Pages

ட்ரங்குப் பொட்டி - 10
சில மாதங்கள் முன், வீட்டில் டிவியில் செய்திகள் (சன் நியூஸ் இல்லை) பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தபோது, ரங்ஸ் காலேஜ் (பிரைவேட்) ஹாஸ்டலில் தங்கி படிச்சுகிட்டிருக்கும்போது, ஒரு நாள் அதிகாலை தொழுகைக்குப் போய்விட்டு, பக்கத்தில் டீ கடைக்குப் போனபோது, நின்றிருந்த ஒரு போலீஸ், இவரைக் கூப்பிட்டு,  ”எம்.ஜி.ஆர். இறந்துட்டதா தகவல் வந்திருக்குப்பா. நீ உடனே ஊருக்குக் கிளம்பிடு” என்று சொன்னதாகவும், அதனால் உடனே கிளம்பி ஊர் வந்ததாகவும், அந்தக் காவலர் மட்டும் எச்சரிக்கவில்லை என்றால் பஸ் கிடைக்காமல் தானும் ஹாஸ்டலிலேயே மாட்டிக் கொண்டிருப்பேன் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்.

கேட்டுக்கொண்டிருந்த பெரியவன், “எம்.ஜி.ஆர். இறந்தா, பஸ் ஏன் கிடைக்காது?” என்று கேட்டான். எல்லாம் விளக்கமா சொல்லி முடிச்சதும், “அது ஏன் ஒருத்தர் இறந்தா, பஸ்ஸை எரிக்கணும், கடையை உடைக்கணும்?”னு கேக்க ஆரம்பிச்சான். ஒருமாதிரியா சொல்லி விளங்க வைச்சேன். ஆனாலும், “ஏன்?ஏன்?”ன்னு கேட்டுகிட்டேயிருந்தான்.

1987ல அரசியல்ல கொஞ்சமே கொஞ்சமாவது நாகரீகச் சூழல் இருந்துது. இந்நாளைய அரசியல் நிலைமைகளைக் கவனிச்சா, இன்னிக்கு இருக்கிற வயசான/ வயசாகாத அரசியல்வாதிகள் யாரும் இறக்கவே வேண்டாம், நூறென்ன, இருநூறு வயசுகூட  வாழட்டும்னு மனசார “வாழ்த்த”த் தோணுது!!


!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

 அமீரகத்தில் இந்த மாசம்,  இந்த வருஷத்தின் பன்னிரெண்டாவது “தொட்டில் குழந்தை”யை அஜ்மான் நகரில் ஒரு பள்ளிவாசலிலிருந்து கண்டெடுத்திருக்கிறார்கள். அடுத்த நாள் கல்பா நகரில், பிறந்து 12 மணிநேரமே ஆன இன்னொன்று !! எந்த நாட்டுக் குழந்தைகள் என்று தெரியவில்லை என்றபோதிலும் உடன் தத்து எடுக்கப்படவிருக்கின்றன!!

அதே சமயம், மருத்துவமனைகளில்  IVF ட்ரீட்மெண்டில் உருவாக்கப்பட்ட கருமுட்டைகளை உறையச் செய்து (Frozen embryos - கருவா, கருமுட்டையா?)  வைத்திருப்பது சட்டப்படி அனுமதிக்கப்படாது என்று இம்மாதம் இங்கு சட்டம் நிறைவேறியதால், அக்கருக்களை அவற்றின் பெற்றோர் விரும்பினால் வேறு நாட்டிற்கு ட்ரான்ஸ்பர் செய்துகொள்ளலாம் என்று  அம்மருத்துவமனைகள் கருவைச் சேமித்து வைத்தவர்களைத் தேடியபோது, அவற்றில் சிலர்  (சொல்லாமலே) ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்களாம். ஒரு சிறு சதவிகிதத்தினர் தவிர, மற்றவர்கள், அந்தக் கரு தமக்குத் தேவையில்லையெனவும், அழித்துவிடலாம் எனவும் சொல்லிவிட்டார்களாம்!! எத்தனை அழிக்கப்பட்டவிருக்கின்றன என்று எண்ணிக்கையைச் சொல்ல மனம் வரவில்லை.


!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

 ஒரு முறை ஒரு சித்த(ஆயுர்வேத?) மருத்துவர் சொன்னதாகப் படித்தது: இயற்கை உணவுப் பொருட்கள் பெரும்பாலும், அதன் ஒரு நிலையில் உள்ள குணம், அடுத்த நிலையில் நேர்மாறாக இருக்குமாம். அதாவது, மாங்காய் குளிர்ச்சி என்றால் மாம்பழம் சூடு. தேங்காய் - குளிர்ச்சி; தேங்காயெண்ணெய் - சூடு; தே.பால் - குளிர்ச்சி; பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகியவையும் அப்படியே!! (சரியா?)

அதை வைத்து யோசித்துப் பார்த்தால், மனிதர்களும் அப்படித்தான் என்று தோன்றுகிறது. குழந்தைகள் - குளிர்ச்சி; டீனேஜ் - சூடு; நடுத்தர வயது - பெற்றோராவதால், பெற்றோரின் அருமைகள் தெரியவருவதால், கொஞ்சமாகக் குளிர்ச்சி; நாப்பது வயசு - நாய்க்குணம்!! அறுபதுகளில் - மீண்டும் குளிர்ச்சி!!

அதுக்காக, எனக்கும் சித்தர் பட்டம்லாம் தரவேண்டாம்!!

