Pages

நானும் இங்கதான் இருக்கேன், இருக்கேன்...


முதல்ல 2ஜி, அப்புறம் தேர்தல், கணிப்புகள்னு பிஸியா இருந்த பதிவுலகம் இப்போ ரொம்ப டல்லா இருக்க மாதிரி இல்ல? கோடை விடுமுறை வேற, அதான் பதிவர்கள் எல்லாம் ரெஸ்ட் எடுக்கப் போயிட்டாங்க போல!! “தலைவி எவ்வழி, குடிமக்கள் அவ்வழி” போல!! சரி, நானும் அப்படியே போயிட்டேன்னு நீங்க நினைச்சிடக்கூடாது பாருங்க, அதான் வந்துட்டேன். நோ, நோ, பேச்சு பேச்சா இருக்கணும். கல்லெல்லாம் எடுக்கப்படாது.

இப்படியெல்லாம் நமக்கு பேச்சு சொல்லிக் கொடுத்த தலைவர் வடிவேலு, இப்ப, தானே தன் பேச்சுக்கு உதாரணமா  ஒளிஞ்சு விளையாடிகிட்டு இருக்கார். விவேக் மார்க்கெட் போனது பத்திரிகையாலன்னா, இவருக்கு அரசியலால. ரெண்டுமே டேஞ்சரஸ் ஏரியாக்கள்!!

பக்கத்து நாடான கேரளாவிலும் நம்ம தமிழ்நாட்டைப் போல சுழற்சி முறையில முதல்வர்களை மாற்றிகிட்டே இருக்காங்க. ஆனா, யார் வந்தாலும் எளிமையாத்தான் இருக்காங்க. இப்ப முதல்வரா இருக்கும் உம்மன் சாண்டியைப் பற்றி அவரின் போன ஆட்சிக் காலத்துல, தொலைக்காட்சியில் பார்த்த செய்தி: அவரின் வீட்டு முன் கிடக்கும் அவரின் செருப்பைக் காட்டினார்கள்; அதில் சில தையல்கள்!! அதாவது, கிழிந்த செருப்பைத் தைத்து, போட்டுக் கொண்டிருக்கிறார்!! உங்களுக்கு என்ன ஞாபகம் வருது? சே, சே, எனக்கு ஃபிலிப்பைன்ஸின் திருமதி. இமெல்டா மார்க்கோஸின் செருப்பு அலமாரிதான் ஞாபகம் வருது. வேற எதுவுமே இல்லை, இல்லை, இல்லை!!

அப்படியே, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜியையும் நினைத்துப் பார்க்கிறேன். பருத்திச் சேலையும், ரப்பர் செருப்பும்தானாமே, இப்பவும், எப்பவும்? தற்போதைய சட்டமன்றக் கட்டிடமான “ரைட்டர்ஸ் பில்டிங்” மிகவும் அழுக்காக, அடிப்படைக் கட்டமைப்புகள் பாழ்பட்டு இருப்பதாகவும், அதை முதலில் சீர்படுத்தப் போவதாகவும் சொல்லியிருக்கார்.  ஆனா, அவருக்கும் சென்னைக் காத்து அடிச்சுடுச்சு போலன்னு சந்தேகப்பட்டுடாதீங்க. ஜெயிச்ச அன்னிக்கு, பேட்டியாளர், "இந்த வெற்றியை எப்படிக் கொண்டாடப்போறீங்க?”னு கேட்டதுக்கு, “கொண்டாட்டமா? என்ன கொண்டாட்டம்? எதுக்கு?”னு படபடன்னு கேட்ட அழகைப் பாத்தா, அப்படியே தமிழ்நாட்டுக்குக் கடத்திட்டு வந்திடலாம் போல இருந்துது!! ஹூம்!!

சென்னையில, 1000 கோடி செலவில்  புது சட்டமன்றக் கட்டிடம் கட்டப்பட்டதில் ஊழல் இருக்குனு சிலர் சொல்றாங்க. கோவமா வருது. ஒரு பெரியவரை அவமானப்படுத்துறதுக்கு அளவு வேணாமா? அவருக்குன்னு ஒரு அந்தஸ்து இருக்குல்ல? 1,76,000,00,00,000 எங்கே,  1000,00,00,000 எங்கே? (சைபர் கரெக்டா?)

