Pages

டிரங்குப் பொட்டி -7
அபுதாபி அதிபர் ஷேக் கலீஃபாவின் இளைய சகோதரர் ஷேக் அஹமத், மொராக்கோ நாட்டில் கிளைடர் விமான விபத்தில் மரணித்து விட்டார். புதன்கிழமை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுமாம். 

முன்பெல்லாம் இம்மாதிரி சமயங்களில் அரசு அலுவலகங்களுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படும். புது ஆட்சியாளர் வந்த பிறகு, அதற்கெல்லாம் தடா. அதிகப்படியா அளிக்கப்பட்டு வந்த நிறைய விடுமுறைகள் இப்ப கேன்ஸலாயிடுச்சு. அரசு அலுவலகங்களின் வேலை நேரமும்  ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டுவிட்டது. நம்மூர் மாதிரி இங்கயும் அரசு வேலைன்னா தனி மரியாதைதான். இப்ப விடுமுறைகளை, தனியாருக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரி ஆக்கணும்கிற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!

இன்னொரு சோக நிகழ்வு, இங்கே அமீரகத்தில ஒரு வீட்டில பூச்சிகொல்லி மருந்து அடிச்சிருக்காங்க; அடித்த நிறுவனத்தின் அறிவுரைப்படி, வீட்டினர் இரண்டு, மூன்று நாட்கள் வீட்டில் தங்கக்கூடாதுன்றதால (அந்த அளவுக்கு வீரியம் மிக்கது மருந்து!!) வெளியே போய் தங்கிருக்காங்க. ஆனா, அதுக்கு பக்கத்து ஃப்ளாட்டில் இருந்த குடும்பத்தின் மூன்று 5-மாத குழந்தைகளில் (Triplets) இரண்டு இறந்துவிட்டன!! ஒரு குழந்தை மருத்துவமனையில்!! சுவரின் வழியே மருந்தின் தாக்கம் ஊடுருவியதில, சுவாசக் கோளாறால் இறந்திருக்கின்றன!! கொழு கொழுவென இருக்கும் குழந்தைகளின் அழகிய படங்கள் பார்த்து மனம் ஆறவில்லை!!

இதுபோல் நிகழ்ச்சிகள் ஒன்றிரண்டு, தொழிலாளர்களின் குடியிருப்புகளில் ஏற்கனவே நடந்திருக்கின்றன; ஆனாலும் அதுகுறித்த விவரம் மருந்து அடித்த நிறுவனத்தினருக்குத் தெரியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!

நித்தியரஞ்சி  வீடியோக்கள் சன் நியூஸில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த சமயம், என் வீட்டில் சன் இல்லாததால், கவலையில்லாமல் இருந்தேன். இருந்தாலும், என் வீட்டில் தெரியும் ஏஷியாநெட், கைரளி சேனல்களில் மறுஒளிபரப்பு செய்துவிடக்கூடாதே என்று ஒரு நெருடல்; பிள்ளைகள் சில சமயம் தனியே இருந்து டிவி பார்ப்பதுண்டு. என் கவலைக்கு மருந்தாக, அன்று அடித்த காற்றில் டிஷ் என்னவோ ஆனதில், டிடி தவிர எந்த சேனல்களும் தெரியவில்லை. அதே நிலைமை இன்னும் தொடர்கிறது. எண்பதுகளில் இருப்பது போல ஒரு ஃபீலிங் இருந்தாலும், சில அவசியமான, தரமான நிகழ்ச்சிகளைப் பார்க்க முடிகிறது. ஹாக்கி உலகக் கோப்பை தொடர் முழுதும் பார்த்தார்கள்.

என்னென்ன சேனல்கள் தெரிகின்றன என் பெரிய மகனிடம் கேட்டதற்குச் சொன்னான்: ”பொதிகை, டிடி மலையாளம், டிடி நேஷனல், டிடி ஸ்போர்ட்ஸ்,  டிடி ஃபைட்”

“என்னது, ஃபைட் சேனலா, புதுசா இருக்கு? என்ன தெரியுது அதில?”

“பார்லிமெண்ட்ல சண்டை போடுவாங்கள்ல அதை லைவ்வா காட்டுவாங்க, அதான், ”டிடி ராஜ்யசபா”  சேனல்!!”

அவ்வ்வ்வ்வ்வ்....

!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!

வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் மாதிரி, அல்லது, “ஒரு குடும்பம், ஒரு குழந்தை’ மாதிரி, இப்ப ”ஒரு வீடு,  ஒரு பதிவர்” கான்செப்டும் பிரபலமாகிட்டு வருது!! (எங்கேன்னு கேக்கக்கூடாது). எங்க வீட்டு ரங்ஸும் பதிவெழுத வந்தா என்ன ஆகும்? ஏதோ தமிழ் வாசிக்க மட்டும் தெரியும்கிறதால, நான் எழுதுறதை வாசிச்சி, சிரிச்சுட்டும், சில சமயம் விதியை நொந்துகிட்டும் அமைதியாப் போயிடறார். அப்படியே பிளாக் எழுத ஆரம்பிச்சாலும், மலையாளத்துல அல்லது ஆங்கிலத்துலதான் எழுதுவார்ங்கிறதால, தமிழ்நாட்டில என் இமேஜுக்கு எந்தப் பாதிப்பும் வராது!!

கல்யாணம் ஆன புதுசுல, அவர் தமிழ்ல எனக்கு எழுதின கடிதங்களைப் பார்த்து, சீத்தலைச் சாத்தனார் மாதிரி, தலையில அடிச்சுகிட்டு, தயவுசெய்து ஆங்கிலத்திலயே எழுதுங்கன்னு நான் ரொம்ப கெஞ்சிக் கேட்டுகிட்டதனால தமிழோடு நானும்  பிழைத்துக் கொண்டேன்!!

ஓகே, கமிங் பேக் டு த பாயிண்ட்,  இப்ப பெரும்பாலான ஆண் பதிவர்கள், தங்ஸ்களைப் பதிவுகளில் வாரி எழுதுவதன்மூலம் தங்கள் ஆற்றாமைகளைத் தீர்த்துக் கொ’ல்’வதற்கு, அவர்களின் தங்ஸ்கள் பிளாக்/இணையம் பக்கம் வரமாட்டார்கள் என்ற தைரியம்தானே முக்கியக் காரணி. அவர்களும் பிளாக் எழுதுவார்களேயானால் இவர்கள் வேறு எங்குதான் போவார்கள் இல்லையா? அதுமட்டுமல்ல, பின்னூட்டம் இடுபவர்களுக்கும் எவ்வளவு சிரமம், இங்கயும் ரொம்ப நல்லாருக்குன்னு சொல்லணும்; அங்கயும் ஆஹா, ஓஹோன்னு (பொய்) சொல்லணும்!! முன்ன மாதிரி இல்லாம, இப்ப மைனஸ் ஓட்டு போடறது யாருன்னு வேற தெரிஞ்சுடுது!! அப்புறம் மெதுவா, ரங்க்ஸ் அணி, தங்க்ஸ் அணின்னு பல குழுக்கள் உருவாகும். அப்புறம் இவங்க தனித்தனி சங்கம் வச்சு அடிச்சுக்கிறதா, இல்லை ஒரே சங்கத்துக்குள்ளயே குழுக்கள் அமைச்சு அடிச்சுக்கிறதான்னு அடிச்சுக்கணும்... இப்படி எவ்வளவோ சங்கடங்கள்!! அதனால, இப்பவே வீட்டுக்கு ஒரு பதிவர்தான்னு ஒரு சட்டம் கொண்டு வந்தா நல்லாருக்கும்!!

!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!!!!!

நாணயம் படத்தில, பிரசன்னா, லாக்கரைத் திறக்கத் தேவைப்படும் ஒருவரின் கைரேகையை, செல்லோடேப்பில் எடுத்து, கைரேகை மிஷினில் வைத்துத் திறப்பார். இந்த முறை நிஜமாவே ஒர்க் அவுட் ஆகுமான்னு தெரிஞ்சவங்க சொல்லுங்கப்பா. நிறைய அலுவலகங்களில “ஃபிங்கர் பிரிண்ட் மிஷின்” பயன்படுத்துறாங்க. அங்கெல்லாம், லீவு லெட்டர் கொடுக்காம லீவு எடுக்கவும் வழக்கமா லேட்டா வர்றவங்களுக்கும் பயன்படலாமே, அதான் கேக்கிறேன். சே.. சே... நானெல்லாம் அப்படியில்லப்பா...

Post Comment

பொண்ணு பாக்க வந்தாங்களா, எப்போ?
muslimformarriage.net

இது தொடர்பதிவுகள் மாதம் போல!!  பிடித்த பத்துப் பெண்கள், பேருந்துக் காதல், பிடித்தப் பின்னூட்டங்கள், பிடித்த கதைசொல்லிகள்,  பொண்ணு பாக்க வந்து நொந்த கதை என்று தொடர்ப் பதிவுகள் களைகட்டி வருகின்றன. என் ஞாபகம் யாருக்கும் வந்துடக்கூடாதேன்னு பயந்துட்டே இருந்தேன்; ஆனா பாருங்க, யாரும் மறக்கமுடியாத அளவு நான் ரொம்ப நல்லவளாப் போயிட்டேனா, நம்ம புதுகைத் தென்றலும், அநன்யாவும் அழைப்பு வச்சிட்டாங்க, மறுக்க முடியுமா? வேற வழியேயில்ல, நீங்க படிச்சுத்தான் ஆகணும்!!

