Pages

இத்தோட முடிச்சுக்குவோம்
நானும் கண்காட்சிக்கு போனேன்!
சக்தி உலகின் மின்னும் நட்சத்திரங்கள்
மேலேயுள்ள பதிவுகளின் தொடர்ச்சியாக இந்த இறுதிப் பகுதி.

துவரை பார்த்ததெல்லாம் - CSP, bio-mass, Geothermal - இப்படி எல்லாமே பெரிய அளவில் அரசால் அல்லது பெரிய நிறுவனங்களால் மட்டுமே செய்யக்கூடியவை. தனிநபர்களாக நாம் என்னென்ன செய்ய முடியும் என்றால், குப்பைகளைத் தரம் பிரித்தல், மறுசுழற்சி ஆகியவைதான் ஞாபகம் வரும்.இதுதவிர, வசதி மற்றும் விருப்பப்பட்டவர்கள், தம் வீட்டையே ”பேணுதலான வீடு” - "Sustainable home" - ஆக மாற்றுவதுதான் பூமிக்குச் செய்யும் பேருபகாரம். அதற்காகச் செய்யவேண்டியவற்றில் சில:

* அலுவலகங்கள் மற்றும் வீட்டைக் கட்டும்போதே, வீட்டினுள்ளே வரும் வெளிச்சம் மற்றும் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் முறையில் வீட்டை வடிவமைப்பது; அதனால் மின்சாரச் செலவை வெகுவாகக் குறைக்கலாம்.


* கூரைகளில் சோலார் பேனல்கள் வைப்பதன் மூலமா, நமக்குத் தேவையான மின்சாரத்தை இயற்கைக்கு ஊறு இல்லாத மின்சாரம் தயாரித்தல்;
 

* தண்ணீர் சூடாக்க சோலார் ஹீட்டர்;

* வீட்டில் வெளியேற்றப்படும் கழிவு நீரை,  மறுசுழற்சி செய்து, தோட்டம், டாய்லெட்களில் பயன்படுத்துதல்.

அமீரகத்தில், இனி கட்டப்படும் ஒவ்வொரு கட்டிடமும், இதுபோன்று "sustainable"-ஆக இருக்கவேண்டுமென்று குறைந்தபட்ச விதிகள் (Estidama) ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

னி, சில குறிப்பிடத்தக்க-சுவாரஸ்யமான கண்டுபிடிப்புகள் குறித்துப் பார்ப்போம்.

தண்ணீர் சுத்திகரிப்பான்:


என்னதுன்னு புரியலையா... Water filter!! இப்ப புரியுதா? 
 இதிலே என்ன விசேஷம்னா, கரண்ட் தேவையில்லை என்பதுதான்.  இதில், கலங்கிய நீரை விட்டு, அத்தோடு கடல் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட ”coagulant" வகை பொடியைக் கலந்து அந்தத் தொட்டியை, கொடுக்கப்பட்டுள்ள கைப்பிடியின் உதவி கொண்டு நன்கு சுழற்றினால், நல்ல நீர் கிடைக்கும்.  இந்த ஃபில்டர், குறிப்பா, சுத்தமான குடிநீர் கிடைக்காத எமெர்ஜென்ஸி காலங்களில் மின்சாரமும் இல்லாத சமயத்தில் பயன்படும்னு சொல்றாங்க. 

                                                 
இதேபோல, சூரிய ஒளியால் செயல்படும் தண்ணீர் சுத்திகரிப்பானும் இருக்கிறது.  இது, கடல்நீரைக் குடிநீராக்கும் முறையில் (desalination) முறையில் செயல்படுவதால், இதற்கு எந்தப் பொடியும் சேர்க்கத் தேவையில்லை. பூகம்பம், வெள்ளம் போன்ற சமயங்களில் மிகவும் பயன்படும்.

