Pages

ஹை..புது ஆஃபிஸ்!!
     
ஒரு வழியா புது ஆஃபிஸ் வந்து செட்டில் ஆகியாச்சு. இந்த பில்டிங்ல 89 அலுவலகங்கள் இருக்கிறதா சொன்னாங்க. ரொம்பப் பெரிய பில்டிங்னு நெனச்சிராதீங்க. 2 மாடிக் கட்டடம்தான். ஒவ்வொரு அலுவலகத்துக்கும் ஒரே ஒரு ரூம்தான். ஒரு ஹோட்டல் போல, அவரவர் ரூமுக்குள் இருந்து வேலை (இருந்தா) பாத்துக்க வேண்டியதுதான்!! என்னை பொறுத்த வரை பழைய ஆஃபிஸுக்கும், புதுசுக்கும் பெரிய வித்தியாசம் ஒண்ணும் இல்லை. என்ன, அங்கே நானே டீ போட்டுக்கணும்; இங்க அதுக்கு ஒரு "டீ பாய்" இருக்காப்ல. ஆனாலும் நான் எப்பவுமே அந்த ரிஸ்க் எடுக்குறதில்ல. வேணும்னா நானே போட்டுப்பேன். இந்த ஆம்பிளைங்க போடுற டீ/காஃபிய குடிக்கிறத விட பச்சத்தண்ணிய குடிச்சுட்டு போலாம். (என் வீட்டுக்காரர் தவிர;  அதான் நல்லா டிரெய்னிங் கொடுத்துட்டன்ல!!)

ஆஃபிஸ் ஷிஃப்ட் பண்ண‌லாம்னு முடிவெடுத்து "Packers & Movers "ம், கிடங்கு அறையும் ( அதாங்க, "Warehouse") தேடினா கெடைக்க என்னா கஷ்டமாயிருக்கு?! என்னானு விசாரிச்சா, இந்த ரெஸஷனால நிறைய ஆஃபிஸுங்களை இப்படித்தான் எங்கள மாதிரி இழுத்து மூடிட்டாங்களாம், அதனால ரொம்ப பிஸியாம் இவங்கள்ளாம். ஹூம், ரெஸஷனால வாழ்றவங்களும் இருக்காங்க பாருங்க!!


எங்களுக்கு வந்த Packers & Movers கம்பெனியில் மலையாளிப் பசங்களும், தமிழ்ப் பசங்களும் இருந்தாங்க. எல்லாம் சின்ன சின்னப் பசங்க. நான் அபுதாபி வந்த புதுசுல எங்கப் பாத்தாலும் மலையாள மொழிதான் காதுல விழும். இப்ப ரெண்டு, மூணு வருஷமா எங்கும் தமிழ், தமிழ்தான்!!  முன்னெலாம் வெளியே போனா, தைரியமா தமிழ்ல சத்தமாப் பேசுவேன். ஆனா இப்ப கொஞ்சம் அக்கம்பக்கம் பாத்துதான் பேச வேண்டியிருக்கு!! இதோ இந்த புது ஆஃபிஸுலயும் தமிழ்ப் பசங்கதான் ஹவுஸ் கீப்பிங்கில் இருக்காங்க.

பக்கம் பாத்து பேசறதைப் பத்திச் சொல்லும்போது ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. இப்பவெல்லாம் அநேகம் பேருக்கு ஹிந்தி தெரிஞ்சுருக்கு. ஒரு இருபது இருவத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஹிந்தி தெரிஞ்சவங்க ரொம்ப ரொம்ப குறைவு. என் அத்தை ரெண்டு பேர், அப்போ டீனேஜ் வயசு. ரெண்டு பேரும் டெல்லியில படிச்சவஙக. அதனால ஹிந்தி நல்லா தெரியும். வெளியே எங்க போனாலும் ஹிந்திலத்தான் அவங்களுக்குள்ள பேசிக்குவாங்க. வழக்கமா ஒரு கடைக்குப் போவாங்க. அப்படி ஒருநாள் போனப்ப கடையில புதுசா ஒரு இளைஞன் இருந்தான். பெரிய அத்தை, “ஏ நயா லட்கா கோன் ஹே. தூஸ்ரா ஆத்மி கஹான் கயா?” என்று சின்ன அத்தையிடம் சொல்ல, உடனே கடையில் இருந்தவன், “மே உன்கா பாய் ஹூம். கல் துபாய்ஸே ஆயா” என்று சொல்ல ரெண்டு பேரும் “ஙே”

(”எப்பவும் கடையில் இருப்பவனைக் காணோமே; இவன் யார் புதிதாக இருக்கான்?”  “நான் அவரின் தம்பி. நேற்றுதான் துபாயிலிருந்து வந்தேன்.”)
                                     
                                        
                            

Post Comment

வேண்டும் பொறுமை!!

என்னோடு பள்ளியில் படித்த தோழிகளோடு இப்போ சுத்தமா தொடர்பில்லை. கல்லூரியில் படித்த நண்பர்கள்தான் அதிகம் தொடர்பில் உள்ளார்கள். கல்லூரி முடித்து 16 வருடங்கள் ஆகிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில், ஒவ்வொரு விதமான வாழ்க்கை முறையில்!!  நாங்கள் சந்தித்துப் பல வருடங்கள் ஆகிவிட்டன. இணையம் மற்றும் தொலைபேசி மூலம் நட்புகளை பகிர்ந்துகொண்டிருக்கிறோம்.

பிரிவுநாளன்று என்னிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு சக மாணவி என்னிடம் இனி என்ன செய்யப்போகிறாய் என்றாள். என் வீட்டில் ஏற்கனவே திருமணத்திற்குப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதனால் முதலில் கல்யாணம் அதன்பின் வேலை செய்ய முடியுமா என்று பார்க்கவேண்டும் என்றேன். ஹும் நீ கொடுத்து வச்சவ, எங்கம்மா நான் மாஸ்டர் டிகிரி படிச்சாத்தான் கல்யாணம்னு ஸ்டிரிக்டா சொல்லிட்டா என்று நொந்துகொண்டே போனாள். பிறகு என்ன ஆனது என்று தெரியவில்லை. எனக்கு 3 வருடங்கள் கழித்து திருமணம் நடந்தது.ஒரு சிலர் நல்ல வேலையில், உயர்ந்த அந்தஸ்தில் இருக்கிறார்கள். ஒரு சிலருக்கு சுமாரான வேலை என்றாலும் திருப்தியான வாழ்வு அமைந்திருக்கிறது. சில பெண்கள் வேலை பார்க்கவில்லை. அநேகம் பேருக்கு எல்லாமே சிறப்பாய் அமைந்திருப்பது மகிழ்வாய் இருக்கிறது. ஒரு சிலருக்கு ஒன்று (வேலை, நிதி நிலைமை) சிறப்பாக இருந்தால் மற்றொன்று (குடும்ப வாழ்வு) சுமாராக இருக்கிறது. உலக நியதி அதுதானே!!படித்துமுடித்த அடுத்த வருடத்திலேயே என் வகுப்புத் தோழி கேன்சரால் இறந்தது பேரிடி. இறப்பதற்குச் சில தினங்கள் முன்பு அவளைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருக்கும்போது நோய் முற்றிலும் நீங்கி விட்டதாகவும், இனி வாழ்க்கையை இனிமையாகத் தொடரப் போவதாகச் சொல்லியது இன்னும் கண்ணில் நிற்கிறது. 


ஒரு தோழி, சந்தேகப் பேர்வழியான கணவனிடம் இருந்து விவாகரத்து வாங்கி மகனுடன் அமெரிக்காவில் வசிக்கிறாள்.  அவளிடம் கேட்டேன், இப்ப நீ நினைச்சா சமைக்கலாம்; நினைச்சா சமைக்காம இருக்கலாம் இல்லையா? என்று. அது ஒரு வசதிதான். ஆனால், இந்த இன்கம்டாக்ஸ், ஹவுஸ் லோன், பெர்ஸனல், கார் மற்றும் வீட்டு இன்ஷ்யூரன்ஸ் போன்ற விஷயங்களும் இப்ப என் தலையில் விழுந்துவிட்டது. அதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கு என்றாள்.