ஊழல், ஊழல்னு நம்ம அரசியலைப் பிடிச்ச கரையானைப் பத்தியே பேசிக்கிட்டுருக்கோமே, நிஜமாவே காசைக் கரையான் அரிச்சுதாம் தெரியுமா? அதுவும், நோட்டு அச்சடிக்கிற நாசிக்லயே!! ஆனாலும், ஆறுதல்பட்டுக்கோங்க, அரிச்ச தொகை ஆஃப்டர் ஆல், ஒரே ஒரு கோடிதானாம்!!  ஒருவேளை நீதிமன்றம் தலையிட்டு, காசைக் கரையான் அரித்து அழிப்பதைவிட, தேவைப்படும் மக்களுக்குக் கொடுக்கலாமேன்னு சொன்னா எப்படியிருக்கும், இல்ல?

ஐரோப்பாவில ஒரு நாட்டோட பாராளுமன்றம் முன்னாடி மூணு சிலைகள் இருக்காம். மூணும், தலைவலி, வயிற்றுவலி, கைவலியைக் குறிப்பதாம். அதாவது, அரசியலுக்கு வந்தா, இதெல்லாம் வரும்னு சிம்பாலிக்காச் சொல்றாங்களாமாம்!! நம்மூருக்குன்னா, ஒரேயொரு சிலை போதும்ல?Post Comment

அழிய மறுக்கும் தொழில்

நெல்லையிலுள்ள என் ஊரில்,  முன்காலங்களில், விவசாயம் செய்பவர்கள்தான் பெரும்பணக்காரர்கள். அடுத்ததாகத்தான் வணிகம் செய்பவர்கள்.  அதல்லாமல், பெரும்பாலானோர் நெசவு செய்பவர்கள். 

agritech.tnau.in


நெசவுத் தொழில் செய்பவர்கள் வீட்டிலேயே ஒரு (6x6x4' approx) பள்ளம் தோண்டி அதிலே நெசவுத்தறி வைத்திருப்பார்கள். அதில் மேலே தொங்கும் ஒரு கயிரைப் பிடித்து இழுத்துஇழுத்து விட்டால் சல்லக்-புல்லக் என்று சத்தம் போட்டுக் கொண்டு நூல்கண்டுகள் அங்குமிங்கும் ஓடுவதும், நூல்வரிசைகள் அப்படியே பசைபோட்டதுபோல ஒட்டிக்கொண்டு துணியாக மாறிவிடுவதும் பார்க்க மேஜிக் போல இருக்கும். பெரும்பாலும் லுங்கிகள்தான் நெய்யப்பட்டன.   இப்போது நினைவுபடுத்திப் பார்க்கும்போது, தறிக்குழிகள் இருக்கும் வீடுகளில் சிறு குழந்தைகளை எப்படி அதில் விழாமல் வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

wikipaedia
 
வாரம் ஒருநாள் ஒருவர் பாவுகள் காய வைப்பார்கள். அதற்கு, மரக்கட்டைகளால் செய்யப்பட்ட ஸ்டாண்டுகளில் நெசவு செய்யவேண்டிய நூல்வரிசைகளை (பாவுகள்) விரித்து, அதில் கஞ்சி தடவுவார்கள் (என்று நினைக்கிறேன்). மிகச்சிறிய வயது என்பதால் அதிக விவரங்கள் தெரியவில்லை.  இதற்கு, அந்தத் தெருவில் இருக்கும் நெசவுசெய்பவர்கள் எல்லாரும் வந்துநின்று ஆளுக்கொரு வேலை செய்வார்கள். தெருவின் முழுநீளத்திற்கு இந்த பாவுகள் பரப்பப்பட்டிருக்கும் என்பதால், பாவு காயும் அந்த அரைநாளும் தெருவில் நடமாட சிரமமாக இருக்கும் என்றாலும் யாரும் ‘நியூசென்ஸ்’ வழக்கு போட்டதில்லை!! :-))))

ஆனால், எனது பள்ளிக்காலங்களில் இந்த மாதிரி தறிசத்தமோ, பாவு காயவைப்பதோ பார்த்ததாக ஞாபகம் இல்லை;  பவர்லூம்களின் வருகை காரணமாகவோ என்னவோ? தறிகள், ஒன்று சும்மா இருந்தன, அல்லது விற்கப்பட்டு குழிகள் மட்டும் இருந்தன.