!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

போன வாரம், ஒரு நாள், ரங்க்ஸ், பிள்ளைகளோட அலுவலகம் வந்து என்னை அழைத்துச் செல்வதாகப் பிளான்!! வந்துவிட்டதாக மிஸ்ட் கால் வந்ததும், கீழே இறங்கிச் சென்று, வெயிலுக்குப் பயந்து வெளியே செல்லாமல், உள்ளிருந்தே தலையை மட்டும் நீட்டி, இடது பக்கம் பார்த்தேன் - காரைக் காணோம்; வலதுபக்கம் பார்த்தேன் - இல்லை; வர்றதுக்கு முந்தியே என்னைக் கீழே வரவைச்சிட்டாங்களேன்னு எரிச்சலோட உள்ளே தலையை இழுத்துக் கொண்டபோது ஹார்ன் சத்தம் கேட்டது. பார்த்தால் எனக்கு நேரெதிரே, என் முன்னால் ஏற்கனவே வண்டி நிக்குது!! ஹி..ஹி.. வழிஞ்சுகிட்டே காரில ஏறினா, புள்ளைங்க, “ஏம்மா, ரோடு கிராஸ் பண்றமாதிரி இடமும், வலமும் மட்டும் பாத்துட்டு போறே?”ன்னு கிண்டல்!! நமக்கென்ன பல்ப் புதுசா என்ன!!

!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!

ஒரு நாள் ஒரு ஷாப்பிங் மால் வாசல்ல ஒரு டாக்ஸி டிரைவர்க்கும் (மலையாளி) அதில் வந்த சூடான் நாட்டுப் பெண்ணிற்கும் “சில்லறை”த் தகராறு!! ஒரு சிறு கூட்டம் கூடியது. அந்தப் பெண் அழகான ஆங்கிலத்தில் கோபப்பட, டிரைவரும்  என்னவோ சொல்ல, ஒரு சிலர், டிரைவரை அமைதிகாக்கும்படி மெதுவாக அறிவுறுத்திக் கொண்டிருக்க.. நான் வேடிக்கை பார்க்க..  கூட்டத்திலிருந்து ஒரு சூடான் நாட்டு ஆண் பாய்ந்து வந்தார். டிரைவரை,  பெண்ணிடம்போய் தகராறு பண்ணுவதற்காகக் கோபித்துவிட்டு அந்த வார்த்தைகளைச் சொன்னார்!!

இம்மாதிரிச் சூழ்நிலைகளில் நம் தங்கத் தமிழ்நாட்டில் மட்டுமே சொல்லப்படும் வார்த்தைகள் என்று நினைத்துக் கொண்டிருந்தவற்றை அவரிடம் கேட்டதிலிருந்து அது ‘உலகப் புகழ்’ பெற்றது என்று நிரூபணமானது. அதாங்க ... “நீயெல்லாம் அக்கா தங்கச்சியோட பொறக்கலையா?”

 !!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!%%%%%%%%%%!!!!!!!!!!!!!!!!!
 

Post Comment

மேலே.. மேலே... மேலே....
போன வாரம், என் நெருங்கிய கல்லூரித் தோழி கலிஃபோர்னியாவிலருந்து இந்தியா போற வழியில இங்க என்னோட ரெண்டு நாள் தங்கிட்டுப் போனா!! 14 வருஷம் கழிச்சு சந்திக்கிறோம்னா சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? துபாயில இருக்கிற இன்னொரு தோழரும் (’அந்தத்’ தோழர் இல்லீங்கோ!) சேந்துகிட்ட கடைசி நாள்ல, கலகலப்புக்குப் பஞ்சமேயில்ல!!

அவளோட ரெண்டு நாள் அபுதாபி, அல்-அய்ன், துபாய்னு ஒரே ஊர்சுத்தல்தான்.  ஊர்சுத்திட்டு, படங்களோட பதிவு போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரான்னு பதிவுலகம் பல்லுமேல நாக்கைப் போட்டுக் கேட்டுடாது?  அதனால, எடுத்த படங்களோட, சுட்ட படங்களையும் வச்சு ஒரு பயணக்கட்டுரை இதோ!!

         இது அபுதாபில உள்ள பிரமாண்ட ஷேக் ஸாயத் பள்ளிவாசல்  (arabnews.com)


இதுதான் தலைநகர வாசல் (Capital Gate) - உலகின் மனிதனால் கட்டப்பட்டமுதல் சாய்ந்த கட்டிடம் (கட்டுமானம் முடியலை இன்னும்.(ameinfo.com)

அல்-அய்ன்ல  வழக்கம்போல ஜபல் ஹஃபீட் மலையேறிட்டு,  அதன் அடிவாரத்துல உள்ள கொதிநீர் ஊற்றுகளையும் பாத்துட்டு (மட்டும்தான், கொளுத்துற வெயிலுக்கு சாதா தண்ணியே கொதிக்குது!!)   மறக்காம மினி ட்ரெயின்லயும் ஒரு த்ரில் சவாரி போய்ட்டு வந்தோம். 
(படம் மகன் எடுத்தது; அதில் நிக்கிறவங்க யாருன்னு தெரியாதுங்கோ!)