இன்னொரு தோழி, திருமணமான ஒரு வாரத்திலேயே பிரிந்துவிட்டாள். படிப்பு, வேலை குறித்து ஏமாற்றிவிட்டானாம்.  வெளிமாநிலத்தில் தனியே வேலைபார்க்கும் அவள், வேறொரு தோழியின் வற்புறுத்தல் காரணமாக மறுமணத்திற்குச் சம்மதித்திருக்கிறாள். ஆனால் பொருத்தமானவர் கிடைப்பது சிரமமாக உள்ளது இப்போது.


மற்றொரு தோழி, அமெரிக்காவில் கணவனுடன் வசிக்கும்போது பிரசவத்திற்குப் பின்  ஏற்பட்ட டிப்ரெஷனுக்கு இன்ஷ்யூரன்ஸ் இல்லாததால் சிகிச்சை அளிக்க கணவன் மறுத்ததாக வந்த செய்திகள்... தற்போது மிக நலமாக இருக்கிறாள்.


வேறொரு தோழி, மூளையில் கட்டி வந்து, அறுவை சிகிச்சைக்குப்பின் தேறி, முழுநலத்துடன் அண்ணா பல்கலையில் ஒருநாள் வேலை முடித்து வரும்போது விபத்தில் இறந்தாள். குழந்தைகள் அவள் அம்மாவின் பராமரிப்பில். வீட்டில் ஒரே மகள் என்பதால் மிக மிக செல்லமாக வளர்த்தார்கள் அவளை.இன்னொரு நண்பன், திருமணமான ஒரு மாதத்திலேயே, பிரெயின் டியூமர் வந்து, மனைவி பிரிந்து, சிகிச்சை பலனில்லாமல் சென்ற வருடம் இறந்தான். அவனிடம் கல்லூரியில் ஐந்தாறு பெண்களாவது காதல் ஓலை நீட்டியிருப்பார்கள். இவன் ஏற்கவில்லை!!தற்போதைய படிப்பினையாக, நெருங்கிய உறவினர் இரு கிட்னிகளும் செயலிழந்ததினால், வாரம் 3 முறை டயாலிசிஸ் செய்துகொண்டே வேலை பார்த்துகொண்டு.. டைப்-2 டயபடிக் வேறு!! அவரது மன உறுதியையும், மனைவியின் அர்ப்பணிப்பையும் கண்டு வியக்காத நாளில்லை நான். மனைவி அவருக்கு கிட்னி கொடுப்பதாக முடிவு செய்து, இன்று அறுவை சிகிச்சைக்கு நாள் குறிக்கப் பட்டிருந்தது. இன்று காலை பல்வித சோதனைகளுக்குப் பின், முன் தயாரிப்பாக  இருவருக்கும் தோளில் டியூப் போடும் சிறிய அறுவை சிகிச்சையும் முடிந்து,  பெரிய அறுவை சிகிச்சைக்குத் தயாரான நேரத்தில் சுவாசப் பிரச்னை வரவே, தள்ளிவைத்திருக்கிறார்கள். அதனால் தோளில் போட்ட டியூபை எடுக்க மீண்டும் அறுவை சிகிச்சை!!

இவையெல்லாம் எப்பவும் ஞாபகம் வரும்.  நான் நல்ல நிலைமையில் இருப்பதை நினைத்து, அறிவான பிள்ளைகள், பொறுமையான கணவன், இன்னும் பலவற்றை நினைத்து இறைவனுக்கு நன்றிகூறி விட்டு, இனி பிள்ளைகளிடமும், கணவனிடமும் கோபப்படக்கூடாது. பொறுமையாக இருக்கவேண்டும்.  பிள்ளைகளிடம் அன்பாக எடுத்துச் சொல்லவேண்டும். சின்னக் குழந்தைகள்தானே, எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார்கள் என்று நல்லமுறையில் நினைத்துக் கொண்டே  வீட்டுக் கதவைத் திறந்தவுடன் கண்ணில் பட்டது, டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் அப்பாவும், பிள்ளைகளும், தெறித்து வீசப்பட்ட ஷுக்கள், காலில் தட்டும் புத்தகப் பைகள், சோஃபாக்களில் தோரணமாகப் போடப்பட்டிருக்கும் உடைகள் ....”எத்தனை தரம் சொன்னாலும் தெரியாதா உங்களுக்கெல்லாம் அதது வைக்கிற இடத்தில வைக்கணும்னு? வந்தவுடனே டி.வியைப் பாக்க உக்காந்திடணுமா?”.....

Post Comment

அஹிம்சை ஆயுதம்!!

Character Assassination - இதற்குச் சரியான தமிழ்ப் பதம் என்னவாயிருக்கும்?


இது ஒரு அஹிம்சை ஆயுதம்!! ஆமாம், கத்தியின்றி ரத்தமின்றி எதிரிகளை, குறிப்பாகப் பெண் எதிரிகளைப் பழி வாங்க நல்லதொரு ஆயுதம்!! பொதுவாக அலுவலகங்களில் சக பெண் அலுவலர்களுக்கும், அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களுக்கும், உறவுகளில் உள்ள பிடிக்காத பெண்களுக்கு எதிராக உபயோகிக்கப் படும் ஆயுதம். அதுவும் சில இடங்களில் பெண்களாலேயே பாவிக்கப் படுகிறது. அரசியலில் இதுதான் பிரதான ஆயுதம்!!பழிசுமத்தப் படும் பெண் கொஞ்சம் மன உறுதி இல்லாதவர் என்றால், தற்கொலையிலோ, கொலையிலோ கொண்டு போய் விடும். அதிக பாதிப்பு இல்லாத (!!) விளைவுகள் என்றால், விவாகரத்து, குடும்பத்தை விட்டு விலக்கி வைத்தல், வேலை இழத்தல் போன்றவை நிகழலாம்.

பெண்ணின் நடத்தை மீது பழி சுமத்துவது (சரியான மொழிபெயர்ப்பாக எனக்குத் தோன்றவில்லை; வேறு வார்த்தைகளும் தெரியவில்லை; அதனால் பிரயோகிக்கிறேன்.) என்பது நம் நாட்டில் வழமையாக நடந்து வருவது!! ”சிறுபான்மை அரசு - திருமதி. ஜெயலலிதா” ஞாபகம் வருகிறதா? புகழ்பெற்ற பெண் அரசியல்வாதிகள், பெண் உயரதிகாரிகள் உயர்நிலைக்கு வரும்போது தவறாமல் முதன்முதலில் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பாணம்!! இதிலிருந்து மீண்டு வந்துவிட்டார்களென்றால் பின் ஜெயம்தான்!!  


உயிரோடு இருக்கும்போது மட்டுமே அதிகமாக பாய்ச்சப்பட்டு வந்த இந்த ஆயுதம்,  சமீபகாலமாக இறந்த பெண்களின் மீதும் ஏவப்படுகிறது.  கொலை செய்யப் பட்ட பெண்களின் மீதும் இப்போதெல்லாம் கூறப்படுகிறது. இது மிகவும் வசதி. இறந்தவர் உண்மையை நிரூபிக்க வரப் போவதில்லையே! முறையற்ற தொடர்பால் சில கொலைகள் நடந்தன என்பதால் இறக்கும் எல்லா பெண்களும் அவ்வாறே இருப்பார்களா?கிட்டத்தட்ட ஒரு மாதம் முன்பு கொலை செய்யப்பட்ட அனந்தலட்சுமி, காவலர் ஜெபமணி ஆகியோர் மீதும் இப்பாணம் ஏவப்பட்டது. அதிலும் அனந்தலட்சுமியைக் குறித்து வந்தவையெல்லாம், அவரது கணவர் பெங்களூரிலும், இவர் சென்னையிலும் வசிக்கிறார் என்பதால் ஆமாம், அவர் அப்படித்தான் என்ற ரீதியிலேயே இருந்தது கொடுமை.  இப்போ விசாரணையில் அது உண்மையல்ல என்று தெரிய வந்துள்ளது. அதுவரை சொல்லப்பட்டதன் பாதிப்பு?  அக்குடும்பம் என்ன பாடு பட்டிருக்கும்? எவ்வளவு மனவேதனை,  அவமானம், சுடுசொற்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும் அவரின் குடும்பத்தினர்?


அனந்தலட்சுமியின் சிரித்தமுகத்தையும், மகனுடன் நிற்கும் பெருமிதமும், சிவப்பு மடிசாரும், கள்ளமில்லா சிரிப்பையும் பார்த்தபோதே தோன்றியது, இவர் நிச்சயம் அப்படிப்பட்டவராக இருக்கமுடியாது என்று. அதுபோலவே விசாரணையில் திருப்பங்கள். நல்லவேளை அச்சமயம் புவனேஸ்வரி விஷயம் தலைதூக்கியதால் இந்த வழக்கு பின்னுக்குப் போய்விட்டது. இல்லையென்றால் ஊடகங்களில் ஒரு தொடர்கதையே எழுதப்பட்டிருக்கும்.


அதேபோல, பெண்காவலர் ஜெபமணியின் விஷயத்திலும். அரசு விழா பந்தோபஸ்துக்காகப் போனவர் பத்து நாட்களுக்கு மேலாகியும் வீடு திரும்பவில்லை என்றவுடன் முறையற்ற தொடர்பு உண்டா என்ற கோணத்திலேயே பத்திரிகைச் செய்திகள் வந்தன. பிறகு தெரிந்தது வழியில் லிஃப்ட் கொடுத்தவன் (ஒரு சீரியல் கில்லர்) கற்பழித்துக் கொலை செய்தான் என்று!!


இவ்விரு சம்பவங்களிலும் போலீசார் புலனாய்வதற்காக இந்தக் கோணத்தில் விசாரிக்க வேண்டியதிருந்திருக்கலாம். அதை உடனே பத்திரிகைகளில் வெளியிடத்தான் வேண்டுமா? இன்று ஊடகம் ஒரு பெரிய சக்தியாக உருவெடுத்திருக்கும் நிலையில்,  ஊகமே மனிதனைக் கொல்லும் காலத்தில், இம்மாதிரிச் செய்திகள் சம்பந்தப்பட்டவர்களை எவ்வளவு பாதிக்கும் என்பதைக்  காவல்துறையோ, ஊடகங்களோ அறியாமல் போனது ஏன்?


மறுப்புச் செய்திகள் பின்னர் கொடுக்கப் பட்டாலும் சம்பந்தப் பட்டவர்கள் மனதில் ஏற்பட்ட வடு மறையுமா? அவர்களுக்குக் குழந்தைகள் இருந்தால் அவர்களின் பிஞ்சு மனது என்ன பாடுபடும்?


ஏற்கனவே பரிந்துரைக்கப்படுகின்றபடி, ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படவேண்டும். வழக்குகளின் விசாரணை முழுமையாக முடிவடையும் வரை அதுகுறித்து ஊடகங்களில் செய்தி வருவது முறைப்படுத்தப் பட வேண்டும்.  ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கலாம், ஊரார் வாய்க்கு?


இவ்வழக்குகளிலிருந்து இன்னும் சில விஷயங்கள் நாம் அறிய வருகின்றன. அனந்தலட்சுமியைக் கொலை செய்தவன் அவருக்கு அறிமுகமானவனே. அப்படியானால் நம்மோடு நட்புடன் இருப்பவர்களைக் கூட நம்பமுடியாதா இனி?  வெளியாட்களுடன், அக்கம்பக்கத்தினருடன் பழகாமலிருந்தாலும் சிடுமூஞ்சி என்று பெயர். கலகலப்பாகப் பழகினாலும் ஆபத்து!! குழப்பம்தான்.

ஜெபமணி பந்தோபஸ்து பணிக்காக வெளியூர் சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்டார். பெண்காவலர்களுக்கு இது ஒரு பெருந்தொல்லை. காவல்துறை சரியான போக்குவரத்து வசதி செய்து கொடுத்திருந்தால் இது நடந்திருக்காது. சொற்பமாக பேட்டா தருவதுடன் காவல்துறையின் கடமை முடிந்துவிடுகிறது. இனியாவது இப்போக்கை காவல்துறை மாற்றிக் கொள்ளுமா?


இன்னும் ஒரு கேள்வி: காவலர்களுக்கு வழமையான உடற்பயிற்சியெல்லாம் இல்லையா? காவலர்கள் என்றால் குற்றவாளிகளை அடித்துக் கொல்வார்கள் என்பதெல்லாம் சினிமாவில் மட்டும்தானா? காவலராக இருந்தும் சாதாரணப் பெண்ணைப் போலப் போராடித்தான் உயிரை விட்டிருக்கிறார்.  அப்படியென்றால் இவர்கள் என்ன சமாளிப்பார்கள் என்று நம்பி பொதுக்கூட்ட பந்தோபஸ்து பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள்?கேள்விகள் எத்தனையோ எழத்தான் செய்கின்றன. பதில்தான் எங்கு கிடைக்கும் எனத் தெரியவில்லை.Post Comment

டிரங்குப் பொட்டிதினமும் இல்லையென்றாலும் அவ்வப்போதாவது பதிவுகள் எழுதணும்னு நினைப்பேன். மற்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது அதை எழுதலாம், இதை எழுதலாம்னு நினச்சு வச்சுட்டு அப்புறமா நேரம் கிடைக்கும்போது கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்தா, எல்லாம் மறந்து, அப்ப‌டியே மைண்ட் ப்ளாங்க் ஆயிடுது. காலேஜ் படிக்கும்போது பரிட்சை ஹால்ல இப்படித்தான் ஆகும்!

சரி, அப்படியே மத்த பதிவர்கள் பக்கமெல்லாம் போயிட்டு வருவோம்னு ஒரு ரவுண்ட் அடிச்சா,(இது ”அந்த” ரவுண்ட் இல்லீங்கோ!!), மத்தவங்க எழுதியிருக்கதெல்லாம் பாத்தப்புறமும் நீயெல்லாம் கண்டிப்பா எழுதித்தான் ஆவணுமான்னு மனசாட்சி ஒரு கேள்வி கேட்கும்!! அதோட பதிவு போடாம போயிடுவேன். இப்படியே எத்தனை நாள் எழுதாம இருக்கிறதுன்னு யோசிச்சு, சரி, அதெல்லாம் வாசிக்கறவங்க கவலை, அவங்க தலையெழுத்து அப்படின்னா நாம என்ன பண்ண முடியும்னு அடிக்கடி எழுதணும்னு முடிவு பண்ணிட்டேன்!!


****************


எங்க ஆஃபிஸ் வேற இடத்துக்கு மாறப் போறோம்.  துபாய் தலைமை இடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனம்தான். அபுதாபியில் இரண்டரை வருடங்கள் முன் கிளை ஆரம்பித்தார்கள். இந்த வருட ஆரம்பத்தில் கிட்டத்தட்ட 35 பேர் வேலை செய்து கொண்டிருந்தார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையா, இப்ப நாலே நாலுபேர் மட்டும் இருக்கிறோம். இப்ப இருக்கும் 6 தளங்கள் கொண்ட வில்லா (தனி வீடு) விலிருந்து மாறி, “Office space“க்கு மாறப் போவதால், இரண்டு பேரை  துபாய் ஆஃபிஸிற்கு போகச் சொல்லிவிட்டார்கள். நானும் இன்னொருவரும் மட்டும் இங்கு இருப்போம். “Office space“ என்பது ரெடிமேட் ஆஃபீஸ் போல!! ஒரு தளம் அல்லது ஒரு கட்டிடம் முழுவதும் ஒரு நிறுவனம் எடுத்து, அதில் ஃபோன், இண்டர்நெட், ரிஸப்ஷன், பிரிண்டர், ஸ்கேன்னர், ஸெராக்ஸ் மிஷினகள், டேபிள், சேர், ஏன் காஃபி, டீ போட ஆஃபிஸ்பாய் வரை எல்லா வசதிகளும் செய்து தந்துவிடுவார்கள். நாம் நமது கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு போக வேண்டியதுதான் பாக்கி!! சதுர அடி கணக்கில் வாடகை!! (அதுவே கொள்ளை விலையா இருக்கு!!)

துபாய் ஆஃபிஸ் போகச் சொன்ன ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம். ஏன்னா துபாயிலும் வேலை இல்லை!! அங்கே இவங்க போஸ்ட்ல ஏற்கனவே ரெண்டு பேர் இருக்காங்க. இவங்கள சும்மா அங்க போய் இருக்கச் சொல்லியிருக்காங்க. எப்ப ஓலை வரும்னு தெரியாது. இங்க எங்க நிலைமையும் அப்படித்தான்.  இப்ப ஒண்ணே ஒண்ணு, கண்ணே கண்ணுன்னு ஒரே ஒரு ப்ராஜக்ட் மட்டும் நடந்துகிட்டு இருக்குது. அதுவும் டிசம்பர்ல ஹேண்ட் ஓவர். அதுக்கப்புறம் நானும் “புத்தம்புது ஓலை வரும்; இந்த பூவுக்கொரு சேதி வரும்”னு பாடிகிட்டு இருக்க வேண்டியதுதான்!! பாப்போம்!!


*************


கோவாவுல நடந்த குண்டுவெடிப்புக்குக் காரணம், முன்பு மஹாராஷ்டிராவில் மலேகான் குண்டுவெடிப்பு நடத்திய பெண் சாமியாரின் அதே அமைப்புதானாம்.  குறித்த நேரத்துக்கு முன்பே வெடித்ததில் இந்த முறையும் ப்ளான் ஃபெயிலியர்!! இந்த ”இந்து” தீவிரவாதிகளுக்கு அனுபவம் குறைவு என்பதாலா இல்லை சாமர்த்தியம் போதாதா?! (இந்த அல் காயிதா, தாலிபான்கிட்ட டிரெய்னிங் கேட்டுப் பாக்கலாமே??) பத்திரிக்கைகள வழக்கம்போல இதைக் கண்டுகொள்ளவில்லை,  அதற்கு இது ஒன்றும்  “இஸ்லாமிய” தீவிரவாதிகள் செய்தது இல்லையே??


***********************


காலை நேரம் 6.30 மணிக்கு சின்னவனைப் பள்ளிக்குத் தயார் செய்யும் நேரம் மெகா டிவியில் அமுதகானம் என்ற பெயரில் பழைய தமிழ் பாடல்கள் ஒளிபரப்பப்படும். அந்நேரத்து டென்ஷனை மட்டுப்படுத்த நல்ல வழி.  என்ன ஒரு கஷ்டம், சின்னவனுக்குப் பிடிக்கிற மாதிரி பாட்டாக இருக்கணும். பாட்டைக் குறித்து  மகன் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதும் ஒரு சவால்தான். ஒரு நாள்  “பாலூட்டி வளர்த்த கிளி”  பாட்டில்  “சட்டமும் நான் உரைத்தேன்; தைரியம் நான் கொடுத்தேன்; பட்டம் மட்டும் வாங்கி வந்து பாய்ந்து செல்லப் பாக்குதடி” என்ற வரிகளில் “சட்டம்” என்பதன் அர்த்தம் கேட்டான். ஒருமாதிரி விளக்கினேன். “சரி, அதுக்கு ஏன் பட்டம் (Kite) வாங்கிட்டு வந்தாங்களாம்??”

இப்பவெல்லாம் பாடல்களின் மெயின் ஆக்டரைவிட, உடன் இருக்கும் துணை நடிகர்களின் நடிப்புதான் அதிகம் கவருகிறது. இந்தப் பாட்டில் சிவாஜியின் மனைவியாக வருபவர் (பண்டரிபாய்??) விதவிதமாக அழுவதையே வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னே என்னங்க, 5 நிமிஷமா, ஒரு வார்த்தைகூடப் பேசாம, அழ மட்டுமே செய்யணும்னா எவ்வளவு கஷ்டம்??


**********************


பெரிய மகன் பெயர் அகீல் ஹுஸைன் (Aqeel). அதனால்தான், நான் “ஹுஸைனம்மா” என்பது தெரியும். சின்னவன் பெயர் முஹம்மது ஆகிப் (Aaqib). அவங்க அப்பாவும்  ஹுஸைன்தான். இப்பவெல்லாம் நான் ஹுசைனம்மா என்ற பெயரில் பிளாக் எழுதுவதையும், மெயில் செக் பண்ணுவதையும் பார்த்துவிட்டு “ஏன் நீ முஹம்மதம்மான்னு பேர் வச்சுக்காம, ஹுஸைனம்மான்னு வச்சுருக்க”ன்னு  கேட்டுகிட்டேயிருக்கான். என்னத்த சொல்ல? அதுக்குத்தான் அவனுக்கும் ஹுஸைன் வர்ற மாதிரி பேர் வைக்கலாம்னு அப்பவே சொன்னேன். .  “நீ அகீல் ஹுஸைனைத் திட்டுற மாதிரி ஜாடையா என்னைத் திட்டுறது போதும்.  இனியும் என்னால பொறுக்க முடியாது”ன்னு பழி வாங்கும்விதமா என் பெயரில் வரும் ”முஹம்மது”வைச் சேர்த்துட்டார். 

“உன் பேரும் என் பேரும் ஒண்ணுதான்; அதனால உன் அம்மாதான் நான்னு எல்லாருக்கும் தெரியும். அதனால ”முஹம்மதம்மா”ன்னு வைக்கல”ன்னு சொல்லி சமாளிச்சுருக்கேன் இப்போதைக்கு!!


*************

அந்தப் பெயர்க்காரணம் இருக்கட்டும், யாராவது இந்தப் பதிவுக்கும், தலைப்புக்கும் என்ன சம்பந்தம்னு யோசிச்சீங்களா? அதாங்க, எல்லாரும் கதம்பம், மிக்ஸ் மசாலா, ஜிகர்தண்டா, ரெயின்போ அப்படின்னெல்லாம் பேர் வைக்கிறாங்களே, அதே மாதிரி நாமளும் வித்தியாசமா பேர் வைப்போம்னு மூளையக் குடைஞ்சதில கண்டுபிடிச்சதுதான் இந்த “டிரங்குப் பொட்டி” !! நாம சின்னப் புள்ளைங்களா இருந்தப்போ (இப்பவும் யூத்துதான்!!)  எல்லார் வீட்டிலயும் ஒரு டிரங்குப் பொட்டி கண்டிப்பா இருந்திருக்கும். அதுல அப்பாவோட கணக்குப் பொஸ்தகம், அம்மாவோட சிறுவாடு காசு, நம்மளோட விலைமதிப்பில்லாத “சாவி கொடுத்தா கொட்டடிக்கிற குரங்கு பொம்மை”, கொய்த் தஸ்பீஹ் (குவைத், அரபு நாடுகள்ல எங்கே போனாலும், அது எங்க ஊர்ல குவைத்தான்!!) இப்படிப் பலதும் கிடக்கும். அதேதான் இது!!Post Comment

கண்டிப்பாக கல்வி கற்கத்தான் வேண்டுமா?
என்னடா, போன ப‌திவில தமிழ்தான் படிக்கணுமா வேணாமான்னுதான் கேட்டிருந்தா, இப்ப மொத்தமா படிக்கவே வேணுமான்னு கேக்கறாளேன்னு நினைக்கிறீங்களா?

நேற்று அவள் விகடனில் "கற்கை நன்றே, கற்கை நன்றே" என்ற தலைப்பில் கல்வியின் சிறப்பு குறித்து ஒரு கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அதில் கமலஹாஸன் முதல் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் வரை கருத்து தெரிவித்திருந்தார்கள். அவர்கள் படிக்க முடியவில்லை என்பதற்காக வருந்தி, எல்லாருமே கண்டிப்பாக கல்வி கற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தார்கள். இதில் நான் மாறுபடுகிறேன்.

கருத்து கூறியிருந்த எல்லாருமே தத்தம் தொழிலில் வெற்றி பெற்றவர்கள். அடிப்படை கல்வி கூட இல்லாமல், திறமை, உழைப்பு, ஆர்வம் ஆகியவற்றை மட்டுமே கொண்டு பல இன்னல்களைத் தாண்டி ஜெயித்திருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் (கமல் தவிர) கல்வி கற்காததால் பட்ட கஷ்டங்கள் என்ன என்று பார்த்தால், ஆங்கிலப் புலமை இல்லாத‌தையே சுட்டிக் காட்டுகிறார்கள்!!

இந்த ஆங்கிலம் என்ற மொழியில் புலமை இல்லாததால் மற்றவர்களோடு (மற்ற நாட்டவர், வேற்று மாநிலத்தவர், கல்லூரி, பள்ளி மாணவர்கள்) இவர்களால் சகஜமாக பேச முடியவில்லையாம்!! அதனால், தாம் பட்ட கஷ்டம் மற்றவர்களும் பட வேண்டாம் என்று எல்லாரையும் கல்வி கற்க அறிவுரை கூறியிருந்தார்கள்!

படிக்காததால், அடிப்படை அறிவு பெறமுடியவில்லை, தொழிலின் நுணுக்கங்கள் கற்க முடியவில்லை, தொழிலை விஸ்திகரிக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி, அதற்காகப் படியுங்கள் என்று சொல்லியிருந்தால் ஒத்துக் கொள்ளலாம். அதைவிட்டு, ஆங்கிலம் தெரியாமல் கஷ்டப்பட்டேன், அதனால் படியுங்கள் என்று சொன்னால், இது ஹிந்தி படிக்கணுமா, வேண்டாமா மாதிரியில்ல இருக்குது?

ஆங்கிலம் என்பது தமிழ், ஹிந்தி போல ஒரு மொழி, அவ்வளவே. அதில் புலமை பெறுவது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. உதாரணம், கமலஹாசன்.  பள்ளிப் படிப்பு இல்லையென்றாலும் ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றவர். இதுபோல இன்னும் எவ்வளவோ உதாரணங்கள் உண்டு.  நானறிந்த பள்ளிப்படிப்பில்லாத தமிழ் குடும்பத்தலைவி ஒருவர், இப்போது  திருமணத்திற்குப்பின் அமீரகம் வந்ததில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் சரளமாக உரையாடுவார். இணையத்திலும் உலவுவார். ஏன், படிப்பறிவில்லாத கீழ்நிலை வேலைகளில் (சரியான வார்த்தைதானா?) ஈடுபட்டுள்ள எத்தனையோ பேர் மலையாளம், ஹிந்தி, அரபி மொழிகளில் வெளுத்து வாங்கவில்லையா? 

ஒரு மொழியில் புலமை பெறுவதற்காக 12+3 வருடங்கள் கல்வி கற்க முடியவில்லையே என்று வருந்துவது சரிதானா? சரி, இத்தனை வருடங்கள் கல்வி கற்ற ஒருவர் மட்டும் அவரது வேலையில் அல்லது சொந்தத் தொழிலில் உடனே வெற்றி பெறுகிறாரா? அரசு விதிமுறைகள் புரிந்துகொள்ளுதல், வங்கி கடன் பெறும் தகுதி மற்றும் விதிமுறைகள் அறிந்துகொள்ளுதல் போன்ற  சில படிகளை எளிதாகத் தாண்ட இந்த கல்வி உதவுமே தவிர, தொழில் தொடங்குவோர்க்கு கல்வியினால் பெரிய பயன் ஒன்றும் இல்லை என்றே சொல்வேன். ஆதாரம்,  நாணயம் விகடனில், “களமும், கல்லூரியும்” என்று ஒரு தொடர் வந்தது. அதில் பாண்டிபஜாரில் பொம்மை விற்கும் கல்வி கற்காத இரு இளைஞர்களிடம் ஒரு எம்.பி.ஏ. மாணவர் பேசிவிட்டுச் சொன்னது, ”நாங்கள் ஏட்டில் படித்து வருவதைச் செயலாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்!!” அந்த பாண்டிபஜார் இளைஞர்களின் மாத வருமானம் ரூ.20,000!!
 

வேலைக்குச் சேருபவர்களும்,  தாங்கள் படித்த துறையிலேயே வேலை செய்கிறார்களா என்றால் அதுவும் நூறு சதவிகிதம் இல்லை. என் அலுவலகத்தின் I.T. Administrator-ஆக பணிபுரிபவர், B.Sc.(Physics), B.Ed. படித்தவர். கணிப்பொறி படித்த பெண் Office Administrator!! இப்படி ”நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்று” என்ற கதையாகப் படிப்பது ஒன்றும், வேலை செய்வது வேறொரு துறையிலும் என்பது  வாடிக்கையாகிவிட்டது இக்காலத்தில்.


ஆக, அதற்காகப் படிக்கவே வேண்டாம் என்று சொல்லவில்லை. கல்வி என்பது அவசியமே!! ஆனால் கல்வி இல்லை என்றால் வாழ்வே இல்லை என்று முடிவு செய்யக் கூடாது!! கல்வி கற்க முடியாத நிலையில் இருப்பவர்கள் அதை நினைத்து வருந்திகொண்டிராமல், தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதே என் கருத்து. ஏன் சொல்கிறேன் என்றால், தமிழ்நாட்டில் விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஒரு ஏழை மாணவர், மேற்படிப்புக்கு கல்விக் கடன் கிடைக்கவில்லை என்று தீக்குளித்திருக்கிறார்!!  அதில் அவர் இறக்கவில்லை; பிழைத்துக் கொண்டார்.  ஏற்கனவே வறுமையிலும், கடனிலும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அந்தக் குடும்பம், இனி இவரது வைத்தியச் செலவுக்கும் கடன் வாங்க வேண்டும்!! அந்த மாணவர் பி.ஏ. படித்திருக்கிறார் என்பதால் அதை வைத்து வேலை தேட முயற்சித்திருக்கலாம் அல்லது விவசாயமே செய்திருக்கலாமே, அதில் என்ன இழிவு?

இதுவல்லாமல், கட்டாயத்துக்காகப் படிக்க வேண்டியிருக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகளும் உண்டு!!    உலகம்தான் எத்தனை விதமான மனிதர்களைக் கொண்டது!!

Post Comment

தமிழ் படிக்கத்தான் வேண்டுமா?அமீரகத்தில் இருந்துகொண்டு பிள்ளைகள் தமிழ் படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருக்கக்கூடாதோ என்று தோன்றுகிறது பல சமயங்களில்!!

தாய்மொழியில்தான் பேச வேண்டும் மற்றும் இந்தியா செல்லும்போது உறவினர்களுடன் தடையில்லாமல் பேச வேண்டும் என்பதற்காகவே வீட்டில் ஆரம்பம் முதலே பிள்ளைகளுடன் தமிழில்தான் பேசி வருகிறோம். (ஆங்கிலத்தில் எனக்குச் சரளமாகத் திட்ட வராது என்பதும் ஒரு காரணம் என்று சொல்லலாம்!!) பேசினால் மட்டும் போதாது, எழுதப்படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்று தாய்மொழிப்பற்று கொஞ்சம் அதிகமாகிப் போனதால் இரு பிள்ளைகளையும் தமிழ் படிக்கச் செய்தேன்/ செய்கிறேன்.

சின்னவனை அபுதாபியில் தமிழ் கற்றுக் கொடுக்கும்  இரண்டே பள்ளிகளில் ஒன்றில் சேர்த்திருக்கிறேன். பள்ளியின் தரம் ஒன்றும் ஆஹா, ஓஹோ என்றில்லாவிட்டாலும் நம்முர் அரசுப் பள்ளிகளை விட மோசமில்லை. ஆனால் தமிழ் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை ஒரு மலையாளி (நாகர்கோவில்வாசி)!! அதிலும் தமிழைத் தாய்மொழியாகப் படித்திராதவர் போல் தெரிகிறது. நோட்டில் அவர் எழுத்தைக் கண்டால் எரிச்சலாக வருகிறது. அதனால் இப்போ நானே தனியாக அவனுக்கு எழுதிக்காட்டி அதன்படி எழுதச் சொல்கிறேன். முதலில் ஆசிரியைக்குப் பயந்து மறுத்தவன், நான் அவரிடம் பேசிக்கொள்கிறேன் என்று சொன்னதால் ஒத்துக் கொண்டான்.