ஆனால், எங்கள் ஊரில் நெசவுத்தொழில் முடங்க ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்தின் முன்னர் தொடங்கிய ஒரு தொழில் பீடித்தொழில்!! இக்காலத்தின் ஐடி கம்பெனிகளும், கால் சென்டர்களும் அதிகச் சம்பளம், சாப்பாடு, ஜிம், இலவச போக்குவரவு என சலுகைகள் தந்து இளவயதினரை வளைத்துப் போடுவதுபோல, அக்காலத்தில் வறுமையில் இருந்தவர்களை - அதுவும் பெண்களை- வளைத்துப் போட்டது இந்த பீடித் தொழில் எனலாம்!! பீடி சுற்றுவதற்கான மூலப்பொருட்களான இலை, புகையிலைத்தூள், நூல் எல்லாமே இலவசம்; ஆனால் சுற்றித்தரும் பீடிக்குக் கூலி தருவோம் என்றால் இக்கால “நிலம் வங்கினால் தங்க நாணயம் இலவசம்” ஆஃபரைவிட கவர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்?

காஜா பீடி, செய்யது பீடி, அஞ்சுப்பூ பீடி, கணேஷ் பீடி, நூர்சேட் பீடி, ஜோதிமான் பீடி, பத்தாம் நம்பர் பீடி என்று விதவிதமான பீடி கம்பெனிகள் (பிராண்டுகள்) உண்டு.  இப்பீடிக் கம்பெனிகளின் ஓனர்கள் எல்லாருமே (அல்லது ஒருசிலர்தவிர) மலையாளிகள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.

ஆக, எங்கள் ஊரில் ஒருகாலத்தில் பீடி சுற்றாத வீடுகளே இல்லை எனலாம். வறுமையில் இருந்தவர்களுக்கும், நெசவுத் தொழில் செய்து நசிந்தவர்களுக்கும் இது வருமானத்திற்குச் சிறந்த வழியாக இருந்தது என்றால், பணக்கார வீட்டுப் பெண்களுக்கு பீடி சுற்றுவது வருமானமும் தரும் பொழுதுபோக்காக அமைந்தது.

பீடிசுற்ற ஆரம்பிக்க, ஏதேனும் ஒரு பீடி கம்பெனியில் கணக்கு துவங்கவேண்டும்.  இப்போதெல்லாம் வங்கியில்கூட அக்கவுண்ட் சுலபமாகத் துவங்கிவிடலாம்; ஆனால், பீடி கம்பெனிகளில் அக்கவுண்ட் துவங்குவதற்கு அதிர்ஷ்டக்காற்று வேண்டும். காரணம், அவர்களிடம் ஏற்கனவே தேவைக்கதிகமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீங்கினால் மட்டுமே இன்னொருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார்.


முதல்நாள் கொடுக்கப்படும் பீடி இலையை - காய்ந்த சருகு போல இருக்கும் - தண்ணீரில் பக்குவமாக ஊறச்செய்து, ஈரப்பதத்தோடு இரவுமுழுதும் வைத்தால், காலையில் பஞ்சுதோசை போன்ற பதத்தில், வெட்டுவதற்கு ஏற்ற பருவமாக இருக்கும். அதில், “ஆஸ்” எனும் செவ்வக அளவுகோலை வைத்து, கத்தரியால் ஒரு பீடி சுற்றுவதற்குரிய இலையை வெட்டவேண்டும். ஒரு முழு இலையில், எத்தனை பீடிக்கான இலைகள் வெட்டமுடியுமென்பது வெட்டுபவரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. (மேலே படத்திலுள்ள இலையில் 4 வெட்டினால், சராசரி. 5-good, 6-excellent!!) பின், அதனுள் புகையிலை வைத்துச் சுரிட்டி, நூலால் கட்டினால் பீடி ரெடி!! இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் பீடிகளாவது சுற்றினால்தான் அடுப்பு எரிக்க முடியும். (ஆண்கள் கொண்டுவரும் 3000/4000 மாதச்சம்பளம் என்பது வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போன்ற பெரிய செலவுகளுக்கே போதாது).

பீடி சுற்றுவதை முழுமையாகப் பார்க்க, இங்கே சுட்டவும்.


