Pages

ரசிப்பும் ருசிப்பும் வியப்பும்.....
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா...

இந்தப் பாடலை ரசிக்காதவர் யாரும் இருக்க முடியாது...  அதிலும், அதில் வரும்... 

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாகப்  போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூடப் பார்க்கிறாள்”

போன்ற உருவகங்கள்...  அதுவரை இதுபோல யோசித்திராதவர்களைக்கூட, அதன்பிறகு இயற்கையில்  காணும் எல்லாவற்றையும்  கலைக்கண்ணோடு பார்க்க வைக்கும்! 

மரம், மலை, மலர், மழை, மேகம், மருண்டோடும் மான்... 
இப்படி எதுவானாலும் அதன் அழகை ரசிப்பது என்பது அனைவரும் விரும்பிச் செய்யும் ஒன்று.

இயற்கையின் அழகை ரசிப்பதற்காகவே பல இடங்களுக்கும் சுற்றுலா செல்லும் வழக்கமும் நம்மிடத்தில் உண்டு!!

அழகில் லயித்து ரசிக்கும் ஒரு சாமான்யன், ஒரு கவிஞனாக மாறி அதைக்  கவிதையாக வடிப்பதும்,  கலைஞனாக  புகைப்படங்களில் பதிவு செய்வதும் ரசிப்புக் கலையின்  அடுத்த கட்டங்கள். 

இயற்கை அழகும், அது தூண்டிவிடும் ரசிப்புத் தன்மையும் ஒரு  சாதாரணமானவனையும்கூட கலைஞனாக மாற்றிவிடக்கூடிய அளவுக்கு வலிமையானவை!! 

சரி.... எல்லாவற்றையுமே இப்படியே ரசித்துக் கொண்டிருந்தால் மட்டுமே போதுமா? அதற்காகத்தான் - அதற்கு மட்டும்தான்-  அவை படைக்கப்பட்டிருக்கிறதா? கண்களால்  ரசிக்க மட்டும்தானா?  

அழகை ரசிக்க வேண்டாமென்று சொல்லவில்லை. ஆனால், அந்த ரசனை நம்மை அதன் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறதா? 
மீண்டும் மீண்டும் ரசித்துப் பார்க்கவும் கேட்கவும் வைக்கும் அழகும், இனிமையும்  அதன் அடுத்த கட்டமான சிந்தனைக்கு அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா? 

நாம் ரசிக்கும் அந்தப் படைப்பைக் குறித்துச்  சிந்திக்க வேண்டாமா? அதன் படைப்பின் பிரம்மாண்டம், துல்லியம், நுணுக்கம், நோக்கம், செயற்பாடுகள், பயன்கள், விளைவுகள் நம்மை அதிர வைக்க வேண்டாமா?  

படைப்பே இப்படி அதிர வைக்கிறதென்றால், அதைப்  படைத்தவன் எப்பேர்ப்ட்டவனாக இருப்பான்?

சிந்தித்திருக்கிறோமா? அல்லது அழகில் மட்டுமே மயங்கி மதிமறந்துவிட்டோமா?

ண்ணீரில்லாமல் மீன் உயிர் வாழுமா என்ன? "தரையில் துடிக்கும் மீன் போல..." என்று உவமானம் சொல்லப் படித்திருக்கிறோமே...  அப்படிஎன்றால், நீரில்லாவிட்டால் மீன் இறந்துவிடும் என்றுதானே அர்த்தம்? ஆனால், தரையிலும் மீன்கள் தண்ணீரின்றி வாழும். வீடியோ பாருங்கள். Lungfish வகை மீன் 3- 7 வருடங்கள்  வரை தாக்குப் பிடிக்குமாம்!!மீபத்தில் ஒரு இளைஞனுக்கு, காது சரியாகக் கேட்பதில் பிரச்னை இருந்ததால், காது கேட்கும் கருவி ஒன்றைப் பொருத்தினார்கள். ஆனால் சில நாட்களிலேயே அதைப் பயன்படுத்த மறுத்துவிட்டான். காரணம்?

அதிகச் சத்தமாகக் கேட்கிறதாம்!! அதற்கு மெலிதாகக் கேட்பதே பரவாயில்லை என்று சொல்லிவிட்டான்.   :-(

தே சமயத்தில் கிடைத்த இன்னொரு தகவல் இன்னமும் ஆச்சரியப்படுத்தியது.

சிறு வயது முதல் காது கேட்காத ஒரு பெண், பல வருடங்கள் கழித்து கனடாவில் அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார். தலைக்குள் ஒரு கருவியை வைக்கிறார்கள்.

இப்போது அவருக்கும் அதே போல பிரச்னை! என்னவென்றால், நுண்ணிய ஓசைகளும் பெரிதாகக் கேட்கின்றனவாம். ஒரு பேப்பரில் பேனாவால் எழுதினால், அந்த எழுதும் ஓசை கூட கேட்கிறதாம். பத்தாவது மாடியில் இருக்கும்போது, கீழே செல்லும் வண்டிகளின் சப்தம் கேட்கிறதாம்!! இன்னும் பலப்பல....

அந்த இளைஞனாவது கருவியைக் கழட்டிப் போட்டு விட்டான். இப்பெண்ணுக்கோ தலைக்குள் கருவி!! எத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ய முடியும்?

//The secondary function of the auditory ossicles is the attenuation of sound waves #to_control_the_volume_of_sounds_reaching_the_inner_ear. A pair of skeletal muscles, the tensor tympani and stapedius, contract to reduce the vibration of the malleus and stapes in response to loud sounds. Sound attenuation is very important in daily life by limiting the sounds produced during chewing and the sound of one’s own voice while talking.//
http://www.innerbody.com/anato…/skeletal/head-neck/bones-ear

விஞ்ஞானம் எவ்வளவு வளர்ந்தாலும், எத்தனையெத்தனை கண்டுபிடிப்புகள் வந்தாலும், இறைவனின் படைப்பின் துல்லியத்தை விஞ்ஞானத்தால் அடைய முடியாது!!

67:23. (நபியே!) நீர் கூறுவீராக: “அவனே உங்களைப் படைத்து உங்களுக்குச் #செவிப்புலனையும்#பார்வைகளையும் #இதயங்களையும் அமைத்தான்; (எனினும்) மிகவும் சொற்பமாகவே நீங்கள் நன்றி செலுத்துகிறீர்கள்.

அதன் நுட்பத்தை, பிரம்மாண்டத்தை உணர்ந்தால் மட்டுமே, நன்றி உடையவர்களாக இருக்க முடியும்!!


அழகை ரசித்து ருசிப்பதை நிறுத்தி விடாதீர்கள்.  ரசிப்பவனால்தான்   அதனைப் படைத்தவனை நேசிக்கவும் முடியும்.

Post Comment

வாய்ச்சொல்லில் வீரர்கள்

வெள்ளிக்கிழமை, ஷர்ஜாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சியைப் பார்க்கப் போகலாம் என்று திட்டமிட்டபோது, அதே வெள்ளியன்று, திரு.ஸ்டாலின் மற்றும் திரு. எஸ்ரா இருவரும் அந்தக் கண்காட்சியில் உரையாற்றுகின்றனர் என்றறிந்தபோது அட! என மகிழ்ச்சியாக இருந்தது.  இந்தியா செல்லும்போது இம்மாதிரி நிகழ்வுகளுக்குச் செல்லும் “பாக்கியம்” கிட்டுவதில்லை. அமீரகத்திலோ அது ஒரு “நீல நிலவு” சம்பவம்.... எல்லாம் ஒன்றாகக்கூடி வந்ததில்,  கண்டிப்பாக இருவர் உரையையும் கேட்க வேண்டும் என்று  சில நண்பர்களோடு இணைந்து திட்டமிட்டுக் கொண்டோம்.

அரசியல்வாதியின் நிகழ்ச்சியில் எனக்கென்ன வேலை என்றால்... ஆர்வக்கோளாறுதான், வேறென்ன? மேலும், நம்ம ஊரில் நேரம் பேணாமல்  இழுத்தடிப்பதைப் போல,  இங்கே அமீரகத்தில் செய்ய வாய்ப்பில்லை என்று நம்ம்ம்ம்பிப் போனேன்!! :-( 

மாலை 5 மணிக்கு நிகழ்ச்சி தொடங்க வேண்டும். ஆனால்.... ம்ஹூம்.....  நம்ம ஊரைப் போலவே “வருகிறார், வந்துகொண்டிருக்கிறார், வந்தே விட்டார்....” என்று அறிவிப்புகள்தான் வந்துகொண்டிருந்ததே தவிர.... 
 
 
மிழ்நாட்டைப் போல இல்லை இங்கு - எத்தனை மணியென்றாலும் காத்து இருக்க.  திமுக - கலைஞர் - தமிழகம் மீது கொண்ட நேசத்தினால் தானாக வந்தவர்கள்.  முக்கியமாக, ஒவ்வொருவரும் அமீரகத்தின் ஒவ்வொரு முக்கு மூலையிலிருந்து வந்திருப்பவர்கள். அனைவரும்  வாகன வசதி கொண்டவர்கள் அல்ல.  குறித்த நேரத்திற்குள் செல்லவில்லை என்றால், தம் கையிலிருந்து அதிகப்பணம் கொடுத்து தம் இருப்பிடம் சென்று சேர வேண்டிய நிலையில் உள்ளவரக்ள். இது நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு நன்றாகவேத் தெரியும். இருப்பினும் இவ்வளவு தாமதம் செய்தது மிக்க ஏமாற்றமளிக்கிறது.

ஒருவழியாக அவர் மேடையேறிய பின்பாவது அவர் உரை உடனே தொடங்கியதா என்றால்.... அதுவுமில்லை.... வரவேற்புரை, அறிமுக உரை ( அதுவும் ஸ்டாலினுக்கு?? தமிழர்கள் மத்தியில்??) என்று ஆரம்பித்து, பின்னர் புத்தகம் பரிசளிப்பு என்று சொல்லி பெருந்திரளானோரையும் மேடையேற்றி.....  கிட்டத்தட்ட திமுக நிகழ்ச்சி போலவே நடந்தது நிகழ்வுகள்!! :-( 

இனி அமீரகமேயானாலும், தமிழக பெருந்தலைகளின் நிகழ்ச்சிகளைத் தவிர்க்க வேண்டும் என்ற பாடம் கிடைத்தது. 


ஸ்டாலின் அவர்களின் உரையைப் பற்றிப் பலரும் பேசும்போது, தந்தை கலைஞரைப் போல ஈர்க்கும் திறமை இல்லை என்று கூறுவார்கள். அவர் தந்தையோடு அவரை ஒப்பிடுவதில் எனக்கு உடன்பாடு இல்லை.  ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விதமான  திறமை. 

மேலும், மேடைப்பேச்சைக் கொண்டுதான் ஒருவரின் செயல்திறனைத் தீர்மானிக்க  வேண்டும் என்பதிலும் எனக்கு உடன்பாடில்லை. பேச்சுத்திறமைக்கு முக்கியவத்துவம் கொடுப்பதால்தான், இன்று விவாத மேடைகளில் சத்தமாகப் பேசுபவர்களே வல்லவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. 

இந்த எண்ணத்தினால்தான் மன்மோகன்சிங் என்ற திறமையாளரை இழந்து, இப்போது பேச்சில் மட்டும் மன்னர்களைக் கொண்டுள்ளது  இந்நாடு.  வாய்ச்சொல்லில் வீரர்கள் அல்ல நமக்குத்  தேவை.  அதிகம் பேசாமல், செயலில் சாதிப்பவர்களே நம் நாட்டுக்கு  இன்றைய அதிவசரத் தேவை. 

(எனக்குலாம் பேசவே தெரியாது என்பதையும் இத்தருணத்தில் இந்நாட்டுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன். ) 

எனினும்,  ஒரு திறமையான தலைவரை தந்தையாகக் கொண்டு இருப்பவர், அவரிடமிருந்து எத்தனையோ நுணுக்கங்களைக் கற்றுக்கொள்ளும் வாழ்நாள் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது என்பது உண்மை. 

