Pages

துளித்துளியாய்.....
“புட்டி நீர்” புத்தகத்தின் விமர்சனப் பதிவில் விரிவாகப் பார்த்தபடி, வீட்டிற்கு வரும் கார்ப்போரேஷன் தண்ணீரையும் நம்பி குடிக்க முடிவதில்லை; அதைச் சுத்திகரிக்க வீட்டிலேயே எதிர் சவ்வூடு பரவல் கருவி (R.O) வைத்தால் அதில் கிருமிகளோடு சேர்ந்து, தாதுக்களும் போய், தண்ணீர் சத்தில்லாமல் போய்விடுகிறது. அதிகப் பணம் கொடுத்து தரமான குடிநீர் என்று நினைத்து வாங்கும் பாட்டில் குடி நீரும் இவற்றிற்குக் குறைவில்லாதபடிக்கு, சுத்தமில்லாதவை என்று ஆய்வுகள் கூறுகின்றன!!

வற்றாத ஜீவ நதிகள் என்று பெயர் பெற்ற ஆறுகள் கூட, வற்றி வரண்டு போய்விட்டன!! நல்ல மழை பொழிந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருக்க வேண்டிய இந்த ஆகஸ்ட் மாதத்திலும், மக்கள் ஏப்ரல் - மே போல மக்கள் குடங்களோடு தண்ணீருக்காக அலைகின்றனர்!  இனி ஒரு உலகப் போர் வந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று செய்திகள் வேறு பயமுறுத்துகின்றன.... உலகப் போர் வருமுன்பே, தெருக்களில், நம்  மக்கள் தண்ணீர் லாரி முன்பும், குழாயடிகளிலும் சண்டை போடும் பரிதாப நிலை நிலவுகின்றது.    என்னதான் செய்வது?

ழக்கம்போல, கையில் இருக்கும் வெண்ணெயை மறந்துவிட்டு, நெய்க்கு அலைகின்றோம்!! ஆம், மழை நீர்!! இந்த மழை நீரை முறையாகச் சேமித்தால், எங்கும் தண்ணீருக்காக அலைய வேண்டியதில்லை. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வெயில் காலத்திலும் நம் தேவை தீர்க்குமளவு ஆழ்குழாயில் நீர் வரத்து இருக்கும்.

மழை நீர் மற்ற நீரைவிட தூய்மையானது, சுவையானது. இதில் சமைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

ழை நீர் சேகரிப்பு இரு வகைப்படும்:
          
            1. குடி நீருக்காக
            2. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த.

தற்போதைய சூழலில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழை நீர் தொட்டி அமைப்பதைவிட, குடி நீருக்காக மழை நீரைச் சேமித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!!

குடி நீருக்காக:

குடி நீர்த் தேவைகளுக்காக மழை நீரைப் பல வகைகளில் சேமிக்கலாம்... 

1. வீடுகளில் தொட்டியில் மழை நீரை நேரடியாகச் சேமிப்பது:

மொட்டை மாடியில் அல்லது கூரை வீடுகளில் கூரை மீது விழும் மழையை நேரடியாக தொட்டிகளில் பிடித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் அதை, பல மாதங்கள் வரை அந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எளிதான முறை.


அதிக செலவு பிடிக்காத  இந்த அமைப்பை, ஒரு முறை செய்து வைத்து கொண்டால், பல வருடங்கள் தொடர்ந்து பயன்படும். ஒவ்வொரு மழைக்கு முன்பும், மொட்டை மாடியைக் கொஞ்சம் சுத்தம் செய்வது மட்டுமே நமது வேலை!!

இதைப் பல வருடங்களாகப் பின்பற்றி வரும் ஒரு மழைநீர் சேகரிப்பாளரின் செய்முறைவிளக்க அனுபவம் இங்கே: 


2. ஓட்டு வீடாக இருந்தாலும் மழை நீர் சேகரிப்பு சாத்தியமே!!

3. மழை நீர்ப் பொறியாளர் என்றழைக்கப்படும் திரு. வரதராஜன் அவர்கள், தனது வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றி, தற்போது பத்து லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்து வைத்துள்ளார். இரண்டாயிரம் வீடுகளுக்கு மேலாக, மழை நீர் சேமிக்க ஆலோசனைகள் கூறி சேமிக்க உதவியுள்ளார்.  விரும்புவோருக்கு, பஸ் செலவுக்குக் கொடுத்தால், வீட்டுக்கு வந்தே மழை நீர் சேகரிப்பு குறித்த ஆலோசனைகள் கூறத் தயாராக உள்ளார் - கட்டணம் ஏதுமின்றி!!


4. அடுக்கு மாடி கட்டிடங்களில் மழை நீரைச் சேகரிக்க, கட்டிடம் கட்டும்போதே அதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும், பிற்பாடு செய்யலாம். வீடியோவில் உள்ளது போல...5. பிரத்யேகமாகக் கட்டப்பட்ட நிலத்தடி தொட்டிகளில் மழைநீரைச் சேமித்தல்:

வீடு கட்டும்போதே, இம்முறையில் ஒரு தொட்டி கட்டி, அதில் மழை நீர் சேகரம் ஆகும்படி செய்துவிட்டால், வருடம் முழுதும் நீரைப்பற்றிக் கவலையேயில்லை!!


நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த:

இன்று “போர்” எனப்படும் ஆழ்குழாய் வழியாக நிலத்தடி நீர் எடுக்கப்படாத வீடுகளே இல்லை எனலாம். எடுத்துக்கொண்டே இருந்தால், அது என்ன அமுதசுரபியா... நீர் வந்து கொண்டே இருப்பதற்கு?

மழை நீரோ, கழிவு நீரோ உள்ளே செல்லமுடியாதபடிக்கு கான்க்ரீட் தரைகள், சாலைகள் என்றான பின் எவ்வாறு நிலத்தின் தண்ணீர் மட்டம் உயரும்? விளைவு, இன்று 200 - 300 அடியெல்லாம் தாண்டி, 1000 அடியில் போர்கள் தோண்டுவது சர்வ சாதாரணமாகிவிட்டது!!

அப்படி இலட்சங்கள் செலவழித்து ஆயிரம் அடி தாண்டி போர் போட்டாலும், மிகச்சில ஆயிரம் செலவில் மழை நீர் வடிகால் ஒன்றைக் கட்டமாட்டேன் என்று மக்கள் இருபப்து வேதனையான விந்தை!!போர்வெல்லின் அருகே, சில மீட்டர்கள் மட்டுமே தோண்டி ஒரு குழாயை நட்டு, அதைச் சுற்றி மணலும், ஜல்லியும் போட்டுவிட்டால் அதுதான் மழைநீர் வடிகால். நிலத்தடி நீரின் மட்டத்தை விரைவில் உயர்த்திவிடுவதோடு, தண்ணீரின் உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்து விடும்!!


 


மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்தும, செய்முறைகள் குறித்தும் விபரமாகப் பேசும் ஒரு வலைத் தளம்: https://tinyurl.com/y7m4x482

இல்லங்க....எனக்கு இதெல்லாத்தையும் உக்காந்து வாசிக்கவும், அதன்படி செய்யவும் நேரமில்ல... பணம் கொடுத்தா யாராவது செஞ்சு தருவாங்களான்னு கேட்பவர்களுக்கும் பதில் இருக்கிறது!! ஒரு தனியார் நிறுவனம், இதைத் தொழிலாகவே செய்து வருகிறது!! இந்நிறுவனம உருவாக்கிய "#மழை இல்லம்" குறித்து  விகடனில் வந்த தகவல்கள் இங்கும, இங்கும்.    http://rainstock.in/rainwater-harvesting/

இன்னுமொரு நிறுவனம்:

https://www.facebook.com/guna.sekaran.54772728/posts/1668151173209158


வலையில் கொஞ்சம் தேடினால் போதும், ஏகப்பட்ட விபரங்கள் வந்து விழுகின்றன....  வீடே இல்லாதவர்கள் கூட மழை நீரை சேகரிக்க வழிகள் கிடைக்கும்!  தவிர, நிறைய பேர் செய்திருப்பதால், அவர்களிடம் ஆலோசனை பெற்று செய்துவிடலாம். எதிர்வரும் மழைக்காலத்தை உத்தேசித்து, இப்போதே தயாரானால், அடுத்த கோடையை குளுகுளுவெனக் கழிக்கலாம்!!

Post Comment

4 comments:

Anuprem said...

மிக அத்தியாவசியமான பகிர்வு....

சிறுதுளியே பெருவெள்ளம்.....கிடைக்கும் ஒவ்வொரு மழைத்துளியையும் நாம் சேகரிக்க பழக வேண்டும்...

மாதேவி said...

மழை நீர் சேகரிப்பு விரிவான பகிர்வு.

கோமதி அரசு said...

அருமையான பதிவு.

இந்த பதிவை சேமித்து வைத்து கொள்ள வேண்டும்.

செயல்படுத்த முடிந்தவைகளை செயல்படுத்தலாம்.
முன்பு கடைசியில் உள்ள் படம் மாதிரிதான் வீடுகளில் தண்ணீர் சேகரித்தோம் மழை காலங்களில்.

மழை நீரை தொட்டியில் சேகரித்து மேல்நிலை தொட்டிக்கு மோட்டர் மூலம் ஏற்றி பயன்படுத்தி இருக்கிறோம்.
இப்படி நல்ல பதிவுகளை அடுக்கடி எழுதுங்கள்.

ஹுஸைனம்மா said...

@Anuradha Premkumar: கருத்துக்கு நன்றி...

@மாதேவி: கருத்துக்கு நன்றி...

@கோமதி அக்கா: கருத்துக்கு நன்றி அக்கா. நீங்களும் மழை நீர் சேகரிப்பு செய்திருக்கிறீர்கள் என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது.