2013

தெரிந்த குடும்பத்தில் ஒரு மாணவி, எதிர்பாராதவிதமாக கல்லூரித் தேர்வில் முக்கியமான இரு பாடங்களில் தோல்வியடைந்துவிட்டாள். மாணவியைப் போலவே, வீட்டினருக்கும் அதிர்ச்சிதான் என்றாலும், மாணவியைத் தேற்றும்விதமாக ஆறுதலாகவே நடந்துகொள்கின்றனர். மாணவியின் தோழி, மாணவியின் அம்மாவிடம், “உங்கள் மகள் தற்கொலை செஞ்சுக்க மாட்டாள்ல?” என்று கேட்கிறாள்!!!!!!

பிரச்னைகள் வரும்போது தற்கொலை (முயற்சியாவது) செஞ்சுகிட்டாதான் ”மானஸ்தி” போல!! — feeling meh.


October 17, 2013

நாற்பது வயதுக்கு மேல், கண்ணாடி அணியாமல், சின்ன எழுத்துகள் சரியாகத் தெரிவதில்லை. வாழ்க்கையின் சின்னச் சின்ன குறைகளும் பெரிதாகத் தெரியாமல் போக ஆரம்பிக்கும் காலமும் அதே நாற்பதில்தான்!! — feeling blessed.

Post Comment

என்ன விலை அழகே..??
சில மாதங்களுக்கு முன்பு, சின்னவனுக்கு நெற்றியில் ஒரு சின்ன கொப்புளம் வர, அதற்காக மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தோம். பரிசோதனைக்குப் பின், கொப்புளத்தைச் சிறு அறுவை சிகிச்சை செய்து நீக்கியாக வேண்டும் என்று சொன்ன மருத்துவர், தன் பேச்சினிடையில் ஒரு ஏழெட்டு முறையாவது “கண்டிப்பாக முகத்தில் தழும்பு வரத்தான் செய்யும்; அதுக்கு ஒண்ணும் செய்ய முடியாது” என்று சொல்லிவிட்டார்.

நான் அறுவை சிகிச்சை, அனஸ்தீஷியா என்ற கவலையில் இருந்ததால் அதைப் பற்றிக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் சொல்லவும், ”ஏன் டாக்டர், தழும்பு இருந்தா என்ன? அதனால வேற எதும் பிரச்னை வருமா?” என்று நான் கேட்க... டாக்டர் ஒருமாதிரி ஜெர்க் ஆகிப்போனார். பிறகுதான் புரிந்தது.  அறுவை சிகிச்சை நிபுணரான அவரிடம் வருபவர்கள் அநேகமாக எல்லாருமே சொல்லும் முதல் கண்டிஷன், “தழும்பு வராத மாதிரி ஆபரேஷன் பண்ணுங்க” என்றுதானாம்!!

”அதனால் வருபவர்கள் எல்லோரையுமே, அடுத்த ரூமில் இருக்கும் ப்ளாஸ்டிக் சர்ஜனிடம் அனுப்பி விடுகிறேன். கீழே விழுந்து முகத்தைக் கிழித்துக் கொண்டு வரும் சிறுவர்களுக்குக்கூட தையல் தழும்பு தெரியக்கூடாது என்று பெற்றோர் சொல்கிறார்கள்.” என்று வருத்தப்பட்டுச் சொன்னார்!! அழகு படுத்தும் பாடு!!

ன் பெரியவனுக்கு, ஒன்றிரண்டு பற்கள் மட்டும் முன்பின்னாக இருக்கும். அதனால் பிரச்னைகள் இல்லை. ஆனால், ஒரு நண்பர் குடும்பத்தினர், என்னைப் பார்க்கும்போதெல்லாம், அவனது தெற்றுப்பல்லைச் சரியாக்கும்படி என்னை வலியுறுத்துவர். அதற்குக் காரணமென அவர்கள் சொல்வது, பேச்சு அல்லது உண்பது அல்லது பற்தூய்மை என்பவை அல்ல. நாளை அவன் வேலைக்கு இண்டர்வியூ போகும்போது, பல்வரிசை சரியா இல்லன்னா, அவனுக்கு Self-confidence இருக்காதாம்!! ஙே....

இப்ப ட்ரெண்ட் என்னன்னா,  தெத்துப் பல் ஒன்றுகூட இல்லாத பல்வரிசை இருக்கிறவங்ககூட “க்ளிப்” மாட்டிட்டு இருக்காங்க!!  ”அழகான” பல்வரிசைக்காகவாம்!! எனக்கு அதுல ஆச்சரியம் என்னன்னா,  பல்வலி வந்தாலே டாக்டர்கிட்ட போகப் பயம் - ஊசி போடுவாங்களே... அதுவும் கத்தமுடியாதபடிக்கு வாயத் திறந்து வச்சுல்ல போடுவாங்க!!  இதுவே, பல்வரிசையைச் சரிபண்ணனும்னா, எத்தனை ஊசி போடணும், எத்தனை பல் எடுக்கணும், அந்த க்ளிப்பை மாட்டி வச்சுகிட்டு சாப்பிடப் படுகிற அவஸ்தை இருக்கே... எப்பா....  அதைவிட முக்கியமாக அதற்கு ஆகும் செலவு!! ஆனா, “அழகு” என்ற ஒன்றுக்காக வலி, சிரமம், செலவு எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளத் தயாராக இருப்பவர்களைப் பார்க்கும்போது வருவது ஆச்சரியமா, அதிர்ச்சியா??!!

சென்ற வருடம் உறவு வட்டத்தில், ஒரே சமயத்தில் மூன்று குழந்தைப் பேறுகள் இருந்தன.  ஒருவரின் குழந்தை,  பிறந்து சில நாட்களில் இதயக் கோளாறு காரணமாய் இறந்துவிட்டது. இன்னொருவருக்கோ, சில பிரச்னைகளால் குறைமாதத்தில் பிறந்து, தொடர் ஆஸ்பத்திரி வாசம் என்று சிரமப்பட்டார்கள்.  இதையெல்லாம் யோசித்துக் கொண்டே, மூன்றாமவருக்கு தொலைபேசி, குழந்தை நலமா என்று விசாரித்தேன். பேசியவர், “நலம்தான், ஆனா...” என்று இழுத்தார்.

பதற்றத்தில், “என்னாச்சு” என்று கூட கேட்க முடியவில்லை என்னால். “ஆனா, கறுப்பா இருக்கு. பொம்பளப் புள்ள கறுப்பா பிறந்திருக்கேன்னு கவலையா இருக்கு” என்றார்!! அவரைச் சொல்லிக் குற்றமில்லை.  மேற்சொன்ன இரு நிகழ்வுகளையும் சொல்லி,  ஆரோக்கியமாய் அதுவும் சுகப்பிரசவமாய்ப் பிறந்ததே பெரிதல்லவா என்று கூறினேன்.  இந்தியா போகும்போதெல்லாம், சிலர் என்னிடமே  ”உன் மகன் கறுப்பா ஆகிட்டே வரான், அதைத் தேய் இதைக் குடு”ன்னு ஒரே டார்ச்சர்!!