ந்த விழாவில் கலந்து கொண்டதில் எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சி என்பது நம் நாட்டு தேசிய கீதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாட, வெகு காலங்களுக்குப் பிறகு ஒரு வாய்ப்புக் கிடைத்தது என்பதுதான்!! தமிழ்த்தாய் வாழ்த்து மறந்து போயிருக்குமோ என்று அச்சத்தோடுதான் வாயைத் திறந்தேன்....  ஒரு வார்த்தைகூட மறவாமல், பிறழாமல் பாட முடிந்ததில் எனக்கும்,  உடன் வந்திருந்த  யாஸ்மினுக்கும் பேரதிர்ச்சி!! 
 


டுத்து, சிறிது நேரத்தில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் உரையைக் கேட்கச் சென்றோம். முந்தைய நிகழ்ச்சியைப் போலல்லாது இவரது உரை சற்று ஆறுதலாக இருந்தது. 

எழுத்தாளர்களுக்குப் பெரிதாகச் சம்பாத்தியம் கிடையாது, மனத்திருப்திக்காகத்தான் எழுதுகிறோம் என்றார். ஒரு கதைக்கு நூறு ரூபாய்தான் தருகிறார்கள், சரவணபவனில் தோசைகூட நூறு ரூபாய்க்கும் அதிக விலையாம். அவர் இதுவரையிலும் வேறு வேலைக்கும் போனதில்லையாம். அப்படின்னா... அப்படின்னா... சில கேள்விகள்.... யாரிடம் கேட்க? கேள்வி நேரத்தில்,   அவரது எழுத்தைப்  பற்றித்தான் அவரிடம் கேள்விகள் கேட்கச் சொன்னார்கள் என்பதால்  இக்கேள்வியை மனதினுள்ளே பூட்டிக் கொண்டேன். 
 

ரு பெரிய  ஆதங்கம் என்னன்னா,  எழுத்து - புத்தகங்கள் - வாசிப்பு சம்பந்தப்பட்ட தமிழகத்தின் இரு பெரும் பிரபலங்கள் ஒரு சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு வந்திருக்காங்க...  எனினும், புத்தகக்கண்காட்சியில் தமிழ்ப்புத்தகங்களுக்கு என்று கடை இல்லை.  கடைகளில்தான் தமிழ்ப்புத்தகங்கள் இல்லை;  இருவரின் நிகழ்ச்சி அரங்குகளிலாவது தமிழ்ப் புத்தகங்கள் விற்பனைக்கு வைத்திருக்க ஆவண செய்திருக்கலாம்!!
 
மாலைநேரம் மட்டுமே திறந்திருந்த புத்தகக் கண்காட்சியில் , இரு நிகழ்ச்சிகளுக்குப் போனதில், புத்தகக் கடைகளைப் பார்வையிட நேரம் கிட்டவில்லை என்பதில் எனக்குக் கவலை; வீட்டுக்காரருக்கோ பர்ஸ் தப்பியதில் கன மகிழ்ச்சி!!
 

Post Comment

மூன்று ஆட்சிகளும் ஒன்றுதான்
மூன்று வெவ்வேறு பிரதேசங்களில் - கண்டங்களில்  நடந்த இஸ்லாமிய ஆட்சி பற்றிய புத்தகங்கள் இவை:

1. ஆப்பிரிக்காவில் முஸ்லிம் ஆட்சி - சையித் இப்ராஹீம்
2. ஸ்பெயின்: முஸ்லிம்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் - எஸ்.ஏ.காஜா நிஜாமுத்தீன் யூஸூஃபி
3. இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்தவை, சாதித்தவை - P.சிராஜுதீன்

 

ஆப்பிரிக்காவில், இஸ்லாமிய கிலாஃபத்தின் தொடர்ச்சியாக, கலீஃபா உமர்(ரலி) அவர்களின் காலத்தில், முதன் முதலாக எகிப்தில் கி.பி.639ல்  இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்தப்படுகிறது. அன்று முதல், 1800களின் இறுதியில் ஆங்கிலேயர்களால் கைப்பற்றப்படும் வரை அங்கு இஸ்லாமிய ஆட்சியே நடந்தது. எகிப்தைத் தொடர்ந்து, லிபியா, துனிஷியா, அல்ஜீரியா, மொரக்கோ, ஸொமாலியா, சூடான், எதியோப்பியா உள்ளிட்ட பல மத்திய ஆப்பிரிக்க நாடுகள் வரை இஸ்லாம் பரவியது.

ஸ்பெயினில், கி.பி. 712 முதல் கி.பி.1492 வரையிலான 780ஆண்டுகள் இஸ்லாமிய ஆட்சி இருந்தது. இங்கு அரசாண்ட ஒரு கொடுங்கோல் மன்னனிடமிருந்து மக்களை காப்பாற்றுவதற்காக, இஸ்லாமிய கிலாஃபாவின் உதவியை ஸ்பெயின் மக்கள் நாடுகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக,  தாரிக் பின் ஸியாத் என்ற சிறுவயது இளைஞனின் தலைமையில் படை சென்று மன்னரை வீழ்த்தி, மக்களைக் காக்கின்றனர். அவ்வாறே அங்கு இஸ்லாமிய ஆட்சி ஏற்படுகின்றது.

இந்தியாவிலும் இது போன்ற ஒரு சூழலில்தான் முஸ்லிம்கள் ஆட்சி ஏற்படுகின்றது. பாகிஸ்தான், பஞ்சாப், குஜராத் ஆகிய பகுதிகள் அடங்கிய சிந்து நாட்டின் மன்னனான தாஹிர்  என்ற உதய வீரன். இந்நாட்டின் கடற்கரையில் புயலால் ஒதுங்கிய இலங்கையிலிருந்து  வந்த கப்பலில் இருந்த முஸ்லிம் பெண்கள், குழந்தைகளைச் சிறையில் அடைத்தான். அவர்களை மீட்க முஹம்மது பின் காஸிம் என்ற 17-வயது தளபதி, கலீஃபாவின் ஆணையின் பேரில் படையெடுத்து வந்து, வெற்றி கொண்டு கி.பி. 711-ல் ஆட்சியமைத்தார். அது முதல், 1857-ல் முகலாய மன்னர் பகதூர்ஷா ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்படும் வரை இந்தியா (சிற்சிறு இடைவெளிகளுடன்) முஸ்லிம் ஆட்சியில் இருந்தது.

பிரதேசங்கள் வெவ்வேறு என்றாலும், அவர்கள் ஆட்சி நடத்திய முறைகளில் பெரிதும் வித்தியாசமில்லை. இடம், காலம்தான் வேறே தவிர அம்மன்னர்கள் ஒரே மாதிரியான பிரச்னைகளைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது; அல்லது ஏற்படுத்தினார்கள்!!!

ஆப்பிரிக்க மற்றும் ஸ்பெயினில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மன்னர்களையும்,

இந்தியாவில் ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், முஸ்லிம் மற்றும் இந்து மன்னர்களையும்

போர்களில் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

முஸ்லிம் மன்னர்கள் ஏன் முஸ்லிம் மன்னர்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது என்பதற்கு, அவர்கள் ஏன் கிறிஸ்தவ-இந்து மன்னர்களை எதிர்கொண்டார்கள் என்பதற்கான அதே காரணம்தான் - மண்ணாசை!!

இம்மன்னர்கள், மக்களை முஸ்லிம் - முஸ்லிமல்லாதவர் என்ற பாகுபாடுகள் இன்றி ஒரே மாதிரியே நடத்தினார்கள். நல்லாட்சி என்றால் எல்லாருக்கும் நல்லாட்சி; கொடுங்கொலன் என்றால் எல்லாருக்கும் கொடுங்கோலன்!! இஸ்லாமிய மதம் போலன்றி, இந்து மற்றும் கிறிஸ்தவ மதங்களில் மதத் தலைவர்கள் - குருமார்கள் - மடாதிபதிகள், அந்தணர்களுக்கும், மற்ற மன்னர்கள் கொடுத்தது போலவே, பெரும் மானியங்கள் தடையின்றி கொடுக்கப்பட்டு வந்தன. கோயில்களுக்கும், சர்ச்சுகளுக்கும் தாராளமாக நிதி அளிக்கப்பட்டது.

மூன்று பிரதேசங்களிலும் முஸ்லிம் மன்னர்கள் வெகுகாலங்களுக்கு ஆண்டார்கள் என்ற போதிலும், அவர்கள் ஒன்றும் முழுமையான  இஸ்லாமிய ஆட்சியை நிறுவி விடவில்லை!! ஆட்சி நிறுவப்பட்ட சொற்பமான ஆரம்ப காலங்கள் மட்டுமே சில மன்னர்கள், இஸ்லாமிய முறையில் நீதியோடு அரசாண்டார்கள். அதன்பின்னர், வாரிசுச் சண்டைகள், பதவி ஆசைகள், பொருளாசை, மண்ணாசை போன்றவற்றால் அவர்களுக்கிடையிலேயே போரிட்டுக் கொண்டதில் இஸ்லாம் பெயரளவில் மட்டுமே அவர்களிடம் இருந்தது!! 

இடையிடையில், இஸ்லாமைச் சரிவரக் கடைபிடிக்கும் ஒரு மன்னர் அரிதாகத் தோன்றி நீதமான ஆட்சி தருவார். அவருக்குப் பின்னர், அல்லது அவரையும் கொன்றுவிட்டு, அடுத்த ஆட்சியிலிருந்து மீண்டும் குழப்பங்கள் தலையெடுக்கும். ஆகவே, இவர்களை எதிர்கொள்வது எதிரிகளுக்கு எளிதாக இருந்தது.

ஒன்று,  எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில், மன்னரின் எதிரியிடம் ஆட்சியைப் பிடிக்க உதவுவதாகச்  சொல்லிக் கையில் போட்டுக் கொண்டு உள்ளடி வேலைகள் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வது எளிதாகவே இருந்தது.

அல்லது, முஸ்லிம் மன்னர்கள் தம் மதத்தை அழிக்க முயல்வதாகச் சொல்லி, ஆப்பிரிக்கா மற்றும் ஸ்பெயினில் சக கிறிஸ்தவ மன்னர்களிடமும், இந்தியாவில் சக இந்து மன்னர்களிடமும் மத உணர்வைத் தூண்டி ஒன்றிணைந்து போரிட்டு வெல்வது!!

இந்தியாவின் திப்பு சுல்தான் குறித்த வெறுப்புரைகளும் இவ்வகையைச் சேர்ந்ததே...  அதற்கு ஒரு இந்து மடாதிபதியே கொடுத்திருக்கும் மறுப்பைப் பாருங்கள். (நன்றி சகோ. ரபீக்)

ட்சியிலிருக்கும் முஸ்லிம் மன்னர்களே இஸ்லாமைச் சரியாகப் பின்பற்றுவதில்லை; இஸ்லாமைப் பரப்ப (மிஷனரிகள் போன்ற) எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை) அவர்கள் கோயில்கள் - சர்ச்சுகளின் நிதியையும் தடுக்கவில்லை; மடாதிபதிகள் - அந்தணர்களுக்கான மானியத்தைத் தடுக்கவில்லை என்றபோது, இந்தத் தந்திரோபாயத்தின் அவசியம் என்ன என்பதில்தான் இஸ்லாமிய மன்னர்கள் மீதான கட்டுக்கதைகளின் சூட்சுமம் உள்ளது!!