ஒரு குடும்பத்தில் வேலைகளைப் பார்த்துக் கொண்டே அம்மாவால் 500 பீடி சுற்றமுடிந்தால் அதிகம். இளம்பெண்கள் தாய்க்கு உதவிக்கொண்டே 1500. வீட்டுக்கு வந்த மருமகள் என்றால், ஆயிரமாவது சுற்றினால்தான் முணுமுணுப்புகளிலிருந்து பாதுகாப்பு. கணவனைப் பிரிந்தவர் அல்லது விதவை அல்லது முதிர்கன்னிகள் என்றால் 2000மாவது சுற்றினால்தான், வீட்டுச் செலவுக்கு தம் பங்கைக் கொடுத்து, பின் சுயதேவைகளையும் பார்த்துக் கொள்ளமுடியும். 

ஆயிரம் பீடிக்குக் கிடைப்பது 70 ரூபாய். அட, எழுபதா, பரவாயில்லையே என்று நினைப்பீர்கள்.  இன்னும் உண்டு: வார விடுமுறை, பெருநாட்களுக்கு போனஸ், கணக்கு முடித்தால் பி.எஃப். பணம் எல்லாம் உண்டு. ஆனால், இவற்றின் பின்னால் எத்தனையோ கதைகள் உண்டு - எக்ஸ்போர்ட் கம்பெனிகள்/ அங்காடித் தெருக்களின் அராஜகத்திற்குச் சற்றும் குறைந்தவையல்ல இந்த பீடிக் கம்பெனிகள்!!

பீடிக்கம்பெனியில் நிறுத்துத் தரப்படும் இலைகள் தரமானவையாகக் கூட இருந்துவிடலாம் என்றாவது; ஆனால், போதுமானவையாக ஒருநாளும் இராது. தினமும் பற்றாக்குறையை நிறைவு செய்ய தனியார் கடைகளில் இலையைக் காசுகொடுத்து வாங்கவேண்டும். அது என்ன ரேஷன் கடையா, மலிவாய் கிடைக்க?

மேலும், சுற்றிக்கொண்டுபோய் கொடுக்கும் பீடிகளையும் தரம்பார்த்துத்தான் எடுத்துக்கொள்வார்கள் கம்பெனியினர்.  சுற்று சரியில்லை, கட்டு சரியில்லை, குத்து சரியில்லை, உயரம் குறைவு என்ற (சிலசமயம், கட்டாயக்) காரணங்களால் கம்பெனிக்காரரால் உடைத்து எறியப்படும் பீடிகள் சில நூறைக்கூடத் தாண்டும் சிலசமயம். பீடி சுற்றிக் கொடுக்கும் பெண், அதைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினாலோ, பழிவாங்கும் நடவடிக்கைகளாக இன்னுமதிகம் பீடிகள் ஒடிக்கப்படும்.  தரப்படும் இலை, புகையிலை அளவுகளிலும் தண்டிக்கப்படுவர். மிகச்சில இடங்களில், “சகஜமாக” பேசிக்கொள்ளவில்லையென்றாலும்கூட இத்தண்டனைகள் உண்டு.

கழிக்கப்படும் அளவு பீடிகளை மறுநாள் மீண்டும் புதிதாகச் சுற்றிக் கொடுத்தால்தான் அவரது கச்சாத்தில் (அக்கவுண்ட்டில்) கரும்புள்ளிகள் இராது; முழுக்கூலியும் கிடைக்கும். (இக்கரும்புள்ளிகள் பின்னர் அவரது வருடாந்திர போனஸ், பிஎஃப் ஆகியற்றைப் பாதிக்கும் சாத்தியம் உண்டு; அதிகமானால், கச்சாத்து க்ளோஸ் செய்யப்படும் அபாயமும் உண்டு!!) ஆனால், அதற்கெனத் தனியே இலை, புகையிலை கொடுக்கப்படாதென்பதால் சொந்தக் காசில்தான் வெளியே வாங்க வேண்டும்.

பணத்தட்டுப்பாடு வருமெனில்,  வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதும், பின் வட்டி கட்டி, அசலில் முங்குவதும் தொடர்கதைகள். பணத்தை வட்டிக்கு வாங்கலாம்; விரயமாகும் நேரத்தை? அதற்கு, இதுபோன்றவர்களைக் குறிவைத்து இயங்கும் ’ரெடிமேட் பீடி’  விற்கும் கடைகளில் (கடன்வாங்கிய)  அதிகப் பணத்திற்கு பீடிக்கட்டாகவே வாங்கிக் கொள்ளலாம். 