சென்ற மாதம், பேத்திக்கு பிரசவம் பார்க்க அமீரகம் வந்திருந்த பாட்டி ஒருவரைச் சந்தித்தேன். அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அந்தக் காலங்களில், பிரசவித்தவர்களுக்கு கொடுப்பதற்கான குடிநீரை மண்பானையில் வைத்து, அதில் சுட்ட செங்கலைப் போட்டு வைப்பார்களாம்.

கலங்கிய நீரில் தேத்தாங்கொட்டையைப் போட்டு வைத்தால், நீர் தெளிவடைந்து சுத்தமாகும் என்று படித்த ஞாபகமும் வருகிறது.

கழிவு நீர் சுத்திகரிப்பான்: (Sewerage treatment)

 
  


5 பேர், 10 பேர், 20 பேர் உள்ள வீடுகளுக்கு ஏற்றவாறு சிறிய அளவுகளில் உள்ளது. மின்சாரம் தேவையில்லை. நுண்ணுரிகளைப் பயன்படுத்தி, இயற்கையான முறையில் செயல்படுவதால், எதுவும் சேர்க்க, எடுக்க தேவையில்லை. 

OLED Light Panels:

கவனத்தை ஈர்த்த இன்னொரு பொருள், "OLED panels" எனப்படும் விளக்குகள். பல்புகள், ட்யூப் லைட்டுகள் இவையெல்லாம் தவிர்த்து, இப்போது அதிக மின்சார சேமிப்பிற்காக ஃப்ளூரஸண்ட் பல்புகள் பயன்படுத்துகிறோம்.  என்றாலும், இதன் ஆயுட்காலம் முடிந்ததும் இவற்றிலுள்ள பாதரசத்தினால் சுற்றுச்சூழலுக்கு உள்ள ஆபத்துகள் குறித்து பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. 


 

இதைத் தவிர்க்க வந்திருப்பதுதான் OLED panels. பேருக்கேற்றபடி, இவை “பேனல்கள்” போலத்தான் இருக்கும்; இதன் விகுதி (thickness) 2.3 மில்லிமீட்டர்தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.  எடை, வெறும் 107 கிராம்தான்!! இதிலுள்ள வாயுக்களால் வெளிச்சம் கிடைக்கிறதென்பதால், மிக நீஈஈண்ட ஆயுட்காலம்.  மின்சார சேமிப்பும் மிக அதிகம். சுவற்றில் பதிக்கும் வசதியால், வீட்டின் அழகும் கூடும்.

வழக்கமாக, விளக்குகளின் ஒளியில் நிறங்கள் வித்தியாசமாத் தெரியும். (கடையில் பார்த்த மயில் கழுத்து சேலை, வீட்டிலே வேற கலரில் இருக்குமே) ஆனால், இதில் அப்படி இல்லையாம். மெர்க்குரி கிடையாதென்பதால், சுற்றுச்சூழலுக்கும் அச்சுறுத்தலில்லை.

வைதவிர, எதிர்காலத்தில் (2050) வரவிருக்கும் புதிய கண்டுபிடிப்புகள் என்று பார்த்தவைதான் வியப்புக்குரியவையாக இருந்தன. நம்மைத் தயார்ப்படுத்திக்குவோம்!!

1. எதிர்காலத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச, லேசர் கதிர்களால் மழைபெய்ய வைக்கப்படும்.
பம்புசெட், வாய்க்கா வரப்பு எல்லாம் கிடையாது.  கூடவே, வாய்க்கா வரப்பு தகராறும் காணாமப் போயிடுமா?

2. வாகனங்கள் ஓடுவதற்கு, ஹைட்ரஜன் வாயு - மின்சாரம் - சூரிய சக்தி ஆகியவை தேவைப்படும்.

3.  மனிதர்களுக்குத் தேவையான புரதச் சத்துக்களுக்காக, “சூப்பர் பீன்ஸ்” எனப்படும் “காய்கறி” பிரத்தியேகமாக வடிவமைக்கப்படும்.

4. ”நினைப்பது நடக்கும்”!! - நீங்கள் நினைத்தாலே அதைச் செயல்படுத்தும் கணிணிகள் கிடைக்கும். (ஹூம், இப்பவே கிடைச்சா, தினம் ரெண்டு பதிவு எழுதலாம்!!)

