Pages

Showing posts with label ஆண்கள். Show all posts
Showing posts with label ஆண்கள். Show all posts

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 2




முதல் பகுதி இங்கு

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!
தற்கு மேல் பொறுமை காக்கத் தெம்பில்லை!! கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது.... ஒரு ஐந்து வயது சிறுவனுக்கு பெண் குழந்தையை வெறுக்க என்னதான் காரணம் இருக்க முடியும்

ஏண்டா தங்கச்சி வேணாம்கிற...?”

கேர்ள்ஸ்லாம் ஃபைட் பண்ண மாட்டாங்க. பாய்ஸ்தான் ஃபைட் பண்ணுவாங்க. அதனால எனக்கு தம்பிதான் வேணும்!!

அடிங்.... இவனையெல்லாம் ஒரு ஆளுன்னு மதிச்சு நான் உக்காந்து பேசிகிட்டிருக்கேன் பாரு.... இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்... அதெல்லாம் புள்ளையப் பெத்து கையில கொடுத்துட்டாச் சரியாகிடும். ஆனாலும் ஒரு மனக்கிலேசம். இப்பவே இப்படிப் பேசுறானே.... கொஞ்சம் கொஞ்சமா மனச இப்பவே மாத்துறதுதான் நல்லது என்று அவ்வப்போது கேட்டாலும், “என் வயசு எப்பவுமே பதினாறுதான்என்கிற மாதிரி... ம்ஹூம்... கொண்ட கொள்கையிலிருந்து இம்மியும் பிசகவில்லை.

அவனுடைய பாட்டிகள், சித்திகள், அத்தைகள், கஸின்ஸ் யார் கேட்டாலும் அதே பதில்தான்!! ஒரு பையனும், ஒரு பொண்ணும் இருந்தாத்தானே "balanced familyஆ இருக்கும். அதனால பொண்ணு கண்டிப்பா வேணும்ல...பாட்டி எடுத்துச் சொன்னபோதும்.... ம்ஹூம்..... பெட்ரோமாக்ஸேதான் வேணும்!!

இது வெறும் சிறுபிள்ளைத்தனம்; பின்னர் மாறிவிடும் என்று நினைத்த எனக்கு இப்போத்தான் ரொம்ப கவலையாகிப் போனது!! இவ்ளோ ஸ்ட்ராங்கா இருக்கானே, குழந்தையை வெறுத்துவிடுவானோ என்ற பயம்... (அதுல பாருங்க, பொண்ணுதான்னு நான் எப்படி ரொம்ப உறுதியா நம்பிகிட்டு இருந்தேன்??)  

ஒரு நாலஞ்சு மாசம் இருக்கும்போது அவன் என்னிடம் கேட்டான், “இந்த பேபி பாய் பேபியா பிறக்கணும்னா நான் என்ன செய்யணும்?” ம்க்கும்... வயித்துல வச்சிருக்க நானே ஒண்ணும் செய்ய முடியாது.... இதில இவுக என்ன செய்யணும்னு கேள்வி வேற....

இருந்தாலும் இம்மாதிரி சந்தர்ப்பங்கள் சுளையாகச் சிக்கும்போது விடக்கூடாது என்ற பாடம் கற்றுக் கொண்டிருந்ததால், “நீ அல்லாஹ்கிட்ட துஆ செய். உம்மா சொன்னபடி கேட்டு நீ நல்ல பிள்ளையா நடந்துகிட்டா, அல்லாஹ் நீ கேட்டதைத் தருவான்.தூண்டில் போட்டேன். ஒன்றும் பதில் சொல்லவில்லை அவன். (துஆ = பிரார்த்தனை)

ரவு படுக்கும்முன் ஓதவேண்டிய துஆ, குர் ஆன் வசனங்களை ஓதிமுடித்தபின், கையை ஏந்தியபடி வெளியே கேட்காபடி கிசுகிசுவென ஏதோ சொல்லிக் கொண்டான். என்ன ஓதுறே என்று வாய் வரை வந்த கேள்வியை விழுங்கி விட்டேன். ஏன்னா... இப்படித்தான் போன மாசம் கிசுகிசுவென ஓதியதை என்னதுன்னு கேட்டப்போ, “நாளைக்கு டெஸ்ட் இருக்குலம்மா.. அதுல என் ஃப்ரண்ட் ஃபர்ஹானா ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும். நான் அதுக்கடுத்த ஃப்ர்ஸ்ட் மார்க் வாங்கணும்னு துஆ செஞ்சேன்என்றதும் அவங்க அப்பாவுக்கு வந்ததே கோவம்... 