 பீடிக்கம்பெனி வேலைகளுக்கு (பீடி சரிபார்க்கும், இலை/புகையிலை அளக்கும்) சில (படிக்காத) இளைஞர்களிடையே போட்டியும் உண்டு.  இந்த இளைஞர்களைப் போலவே,  தனிக்கச்சாத்து வைத்திருக்கும் இளம்பெண்களுக்கும் கல்யாண மார்க்கெட்டில் வேல்யூ உண்டு!!

இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், பெண்கள் பீடி சுற்றுவதைக் கைவிடாதிருக்கக் காரணம், இந்த வேலையில் இருக்கும் வசதிகள்: வீட்டிலிருந்தே செய்யலாம் - குழந்தைகளை மற்றும் டிவியை பார்த்துக் கொண்டே.  உடலை வருத்தும் உழைப்புத் தேவையில்லை. 

பெண்களுக்கு தோதான நல்ல வேலைதானே என்று தோன்றும். ஆனால், புகையிலை பீடி/சிகரெட் குடிப்பவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அதைத் தயாரிப்பவர்களையும்தான்.  "Passive smoking”-ஆல் புகைப்பவர்களின் அருகிலிருப்பவர்களும் பாதிப்படைவதுபோல, பீடி சுற்றுபவர்களோடு,  வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயதானவர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள். புகைப்பதினால் வரும் அலர்ஜிகள், இருமல், ஆஸ்துமா முதல் டிபி, புற்றுநோய் வரையான பாதிப்புகளோடு, அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்திருந்து செய்யும் வேலையால் முதுகு-தோள்-இடுப்பு வலிகளும் நிரந்தரம் இவர்களுக்கு. இலவச கலர் டிவி திட்டம் தெரிந்த இவர்களுக்கு, தம் நோய் தீர்க்க இலவசக் காப்பீட்டு திட்டம் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்பதும் சோகம்.


பீடிசுற்றி தம்மைப் படிக்க வைத்த தாய், சகோதரிகளின் உழைப்புக்குப் பிரதிபலனாக, தாம் தலையெடுத்தபின் அவர்களை பீடிசுற்றுவதிலிருந்து ஓய்வு கொடுத்துவருகின்றனர் பல இளைஞர்கள். எனினும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழேயேயிருப்பதால், இத்தனை பாதிப்புகள் இருக்கிறதென்று தெரிந்தாலும் விட விரும்பவில்லை. பகரமாக, வீட்டுவேலை, அல்லது சுயதொழில் என்று அதிக உடலுழைப்பு கோரும் எதிலும் ஈடுபட விரும்புவதுமில்லை. பெண்குழந்தைகளையும் இதில் சிறுவயதுமுதலே ஈடுபடுத்துகின்றனர்.

ஒருகட்டத்தில் பீடிகம்பெனிகளின்மூலம் ஊருக்கு உள்ளே வந்தவர்கள், தற்போது பல்வேறு தொழில்களிலும் தம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர், கல்வி உட்பட. சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல.

Post Comment

ஒரு கோப்பை தேநீர்

blog.educaedu.com

முன்னொரு காலத்தில, அதாவது ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நான் வேலைக்குப் போயிட்டிருந்தப்போ, மாலை வீட்டுக்கு வந்ததும்  டீ போடுவது  என் முதல் கடமையாக இருந்தது.  நாள் முழுசும் ஆஃபிஸுல டீ-பாய் போட்டு தந்த டீ குடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து நானே போட்டு குடிக்கணும்கிறது கொஞ்சமென்ன ரொம்பவே கடுப்பா இருக்கும்!!

அப்பத்தான் என்னவருக்கு வேற வேலை கிடைச்சு, என்னைவிட சீக்கிரமே வீட்டுக்கு வர ஆரம்பிச்சார். அப்ப என்ன பண்ணுவேன்னா, கரெக்டா ஆஃபிஸ்ல இருந்து கிளம்பும்போது, வீட்டுக்கு ஃபோன் பண்ணி, “ஒரே தலைவலிங்க”ன்னு பாவமாச் சொல்வேன்.  வீட்டுக்குப் போகும்போது டீ ரெடியா இருக்கும். இப்படியே டீ போடுற கடமைய நைஸா கை கழுவிட்டேன்.