5.   கேட்டால் கிடைக்கும்!!


                                       
 
நாம் கேட்பதை உடனே ”பிரிண்ட்” செய்து தரும் 3D printer  உண்டு. என்னாது, பிரிண்டரைப் போய் பெரூசாச் சொல்லிகிட்டுன்னு நினைக்கிறீங்கதானே? இந்த பிரிண்டரில் வருவது காகிதம் அல்ல!! வீடும், உணவும், எலெக்ட்ரானிக் பொருட்களும்!! ஆமாம், நீங்க உங்க தேவைகளைச் சொன்னா அதைச் சரிவிகிதத்தில் கலந்து உணவாகவோ, வீடாகவோ, மொபைல் ஃபோனாகவோ ரெடிமேடாகப் பிரிண்ட் எடுத்துத் தந்துவிடும்!! என்னாங்க, “லூஸு”  லைலாவைப் பாக்கிற மாதிரி பாக்குறீங்க? நானே திகைச்சுப் போய்த்தான் நின்னேன்.

6. நலந்தானா!! உங்களின் விரலை மட்டும் வைத்துப் பரிசோதித்து, (ரத்தம் எடுக்காமலேயே) அதன் மூலம் உங்கள் டி.என்.ஏ. வரை ஆய்ந்து, முழு உடல்நல குறைபாடுகளைக் கண்டறிந்து, அதற்கேற்ற மருந்துகளைக் கலந்து தரும் “தானியங்கி மருந்தகம்” இருக்கும். இதற்குத் தேவையான சக்தி, சூரிய ஒளிமூலமோ, சுற்றுப்புறத்திலிருக்கும் ரேடியோ அலைகள் மூலமோ எடுத்துக்கொள்ளப்படும்.

 7.  எந்திரன் “தேனீ”:

சமீபத்தில் ஒரு பத்திரிகையில், தேனீக்கள் அருகி வருவதைப் பற்றி எழுதிருந்தாங்க.  ரசாயன உரங்கள் ஒரு காரணம் என்றால், மொபைல் ஃபோன் மற்றும் அதன் டவர்கள்தான் மிக முக்கியக் காரணமாம். இவற்றினால் வரும் மின் அலைகளினால் தேனீக்கள், தம் தேனடைக்குச் செல்ல வழி தெரியாமல்
குழம்பிப் போய்விடுகின்றனவாம். புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சொன்னாராம், “தேனீக்கள் இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை இல்லை;  மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் உணவு இல்லை; உணவு இல்லையென்றால் மனிதன் உட்பட்ட உயிரினங்களும் அடுத்த நான்கே வருடங்களில் இல்லாமல் போய்விடும்”!!


 

இதைப் படித்துக் கவலைப்பட்டேன். அடுத்த வாரமே “ரோபோ தேனீ”யைப் பார்க்க நேர்ந்தது. அதானே, விஞ்ஞானம் இருக்கும்போது, கவலை ஏன்! இந்தத் தேனீ, பெரும் பண்ணைகளில் வேலையாட்கள் பற்றாக்குறைக்குக் கைகொடுக்கும்.  மண்ணில் தண்ணீர் போதுமா, செடிகளில் வாட்டம் ஏன், என்ன சத்து குறைவு என்று பரிசோதித்து, அதற்கேற்ற உரங்களைத் தெளிப்பது, பூச்சிபொட்டுகளை அழிப்பது என்று எல்லாமே பார்த்துக் கொள்ளுமாம்.

8.  விண் பறவை:

 

எதிர்காலத்தில், விமானப் பயணங்களின் நேரம், எரிபொருள் பயன்பாடு
இரண்டுமே வெகுவாகக் குறைக்கப்படும்படியான திட்டமிட்ட விமான வடிவமைப்புகள் இருக்கும். தற்கால விமானங்களில் பார்த்திருப்பீங்க, விமானத்தின் உடலும், இறக்கைகளும் தனித்தனியாகத் தெரியும். இதில் குறிப்பிடத்தக்க வடிவமைப்பு முறை மாற்றம் செய்யும்போது, மேலே குறிப்பிட்ட இரண்டு எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். அதாவது, உடலோடு சேர்ந்த இறக்கைகள் இருந்தால், வேகம் அதிகரிக்க முடியும். 