இப்படி அழகு, அழகு என்று ஒரு மாயையில் மூழ்கிக் கிடப்பவர்களைக் குற்றம் சொல்வதா, அல்லது சமூகம்தான் அதற்குக் காரணம் என்று சொல்லி அவர்களை நியாயப்படுத்துவதா எனப் புரியவில்லை. ஆனால் ஒரு விஷயம், இந்த அழகு என்பது, பலருக்கும் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போதுதான் தேவைப்படுகிறது. வீட்டினுள் குறைந்தபட்ச சுத்தமாகக் கூட இருக்க முடியாதவர்கள், புற இடத்தில் மட்டும் அழகைப் பேணுவது புதிரானது.புறஅழகு மட்டுமே இவ்வுலகில் பிரதானமாக இருப்பதன் தொடர்ச்சிதான், “ஆஸிட் வீச்சு”களும். காண்டாக்ட் லென்ஸ்கள்கூட.  அதிலும் இந்தப் புற அழகை, தன்னம்பிக்கையோடு தொடர்புபடுத்தும் வியாபாரத் தந்திரத்தை என்னவென்பது. சிவப்பாய், அழகாய் இருப்பதுதான் Confidence-ஆம்!! அதைப் புரிந்துகொள்ளாத இளைய தலைமுறையைக் கண்டு நம் மனம் பதறுகிறது.தடுப்பூசி காணாத சென்ற தலைமுறைகளில், ”பெரியம்மை” என்றும் ஒரு நோய் இருந்தது. இந்நோயால் தாக்கப்பட்டவர்களின் முகங்கள் முழுதும் அம்மைத் தழும்புகளால் நிறைந்திருக்கும். பெண்களே ஆயினும், அத்தழும்புகள் அவர்களின் திருமணத்திற்கு ஒரு போதும் தடையாக இருந்ததேயில்லை!! இன்று...???

Post Comment

டவுட்ஃபுல் டயட்
"ங்க இது சரிவருமா...”

“அதெல்லாம் சரியாத்தான் இருக்கும்..”

“இல்லை, இதுக்கு முன்னாடியும் பலமுறை முயற்சி பண்ணியும்... ஒண்ணும் பிரயோஜனம் இல்லை.. அதான் டவுட்டா இருக்கு..”

”இந்த வாட்டி கண்டிப்பாச் சரியா வரும். கவலைப் படாதே..”

“அதில்லைங்க......”

“ஸ்ஸ்... என்ன நீ? புருஷன் ஒரு நல்ல காரியம் செய்யப்போறான்னா, அதுக்கு மனைவி “சென்று வா, வென்று வா”ன்னு பக்கபலமா நிக்கணும். அத விட்டுட்டு, “போகாதே போகாதே என் கணவா”ன்னு பத்மினி மாதிரி புலம்பக் கூடாது!!”

“ஆங்... நீங்க மட்டும் போருக்குப் போறதுன்னா, நான் ஏன் தடுக்கப் போறேன்... நல்லா போயிட்டு வாங்கன்னு ஜந்தோஜமா அனுப்பி வைப்பேன்.. இங்க என்னையுஞ் சேத்துல்ல இழுக்குறீங்க...”


“இதென்ன போருக்குப் போற அளவுக்குக் கஷ்டமா? டயட் சமையல்தானே?”

“ஆமா.. அன்னாடம் சமையலே ஒரு குருஷேத்திரமாத்தான் இருக்கு!! சாதாரண சமையலுக்கே நாக்கு தள்ளும்.. இதிலே நீங்க வேற டாக்டர் தந்தாருன்னு டயட் சமையல் லிஸ்டை நீட்டுறீங்க..... ஏந்தான் ஆண்டவன் எனக்கு இப்பிடிலாம் சோதனைகள் தர்றானோ.. இதுக்கு நிஜப் போர்க்களமே பரவால்லை... அங்கல்லாம் சமைக்க வேண்டாமே”

புலம்பிக் கொண்டே “டயட் லிஸ்ட்” மீது பார்வையை ஓடவிட்டேன். அதிர்ந்து போய் அலறினேன்!!

“சந்தேகமேயில்லை, இந்த டாக்டர் போலி டாக்டர்தான்!! எங்கப் போய் பிடிச்சீங்க இந்த டாக்டரை? வாங்க உடனே ஒரு “வாசகர் கடிதம்” எழுதுவோம்!!” 


“ஏய், நிறுத்து...நிறுத்து.... போலி டாக்டரா.. என்ன சொல்றே?”

“ஆமாம், டயட்னா என்ன? அசைவமே சாப்பிடாம, காய்கறி, பழங்களைப் பச்சயா சாப்பிடுறதுதானே? அதிலயும் கேரட்தான் நிறையச் சாப்பிடச் சொல்வாங்க. இந்த டாக்டர் என்ன எழுதிருக்கார் பாருங்க... காலையில் முட்டை, மதியம் சிக்கன்-மட்டன், ராத்திரி மீனுன்னு மூணுவேளையும்  அசைவம் அதுவும் தெனமும் சாப்பிடச் சொல்லி எழுதிருக்கார்!! அதுவுமில்லாம, கேரட்டே சாப்பிடக்கூடாதாம்!! என்ன கொடுமை இது??”

"இவ ஒருத்தி... எப்படி விளங்க வைப்பேன்... ஆ.. காட்டுல பாத்தீன்னா, யானை இலை தழை மட்டும்தான் சாப்பிடும். சிறுத்தை, அசைவம் மட்டும்தான் சாப்பிடும். இப்பச் சொல்லு, எது ஒல்லியா இருக்கு?”

“ம்ம்... சிறுத்தை எப்பவும் ஓடியாடி இருக்கும். ஆனை அசைஞ்சு அசைஞ்சு மெதுவாத்தேன் நடக்கும். அதயும் சொல்லுங்களேன்..."

"இந்த எடக்கு மடக்கு பேச்சுக்கொண்ணும் குறைவில்லை... போய் அதுல இருக்கதச் செஞ்சுக் கொண்டுவா...”

“ஏங்க நல்லா கன்ஃபர்மாத் தெரியுமா... இது உங்களுக்கான மெனுதானா?”

“ஏன்?”

“இல்ல... காலை 2 முட்டை; மதியம் கால்கிலோ மட்டன்; இரவு கால்கிலோ சிக்கன்” அப்படின்னு இருக்கிறதப் பாத்தா, எனக்கென்னவோ, ஏதோ ஒரு ஜிம்மி, டாமிக்கு எழுதிவச்சத மாத்தி உங்ககிட்ட கொடுத்துட்டாரோன்னு..... சரி, சரி, முறைக்காதீங்க.... உங்களுக்கு வாக்கப்பட்ட நான் மட்டும் மலக்கு(ஏஞ்சல்)ன்னா சொல்லிக்க முடியும்? ஜிம்மிக்கேத்த டாமிதானே வாக்கப்படும்?