நிறைய பேருக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின் இருக்கிறதே தெரியாது. இதுல போனா சூப்பரா இருக்கும். இருவர் இருக்ககூடிய இதில், மேனுவல் கண்ட்ரோல் பயன்படுத்தி, மலையடிவாரச் சரிவுகளில் அமைக்கப்பட்ட பாதையில் சறுக்கி வந்தா  ஒரு சின்ன ரோலர்-கோஸ்டர் அனுபவம் கிடைக்கும்.

அப்புறம், மிருகக் காட்சி சாலையில இரவுப் பறவைகள் காட்சிகள் பாத்துட்டு,  டைனசர் Animatrons பாத்துட்டு மறுநாள் துபாய் வலம்!! இந்த டைனசர் Animatrons-ஐ இரவு நேரத்துல பாத்தா நல்லாருக்கும். சிறுவர்களுக்கான இவற்றைப் பெரியவங்க போய்ப் பாத்துட்டு “இத நாங்க ஜுராஸிக் பார்க்லயே பாத்துட்டமே”ன்னு கமெண்டக் கூடாது!!

துபாய்ல வழக்கம்போல க்ரீக் பார்க, மால்கள்னு வலம் வந்திருப்போம்னு நீங்க நினைச்சா, ஸாரி, நாங்க “மாகி கெட்ச்-அப்” (அதாங்க, “Its' different boss!!").

 penthouses.com                                                                                                                                            beborealestate.com
முதல்ல போனது,  Palm Jumeirah - ஈச்ச மரம்போல கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு நகர். இதன் கிளைகள் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் பின்வாசலிலும் கடற்கரை!! ம்ம்.. சுனாமி வரும்னு பயமா இருக்காதா இங்க இருக்கவங்களுக்கு??


                              panoramio.com                                                                    2daydubai.com    
அப்புறம், மோனோரெயில் - ஒற்றைப் பாலத்தில் போகிறது. கடல் மேல் போகும்போது கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருக்கிறது. அட்லாண்டிஸ் ஹோட்டல் பக்கத்தில், ரெயில் வரும் திசையைப் பொறுத்து  ரெயில் பாதையில் ட்ராக் மாறுவது கவனித்துப் பார்த்தால்தான் தெரியும்.
வலது படத்துல இருக்கதுதான் பிரமாண்ட அட்லாண்டிஸ் ஹோட்டல். ட்ரெயின்ல இருந்து இறங்கி உள்ளே போய், நம்ம தகுதிக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுட்டு, திரும்பி அதே ரயிலைப் பிடிச்சு, பட்டணத்துக்கு வந்துட்டோம்.

 wikipaedia.com
அடுத்து, துபாயின் தற்போதைய பெருமையான  உலகின் உயர்ந்த கட்டிடமான “புர்ஜ் கலீஃபா”விற்குச் சென்றோம். ஏறக்குறைய 160 மாடிகள் உள்ள கட்டிடத்தின், 124வது மாடியின் பால்கனியில் நின்று நகரைக் கண்டு ரசிக்கலாம். இதில என்ன பெரிசா இருக்கப்போகுதுன்னு நினைச்சுதான் இதுவரை போகலை. தோழிக்காகப் போனது. ஆனா, ஒரு மிக நல்ல அனுபவம்.   
முதலில் இதன் லிஃப்ட்! தரைத்தளத்திலிருந்து, சரியாக ஒரே நிமிடத்தில் 124வது மாடிக்குச் சென்றுவிடுகிறது. லிஃப்ட் கருப்பு கலரில், வெளிச்சமே இல்லாமல், ஒரு நைட் லேம்ப் மாதிரியான சூழலில் இருப்பது கொஞ்சம் பயம் தருகிறது. ஆனால், லேசான காது அடைப்பு தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஏன், லிஃப்ட் போகிறதா, நிற்கிறதா என்றுகூடத்  தெரியவில்லை!! போய்க்கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும்போது நின்று, கதவு திறக்கிறது.


இந்த லிஃப்டில்தான், சில மாதங்கள்முன் பத்து பேர் ஒரு மணிநேரம்போல மாட்டிக்கொண்டார்களாம். ஒரு டார்க் ரூம் போல இருக்கும், நிக்குதா, போகுதா என்றே தெரியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் மாட்டிக்கொண்டால் பயமாத்தானே இருக்கும்? நல்லவேளை அதற்கப்புறம் அப்படி எதுவும் நடக்காதமாதிரி சரி செய்து கொண்டார்கள்!!

அதிலே  ஏறி மேலே போனா, வாவ்!! ரொம்ப அழகா இருக்கு!! அங்கிருந்து ஊரைப் பார்ப்பது ஒரு தனி அழகு!! போறவங்க, பகல்ல , வானம் தெளிவா இருக்கும்போது போனா, பார்க்க வசதியா இருக்கும்.

படங்கள் ரெண்டும் மகன் எடுத்தது; வலது படத்துல புர்ஜ் கலீஃபாவின் நிழல் தெரியுதா?