தற்கால பயணிகள் விமானம்
போர் விமானம்
கன்கார்ட் விமானம்

எல்லா நாடுகளும் பயன்படுத்தும் விமானப்படை விமானங்களும், அதிவேக பயணிகள் விமானச் சேவை செய்து, தற்போது ஓய்வு கொடுக்கப்பட்டுள்ள “கன்கார்ட்” வகை விமானங்களும்,  இந்த வடிவமைப்பைக் கொண்டவையே. 


    

மேலும், பறவைகள் கூட்டமாக இடம்பெயரும்போது V வடிவில் செல்வதைப் பார்த்திருப்போம்.  காற்றின் தடையை எதிர்த்துச் செல்லவே இம்முறையில் பறக்கின்றன. இதேபோல, விமானங்கள் கூட்டாகச் சேர்ந்து பறந்தால்,  காற்றின் எதிர்ப்பு குறையும். இதன்மூலமும் எரிபொருள் சிக்கனம் செய்யலாம்.

பல விமானங்கள் சேர்ந்து ஒண்ணா ஒரே நேரத்தில பறக்கணும்னா, “துபாய், லண்டன், ஃப்ரான்ஸ், அம்மேரிக்கா, கன்னடா”ன்னு கூவிக்கூவி அழைச்சு டிக்கட் போட்டு, வண்டி - ஐ மீன், ஃப்ளைட்கள் நிரம்புன பிறகுதான் கிளம்புவாங்களோ? இருக்கும்.

இது தெரிஞ்சா, இனி அரசியல்வாதிகள், “கார்கள்” அணிவகுத்து வருவதுபோல, இனி “விமானங்கள்” அணிவகுக்க வருவாங்களோ!!


Post Comment

குழந்தையும் தெய்வமும்
ரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பரபரப்பும், பதட்டமும் நிலவிக்கொண்டிருந்தது. அவரின் இரண்டு-இரண்டரை வயது மகளின் வளையலைக் காணவில்லையாம். ஒரு பவுன்!! குழந்தையிடம் கேட்டால்,  “ஆனி ஆன்த்தி” என்றே திரும்பத் திரும்பக் கூறினாள்.

அம்மாவுக்கோ தயக்கம்... பக்குவமாக, பக்கத்து வீட்டு ராணியிடம் குழந்தை அங்கு வந்திருந்தபோது ஒருவேளை தவறி விழுந்ததா என்று தேடச் சொன்னார். இப்போது அம்மாவைவிட, ராணி ஆண்ட்டிக்குத்தான் பதட்டம் அதிகமானது. சிறிது நேரத்தில் வேறொரிடத்திலிருந்து வளையல் கிடைத்ததும்,.  ராணிக்குத்தான் பெருத்த நிம்மதி. “இது மட்டும் கிடைச்சிருக்கலன்னா, என் மேலிருந்த சந்தேகம் போயிருக்காதே” என்று பெருமூச்சு விட்டார். அம்மா “அப்படிலாம் இல்லைப்பா. நான் உங்களைச் சந்தேகமெல்லாம் படல்லை” என்று மீண்டும் மீண்டும் சமாதானப்படுத்தினார்.