கிறிஸ்தவ ஆட்சிகளிலும் சரி, இந்து மன்னர்கள் ஆட்சியிலும் சரி, மன்னரைவிட பெரும் சக்தி கொண்டவர்கள் மத குருமார்கள்!! அவரது ஆலோசனை பெற்றுத்தான் மன்னர் இயங்குவார். பெரும் இராஜ்ஜியத்திற்கே மன்னன் - பேரரசன் என்றாலும், ராஜகுருவை மீறி, எதுவும் செய்துவிடமுடியாது!! அவர்களது கண்ணசைவில்தான் ஆட்சி நடந்து வந்தது. மடாதிபதிகளும் மதகுருமார்களும் பெரும் செல்வாக்கு பெற்றவர்களாக,  மன்னரைவிட அதிகாரம் படைத்தவர்களாகத் திகழ்ந்தனர்.

இன்றைய ஆட்சியில், சாமியார்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமும், அதிகாரங்களும், சலுகைகளும் இதற்கு உதாரணம்.

னால், இஸ்லாமிய ஆட்சி வந்தபின்பு நிலைமை தலைகீழாக மாறியது!! மக்கள் அவரவருக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றுவதில் எந்தத் தடையும் இல்லை. கோவில்கள், மதகுருமார்களின் மானியத்திலும், வசதி வாய்ப்புகளிலும் எந்தக் குறைவுமில்லை என்ற போதிலும், அரசவையில் அவர்களின் முக்கியத்துவம் வெகுவாகக் குறைந்துவிட்டது. காரணம், இஸ்லாத்தில் மதகுருமார்கள் என்று சிறப்பு படைத்தவர்கள் யாரும் இல்லை. மன்னனோ, பொதுஜனமோ எல்லாரும் இறைவனின் முன்பு சமமே. இறைவேதத்தைப் படிப்பதும், தொழுகை உள்ளிட்ட மார்க்கக் கடமைகளைச் சரிவரச் செய்வதும் பாரபட்சமின்றி அனைவருக்கும்  கட்டாயம் என்பதால், குருமார்கள் என்ற ஒரு பிரிவின் அவசியமோ தேவையோ இல்லாதிருந்தது. ஆட்சி நடத்த அமைச்சரவையின் ஆலோசனைகளே போதுமாயிருந்தது.

இன்னொரு பிரதானக் காரணம், இஸ்லாம் போதிக்கும் #சமத்துவம்!! தாழ்த்தப்பட்டவர்கள் என்று ஒதுக்கி வைத்து, அவர்களைத் தமது அடிமைகளாக வைத்திருந்தவர்களுக்கு, இனி அவர்கள் தமக்கு ஏவல்கள் செய்ய மாட்டார்கள் என்பதோடு, தமக்குச் சமமாக அமர்வார்கள் என்பதையும் ஜீரணிக்க முடியவில்லை.

ஆகவே, அதிகாரம் மற்றும் புகழை இழந்த குருமார்களே இவ்வாறான தந்திரோபாயத்தின் பிண்னணியில் இருந்தனர். கிறிஸ்தவ மதத்தைப் பிரதானப்படுத்தியே சிலுவைப்போர்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவில் குஸ்ரூகான் மற்றும் விஜயநகரப் பேரரசின் மன்னன் ராமராஜ் ஆகியோர் இவ்வாறு மத உணர்வைத் தூண்டி போர் தொடுத்ததற்கு இரு உதாரணங்கள். 

தே போல, போர்களின்போது, முஸ்லிம்களின் பள்ளிவாசல்களும், கிறிஸ்தவர்களின் ஆலயங்களும் அதிகமாகத் தாக்கப்படாவிட்டாலும், இந்தியக் கோயில்கள் அதிகமாகத் தாக்குதலுக்குள்ளாகியதன் காரணம், அங்கு குவிந்திருந்த செல்வங்கள்தாம்!! கோவில்களைக் கொள்ளையடித்தவர்கள் முஸ்லிம் மன்னர்கள் மட்டுமல்ல. ஒரு உதாரணம்: ஈழம், சேர, பாண்டிய, சாளுக்கிய அரசுகளுடன் போரிட்டு,  அங்குள்ள கோவில்களிலிருந்து கொண்டு வந்த செல்வங்களையும், போர் அடிமைகளையும் கொண்டுதான் தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது!!

ஏன், இன்று திருவனந்தபுரம் அனந்த பத்மனாபபுர கோயிலில் உள்ள  கருவூலங்களே இதற்குச் சாட்சி!! இவற்றில் உள்ள செல்வத்தின் மதிப்பு டிரில்லியன் டாலர்கள் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு, பிரச்சாரங்களாலும், வாளாலும் அல்லாமல், இஸ்லாம் உரைத்த வாழ்வியல் முறைகளால்தான் இஸ்லாம் உலகம் முழுவதும் பரவியது. ஆனால், தமது வாழ்வியலில் இஸ்லாமை ஒதுக்கி விட்டதால் முஸ்லிம் அரசர்கள் ராஜ்யங்களையும் இழந்தார்கள்.


ஸ்லாமிய ஆட்சிகள் வீழ்த்தப்பட்டாலும், இஸ்லாத்தை அழிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள்  இந்தியாவில் கடும் எதிர்ப்புடன் முறியடிக்கப்பட்டன - பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவிலும் மிஷனரிகளின் முயற்சிகளால் மதமாற்றம் நிகழ்ந்தாலும், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக  உள்ளனர். ஸ்பெயினில்தான் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டனர். அடங்க மறுத்தவர்கள் ஆப்பிரிக்காவுக்குத் தப்பியோடினார்கள்.   மக்களிடையே இஸ்லாம் அடியோடு அழிக்கப்பட்டது.

அதற்கான முயற்சிகளின் முதற்படியாக, கல்வி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. வரலாறு மாற்றி எழுதப்பட்டது. குழந்தைகள், சிறந்த கல்வி கொடுக்கப் போவதாகச் சொல்லி கடத்தப்பட்டனர். ஒரு தலைமுறை மாற்றப்பட்டதும், அடுத்த தலைமுறைகள் தாமாக மாறிவிட்டன. பள்ளிவாசல்களில் வணக்க வழிபாடுகள் தடுக்கபப்ட்டன. வீடுகளில் ஒடுக்கப்பட்டன. மத அடையாளங்களுக்குத் தடைவிதிக்கபப்ட்டன. எங்கோ கேட்டது, பார்த்தது போல உள்ளதா இவை?

எனினும், தற்போது உலகமயமாக்கலாலும், புலம் பெயரும் அகதிகளாலும் ஸ்பெயினில் மீண்டும் இஸ்லாம் மலர்ந்துள்ளது!!

புராக் பதிப்பகத்தின் வெளியீடான, P.சிராஜுதீன் எழுதிய  "இந்தியாவில் முஸ்லிம்கள் சந்தித்தவை, சாதித்தவை"  புத்தகத்தின் விமர்சனம் தனியொரு விரிவானப் பதிவாக எழுதப்பட வேண்டியளவுக்கு ஒரு தகவல் களஞ்சியம். இந்தியா என்றொரு நாடு உருவாவதற்கு முன்னிருந்த ஆதி காலத்திலிருந்தே இப்புத்தகம் தொடங்குகிறது. அந்தத் தகவல்கள் வியக்கச் செய்வது மட்டுமல்ல, பின்வரும் வரலாற்றினோடு பொருத்திப் பார்க்கவும், பின்னணியைப் புரிந்துகொள்ளவும் முடிகிறது. .

தமிழ்நாட்டிலும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலம் சுல்தான்கள் ஆட்சி இருந்தது என்பது ஆச்சரியமூட்டும் செய்தி. பன்னிரெண்டு வருடங்கள் பள்ளியில் படித்த வரலாற்றுப் பாடங்கள் நமக்குக் கற்றுத் தந்தது ஊசிமுனையளவுகூட இல்லை. அதிலும், பல திரிபுகள்.

இப்புத்தகத்தின் அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

Further Ref:
http://lostislamichistory.com/did-islam-spread-by-the-sword/
http://www.vinavu.com/2011/01/05/raja-raja-cholan/
http://lostislamichistory.com/spains-forgotten-muslims-the-expulsion-of-the-moriscos/
https://en.wikipedia.org/wiki/Expulsion_of_the_Moriscos

Post Comment

மகாராணி
மூக சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த பிரிட்டன் இளவரசி டயானாவின் விவாகரத்திற்குப் பிறகு, அவர் பாகிஸ்தானிய மருத்துவர் ஒருவருடன் நெருங்கிய நட்பில் இருப்பதாகக் கூறப்பட்டது. பின்னர், அவர்கள் பிரிந்தனர். அவராக விலகினாரா அல்லது செல்ல வைக்கப்பட்டாரா என்பது அறியப்படவில்லை.

பின்னர், எகிப்தின் பெரும்புள்ளி டோடி அல் ஃபயத்-உடன் நெருங்கிய நட்பு கொண்டார். அவரோடு காரில் செல்லும்போதுதான் விபத்தில் மரணித்தார். ஒரு முஸ்லிமுடனான அவரது நட்பு அரச குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படாததால் நடந்த “விபத்து” என்றும் சொல்லப்பட்டது!!

இதே போன்ற ஒரு வரலாறு சென்ற நூற்றாண்டிலும் பிரிட்டிஷ் அரச பரம்பரையில் உண்டு!! இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில், 1887-ல், விக்டோரியா மகாராணியாரின் பொன்விழா கொண்டாட்டத்தில் அரண்மனையில் நடந்த வெகு பிரம்மாண்ட விருந்தில் உதவி புரிவதற்காக, இந்தியா மீது ஆர்வம் கொண்டிருந்த மகாராணியின் பிரத்யேக வேண்டுகோளின் பேரில் இந்தியாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இரு பணியாளர்களில் ஒருவர் “அப்துல் கரீம்”.


நாளாவட்டத்தில், மகாராணியின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றியதில், அவரது தனிச்செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார். 80+ வயது அரசிக்கும், 30+ வயது அப்துலுக்கும் இடையில் ஒரு அழகிய பாசமிகுந்த நட்பு மலர்கிறது. ஆனால், அதை அரண்மனைவாசிகள் கொச்சைப்படுத்திப் பார்க்கின்றனர். எதிர்ப்புகள் வந்த போதும், அவற்றைப் புறந்தள்ளி, தன்னை “மகாராணியாகப்” பார்த்து எட்டி நிற்காமல், சக மனுஷியாகப் பார்த்துப் பழகும் அப்துலுக்குப் பல சலுகைகள் அளிக்கிறார் மகாராணியார்.

எனினும் அவரது மரணத்திற்குப் பின்னர் அரண்மனையினர் அவரை உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். அவர்களின் நட்புக்கு சாட்சியான எல்லாவற்றையும் (கடிதங்கள், புகைப்படங்கள், டைரிகள்) தேடித்தேடி அழித்துவிடுகின்றனர்.

எனினும், 2003-ல் ஒரு பத்திரிகையாளரின் கண்ணில் ஒரு புகைப்படம் பட்டு, அதைத் தோண்டித் துருவியதில் இத்தனை விஷயமும் வெளியே வந்துள்ளன. அதை "Victoria and Abdul" என  ஒரு திரைப்படமாகவும் எடுத்துவிட்டனர்!!

சில வருடங்களுக்கு முன் என் சின்னவன், ஏதோ ஒரு புத்தகத்தைப் படித்துவிட்டு, ”விக்டோரியா மகாராணிக்கு இந்தியான்னா ரொம்பப் பிடிக்குமாம்; அவங்கதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கொடுக்கணும் சொன்னாங்களாம்... நம்ம நாட்டுக்கு அப்படித்தான் சுதந்திரம் கிடைச்சிதாம்...” என்றான்.