இன்னும் தெளிவாப் பார்க்கணும்னா, அங்கே டெலஸ்கோப்புகள் வச்சிருக்காங்க. அதுல விபரங்களோடு பாத்துக்கலாம்.  அங்கிருந்து பார்க்கும்போது, பாம் ஜுமைரா போலவே, கடலில் உருவாக்கத் திட்டமிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தி வேர்ல்ட்” - உலக வரைபடம் போன்ற தீவுகள் - மணல் திட்டுகள் மட்டும் தெரிகின்றன.

 gulfnews.com                                                        flashydubai.com

மேலிருந்து, அடுத்துள்ள துபாய் மாலில் நடக்கும் "Dancing Water fountain show" பார்க்கத் தவறாதீர்கள்!! அற்புதமாக இருக்கும்!! இங்கிருந்து பார்த்துவிட்டு, கீழே வந்து மறுபடியும் பார்க்கும்போது, ஒரு புதிய “பரிமாணம்” நிச்சயம் கிடைக்கும்!! இந்த நீர் நடனம்தான் உலகிலேயே மிகப் பெரியதாம். இரவு வரை அரைமணி நேரத்திற்கொருமுறை நடக்கும் இந்த நடனத்திற்கு ஒவ்வொரு முறையும் இசைக்கப்படும் வெவ்வேறு அரபி பாடல்கள் உங்களை ரசித்துத் தாளம் போட வைக்கும். இதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்க்கலாம் இந்நடனத்தை!!

சொல்ல மறந்துட்டேனே, கீழே இறங்கி, வெளியே வரும்வழியில், புர்ஜ் கலீஃபா உருவான விதம், வடிவமைக்கப்ட்டது, உயரத்தில் காற்றழுத்தம் தடுக்கும் நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டம், முக்கியப் பங்காற்றியவர்களின் விபரங்களுடன் கூடிய படங்கள் என்று ஒரு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். கட்டிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்குத்  தகவல்கள் கிடைக்கும்.

தோழியைப் பார்த்தது மட்டுமல்ல, அவள் காரணமாக, இதுவரை பார்க்காத பல இடங்களைப் பார்த்தது என்று, மொத்தத்தில் ஒரு நிறைவான ஊர்சுற்றல்!!

  டிக்கெட்டக் காமிச்சாத்தான் நம்புவாங்களாம்!!
  
 

Post Comment

உள்ளூர் உறவுகள்
"லோ, சாச்சி!! நல்லாருக்கியா?”

“அலோ!  நீயா? நாங்க நல்லாருக்கம். நீ நல்லாருக்கியா? மருமவேன், புள்ளையல்லாம் எப்பிடிருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்கோம் சாச்சி.  சாச்சா சொகமாருக்காங்களா?”

“ஆமா. அதாரு அங்கன இருமுற சத்தம் கேக்குது. சின்னவனா? ஏன் இப்பிடி இருமுறான்? குளுந்ததுகள குடிச்சானா? நாளக்கழிச்சு நம்ம மேலத்தெரு காஜா அங்க வர்றான்; அவன்ட்ட அக்கரா பொடி குடுத்துவுடுறேன், தேன்ல குழப்பி மூணுநாளைக்கி குடு புள்ளைக்கி, சரியாயிடும்.”


லோ, மாமா, நாந்தான் பேசுறேன். எல்லாரும் சொகமா?”

“ஆமாம்மா.  ஏம்மா, அங்க இந்த வருஷம் வெயில் ஜாஸ்தியாமே? மாப்பிளைக்கு இப்பவும் வெளிய சைட்ல வேலை இருக்கா? நிறைய தண்ணி, மோர் குடிக்கச்சொல்லு. பிள்ளைகளுக்கும் தலையில குளுகுளுன்னு நல்லெண்ணை தேச்சு விடும்மா. இங்கன உள்ள வெயிலே நமக்குத் தாங்க முடியலை?”

 ”சரி மாமா...”

“ஏம்மா, முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம்.  சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், அதான் முக்கியம்! ஆமா, அதுக்கப்புறம் ஒண்ணும் வாங்கலியா? கட்டுசெட்டா இருந்து சேத்தாத்தானேம்மா பின்னாடி ஒதவும்? சுதாரிப்பா இருந்துக்கம்மா? ”

லோ, மைனி நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கோம்; பிள்ளைகளுக்குப் பரிட்சைதானே இப்ப?”

“ஆமா மைனி; மைனி, இப்பத்தான் ஞாபகம் வந்துது, ரேஷன் கார்டுல சின்னவன் பேரைச் சேக்கலைன்னு நினைக்கிறேன். அண்ணன்ட சொல்லி கொஞ்சம் பாத்து சேத்துடச் சொல்லமுடியுமா மைனி? இப்ப சென்ஸஸ் வேற எடுக்குறாங்களே, அதுக்கும் வேணும்ல, அதான்..  அண்ணனுக்குக் கஷ்டம் இல்லியே?”

“அதெல்லாம் நீ கவலைப்படாதே. இதில என்ன பெரிய கஷ்டம்? நான் பாத்து  எல்லாம் முடிச்சுட்டு தகவல் சொல்றேன். நீ சின்னவன் முழுப்பேரும், பிறந்த தேதியும் மெஸேஜ் பண்ணு போதும். நேத்துதான் உனக்கும் சேத்து மாசி பொடிச்சேன். யார் வர்றான்னு பாத்து குடுத்து விடுறேன் என்னா?”

லோ, அண்ணே,  வீட்டில எல்லாரும் சுகம்தானே?”

“எல்லாரும் சுகம். அங்க எப்படி? ஆமா, அடுத்த மாசம் லீவாச்சே பிள்ளைகளுக்கு? ஊருக்கு வரலியா? அப்புறம், சொல்ல மறந்துட்டேன், எல்.ஐ.ஸி. பாலிஸி ரெண்டுத்துக்கும் பணம் கட்டியாச்சு. வீட்டுத் தீர்வையும் கட்டிட்டேன். நீ வரும்போது பில்லை மறக்காம வாங்கிக்கோமா!”