அந்த ஆசிரியை அதே வகுப்பில் தமிழ் படிக்கும் வேறு சில மாணவியரின் பெற்றோருக்கு வருட ஆரம்பத்தில் ஃபோன் செய்து தனக்குத் தமிழ் சரியாகத் தெரியாதென்பதால், தமிழை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டாம் என்று சொன்னாராம். அவரின் நல்லவேளை என்னிடம் பேசவில்லை!!

அவரின் கையெழுத்தைக் கண்டுப் பொறுக்க முடியாமல், இன்னும் சில விஷயங்களைக் குறித்தும் பேசலாம் என்றும் அவரை நேரில் சந்தித்தேன். தனக்குத் தமிழில் ஆர்வமில்லை என்றும், நிர்வாகத்தின் கட்டாயத்தால்தான் தமிழ் பாடம் எடுப்பதாகவும், நான் முன்பு சூபர்வைசரிடம் செய்த புகார்களால் அவருக்குக் கிடைத்த எச்சரிக்கைகளையும் அழமாட்டாமல் கூறினார். பிறகென்ன சொல்ல அவரிடம்? நிர்வாகத்திடம் பேசிப் பயனில்லை என்பது என் பெரிய மகன் அங்கு படித்தபோதே தெரிந்துகொண்டேன்.

பெரிய மகனும் இதே பள்ளியில் தமிழுக்காகவும் இரண்டு வருடங்கள் படித்தான். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகள். அப்பொழுதும் தமிழ் படித்துக் கொடுத்தது மலையாள ஆசிரியைகளே!! ஆனால் அவர்கள் பிறந்ததிலிருந்தே சென்னையில் இருப்பவர்கள். அதனால் ஓரளவு பரவாயில்லை.

இப்ப விஷயம் என்னன்னா,  வீட்டில் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் பேசும் நண்பர்களையும், சரளமாக ஆங்கிலத்தில் பேசும் அவர்களின் சிறு வயதுக் குழந்தைகளையும் பார்க்கும்போது தவறு செய்துவிட்டோமோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு முறையும் “இந்த ஸ்கூல்ல போய் ஏன் சேத்தீங்க” என்ற கேள்வி வரும்போதும்,  தமிழ் காரணமாக, வசதி இருந்தும், தரமில்லாத பள்ளியில் பிள்ளையைப் படிக்க வைக்கிறோமோ என்ற குற்ற உணர்வு வருகிறது.  “அதெல்லாம் தேவைன்னு வரும்போது படிச்சுப்பாங்க; நாமெல்லாம் கவர்மெண்ட் பள்ளிக்கூடத்திலதானே படிச்சோம்? இப்ப நல்லால்லையா? சின்ன வயசுலயே புள்ளைங்கள ஹை ஸ்டாண்டர்டா உள்ள ஸ்கூல்ல சேத்து கஷ்டப்படுத்தக் கூடாது” என்றெல்லாம் மழுப்பினாலும், எனக்குள் அந்தக் குற்ற  உணர்வு எழாமலில்லை.

இருந்தாலும் “பேரனோட பேசுறதுக்காக இந்த வயசுக்கு மேலயா இங்கிலீஸ் படிக்க முடியும்?” என்ற கேள்வியோடு கண்களில் நீர் தளும்ப நின்ற அந்தப் பாட்டியைப் பார்த்தபோது குற்ற உணர்வு கொஞ்சம் குறைந்தது!!


***************

பத்திரிகைகள்தான் இந்த புவனேஸ்வரி மேட்டரை ஏதோ பெரிய விஷயம் போல் எழுதி புண்ணியம் கட்டிக் கொள்கின்றன என்றால், இந்தப் பதிவர்களுமா?? அநேகமாக எல்லா ஆண்பதிவர்களும் இந்த வரலாற்றுச் சிறப்பைப் பற்றி ஒரு பதிவு எழுதி விட்டார்கள். 
(நாந்தான் மொத பெண் பதிவரோ?) இதைப் பற்றி எழுதாதவர்(ஆண் பதிவர்)கள் மிகக் குறைவே!! 

 ம்.. மேட்டர் பஞ்சமா அல்லது  ஆர்வக் கோளாறா?


****************

நான் அமீரகம் வந்த புதிதில் கேள்விப்பட்ட ஒரு ஜோக்:

ஒரு பயணிக்கும், டாக்ஸி டிரைவருக்கும் நடந்த உரையாடல்: (பயணி ஒரு வழுக்கைத் தலை இந்தியர் மற்றும் டா. டி. பாகிஸ்தானி என்பதும் உபரித் தகவல்கள்).

டா.டி.:  துமாரா நாம் கியா ஹே?

பயணி:  பாலகிருஷ்ணன்

டா.டி:  சிர்ப்பே ஏக் பால் பி நஹி ஹே, துமே கிஸ்னே ஏ நாம் தியா?

பயணி:  ??? .... @#$%^&*

ஹிந்தி தெரியாதவர்களுக்காக (இதுக்குத்தான் ஹிந்தி படிச்சுருக்கணுன்னு சொல்றது),  கடைசி வசனத்திற்கு மட்டும் மொழிபெயர்ப்பு: ஹிந்தியில் “பால்” என்றால் முடி. “தலையில் ஒரு முடி கூட இல்லை, உனக்கு யார் “பால்” கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது?”

Post Comment

இரண்டுமே மகன்களாக இருப்பதன் நன்மையும், தீமையும்
சின்னவனுக்கும், பெரியவனுக்கும் நேற்று மாலை சண்டை வழக்கம்போல!! பஞ்சாயத்து வைத்ததில் சின்னவன் அடித்ததாகப் பெரியவன் சொன்னான். ஏண்டா என்றதற்கு பெரியவன் அவனை “இடியட், ஸ்டுப்பிட், குரங்கு” என்று திட்டியதாகச் சின்னவன் சொன்னான். நான் சின்னவனை உற்றுப் பார்த்தேன்; என் பார்வையின் அர்த்தம் புரிந்து அவன் தலைகுனிந்து சிரித்தான். என்னடா சிரிச்சானான்னு யோசிக்காதீங்க. கொஞ்சம் முன்னாடிதான் என்கிட்ட வகுப்பில நடந்த கதையைச் சொன்னான். அவன் கிளாஸ்மேட் நசீமா அவனிடம் “Look up, Look down, Look left, Look right; Then scratch your head “ ன்னு சொன்னாளாம். இவன் செய்தவுடன் இவனை “ Hey, you are a monkey“ ன்னு சொல்லி சிரிச்சாளாம். அவனும் கூட சேந்து சிரிச்சுட்டு வந்திருக்கான். நான் கேட்டேன், “ஏம்லே, உன் ஃபிரண்ட் சொன்னா சிரிக்கிற; அண்ணன் சொன்னாஅடிக்கிற?”ன்னு கேட்டேன். அவன் அண்ணனுக்கு அதுதான் ரொம்ப கோவம். “ஒரு பொண்ணு குரங்குன்னு சொன்னா கேட்டுட்டு இளிச்சுட்டு வந்திருக்கான். இங்க நான் சொன்னவுடனே கோவம் வருது”ன்னு புலம்பிட்டு இருந்தான். சரி விடுடா, அவன் அப்பாவை மாதிரின்னு சமாதானம் பண்ணேன். வேற என்ன செய்ய?