இந்தப் பிண்ணனியெல்லாம் தெரியாததால், “போடா..... அதெல்லாம் கதையா இருக்கும்..” என்று அதை கண்டுக்கலை... இப்பத்தான் தெரியுது....

https://www.vanityfair.com/hollywood/2017/09/queen-victoria-and-abdul-real-story

Post Comment

நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்....
நம் நாடு விடுதலை அடைந்தபோது, நாட்டின் ஆட்சி நிர்வாகம், நீதி அமைப்பு, இராணுவ அமைப்புகள், சட்ட அமைப்பு இவை எல்லாமே, ஆங்கிலேயர் ஆட்சியில் எப்படி இருந்தனவோ அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டன. பின்னர் மாற்றங்கள் வந்தாலும்,  ஆங்கிலேயர் பயன்படுத்திய அடிப்படை கட்டமைப்பைத்தான் அப்படியே இன்றும் பயன்படுத்துகிறோம்!! சரி, ஆங்கிலேயர் அந்த நிர்வாகக் கட்டமைப்புகளை எங்கிருந்து எடுத்து வந்தனர்? அவர்கள் நாட்டிலிருந்தா? இல்லை.... அவர்களுக்கு முன் ஆண்ட முகலாயர்களின் நிர்வாக முறை அது!! முகலாயர்களுக்கு யார் சொல்லித் தந்தது....?? “சூரி” வம்சத்தைச் சேர்ந்த ஷெர்ஷா என்ற மன்னர் வகுத்த நிர்வாக அமைப்பைத்தான், முகலாயர் காலம் தொடங்கி இன்றுவரை (தேவையான மாற்றங்களோடு) இந்திய நாடு பின்பற்றுகிறது.

அவரது ஆட்சி நிர்வாக முறையைக் கண்டு வியந்துபோன அக்பர், அதை அப்படியே சுவீகரித்துக் கொண்டதுடன், ஷெர்ஷாவின் அமைச்சரவையில் இருந்த ராஜா தோடர்மால் உள்ளிட்ட அரசவைப் பிரதானிகளை அப்படியே தன் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டார்!!

2003-ஆம் ஆண்டு, “விடுதலைப் போரில் முஸ்லிம்கள்” என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், பேராசிரியர் (பெரியார்தாசன்) அப்துல்லாஹ், ஷெர்ஷாவின் ஆட்சி சிறப்புகளையும், செய்த நிர்வாகச் சீர்திருத்தங்களையும் விரிவாக விளக்கினார். அதனால் ஈர்க்கப்பட்ட திரு. க. குணசேகரன், அவரைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டு, அவற்றை "நிர்வாக இயலின் தந்தை ஷெர்ஷா"  என்று  ஒரு புத்தகமாகவே  இயற்றியுள்ளார்.


 ஷெர்ஷாவின் ஆட்சிக்கு முன்பு வரை, வரி வசூலிப்பு, போர் வீரர்கள், நீதிமன்றம், போக்குவரத்து, நிர்வாகம் என்று எதிலுமே ஒரு ஒழுங்கு முறை வகுக்கப்படாமல், மன்னர்கள் அல்லது அந்தந்த பகுதி நிர்வாகிகள் இஷ்டப்படி நடந்து வந்தது.

உதாரணமாக, விளைநிலங்களின் மீதான வரி, விளைபொருட்கள் விளைந்து வருமுன்பே குத்துமதிப்பாக வசூலிக்கப்பட்டது. விளைச்சல் பாதிக்கப்பட்டாலும் வரி தள்ளுபடியோ, நிவாரணமோ இருக்காது. நாட்டின் போர்வீரர்கள் என்றால், முறையாக்த் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் கிடையது. ஒவ்வொரு போரின்போது மட்டும் சேரும் கூலிப்பட்டாளங்கள்தாம். ஆகவே நாட்டுப்பற்றுடன் அல்லாமல், யார் அதிகக் கூலி தருகிறார்களோ அவர்கள் பக்கம் சேருவதே வாடிக்கையாயிருந்தது.

நிர்வாகங்களில், திறமுடையவர்களாகப் பார்த்து நியமிக்காமல், வம்சாவழிகளில் வந்தவர்களை நியமித்தல் அல்லது சிபாரிசுடன் வருபவர்களை நியமிப்பதே வழக்கமாக இருந்தது.

இவை எல்லாவற்றையும் மாற்றி அமைத்தவர் ”ஷெர்ஷா சூரி” என்றழைக்கப்பட்ட ஃபரீதுத்தீன். ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர், அரசப்பணி நிமித்தமாக பீஹார் வந்த தந்தையுடன்  வந்தார். பள்ளியில் இவரது ஆர்வத்தையும் அறிவையும் கண்டு வியந்த ஆசிரியர்கள், உலக வரலாறுகள், இலக்கியங்கள், வீர விளையாட்டுகள் எல்லாம் கற்றுக் கொடுத்து ஒரு இளம் தலைவனாக வார்த்தெடுத்தனர்.

அவருடைய நிர்வாகத் திறமையினால், கி.பி.1522-ல் பீஹார் அமைச்சரைவில் அமைச்சராகச் சேர்ந்த அவர், மன்னனின் பிரதிநியாக ஆக்கப்பட்டார். பீஹாரை ஆண்டுவந்த காலத்தில், தொடர்ந்து நடந்த பல்வேறு போர்களினால் மன்னனாகி, டெல்லியில் ஆட்சி நடத்திய முகலாய மன்னர் ஹூமாயுனையும் தோற்கடித்து, கி.பி.1539-ல் 54 வயதில் பேரரசரானார்.


பல போர்களினால் எல்லையை விரிவாக்கிய அதே காலத்தில், நிர்வாகத்தில் ஒரு ஒழுங்குமுறையைத் திட்டமிட்டுச் செயலாற்றி, மக்களின் வாழவாதாரத்திலும் ஒழுங்குமுறையைக் கொண்டு வந்தார். அதன்மூலம், பின்வந்தவர்களுக்கு நிர்வாக இயலில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் என்பது அவரின் தனிச்சிறப்பு!!

## முதலில் பண்ட மாற்றத்திற்கு உதவும் வகையில், “ரூப்யா”, “பைசே” என்ற பெயர்களில் நாணயங்களை அறிமுகம் செய்தார். இன்றுவரை, இந்தியா மற்றும் அண்டை நாடுகளிலும் “ரூபாய்” என்று நிலைத்திருப்பது அவர் சூட்டிய பெயர்தான்.

## நாட்டை,நிர்வாகம் செய்ய வசதியாக ”சர்க்கார்” எனவும், “பர்கானா” எனவும் பிரித்தார். “முன்சீஃப்”, ”ஷேக்தார்” என அலுவலர்களை நியமித்தார். இன்றைய அரசு ஊழியர்களைப் போலவே, மூன்றாண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யபப்ட்டனர்.

## இன்றுள்ள கலெக்டர், நீதிபதிகள், தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர், வரிவசூலிப்போர், கருவூலக் கணகக்ர் ஆகிய அதிகாரிகள் அடங்கிய நிர்வாக அமைப்பு முறை ஷெர்ஷா உருவாக்கியதே.

## ஒவ்வொரு ஊரிலும் வாழும் மக்கள், நிலங்கள், வேளாண்மை, உள்ளிட்ட எல்லா விபரங்களும் அவ்வூரின் “கிராம பொதுச் சபை” பதிந்து வைத்துக் கொள்ளும். இதன்மூலம், சட்ட ஒழுங்கு சிக்கல்கள் எளிதில் தீர்க்கபப்ட்டன. நில உரிமையாளர்களுக்கு “பட்டா” வழங்கப்படது.

## வர்த்தகம் நடைபெறுவதற்கு ஏதுவாக சுங்கவரி போன்ற தேவையற்ற வரிகளை நீக்கினார்.


## வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பிரயாணிப்பதற்காகவும், தகவல் தொடர்புக்காகவும் வங்க தேசத்திலிருந்து, லாகூர் வரை நீண்ட Grand Trunk Road எனப்படும் நாற்கரச் சாலைகளை அமைத்தார். சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டு, தங்கும் விடுதிகளும் அமைக்கப்பட்டன.

## இராணுவத்தில் அதுவரை இருந்த “கூலிப்பட்டாள முறை”யை மாற்றி, முறையாக வீரர்களைத் தேந்தெடுத்து, அவர்களை அரசு ஊழியராக்கினார். போர்கள் இல்லாத காலத்திலும் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படும் எனப்தால், ராஜவிசுவாசம் நிறைந்தவர்களாக இருந்தனர்.

## ஒவ்வொரு இராணுவ வீரருக்கும், அவரது அங்க அடையாளங்கள் உள்ளிட்ட விபரங்கள், மற்றும் ஈடுபட்ட போர்கள், ஈற்றிய வெற்றிகள் முதலான பணி விபரங்களையும் பதிவு செய்யும் “சர்வீஸ் ரெக்கார்ட்” முறையும் இவர் தொடங்கியதுதான்.

## பட்டாலியன், ரெஜிமெண்டுகள் எல்லாம் அவர் உருவாக்கியவையே. இனவாரியாக அவர் பிரித்து வைத்த முறையில்தான், இன்று “மெட்ராஸ் ரெஜிமெண்ட்”, “ரஜபுத்ர - கூர்க்கா” ரெஜிமெண்ட்கள் அழைக்கப்படுகின்றன.

## உள்நாட்டு பாதுகாப்பிற்காக கிராமங்களில் வீதிவலம் வரும் “கூர்க்கா” முறை அப்போது ஏற்படுத்தப்பட்டதுதான். தேவைப்படின் அவர்கள் இராணுவத்தை அழைப்பார்கள்.

## நாட்டின் நிர்வாகத்தைக் கவனிக்க  நிதித்துறை, நீதித்துறை, இராணுவத்துறை, உளவுத் துறை, வெளியுறவுத் துறை, வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி ஆகியவை அதற்கென நியமிக்கப்பட்ட அமைச்சர்களுடன் இருந்ததோடு, முத்னமுதலாக ”ஆவணத்துறை” இவர்காலத்தில்தான் ஏற்படுத்தபப்ட்டது!!

## தாய்மொழியான ஆஃப்கானின் “பஷ்டு” மொழியை நேசித்தாலும், இந்தியாவில் பெருமளவு புழங்கிவந்த பார்ஸி மற்றும் இந்துஸ்தானி மொழிகளையே ஆட்சி மொழிகளாக்கினார்.

## அவரது தந்தையோடு இணைந்து குடும்ப நிலத்தில் வேளாண்மையை நேரிடையாக மேற்பார்வை செய்த அனுபவம் இருந்ததால், உழைப்பின் கஷ்டம் புரிந்திருந்தது. ஆகையால், இடைத்தரகர்களான  வரி வசூலிப்பவர்களைத் தவிர்த்து, விவசாயிகளே நேரடியாகக் கருவூலத்தில் வரி செலுத்தும் முறை உருவாக்கினார்.

## வறட்சி, வெள்ளக் காலத்தில் வரி முற்றிலுமாக இரத்து செய்யபப்ட்டு, நிவாரணம் வழங்கப்பட்டது.

## ஒருகிராமத்தில் குற்றச்செயல் நடந்தால், குற்றவாளியை அரசிடம் ஒப்படைப்பது கிராமத்தின் பொறுப்பு. ஆகவே, குற்றச்செயல்கள் வெகுவாகக் குறைந்தன.

## அரசில், எந்த அதிகாரியும் நேரடியாக உயர் பொறுப்பில் நியமிக்கப் படுவதில்லை. கீழ்மட்ட பொறுப்பில் இணைந்து, பின் படிப்படியாகத்தான் முன்னேறி வரவேண்டும் என்பது கட்டாயம். அவரது மகனையே, படையில் சிப்பாயாகத்தான் முதலில் இணைத்துப் பயிற்சிக் களம் புகுத்தினார்.

## மக்களை நேரடியாகச் சந்திக்காமல், மாடங்களில் இருந்து கையாட்டி “பாய்யோ.. பெஹனோ..” என்று தனக்குத்தானே உரையாற்றிவிட்டுச் செல்லும் மாடப்புறாவாக இல்லாமல், தினமும் சாமான்ய மக்களைத் தனிமையில்  சந்தித்து குறைகளைக் கேட்பதையும் தம் அலுவல்களில் ஒன்றாக வைத்திருந்தார் ஷெர்ஷா.  ஒருமுறை, ஒரு பொற்கொல்லனின் மனைவி ஷெர்ஷாவின் மருமகன் (தடுப்பின்பின் அப்பெண் இருந்ததைக் கவனிக்காமல்) தன் மீது வெற்றிலைச் சாறைத் துப்பியதாகப் புகார் கூறியதை அடுத்து, தக்க நீதி வழங்கினார்!!