“அண்ணே...”

“நீ என்ன சொல்லுவன்னு தெரியும். தாங்க்ஸெல்லாம் சொல்ற அளவுக்கு உன் வீட்டுக்காரரோட எனக்கு மேலோட்டமான ஃப்ரண்ட்ஷிப் இல்லன்னு உனக்கும் நான் எத்தினிவாட்டி சொல்றது?”

லோ சின்னாப்பா, நாந்தான். நல்லாருக்கியளா?”

“அட நீயா? நல்லாருக்கம் மவளே. அங்கன எல்லாரும் சவுக்கியந்தானே? உன் வாப்பா, உம்மாட்ட நான் நெதம் பேசிட்டுதான் இருக்கேன். நீ ஊருக்கு வர்றியாமே? நம்ம ஃபைஸல் இந்த வருஷம் பி.ஈ. முடிச்சிட்டான் தெரியுமா? ”

“ஆமா சின்னாப்பா. என்ன செய்யப் போறானாம்? இந்தப் பக்கம் வர்ற மாதிரி ஐடியா இருக்காமா?”

“இல்லம்மா. அங்கல்லாந்தான் இப்ப நெலம சரியில்லன்னு சொல்றாங்களே. இருக்கிறவங்க வேலைகளுக்கே பிரச்னைன்னு சொல்றாங்க. அதில நீங்க வேற ஏம்மா இவனுக்கு விஸா, வேலைன்னு அலையணும்? இங்கயே எதாவது பாத்துக்கடான்னு சொல்லிட்டேன். சரிதானே? ஆமா, சின்னவனுக்குப் புடிக்கும்னு கோதுமைப் பணியம் கொடுத்துவுட்டேனே, விரும்பிச் சாப்பிட்டானா?”

ருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து,  பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன  அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!
  
  

Post Comment

தானாகவே வலையில் விழும் மீன்
  
மாலை மணிக்கு ஏழரை, சே.. மணி ஏழரை.  கிச்சனில் வேலைகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கும் நேரம்.  கிச்சன் கேபினட்டிலாவது நிறைய பேர் கூட்டாகச் சேர்ந்து இருப்பார்கள். அங்கு வேலை ஒன்றும் நடக்காது என்பது வேறு விஷயம்!  இந்தக் கிச்சனில் தன்னந்தனியாக ஒருத்தியின் ராஜ்யம்தான்!!

கிரைண்டர், மிக்ஸி, வாஷிங் மிஷின், மைக்ரோ ஓவன், எக்ஸாஸ்ட் ஃபேன் ஆகியவ்ற்றோடு தாளிக்கும் ஓசையும், குக்கர் விசிலும் கூட என்று ஒரு ஆலையிலிருந்து வெளிப்படும் சத்தத்திற்குச் சற்றும் குறைவில்லாமல் இந்தக் கிச்சனிலும் ‘ஒலி மாசு’!!   இவ்வளவு சத்தங்களுக்கு நடுவில் அமிழ்ந்து கிடக்கும்போது வெளியே என்ன நடந்தாலும் தெரியாது!! அதிலே, ஹாலில், ரூமில் இருப்பவர்கள் ஃபோன் பேசும்போது இந்தச் சத்தங்களால் தடை ஏற்படக்கூடாதென்று அவ்வப்போது கிச்சன் கதவும் சாத்தப்படும்!! அப்ப என்னவோ தனியா ராக்கெட்ல பறந்துகிட்டிருக்காப்ல ஒரு உணர்வு கூட வரும்!!

இந்த வேலைகளுக்கும், சத்தங்களுக்கும்  நடுவிலும், ”சின்னவனே ஹோம்வொர்க் எழுதியாச்சா?”, ”பெரியவனே, துணி மடிச்சு வச்சியா?”, “என்னாங்க, பால் வாங்கச் சொன்னேனே?” என்று அதட்டல்களும் எழுப்பி தன் ‘இருப்பை’ உணர்த்திக் கொள்ளவும் மறப்பதில்லை. பதில் சொல்லவோ, அல்லது ஏதாவது கேட்க வேண்டுமென்றாலோ அங்கிருந்தே சொல்லக்கூடாது, இவ்வளவு சத்தத்தில் கேக்காது (காதுக்கு ஏன் ‘இனிஷியல்’? - கவித.. கவித.. ); என்ன சொல்லணும்னாலும் இங்கே கிச்சனுக்கு வந்து சொல்லணுன்னு சட்டமே போட்டாலும் ’பெரியவர்கள்’ மட்டுமே மீறுவார்கள்!!

இன்றும் மீறப்பட்டது!! வீட்டுத் தலைவர் ஹாலில் மடிக்கணிணியை மேய்ந்துகொண்டே என்னவோ சொல்ல, ஏதோ பேசுகிறார் என்று தெரிந்தது, ஆனால் முழுசாக் கேட்கவில்லை; இங்கிருந்தே கத்தல், “எத்தனை தரம் சொல்லியாச்சு நான் கிச்சன்ல நிக்கும்போது அங்கருந்து பேசாதீங்கன்னு?”

இதற்குள் அங்கே அப்பா, பிள்ளைகளிடம், “டேய், உங்கம்மாவுக்கு நெசமாவே காது கேக்கலியான்னு இப்ப டெஸ்ட் பண்ணுவோமா?”ன்னு கேட்டுட்டு மறுபடியும் கிச்சனுக்கு கேள்விக்கணை அனுப்புறார்.