எங்க ஊர்ல பொதுவா ஊருக்குள்ளயேதான் சம்பந்தம் பண்ணுவாங்க. ரொம்ப அபூர்வமாத்தான் வெளியூர்ல பண்றது. அதுமட்டுமில்ல, எங்கூர்ல ”பொண்ணு பாக்கிற” சடங்கெல்லாம் கிடையாது. பொண்ணைப் பாக்கணுன்னா, நமக்கே தெரியாம, நம்மளை நம்ம வீட்டிலயே வந்தோ அல்லது வெளியே எங்கயாவது போய்வரும்போதோ, மாப்பிள்ளை வீட்டு ரெப்ரசண்டேடிவ் பெண் ஒருத்தர் பாத்துடுவாங்க!! இதுக்காக நம்ம நடவடிக்கைகளை உளவு சொல்றதுக்குன்னே அக்கம்பக்கத்துல அவங்களுக்குத் தெரிஞ்சவங்க யாராவது  இருப்பாங்க!!

அதனால, எனக்குத் தெரியாம எத்தனை பொண் பாக்கிற சம்பவங்கள் நடந்ததுன்னு தெரியல!! ஆனா, பாத்த யாருமே கேட்டு வரலங்கிறதுதான் விஷயமே!! எங்கப்பாவும், மூத்த பொண்ணுன்றதுனால, ரொம்ப விசேஷமா மாப்பிள்ளை தேடினாங்க. உள்ளூர் மாப்பிள்ளையெல்லாம் என் தகுதிக்கு ரொம்ப குறைச்சல்னு சொல்லி, வெளியூர்ல தேட ஆரம்பிச்சாங்க. (என் வீட்டுக்காரர்  “உள்ளூர்ல விலைபோகாத மாட்டை, வெளியூர்ச் சந்தைலதான் விக்கணும்”பார்!!). ஊர்லயும், அண்டைஅசல்லயும் என் வாப்பாவுக்கு ரொம்ப நல்ல பேர் உண்டுன்னாலும், என்னவோ மூணு வருஷமாகியும் ஒண்ணும் அமையல!! என் “புகழ்” அவ்வளவு பரவியிருந்துது போல!! இதுக்கிடையில என் தங்கையை, தூரத்து உறவினர் வீட்டில விரும்பி கேட்டு உறுதி செஞ்சுகிட்டாங்க!! (அவ ரொம்ப அமைதியா இருப்பா).

அப்புறம், எப்படியோ, பக்கத்தூர்லருந்து ஒரு மூணு பேர் என்னைப் பாக்க வந்தாங்க. பட்டுச்சேலை, நகைல்லாம் போடமாட்டேன்னு நான் பாவாடை தாவணியில் இருக்க, வந்தவங்களோ தூக்கமாட்டாம பட்டும், நகையுமா போட்டுகிட்டு வந்தாங்க!! வந்த அம்மணீஸ் ரெண்டுபேரும் ஒண்ணுமே பேசாம, என்னைப் பாத்துகிட்டே சும்மா உக்காந்திருக்க, எனக்குப் போரடிச்சுப் போய், நானே அவங்ககிட்ட அவங்க குடும்ப டீடெய்ல்ஸ் கேக்க ஆரம்பிச்சுட்டேன். அப்படியே நைஸா மாப்பிள்ளையைப் பத்தி விசாரிக்க, அது எங்க காலேஜில பார்ட்-டைமா ஒரு மூணு மாசம் வேலை பாத்தவர்னு தெரியவர, நான் ஒரு ஆர்வக்கோளாறுல, “அட, மன்சூர் சாரா”ன்னு சத்தமா சொல்ல, அவங்க விட்ட லுக்குலயே ரிஸல்ட் தெரிஞ்சுபோச்சு!!

அதுக்கப்புறம் யாருமே வரலை!! என் வாப்பா, தின்னவேலி இஞ்சினியரிங் காலேஜில புரஃபசரா வேலை பாக்கிற நண்பர்கிட்ட சோகத்தைச் சொல்ல, அவரும் பரிதாபப்பட்டு, தன்கிட்ட படிச்ச மாணவமணி ஒருத்தரோட டீடெயில்ஸ் சொல்லி, இந்தப் பையனை வேணா விசாரிச்சுப் பாருங்களேன்னு சொல்லிருக்கார்!! வாப்பாவும் தன் நாகர்கோவில் ஃபிரண்ட்கிட்ட கேட்டப்போ அவங்களுக்கும் தெரிஞ்ச ஃபேமிலியா இருக்க, அப்படியே ரூட் பிடிச்சு உறுதி செஞ்சாச்சு இவரை!! (இன்னிக்கும் இவர் அந்த புரஃபசர் ஏன் இப்படி செஞ்சார்னு புலம்பிட்டுத்தான் இருக்கார்!)

அப்புறம் ”பெண் காணல்”க்கு வர்றோம்னு தகவல் வர, நாங்களும் அது பொண்ணு பாக்கிற நிகழ்ச்சிதான்னு நினைச்சு, வழக்கம்போல நான் சாதாரணப் புடவைல நிக்க, அவங்க வந்தப்புறம்தான் தெரியும், அவங்க ஊர்ல “பெண் காணல்”னா அதுதான் நிச்சயம் செய்றதாம்!! அவங்களே பட்டுச்சேலை, அஞ்சு பவுன் மாலை, பூ கொண்டுவந்து என்னை அலங்காரம் பண்ணி உறுதி செஞ்சுட்டுப் போனாங்க!! ஆனா மாப்பிள்ளை வரலை!! (ரொம்ப ஏமாத்தம் எனக்கு). இதுல விஷயம் என்னன்னா, போன தடவை நடந்தத வச்சு என்னை எங்கம்மா கடுமையா இன்ஸ்ட்ரக்ட் பண்ணிருந்தாங்க, கேட்டதுக்கு மட்டும்தான் (ஒழுங்கா) பதில் சொல்லணும், அதுக்குமேல வாயத் திறக்கக் கூடாதுன்னு!! நானும் கஷ்டப்பட்டு அப்படியே இருந்தேன்.

இன்னொரு இண்டெரஸ்டிங் மேட்டர், ரெண்டு பக்கமும் பேசிமுடிவானப்பறம், ஒரு மாசமா நானும், அவரும் ஃபோன்ல பேசிக்க ஆரம்பிச்சிருந்தோம்!! அம்மாவுக்குத் தெரியும்னாலும், ரொம்ப கண்டுக்கலை. அவர் அப்ப வட இந்தியாவுல சுத்திகிட்டிருந்தார். “பெண் காணல்” அன்னிக்கு கரெக்டா போஸ்ட்மேன் ஃபோன் பில் கொண்டு தந்திட்டுப் போனார். பிரிச்சுப் பாத்த எங்கம்மாக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை!! எப்பவும் மாசா மாசம், எழுநூறு, எண்ணூறுன்னு வர்ற பில், அந்த மாசம் ஐயாயிரம் ரூபாய் வந்திருந்துது!! என்னைத் திட்ட ஆரம்பிக்கப் போற சமயம், கரெக்டா மாப்பிள்ளை வீட்டுக் காரங்க உள்ளே வர, நான் தப்பிச்சேன்!! எல்லாம் நலமா நடந்த சந்தோஷத்துல, அப்புறமா லேசா அதட்டிட்டு விட்டுட்டாங்க.

அப்புறமென்ன, கல்யாணம்தான்!! அது ஆச்சு இப்போ 14 வருஷம்!! எப்படி இருக்கோம்னு கேட்டீங்கன்னா என்ன சொல்றது? என் சின்னவன் எல்.கே.ஜி. படிச்சப்போ, ஃபிரண்ட்ஸ்னா கல்யாணம் பண்ணிக்கனுனு அப்பாவியா நினைச்சு, கூடப் படிக்கிற ரெண்டு பொண்ணுங்க பேரச் சொல்லி, ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்ல, கேட்டுகிட்டிருந்த பெரியவன் (10 வயசு) சொன்னான், “டேய், டேய், ரெண்டு கல்யாணமா? வேணாண்டா, வாப்பா ஒரு கல்யாணம் பண்ணிட்டே படற பாடைப் பாத்தியா?” இப்படித்தான் இருக்கோம்!!

Post Comment

அதிசயப் பிறவி
இந்த வாரம், செய்திகளில் அதிகம் காணப்படாத, ஆனால் நெகிழவைக்கும் ஒரு சம்பவம் குறித்துப் படித்தேன். சிட்னியின் டராங்கா மிருகக்காட்சிச் சாலையில் (Taronga Zoo)  நடந்த ஒரு யானையின் பிரசவம் குறித்த செய்திதான் அது. இதிலென்ன அதிசயம் இருக்கு, யானைக் குட்டி பிறப்பதெல்லாம் ஒரு விஷயமா என்று கேட்கத் தோன்றும். முழுவதும் படித்துவிட்டுக் கேளுங்கள் கேள்வியை.

தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட ”பார்ன் டிப்” என்ற யானைக்கு, 22 மாத கர்ப்பகாலத்திற்குப்பின், பிப்ரவரி 28ந் தேதி பிரசவ வலி தொடங்கியது.  சாதாரணமாக யானைகளுக்குச் சில மணிநேரங்களில் பிரசவம் ஆகிவிடும். ஆனால் இந்த யானைக்கு, சில நாட்கள் ஆகியும் பிரசவமாகவில்லை என்றதும்,  சிறந்த கால்நடை மருத்துவர்களை அழைத்துப் பரிசோதித்ததில், வயிற்றினுள் குட்டி தலைகீழ் நிலையில் இருப்பதால் பிரசவம் சிக்கலாகும் என்றும், தாய்-சேய் ஒருவரோ, இருவரோ உயிரிழக்க நேரிடும் என்றும் தெரிய வந்தது. மேலும் அல்ட்ரா சவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துபார்த்ததில், குட்டி உயிருடன் இருப்பதற்கான அறிகுறிகள் எதுவுமே இல்லாததால்,  குட்டி இறந்துவிட்டது என்றே முடிவு செய்தனர்.


சிஸேரியன் செய்யவேண்டியதுதானே தோணுது இல்லியா? யானைகளுக்கு சிஸேரியன் செய்றதெல்லாம் ரொம்ப ரொம்ப சிக்கலான விஷயமாம். அதனால செய்ய மாட்டாங்களாம்; எவ்வளவு கஷ்டம்னாலும் தானாத்தான் பிறக்கணுமாம். ஆனா,  இப்ப குட்டி இறந்து போனதுனால, குட்டியின் முயற்சி இருக்காது; அந்த யானை தானாதான் பெற்றெடுக்கணுமாம்.  அதுக்கு இன்னும்  ஒரு வருடம் வரை ஆகலாமாம். ஆமா, அதுவரை, இறந்த குட்டியை அந்த யானை வயிற்றிலேயேதான் சுமந்துகிட்டு இருக்கணும்!!

இதனாலே, இந்த விஷயம் எல்லாருக்கும் சோகத்தைத் தந்தது. மிருகக்காட்சி சாலைக்கு மக்கள் பலரும் தங்கள் வருத்தங்களைத் தெரிவித்து வந்த நிலையில், தாய் யானை விநோதமாக நடந்துகொண்டதை, மிருகக்காட்சிச் சாலையினர் கண்டனர். அதாவது, சில முறை, உருளவும், பிரளவும் செய்தது. சில முறை அந்த யானை தன் தலையில் நிற்க முயற்சித்தது. தன் வயிற்றில் தலைகீழாக இருக்கும் குட்டியை கவிழ்த்து, நேராக்க முயற்சிப்பது போல அதன் செய்கைகள் இருந்ததாகப் பின்னர் குறிப்பிட்டனர்.


இப்படியாக, மார்ச் 8ந் தேதி இறந்ததாக அறிவிக்கப்பட்ட குட்டி, 10ந் தேதி பிறந்தது. இறந்து பிறந்த குட்டியைப் பரிதாபமாக எல்லாரும் பார்த்திருக்க, மெல்ல அசைந்து, தலையைத் தூக்கிப் பார்த்தது அந்தக் குட்டி!! ஆமாம்,  அந்தக் குட்டி இறக்கவில்லை, உயிருடன் இருக்கிறது!! எப்படி இந்த அதிசயம் நடந்தது? வயிற்றினுள் இருந்தபோது,  குட்டி கோமா நிலைக்குச் சென்றிருக்கக்கூடும், அதனால்தான் இதயத் துடிப்பு முதல் உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்றும் மருத்துவர்கள் சொல்லுகின்றனர்.

taronga.org.au

தாய் யானைக்குப் பிரசவ வலி தொடங்கி ஒன்பது நாட்களுக்குப் பின்னர் உயிருடன்  பிறந்த குட்டி அதிசயப் பிறவியாகவேப் பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு Mr. Shuffles என்று செல்லமாகப் பெயரிட்டு அழைக்கின்றனர். புதுப் பேர் வைக்கிறதுக்கு ஒரு போட்டியும் அறிவிச்சிருக்காங்க!!  சில நாட்கள் கோமாவுல இருந்ததால, பாதிப்பு எதுவும் இருக்கான்னு பார்க்கிறதுக்காகத் தீவிரமா கண்காணிக்கிறாங்க மிஸ்டர். ஷஃபிள்ஸை!! ஆனாலும், தானே நடக்கவும், பால் குடிக்கவும், ஓடியாடவும் ஆரம்பிச்சுட்டதால அப்படி எதுவும் இருக்காதுன்னே தோணுது. அப்படியே இருக்கட்டும்.

இப்ப என்ன சொல்றீங்க?

Post Comment

அதான் கடல் நிறைய தண்ணி இருக்கே!!

1980 களில், அந்த தெருவிலேயே அடிபம்பு இருக்கும் ஒன்றிரண்டு வீடுகளில்
என் அம்மாவின் வீடும் ஒன்று. குடிநீருக்கு குழாயில் வரும் நீரும், குளிக்க, துணி துவைக்க தெருக்கோடியில் ஓடும் தாமிரபரணியின் கிளை வாய்க்காலும் போதுமானதாக இருந்தது. மேல் தேவைகளுக்கும்,கோடையில் வாய்க்கால் வற்றும்போதும், அம்மா வீட்டில் வளவூட்டில் (முற்றத்தில்) இருக்கும் அடிபம்புதான் அந்த தெருவுக்கே அமுதசுரபி. பகல் நேரங்களில் இடைவிடாமல் கேட்கும் குழாயடிக்கும் சத்தமும், தண்ணீரின் சத்தமும், பெண்களின் பேச்சும், விளக்கு வச்சப்புறம் எதுவும் வெளியே கொண்டுபோகக் கூடாது என்ற (அறியா) நம்பிக்கையால் மாலையில்தான் அமைதியாகும்.

பின்னர் நாங்கள் தனி வீடுக்கு வந்த பிறகும் இது தொடர்ந்தது. காலப்போக்கில் எல்லார் வீட்டிலும் போர்க்குழாய்கள் வந்துவிட, கடந்த சில வருடங்களாக மோட்டார் போட்டால் தண்ணீர் ஏறாது!! தண்ணீர் இல்லாததால், ஏர் லாக் ஆகிவிட, தண்ணீர் ஊற்றிப் பார்த்துச் சரி வரவில்லையென்றால், ப்ளம்பரைக் கூப்பிட்டு... இப்போ எல்லா வீட்டிலும் நடக்கும் சாதாரண நிகழ்வாகிவிட்டது!! வாய்க்கால் என்ன ஆனதென்று கேட்கிறீர்களா? அது எப்பவோ திருநெல்வேலியின் கூவம் ஆகிவிட்டது!!

metroactive.com
நிலத்தடி நீர் வற்றி வரும் நிலையில், அதை வளப்படுத்தும் திட்டங்களைத் தீட்டி,  மேம்படுத்தும் வழிகளையும், மழைநீர் சேகரிப்பையும் அதிகம் ஊக்குவிக்காமல், அரசு தன் பார்வையைத் திருப்பியிருக்கும் இடம் கடல்!! ஆம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்!! சென்னை மீஞ்சூரில் டீ-ஸலைனேஷன் பிளாண்ட் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அடுத்து நெம்மேலியிலும் அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் தொடங்கிவிட்டன!!

கடல்நீரை எடுத்து குடிநீராக்குவதில் என்ன பெரிய பாதகங்கள் வந்துவிட முடியும் என்றுதான் தோன்றும்.  உலகமுழுவதும் உள்ள டீ-ஸலைனேஷன் பிளாண்ட்களில் கிட்டத்தட்ட  75% மத்திய கிழக்கு நாடுகளில்தான் உள்ளது. நிலத்தடி நீரோ, மழைநீர் ஆதாரமோ இல்லாத பாலைவனப் பிரதேசங்களான இந்நாடுகளில் பரந்து விரிந்திருக்கும் கடலைப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழியாக இருந்தது. அதனால், இவற்றை நிறுவும் செலவு பன்மடங்கு என்றாலும், வளைகுடா நாடுகள் சளைக்காமல் பல ப்ளாண்ட்களை நிறுவின. செலவைக் குறைக்க, கோ-ஜெனரேஷன் எனப்படும், மின் உற்பத்தியும், சுத்திகரிப்பு ஆலையும் ஒன்றாக செயல்படும்படி அமைத்தனர்.


melbourne-water.com
உப்புநீரைக் குடிநீராக்கப் பயன்படுத்தப்படும் காய்ச்சி வடித்தல் முறையும் (Distillation), மீள் சவ்வூடு பரவல் முறையும் (Reverse Osmosis) என்ற இருமுறைகளிலும், கடல்நீரை எடுத்து, தேவைப்படும் வேதிப்பொருட்கள் சேர்த்து, நல்ல நீரைப் பிரித்து, பின் வரும் கழிவு நீரை கடலிலேயே மீண்டும் களையப்படும்.  10 லிட்டர் நீரில், 5லி குடிநீரானால், மீதி 5லி நீரும், 10லிட்டருக்குரிய அடர் உப்புடன் (brine)  இருக்கும்.  இவற்றினால் வரும் பாதகங்களைப் பார்ப்போம்:

1.
ஆலை செயல்பாடு: ஆலை செயல்பட அதிக மின்சாரம் மற்றும் முதலீடு  தேவைப்படும். ஆலை செயல்பாடுகளால் ஏற்படும் வெப்பமூட்டுதலும், வெளியேறும் மாசுபட்ட வாயுக்களும் பசுமையில்ல வாயுக்களைப் பாதிப்பதன்மூலம் சுற்றுச்சூழலைக் கேடாக்கும்.

2. ஆலைக்கு நீரை எடுக்கும் இடம் (Intake): அதிக வேகத்தில் நீர் உறிஞ்சப்படுவதால், கடல்வாழ் உயிரினங்களும் சேர்ந்து வந்து மாட்டிக்கொள்ளும் சாத்தியம்.