எலேய் உன்னிய காசு கொடுத்து படிக்க வக்கிறது நானு... இதுல நீ வேற யாரோ ஃபர்ஸ்ட் மார்க் வாங்கணும்னா துஆ செய்றேஎன்று வெகுண்டு எழுந்துவிட்டார்!! அய்யே... சும்மாருங்க...சின்னப் புள்ளட்டப் போயி.... விவரம் தெரியற வயசா இது?” என்று நான் நடுவில் புக... நீ சும்மாரு.... அதுவும் அந்த பொண்ணு பாகிஸ்தானி...  அட, கேரளாப் பொண்ணச் சொல்லிருந்தாகூட வுட்டுருப்பேன்...என்று பொங்க.... இப்படியொரு கோணத்தைஎதிர்பார்க்காததால் அப்படியே ஷாக்காகி விட்டேன்!! ஆனாலும் சுதாரித்து, பையனை அப்பாவிடமிருந்து காப்பாற்றி விட்டேன்!!

இந்த எபிஸோட் நினைவுக்கு வந்ததால், அப்போது கேட்காமல் விட்டுவிட்டேன். ஆனால் இந்த கிசுகிசு துஆசில நாட்களாகவே தொடரவும், பொறுக்க முடியாமல் கேட்டுவிட்டேன். என்னத்தடா அப்படி தெனம் துஆ கேக்கிறே? இப்ப டெஸ்ட் எதுவும் இல்லியே...” 

நீ சொன்னல்ல... அதான் தம்பிதான் வேணும்னு கேட்கிறேன்என்றதும் எனக்கு அதிர்ச்சி..... இவ்ளோ சீரியஸாவா இருக்கான்.... 

னக்கு இப்போ இன்னொரு பெருங்குழப்பம்..... இவ்வளவு நம்பிக்கையோடு பிரார்த்திக்கிறானே... ஒருவேளை பெண் குழந்தை பிறந்துவிட்டால்?? அவனுக்கு பிரார்த்திப்பதில் நம்பிக்கை போய்விடுமோ.... அப்போதுதான் சிறுகச்சிறுக அல்லாஹ், தொழுகை, துஆக்கள் என்று  சொல்லிக் கொடுக்க ஆரம்பித்திருந்த நாட்கள் அவை. 

அவனது நம்பிக்கை பலப்படுவதற்காக நானும் இனி ஆண் குழந்தைக்காகப் பிரார்த்திக்கணுமா..... கேட்டது கிடைக்கவில்லையென்றால், பெரியவர்கள் புரிந்துகொள்ளலாம். சின்ன பிள்ளை அதை எப்படி எடுத்துக் கொள்வான்நான் கேட்டபடி பெண்ணே பிறந்தாலும் அது இப்போதைய சூழலில் மகிழ்ச்சி கொடுக்குமா? “சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்த கதையாகபுத்திசாலி போல அவனைத் தூண்டிவிட்டதில், இப்போ என் பெண்குழந்தை கனவைக் காவு கொடுக்க வேண்டிய நிலை!!

பிறக்கப் போகும் குழந்தையின் ஆரோக்கியம், என் உடல்நிலை என்று பல்வேறு மன உளைச்சல்களுக்கிடையில் இந்த டென்ஷன் வேறு!! அந்த ஆறு மாதங்களும் என் மனக்குழப்பங்கள் கூடிக் கொண்டேதான் இருந்தன.
இதற்கிடையில் குடும்பத்தினரும் அவனை ப்ரெய்ன் வாஷ்செய்ய முயற்சித்தார்கள். ம்ஹும்.... ஃபோட்டோ ஷாப் கதைகளை எடுத்துச் சொன்ன பிறகும் மோடி மாயையில் முங்கியவர்களைப் போல திருந்தவேயில்லை!! 