இருப்பினும் உண்மை அதுதானே? ”குழந்தை பொய் சொல்லாது”; “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்ற அளவுக்கு அல்லவா நாம் குழந்தைகளின் innocence-ஐ போற்றுகிறோம்.  ஏன் பல வழக்குகளில்கூட, குழந்தைகளின் சாட்சியம்தானே அதிக நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால், இன்றைய குழந்தைகளிடம் இந்த வெகுளித்தனம் மிச்சம் இருக்கிறதா?  கார்டூன்களில் ஆரம்பித்து, வீடியோ கேம்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், இண்டர்நெட், மொபைல் ஃபோன் உள்ளிட்ட பலவற்றால் அந்த வெகுளித்தனம், குழந்தைத்தனம், அழகிய அறியாமை தொலைந்தே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சில வருடங்களுக்குமுன், ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். தெருவில் ஒரு மாடு மிரண்டோடி வர, அதைக் கண்டு அனைவரும் ஒதுங்கினர். ஒரு வீட்டில் இருந்த சிறுவன், தன் அம்மாவிடம், ஒரு கார்டூன் நிகழ்ச்சியின் பெயரைக் கூறி, “அதில் வருவதுபோல மாடு ஏன் உன்னை முட்டவில்லை? முட்டியிருந்தால் நீ கீழே விழுந்திருப்பே, ரத்தமெல்லாம் வந்திருக்கும், நான் பார்த்திருப்பேனே?” என்கிற ரீதியில் பேச தாய் அதிர்ந்துவிட்டாராம்.

குழந்தையைச் சொல்லிக் குற்றமில்லை. கார்ட்டூன்கள் அநேகமாக எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன.  கார்டூன்களாவது வரைபடங்கள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறைகளை அப்படி ஒதுக்கிவிட முடியவில்லை. பசுமரத்தாணி போல, பச்சைமண்களின் மனதில் இவையும் அப்படித்தானே பதியும்.


இயல்பாகச் சித்தரிக்கிறேன் என்கிற பெயரில், சூடான ரத்தம் நம்மேல் தெறித்துவிடுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு, அளவுக்கு மீறிய வன்முறைக் காட்சிகள்.  காட்சிப்படுத்துதல்தானே - நிஜமல்ல என்று நமக்கும் தெரியும்; குழந்தைகளுக்கும் சொல்கிறோம். என்றாலும், ”கேட்பதை” விட, “பார்ப்பதே” உண்மையாகத் தோன்றும் வயதில்,  அவை மனதளவில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாம் இப்போது உலகில் பல சம்பவங்களில் கண்கூடாகக் காணத்தானே செய்கிறோம்?

வகுப்பறையில் ஆசிரியையைக் கொன்ற மாணவன், ஏதோ ஒரு படத்தைப் பார்த்து தைரியம் வரவழைத்தேன் என்கிறான்.  திரையுலகினரோ, திரைப்படங்களில் வரும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்கிறார்கள். மிகச் சிலர் நல்லதையும் எடுத்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள் - “தவமாய்த் தவமிருந்து” படத்தைப் பார்த்து தன் பெற்றோரின் மீது கூடுதல் மதிப்பு கொண்டவர்களும் உண்டு. ஏன், என் தலைமுறையைச் சேர்ந்த மக்களின் மனதில் தேசப்பற்றை வளர்த்ததில், “ரோஜா” படத்திற்குத்தானே பெரும்பங்கு!!

ஆனால், நல்லவை மனதில் ஏறுவதைவிட, கெட்ட விஷயங்கள்தானே சட்டென ஈர்க்கின்றன. அதனால்தானே, எவ்வளவு நல்ல படம் என்றாலும், அதில் ஒரு குத்தாட்டப் பாடலும் சேர்க்கப்படுகின்றது. பெரியவர்களுக்கே அப்படி எனும்போது, சிறுவர்களின் மனதிற்கு இந்த உணர்வுகளெல்லாம் புரிவதில்லை. அவர்கள் “ஆக்‌ஷனை”த்தான் பார்க்கிறார்கள், “ரியாக்‌ஷனை” அல்ல. அடிப்பவனின் வீரம்தான் தெரிகிறது, அடிபட்டவனின் வலி புரிவதில்லை.