ப்படியாகத் தொடங்கியது அந்தப் போராட்டம்.... அடிப்படை இதுதான்: கார்போஹைட்ரேட்களான சோறு, கோதுமை, சோளம் போன்றவற்றோடு, கேரட் பீட்ரூட், உருளை போன்ற மண்ணிற்கு அடியில் கிடைப்பவற்றையும் அறவே தவிர்க்க வேண்டும். எண்ணெய், சீனி கூடவே கூடாது. வாழை, மாம்பழம், திராட்சை போன்ற சில பழவகைகளும் சாப்பிடக் கூடாது. இவ்வளவுதான்.
cdm.nhg.com.sg
காலை அவித்த முட்டை, மதியமும் இரவும் அவித்த அல்லது க்ரில் செய்த மட்டன், சிக்கன் அல்லது மீன். உடன் வெள்ளரி, லெட்யூஸ், ப்ரக்கோலி, கிவி, அன்னாசி போன்ற சில காய்கறி மற்றும் பழங்கள்.  அதாவது, ப்ரோட்டீன் மற்றும் விட்டமின்கள் மட்டும் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதில் நல்ல காரியம் என்னன்னா, சீஸ் (Cheese), பால், முட்டை ஆகியவற்றை எடை அதிகரிக்கச் செய்பவை என்று ஒதுக்கியிருந்தது தவறென்று புரிந்து கொண்டோம்.  மற்றும், அசைவ உணவுகள் எடையைக் கூட்டுபவை அல்ல, அவற்றை நாம் சமைக்கும் முறையே அதனால் வரும் பிரச்னைகளுக்குக் காரணம் என்று நான் சொல்லிவந்தது உண்மையே என்று நிரூபணமானது.

எண்ணெய், தேங்காய், முந்திரி எதுவும் சேர்க்காமல், உரிய மசாலாக்கள் சேர்த்து வேக வைத்தோ, க்ரில் செய்தோ உண்டால் போதுமானது. உப்பு குறைக்கச் சொல்லப்படவில்லை என்றபோதும், இந்த டயட்டினாலேயே என் கணவரின் உயர் இரத்த அழுத்தமும் சீரானது இன்னொரு பலன்.

(எச்சரிக்கை: இந்த ப்ரோட்டீன்-ரிச் டயட் கிட்னி செயல்பாட்டைப் பாதிக்கும் என்பதால் யாரும் சுயமாக, மருத்துவர் ஆலோசனையின்றி இந்த டயட்டை முயற்சிக்க வேண்டாம்).

ப்படியாக, ஒரே மாதத்தில் 6 -7 கிலோ எடை குறையவும், பார்ட்டி பயங்கர சந்தோஷமும்  பெருமையுமாக என்னிடம் வந்து சொன்னார்.


“என்னது, 7 கிலோ குறைஞ்சிடுச்சா?”

”ஏன் வருத்தமாருக்கா? இப்படி சாப்பிடாமக் கிடந்து எடையக் குறைக்கிறேனானே புருஷன்னு கவலையாருக்கா உனக்கு? எடை குறைஞ்சா ஆரோக்கியம் கூடும். கவலைப்படாதே..”

“ம்க்கும்.... இங்க யாரு கவலைப்பட்டாங்களாம்? ஏதோ நீங்க கொஞ்சம் குண்டா இருக்கப் போயித்தான், உங்கம்மா எனக்கும் சமைக்கத் தெரியும்னு நம்புறாங்க. ஏற்கனவே “பூனையை வளர்த்து கிளி கையில் கொடுத்துட்டோமே”ன்னு அவங்களுக்கு ஏக வருத்தம். இதுல நீங்க இப்படி ஒல்லியாப் போனா அவ்ளோதான்.. என் தலைதான் உருளும்...”

“ஙே...”
ரம்பத்தில் அலுவலகம் மற்றும் வெளியே சந்திக்கும் நண்பர்கள், உறவுகள் எல்லாரும் “அடடே, வெயிட் குறைச்சிருக்கியா? வெரிகுட்” என்று பாராட்டுவதை என்னவோ சந்தூர் சோப் விளம்பரத்தில் “எச்சூஸ்மி, நீங்க எந்த காலேஜ்” என்று கேட்டதைப் போல  உச்சி குளுந்து போய் வந்து சொல்லி சொல்லி பெருமையடிச்சுகிட்டிருந்தார்.

தொடர்ந்து அடுத்த மாதங்களிலும் இதே மெனு தொடர்ந்ததில் நல்ல முன்னேற்றம் - எடை குறைவதில். இப்போது பார்ப்பவர்களெல்லாம், “ஏ.. என்னப்பா சுகர் எதுவும் இருக்கா? டாக்டர்ட்ட போய் செக் பண்ணு. இப்படி எளச்சிட்டியே?” என்று கேட்பதாகச் சொல்லிக் கடுப்பானார். எனக்கு சந்தோஷம். இருக்காதா...

விக்கிபீடியா
healthyfoodforkidsfree.blogspot.com
ப்படியாக ஒரு நாள், இருவரும் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது எங்கள் இருவரின் உணவுத்தட்டுகளையும் சுட்டிக்காட்டிச் சொன்னேன், “இதெல்லாம் ரொம்ப அநியாயங்க.. என் ப்ளேட்டைப் பாருங்க, அரை ப்ளேட் சோறு, தொட்டுக்க கொஞ்சமா கூட்டு, கறி இருக்கு. உங்க ப்ளேட்ல பாருங்க, ப்ளேட் முழுசும் நெறஞ்ச மாதிரி சிக்கன், தொட்டுக்கக் கொஞ்சமா சோறுன்னு இருக்கு... எனக்கென்னவோ இன்னும் டவுட்டாத்தான் இருக்கு!!”

“ஸ்ஸ்... இனும் உன் டவுட் போகலையா... அவர் நெஜ டாக்டர்தான்னு எத்தனை தடவை...”

“எனக்கு டவுட் டாக்டர் மேலே இல்லை”

“அப்போ....”

“ம்ம்... ’எம்பொண்டாட்டி மட்டன்சிக்கனையே எங்கண்ணுல காட்ட மாட்டேங்கிறா.. காய்கறியா போட்டு கொல்றா.. நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்’ன்னு டாக்டர்கிட்ட நீங்களே போய்ச் சொல்லி மூணுவேளையும் நான் -வெஜ் சாப்பிட ப்ளான் பண்ணி டயட் மெனு எழுதி வாங்கினீங்களோன்னுதான் எனக்கு டவுட்!!”

Post Comment

நாபிக் கொடி
தொப்புள் கொடி என்பது தமிழகத்தைப் பொறுத்தவரை ரொம்ப சென்ஸிடிவான வார்த்தை!! “தொப்புள் கொடி உறவுகள்” நிறைய உண்டல்லவா நமக்கு. ”நிஜமான” தொப்புள் கொடி மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து வாசிக்க நேர்ந்தது. கிடைத்த சுவாரசியமான தகவல்களை இங்கும் பகிர்ந்து கொள்கிறேன்.

ருவில் உள்ள குழந்தைக்கு உயிர் ஆதாரம், வெளியுலகத் தொடர்பு என்று “எல்லாமே” தொப்புள் கொடிதான் என்று அறிவோம். சுருங்கச் சொன்னால், தொப்புள் கொடியின்றி அக்குழந்தை இல்லை.  முதலில் தொப்புள்கொடியின் வேலை என்ன என்று பார்ப்போம்.