3. பயன்படுத்திய நீரை வெளியேற்றும் இடம் (Outlet):  

a. கழிவுநீர் அதிவேகமாகவும், அதிக வெப்பநிலையிலும், அடர்உப்பாகவும், சேர்க்கப்பட்ட வேதிப் பொருட்கள் (anti-scalants, anti-foaming, anti-corrosion agents), க்ளோரின் மற்றும் பல உலோகங்கள் கலந்தும் இருப்பதால், வெளியேற்றப்படும் இடத்திலும், சுற்றிலும் இருக்கும் கடல்வாழ் உயிரினங்களையும் அழித்துவிடும்!!

b. அதன் சுற்றுப்புறங்களில் உள்ள நீரின் உப்பு அடர்த்தியும் அதிகமாக்கப்படுவதால், ஆலை தன் தேவைகளுக்கு மீண்டும் அதே நீரையே உறிஞ்ச நேரிடுவதால் அதிக உற்பத்திச் செலவும்!! 

ஒரு ஆலையிலிருந்து வெளியாகும் ferric sulphate நிறைந்த நீர்
trek-uk.org
யூ.ஏ.இ. யின் கடல்நீரின் இயல்பான உப்பு அடர்த்தி (Salinity) முந்தைய காலங்களில் 30,000ppm ஆக இருந்ததாம்; பத்தாண்டுகளுக்கு முன் 45,000ppm ஆக உயர்ந்தது, இந்த வருடம் 56,000ppm ஆகிவிட்டது!! இதிலிருந்து இதன் அபாயம் அறிந்து கொள்ளலாம். இதன் பாதிப்பா அழிஞ்ச பவளப்பாறைகளை (coral reef) இங்கே இப்போ செயற்கையா வளர வைக்க ஏற்பாடுகள் செய்துகிட்டு இருக்காங்க!!
 
துபாயில் ஏற்பட்ட “ரெட் டைட்”
gulfnews.com

அதுவுமில்லாம, இங்கே திடீர்திடீர்னு கடற்கரைகள்ல “Red Tide Alert"  என்று செய்தி வரும்!! அதாவது இதன் இன்னொரு பாதிப்பாக Red algae என்ற ஒருவகை பாசி கொத்துகொத்தாகக் கடற்கரைகளில் படரும். அவை நம் உடலில் பட்டா பலவித பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமில்லை, கடல்வாழ் செடிகளுக்கும், மீன் வகைகளுக்கும்கூட ஆபத்து விளைவிக்கக்கூடியவை!!

 ஓரளவு விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றும் அயல்நாடுகளிலேயே இவ்வளவு பாதிப்புகள் என்றால், தமிழகத்தில்?? மீன் வளம் பாதிப்பதால் மீனவர்களும் பாதிக்கப்படுவார்கள். ஏற்கனவே காடுகளை அழித்ததன் விளைவாக, ஊருக்குள் யானைகள், புலி, சிறுத்தைகள் வந்து போகின்றன.

இப்படியாக, நமது தேவைகளுக்காக பூமியை, மரம், மிருகங்களை வதைத்துக் கொண்டிருந்த நாம் கடலையும் விட்டு வைக்கவில்லை!! இதெல்லாம் குறைக்க நம்மால் ஆனவற்றை நாம் செய்வது மட்டுமல்லாமல், நம்வீட்டு ஆண்களுக்கும் (ஆமாங்க), குழந்தைகளுக்கும் சொல்லிக்கொடுக்கணும். பணத்தை எப்படியெல்லாம் பேணுவோமோ, அதேதான் தண்ணீருக்கும்!!

1. சிக்கனமாகச் செலவு செய்தல்;
2. சேமித்து வைத்தல்;
3. வருமானத்துக்குரிய வழிகளைப் பெருக்குதல். (மழைநீர் சேகரிப்பு etc.)

Post Comment

எனக்கும் பிடிச்சிருக்கு...


மகளிர் தினத்தின் தொடர்ச்சியா வெள்ளிநிலா ஷர்ஃபுதீன் “எனக்குப் பிடித்த 10 பெண்கள்”னு தொடர் ஆரம்பிச்சு வச்சார்;  பலரைப் போல நானும், எங்கே,  இந்திரா காந்தி, கிரண் பேடி,  அன்னை தெரசான்னு சொன்ன பேர்களையே திருப்பித் திருப்பிச் சொல்லி போரடிக்கப் போறாங்கன்னு ஒரு நொடி  நினைச்சேன்; (தப்புதான், ஆனாலும், உண்மையச் சொன்னதுக்கு என்னைத் திட்டக்கூடாது!!) இருந்தாலுமொரு நம்பிக்கை இருந்து, இதைச் சவாலாகவே எடுத்துகிட்டு பதிவர்களில் சிலர் (பெண்களாவது) தெரியாதவர்களைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்துவாங்கன்னு!! 

அதே மாதிரி, பல பதிவர்கள் நான் அறியாதவர்களையும், அறிந்திருந்தாலும் மறந்தவர்களையும் சொன்னபோது ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். அவற்றை உங்களோடும் பகிர்ந்து கொள்ள எண்ணி, இந்த இடுகையில் எழுதியிருக்கிறேன்.  சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி பெறாமல்தான், இங்கு காப்பி-பேஸ்ட் செய்திருக்கிறேன், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்!!

தொடர் பதிவு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் நல்ல அறிமுகங்கள் வரும் என எதிர்பார்க்கிறேன்!!


வி சாந்தா: அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் சேர் ஃபர்சன். இவர் 50 வருடமாக கேன்சர் நோயாளிகளுக்காவே தன்னை அர்ப்பணம் செய்தவர் padmashree மற்றும் பலவிருதுகள் பெற்றவர்.

அருணாராய்:  இவர் ஒரு சமூகசேவகி.இந்தியன் அட்மினிஷேசனில் சிவில் சர்வன்டாக பணிபுரிந்தவர். ஏழைகளுக்காக குரல்கொடுத்தவர்.

சி என் ஜானகி : இவர் இருகால்களையும் போலியோவினால் இழந்தும். நீச்சல் துறையில் சாதனைப்படைத்தவர்

பாத்திமா [ரலியல்லாஹ்] : இவர்கள் நபிகள் நாயகத்தின் திருமகளார். ஒருபெண்மணி எப்படி வாழவேண்டும் என்ற பாதையை வழிவகுத்துத்தந்தவர்கள். ... ஒரு நல்லவரை நேரில்பார்த்து அவர்களைபோல் வாழ்வதைபோல். அவர்கள் இப்படி நல்லவர்களாக தூயவர்களாக வாழ்ந்தார்கள் அதுபோல் வாழவேண்டும் என சொல்லக்கேட்டு வாழ்வதிலும் மிக சிறப்பு உள்ளது. இவர்களை மிகவும் பிடிக்கும்..


ராமலட்சுமி: இவர் திருநெல்வேலியின் புகழ்பெற்ற கைராசி மிக்க டாக்டர். நெல்லையில் உள்ள இவரின் மருத்துவமனைக்கு செல்லாத பெண்களே இல்லை எனலாம். மகபேறு, குழந்தையின்மை, பெண்களின் பிரச்சனைகள் போன்றவற்றுக்கு இவர் மருத்துவமனைக்கு சென்றால் தீர்வு காணலாம். இப்போது இவரைப் போல இவர் மருமகள் மதுபாலாவும் சிறந்த டாக்டர். இருவரும் நெல்லை பெண்களுக்கு கைராசிமிக்க மருத்துவர்கள்.
 

சுதா நாராயணன்: இவர் இன்போஸிஸ் நிறுவனத்தின் நாராயணமூர்த்தியின் மனைவி. அந்த நிறுவனத்தை துவக்கவும், வளர்க்கவும், உறுதுணையாக இருந்து, இதற்காக அவருக்கு வந்த நல்ல வேலை வாய்ப்பினையும் விட்டு கொடுத்தவர், என இன்று வரை அவர் கணவரால் போற்றப்படும் பெண்மணி.
 

உமா மகேஸ்வரி: இவர் நெல்லையின் முன்னாள் மேயர். நெல்லையில் முதன்முதல் மாநகராட்சி முறை கொண்டு வந்தபோது நெல்லையின் முதல் பெண் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது நிர்வாகத்தில் நெல்லையில் முன்னேற்றங்கள் ஏற்பட்டது எனலாம்.

வசந்த குமாரி:  இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் தான் தமிழ்நாட்டு முதல் பெண் பேரூந்து ஓட்டுனர். எல்லோரும் கேலி செய்த நேரத்தில் தன் திறமையைக் கொண்டு முன்னேறிய‌வர்.

மைதிலி கிருஷ்ணன்:  

கானா - இவள் 12 ஆம் நூற்றாண்டில் பெங்காலில் வாழ்ந்த ஒரு கவிஞர், வான சாஸ்திரத்திலும் மேதையாக இருந்த்தாள். இவளது கணவன் கணிதம் மற்றும் வான சாஸ்திரத்தில் சிறந்து விளங்கிய வராஹமிஹிரா . கணவனை விட மிக துல்லியமாக வானசாஸ்திரம் கணித்ததனால் நாக்கு துண்டிக்கபட்டவள். நாக்கு துண்டிக்கப்பட்டப்பின்னும் கானா வசன் (கானாவின் வாக்குகள் ) என்ற பெயரில் கவிதைகளும் விழிப்புணர்ச்சி வருத்தும் கருத்துக்களும் எழுதினாள்.  