துவரை வன்முறை என்பது பெரியவர்கள் செய்யும் செயலே என்று திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டது போய், சிறுவர்களையும் வன்முறை வழிகளில் ஆர்வமுள்ளவர்களாகக் காண்பிக்க ஆரம்பித்துள்ளது திரை ஊடகம். வேண்டாம்! உங்கள் வன்முறைகளை பெரியவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதன் விளைவுகளே தடுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இதில் சிறுவர்களும் வன்முறைகளில் ஈடுபடுவதுபோல காண்பிக்க ஆரம்பித்தால், வன்முறை தவறே இல்லை, நாம்கூட செய்யலாமென்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியாதா? அதிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக் குழந்தைகளை மட்டும் அவ்வாறு காட்டுவதால், ஏற்படக்கூடிய விளைவுகள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

இந்தச் சித்தரிப்புகளெல்லாம் அதிகமில்லாத என் கல்லூரிக் காலத்திலேயே,  மாணவியர் பலரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், என்னிடம் - என்னிடம் மட்டும், “நீ பாகிஸ்தானுக்குத்தானே சப்போர்ட் செய்ற?” என்று முன்முடிவோடு கேட்கப்பட்டதன் அதிர்ச்சி இப்போதும் என்னிடத்தில் மிச்சம் உள்ளது. இந்த வலிகளை என் தலைமுறையோடு மறந்துவிடவேத் துடிக்கிறோம்.

ரி, இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று சொல்லுவது எளிது. தீயவற்றைப் பார்க்காத என்னால் - என் குடும்பத்தால் சமூகத்திற்கு தீங்கில்லை. ஆனால், அது போதுமா? நான் சமூகத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும் இதேபோல தீதில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

பார்ப்பதை விடுங்கள், திரையில் குழந்தைகளை எப்படிச் சித்தரிக்கிறார்கள் என்று பாருங்கள். எந்தப் படத்திலாவது குழந்தைகளை அவர்களின் அழகான குழந்தைத் தனத்தோடு காட்சிப்படுத்துகிறார்களா? இந்த ட்ரெண்ட் “அஞ்சலி” படத்திலிருந்து ஆரம்பித்ததென்று நினைக்கிறேன்.  பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது, காதலர்களுக்குக் காவல் இருப்பது என்று வயதுக்கு ஒவ்வாத பேச்சுகளைப் பேசுபவர்களாக, செய்வதாக அதில் காட்டியிருந்தது பார்த்து (அப்போது கல்லூரி மாணவியான) எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, பிரமிப்பு!! நகரத்துப் பிள்ளைகளெல்லாம் இப்படித்தான் மரியாதையில்லாமல் இருப்பாங்க போல என்றுகூட அப்போது நினைத்துக் கொண்டேன் என்றால் பாருங்கள்.

ஆனால், தற்போது கிராமம்-நகரம் என்றெல்லாமல் பேதமில்லாமல், சிறுவர்கள் வயதுக்கு மீறியவர்களாக மாறியிருப்பதற்கு திரை ஊடகங்களே முக்கியக் காரணம் என்பது மறுக்கவே முடியாது. சமீபகால இரு காமெடி காட்சிகள் நினைவிலிருந்து உதாரணம் தருகிறேன். ஒன்றில், ஒரு சிறுமி தன் சாக்லேட்டைப் பிடுங்கியதாக தந்தையிடம் பொய்சொல்லி, வடிவேலுவுக்கு அடிவாங்கித் தந்து, மகிழ்வதாகக் காட்சி.  இன்னொன்றில், ஒரு சிறுவன் தன் வீட்டு காலிங்பெல் எட்டவில்லை என்று பொய்சொல்லி, வடிவேலுவை உதவிக்கழைத்து வீட்டு உரிமையாளரிடம் அடி வாங்க வைக்கிறான்.

நாம் பெரியவர்கள், இதெல்லாம் பார்த்து, சும்மா படம்தானே என்று புரிந்து, சிரித்து வைக்கிறோம். இதுவே உங்களுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆறேழு வயதுக் குழந்தைக்குத் தெரியுமா? அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று யோசித்தோமா?