பிறந்த குழந்தையிலிருந்து பெரியவர்கள் வரை, தேவையான ஆக்ஸிஜனை மூச்சுக்காற்று வழியாக நுரையீரல் உதவியுடன் பெற்றுக் கொள்கிறோம். இதுவே கருவில் உள்ள குழந்தைக்கு நுரையீரல் வேலை செய்யாது என்பதால், அதன் வேலையை தொப்புள் கொடி செய்யும். 
குழந்தையின் இதயம் இரத்தத்தைப் பம்ப் செய்யும்போது, அந்த இரத்தம் தொப்புள் கொடியில் உள்ள இரண்டு artery - தமனிகள் வழி சென்று, ”நஞ்சு ” எனப்படும் Placenta - ப்ளாஸண்டாவுக்குச் செல்கிறது. அங்கு, குழந்தையின் இரத்தத்தில் உள்ள கார்பன் -டை-ஆக்ஸைடு வெளியேற்றப்பட்டு, தாயிடமிருந்து ஆக்ஸிஜன் மற்றும் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள், ஊட்டங்கள் ஆகியவை பெறப்பட்டு, குழந்தையின் இரத்தத்தில் கலக்கின்றன. பின்னர் அதே தொப்புள்கொடியில் உள்ள vein - சிரை வழியே மீண்டும் குழந்தை உடலுக்குள் செலுத்தப்படுகிறது. இது பிரசவம் வரை தொடர்ந்து நடைபெறும் ஒரு செயல். இதன் கட்டுப்பாடு குழந்தையின் இதயத்திடமே உள்ளது என்பதை நினைவில் கொள்க.


ந்தப் பரிமாற்றம் நடைபெறும்போது, குழந்தையின் இரத்தமும், தாயின் இரத்தமும் கலந்துவிடாதபடி பாதுகாக்கும் முறையில் ப்ளாஸண்டா வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரசவ வலி தொடங்கியதும், தொப்புள் கொடியினுள் இரத்த ஓட்டம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. பிரசவம் நடந்ததும், சில நிமிடங்களில் தொப்புள் கொடியின் மீது  நச்சு அருகிலும், குழந்தையின் தொப்புள் அருகிலுமாக இரு முனைகளிலும் க்ளிப்கள் போட்டு, அதன்மூலம் இரத்த ஓட்டத்தை நிறுத்தி, பின் கத்தரித்து விடுவார்கள். இதுதான் பிரசவத்தின்போது வழமையாகச் செய்யப்படுவது.

அவ்வாறு நிறுத்துவது குழந்தையின் நுரையீரல் வேலை செய்ய ஆரம்பிக்கத் தூண்டுவதற்கு இலகுவாக இருக்கும் என்று கருதப்படுகிறது. பிறந்தபின், குழந்தை நுரையீரல் வழிதானே சுவாசிக்க வேண்டும்.

தொப்புள் கொடியினுள் உள்ள Vein மற்றும் Artery யை பிரிக்க, அவற்றின் நடுவே Wharton jelly என்கிற கொழகொழப்பான பொருள் உள்ளது. மருத்துவர்கள் தொப்புள்கொடியில் க்ளிப் போட்டு செயற்கையாக நிறுத்தாவிட்டால், பிரசவம் நடந்த மூன்று நிமிடங்களில், தட்பவெப்ப மாறுபாட்டால், இந்த ஜெல்லி பொத பொதவென்று பெருகி இயற்கையாகவே அந்த Vein மற்றும் Arteryயை இறுக்கி, செயல்பாட்டை நிறுத்திவிடும்.


க்ளிப் போடுவதற்குள், கொடியில் உள்ள இரத்தம் தானாகவே குழந்தையின் உடலில் சென்றுவிடுவது நல்லது. தொப்புள் கொடி இரத்தத்தில் அரிய, பயன்மிகுந்த ஸ்டெம் செல்கள் இருப்பதால், இந்த இரத்தம் குழந்தைக்கு மிகுந்த நன்மை பயக்கும். குழந்தையின் இரத்தத்தில் இரும்புச்சத்து அதிகமாகும். பல்வேறு உடல் நலிவுகளிலிருந்தும், குறைபாடுகளிலிருந்தும் குழந்தை பாதுகாக்கப்படும். உடலில் இரத்த அளவு கூடும். இதே அளவு இரத்தம் குழந்தையின் உடலில் சுரக்க சிறிது காலம் எடுக்கும் என்பதால் இந்த இரத்தத்தை தவற விடக்கூடாது. ஆகையால், பொதுவாக மருத்துவர்கள் க்ளிப் போடுவதற்குமுன் கொடியில் இரத்தம் வடியும்வரை காத்திருந்து க்ளிப் போடுவார்கள்.

தொப்புள் கொடியில் உள்ள இந்த இரத்தத்தை நாமாக குழந்தையின் உடலுக்குள் செலுத்த முடியாது. ஏனெனில், குழந்தையின் இதயம்தான் இரத்த ஓட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது.

மேற்சொல்லியவை எல்லாமே சிசேரியன் அல்லது சுகப்பிரசவம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே நடக்கும்.

ந்த இரத்தத்தின் சிறப்பை, தற்போது “cord blood banking" பிரபலமடைந்து வருவதிலிருந்து புரிந்துகொள்ளலாம். தொப்புள் கொடியில் உள்ள இரத்தத்தில் ஸ்டெம் செல்கள் உட்பட பல்வேறு அரிய நோய்களுக்கான மருந்தாகக் கருதப்படும் பொருட்கள் இருப்பதால் இந்த இரத்தத்தை எதிர்காலத் தேவைகளுக்காகச் சேமித்து வைப்பது பெருகி வருகிறது. இரத்தப் புற்றுநோயின் சில வகைகள், லிம்ஃபோமா என்ற புற்றுநோய், இன்னும் மருந்தே இல்லாத சில வகை அரிய நோய்கள் - குறைபாடுகள் உள்ளிட்டவைகளுக்கு இந்த ஸ்டெம் செல்கள்தான் ஒரே தீர்வு. மேலைநாடுகளில் ஒருவரின் குடும்பத்தில் இவ்வகை நோய்கள் இருந்திருந்தால், அவர்கள் எதிர்காலத் தேவை கருதித் தம் குழந்தைகளின் தொப்புள் கொடி இரத்தத்தை அதற்கென உள்ள வங்கிகளில் சேமித்து வைப்பதுண்டு. 
அதே குழந்தைக்கு பின்னாளில் அந்த இரத்தத்தைப் பயன்படுத்த முடியாது என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.
அதுதவிர, தம் குடும்பத்திற்குத் தேவைப்படாவிட்டாலும், மற்றவர்களுக்கு உதவலாம் என்ற நல்லெண்ணத்திலும் - இரத்த தானம், இறந்தபின் கண் தானம் உறுப்புதானம் செய்வதுபோலவும் - சிலர் சேமிப்பதுண்டு.

இவை தாண்டி, நவீன மருத்துவ முன்னேற்றத்திற்கான ஆராய்ச்சிக்காகவும் இந்த இரத்தம் பெரிய அளவில் தேவைப்படுகிறது. பல மருந்து நிறுவனங்கள் தம் ஆராய்ச்சிக்காக, பெரும்பணம் கொடுத்து இந்த இரத்தத்தை - ஸ்டெம் செல்களைச் சேகரிக்கின்றன.

இப்படிப் பல வகைகளில் இந்த தொப்புள் கொடி இரத்தத்திற்கு டிமாண்ட் இருக்கிறது.பொதுவாக இந்தியாவில், இதுவரை இந்த இரத்தத்தின் சிறப்பு அறியப்பட்டதில்லை என்பதாலோ, அல்லது இயல்பாகவே அதன் இரத்தம் முழுதும் குழந்தைக்குச் செலுத்தப்பட்டு விடுவதாலுமோ  பிரசவத்தில் தொப்புள் கொடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனால், தற்போது திடீரென இத்தொப்புள் கொடி இரத்தத்திற்குத் தேவை அதிகரித்து வருவதால், அதன் சிறப்புகளை எடுத்துக் கூறி பெற்றோர்களைச் சேமிக்கத் தூண்டுகிறார்கள்.