**********************

நேற்று இரவு அலாரம் வைக்க மொபைலைத் தேடினால் எப்பவும் வைக்கும் இடத்தில் காணோம்!! நான் வைத்திருப்பதோ ஒரு டப்பா மொபைல் (என் பசங்க அப்படித்தான் சொல்வாங்க). அதிக விலை கொடுத்து வாங்கினால், அதைக் கண்ணும் கருத்துமாகக் கவனிக்க வேண்டுமே; அதோடு பசங்ககிட்ட இருந்து காப்பாத்த‌ணுமே? பசங்களும் எப்பப் பாத்தாலும் மொபைலே கதின்னு இருக்காங்க.

வீட்டுக்கு யாராவது வந்தாலும் கூட அவங்க கார் மற்றும் மொபைல் பற்றிய விபரம் கேட்டுவிட்டுத்தான் அவர்களைப் பற்றி விசாரிக்கிறார்கள். அபுதாபியில் ப‌ல வருடங்கள் இருந்துவிட்டு தோஹா சென்ற ஒரு குடும்பம் வீட்டுக்கு வருவதாக இருந்தது. பிள்ளைகளிடம் சொன்னபோது சின்னவன் கேட்டான், "நிஸ்ஸான் பாத்ஃபைண்டர் வச்சிருந்தாங்களே அந்த மாமாவா?". மனிதர்களை அவர்களிடம் உள்ள கார்களையும், மொபைல்களையும் கொண்டு அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளின் இயல்பாகிவிட்டது இது. பெரிய ஆண்களைப் போலவே, நண்பர்களைச் சந்தித்தாலும் இவை குறித்தே பேச்சு இருக்கிறது.

நான் சிம்பிளான மொபைல் வாங்கியதன் முக்கிய காரணம் பசங்க எப்பவும் மொபைலை எடுத்து நோண்டிக் கொண்டிருப்பதால்தான். பெரியவன் என் மொபைலைத் திரும்பியிம் பார்ப்பதில்லை; சின்னவன், அப்பாவின் மொபைல் கிடைக்காத சமயங்களில் என் மொபைலை நோண்டிக் கொண்டிருப்பான். கேம்ஸ், கேமரா கிடையாது என்பதால் ப்ரொஃபைல் மாற்றுவது, ரிங் டோன் மாற்றுவது, கண்ட நேரங்களில் அலாரம் வைப்பது, அதுவும் போலீஸ் சைரன் சவுண்டில் வைப்பது!!, ஃபோன்புக்கில் பெயர் மாற்றுவது என்று அக்கிரமங்கள் செய்வான். அதனால் அவன் கைக்கு எட்டாதபடிதான் வைத்திருப்பேன். ஆனாலும் எப்படியாவது கையில் கிடைத்துவிடும். ஒருமுறை ஆஃபிஸில் அடுத்த டேபிளில் பணிபுரிபவரின் மொபைல் ரொம்ப நேரம் அடித்துக் கொண்டிருந்தது. எரிச்சலுடன் அவரிடம் அந்த மொபைலை எடுத்துத்தான் பேசுங்களேன் என்றேன். அவர் அமைதியாக “அடிப்பது உங்கள் மொபைல்” என்றார். பயபுள்ள ரிங்டோன் மாத்தியிருக்கான்!!

இந்தத் தொல்லையெல்லாம் வேண்டாமென்று வைப்ரேஷனில் போட்டு வைப்பேன். என்ன செஞ்சானோ, இப்ப வைப்ரேஷன் வேலை செய்வதில்லை.

இப்ப என் கதைக்கு வருகிறேன். இவன் செய்யும் அலம்பல்களால் பலமுறை பட்டுவிட்டதால், இப்ப என்ன செஞ்சானோ என்ற கோபத்தில் ஹாலில் வந்து கத்தினேன் “எவண்டா என் மொபைலை எடுத்தது” என்று. ரெண்டு பேரும் பயமே இல்லாமல் வாயை மூடிக்கொண்டு சிரித்தார்கள். சிரிக்கும் தோரணையைப் பார்த்ததும் எனக்குப் பயம் வந்துவிட்டது. ஆஹா, மறுபடியுமா என்று நினைத்துக் கொண்டே ஏண்டா சிரிக்கிறீங்கன்னு கேட்டேன். பெரியவன் சொன்னான், “வாப்பாதான் ஃபோன் பேசணுன்னு உம்மொபைலை எடுத்தாங்க. அதுக்காக ஏம்மா வாப்பாவ இப்படி மரியாதையில்லாம அவன் இவன்னு சொல்ற?” நான் என்ன செய்யன்னு தெரியாம நாக்கைக் கடிச்சுட்டே அவரைப் பாத்தேன்; அவர் என்னடான்னா, எவ்வளவோ கேட்டுட்டோம்; இதையும் கேட்டுக்க மாட்டோமா அப்படிங்கற மாதிரி பேப்பர் படிச்சுட்டு உக்காந்திருந்தார். அப்படியே நைசா நழுவிட்டேன்.

ஒருவேளை இரண்டும் பையனா இல்லாம, ஒண்ணாவது பொண்ணா இருந்திருந்தா நான் “எவண்டா எடுத்தது”ன்னு கேக்காம, “யார் எடுத்தது”ன்னு கேட்டிருப்பேன் இல்லையா? ரெண்டுமே பையனா இருக்கறதுனாலத்தானே இப்படி கேக்கும்படி ஆயிருச்சு, இது தீமைதானே (அவருக்கு) ?

ஆனா ரெண்டுமே பையனா இருக்கறதுனாலத்தானே அந்த சாக்குலயாவது இப்படியெல்லாம் சொல்லிக்க முடியுது, அதனால இது நன்மையும்தானே (எனக்கு)?

Post Comment

டிரைவர்களின் சண்டை!!
என்னதான் "பைலட்"ன்னு பெத்தபேரு கொடுத்துருந்தாலும் கடைசியில நாங்களும் லோக்கல் பஸ், லாரி டிரைவர்களைவிட சீப் ரேஞ்சுதான்னு நிரூபிச்சுட்டாங்க நம்ம ஏர் இந்தியா விமானிகள்!! ஏற்கனவே ஏர் இந்தியாவை டவுண் பஸ் என்றுதான் சொல்வோம். இனி என்ன சொல்ல?

விஷ‌யம் எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்: ரெண்டு நாள் முன்னாடி ஷார்ஜாவிலருந்து லக்னோ போன ஏர் இந்தியா விமானத்தின் பைலட்கள் ரெண்டு பேரும் காக்பிட்டை விட்டு வெளியே வந்து சண்டை போட்டு காயம்படுமளவு கைகலப்பு ஆகியிருக்கு!!

இப்படியும் நடக்குமா என்று ஆச்சர்யமாயிருக்கு!! அதைவிட அதிர்ச்சி அதிகமாயிருக்கு!! என்ன சண்டை, எதனால சண்டை எதுவும் தெரியல. மலையாள நியூஸ் சேனல்கள் இதை எப்படி ஆராயாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. கேரளா சம்பந்தப்பட்டது இல்லை என்பதால் இருக்கும்.

என்னதான் ஆட்டோ பைலட் சிஸ்டம் இருக்கிறது என்றாலும், இப்படி இருவரும் ஒரே நேரத்தில் காக்பிட்டை விட்டு வெளியே வரலாமா? வந்த நேரத்தில எதாவது டர்புலன்ஸ் வரக்கூடிய மேகங்கள் அல்லது வேற பிரச்னைகள் வந்திருந்தா? அதெல்லாம் விடுங்க. ஒரு உயர்பதவியில இருக்க ரெண்டு பேர் அடிச்சுக்கறது எவ்வளவு ஒரு கேவலமான விஷயம்? அரசியல்வியாதிகளோ, அரசு அதிகாரிகளோ அடிச்சுகிட்டா அது நியூஸே இல்ல. ஆனா பயணிகள் விமானத்தின் பைலட்கள், அதுவும் விமானம் அந்தரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, பயணிகள் முன்னாடி?? வெறும் கருத்து வேறுபாடு, வாய்ச்சண்டை என்றால் கூட சரி, கொஞ்ச நேரத்தில சமாதானமாகிடுவாங்கன்னு இருக்கலாம். கைகலப்பு அளவுக்குப் போயிருக்கிறது!!