இதற்குள் கிச்சனில், ‘இந்த மனுசன் என்னிக்கு சொன்னாக் கேட்டிருக்காரு; என்னத்தையாவது சொல்லிட்டு, நான் கேக்கலன்னு சொல்லிட்டு சும்மா இருக்க,  அப்புறம் இவர் ‘நான் அன்னிக்கே உங்கிட்டச் சொல்லிட்டேனேனேனு’ பிளேட்டைத் திருப்பி போடறது மட்டுமில்லாம, பசங்களையும் “சொன்னேன்லடா?”ன்னு சாட்சிக்குக் கூப்பிட, அவனுங்களும், ‘மரபு’ப்படி, எனக்கு கேட்டுச்சா இல்லியான்னு யோசிக்காம, அப்பா சொன்னதை மட்டுமே கணக்கில் எடுத்துகிட்டு “ஆமாஞ்சாமி’ போடுவானுங்க!! இப்படி எத்தனை முறை பட்டு அனுபவிச்சாச்சுன்னு நொந்துகிட்டே, கிச்சன் வாசல்ல வந்து நிக்கவும், கேள்வி வரவும் சரியாயிருக்கு, “அது.. அந்த ஐநூறு திர்ஹம் இருக்குல்ல.....”

கிச்சனை விட்டு வெளியே வந்ததால, கேள்வி தெளிவா காதுல விழுந்ததால, “ஆமா, அந்த ஐநூறு திர்ஹத்துக்கு என்ன இப்போ?”ன்னு பதில் சொல்ல..... “டேய், பாத்துக்கோங்கடா!! இவ்வளவு நேரம் நான் கரடியா கத்துனது கேக்கலியாம் உங்கம்மாவுக்கு; ஆனா, பணங்காசைப் பத்தி பேசுனா மட்டும் கரெக்டா ஸ்டேஷன் பிடிக்குது பாருங்கடா”

அவ்வ்வ்வ்வ்.... எப்பவுமே நானாத்தான் மாட்டிக்கிறேன்!! ஏங்க.. ஏன்?
  
   

Post Comment

தோள் கொடுக்கும் தோழன்
என் பெற்றோருக்கு இந்த வருடத்துடன் திருமணமாகி  நாற்பது வருடம் நிறைகிறது. சில தினங்களுக்கு முன் இது ஞாபகம் வந்தபோது, 40 வருடங்கள் என்ற காலக்கணக்கு கொஞ்சம் பிரமிப்பூட்டியது.

அவர்களை அருகிருந்து பார்த்தவள் என்ற வகையில் யோசித்துப் பார்த்தால், எல்லா குடும்பங்களையும் போலவே, கருத்து வேறுபாடே இல்லாதவர்கள் என்று சொல்லமுடியாது. கல்யாணமான ஐந்தாறு வருடங்களிலிருந்து, கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் என் தந்தை வளைகுடா நாடுகளில் வேலை செய்ய, ஊரில் இருந்து குடும்பத்தைக் கவனித்தது என் தாய்.  இருவருக்குமே உரிய பொறுப்புகளை எந்தக் குறைவுமில்லாமல் செம்மையாக நிறைவு செய்தார்கள். எல்லா மக்களும் தத்தம் கூட்டினில் இருக்க,  ரிடையர்மெண்ட் வயதில் இப்போது தனிக்குடித்தனம் இருக்கிறார்கள்.

முப்பது வருடங்கள் கடமைகள் நிமித்தம் பிரிந்திருந்தாலும், அவர்களிடையே உள்ள புரிதல்கள் வியக்க வைக்கும். துல்லியமாக அடுத்தவர் நினைப்பதையே (அல்லது ஏற்றுக்கொள்ள வைக்கமுடிவதையே) தன் முடிவாகவும் எடுத்து செயலாற்றியிருகிறார்கள் என்பதையே என் திருமண வாழ்விற்குப் பிறகே புரிந்துகொள்ள முடிந்தது என்னால்!!

சென்ற வருடம், என் கடைசித் தங்கை நிறைமாசமாக இருக்கும்போது, என் வாப்பா பணி நிமித்தம் வேறு ஊரில் இருக்க, பிரசவ சமயத்தில் நிச்சயம் நீங்கள் வந்துவிடவேண்டும் என்று உம்மா சொல்லியிருந்தார். என் தங்கையோ, “உன் வாப்பா, தங்கைகள், தம்பிகள் என்று உன் குடும்பம் முழுவதும் உன் சப்போர்ட்டுக்கு இங்கே இருக்கத்தானே செய்கிறார்கள். அப்புறம் ஏன் வாப்பாவையும் தொந்தரவு பண்ற? யார் வந்தாலும் பிள்ளை பெறப்போவது நாந்தானே?” என்று சொல்ல, அதுக்கு என் அம்மா, “நீதான் பிள்ளை பெறப்போறன்னா, உன் புருஷனை அபுதாபியிலருந்து எதுக்கு வரச்சொன்ன? அதுவும் உன்னைப் பெத்தவ நான் உன் சப்போர்ட்டுக்கு இருக்கும்போதே?” என்று சொன்னாராம்.