ந்த நாளும் வந்தது!! கிளைமேக்ஸ் காட்சி!! அவன் ஒருவன் மட்டும் ஆண் குழந்தை துஆ, குடும்பத்தில் உள்ள எல்லோரும் பெண் குழந்தை துஆ, கடைசிவரை இதுவா அதுவா என்ற குழப்பத்திலேயே நான்...  ஜெயித்தது அவனே!! 

நம்பிக்கையோடு பிரார்த்திப்பதன் பலனை அவன் அறிந்துகொண்டதோடு, பெரியவர்களான எங்களுக்கும் அறியத் தந்தான்!! அவனுக்கு துஆவைக் குறித்து நான் சொல்லிக் கொடுக்கப் போக, அவன் வழியே ஆண்டவன் எங்களுக்கு பாடம் கற்பித்த நினைவுகள் என்றும் மறக்காதவை. 

ப்போ தம்பியாப் புள்ளையைப் பற்றி அண்ணன் கம்ப்ளெயிண்ட் கொண்டு வரும்போதெல்லாம் ஒரே பதில்தான், “இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா!!

Post Comment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் என் குமாரா - 1





"ந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!

என்னை நோக்கி - அதுவும் ஒரு பெண்ணியவாதியான என்னை நோக்கி - சொல்லப்பட்ட வார்த்தைகள், எறியப்பட்ட நெருப்புத் துண்டங்களைப் போல என்மீது அனலைக் கக்கின!! 

சொன்னது என் மாமியாரோ, நாத்தனாரோ அல்ல. என் உயிரினும் மேலாக நான் நேசிக்கும் அந்த ஜீவன்!! நான் இருப்பது உசிலம்பட்டி போன்ற கிராமமுமில்லை. நவ நாகரீக நகரமான அபுதாபியில்!! இங்கே வந்தபின்பும் சிந்தனைகளில் மாற்றங்கள் வரவில்லை என்றால்.....  

முதல் குழந்தை உண்டானதும், நானே ஆண்குழந்தைக்கு ஆசைப்பட்டுப் பிரார்த்தித்தேன். ஆண்வாரிசு அவசியம் என்றல்ல. பெட்டி பெட்டியாக தங்க நகைகள் இருந்தாலும், பார்க்கும் ஒரு இமிடேஷன் நகை ஆசையைத் தூண்டுமே, அப்படி ஒரு ஆசை. கேட்டுவிட்டேன், கொடுத்து விட்டான்.

ஆண் குழந்தை வளர்ப்பு என்பது எத்தனை அயர்ச்சியான அனுபவமாக இருக்கும் என்று பிறகுதான் தெரிந்தது. பெண்கள் மட்டுமே நிறைந்த வீட்டில் வளர்ந்த எனக்கு தெரிந்தவை, சுத்தம் சுகாதாரம் ஒழுங்கு அழகுணர்ச்சி மட்டுமே. சவூதியில் இருந்த வாப்பா வருடத்திற்கொரு முறை மட்டும் வந்து போவதால் பெரிய மாற்றம் ஒன்றுமில்லை. 

கணவர் என்று ஒரு ஆண் வாழ்க்கையில் நுழைந்த பின்புதான் ஆண்களின் பழக்க வழக்கங்கள்புரிந்தது!! சுத்தம்-சுகாதாரம்-ஒழுங்கு-அழகுணர்ச்சி ஆகியவற்றின் எதிர்ப்பதங்களை எனக்கு live-ஆக தினம் தினம் demo காட்டி, இப்படியும் ஒரு இனம்உலகில் உள்ளது என்று எனக்கு உலகத்தைப் புரியவைத்து, சவால்களை எதிர்கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள  ஆண்டவன் அனுப்பி வைத்த ஆயுட்கால டெஸ்ட்தான் என் கணவர் என்று முதல் நாளே தெரிந்து கொண்டேன். 