சிறப்புற நீதியுடன் ஆட்சி நடத்துவதற்கு ஏதுவாக, ஆட்சி நிர்வாகத்தில் இவ்வளவு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்த ஷெர்ஷா பேரரசராயிருந்தது எத்தனை ஆண்டுகள் தெரியுமா? ஐந்தே வருடங்கள்தாம்!! ஆம்!! அதற்கு முன், எத்தனையோ வருடங்கள் எத்தனையோ பேர் ஆட்சி செய்திருந்தாலும், யாரும் செய்யாத சீர்திருத்தங்களை வெறும் ஐந்தே ஆண்டுகளில் செய்து விட்டார்!!

ஷெர்ஷா, அடிமட்டத்திலிருந்து உயர்ந்தவர் என்பதால், போர்க்களங்களிலும் முதல் வரிசையில் நிற்பார். வீரர்களை மோதவிட்டு கோட்டையில் இருது கண்காணிப்பவர் அல்ல அவர். அவ்வாறு ஒரு போரில், வெடிகுண்டுக்கான வெடிமருந்தைத் தானே தயாரித்துக் கொடுத்தபோது நிகழ்ந்த விபத்தில் மரணமடைந்தார்!!

அவரது மரணத்தை அறிந்த, அவரிடம் தோற்ற - அவரது எதிரியான மன்னர் ஹுமாயுன், “ஓ!! அந்த அரசர்களின் ஆசிரியன் இறந்துவிட்டானா??!!” என்று தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார்!! எதிரியும் மதிக்குமளவு சிறந்த ஆட்சி செய்தவர் ஷெர்ஷா!!
 

Further Ref.:http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-86/32049-1
http://www.importantindia.com/2987/sher-shah-suri-achievements/
https://www.gktoday.in/administration-of-sher-shah-suri/
https://selfstudyhistory.com/2015/01/28/the-establishment-of-the-north-indian-empire-the-surs/Post Comment

துளித்துளியாய்.....
“புட்டி நீர்” புத்தகத்தின் விமர்சனப் பதிவில் விரிவாகப் பார்த்தபடி, வீட்டிற்கு வரும் கார்ப்போரேஷன் தண்ணீரையும் நம்பி குடிக்க முடிவதில்லை; அதைச் சுத்திகரிக்க வீட்டிலேயே எதிர் சவ்வூடு பரவல் கருவி (R.O) வைத்தால் அதில் கிருமிகளோடு சேர்ந்து, தாதுக்களும் போய், தண்ணீர் சத்தில்லாமல் போய்விடுகிறது. அதிகப் பணம் கொடுத்து தரமான குடிநீர் என்று நினைத்து வாங்கும் பாட்டில் குடி நீரும் இவற்றிற்குக் குறைவில்லாதபடிக்கு, சுத்தமில்லாதவை என்று ஆய்வுகள் கூறுகின்றன!!

வற்றாத ஜீவ நதிகள் என்று பெயர் பெற்ற ஆறுகள் கூட, வற்றி வரண்டு போய்விட்டன!! நல்ல மழை பொழிந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருக்க வேண்டிய இந்த ஆகஸ்ட் மாதத்திலும், மக்கள் ஏப்ரல் - மே போல மக்கள் குடங்களோடு தண்ணீருக்காக அலைகின்றனர்!  இனி ஒரு உலகப் போர் வந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று செய்திகள் வேறு பயமுறுத்துகின்றன.... உலகப் போர் வருமுன்பே, தெருக்களில், நம்  மக்கள் தண்ணீர் லாரி முன்பும், குழாயடிகளிலும் சண்டை போடும் பரிதாப நிலை நிலவுகின்றது.    என்னதான் செய்வது?

ழக்கம்போல, கையில் இருக்கும் வெண்ணெயை மறந்துவிட்டு, நெய்க்கு அலைகின்றோம்!! ஆம், மழை நீர்!! இந்த மழை நீரை முறையாகச் சேமித்தால், எங்கும் தண்ணீருக்காக அலைய வேண்டியதில்லை. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வெயில் காலத்திலும் நம் தேவை தீர்க்குமளவு ஆழ்குழாயில் நீர் வரத்து இருக்கும்.

மழை நீர் மற்ற நீரைவிட தூய்மையானது, சுவையானது. இதில் சமைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

ழை நீர் சேகரிப்பு இரு வகைப்படும்:
          
            1. குடி நீருக்காக
            2. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த.

தற்போதைய சூழலில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழை நீர் தொட்டி அமைப்பதைவிட, குடி நீருக்காக மழை நீரைச் சேமித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!!

குடி நீருக்காக:

குடி நீர்த் தேவைகளுக்காக மழை நீரைப் பல வகைகளில் சேமிக்கலாம்... 

1. வீடுகளில் தொட்டியில் மழை நீரை நேரடியாகச் சேமிப்பது:

மொட்டை மாடியில் அல்லது கூரை வீடுகளில் கூரை மீது விழும் மழையை நேரடியாக தொட்டிகளில் பிடித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் அதை, பல மாதங்கள் வரை அந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எளிதான முறை.


அதிக செலவு பிடிக்காத  இந்த அமைப்பை, ஒரு முறை செய்து வைத்து கொண்டால், பல வருடங்கள் தொடர்ந்து பயன்படும். ஒவ்வொரு மழைக்கு முன்பும், மொட்டை மாடியைக் கொஞ்சம் சுத்தம் செய்வது மட்டுமே நமது வேலை!!

இதைப் பல வருடங்களாகப் பின்பற்றி வரும் ஒரு மழைநீர் சேகரிப்பாளரின் செய்முறைவிளக்க அனுபவம் இங்கே: 


2. ஓட்டு வீடாக இருந்தாலும் மழை நீர் சேகரிப்பு சாத்தியமே!!

3. மழை நீர்ப் பொறியாளர் என்றழைக்கப்படும் திரு. வரதராஜன் அவர்கள், தனது வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றி, தற்போது பத்து லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்து வைத்துள்ளார். இரண்டாயிரம் வீடுகளுக்கு மேலாக, மழை நீர் சேமிக்க ஆலோசனைகள் கூறி சேமிக்க உதவியுள்ளார்.  விரும்புவோருக்கு, பஸ் செலவுக்குக் கொடுத்தால், வீட்டுக்கு வந்தே மழை நீர் சேகரிப்பு குறித்த ஆலோசனைகள் கூறத் தயாராக உள்ளார் - கட்டணம் ஏதுமின்றி!!


4. அடுக்கு மாடி கட்டிடங்களில் மழை நீரைச் சேகரிக்க, கட்டிடம் கட்டும்போதே அதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும், பிற்பாடு செய்யலாம். வீடியோவில் உள்ளது போல...5. பிரத்யேகமாகக் கட்டப்பட்ட நிலத்தடி தொட்டிகளில் மழைநீரைச் சேமித்தல்:

வீடு கட்டும்போதே, இம்முறையில் ஒரு தொட்டி கட்டி, அதில் மழை நீர் சேகரம் ஆகும்படி செய்துவிட்டால், வருடம் முழுதும் நீரைப்பற்றிக் கவலையேயில்லை!!


நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த:

இன்று “போர்” எனப்படும் ஆழ்குழாய் வழியாக நிலத்தடி நீர் எடுக்கப்படாத வீடுகளே இல்லை எனலாம். எடுத்துக்கொண்டே இருந்தால், அது என்ன அமுதசுரபியா... நீர் வந்து கொண்டே இருப்பதற்கு?

மழை நீரோ, கழிவு நீரோ உள்ளே செல்லமுடியாதபடிக்கு கான்க்ரீட் தரைகள், சாலைகள் என்றான பின் எவ்வாறு நிலத்தின் தண்ணீர் மட்டம் உயரும்? விளைவு, இன்று 200 - 300 அடியெல்லாம் தாண்டி, 1000 அடியில் போர்கள் தோண்டுவது சர்வ சாதாரணமாகிவிட்டது!!

அப்படி இலட்சங்கள் செலவழித்து ஆயிரம் அடி தாண்டி போர் போட்டாலும், மிகச்சில ஆயிரம் செலவில் மழை நீர் வடிகால் ஒன்றைக் கட்டமாட்டேன் என்று மக்கள் இருபப்து வேதனையான விந்தை!!போர்வெல்லின் அருகே, சில மீட்டர்கள் மட்டுமே தோண்டி ஒரு குழாயை நட்டு, அதைச் சுற்றி மணலும், ஜல்லியும் போட்டுவிட்டால் அதுதான் மழைநீர் வடிகால். நிலத்தடி நீரின் மட்டத்தை விரைவில் உயர்த்திவிடுவதோடு, தண்ணீரின் உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்து விடும்!!


 


மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்தும, செய்முறைகள் குறித்தும் விபரமாகப் பேசும் ஒரு வலைத் தளம்: https://tinyurl.com/y7m4x482

இல்லங்க....எனக்கு இதெல்லாத்தையும் உக்காந்து வாசிக்கவும், அதன்படி செய்யவும் நேரமில்ல... பணம் கொடுத்தா யாராவது செஞ்சு தருவாங்களான்னு கேட்பவர்களுக்கும் பதில் இருக்கிறது!! ஒரு தனியார் நிறுவனம், இதைத் தொழிலாகவே செய்து வருகிறது!! இந்நிறுவனம உருவாக்கிய "#மழை இல்லம்" குறித்து  விகடனில் வந்த தகவல்கள் இங்கும, இங்கும்.    http://rainstock.in/rainwater-harvesting/

இன்னுமொரு நிறுவனம்:

https://www.facebook.com/guna.sekaran.54772728/posts/1668151173209158


வலையில் கொஞ்சம் தேடினால் போதும், ஏகப்பட்ட விபரங்கள் வந்து விழுகின்றன....  வீடே இல்லாதவர்கள் கூட மழை நீரை சேகரிக்க வழிகள் கிடைக்கும்!  தவிர, நிறைய பேர் செய்திருப்பதால், அவர்களிடம் ஆலோசனை பெற்று செய்துவிடலாம். எதிர்வரும் மழைக்காலத்தை உத்தேசித்து, இப்போதே தயாரானால், அடுத்த கோடையை குளுகுளுவெனக் கழிக்கலாம்!!

Post Comment

புட்டி நீர்
புத்தகம்: உயிரைக் குடிக்கும் புட்டி நீர்
எழுதியவர்: நக்கீரன்

ன்றைய உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் “பாட்டில் குடிநீர்” குறித்துப் பேசும் புத்தகம் இது. அதன் உற்பத்தியாளர்கள் சொல்வதுபோல, பாட்டில் நீர் சுத்தமானதும் இல்லை, தரமானதுமல்ல, சுவையானதுமல்ல,  தூய்மையானதுமில்லை, சத்து நிறைந்ததுமில்லை, பாதுகாப்பானதுமில்லை. ஆனால் கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், நோய்கள் நிறைந்தது என்று ஆதாரங்களோடு பட்டியலிடுகிறார். ஏன் பெட்ரோல்கூட இருக்கிறதாம்!!

இதில் காட்டப்படும் பெரும்பாலான ஆய்வக ஆதாரங்கள் வெளிநாடுகளில் உள்ளது. அங்கு சற்றேனும் தரக்கட்டுபாடுகள், சட்டங்கள் கடைபிடிக்கப்படும் அங்கேயே  இந்நிலை என்றால்.... இந்தியாவில்? எதை நம்பி குடிக்கிறோம் இவற்றை?