உண்மைதானே? மகிழ்வான சமயங்களைவிட அதிகமாக, பிரச்னைகள், உடல்நலக்குறைவுகள் என்று வரும்போது ஒரு பெண் சாய்ந்துகொள்ளத் தேடுவது தன் கணவனின் தோளையே!! கணவனே நட்பாக அமையப் பெற்ற யாருக்கும் இதில் மாற்றுக்கருத்து இருக்காது. அவ்வாறான ஒரு கணவனும் தேடுவது மனைவியின் தோளையே!! இதில் ஒப்புக்கொள்ள தயக்கம் இருக்காது.

இது பெண்ணீயம் (புரியாமல்) பேசுபவர்களுக்கு இகழ்வாகத் தோன்றலாம். உடலால் மட்டுமல்லாமல், உணர்வுகளாலும் தனக்கென்று சொந்தமானவரின் தோளில், அதேபோலவே அவருக்குச் சொந்தமான மனைவி  சாய்வதில், ஆறுதல் தேடுவதில் தவறென்ன? அதுபோல், குழப்பமான சந்தர்ப்பங்களில், முடிவுகளை எடுக்கவும், புரிந்துணர்வுள்ள கணவன் தன் மனைவியை அல்லது மனைவி தன் கணவனை நாடுவார்.  அவருக்கும், தன் குடும்பத்திற்கும் எது நல்லது என்பதைப் பெண்ணின் பெற்றோர்போலவே கணவரும் அறிவாரே!! தன்  குடும்பத்தை  எல்லாவற்றிற்கும் மேலாகக் கருதும் பல பெண்கள், இதையும் இழிவாகக் கருதுவதில்லை.

வளைகுடா நாடுகளில் வேலைக்காக வந்து தனியாக இருக்கும் ஆண்களும் தற்காலங்களில் ‘கூழோ, கஞ்சியோ சேர்ந்தே இருப்போம்’ என்று வேலையை விட்டுவிட்டு இந்தியா செல்வதும் துன்பமான தருணங்களில்  துணையின் ஆதரவு வேண்டிதானே!! தமக்கென  ஒருவர் இருக்கிறார் என்பதே மலையளவு துன்பமானாலும் கடந்துவர மனதைரியம் கொடுக்கும்.

அதுபோலவே, இங்கே குடும்ப சகிதமாக இருப்பவர்களும் குழந்தைகள் பத்தாம் வகுப்பு வரும்போது, தரமான கல்வி வேண்டி மனைவி, குழந்தைகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவைத்து வந்தனர்; ஆனால்,  தற்போது பெரும்பாலும் பிள்ளைகளை ஹாஸ்டலில் விட்டுவிட்டு பெற்றோர் இங்கு சேர்ந்தே இருக்கின்றனர் இங்கு. இதற்குக் காரணம், இந்தச் சமயத்தில் தம்பதிகளிடையே ஒரு நட்பு ரீதியான நெருக்கம் வந்திருக்கும். அதை இழக்க மனமின்றி, நட்பைப் பிரிய மனமின்றியே இவ்வாறு முடிவெடுக்க நேர்கிறது. என் மகன் விஷயத்தில் நானும் இப்போதே குழம்ப ஆரம்பித்துவிட்டேன், அவரைப் பிரிந்து எப்படிச் செல்வது என்று!!

படிக்கும் காலத்தில், என் தந்தை ஊருக்கு வந்தால், வீடு உறவினர்கள், நண்பர்கள் வருகையால் திருமண வீடு போல களை கட்டி பரபரப்பாக இருக்கும். அதனால், அவ்வாறு வரும் சமயம் எனக்குப் பரீட்சைகள் ஏதுமிருந்தால், ”வாப்பா அடுத்த மாசம் ஊருக்கு வரக்கூடாதா?” என்று நினைத்து அதை என் உம்மாவிடமும் அலுத்துச் சொன்னதுண்டு, அவர்களின் உணர்வுகளை அறியாமல். அவர்களுக்குத் தனிமை கிட்டாததை நினைத்துப் பார்க்காமல், சுயநலமாக இருந்ததை இப்போ நினைத்துப் பார்த்தால் வருத்தமாக இருக்கிறது.  அப்போவெல்லாம் இப்படி மெல்லிய உணர்வுகளையும் விவரிக்கும் கதைகளோ, புத்தகங்களோ (கிடைப்பது) இல்லையே?

இப்போது கிடைத்திருக்கும் தனிக்குடித்தன வாய்ப்பு அவர்களுக்கு இனிக்கவில்லை; பேரக்குழந்தைகளோடு கொஞ்சிக் கழிக்க வேண்டிய பொழுதாக அமைய வேண்டியது, தனிமையோடு போராடிக் கழிக்க வேண்டியுள்ளதென வருந்துகின்றனர். இப்பொழுதும் சுயநலத்தோடு, என் குடும்ப வாழ்வைப் பெரிதாக எண்ணி நான் இங்கே!! ஒரு வகையான கையாலாகாத்தனமான வெறுமை சூழ்கிறது இதை நினைத்தால். எனினும், அவர்கள் இளவயதில் பிரிந்திருந்ததலின் சங்கடங்களை அனுபவித்ததால்,  என்னையும் புரிந்துகொள்வார்கள் என்ற சமாதானத்தை எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன்.

அப்புறம், இந்த வருடத் திருமண நாளை எப்படிக் கொண்டாடினாங்களாம்னு கேக்குறீங்களா? மருத்துவமனையில் ‘எக்ஸிக்யூட்டிவ் ஹெல்த் செக்-அப்’ செஞ்சு!! அதுவும் அவசியம்தானே, என்னச் சொல்றீங்க?