அப்பவும் “#வளர்ப்புசரியில்லாததாலேயே அப்படி என்று நம்ம்ம்ம்பி, எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான்என்று கனவு கண்டு ஒரு மகனைப் பெற்றேன்!! அவனும் வளரும்போதுதான் எனக்கு கன்ஃபார்மாக ஒரு விஷயம் புரிந்தது. இது வளர்ப்பின் கோளாறல்ல, manufacturing settings"- அப்படித்தான் என்று!! காரணமில்லாமலா களிமண்ணிலிருந்து ஆணைப் படைத்தான் இறைவன்!! 

வீடு முழுதும் ஆங்காங்கு எறியப்படும் குப்பைகள், மூலைகளையும் சுவரோரங்களிலுமாக குறிபார்த்து வீசப்படும் அழுக்குத் துணிகள், கட்டிலில் சுருட்டி எறிந்த ஈரத்துண்டுகள், தரையில் அழுக்குடன் கூடிய கால்தடங்கள் - சின்னதும் பெரிதுமாக இரண்டு செட்களில்.... 

இது போதாதென்று கண்ட இடத்திலும் போட்டு வைக்கப்பட்டிருக்கும் ஸ்க்ரூ ட்ரைவர், ஆணிகள், நட்டு, போல்ட் போன்ற ஆயுதங்களுடன் அக்கு வேறு ஆணிவேறாகக் கழட்டி போடப்பட்டிருக்கும் ஃபேன், டிவி, மிக்ஸி போன்ற வீட்டுப் பொருட்கள் ஒரு பக்கம்; அதைப் பார்த்து, அதேபோல பீஸ் பீஸாக கழட்டிப் போடப்பட்ட நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் விளையாட்டு பொருட்கள் இன்னொரு பக்கம்.....

இது வீடா, மெக்கானிக் ஷாப்பா, குப்பை மேடா என்று தீர்மானிக்க முடியாத நிலையில் நான்!! இந்த அராஜகங்களில் இருத்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்தேன். அப்போத்தான் முடிவு பண்ணேன், அடுத்த குழந்தை பெண்ணாக இருந்தாலொழிய எனக்கு விமோசனமில்லை என்று!!
 
ந்த நல்ல செய்தியைப்பகிர்ந்த போதுதான், என் காதுகளில் ஈயத்தைக் காய்ச்சிக் கொட்டியதுபோல வந்து விழுந்தன அந்த வார்த்தைகள். சொன்னது யார் என்பதைத்தான் என்னால் நம்பமுடியவில்லை. வேறு யாரென்றாலும் அதில் அவர்கள் அளவில் ஒரு நியாயம் இருக்கும். ஆனால்... ஆனால்....!!  சரி, போகட்டும் பிறிதொரு சமயம், நல்ல மூடில் இருக்கும்போது கேட்டுப் பார்க்கலாம் என்று, ஒரு சில நாட்கள் கழித்து கண்ணே பொன்னே மணியே என் செல்லமே தங்கமேஎன்று கொஞ்சலோடு கேட்டால்... அப்போதுதான் அறுதியிட்டு உறுதியாகப் பதில் வந்தது....

"இந்தக் குழந்தை மட்டும் பெண் குழந்தையா பிறந்தா, அது நமக்கு வேணாம். யாருகிட்டயாவது தூக்கிக் கொடுத்துடு. நீ எத்தனைவாட்டி கேட்டாலும் என் பதில் இதுதான்!!

-தொடரும்.

(”டீக்கடை” என்ற முகநூல் குழுமத்தின் ”
Memory book- sweet & salt” போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை.)

இரண்டாம் பகுதி இங்கு

Post Comment

ஆம்பளை அழலாமா!






சென்ற மாதம் விம்பிள்டன் போட்டியில், (வழக்கம்போல) ரோஜர் ஃபெடரர் வென்றார். அதுவல்ல செய்தி, அவர் அழுததுதான் செய்தி!! அவர் ஜெயிப்பது வழக்கமாகிப் போனதைவிட, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் - ஜெயித்தாலும், தோற்றாலும்- அவர் அழுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

(அழத் தொடங்கிய) ஆரம்பத்தில், ஒரு ஆணாக இருந்துகொண்டு அழலாமா, அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில், எல்லார் முன்பும் அழுவது இழுக்கல்லவா என்ற ரீதியில்தான் அவரது அழுகை பார்க்கப்பட்டது. இன்று அவர் தனது (தொடர்) அழுகையைக் குறித்து கூறும்போது, “மனிதனாகப் பிறந்த எல்லாருக்கும் மனசு உடைந்துபோவதுண்டு. அழுவதில் தவறொன்றுமில்லை. என் அழுகையை, என் ரசிகர்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவே நான் உணர்கிறேன். அழுகை, என்னை ரசிகர்களோடு நெருக்கமாக்குகிறது.” என்று கூறுகிறார்.