என் முந்தைய அலுவலகத்தில் ஒரு இளைஞன் என்னோடு வேலை பார்த்தான். உண்மையில் அவனுக்கு அந்த வேலையில் கிஞ்சிற்றும் விருப்பமில்லை. அவனுக்கு பைலட் ஆவதில்தான் விருப்பம். ஆனால் அதற்குப் பணம் வேண்டுமே, அதற்காக இந்த வேலையில் இருந்தான். இருந்தான் என்பதுதான் சரி!! நான், அவன், இன்னொரு பெண் மூவருக்கும் ஒரு அறை. ஒரு பதினைந்து நிமிடங்கள் சேர்ந்தாற்போல் அவன் இருக்கையில் இருக்க மாட்டான். எங்காவது சுற்றிக் கொண்டேயிருப்பான். இருக்கையில் இருக்கும் நேரமும் யூ ட்யூபில் ஹாஸ்யப் படங்களைப் போட்டுப் பார்த்து ஹோ ஹோவெனச் சிரித்துக் கொண்டிருப்பான். அவனிடம் ஒரு நாள் சொன்னேன், "நீ பைலட்டாக வேலைக்குச் சேரும்பொழுது நிச்சயம் என்னிடம் தெரிவிக்க வேண்டும்". மகிழ்ச்சியுடன் "நிச்சயம் சொல்கிறேன். ஏன் கேட்கிறாய்?" என்றவனிடம் சொன்னேன், "நீ இங்கே போரடிக்கிறது என்று அடிக்கடி எழுந்து வெளியே போய்விடுகிறாய், பரவாயில்லை. அதுபோல ப்ளேன் ஓட்டிக்கொண்டிருக்கும்போதும் அப்படி போய்விட்டால்? அதனால்தான், நீ எங்கே வேலை செய்கிறாய் என்று தெரிந்தால் அந்த ஏர்லைன்ஸில் போக மாட்டேன், அதற்குத்தான்."

அவன் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்தவன். அதனால் அந்த வாய்ப்பு வராது என்று நம்புகிறேன்.

இப்பத்திய ஏர் இந்தியா கேஸுல, சண்டை வரும்போது ப்ளேன் பாகிஸ்தான் மேல பறந்துகிட்டிருந்துதாம், அதனாலயா இருக்குமோ?

Post Comment

படகுச் சுற்றுலா
நேத்து தேக்கடியில் நடந்த விபத்த நினைச்சா நடுக்கமா இருக்கு. பாவம், சுற்றுலான்னு சந்தோஷமா வந்தவங்களுக்கு இப்படி ஆயிடுச்சே. வழக்கமா இதுபோல நடக்கும் விபத்துகளுக்கு பாதுகாப்பு குறைபாடுகள், பழைய படகு, அதிக ஆள் ஏற்றுதல் போன்றவை காரணமாக இருக்கும்.

ஆனால் இதில் புதிய படகு, லைஃப் ஜாக்கெட்கள் ஸ்டாக் இருந்தும், இப்படி ஆனதுக்குக் காரணம், மக்களின் அறியாமையே!! ஏன் நான் போயிருந்தா கூட நானும் இப்படித்தான் நடந்துகிட்டு இருப்பேனோ என்னவோ.

செய்திகளைப் பாத்துட்டிருந்த பெரிய மகன், படகு லேசா சரிய ஆரம்பிக்கும்போதே எல்லாரும் உடனே அடுத்த பக்கம் போயிருக்கலாமே என்று கேட்டான். நமக்கும் அதென்ன மழைத்தண்ணீரில் விடும் பேப்பர் போட்டா, படக்கென்று சரிய என்ற சந்தேகம் வந்தாலும், ஏன், எப்படி என்ற சில கேள்விகளுக்கு விடையறிய‌ முடியவில்லை.

நேற்றிலிருந்து இன்று காலை வீட்டை விட்டு கிளம்பும் வரை ஏஷியாநெட், கைரளி சேனல்கள் அந்த செய்திகளை மீண்டும் மீண்டும் அலசிக் கொண்டிருந்தார்கள், ஏதோ தேர்தல் முடிவுகள் போல, பலி எண்ணிக்கை வேறு. இந்த‌ அளவு இம்மாதிரி விபத்துக்களை விரிவாகக் காண்பிக்க வேண்டுமா என்று தோன்றியது. வர வர மீடியாக்கள் மீது ஒரு கோபம் வர ஆரம்பித்துவிட்டது. இரண்டு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு தகவல்கள் தர முயன்றன. அங்கே நிற்பவர்கள், போனவர்கள், வந்தவர்கள் என்று பல‌ரிடமும் தொலைபேசி வழி பேட்டி!! நடந்த சில மணித்துளிகளில் படங்களும், நேரலை ஒளிபரப்பும் வேறு!!

பேசிய பொதுமக்கள் பலரும் பட‌ம் எடுத்திருப்பதாகச் சொன்னார்கள். எப்படி முடிகிறது? சூழ்நிலை தந்த அதிர்ச்சியையும் மீறி, மொபைல், கேமரா என்று ஃபோட்டோ எப்படி எடுக்க முடிகிறது? நம்மால் என்ன உதவி செய்ய முடியும் என்று பார்க்காமல், எப்படி படம் எடுத்துக் கொண்டிருக்க முடிகிறது? இந்த டி.வி.காரர்கள் வேறு, அதிகாரி, அமைச்சர் என்று ஒருவர் விடாமல் தொலைபேசிப் பேட்டி!! அவர்களை வேலை செய்யவிடாமல், இப்ப இந்த பேட்டியெல்லாம் தேவையா? அவுங்களே இந்த மாதிரி சமயத்துலதான் கொஞ்சம் வேலை செய்யுறாங்க. நிச்சயம் மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கக்கூடிய சட்டங்கள் தேவை!!

காலை ஏழு மணியளவில் சின்னவனுக்கு சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெண்ணின் உடலைப் படகில் கட்டி எடுத்து வருவதைக் காண்பித்தார்கள். இரண்டு கைகளையும் மேலே தூக்கிய நிலையிலேயே உயிர் விட்டிருந்தார் அவர். சின்னவன் அதைப் பார்த்து ஏன் கை மேலே தூக்கியே வச்சுருக்காங்க என்று கேட்க, என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் சேனல் மாத்தினேன்.

இதைப் பார்க்கும்போது போன வருடம் மஸ்கட்டில் போட்டிங் போகும்போது பாதியில் (பாதிகூட இல்லை, கால்வாசி தூரத்தில்) பயந்து என்னைக் கொண்டு கரையில் விட்டுடுங்கோ என்று அடம் பிடித்து சின்னவனையும் இழுத்துக்கொண்டு இறங்கியது நினைவுக்கு வருகிறது. கடல் என்றாலே எனக்குப் பயம். பின்னே, நீச்சல் தெரியாது! இத்தனைக்கும் சிறு வயதில் எங்க ஊர் வழியா போன ஒரு சின்ன ஆற்றில் நீந்தி விளையாடிவள்தான். காலப்போக்கில் ஆறு கழிவு நீர் கலந்து மாசடைந்ததில் விட்ட பழக்கம். இருந்தாலும் தண்ணீரில் விழுந்தால் நீச்சல் மீண்டும் தன்னே வந்துவிடும் என்று நம்பியிருந்தேன். சில வருடங்களுக்கு முன் அதை உறுதி செய்துகொள்ள ஒரு நீச்சல் குளத்தில் இறங்கிய போதுதான் தெரிந்துகொண்டேன், “டச்சு விட்டுப் போச்சு” என்று!! பிறகு முயற்சிக்கவில்லை. அதிலிருந்து கடல் மீதான பயம் அதிகமாகிவிட்டது.

இப்பவும் அந்த போட்டில் போன வெளிநாட்டவர் சிலர் நீந்தி கரை சேர்ந்துவிட்டனராம். இனி எங்கே சுத்திப்பாக்கப் போனாலும் நோ போட்டிங்!!

Post Comment