Post Comment

முதலும், இரண்டாவதும்


 prufrock.com

முதலாவதில்:

“என்னங்க, “You and your baby"ன்னு ஒரு புக் இருக்கு; பிரக்னன்ஸி, குழந்தை வளர்ப்பு பத்திலாம் நல்லா டீடெய்லா சொல்லிருக்காங்களாம். சைக்காலாஜிக்கல் அப்ரோச்ல இருக்காம். எங்க கிடைக்கும்னு தேடி வாங்கித் தந்துடுங்க, சரியா?”

“ஏம்மா, இதுக்கெல்லாமா புக்? நம்மள பெத்தவங்க புக் படிச்சா வளத்தாங்க?”

“அதெல்லாம் அந்தக்காலம்; இப்ப அதெல்லாம் சரி வராது. சொன்னதைச் செய்வீங்களா பேசாம?”

இரண்டாவதில்:

“ஏம்மா, போன தடவை அந்த குழந்தை வளர்ப்பு பத்தி ஒரு புக் வாங்கினோமே, அத வேணுன்னா எடுத்து வாசியேன்.”

“ஆமா, இருக்க வேலைக்கு நடுவுல அந்த புக்கைத் தேடிக் கண்டுபுடிக்கத்தான் நேரம்?!! அதெல்லாம் ஒண்ணும் வேணாம்.”


முதலாவதில்:

“என்ன நீங்க? குழந்தையோட டம்ளர், தட்டு தொடாதீங்கன்னு எத்தன தடவ சொல்லிருக்கேன்? இப்ப மறுபடியும் அத ஸ்டெரிலைஸ் பண்ணனும்!!”

இரண்டாவதில்:

 “ஏம்மா, இது புள்ளயோட டம்ளரில்லியே? எடுக்கலாமா?”

“என்னது, புள்ளயோட டம்ளரா? அவனுக்கெதுக்கு தனி டம்ளர்? எல்லாருக்கும் எல்லாமும்தான்.”

முதலாவதில்:

“என் செல்லம்ல, கண்ணுல்ல! இந்த ஒரு வாய் வாங்கிக்கோம்மா. தங்கம்ல. சாப்பிடலன்னா எப்படி ஸ்ட்ராங்க்காகுறது? பாத்தியா, உனக்குப் பிடிச்ச சிக்கன் பிரியாணி, சிக்கன் ஃபிரை. ஓடாதடா, எவ்ளோ நேரமா உன் பின்னாடியே ஓடிகிட்டிருக்கேன் பாரு!”

இரண்டாவதில்:

“டேய்! இந்தா இங்க உக்காரு. சாப்பிட்டு முடியிற வரை கீழே இறங்கக்கூடாது.  தயிர் சாதத்தைக் கடகடன்னு அஞ்சு நிமிஷத்துல முடிச்சிடணும். தெரியுதா?”


முதலாவதில்:

“ஏம்மா ரெண்டரை வயசுப்பிள்ளைக்கு ரைம்ஸும், ஏபிசிடியெல்லாம் தேவையா? இந்த வயசுல விளையாடட்டுமே?”

“நானும் விளையாட்டாத்தானே சொல்லிக் கொடுக்கறேன்; அவனும் எவ்வளவு ஆர்வமாக் கத்துக்கிறான் பாருங்க?”

இரண்டாவதில்:

“ம்மா, உன்ன டீச்சர் ஃபோன் பண்ணச் சொன்னாங்க.”

“எதுக்காம்?”

“தெரியலை. டீச்சர் எனக்கு ஏன் இங்லீஷ் பேச வரமாட்டேங்குதுன்னு கேட்டாங்கம்மா.”

“ம்ம்.. அதுக்குத்தானே ஸ்கூலுக்கு அனுப்புறேன்; எல்லாத்தையும் நானே சொல்லிக்கொடுத்துட்டா அப்புறம் எதுக்கு ஸ்கூல்?”

முதலாவதில்:
 
“ஹுஸைன்! நாளைக்கு டெஸ்டுக்குப் படிச்சிட்டியா? இந்தா இதுல ஒரு மாடல் கொஸ்டின் பேப்பர் எழுதிருக்கேன் பாரு.  அதுல ஆன்ஸர் எழுது. எக்ஸாமுக்குப் பிராக்டீஸ் வேணும்ல?”

இரண்டாவதில்:

“ம்மா! நாளைக்கு இங்லீஷ் டெஸ்ட்.”

“சரி, சரி. போய்ப் படி.”

“படிச்சுட்டேன்; கொஸ்டீன் கேக்கிறியா?”

“படிச்சாச்சுல்ல; போதும். கொண்டு உள்ள வையி. ”

முதலாவதில்:

"ஏங்க அந்த கிளப்ல ஸ்விம்மிங் கிளாஸ் பத்தி கேட்டுட்டு வந்தீங்களா? ஸ்கூல்ல ஒரு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடியும் கிடையாது. நீங்க சொன்னீங்கன்னு பிள்ளையச் சேத்தேன் பாருங்க, என்னைச் சொல்லணும்.”

இரண்டாவதில்:

“ பக்கத்துல ஒரு கராத்தே கிளாஸ் நடக்குதாம். சின்னவனை அங்க  சேப்போமாம்மா?”

“ம்.. அவனை,  அங்க கூட்டிட்டுப் போறதும், வர்றதும் உங்கப் பொறுப்பு; சரின்னா சேத்து விடுங்க. எனக்கென்ன வந்துது?”


Post Comment