அதாவது, அழுகின்ற ஒரு ஆண் அழுவது ஏன் என்று தன்னிலை  விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. (பெண்கள்னா கதையே வேற, அழலைன்னாதான் விளக்கம் கொடுக்கணும்!!) உலகம் முழுவதுமே, ஆம்பளைன்னா வீரம், தீரம், உறுதி எல்லாம் நிறைந்தவர்கள். கட்டுப்பாடுடையவர்கள். (சுயகழிவிரக்க)  உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் அல்லது கூடாது என்ற ஒரு பொதுவான வரைமுறை உள்ளது.

ஒரு முறை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹர்பஜனிடம் அடிவாங்கிவிட்டு அழுததற்கு  ’சின்னப் புள்ள மாதிரி அழுவுறான் பாரு’  எனத் தொடங்கி எத்தனை விமர்சனங்கள்!!

இயக்குனர்-நடிகர் சேரன், தன் படங்களில் கதாநாயகன் அழுவதாகக் காட்டுவார்.  அதுவும் பின்பக்கமாக சன்னமாக முதுகு குலுங்குவது போலத்தான். முதல் படம் ஆட்டோகிராஃபில் அதைச் சகித்துக் கொண்ட ஆண்களால், அடுத்தடுத்த படங்களிலும் அதே சீன் (அவசியத்தினால்) வந்தபோது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ அவமானமான செயலைக் காட்டுவதைப் போல விமரிசனங்களில் அலுத்துக் கொண்டார்கள்.

ஏன், வீட்டில் ஆண் குழந்தைகள் அழுதால்கூட, “ஆம்பளைப் புள்ள அழக்கூடாதுடா” என்றே கண்டிக்கப்படுகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டு வளர்வதாலேயோ என்னவோ, பதின்ம வயது இளைஞர்கள்கூட சிலசமயம் கல்லைப் போல இறுகி விடுகிறார்கள்.  சார்லி சாப்ளின் சொன்னதுபோல, ஆண்கள், யாருக்கும் தெரியாமல் மழையில் அழுவதைத்தான் விரும்புகிறார்கள்.

சில வருடங்கள்முன், எனக்கு ஒரு சிகிச்சைக்காக மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டர் சொண்டு செல்லப்படும்போது, என் தந்தை குலுங்கிகுலுங்கி அழுததை உறவினர் ஒருவர் சிலாகித்துச் சொன்னார். அதே இடத்தில் என் தாயும் அழுதுகொண்டுதான் இருந்தார், ஆனால் அம்மாக்கள் அழுவதென்பது இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆண்கள் பலர், உடலின் வலிகளைக் கூட, முகத்தில் அதன் பாதிப்பே தெரியாதபடிக்குக் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிகளில் ஊசி போடப்படும்போது ஒன்றுமே நடவாததுபோல அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, குழந்தைப்பேறு ஆண்களுக்கானது என்றிருந்தால், பிரசவ வார்டுகளில் அசாத்திய அமைதி நிலவுமோ என்று தோன்றும்!!


ஒரு நண்பர், தன் மனைவி இறந்தபோதும் தான் அழவில்லையென்றும்,  அவரின் நண்பர் ‘அழுதுவிடு’ என்று தன்னைச் சொன்னபோதும் இறுக்கமாய் இருந்ததாகச் சொல்லியிருந்தார். ஒருவரின் மரணத்தின்போது உறவுகள் அழுவது, இறந்துபோனவர் உலக வாழ்வை இழந்துவிட்டதற்காக என்பதைவிட, அவரைப் பிரிந்தபின் தன் நிலை என்னவாகுமோ என்பதற்கானக் கவலையாகத்தான் அழுகையின்  பெரும்பகுதி இருக்கும். ஆக, தன்னில் பாதியான ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அழுகை வரவில்லையென்றால், அது ‘நீ இல்லாமற் போனதால் எனக்கு எந்த இழப்புமில்லை’ என்று சொல்லாமல் சொல்லுவது போலாகாதா என்று கேட்கத் தோன்றுகிறது.