அப்படியானதொரு நல்ல நாளில், வீட்டுக்கு வந்தபின், நானும் என் பெரியவனும் டீ அருந்திக் கொண்டிருக்கும்போது, அவன் “டீயில இனிப்பு குறைவா இருக்குல்ல?”ன்னு கேட்டான். “சும்மாருடா. வாப்பாவே கஷ்டப்பட்டு(!!) டீ போட்டிருக்காங்க. எந்த வீட்டிலயாவது வாப்பாவெல்லாம் இப்படி செஞ்சுத் தர்றாங்களா? அதப் போயி குறை சொல்லிகிட்டு..” ன்னு சொல்லி, ‘கல்லானாலும், புல்லானாலும்...’னு  நான் ஒரே ஃபீலிங்க்ஸாகி செண்டிமெண்டா கண்ல ஒத்திக்க தாலியைத் தேடினா, அது கழுத்தில இல்லை!! அதன் தற்போதைய இருப்பிடம் ஆணியா, லாக்கரா என்று சீரியஸாக யோசித்துக் கொண்டிருந்த வேளையில், “என்னது? திருப்பிச் சொல்லு?” என்று சத்தமாக என் மகன் கேட்டான்.

ஆஹா, இவன் வால்யூமைக் கூட்டினாலே விவகாரம் இருக்குன்னுல அர்த்தம்னு பயந்து,  “ஏண்டா?”னு பம்மினேன். அவன், ”டீ யாரு போட்டதுன்னு சொன்னே?”னு என்னைக் கேட்க, வில்லங்கம் இதில்தானெனப் புரிந்தது . அவன்தான் போட்டானாம். “முத ரெண்டு நாள் மட்டும்தான் வாப்பா போட்டது. அதுவும், எனக்கு போட்டுக் காமிக்கிறதுக்காக. அதுக்கப்புறம் நாந்தான் போடுறேன்”னான்.

அப்புறம், விசாரணையை முடுக்கிவிட்டு, கடுமையான எச்சரிக்கையும், தண்டனைகளும் வழங்கப்பட்டு, அடுப்பு பக்கம் பிள்ளைகள் போகக்கூடாது என்ற ஆணையை மீண்டும் உறுதியாக நடைமுறைப்படுத்தினேன்.

இப்ப சில மாதங்கள் முன்னாடி,  சாயங்காலம் இண்டரெஸ்டா பிளாக் படிச்சுகிட்டிருக்க நேரத்துல வந்து, “இன்னும் டீ போடலையா?”ன்னு பெரியவன் கேட்டான். என்னா  தைரியம்? அவன் வாப்பாவே  கேட்பதில்லை.  நானும் பதிவுகள் படிக்கும் ஆர்வத்தில், “ஏன், இன்னிக்கு நீ டீ போடேன்”ன்னதும், “அப்ப அன்னிக்கு..”  என்று ஆரம்பிக்கவும், உடனே நான் “அப்ப நீ சின்னப் பையன்; ஏழாங்கிளாஸ்தான். இப்ப  எட்டாஆஆஆங்கிளாஸ். தாராளமாப் போடலாம்”னு சொல்லவும் முணுமுணுத்துகிட்டே போ(ய்)ட்டான். இதை நீங்களும் தப்பாப் புரிஞ்சுருப்பீங்க, அவனை மாதிரியே. பசங்களுக்கு வீட்டு வேலைகளிலும் பங்கு இருந்தாத்தான் குடும்பம்.. சரி, சரி.

போன மாசம், என் வாப்பா வந்திருந்தப்போ, தாத்தாவும் பேரனும் ஒரே அறையில் தங்கிருந்தார்கள். பசங்களுக்கு முழுப் பரிட்சை லீவுங்கிறதால, காலையிலே எல்லாமே லேட்டாத்தான் நடக்கும்.  ஆனா, என் வாப்பாவுக்கு காலையிலே ஆறு மணிக்கு டீ குடிக்கணும்.  அது தெரிஞ்ச பெரியவன், காலையில சுப்ஹூ தொழுதுட்டு டீ போட்டு வச்சுட்டு படுத்துடுவான்.

அதுல ரொம்ப சந்தோஷமான வாப்பா, யார்கிட்ட பேசினாலும், பேரன் டீ போட்டுத் தருவதைப் பெருமையாச் சொல்லுவாங்க.  இதை நான் என் பங்குக்கு என்னவர்கிட்ட பகிர்ந்து பெருமைப்பட, அவரோ, “பேரனாவது பொறுப்போட இருக்கானேங்கிற சந்தோஷம் அவருக்கு” வழக்கம்போல..


Post Comment