மிராண்டா ஸ்டூஆர்ட்( Dr.ஜேம்ஸ் பாரி ): ஆண் வேடமிட்டு 1812 ஆம் ஆண்டு எடின்பர்க் மருத்துவ கலூரியில் பட்டம் பெற்றார். பெண்களுக்கு அப்போது கல்லூரியில் இடம் இல்லை. ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் பல நாடுகளிலும் சேவை செய்தார். ஆணாகவே வாழ்ந்தாள். அவர் இறந்த பிறகு அவர் உடலை சுத்தம்செய்த பெண்மணியே அவர் ஆணல்ல பெண் என்று கண்டுபிடித்தார்.. எத்தனை வைராக்கியம் இருந்தால் அவர் 56 வருடங்கள் ஆணாக வாழ்ந்திருப்பார். 

சாவித்திரி பாய்:  இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். 1848 ஆம் ஆண்டு பூனாவில் முதல் பெண்கள் பள்ளிக்கூடம் நிறுவினார். 1852ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண்களுக்காக பள்ளிக்கூடம் தொடங்கினார். 

பிரேம் மாத்தூர்: இவர் இந்தியாவின் முதல் பெண் விமான ஓட்டுனர். விமானம் ஓட்டும் பயிற்சி இருந்தும் அவருக்கு எந்த விமான கம்பெனியிலும் வேலை கொடுக்கவில்லை. பெண் ஓட்டுனர் என்றல் எங்கள் விமானத்திற்கு ஆள் வரமாட்டார்கள் என்று கேலி செய்தனர். மனம் சோர்ந்து தொழிலதிபர் ஜி. டி.பிர்லாவின் தனிப்பட்ட விமான ஓட்டுனராக பணியாற்றினார். 1951 ஆம் ஆண்டு டெக்கான் ஏர்லைன்ஸ் அவருக்கு முதல் வாய்ப்பை வழங்கியது.  

சந்திரமுகி பாசு : கல்கத்தா பல்கலை கழகத்தில் 1886 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் பெற்ற முதல் இந்திய பெண். இவருடைய இரு தங்கைகள் தான் கல்கத்தா மருத்துவ கல்லூரியில் முதன் முதலாக படித்த பெண்கள். எத்தனை முதல்கள் ஒரே குடும்பத்தில்..

ராஜேஸ்வரி சண்முகம்: படிக்கும் காலத்தில் எனக்கு மிக பிடித்த பொழுதுபோக்கு இலங்கை வானொலி நிகழ்ச்சிகள் கேட்பது. நிகழ்ச்சி தொகுத்து அளிக்கும் இவரின் பாங்கு எனக்கு மிகவும் பிடிக்கும், இவர் குரலை கேட்டாலே உற்சாகம் தொற்றி கொள்ளும் அறிவிப்பாளர் .  

Kim clijsters: பொதுவாக, திருமணம் ஆகிவிட்டாலே, விளையாட்டில் இருந்து விலகி கொள்பவர்கள் அதிகம். ஒரு குழந்தைக்கு தாயான போதும் இரண்டாவது முறையாக us open - champion - பட்டம் வென்றவர், டென்னிஸ் வீராங்கனை Kim clijsters.  

சரோஜ் நாராயணசுவாமி: வானொலியில் செய்தி கேட்கும் வழக்கம் உடையவர்கள் கண்டிப்பாக இவரது குரலை கேட்டு இருப்பீர்கள், இந்த வெண்கல குரல் எனக்குப் பிடித்த ஒன்று, குரலுக்கு சொந்தக்காரர் சரோஜ் நாராயணசுவாமி


வை.மு. கோதை நாயகி அம்மாள் :  முதல் பெண் எழுத்தாளர் 
கேரம்" இளவழகி:  விளையாட்டு வீராங்கனை
மருத்துவர் ஷாலினி.: உடல் உளவியல் மருத்துவர்
இந்திரா நூயி : 
பெப்சி CEO
சந்தா கோச்சார் :
ICICI வங்கி சேர்மென்
மேதா பட்கர் :-
சமூக சேவகி .
ரப்ரி தேவி :
சிறந்த (!) அரசியல் வாதி


சாந்தா-தனஞ்செயன்:   வி.பி. தனஞ்செயன். சாந்தா தனஞ்செயன். இவர்கள் இருவரும் தம்பதிகள். இருவரும் பாரத நாட்டிய கலைஞர்கள். சர்வதேச புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு கொண்ட சென்னை அடையாறு "கலாச்சேத்ரா" பாரத நாட்டிய பள்ளி இவர்களுடையது. சென்னை வாழ் மக்கள் கலாச்சேத்ராவில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்புவர்.

வாலேண்டினா தெரஸ்கோவா : இரஷ்யாவில் சாதாரனக் குடும்பத்தில் பிறந்து, முதன் முதலில் விண்வெளிக்கு சென்ற சாதனையாளர்.பூமியின் சுற்றுவட்டப் பாதையில் 1963 ல் ஜீன் 6ஆம் திகதி பறந்தவர்.

டாங்கோ திபு,பச்சோந்திரி பால் :
இவர்கள் இருவரும் எவரெஸ்ட் மலைச்சிகரத்தில் முதன் முதலில் ஏறியவர்கள். கடும் குளிர்,உறைபனி எதிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என நிருபித்தவர்கள். பச்சோந்திரி பால் ஏறியவர். டாங்கோ கைடுங்க.

டாக்டர் கீதாஹரிப்பிரியா: நிறைய பெண்களின் வயிற்றில் பால் மட்டும் அல்ல, குழந்தைகளையும் வார்த்தவர். சிறந்த கைனக்காலஜிஸ்ட்


சின்னப் பொண்ணு : அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களே காலில் விழுந்து வணங்கிய பெரிய பொண்ணு இவர். ஏட்டறிவு இல்லாவிட்டாலும் விவசாய மக்களுக்கு இவர் ஒரு கலங்கரை விளக்கம்.
 

விஜயா : நாகப்பட்டினம் பள்ளி வேன் விபத்தில் சிறு குழந்தைகளை காப்பாற்ற தன் உயிர் தந்த தியாகி. அர்பணிப்பு என்னும் சொல்லின் அருஞ்சொல்பொருள்.


பூங்குழலி:   .. "பொன்னியின் செல்வன்"ங்கிற அந்த புக்குல வர்ற பூங்குழலிங்கிற கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிச்சுப் போனது. ...
ஆச்சி மனோரமா:  சிறுவயதில் எனது பள்ளிவிடுமுறையில் நான் பார்த்த 'பாட்டி சொல்லை தட்டாதே' படத்தில்தான் முதன்முதலில் நான் இவரது நடிப்பைப் பார்த்து வியந்தேன். இந்த படத்திற்கு பிறகு நான் இவரை என் சொந்த பாட்டியாகவே கருத ஆரம்பித்தேன். எல்லா சிறுவர்களுக்கும் இப்படித்தான் இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். இதன்பிறகு பெரும்பாலான முன்னனி நடிகர்கள் இருக்கும் படங்களிலும், டிவியில் பார்க்கும் பழைய கருப்பு வெள்ளை படங்களிலும் இவர்களது நகைச்சுவை கலந்த கதாபாத்திரங்கள் என்னை பெரிதும் ஈர்த்தன. 'சகல கலா வல்லி' என்று நடிகர் திலகத்தால் இவர் அழைக்கப்பட்டது மிகவும் பொருந்தும்.

குந்தவை நாச்சியார்:  மீண்டும் பொன்னியின் செல்வன் கதாபாத்திரமா என்று நினைக்க வேண்டாம். இவர்கள் கற்பனைப்பாத்திரமல்ல, உண்மையில் வாழ்ந்தவர்... இவரது Management Skillsஐப் பற்றி பலபேர் வியந்திருக்கிறார்கள். இவர் தனது வாழ்நாளில் Intellectual Womenஆக வாழ்ந்திருக்கிறார் என்பதற்கு பல சான்றுகள் உண்டு. இன்றும் இவரது நினைவாக இவரது பெயரில் ஒரு மகளிர் கல்லூரி தஞ்சையில் இருக்கிறது. அந்தளவிற்கு மரியாதை செலுத்தபட்டவர். ராஜராஜ சோழனின் வரலாற்று வெற்றிக்குப் பின்னால் இவரது பெரும்பங்கு உண்டு.


செல்லம்மா பாரதி : பாரதி ஒரு ஆச்சர்யம் என்றால்.. அவர் துணைவி இன்னொரு ஆச்சர்யம்! இரண்டு எக்ஸ்ட்ரீம் !


பிபிசி தமிழோசை வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் ஆனந்தி:  அவர் எல்லோருக்குமே அக்கா தான். பிறந்தது யாழ்ப்பாணத்தில். பிறகு 90களில் வானொலி அறிவிப்பாளராக... பிபிசியில். அவரது குரல், ஈழத்தமிழர்களின் சோகத்தை சொல்லும் போது, கண்கள் பணிக்காமல் இருக்காது. குரலில் தெரியும் நேசம், நம்மை வேறு யாரோவாக நினைக்க வைக்காது. நம் உறவாகவே நினைக்க வைக்கும். அவர் குரலை கேட்கவே பிபிசி கேட்பேன். அழகிய தமிழ் உச்சரிப்பு. என்ன காரணமோ தெரியவில்லை, அவர் பணியிலிருந்து விலகிய பிறகு, நான் பிபிசி தமிழோசை கேட்பதையே நிறுத்தி விட்டேன்.
 