இன்று வீடுகள்தோறும் ஆர்.ஓ. எனப்படும் எதிர் சவ்வூடு பரவல் கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதை மிகவும் பாதுகாப்பானதாக நம்புகிறோம். ஆனால், அதில் தண்ணீரில் இயற்கையாக உள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையைத்தான் குடிக்கிறோம். கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட தாதுக்கள் குறைபாட்டால், இதைத் தொடர்ந்து குடித்துவரும் மக்களுக்கு எலும்பு முறிவு, அடர்த்திக் குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், தாதுக்குறைபாடு இதய நோய் உள்ளிட்ட பலவற்றிற்கும் வழிவகுக்கும் என்று ஆசிரியர் சொல்கிறார்.

எனில், எதைத்தான் குடிப்பது என்று கேள்வி எழும். அரசு, நகராட்சி குடிநீர் குழாய்கள் வழி வழங்கும் குடிநீரைத்தான் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர்!!! அதை நம் மனம் ஏற்க மறுக்கிறதல்லவா? ஆனால், அதில்தான் தேவையான தாதுக்கள் உள்ளதோடு, முறையான கிருமி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது என்று காரணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.


நகராட்சி தரும் குடிநீர் சுத்தமானதும் சத்தானதும்தான். ஒத்துக்கொள்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வரும் குழாய்கள்? துருப்பிடித்துப்போன குழாய்களும், குழாய் உடைந்து கழிவு நீர் கலந்து வரும் குடிநீரும்... நினைக்கவே அருவெறுப்பாக உள்ளதல்லவா...  அதைச் சரி செய்வது அரசின் பொறுப்பு; மாநிலம் முழுதும் பாட்டில் நிறுவனங்களைச் செயல்பட அனுமதித்துள்ள அரசு, முதலில் சரி செய்யவேண்டியது இதைத்தான் என்று சாடுகிறார். அதுதான் நமக்கும் தெரியுமே.... நடந்தால்தானே...

நகராட்சி குடிநீரையே தான் இத்தனை வருடங்களாகக் குடித்து வருவதாகவும், தனக்கு இதுவரை எதுவும் ஆகவில்லை என்று தைரியமளிக்கும் ஆசிரியர், குழாயில் வரும் குடிநீரை சூரிய ஒளி கொண்டு கிருமி நீக்கம் செய்யும் முறையையும், தேத்தாங்கொட்டை, முருங்கை விதை போன்றவற்றைப் பயன்படுத்திச் சுத்தம் செய்வதையும் சொல்லித் தருகிறார்.

குடிநீர்ப் பஞ்சம் நிலவும் மாநிலங்களில்கூட அதிக பாட்டில் நீர் நிறுவனங்கள் இல்லை; தண்ணீர் வளம் நிரம்பிய தமிழ்நாட்டில்தான் இந்தியா முழுதும் உள்ள 1200 பாட்டில் குடிநீர் நிறுவனங்களில் பாதி - 600 அமைந்துள்ளன என்று அதிர்ச்சி அளிக்கிறார் ஆசிரியர். மக்களுக்கு சுத்தமான நீரை வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அதே நீரை வணிக நிறுவங்களிடம் இந்த அரசு ஒப்படைத்துள்ளது என்பது எத்தனை கேவலம்?

த்தனைக்கும், 2007-ல் உலக மேம்பாட்டு இயக்கம் வெளியிட்ட Going Public: Southern Solutions to the Global Water Crisis என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பொதுத்துறை நீர் விநியோக அமைப்புகளில் தமிழகத்தின் பொதுத்துறையும் ஒன்று. இத்தகைய பெருமையுடைய அரசு நிறுவனம், இன்று நீராதாராஅங்களைத் தனியாருக்குத் திறந்துவிட்டு செயலிழந்து நிற்கிறது!! குழாயில் நீர் வழங்குவதைக் காட்டிலும் “பாட்டில் நீர்” வழங்க 1000 மடங்கு அதிகம் செலவாகிறதாம்!! அந்த அதிகப்படி செலவு யார் தலையில் விடியும்? இதனால் சேரும் ப்ளாஸ்டிக் கழிவுகள் வேறு!!

பாட்டில் நீரைக் குடிக்கும் மக்களிடையே ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் பற்றி இவர் கூறும் உண்மை பகீரென்கிறது. வேதனையுடன் “கரெக்டுதான்” என்று சொல்ல வைக்கிறது. தண்ணீர்ப் பந்தல் வைத்து, அறியாத தெரியாத மக்களின் தாகம் தீர்த்த மக்கள் இன்று காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன்மூலம், பொதுநலம் மறந்து சுயநலம் பெருகியவர்களாக ஆகிவருகின்றனர். காசு கொடுத்து வாங்குவதால் தண்ணீரை மற்றவர்களுடன் பகிர மனம் வருவதில்லை.

அனைவரும் நீர் அரசியலைப் புரிந்துகொள்ள, கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். ஆனால், முழுதும் “சுத்தத் தமிழில்” எழுதப்பட்டுள்ளதால், சாமான்ய மக்களைச் சென்று சேருவதில் சிரமம் இருக்கும். தலைப்பே “புட்டி நீர்” என்றிருப்பதைவிட, “பாட்டில் நீர்” என்றோ அல்லது “குப்பி நீர்” என்றோ இருந்திருந்தால் அதிகம் பேரைச் சென்றடைந்திருக்கலாமோ....

                                                         https://www.facebook.com/Chennaites/

ந்தியாவின் Think Tank நிறுவனமான ”Indian Council for Research on International Economic Relations”,  இந்திய அரசு, குடிநீரை இலவசமாகக் கொடுக்கக் கூடாது; இஸ்ரேலைப் போல ஒவ்வொரு சொட்டு நீருக்கும் கட்டணம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது!! பிரதமரின் சமீபத்திய இஸ்ரேலிய விஜயத்திற்குமுன் கூறப்பட்டுள்ள இந்த ஆலோசனை செயல்படுத்தப்பட்டு, குடிநீரும் கார்ப்போரேட்டுகள் வசம் போகுமா  என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிரியர் மழைநீரைப் பற்றிப் பேசவேயில்லை. மழைநீர் சேகரிப்பு மிக அவசர, அவசியத் தேவையாக மாறி வருகிறது. சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தம் வீட்டுக்கு  மழைநீரை மட்டுமே சேமித்துப் பயன்படுத்தி வருவதாக் கூறினார். ஒரு முறை பிடிக்கும் நீர் 6 மாதங்களுக்கு வருவதாகவும், அது தீரும் சமயத்தில், அடுத்த மழைக்காலம் ஆரம்பித்து விடுவதால், தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை என்று கூறினார். இனி ஒவ்வொருவரும் மழைநீரைச் சேமிப்பதைத்  தீவிரமாகச் செயல்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வாக அமையும்.

வீடுகளில் மட்டுமல்ல, மக்கள் ஒன்றிணைந்து தத்தம் தெருக்களிலும், பகுதிகளிலும் மழைநீர்த் தொட்டி அமைத்தாலொழிய பயமுறுத்திக் கொண்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியாது!!

Post Comment

ச்சும்மா ரெண்டு புத்தகம் வாசிச்சு...
1. புத்தகம்அக்கா
    எழுதியவர்: துளசி கோபால்துளசிதளம்”  என்ற வலைப்பூவை பத்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் திருமதி. துளசி கோபால் அவர்கள், தம் வலைப்பூவில் எழுதிவந்த தம் அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட புத்தகம்.

வீட்டின் கடைக்குட்டியான அவருக்கு, தன் சொந்த அக்கா, அண்ணன்களோடு கழிந்த - சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான-   இளம்பிராயத்து அனுபவங்களின் தொகுப்புகளாக இப்புத்தகம் விளங்குகிறது.

“டீச்சர்” என்று அனைவராலும் மரியாதையாக விளிக்கப்படும் இப்பதிவரின் பதிவுகள் பொதுவாக  எள்ளலும், சிரிப்புமாக துடிப்போடு இருக்கும். அந்த எதிர்பார்ப்போடு இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த எனக்கு, இதில் வரும் சோகக் காட்சிகள் மிகவும் பாதித்துவிட்டன.

ஆசிரியரின் தாயார் ஒரு மருத்துவர் (அப்போதே..) அதைவிட ஆச்சரியம், அவரது பாட்டியும், மற்றும் பலரும் ஆசிரியைகள். ஆனால்.... அப்போதே மருத்துவராக இருந்தவர், தன் மூன்று மகள்களில் ஒருவரைக்கூட மருத்துவராக ஆக்க முனையாதது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவரென்ன, குறைந்த பட்சம் ஆசிரியை கூட ஆக்காமல், சீக்கிரமே இருவருக்குத் திருமணம் செய்து வைத்ததும் என்ன காரணத்தால் என்று சொல்லப்படவில்லை.

அம்மா இருக்கும்வரை ஒன்றாக இருந்த சகோதர சகோதரிகள், அம்மாவின் மறைவினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்க வேண்டிவருவது கண்ணீர் வரவழைத்தது - நிதர்சன உண்மையன்றோ இது. எந்தக் குடும்பத்திலும் அம்மாவோ, அப்பாவோதான் பிள்ளைகளை இணைக்கும் புள்ளியாக இருக்கின்றனர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, அந்த நெருக்கம் குறைந்து, பின் மறைந்தே விடுகிறது.

மற்றபடி, அக்காவுக்கும் அண்ணனுக்கும் நடக்கும் சண்டையால், அவர்களிடம் மாட்டிக் கொண்டு ஆசிரியர் பட்ட அவஸ்தைகள் சுவாரசியம். “ஏழை வாத்தியாருக்கு ஏழு பிள்ளைகளா?” என்ற டயலாக்கில் டீச்சரின் பஞ்ச் மார்க் தெரிகிறது!

சுவாரசியமாக ஆரம்பித்த புத்தகம், குணச்சித்திர படம் போல, சோகமாக முடிகிறது. பெரிய அக்காவும், அண்ணனும் இப்போது என்ன செய்கிறார்கள்? ஆசிரியர் அவர்களோடு தொடர்பில் இருக்கிறாரா? டீச்சர் தன் கணவரை எங்கு சந்தித்தார், எப்படி திருமணம் செய்தார்கள்? இப்படிப் பல கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறது புத்தகம்.

2. புத்தகம்: மகளிர் தினம் - உண்மை வரலாறு
    எழுதியவர்: இரா.ஜவஹர்

உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மார்ச் 8 என்று வரையறுத்தது யார், அதன் பிண்னணி ஆகியவற்றில் நிலவி வரும் குழப்பங்களை நீக்கி, அதன் உண்மை வரலாறு இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில், 1907-ல் நடந்த “உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்” பெண்களுக்கு வாக்குரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மகளிரால் நடத்தப்பட்ட  பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள், ஒரு பொதுவான  ”உலக மகளிர் தினம்” கடைபிடிப்பதின் அவசியத்தை உணர்த்தின. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், பின்வந்த வருடங்களில் வேறுபட்ட தினங்களில் (பெரும்பாலும் மார்ச் மாதத்தில்) ”உலக மகளிர் தினம்” கடைபிடிக்கபப்டன.

1917-மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்களால், ”உணவும் சமாதானமும்” என்ற பெயரில் ரஷ்யப் புரட்சி  நடத்தப்பட்டு, மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, சோவியத் ரஷ்யா உருவானது. 1920-ல், மார்ச் 8 மகளிர் தினமென  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆக, உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுவதற்கு, சோஷலிச-கம்யூனிஸ பெண்களே காரணம் என்றும், ஐ.நா.சபையோ, வேறு நாடுகளோ காரணமல்ல எனப்து வரலாற்றுப் பிண்னணியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பல பெண் கம்யூனிஸ தலைவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ப்புத்தகத்தில் ஒரு சம்பவம் கவனத்தை மிக ஈர்த்தது. நம(என)க்கும் மிகப் பொருந்திப் போகக்கூடியது என்பதால் இருக்குமோ....