எனினும், இது குறித்துச் சில சர்ச்சைகள் வெளிவந்துள்ளன. சில இடங்களில் பெற்றோரின் அனுமதியின்றி, அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி, அந்த இரத்தத்தை மருத்துவர்கள் எடுத்து வெளியில் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. அதற்காகவே, அதிக இரத்தம் கிடைப்பதற்காக - அதன்மூலம் அதிகப் பணம் பெறுவதற்காக, குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடியை க்ளிப் போட்டு விடுவதாகக் கூறப்படுகிறது. இதனால், குழந்தைக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் கிடைக்காமல் போய்விடுவதோடு, உடல் நலமும் பாதிக்கப்படுகிறது.

இது பிறந்த குழந்தையின் அனுமதியின்றி, அதன் நலனை பின் தள்ளி,  பெறப்படும் ‘இரத்த தானம்’ என்றும் கூறப்படுகிறது. (Involuntary blood donation)

மருத்துவர்கள் எல்லாரையும் பொத்தாம் பொதுவாகக் குற்றம் சொல்லிவிடமுடியாது. நல்ல மருத்துவர்களின் இடையில், சில புல்லுருவிகளும் இருக்கத்தான் செய்வர். நாம், நம்மளவில் கவனமாக இருந்துகொள்வதே நல்லது. ஆகவே, உங்களின் பிரசவ மருத்துவரிடம், இதுகுறித்துப் பேசுங்கள். Delayed cord clamping செய்யச் சொல்லிக் கேளுங்கள். தாய் - சேயின் நலத்தில் அக்கறை உள்ள மருத்துவர்கள் நாம் சொல்லமலே செய்துவிடுவார்கள். நீங்கள் அறிந்த கர்ப்பிணிகளிடம் இத்தகவலைக் கூறுங்கள்.

எனினும், சில சந்தர்ப்பங்களில் - குறைமாதக் குழந்தை, பிறவிலேயே சில வகைக் குறைபாடுகளுள்ள குழந்தை போன்ற சமயத்தில்- Early cord clamping செய்யப்பட வேண்டியது அத்தியாவசியம் என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.


மேலும் விபரங்களுக்கு:
1. http://en.wikipedia.org/wiki/Delayed_cord_clamping#Clamping_and_cutting
2. http://en.wikipedia.org/wiki/Cord_blood
3. www.gentlebirth.org/archives/cordIssues.html
4. https://www.youtube.com/watch?v=Ioaa08OjPDA
5. http://www.metacafe.com/watch/yt-WWCOzkSe85M/dr_stuart_fischbein_delayed_cord_clamping/
6. http://www.givingbirthnaturally.com/restricted-umbilical-cord-problems.html
7. http://www.metacafe.com/watch/yt-WWCOzkSe85M/dr_stuart_fischbein_delayed_cord_clamping/
8. http://www.midwiferytoday.com/articles/neonatalresus.asp
9. http://www.youtube.com/watch?v=9Ht2HKVrb9Q (TEDex video)
10.
http://tinyurl.com/mcpms7m   (http://tamilnanbargal.com/tamil-blogs)

Post Comment

முகமலர் இற்றைகள் - 2
எனது ஃபேஸ்புக் பதிவுகள் இங்கும் இற்றைப்படுத்திக் கொள்வதற்காக....

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும்.  ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம்.  நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க.

தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். மும்பை பத்திரிகையாளர், மற்றும் டெல்லி சம்பவத்தில் பெண்கள் இருவரும் இரவு நேரத்தில் வெளியே சென்றதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

மருத்துவர், செவிலியர், காவலர் போன்ற பணிகளில் இருப்பவர்களுக்கு நேரம் காலம் பார்க்காமல் பணி செய்ய வேண்டியிருக்கும். இனி அவர்கள் இரவுப்பணி செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டுமா? எனில், முதலில் யாருக்கும் இரவு நேரத்தில் பிரசவ வலி வரக்கூடாது என்று சட்டம் இயற்றுவதே சாலச் சிறந்தது.
— feeling exhausted.
ஆதரிக்கிறேன்
மறுக்கிறேன்
பிடிச்சிருக்கு
நல்லாருக்கு
அடப்பாவிகளா!
வாவ்! சூப்பர்!
பாராட்டுகள்!
கண்டனங்கள
அதானே!
எதிர்க்கிறேன்
பார்த்துட்டேன்
அய்யய்யோ!
படிச்சுட்டேன்
யேன்.. யேன்... இப்படி?
கலக்கல்
கொடுமை!
அப்படியா?
சரியாச் சொன்னீங்க

LIKE!!
ஒரு வார்த்தை, பல அர்த்தங்கள்!!
— feeling amused.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்

பிள்ளைகளுக்காக சமைத்தே ஆகவேண்டியிருப்பதால், அப்பாக்கும் வயிறு நனைகிறது.
feeling accomplished.மனிதன் நடப்பான்; மிருகங்கள் நடக்கும்; பறவைகள் நடக்கவும், பறக்கவும் செய்யும்; ஆனால், மீன்கள் நீந்த மட்டுமே செய்யும்.

ஹலோ, இருங்க.. இருங்க.. மீனும் நடக்குமாம்!!

http://www.youtube.com/watch?v=HXEfud1c-do


ஹோட்டல்களில் ஃபுல்மீல்ஐ வளைச்சு அடிச்சவர்கள்கூட, அதன்பின்பு ஒரு பெரீய்ய்ய டம்ளரில் ஜூஸ் குடிப்பதைப் பார்க்கப் பொறாமையாக இருக்கிறது. இதுக்குன்னே தனியா வயிறு செஞ்சு வாங்கிட்டு வந்திருப்பாங்களோ?

#மினிமீல்ஸ்_ஏக்கங்கள்!!
feeling என்னாத்தச் சொல்ல.

முருங்கைக்காயில் சாம்பார் செய்யலாம்; பொறியல் செய்யலாம்; அவியல் செய்யலாம்; கூட்டு செய்யலாம்; குழம்பு செய்யலா; ஏன், சூப் கூட செய்வாங்க! ஆனா, ”முருங்கைக்காய் புலாவ்” கேள்விப்பட்டதுண்டா?

இதோ கீழே முருங்கைக்காய் புலாவ்!! ஆனா, அதுல ஒரு துண்டு முருங்கைக்காய்கூட இருக்காது என்பதால் சாப்பிடவும் ஈஸி!
Hussain Amma's photo.
 

September 7, 2013
“உங்க பிள்ளைக்குத்தானே செய்றீங்க” -கல்யாணத்திற்கு முன்பு மாப்பிள்ளை வீட்டாரால் அதிகம் சொல்லப்படும் இவ்வாக்கியம், திருமணத்திற்குப் பிறகு கணவனை நோக்கி மனைவியால் அதிகம் பிரயோகிக்கப்படும்! #பூமராங்
— feeling தத்துவமிங்கிங்!

September 7, 2013

இன்றைய கடைசி!! கோடை விடுமுறைக்குப் பின், நாளை முதல் பள்ளிகள் திறக்கின்றன! வாவ்.... என்னா சந்தோஷமா இருக்கு!! ஆனா, காலையில் ரொம்பநேரம் (மதியம்வரை) தூங்க முடியாதேன்னு ஒரு சின்ன வருத்தம் இருந்தாலும், “விடுதலை... விடுதலை...”!!!
— feeling excited.
முதல் நாள் தனியா இருக்கக் கஷ்டமா இருக்கு. எப்படா பசங்க வீட்டுக்கு வருவாங்கன்னு இருக்கு. 