தடகள வீராங்கனை சாந்தி: அனேகம் பேர் மறந்திருக்கக்கூடும். பாலினச்சர்ச்சை காரணமாக பதக்கத்தை இழந்த பெண். அவருக்கு ஆதரவாக, எதிர்ப்பாக என்று சரிபாதியாக ஆதரவு, எதிர்ப்பு குரல்கள். பாதியிலேயே முடிந்தது... ஒரு நீண்ட ஓட்டம். தன் தாய்க்கு துணையாக கிராமத்தில் வாழ்ந்த அவர், கடைசியில் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல்.

ஜிக்கி: எனக்கு பிடித்த பாடகிகளில் ஜிக்கியும் ஒருவர். பாடகர் A.M.ராஜாவை மணந்து கொண்டப்பிறகு பாடுவது தடைப்பட்டு போனது அல்லது தடை செய்யப்பட்டது. A.M.ராஜாவின் மறைவிற்கு பின் மீண்டும் பாட வந்து, சில அற்புதமான பாடல்களை, இளையராஜாவில் இசையில் பாடினார். இப்போது நம்மிடையே அவர் இல்லை.

அனுராதாரமணன்:
படிக்க துவங்கிய காலத்தில், நான் தேடி தேடி வாங்கி படித்தது இவரது நாவல்களை. பிறகு ஜெயகாந்தனையும், பாலகுமாரனையும் வாசிக்க துவங்கிய பிறகு, இவர் நாவல்களை மறந்தாலும், இவரது வாழ்க்கை குறிப்புகளை ஒரு போதும் மறக்க முடியவில்லை. தன்னம்பிக்கைக்கு மிக சிறந்த உதாரணம். இவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எம்மாதிரியான நரக வேதனையை எல்லாம் தாண்டி வந்துள்ளார் என்பதற்காக. இவர் மூலம் சொல்லப்பட்ட தகவல் தான். இவரது கணவர், பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர். ஒரு முறை அவர் மூலம், இவருக்கு சில வியாதி ஒட்டிக் கொள்ள், இவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற போது, இவரை அங்குள்ள எல்லோருமே தவறாக,  தப்பான பெண்ணாக பார்த்தார்களாம்.
 

திருமதி மேனகாகாந்தி: சாமானியனின் மருமகளாக இருந்தால் என்ன... பிரதமர் இந்திரா காந்தியின் மருமகளாக இருந்தால் என்ன. மருமகளுக்கு கொடுமை நேருவது, நேருவது தான். கைக் குழந்தையுடன் வெளியேற்ற பட்ட, இந்திராவின் மருமகள், ஒவ்வொரு அடியையும் எதிர்நிச்சல் போட்டு வெற்றி பெற்றிருக்கிறார். சோனியா ராகுலை உருவாக்கியது வெற்றியல்ல. மேனகா வருணை உருவாக்கியது தான் சாதனை. நாடு முழுவதும் இன்று விலங்குகள் மீதான கொடுமைகளை, கட்டுப்படுத்தி அதற்கென அமைப்பை நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்திய பெருமை மேனகா காந்தியை சாரும்.
 

கஸ்தூரிபாய் காந்தி: பிரபலமானவர்களின் மனைவியாக இருப்பதில் நிறைய சிரமங்கள் உள்ளன. அதுவும் மகாத்மாவின் மனைவியாக இருப்பதில்... விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தியாகங்களை
செய்து கொண்டே இருக்க வேண்டும். தனக்கென வாழ முடியாத நிர்ப்பந்தம். மகாத்மாவின் வாழ்வை விட, கஸ்தூரிபாய் அவர்களின் வாழ்வே நிறைய கற்று கொடுத்துள்ளது.
 

தில்லையாடி வள்ளியம்மை: நாம் பள்ளிப்பாடத்தில் சிறு வயதில் படித்த சுதந்திர போராட்டக்காரர். அதுவும் அந்நிய மண்ணில்... தென்னாப்பிரிக்கவில். மகாத்மா காந்தி அவர்களாலேயே வியந்து போற்றப்பட்ட சுதந்திர போராட்ட வீரர். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் தான், அவர்களை ஒரு கணம் நினைத்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
 

ரோஸா பார்க்ஸ்:  உண்மையைச் சொல்லப்போனால் முதற்தீக்குச்சியை உரசியவர் இவர்தான்… அந்த தீ இன்றளவும் நமைத்துப் போகாததுதான் இவரின் வெற்றி… தான் அமர்ந்திருந்த பேருந்து இருக்கையை  விட்டுத்தர மறுத்த இவரின் செயலும், இவர் மீது சுமத்தப்பட்ட வழக்கும் கருப்பின மக்களின் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆரம்பமாக இருந்தது...

ஃப்ளோரன்ஸ் நைட்டிங்கேல்:  சின்ன வயசில படிச்சேன்… ‘கைவிளக்கேந்திய காரிகை’ அப்படின்னு சொல்லி எங்க தமிழ் வாத்தியாரம்மா பிளேடு போட்டுகிட்டே ஆரம்பிச்சாங்க… ஆனா அவங்க முடிக்கும்போது பிரம்மிப்பா இருந்துச்சு.. இப்படியும் ஒருத்தங்க இருந்தாங்களான்னு… செவிலியர்களின் சேவைக்கு ஈடாக எதையும் கொடுக்க முடியாதுன்றது ரொம்ப உண்மை... உலகம் முழுவதும் இவரது பிறந்த நாள்தான் செவிலியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

அனிதா ராபர்ட்ஸ்:   புரோட்டின் உட்கவருதல் மற்றும் டி-ஜி-எஃப் பீட்டா- கண்டுபிடிப்பிற்கு காரணமான உயிரியலாளர். கேன்சர் பாதிப்பை குறைப்பதற்கும், காயங்கள் மற்றும் எலும்பு முறிவிலிருந்து மீண்டு வருவதற்கும் பயன்படும் அருமருந்தைக் கண்டுபிடித்தவர். இன்று கோடிக்கணக்கான உயிர்கள் விரைவாக காப்பாற்றப்பட காரணமான ஒருவர்…

ஐரம் ஷர்மிளா:   இவரைப்பற்றி கேள்விப்பட்ட பின் மனஉறுதிக்கு யாரை குறிப்பிடுவது என்று தெரியவில்லை… மணிப்பூரின் இரும்புப்பெண்மணி… AFSPA சட்டத்தை வடகிழக்கு பிராந்தியங்களிலிருந்து நீக்க வேண்டி போராடிவருகிறார். அவர் விரைவில் வெற்றி பெற வேண்டும்…

Virginia Woolf:  கடந்த நூற்றாண்டின் சிறந்த பெண்ணிய கட்டுரைகளை எழுதியவர்… (A Room of One’s Own மற்றும் Three Guineas). இறுதியில் ஓல்ஸ் நதிக்கரையில் தன் வாழ்வை முடித்துக்கொண்டார்… போர் பற்றிய இவரது எழுத்து இன்னும் செவியில் சுற்றிக்கொண்டிருக்கிறது…

சங்கமித்ரா:  புத்த மத பிக்குனியா வாழ்ந்த சாம்ராட் அசோகருடைய மகள்… இவங்கள ஏன் பிடிச்சிருக்குன்னு இன்னிக்கு வரைக்கும் எனக்கு தெரியல… ஆனா ஏதோவொன்னு இவங்ககிட்ட இருந்திருக்கு….

யாஸ்மின் அஹமத்:  இவரது உணர்வப்பூர்வமான, கவிதை ததும்பும் விளம்பரப்படங்கள் நிச்சயம் நம் மனதை பாதிக்கும்… துளியும் விரசமில்லாமல் சில விநாடிகளில் ஒரு குறும்படத்தையே காட்டிவிடும் வல்லமை இவரிடம் இருந்தது… இவரும் ஒரு வலைப்பதிவர்தான். ஆனால் இப்போது இவர் இல்லை… இணையத்தில் இவரது வலைப்பூ மட்டும் மெளனமாக உலவிக்கொண்டிருக்கிறது…

நாய்க்குட்டி மனசு:

பெனசிர் புட்டோ: ஒரு முஸ்லிம் பெண் எந்த துறையிலும் உயர்ந்தவராக வருவது எவ்வளவு கடினம் என்பது நமக்குத் தெரியும் . அதிலும் அரசியல் என்றால் கேட்கவேவேண்டாம். இரு முறை பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனசிர் புட்டோ . பல முறை சாவின் பிடியில் இருந்து தப்பித்தவர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமாதானத் தூதை தொடங்கி வைத்தவர். முக்காடிட்ட முகமானாலும் முன் இருப்பவரை மலர வைக்கும் பெனசிர் புட்டோ ரொம்ப பிடிக்கும் .
 
எழுத்தாளர் சிவசங்கரி: எங்கள் கல்லூரி நாட்களில் சிவசங்கரி யும், இந்துமதியும் இன்றைய விஜயும், அஜித்தும் போல. அவர்களை கதைகளை வாரப் பத்திரிகைகளில் படித்து ஒரு பட்டிமன்றமே நடக்கும். சிவசங்கரி கண் தானம் பற்றி எழுதிய ஒரு கட்டுரையைப் பார்த்து நிறைய பேர் கண் தானம் பண்ணி இருக்கிறார்கள். அவர் எழுதிய "அவன்" கதை பலரைப் பாதித்தது. எழுத்துத் துறையில் எனக்கு மிகவும் பிடித்தவர் சிவசங்கரி.