ரஷ்யாவில் கம்யூனிஸம் தொடங்கிய காலத்தில் மன்னராட்சியின் அடக்குமுறை அதிகமாக இருந்ததால், இயக்க நடவடிக்கைகளை இரகசியமாகவே தொடர முடிந்தது. அதில் ஒன்றாக, 1923-ல் மார்ச் 2 அன்று மகளிர் தினக்கூட்டம் ஒன்று, “அறிவியல் காலை” என்ற பெயரில் நடத்தப்பட்டது. அதில் பேசுவதற்காக “அலெக்சீவா” என்ற ஒரு பெண் தொழிலாளி, தன் உரையைத்  (தலைவர்களின் உதவியோடு) தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். அரங்கில் மக்கள் கூட்டத்தோடு, போலீஸும் குவிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, வாழ்நாளில் முதல் முறையாக உரை நிகழ்த்த வந்த அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட நடுக்கத்தில் எழுதி வைத்திருந்ததில், எழுத்துகள் மறைந்து,  எல்லாமே புள்ளிகளாகத் தென்பட்டன.

குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டு, தன் தொழிற்சாலை அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அங்கு பெண்கள் எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்,  நேரும் பாலியல் தொந்தரவுகள், நிர்ணயிக்கப்பட்ட 11 மணி நேர வேலைக்குப் பதிலாக, 18 மணி நேரம் வேலை வாங்குவது  போன்ற எல்லாவற்றையும் சொன்னார். இந்தக் கொடுமைகளால் பெண்கள் விபசாரத்திற்குத் தள்ளப்படும் அவலம் குறித்துப் பேசினார். பேசி முடித்ததும், கைதட்டல் விண்ணைப் பிளந்தது. அவர் பேச்சு ஏற்படுத்திய தாக்கம், அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டதில் தெரிந்தது!!

Post Comment

சூரிய உதயத்தைக் காணாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
ந்த ஆசிரியரின் இன்னொரு புத்தகத்தை முன்பு வாசித்தபோது, எடுத்த கையோடு முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது. ஆனாலும், இந்தப் புத்தகம் ஒரு  இந்திய  சுதந்திரப் போராட்ட வீரரின் கதை என்பதால், ஒரு பத்து  நிமிஷ time-filling-காக வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்ம்ம்ம்பி எடுத்தேன்... ஆனால்... ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம் பார்க்கும் விறுவிறுப்புடன் விழிவிரித்து வாசித்து முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது.

கீழே வைத்தது புத்தகத்தை மட்டும்தான். புத்தகம் தந்த பிரமிப்புகளும், நினைவுகளும், உணர்வுகளும் விட்டு விலகவே இல்லை. இதன் தொடர்ச்சியாக இன்னொரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆம்!!

”அகண்ட பாரதமாக” இருந்த இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களால், கடைசி வரை தன் ஆளுகைக்குக் கொண்டு வரவே முடியாதது, (இன்றைய பாகிஸ்தானின்) வடமேற்கு எல்லை மாகாணமான வஜீரிஸ்தானை!! இந்தத் தோல்வியை அன்றைய இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே ஆட்சியாளர்களால் அவமானத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்!!

ந்த வீர வரலாற்றை விவரிக்கும் புத்தகம்தான், நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்கள் எழுதிய “இப்பி ஃபக்கீர்”!!  இவர்களின் வீரத்திற்குச் சான்றாக ஒரே ஒரு தகவலைப் பகிர்கிறேன்...  ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடித்துச் செல்லும் இவர்கள், “உங்கள் துப்பாக்கிகள் எங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயிற்சி அளிக்கத்தான் பிரயோஜனம்” என்று எள்ளலாகச் சொல்லிச் செல்வார்கள்!!  அது உண்மையே என்று அவர்களின் கையில் இருக்கும் அதிநவீன ஆயுதங்கள் சாட்சியளிக்கும். 
தங்களால் கட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று உணர்ந்துமே, வீராப்பிற்காக 18 முறை அப்பிராந்தியத்தினர் மீது தாக்குதல் நடத்தியும், ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இத்தாக்குதல்களில் ஒன்றை முன்நின்று நடத்தியவர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமர் ஆன “வின்ஸ்டன் சர்ச்சில்” ஆவார்.

கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பல நாடுகளில் தங்கள் ஆட்சியை நடத்தி, “சூரியன் அஸ்தமிக்காத ஆட்சி” என்று பெருமை பாராட்டிக் கொண்டவர்களால் இந்த மாகாணத்தில் மட்டும், இந்தியாவிற்கு விடுதலையளித்த 1947 வரை சூரியோதயத்தைக் காணவே முடியவில்லை.இதைத் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தை வாசித்து முடித்ததும், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்  ”கான் அப்துல் கஃபார் கான்” -  அவரது காந்தீயக் கொள்கைகளின் காரணமாக  “எல்லை காந்தி” என்று அழைக்கப்பட்டவர் - இவரின் வரலாற்றை வாசிக்கும் ஆவல் மிகைத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இரு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன இவரைப் பற்றி. ஒன்று ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு - இதன் பதிப்பகம் குறித்த தகவல்கள் இல்லாமையால் கிட்டவில்லை, இன்னொன்று தமிழில் எழுதப்பட்ட சிறு வரலாற்று ஏடு. இப்புத்தகம் கைக்கு வரக் காத்திருக்கிறேன்.

இப்பி ஃபக்கீரின் வரலாறு ஏன் கஃபார் கானை நினைவுபடுத்தியது எனக்கு? காரணம், நோக்கம் ஒன்று என்றாலும், இருவேறு பாதைகளில் பயணித்த இருவரின் இரு வேறு குணங்கள்!!  இப்பி ஃபக்கீர் என்றழைக்கப்பட்ட குலாம் மிர்ஸா கான்,  வீரதீரச் செயல்களால் கவர்கிறார் என்றால், எல்லை காந்தி அஹிம்சையில் மிகுந்தவர். இந்தியாவைப் பிரிக்கவே கூடாது என்று தீவிரமாக  எதிர்த்தவர். தங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் அலல்து தனிநாடாகவேனும் அறிவிக்க வேண்டுமெனக் கோரியவர்; பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்;  அதன் காரணமாக சிறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டவர்.

இப்பி ஃபக்கிர், முதலில் ஜின்னாவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டாலும், பின்னர் அதுவும் பிரிட்டிஷின் பிரதிபலிப்பாய் இருந்ததால், எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினர் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒன்றாக இணைந்து போராடியது போல தகவல்கள் கிடைக்கவில்லை. இருவரும் சந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. 

வையெல்லாம் வலையில் வாசித்து அறிந்தவையே. பள்ளியில் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருவரைப் பற்றியுமே படித்ததில்லை!!  என் தலைமுறையாவது பரவாயில்லை....  ஆனால், இனிவரும் தலைமுறையோ பாவம்...  மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களையெல்லாம் வீரர்கள் என்று படிக்க வேண்டிய   பரிதாபம்!!


For Further reading:

https://www.facebook.com/JanPalwasha/posts/197213384034930:0
http://www.khyber.org/publications/021-025/faqiripi.shtml
http://pakteahouse.net/2016/01/26/bacha-khan-faqir-of-ipi-and-the-afghanistan-angle/


 reg. Ghaffar Khan:
https://www.youtube.com/watch?v=mcY1QHlRHlo
http://www.thefrontiergandhi.com/excerpts.html
The Frontier Gandhi: Badshah Khan, A Torch for Peace
https://www.youtube.com/watch?v=0fSnlTFsPf8
 

Post Comment

துரோகி???
ம்மைச் சுற்றி நடப்பவையே மனநிம்மதியைப் பாதிக்க வைக்கக்கூடியவையாக இருக்க, சிறை அனுபவங்களை – அதுவும் குவாண்டனாமோ அனுபவங்களைச் சொல்லும் புத்தகமாயிற்றே என்று தயங்கி தயங்கித்தான் வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால், இப்புத்தகத்தின் தலைப்பே, நமக்கு ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி நம்மை சட்டென உள்ளே இழுத்துப் போட்டுக் கொள்கிறது!
ஆம். நாமும் “துரோகிகள்” அல்லவா நம் நாட்டில்! புத்தகமும் அதைப் பற்றித்தான் பேசுகிறது. உண்மையான தேசபக்தி கொண்டவர்களை, பொய்முகம் காட்டுபவர்கள் துரோகி என வகைப்படுத்துவதை விவரிக்கிறது.
ஆங்கிலத்தில் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் எழுதிய “Traitor” என்ற புத்தகத்தின் தமிழாக்கமே, “துரோகி”.
தன் சொந்த நடையில், மொழியில் எதையுமே எழுதி விடுவது இலகு. ஆனால், இன்னொரு மொழியிலிருந்து மொழிபெயர்த்து எடுத்துக் கொடுப்பதென்பது அதிகச் சிரமமான பணி. வாக்கியங்களை மொழிபெயர்ப்பதல்ல இங்கு முக்கியம்.  எண்ணங்களை, உணர்ச்சிகளை, எதிர்பார்ப்புகளைக் கடத்த வேண்டும். அவ்வகையில் அதைச் சிறப்புற செய்திருக்கிறார் ஆசிரியர் எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள்.
ப்புத்தகத்தில் மூல ஆசிரியர், தன் வாழ்வில் நடந்த மிக முக்கிய நிகழ்வொன்றினையும், அது தொடர்பான சம்பவங்களையும் விவரிக்கிறார்.  அவற்றிலிருந்து, நாம் கற்றுக் கொள்பவை, புரிந்து கொண்டவை என்னென்ன என்ற பார்வையில் இப்புத்தகத்தின் ஆய்வுரையை பதிவு செய்கிறேன். புத்தகத்தின் சம்பவங்கள் பலவும் நமக்குப் பரிச்சயமானவையாகவே இருக்கும். ஏனெனில் நாமும் அதுபோல ஒரு ஃபாஸிஸத்தைக் கண்டு கொண்டிருப்பவர்கள்தானே!
சம்பவம் நடந்த குவாண்டனாமோ பகுதியை, சிறைச்சாலை அமைக்கத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே புரிகிறது அவர்களின் சாணக்கியத்தனம்.  “Arm pit of the Universe” என்று அழைக்கப்படும் அளவிற்கு (மன)அழுக்குகள் நிறைந்த இடம்; இராணுவ பாஷையில், வீரர்கள் பணிக்குச் செல்ல சற்றும் விரும்பாத இடம் என்று பொருள் இதற்கு. அந்தளவுக்கு கொடூரம் நிறைந்த சிறைச்சாலை அங்கிருந்தது.
அப்படி பணிக்குச் செல்லவே விரும்பாத ஓர் இடத்திற்கு, ”பயிற்சி” என்ற பெயரில் வீரர்களை மூளைச் சலவை செய்துதான் அழைத்துச் செல்வார்கள். குவாண்டனாமோ சிறைவாசிகள் அனைவரும் அதிபயங்கர கொடூரமானவர்கள்,  நம் நாடான அமெரிக்காவை அழிக்க வந்தவர்கள், இஸ்லாமைப் பின்பற்றுபவர்கள், முஸ்லிம்கள் என்பதால் கொல்லப்பட வேண்டியவர்கள் என்ற பரப்புரைகளே பயிற்சி என்ற பெயரில் அளிக்கப்படுவதோடு, இடிக்கப்பட்ட இரட்டை கோபுரத்தையும் அழைத்துச் சென்று காட்டி, ஏற்கனவே வீரர்கள் மனதில் எரிந்து கொண்டிருக்கும் வெறுப்பு நெருப்பில் எண்ணையை ஊற்றுகிறார்கள். மேலும், பணியின்போது  உணவுக்கூடங்களில்கூட தேசிய கீதத்தையும், திரைப்படங்களில் வரும் அமெரிக்க போர்க்காட்சிகளையும் தொடர்ந்து ஒளிபரப்பி வெறியேற்றுவது உங்களுக்கு எதை நினைவூட்டுகின்றது?
வெளியிலிருந்து வந்து யாரும் பார்வையிட முடியாத இடத்தில் சிறைச்சாலை அமைத்து விசாரணை என்ற பெயரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் புரியும் அவர்களேதான் அங்குள்ள மிருகங்களைக் காப்பாற்ற தனிக் கவனம் எடுக்கிறார்கள்! ஃபாஸிஸத்துக்கு உலகம் முழுதும் ஒரே பாணிதான் போல!
வீரர்களிடையே உயரதிகாரிகள் மீண்டும் மீண்டும் “நாம் இஸ்லாமுடன் போரில் உள்ளோம்” என்ற ஆவேசக் கூச்சல்களிட்டு, இஸ்லாம் குறித்த தவறான விளக்கங்களும் கொடுத்து, உணர்ச்சிகளைத் தூண்டும் விதமாகவே பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பிரச்சாரம்தான் பலருக்கும் இஸ்லாமைப் பற்றி அறியும் ஆவலைத் தரும் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ளவேயில்லை – அவர்களும், இவர்களும்…. எவர்களும்!
சிறைவாசிகளை இஸ்லாமைப் பின்பற்றுவதை விட்டுவிட்டால் சலுகைகள் தருவதாகச் சொல்லி ஆசை காட்டுமளவு நயவஞ்சகர்களாகவும், தொழுகை போன்ற இஸ்லாமியக் கடமைகளை நிறைவேற்றுவதைத் தடுக்கும் அளவுக்குச் செல்லும் கொடூரமானவர்களாகவும் மாறுமளவு அவர்களது இஸ்லாமிய வெறுப்பு தீவிரமாக இருக்கிறது!
அதேசமயம், இஸ்லாமைப் பின்பற்றுவதாலேயே, பலவிதவிதமான எண்ணிப் பார்க்கவும் முடியாத அளவு சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தாலும், பொறுமை மீறாமல், தொழுகை போன்ற கடமைகளை எள்ளளவும் தவற விடாமல் நிறைவேற்றுவதையும் பார்த்து அங்கு பணியமர்த்தப்பட்டிருக்கும் காவலர் டெர்ரி ஹோல்ட்ப்ரூக்ஸ் பேராச்சரியப்பட்டுப் போகிறார்!
இதுவே ஒரு சராசரி மனிதனென்றால், ‘கடவுளே! இத்தனை கொடுமைகளையும் பார்த்துக் கொண்டு சும்மாஇருக்கிறாயே?’ என்று கடவுளைப் பழிப்பவர்களாகவும், தொடர்ந்து கடவுளே இல்லை என்று சொல்லும் நாத்திகவாதியாகவும் மாறியிருப்பார்கள். ஆனால், அங்குள்ள முஸ்லிம்களின் பொறுமையும், ஒற்றுமையும், நிதானமும், காவலர்களுக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பும் அவரை மிகவும் கவர்கின்றன. கேள்விகள் எழுகின்றன.
பதில்களைத் தேடி அந்தச் சிறைவாசிகளுடன் பேசுகிறார். எது அவர்களை பொறுமை காக்க வைக்கிறது என்ற கேள்விக்கு, இஸ்லாமும், மறுமையும் என்று பதில் உரைக்கிறார்கள் கைதிகள். அது குறித்த மேலதிகத் தேடலில் இஸ்லாமைத் தானும் ஏற்றுக் கொண்டு முஸ்லிமாகிறார் ஹோல்ட்ப்ரூக்ஸ்!