திரைப் படங்கள் மட்டுமில்லை, வீட்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக இருக்கும் டிவியில் வரும் தமிழ் தொடர் நாடகத்தில் வந்த ஒரு காட்சியை, “அவள் விகடனில்” ஒரு வாசகி விவரித்திருந்தார் பாருங்கள், அதிர்ச்சியின் உச்சம் என்று அதைத்தான் சொல்வேன்!! ஒரு சிறுமியின் அம்மாவுக்குக் குழந்தை பிறக்கப் போவதாகவும், அப்படி பிறந்தால் அம்மா இவளைக் கவனிக்க மாட்டார், புதிய குழந்தையைத்தான் விரும்புவார். ஆகையால் கருவைக் கலைத்துவிட நான் தரும் மருந்தைக் கொடு என்று அந்தச் சிறுமியிடம் ஒரு பெண் நஞ்சைக் கலக்கிறாராம். ஆண்டவா, இதென்ன கொடுமை!!

ப்படி, ஒன்று வன்முறை, அல்லது வயதுக்கு ஒவ்வாத பேச்சு மற்றும் செயல்கள் என்று சிறு குழந்தைகளைக் குறி வைப்பது போதாதென்று, பதின்பருவத்தினரையும் குழப்புவதில் திரை ஊடகத்திற்கே பெரும்பங்கு.  பள்ளிகளில் படிக்கும்போதே காதலிப்பது போலச் சித்தரிப்பதுதான் அதிகம் விற்கும் கதைகள் போல. அதிலும், இப்போதையப் படங்களில், தன் உள்ளங்கவர் கள்வனை அடையாளம் கண்டபின்புதான் பெண்கள் பருவமே எய்துகிறார்களாம்!! காதல், மைனா உள்ளிட்ட படங்கள் சொல்கின்றன. இந்த மாதிரியானப் படங்களுக்குத்தான் எத்தனை எத்தனை பாராட்டுகள்!!

டீனேஜ் காதலே சரி என்றால், டீனேஜில் செய்யும் சட்டபூர்வமான கல்யாணத்தில் என்ன தவறிருக்கும் என்றுதான் புரியவில்லை.  ”குழந்தைத் திருமணம் கலெக்டரால் தடுத்து நிறுத்தப்பட்டது”, “பால்ய விவாகம் நடத்த முயன்ற பெற்றோருக்குக் காவல்துறை எச்சரிக்கை” என்று எத்தனைச் செய்திகள் வாசித்திருப்போம்? 13-14 வயசில் செய்யும் காதலில் இல்லா “பால்யம்”, 15-16 வயதில் விவாகத்தில்!!

தங்கள் லாபத்திற்காக டீனேஜ் காதலைப் போற்றும் திரை ஊடகத்தினர், அதுவே தங்கள் வீடுகளில் நடந்தால் ஒப்புக் கொள்வார்களா? எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை,  12-13 வயதில் காதலிக்க விட்டிருக்கிறார்கள்?

தின்பருவக் காதலைச் சொல்லிப் பெருவெற்றி பெற்ற ”ழகி” படத்தில் நடித்த பார்த்திபன் ”அழகி படம் எனக்கு இப்போது அருவருப்பாக இருக்கிறது” என்று  தற்போது கூறியிருக்கிறார்.  ஏனாம்? “....பள்ளிக் குழந்தைகள் காதலிப்பதாக காட்டுவதை நான் அருவருப்பாகப் பார்க்கிறேன்..... விவரம் இல்லாத வயதில் அவர்கள் செய்யும் குறும்பையும் விளையாட்டையும் களவாடிக் காட்சிப்படுத்தி விடுவதுதான் கவலை அளிக்கிறது”.  அதுசரி!! உங்களுக்கு  காலம் கடந்தாவது ஞானோதயம் வந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்து அது சரியென்று நினைத்த இளம்பருவத்தினர் எத்தனை பேரோ? அவர்களுக்கு ஞானோதயம் வரும்போது, வாழ்க்கையே தொலைந்து போயிருக்குமே?