இறப்பின் இழப்பினைக் கூட வாய்விட்டு அழாமல், கீழுதட்டைக் கடித்து, இமைகளில் லேசான ஈரத்தோடு தாங்கிக் கொள்ளும் இதே ஆண்கள், ஏதேனும் ஒரு பாடலையோ இசையையோ கேட்டு, அட ஒரு சூர்ய அஸ்தமனத்தைக்கூடப் பார்த்து ’ஓ, வாட் எ டிவைன் ஃபீலிங்’ என்று உணர்ச்சி வசப்பட்டு  கண்கள் பனித்தால், அது அவரைக்  ‘கலையுணர்ச்சிகள்’ மிகுந்தவரென்றும்; ஒரு சமூக அவலத்தைக் கண்டு கண்ணீர் விட்டால்,  ’ஸாஃப்ட் கார்னர்’ உடையவர் என்றும் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தும்.

பெண்களால் விடப்படும் கண்ணீர், ‘பெண்களின் ஆயுதம்’,  நீலிக்கண்ணீர், ‘முணுக்குன்னா அழுவுறதே வேலையாப் போச்சி’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் அதே சமூகத்தில், ஆண் எப்போதாவது அபூர்வமாய் ஒருமுறை சொந்தக் காரணங்களுக்காக அழுதுவிட்டால்கூட,  “ஆம்பளையே அழுதுட்டானே” (அ) “ஆம்பளயையே அழவச்சிட்டாளே” என்று  வேறுவிதமாய்க்  கையாளப்படும்!!

இப்படியான சமூகச் சூழலில் வளர்ந்ததாலேயே என்னவோ, முதன்முறை ஒரு பொது இடத்தில் நிறைய ஆண்கள் எந்தவித சங்கோஜமுமின்றி அழுவதைப் பார்த்தபோது எனக்கு வெகு  ஆச்சர்யமாக இருந்தது. மக்காவில், இறையில்லத்திற்கு முன், கையேந்தியவாறு கண்களில் நீர்வழிய ஆண்கள் நின்றிருப்பதைப் பார்க்கப் பார்க்க  அதிசயமாகத்தான் இருந்தது.

சின்ன வயசில் கேட்ட நாகூர் ஹனீஃபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலில்,  ”அன்பு நோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்” என்ற வரி வரும். ஆனால், எனக்கான பாடலாகவே நினைத்து கேட்டு வந்ததாலும், ஆண்கள் அழுது பார்த்திராத்தாலும், என்னால் அந்தவரி ஆண்-பெண் எல்லாருக்கும் பொதுவானதாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒருவர், தான் செய்த தவறுகளை உணர்ந்து, மனம்வருந்தி, கண்ணீர்விட்டு  மன்னிப்பு கேட்டால், தவறுகள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது.                                     

ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதத்தில் - பாவமன்னிப்பு அதிகம் தேடப்படும் இம்மாதத்தில் - சிறப்புக் கூட்டுத் தொழுகையின்போது, தொழுகையை வழிநடத்துபவர், உருக்கமாகக் கரைந்து அழுது பிரார்த்திக்கும்போது - நம்மையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ளும்போது... இதுதான் நிஜமான “டிவைன் ஃபீலிங்”!!

அறிவியல்  ரீதியாகவும், அழும்போது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் அழிவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அழுதுமுடிந்ததும், மனம் ரிலாக்ஸாகிறது. மனமுருகித் தானாக வரும் அழுகையின் கண்ணீர் எல்லா அழுக்கையும் கரைத்துவிடும் என்பது பொய்யில்லை. ஒருமுறை அழுதுதான் பாருங்களேன்!!

அழுகைக்கும் ஆண்-பெண் பேதமின்மை இருக்கட்டும்.

Post Comment