எங்கள் பிளாக்:

திருமதி விசாகா ஹரி:
  திறமையாக, எளிமையாக, இனிமையாக, புதுமையாக கதா காலட்சேபம் செய்யும் கிருஷ்ண ப்ரேமியின் மருமகள் திருமதி விசாகா ஹரி.

சுஜாதா:  ஸ்ரீரங்கம் எஸ்.ஆர் என்றும் ரங்க ராஜன் என்றும் அறியப் பட்டவருக்குத் தன் பெயரைத் தந்து மங்காப் புகழைத் தந்த அவர் மனைவி சுஜாதா.

உஷா உதூப்: ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்து மேற்கத்திய இசையில் கலக்கிய (லதா மங்கேஷ்கர் பாராட்ட வரும் போது கண் கலங்கி, கை கூப்பி, தமிழில், "ஐயோ...என்ன பண்றது..." என்று மேடையில் உணர்ச்சி வசப்பட்ட ) உஷா உதூப்

தமிழா. தமிழா.. 

ராதிகா:  1978ல் கிழக்கே போகும் ரயிலில்..அறிமுகமானவர்..தமிழ் கூட அப்போது சரியாக பேசத் தெரியாது.ஆனால்..தன்னை இன்று பிரமாதமாக வளர்த்துக் கொண்டுவிட்டார்..தவிர்த்து ராடன் மீடியா என்ற நிறுவனத்தை திறம்பட நடத்தி வருபவர்.

தாமரை:  'பார்த்த முதல் நாளாய்' பாடல் முணுமுணுக்காத ரசிகனே இல்லை எனலாம்.அதற்கு சொந்தக்காரர்.விண்ணைத்தாண்டி வருவாயா..என்பதற்கான சவாலாய் இருந்தவர்.ஈழப்பிரச்னையின் போது இவரின் வீராவேசமான பேச்சு..என்னை இவரை இந்த லிஸ்டில் சேர்த்து விட்டது.

திருமதி ஒய்.ஜி.பி.:  ராஜம்மா,ராஷ்மி,ராஜலட்சுமி என்றெல்லாம் அழைக்கப்படுபவர்.கல்வித்துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.உலகில் அனைத்துப் பகுதிகளிலும் வெற்றி பெற்ற வாழ்க்கை வாழ்ந்துவரும் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளின் படிப்பிற்கான முன்னோடி.இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

Post Comment

நான் லோக்கல் இல்லை...
நம்மூரில லோக்கல்னு சொன்னா, உடனே   போட்டிருக்கிற உடை, செண்ட் முதல் வீட்டில பாத்திரம் கழுவ வச்சிருக்கிற லிக்விட் வரை லோக்கலா, ஃபாரினான்னு கேக்கிறதுதான் ஞாபகம் வரும். இது அது பத்தி இல்ல..  பொதுவா, “லோக்கல்” என்ற ஆங்கில வார்த்தை “உள்ளூர்” என்பதைக் குறிக்கும்.

இங்கே அமீரகத்தில் வெளிநாட்டு மக்களை "Expats" என்றும், இந்நாட்டு குடிமக்களை, “Emiratis" என்றும் குறிப்பிடுவதுண்டு. இதில் "Emiratis" என்று சொல்வதைவிட “Locals" என்று சொல்வது எளிமையா இருப்பதால், அப்படியே வழங்கிவரப்படுகின்றது. எந்த நாட்டிலயும் அந்தந்த மண்ணின் மைந்தர்களுக்கு தனி மதிப்பும், மரியாதையும் இருக்கும்தானே? அதுபோல, இங்கே இந்த லோக்கல்ஸுக்கும் உண்டு. (இந்தியாவில அப்படியில்லையேன்னு என்னைக் கேக்கப்படாது!!)

அரசாங்கத்தின் சேவைகள் எல்லாம் அவர்களுக்குக் கிட்டத்தட்ட இலவசமாகவே கிடைக்கும். இலவச வீடு, ஒவ்வொரு குழந்தைக்கும் மாதம் ஒரு தொகை அலவன்ஸ், இலவச பள்ளி/கல்லூரி படிப்பு,  வெளிநாட்டில் படிக்க நிதி,   படிச்சு முடிச்சு வந்தா வேலைக்கு உதவி; வேலையில்லையா, அதுக்கும் உதவித் தொகை, திருமணத்திற்கு நிதியுதவி,; ஏன் மின்சார, தண்ணீர் கட்டணம் கூட அவங்களுக்கு ஒரு கட்டணமுறை, மற்ற நாட்டவர்களுக்கு ஒரு முறை; மருத்துவமும் இலவசம்; வெளிநாடு போய் ட்ரீட்மெண்டா, இந்தா அதுக்கும் உதவி; இப்படி பலப் பல சலுகைகள் அவங்களுக்கு உண்டு. அதனாலேயே நமக்கு அவங்களப் பாத்தா பொறாமையா இருக்கும்!!

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள்லயும் இந்த மாதிரி குடிமக்களுக்கான சில சலுகைகள் உண்டு; ஆனா, அங்கெல்லாம் வருமான வரி உண்டு; இங்க யாருக்கும் எந்த வரியும் கிடையாது!! எந்த வரிகளும் இல்லாமயே ஒரு அரசாங்கம் தன் மக்களுக்கு இவ்வளவு சேவை செய்ய முடியுதுன்னா, ஆச்சர்யம் என்ன, அதிர்ச்சியே வரும்!! அதுமட்டுமல்ல, ஒரு வெளிநாட்டவர் இங்கே தொழில் தொடங்கணும்னா, அதுக்கு கண்டிப்பா இந்நாட்டவர் தயவு வேணும் என்ற விதி இருப்பதால், அவர்களுக்கு வெளிநாட்டவர் மத்தியில் இயற்கையாகவே மதிப்பும், மரியாதையும் வந்துவிடுகிறது!!

நகரில் கடைகள், அரசு அலுவலகங்கள், சாலைகள் என்று எல்லா இடங்களிலும் அவர்களுக்கு இயல்பாகவே முன்னுரிமை கிடைக்கிறது. அலுவலகங்களில், ஆசியப் பணியாளர்கள் என்றால் எரிந்து விழும் மேலாளர்கள், பணியாளர் ஒரு லோக்கல் (அமீரகக் குடிமகன்/ள்) என்றால் மிகவும் பவ்யமாக நடந்துகொள்வதைப் பார்க்கலாம்.

அமீரகத்தில் வெளிநாட்டினர் பெருகிவிட்டதால்அவர்கள் மத்தியிலும் வேலையில்லாத் திண்டாட்டம் வந்துவிட்டது!! அதை நிவர்த்தி செய்ய சமீப வருடங்களில், Emiratisation என்ற எல்லா நிலைகளிலும் லோக்கல்களைப் பணியில் அமர்த்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரசு அலுவலகங்களில் அவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது; தனியார் நிறுவனங்களையும் அரசு வற்புறுத்தி வருகிறது. இன்றைய அமீரக இளைஞர்களும் அதற்கேற்றவாறு படித்து, திறமைகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

இந்த Emiratisation என்ற திட்டத்தின்படி, ஒரு வங்கியில் வெளிநாட்டவர் ஒருவருடன் லோக்கல் ஒருவரைப் பயிற்சி பெற விட்டிருந்தார்கள். அந்த இளைஞர், கொஞ்சம் விளையாட்டுப் பிள்ளையாதலால், அவ்வப்போது வேலைக்கு மட்டம் போட்டுக்கொண்டிருந்தார். ஒருமுறை அவ்விளைஞருக்கு அறிவுரை கூறினார், ”ஏம்பா இப்படி அடிக்கடி லீவு போடுற? சீக்கிரம் வேலையப் படிக்கவேண்டாமா” என்று கேட்க, அதற்கு லோக்கல் இளைஞர் சொன்னார், “நான் ஒழுங்கா வந்து சீக்கிரம் வேலையப் படிச்சுகிட்டேன்னா, அப்புறம் உங்க வேலை போயிடும். பரவாயில்லியா?” அவர் ஏன் இனி பேசுகிறார்?

அலுவலகத்திற்குப் புதிதாக வரும் சிலர் என்னையும் (என் பர்தா காரணம்) லோக்கல் என்று அவர்களாகவே நினைத்து, அரபியில் பேச ஆரம்பிப்பார்கள். சிலர் சந்தேகத்தைக் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்வார்கள். நான் லோக்கல் இல்லை என்றவுடன், சிலரின் பேச்சில் சிநேகம் அதிகப்படியாகத் தெரியும்; சிலரிடம் உடனே ஒரு  அதிகாரம் வந்துவிடும்!!

என் இரண்டாவது பிரசவத்திற்காக நான் அபுதாபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். மூன்றாவது நாள் வலி தாங்கமுடியாமல், எனக்கு சிஸேரியனே செய்துவிடுங்கள் என்று நான் அரற்ற ஆரம்பிக்க, என்னோடு அறையில் இருந்த மிட்-வைஃப், மருத்துவரை அழைத்து வந்தார். வேகமாக வந்த அந்த இந்திய மருத்துவர் (ஷிஃப்ட் மாறியதால், அப்பத்தான் வந்திருக்கிறார்), என்னிடம் ஆங்கிலத்தில் சுகப்பிரசவத்தின் நன்மைகளைக் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார். “இன்னும் கொஞ்ச நேரம்தான் வலி இருக்கும்; பொறுத்துக் கொண்டால் உனக்குத்தான் நல்லது. இது சிஸேரியன் என்றால் இனி அடுத்ததும் சிஸேரியன் ஆக வாய்ப்பு இருக்கு...” என்றெல்லாம் பெசிக்கொண்டுவந்தவர், திடீரென்று “ஆர் யூ எ லோக்கல்?” என்றார். “நோ, ஐ’ம் அன் இண்டியன்” என்று சொன்னதுதான் தாமதம், “தென் யூ கேன் வெயிட் ஃபார் ஸம் மோர் டைம்” என்று சொல்லிவிட்டு போயேவிட்டார்!!