குழந்தைத் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், திரை ஊடகங்களில் பணிபுரியும் குழந்தைகளை நாம் தொழிலாளியாகவே பார்ப்பதில்லையே, ஏன்? அவர்கள் திரையில் நடிப்பிற்காகச் சிரிப்பதை, நிஜமாகவே சிரித்து மகிழ்வதாக நம்பிவிடுகிறோமோ?

ப்படி நிஜவுலகில் தவறென்று கூறப்படுவதெல்லாம், திரையில் மட்டும் சரியாகிவிடுவது ஏன்? மீண்டும் நீ ஏன் சினிமா, டிவி பார்க்கிறாய்? பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் என்ற வாதத்தை வைக்காதீர்கள். என்னைப் போல பல பெற்றோர்களும் தவறானவற்றைப் பார்ப்பதில்லை.  தம் குழந்தைகளையும் தம் மட்டில் பாதுகாக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தீவல்லவே! சமூகத்தோடு ஒட்டுறவாடித்தானே வாழ்ந்தாகவேண்டும். எனில், அந்தச் சமூகத்தில் இந்தத் தீயதைச் சரியென வரித்துக்கொண்டவர்களும் இருப்பார்கள்தானே, அவர்களை இந்தக் குழந்தைகள் எப்படி இனம்பிரித்தறிய முடியும்?

மற்றவர்களை இனம்பிரித்துப் பார்ப்பதே சிறுவர்களால் முடியாதென்றால், தம்மை மற்றவர்கள் தவறாகப் பார்ப்பதைத் தடுப்பதும் எப்படி முடியும்?

ஒரு காலத்தில் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டி, நற்குணங்களை வரித்துக் கொடுத்து, ஒற்றுமையைப் போதித்து வந்தவையாகப் பாராட்டப்பட்ட திரை ஊடகங்கள், தற்காலம் பொறுப்பற்றவையாக மாறியிருப்பது காலக்கேடு. 


ந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே”

என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம் - அன்னை மட்டுமே வளர்த்த காலம் அது. இன்று, தாய்-தந்தையைவிட, குழந்தையின் இயல்பை வடிவமைப்பதில் பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூகமும் பெரும்பங்கு வகிக்கிறது.

இவற்றில் காட்சி ஊடகங்களே சிறுவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது யாவரும் அறிந்ததே. “ஒரு நிழற்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பார்கள். எனில், திரைப்படம்? UNESCO-வின் ஆய்வுக் கட்டுரை, சிறுவர்களிடமும், பருவவயதினரிடமும் ஒரு திரைப்படம் கதைப்புத்தகத்தை விட ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், குறிப்பிட்ட காட்சிகளை அவர்கள் மறப்பதேயில்லைஎன்றும் கூறுகிறது.

அமெரிக்காவில் பள்ளிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்ததில், பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், சிறுவயதில் அமைதியற்ற சூழலில் வளர்ந்ததே முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  Disturbed childhood என்பதில், இளவயதில் பார்க்கும் படங்களில் உள்ள வன்முறைகளும் அடங்குமாம்!! 

வீட்டினுள் உள்ள சூழ்நிலைகள் என் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ஆனால், விரும்பியும், விரும்பாமலும் வளைய வரும் வெளி உலகில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், நல்லது கெட்டதைப் பிரித்தறிய முடியாத சிறார்களின் மனதில் கல்வெட்டாகப் பதியும் காட்சி ஊடகங்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணரும் காலம் வந்தேவிட்டது!! 

ஏனெனில் ”குழந்தைகள் பெற்றோர்களினால் உருவாக்கப்பட்டவை அல்ல. பெற்றோர்களின் மூலம் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவை.” (கலீல் ஜிப்ரான்) அந்தக் குழந்தைகளைப் பொறுப்பான சமூகத்தின் அங்கமாக ஆக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமே.

மேல்வாசிப்புக்கு:
1. குழந்தைகள் சினிமா.. தமிழில்...
2. ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...4
3. தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?
4. சின்னத்திரையும் வண்ணத்திரையும்

 

Post Comment