ஸ்லாத்தை நோக்கிய பயணத்தில், எதிர்மறை இசை கேட்பதையும், வீடியோ கேம்கள் விளையாடுவது போன்ற தன் தவறுகளையும் திருத்தியவாறு நடந்து சென்றதை அவர் மிக அழகாக கூறுகிறார்:
“நான் இறைவனுக்காக ஒவ்வொரு கதவாக மூடிக் கோண்டிருந்தேன். அவனோ, எனக்காக அதிகமான கதவுகளைத் திறந்தான்.”
இந்த தஃவாவில் நமக்கும் பாடம் இருக்கிறது. ஹோல்ட்ப்ரூக்ஸ் இஸ்லாம் குறித்து கேள்விகள் கேட்கத் தொடங்கியதும், உடனே சிறைவாசிகள் பக்கம் பக்கமாக பயான் செய்யவில்லை. மாறாக, பதில் கேள்விகள் கேட்டு அவரது சிந்தனையைத் தூண்டி, அவர் உள்ளத்தைத் தயார்ப்படுத்துகிறார்கள். அழகான தஃவா!
அவருக்கு ஏற்கனவே பைபிள், தௌரா வேதம் நன்றாகத் தெரிவதோடு, பகவத் கீதை உள்ளிட்ட மற்ற தெய்வங்கள் குறித்த பல நூல்களையும் அறிந்திருக்கிறார். ஆகவே அவர் கையில் குர்ஆன் கிடைக்கும்போது மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பார்த்து எது சரியானது, சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வர முடிகிறது.
சிறைவாசிகளில், சிலர் உயர்படிப்பு படித்தவர்களாகவும், பதவி வகித்தவர்களாகவும் இருக்கின்றவர்கள். மற்றவர்கள் மனதளவில் சோர்ந்து விடாமல் இருக்க உதவுகின்றனர். கைதிகளாக இருந்தபோதும், தலைமையேற்று  வழிநடத்தும் பண்பும், தலைமைக்குக் கட்டுப்படும் பணிவும் கொண்டவர்களாக இருந்தனர் என்பது புரிகிறது.
இங்கே கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம், கொடுஞ்சித்திரவதைகளை அனுபவிப்பதால் கைதிகளும்; தமக்கு ஒப்புதல் இல்லையென்றாலும் அதிகாரிகளின் கட்டளையை மீற முடியாமையின் காரணமாக, கைதிகளை அநியாயமான தண்டனைகளுக்கு உட்படுத்த நேரிடுவதால் காவலர்களும் என இரு தரப்புமே மன அழுத்தத்திற்கு ஆட்பட்டவர்களாகவே இருந்தனர். ஆனால் அதனால் ஏற்படும் மன இறுக்கத்தை காவலர்கள் மதுவைக் கொண்டு தணிக்க முற்படுகையில்,  கைதிகளோ இஸ்லாத்தின் காரணமாக தன்னிலை இழக்காமல் இருந்தனர்.
இராணுவத்தில் உள்ள பெண் பணியாளர்களை வைத்து பாலியல் ரீதியாகத் துன்புறுத்துமளவுக்குத் துணிந்தாலும், “பார்வையின் ஹிஜாபைப்” பேணிக் கொள்ளுமளவு இஸ்லாத்தில் உறுதியாக இருந்த கைதிகளிடம் நமக்குக் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் உண்டு!
நாட்டின் மீது கொண்ட பற்று காரணமாக, இராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்ந்த ஹோல்ட்ப்ரூக்ஸ், குவாண்டனாமோவில் நடக்கும் அநியாயங்களைக் கண்டு கொதித்துப் போகிறார். தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த அமெரிக்காவை ஒப்பிட்டுப் பார்த்து, நான் காப்பாற்ற வந்த அமெரிக்கா இதுவல்ல என மனம் உடைகிறார். தனிப்பட்ட இலாபங்களுக்காக, சிறைவாசிகளை அநியாயமாகத் துன்புறுத்துவது, கொடூரமான சித்திரவதைகள் செய்வது எனத் தவறாகச் செயல்படும் உயர் அதிகாரிகளால், தன் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுமோ என்ற அஞ்சுகிறார்.
ஆனால் அந்த அதிகாரிகளும், அவர் கைதிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்வதைக் கண்ட சக காவலர்களும் அவரைக் கண்டித்தனர். தாய்நாடான அமெரிக்காவை அழிக்க முற்பட்டவர்களுடன் அனுதாபம் காட்டுவது தாய்நாட்டுக்குச் செய்யும் துரோகம் என்று வாதிட்டனர். தேசபக்தியே அவரை உண்மையைக் கண்டடைய வேண்டும் என்ற தேடலை ஏற்படுத்தியது. ஆனால், அவரோ, அறியா அப்பாவிகளுக்கு அநீதி இழைப்பது அமெரிக்காவுக்குத்தான் கெட்ட பெயர் வாங்கித் தரும் என்று திண்ணமாக நம்பினார். தன் நிலைப்பாடை மாற்றிக் கொள்ளாத அவரை, துரோகியெனவே அழைக்கத் தொடங்கி விட்டனர்.
நாட்டிற்கு நற்பெயர் ஏற்படுத்த முனைபவர் துரோகி, நாட்டின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துபவர்கள் தியாகிகள் என்ற நியதி எதை ஞாபகப்படுத்துகிறது உங்களுக்கு?
வாசிப்பு பல வாசல்களைத் திறந்து விடும் என்பார்கள். இப்புத்தகத்தின் தாக்கம் மிகப் பெரிது,  மீள முடியாதது. தொடர்ச்சியாக இதைக் குறித்த விஷயங்களைத் தேடித் தேடி வாசிக்கிறேன். கிடைக்கும் தகவல்களால் அதிர்ச்சியும் ஆற்றாமையும் பொங்குகின்றன.
2002-ம் வருடம் தொடங்கி கிட்டத்தட்ட 50 நாடுகளைச் சேர்ந்த 779 கைதிகளை  இங்கு கொண்டு வந்து குவித்த அமெரிக்க அரசு, அறுதிப் பெரும்பாலானோரை விடுவித்து விட்டது; ஒருசிலரை அவரவர் நாட்டுச் சிறைகளுக்கு அனுப்பி வைத்துவிட்டது. ஜனவரி 2017-ன் செய்திப்படி, 41 கைதிகள் மட்டுமே அங்கிருக்கின்றனர். அதில் 31 பேர் மீது இன்னமும் குற்றப்பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.
விடுவிக்கப்பட்டவர்களும்  சரி, அங்கு வேலை பார்த்த வீரர்களும் சரி, இன்னமும் – 15 வருடங்கள் கழிந்த பின்னரும் – மனநல சிகிச்சை பெற்று வருகின்றனர். சில முன்னாள் சிறைவாசிகள், விடுதலையான பின்னும், தத்தம் நாட்டு காவல்துறையால் தொடர் கண்காணிப்பு என்ற பெயரில் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் சிலர், Waterphobia போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ம் தமிழ்நாட்டில் சிறைகளில் விசாரணைக் கைதிகளாகவே காலவரையின்றி  வாடும் கைதிகளின் நிலையை இத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, மனம் அதிக வேதனையடைகிறது. அவர்களின் அவதிகளைச் சொல்ல இவ்வாறு ஒருவர் முன்வருவார் என நாடு இருக்கும் சூழலில் கனவிலும் எதிர்பார்க்க முடியாது.
மாலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்ஹா, சம்ஜௌதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டிருந்த சுவாமி அஸீமானந்தா என்பவர்,  தன்னோடு ஒரே செல்லில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் கலீம் என்ற கைதியின் நற்குணத்தால் ஈர்க்கப்பட்டு, மனம் திருந்தி தன் அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார். ஆனால், ஐந்தே மாதங்களில் தன் வாக்குமூலத்தைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். இதுதான் இங்குள்ள சூழல்!
ங்கே சிலருக்கு முஸ்லிம்களின் பெயர்களைக் கேட்டாலே முதுகந்தண்டு சில்லிடுகிறதாம். அவர்கள், முஸ்லிம் பெயரைத் தாங்கியிருப்பதாலேயே பலர் அனுபவிக்கும் இக்கொடூர அனுபவங்களை வாசித்தறியட்டும். முழு உடலுமே சில்லிட்டு உணர்வற்று உறைந்து போகும்!
இவ்விமர்சனம்,  "தூதுஆன்லைன்"  இதழில்  அன்று வெளிவந்தது.


 துபாயில் நடந்த "துரோகி" புத்தக வெளியீட்டு விழாவில் உரையாற்றியபோது...

Ref: 
http://tinyurl.com/n3983d4


Post Comment