நம்புங்கப்பா, ஹார்லிக்ஸ் அம்மா, ஹமாம் அம்மா மாதிரியெல்லாம் இல்லாட்டியும், நானும் கொஞ்சம் நல்ல அம்மாதான்!!
feeling bored.
”வலிச்சுப் பெத்திருந்தாத்தானே தெரியும்” - சிஸேரியன் வழி பிரசித்தவர்களை நோக்கி, அவர்களின் இரட்டை வலியை அறியா அலட்சியத்துடன், பிரயோகிக்கப்படும் வாக்கியம் இது.

இயற்கையான சுகப்பிரசவத்துக்கான வலியையும் மணிக்கணக்கில் அனுபவித்து, அதில் வழியில்லையென்றான கட்டத்திற்குப்பின், அனஸ்தீஷியாவின் ஆபத்தைத் தாண்டி, ஆபரேஷனும் செய்து, அந்தப் புண்ணின் வேதனையையும் அனுபவித்து, சமயத்தில் அதில் நோய்த்தொற்றும் ஆகி, அதன் விளைவுகள் வாழ்நாள்வரை உடன் வரும் சாத்தியங்களும் உண்டு. ஆக, சுகப்பிரசவம் மறுபிறப்பென்றால், அதையும் கடந்த சிஸேரியன் மூன்றாம் பிறப்பென்றே சொல்லலாம்.

நிற்க, ‘முன்பே தேதி குறித்து’ சிஸேரியன் செய்துகொள்கிறவர்களும் உண்டு - ஆனால், அதுவும் அதிக இரத்த அழுத்தம், சர்க்கரை, குழந்தையின் வளர்ச்சி போன்ற சிலபல கட்டாயத்தின் பேரிலே என்பதால் அவர்களும் பாவப்பட்டவர்களே.

நல்லநேரம்-காலம் பார்த்து சிஸேரியன் செய்யும் மிகச்சொற்பமானவர்கள் குறித்தோ, வலிந்து சிஸேரியன் செய்யும் சொற்ப மருத்துவர்களைக் குறித்தோ இங்கு பேசவில்லை.

Post Comment

சிஸ்டம் டவுன்


 லைப்பூவில் மீண்டும் பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணேனே தவிர, எங்கே தொடங்க என்ன எழுதன்னு இன்னும் கன்ஃப்யூஷன்தான். “ஸ்டார்டிங் ட்ரபிள்”!!

ஊருக்குப் போயிட்டு வந்த கதையையே எழுதிடுவோம்னு ஆரம்பிக்கிறேன். போய்ட்டு வந்து ஆறு மாசம் ஆச்சு!! 


துரை விமானநிலையத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்று அறிந்ததும், “இனி இந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் மல்லுக் கட்டத் தேவையில்லை” என்று அகமகிழ்ந்துபோனோம். நெல்லையிலிருந்து இரண்டரை மணிநேரமே; சாலையும் தரமாக இருக்கும். உடன் டிக்கட் புக் செய்தோம். முதல் முறையா மதுரை விமானநிலையம் போய் இறங்கினோம்; நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது இனி இந்தப் பக்கம் வரவே கூடாது என்று உறுதி பூண்டோம்!!

விமான நிலையம் புதிதாக அழகாக உள்ளது; ஆப்பீசர்கள் புதிதாக சர்வதேச விமானங்களைக் கையாள்வதாலோ என்னவோ ரொம்பவே ஓவர் விறைப்பாக உள்ளனர்; பயங்கர கெடுபிடி, மிரட்டல்கள்!! குறிப்பாகப் பேச்சிலர்களை உண்டு-இல்லை என ஒருவழி செய்துவிட்டனர்.


திரைப்படக் காமெடி காட்சிகளை மிஞ்சும் ஒரு பயங்கர ஜோக்
காட்சி காணக்கிடைத்தது: முதல்முறையாக ஊருக்கு வர்ற ஒரு ஆர்வக்கோளாறு “கிராமத்து ஃபாரின் பார்ட்டி”, காதுவரையிலான "விருமாண்டி” கடாமுறுக்கு மீசையோடு அரபிகளின் உடையான வெள்ளை நிற “கந்தூரா”வை அணிந்து வர... வகைதொகையில்லாமல் ஆப்பீசர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அவரை வறுத்து எடுத்துவிட்டனர்!! வடிவேலுவின் “இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்கடா...” காமெடிக் காட்சிதான் ஞாபகம் வந்தது.

ந்தியா செல்லும் முன்பே, போக வேண்டுமென்று எண்ணியிருந்த இடங்களில் ஒன்று “கோ-ஆப்டெக்ஸ்”!! சென்ற வருடம் அக்டோபர் மாதவாக்கில், முன்னாள் கலெக்டர் திரு. சகாயம் அவர்களின் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் மிகவும் சீரடைந்துள்ளது; கோ-ஆப்டெக்ஸை ஆதரியுங்கள்னு ஃபேஸ்-புக்கில் பலரும் (நானுந்தான்) போஸ்ட் போட்டிருந்தார்கள். சரி, டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக அரசுக்கு நம்மாலான சிறு உதவி செய்வோமேன்னு போகலாம்னு நெனச்சேன்.


திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்குப் போனோம். நல்லா ஏஸி குளுகுளுன்னு போட்டு வச்சிருக்காங்க; பணியாளர்களும் நன்றாகக் கவனிக்கிறார்கள். ஆனாலும்.... ஒரு திருப்தி இல்லை - நிறைய ரகங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்.  இரு கடைகளிலும் பட்டுச் சேலைகள் பகுதிதான் டாப் க்ளாஸாக இருக்கிறது - விலையும். 

எனினும், நைட்டிகள் நன்றாக இருக்கின்றன; சுடிதார் துணிகள், வழக்கமாக வெளியே கடைகளில் டாப்ஸுக்கு 2 மீட்டர்தான் இருக்கும்.  Side-cut இல்லாமல், umbrella மாடலில் தைக்கவும், முழுநீளக்கை வைக்கவும் எப்பவும் கூடுதல் துணி தனியாக வாங்க வேண்டியிருக்கும். ஆனால், கோ-ஆப்டெக்ஸில் டாப்ஸுக்கு 2.50 மீட்டர் துணி வைத்திருக்கிறார்கள்!! அது மிகவும் வசதியாக இருக்கிறது. 