அந்த மருத்துவர் சொன்னதற்கு என்ன அர்த்தம்? நான் இந்தியன் என்பதால் வலிகளைப் பொறுத்துக் கொண்டுதான் ஆகவேண்டும் என்றா அல்லது இந்தியர்களுக்கு மனவலிமை அதிகம், வலிதாங்குவது  எளிது என்றா?
Post Comment

பெண்களும், புகுந்த வீடும்வரலாற்றில கி.மு, கி.பி இருக்கிற மாதிரி உலகத்துல எல்லோருடைய தனிப்பட்ட வாழ்விலும்  தி.மு., தி.பி.ன்னு ரெண்டு வரலாறு இருக்கும். விரும்பியே வலைக்குள் அகப்பட்டாலும், ஆண், பெண் இருபாலருக்குமே தி.பி. வரலாறு பெரும்பாலும் சோகமயமாவே இருக்கும்.  அல்லது சோகமாக இருப்பதாகவே காட்டிக் கொள்வார்கள்.

என்னதான் விளையாட்டா பேசிக்கிட்டாலும், ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்பது வாழ்க்கையையே மாற்றிப் போடத்தான் செய்கிறது. புதிய உறவுகள், புதிய குடும்பம், புதிய இடம், புதிய வாழ்க்கை முறைகள், புதிய சட்டதிட்டங்கள், ..  எல்லாமே புதிதாக!! வேரோடு பிடுங்கி மண்மாற்றி நடப்பட்ட மரமாக, ஆரம்ப காலங்களில் சிறிதே துவண்டாலும், விரைவில் தன்னைச் சமப்படுத்தி, ஊன்றிய இடத்தில் புதுவேர் பிடித்து, கிளை பரப்பி நிழல் கொடுக்கத் தொடங்கிவிடுகிறாள் பெண்!!

சில குடும்பங்களில் திருமணத்திற்குப் பின் பெண்ணுக்கு சம்பிரதாய வழக்கப்படி வேறு பெயரே சூட்டப்படுகிறது!! பல சமுதாயங்களில், வீட்டில் யாரேனும் இறையடி சேர்ந்துவிட்டால், துக்கம் அனுசரிக்கும்விதமாக ஒரு வருடம்வரை பண்டிகைகள் கொண்டாடப்படுவதில்லை; இதிலும் பெண்ணின் பிறந்த வீட்டில் உள்ளோர் மறைந்திருந்தால் அது அப்பெண்ணின் புகுந்த வீட்டின் பண்டிகைக் கொண்டாட்டங்களைப் பாதிக்காது!! காரணம் அப்பெண் திருமணத்தோடு புகுந்த வீட்டின் அங்கத்தினராகி விடுகிறாள்.

ஒவ்வொரு சமுதாயத்திலும், ஊரிலும் ஒவ்வொரு வகைப் பழக்கங்கள்!!திருமணத்திற்குப் பின் அன்றாட நடைமுறைகளிலும் சரி,  பண்டிகை போன்ற விசேஷ வைபவங்களிலும் சரி, ஒரே சமுதாயத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் சிற்சில வேறுபாடுகளாவது பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டுக்கும் இருக்கும். பெண் அதையும் அணைந்து பெருமையோடே ஏற்றுக்கொள்கிறாள்.

சிலர் உறவுகளுக்குள்ளேயோ அல்லது  ஊருக்குள்ளேயோ திருமணம் செய்துகொள்வார்கள்; இவர்கள் அதிகம் சிரமம் இல்லாமல் சமாளித்துக் கொள்வார்கள். சிலர் ஊர்விட்டு திருமணம் செய்துகொள்வார்கள். சிலர் பிற மாநிலங்களிலும் விரும்பித் திருமணம் செய்துகொள்வார்கள். விருப்பம் நிறைவேறும் மகிழ்ச்சியில்,  கலாச்சார, உணவுப் பழக்க வேறுபாடுகளை மனமுவந்து ஏற்றுக் கொள்வார்கள்.

நாடுவிட்டு நாடு திருமணம் செய்வோரும் உண்டு; ஆனால் பெரும்பாலும் இந்தியப்பெண்கள் அந்நிய நாட்டவரைத் திருமணம் செய்வது அரிதே.  ஆனால், இந்திய ஆண்கள் அந்நிய நாட்டுப் பெண்களைத் திருமணம் செய்வது பரவலாக நடைபெறத்தான் செய்கின்றது. செய்தித்தாட்களில் பெருமையுடன் முதல்பக்கச் செய்தியாகப் படத்துடன் பிரசுரித்திருப்பார்கள், ”வெளிநாட்டுப் பெண் இந்தியக் கலாச்சார முறைப்படி திருமணம் செய்துகொண்டார்” என்று!!

பொருளாதார வசதி, குடியுரிமை, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களை முன்னிறுத்திச் செய்யப்படும் இவ்வகைத் திருமணங்களில் பலவும், காரியம் முடிந்தவுடன், சிலசமயம் அதற்குமுன்பேகூடக் கைகழுவி விடப்படுகின்றன. இருதரப்பிலும் உள்ளார்ந்த அன்புடன், பக்குவமடைந்த மனதுடன் செய்யப்படும் திருமணங்களே நீடித்து நிலைத்து நிற்கின்றன!! இப்படிச் சொன்னவுடன் எல்லாருக்குமே நினைவில் வருவது, சோனியா - ராஜீவ் காந்தி ஜோடிதான் இல்லையா?

நான் இங்கு அரசியல் பேசவில்லை; கொள்கைரீதியாக சோனியாவைச் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு பெண் என்ற முறையில் அவரை எனக்குப் பிடிக்கும். அரசியல் பாரம்பரியமிக்க இந்தியக் குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டாலும், அக்குடும்பத்தின் புகழுக்கும், பெருமைக்கும் இன்றுவரை தன்னால் பங்கம் வராமல் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதன் மூலம் தன் பிறந்த நாட்டுக்கும், குடும்பத்துக்கும்தான் பெருமைதேடித் தந்திருக்கிறார். இன்னொரு இந்திய மருமகள் இருந்தும், மாமியார்மெச்சும் மருமகளாக இவரே இருந்திருக்கிறார்!!

அரசியல் கூடாது என்று தன் கணவரிடம் உறுதிமொழி வாங்கியிருந்தாலும், அவசியம் வந்தபோது அவரை நாட்டுக்குத் தந்து, அதன்காரணமாக அவரையே இழக்கவும் செய்தார்.  ராஜீவின் மறைவுக்குப்பின் ஒதுங்கி இருந்தாலும், அவசியமேற்பட, தானே நேரடி அரசியலுக்கு வந்து வெற்றி  பெற்றுத் தந்ததினால், பிரதமர் ஆகும் வாய்ப்பு கைமேல் கிடைத்தாலும், பெருந்தன்மையாக மறுத்து, அதைத் தகுதிவாய்ந்த ஒருவரிடம் ஒப்படைத்தது;  எதிர்க்கட்சிகள் பண்பாடு இல்லாமல் அவரைப் பற்றி இழிவாகப் பேசினாலும், பொறுமை காத்து, சொல்லாடாமல், செயலாற்றிப் பதிலளிப்பது;  வட்டம், மாவட்டங்களே தலைகால் புரியாமல் இந்நாட்களில் ஆடும்போது, நூற்றாண்டுகண்ட கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும், அவையடக்கத்தோடே இருப்பது; ஒரே பிடிப்பாக இருக்கும் மகனையும், உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறதென்று தெரிந்தாலும், தைரியமாகக் களத்தில் இறக்கி விட்டிருப்பது; பண்பான உடைகள் அணிவது; மற்றவர்களின் கைப்பாவையாக இல்லாமல், உறுதியான முடிவுகளைத் தானே எடுப்பது; இப்படி எத்தனையோ காரணங்கள் சொல்லலாம் பெண்ணாக அவரைக் குறித்த பெருமைகளாக!!

ஒருவரின் கொள்கைகளை எதிர்க்கப் பலவழிகள் இருந்தாலும், சட்டப்படி மட்டுமின்றி உள்ளத்தாலும் இந்தியராகவே மாறிவிட்ட அவரை இன்னமும் “இத்தாலிய மங்கை”, “அண்டோனியோ மைனோ”, ”பின்வாசல் வழி வந்தவர்”, “இத்தாலி மகராணி பெற்ற இளவரசன் (ராகுல்)” என்றெல்லாம் இழிவுபடுத்துவது,  இராமர் இருக்குமிடமே அயோத்தி என்று வாழ்ந்த சீதாப்பிராட்டியாரைப் போற்றும் பி.ஜே.பி. வகையறாக்கள் மட்டுமல்ல, முற்போக்குச் சிந்தனை கொண்டச் சில பெண்களும்தான் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!!

ஏனோ கற்புக்கரசியாகப் பாராட்டப்படும் கண்ணகியின் நினைவு வருகிறது!!

Happy Women's Day!!
Post Comment