 ரில் மகன்களைப் பார்த்த அநேக உறவுக்காரர்களும் என்னிடம் ”நல்லாயிருக்கியா” என்று கேட்டு முடிக்குமுன்பே, “ஏன் பிள்ளைங்க இப்படிக் கருத்துப் போயிட்டாங்க?” என்று தொடர் கேள்வி கேட்டு, அதையும் முடிக்கும்முன்பே ”ஃபேர்னெஸ் டிப்ஸு”ம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நல்லவேளை, பெண் குழந்தையாக இல்லை என்று நிம்மதியடைந்த தருணங்களில் இதுவும் ஒன்று.:-)

முன்ணனி தனியார் நிறுவனங்கள் போலவே, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எல்லாமே கணினி மயமாக்கப்பட்டு விட்டதால், அலுவலர்களின் வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டன! எப்படின்னு கேளுங்க... கரண்ட் கட் கூட இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரைக் கொண்டு சமாளிக்கப்பட்டு விடுகிறது. மேலும், கரண்ட் கட் நேரங்கள் முன்பே தெரியும் என்பதால், அதற்கேற்றவாறு திட்டமிட முடிகிறது.   ஆனால், சமாளிக்க முடியாத ஒரு விஷயம்... “சிஸ்டம் டவுன்”!! துணிக்கடை, ஆஸ்பத்திரி, மொபைல் நிறுவனம் என்று எங்கு போனாலும், இந்த வார்த்தைதான் காதில் விழுகிறது.
பவர் கட் நேரம்கூட முன்னரே தெரிந்துவிடுகிறது. ஆனால், “சிஸ்டம் எப்போ சரியாகும்?” என்பதுதான் மில்லியன் டாலர்
கேள்வி!! தினமும் ஒருமுறையாவது இதைச் சந்திக்க நேர்கிறது. தண்ணீர்ப் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, ட்ராஃபிக் ஜாம் போன்றவைகளுக்குக் கூட - நடைமுறைப் படுத்தவில்லை என்றாலும் - தீர்வு என்னவென்றாவது தெரியும். ஆனால், தீர்வே இல்லாத பிரச்னை, இந்த “சிஸ்டம் டவுன்”!! ஆனாலும், அவற்றைப்  போலவே, இதையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோம்.

ப்படியாக இந்தியப் பயணம் சிறப்பாக முடிவுற்று, அமீரகம் வந்து சேர்ந்தோம். வீட்டுத் தொலைபேசி, இணையத் தொடர்புகளை இயங்க வைக்க வேண்டி, தொலை தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம்.  ”இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடும்”னு சொன்னாங்க. சொன்னபடி இணையம் சரியானது, ஆனால் தொலைபேசி இயங்கவில்லை. என்னாச்சுன்னு கேட்டா, “ஸாரி சார், சிஸ்டம் டவுன்”!!! ஙே...Post Comment

முகமலர் இற்றைகள் - 1
வலைப்பதிவு எழுத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் முதற்படியாக, எனது முகமலர் பக்கங்களின் பதிவுகளை இங்கே பதிந்து இற்றைப் படுத்திக் கொள்ள  எண்ணியுள்ளேன்.

முழிக்காதீங்க, வேற எங்கயோ வழி மாறிப் போயிட்டோமோன்னு... என் பிளாக்கேதான்...

முகமலர் - முகப்புத்தகம் - அதாங்க, ஃபேஸ்புக்!!
இற்றைகள் - Updates!!

("
இற்றைகள்" - வார்த்தை அறிமுகத்திற்கு நன்றி, முத்துலெட்சுமி)


பழைய பதிவுகளிலிருந்து ஆரம்பிக்கிறேன் - முதலில் 2012!!  அதனால, பழைய செய்திகளாத் தெரியும். ஆனாலும், இன்றைக்கும் பொருந்தக் கூடியவையாகத்தான் இருக்கும். நானும் மாறவில்லை, நாடும் மாறவில்லை!!

வலைப்பதிவைப் போலவே, எல்லா சப்ஜெக்டும் கலந்துதான் எழுதி(கிட்டி)ருக்கேன். என்ன, அறிவியல்தான் மிஸ்ஸிங். எதுவுமே எழுதலை. அதுக்குப் பதிலா, கொஞ்சம் அரசியல் எழுதிருக்கேன். அதுவும், தேர்தல் சமயத்தில் நான் எழுதியதால் - தமிழில் எழுதியதால்- தமிழ்நாட்டில் நல்ல பலன் இருந்தது. 


அடுத்த தேர்தலில், இந்தியா முழுதும் விழிப்புணர்வு ஏற்பட, ஹிந்தியிலும் எழுதலாமான்னு யோசிக்கிறேன். ஹிந்தி தெரியாதேன்னு கவலைப்பட்டபோதுதான், அரசே ஹிந்தியைக் கட்டாயமாக்கும் முயற்சியில் இறங்கியது. வாவ்!!  அடுத்த வாட்டி பாருங்க... ஹிந்தி, தமிழ் இரண்டிலும் எழுதி தீவிர பிரச்சாரம்தான்... (நோ பேட் வேர்ட்ஸ் ப்ளீஸ்)

வலைப்பதிவைப் போலவே, ஃபேஸ்புக்கிலும் பின்னூட்டப் பதிவுகளில்தான் சுவாரசியம் நிறைய இருக்கும்.  ஒவ்வொரு பதிவின் அருகே இருக்கும், தேதியை (Date stamp) க்ளிக் செய்தால், அந்தப் பதிவையும், அதன் பின்னூட்டங்களையும் பார்க்கலாம்.  நாங்க என்ன வெட்டியாவா இருக்கோம்னு எகிறாதீங்க.

தேதியோடு பதிவுகளைக் கொடுத்துள்ளதால், தொடர்புபடுத்திக் கொள்ள வசதியாக இருக்கும். 


கூடங்குளம் கட்டியாச்சு இருந்துட்டுப் போகட்டுமே என்பது கல்யாணம் கட்டியாச்சு இருந்துட்டுப் போவோம் என்பதான இந்திய மனப்பான்மையின் குறியீடோ!
அன்புள்ள கமல் சார்!
உங்க “விஸ்வரூபம்” குறித்தோ, அதன் அஜெண்டா என்ன என்பது குறித்தோ நான் பேசவில்லை. அது இங்கே தேவையுமில்லை. தற்போது, “தமிழகம் என்னை விரட்டுகிறது” என்று கண்ணீர் மல்க பேட்டி கொடுத்திருக்கீங்களாம். இந்த ஒரு புள்ளியில் முஸ்லிம் சமுதாயம் கண்டிப்பாக உங்கள் வேதனைகளைப் புரிந்துகொள்ளும். ஏனெனில், அந்த சமுதாயமும் இதே வேதனையைத்தானே அனுபவித்து வருகிறது. பிறந்து வளர்ந்த தமிழகத்தில், வாடகைக்கு வீடு கிடைக்கவே அவர்கள் படும் பாடு இருக்கிறதே.... சென்னையில் என் கஸின் ஏழு வருடங்களாக ஒரே வீட்டில் இருக்கிறான். இடையில் இரண்டு வருடங்கள், on-siteல் வெளிநாட்டுக்குச் சென்ற போதும், வீட்டைக் காலி செய்யவில்லை. விட்டால், வேறு வீடு கிடைக்காது. இது ஒரு உதாரணம் மட்டுமே. பேச்சிலர்களுக்கு, பேச்சிலர் என்ற தகுதியோடு முஸ்லிம் என்ற கூடுதல் தகுதியும் இருப்பதால், சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஒரு படைப்பாளியான, கலைஞனான உங்களை (ஒருவேளை நிஜமாகவே) தமிழகம் விரட்டினாலும், இந்தியா இருகை நீட்டி அணைத்துக் கொள்ளும். ஆனால், முஸ்லிமுக்கு எங்கேயுமே சந்தேகக்கண் கொண்ட வரவேற்புதான். ஆகையால் அவர்கள் உங்கள் வலியை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.
வழக்கமாக விடுமுறை நாளில் (வெள்ளிக்கிழமை) மதிய சமையலில் என்னவர் உதவுவார். 2 - 2.30 என்று நீண்டு, முடிவதற்கு சிலநேரம் 3 மணிகூட ஆகும். இந்த வாரம், கிச்சன் பக்கமே அவர் வரவில்லை. (சண்டை) நான் மட்டும் தனியே செய்தேன்.

ஆனால், ஆச்சரியம்+அதிர்ச்சி, 12.45க்கே சமைத்து முடித்துவிட்டேன்!! “சாதிச்சுட்டோம்ல” என்று பெருமையாய் நான் பார்க்க, அவரோ “அப்ப உன்னாலயும் செய்ய முடியுது, அப்படித்தானே” என்று கேட்டபோதுதான் “ஆஹா, அவசரப்பட்டுட்டோமோ”ன்னு தோன்றியது!!
கால்கிலோ வெண்டைக்காயையும், ஒரே ஒரு பீட்ரூட்டையும் நறுக்கித் தந்துட்டு, அஞ்சு நிமிசத்துக்கொருக்க, ‘சமையல் முடிஞ்சுதா?’ன்னு கேட்டுகிட்டிருக்கார். சமையல்னா, காய் நறுக்கறது மட்டும்தான்னு நினைக்கிற இவரை என்ன செய்யலாம்? — feeling curious.

இனி திவ்யாவின் பக்கம் எல்லா கைகளும் நீளும். பெண்களே இப்படித்தான் என்று. பெண்களை நம்பாதே என்று. — feeling sad.

ஜூலை 12 - ஐ.நா.வால் “மலாலா தினமாக” அறிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் எல்லா பெண் குழந்தைகளுக்கும் கல்வி உரிமையை வலியுறுத்தி, மலாலாவைக் கௌரவப் படுத்தும்விதமாக, இத்தினம் அனுசரிக்கப்படுவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் திரு. பான் கி மூன் தெரிவித்துள்ளார். வரவேற்கப்படவேண்டியது.

இதுபோலவே “அபீர் ஹம்ஸா தினம்” என்று மார்ச் 12-ம் தேதியை ஐ.நா. அறிவிக்குமா? 2006-ம் ஆண்டு அன்றைய தினம்தான், மலாலாவைவிட இளையவளான சிறுமி அபீர் ஹம்ஸா, இராக்கை ஆக்கிரமித்த அமெரிக்க ராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குடும்பத்தோடு கொல்லப்பட்டாள். உலகம் அறியாத அபீர் ஹம்ஸாக்கள் எத்தனை பேரோ! கல்வியைவிட மானமும், உயிரும் பெரிதல்லவா?


http://en.wikipedia.org/wiki/Mahmudiyah_killings

நோன்புக்குரிய ரமலான் மாதத்தில், திருக்குர் ஆனின் 30 அத்தியாயங்களையும் ஒருமுறை(யாவது) ஓதுவது என் வழக்கம். 20-வது நோன்பு நாளான இன்று 19-ம் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை எட்டிப்பார்த்த என் சின்னவன், ”இன்னும் 19-தான் ஓதுறியா? நான் அப்பவே 20 முடிச்சுட்டேன் தெரியுமா?” என்றான்!! விடியற்காலை உணவின்போது “எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு; இன்னும் நீ மட்டும்தான் முடிக்கலை” என்று திட்டியதற்குப் பழிவாங்கிய மகிழ்ச்சி அவன் முகத்தில்!!feeling blessed.
அது ஏனோ, மது எதிர்ப்பு போராட்டங்கள் மட்டும் முண்னணி செய்திகளில் காணப்படுவதுமில்லை; ஏன், வலைஞர்கள் கூட இந்தமாதிரியான நல்ல விஷயங்களில் ஆர்வம் காட்டுவதில்லை!!

மாணவர்களின் போராட்டம் வெற்றிபெற வாழ்த்துகள்!! 
தூக்கம் லேசாகக் கண்ணைச் சுழற்றும்போது, அருகே கேட்கும் ஒரு இலேசான விசும்பல், பதறி விழிக்கச் செய்கிறது.
#இரவுத்தொழுகை #நோன்பு_கடைசிப்பத்து_இரவுகள்
தொழுகை முடிந்த அடுத்த நொடி, அநேகமாக அத்தனை கைகளும் டிஷ்யூ பாக்ஸ் நோக்கி நீளும் - கண்ணீரைத் துடைப்பதற்காக...
#இரவுத்தொழுகை #நோன்பு_கடைசிப்பத்து_இரவுகள்
மட்டன் ரெண்டு கிலோ போதும்...

ம்ஹூம்.. பத்தாது ரெண்டரையாவது போடு..

ரெண்டு ஸ்வீட்.. முட்டையப்பம், கிண்ணத்தப்பம் ...

கூட உங்கூரு வட்லாப்பமும் செஞ்சிடு...

ஹலோ.. என்ன இந்த ஒரு மாசத்துல கரைச்ச கொழுப்பையெல்லாம் ஒரே நாள்ல ஏத்திடணும்னு முடிவோட இருக்கீங்களா?...

பெருநாள் ஆகோ(க்ரோ)ஷங்கள் ஆரம்பம்!!

பெருநாள் வாழ்த்துகள்!!


August 10, 2013
ப்ளாக் டீ, பிரவுன் பிரெட், கொள்ளு பொடி, எண்ணெயில்லாச் சப்பாத்தி.....

#பேக்_டூ_பெவிலியன்
 

Hussain Amma's photo.இந்திய கப்பற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்.சிந்துரக்‌ஷக் மும்பையில் பழுதுநீக்கும் பணிகளுக்காக கப்பற் துறைமுக மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிர்நுத போது, வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் கடற்படையைச் சேர்ந்த 18 பேர் இறந்துள்ளனர், பலர் படுகாயம்டைந்துள்ளனர்.

16 வருடங்களுக்குமுன் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்பட்ட இந்தக் கப்பல், சமீபத்தில் $80 மில்லியனுக்கான மிகப்பெரும் overhaulக்குப் பின்னர் ரஷ்யாவிலிருந்து கடந்த மே மாதம்தான் திரும்பியுள்ளது. எனினும், நவீனரகங்களில் உள்ளதைப் போன்ற ‘பாதுகாப்பு வழிகள்’ இல்லாததே அதிக உயிர்ப்பலிக்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.

காவல் துறையாகட்டும், இராணுவமாகட்டும் போரில் ஏற்படும் இழப்பைவிட இதுபோன்ற தவிர்த்திருக்கக்கூடிய விபத்து-சதிகளில்தான் உயிரழப்பு அதிகமாக இருக்கிறதோ என்று ஒரு ஐயம். நாட்டைப் பாதுகாக்க உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள்தானே என்பதால் "taken for granted"ஆக எடுத்துக் கொள்ளப்படுகிறார்களோ... ம்ம்... சுடுகாட்டு ஊழல், சவப்பெட்டி ஊழல் எல்லாம் கணட தேசம்தானே நாம்...


For more details: http://gulfnews.com/news/world/india/indian-submarine-with-18-crew-catches-fire-sinks-1.1219985

In the country that has "Athithi Devo Bavah' as its tourism tagline!!
India: the Story You Never Wanted to Hear


இன்றுவரைக்குமான ஃபேஸ்புக் பதிவுகளை வைத்தே ஒரு பத்து, பதினைந்து வலைப்பதிவுகள் தேத்திடலாம் போலருக்கு!! இது முதல்லயே தெரியாமப் போச்சே...  :-)

Post Comment