Pages

டிரங்குப்பெட்டி - 26


இந்த வருஷம் வரப்போகிற புயல் ரொம்ப கடுமையான விளைவுகளைத் தரும்னு விஞ்ஞானிகள் சொல்றாங்க. மழையையேக் காணோம், புயல் எங்கிட்டிருந்து வரும்னு கேக்குறீங்களா? இது சூரியப்புயல் - Solar storm!!  மழைப் புயல் தரும் விளைவுகளைவிட,  சூரியப்புயலில் காந்தத்துகள்கள் பூமியின்மீது தெளிக்கப்படும்போது வரக்கூடிய விளைவுகள் மிகக் மிகக் கடுமையானது. ஏற்கனவே ஜனவரியிலும், மார்ச்சிலும் அமெரிக்காவில் சூரியப்புயல் வீசியது. இனி வரப்போகும் புயலினால், அமெரிக்காவில் இன்னும் கடும் வறட்சி நிலவும் (இப்போதே வறட்சிதான்). அதுமட்டுமல்ல, அமெரிக்காவின் மின்சாரத் தொகுப்பு (electric grid) மோசமான பாதிப்புகளுக்குள்ளாகும் என்பதுதான் மிகவும் கவலையான நிகழ்வாக எதிர்பார்க்கப்படுகிறது. விமானப் போக்குவரத்தும், செயற்கைக் கோள்களும்கூட பாதிக்கப்படும்.

அமெரிக்கா தவிர மற்ற நாடுகளுக்கு ஒருவேளை மின்சாரப் பாதிப்பு  ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                    -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கிபி 12ம் நூற்றாண்டில் ஸ்பெயினில் அப்போதைய இஸ்லாமிய ஆட்சியாளர்களால், ஐரோப்பாவின் முதல் வானிலை ஆய்வுக்கூடம் (Observatory) கட்டப்பட்டது. பின்னர் கிறிஸ்தவ ஆட்சியின்கீழ் வந்ததும் அந்த கட்டிடம் ஒரு ஆய்வுக்கூடம் என்பதே தெரியாமல், அதை எப்படி பயன்படுத்த வேண்டுமென்றும் தெரியாமல், அதை  “மணிக்கூண்டு”  ஆக ஆக்கிக் கொண்டார்களாம்!!

இது பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு இருக்கு, தமிழ்நாட்டில் புதிய (பழைய??) தலைமையகத்தின் இன்றைய நிலை!! பாம்புகள் குடியிருக்கும் ஸ்நேக் பார் ஆகிட்டு வருதாம்.

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


ஜப்பானில் சென்ற வருடம் நடந்த ஃபுகுஷிமா அணு ஆலை விபத்தின் விளைவுகளை, அங்கு தற்போது காணப்படும் வண்ணத்துப்பூச்சிகள் பிரதிபலிக்கின்றன. விபத்து நடந்தபோது லார்வாக்களாக இருந்தவைகளுக்கு கதிர்வீச்சு தந்த மரபணு பாதிப்பினால், வண்ணத்துப் பூச்சிகளாக ஆனபோது மிகச் சிறிய சிறகுகளும், பாதிக்கப்பட்ட கண்பார்வையும்  உடையவைகளாக இருக்கின்றன. மனிதர்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், ஏதும் இருப்பின், இனி தெரியவரும், ஜப்பான் அரசு அனுமதித்தால்.

                                                                                                                                                      -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


  
துபாயில் ஒரு அரண்மனைப் பகுதியில் (Zabeel Palace) மயில்கள் நிறைய வளர்க்கப்படுகின்றன. மக்கள் அவற்றை சுற்றுலாவாகப் போய்ப் பார்க்கலாம். எக்கசக்கமா மயில்கள் நிற்கின்றன; அதைவிட ஆச்சர்யம், பள்ளிகளில் மேகம் கறுத்து மழைவருவது போலிருந்தால்தான், மயில் தோகை விரிக்கும் என்று படித்திருக்கிறோம். ஆனால், இங்கே ஜூலை மாத 47 டிகிரி உச்சி வெயிலிலும், அநேகமா எல்லா மயிலுமே சர்வசாதாரணமாக தோகை விரித்து நடமாடுகின்றன. கொஞ்சம் ‘சப்’புன்னுதான் ஆகிப்போச்சு!! :-)))))

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

ஜூனியர் விகடனில், “மயக்கம் என்ன” என்கிற தொடர்கட்டுரை வந்து கொண்டிருக்கிறது. குடியையும், அதன் பாதிப்புகளையும், அதிலிருந்து மீளும் வழிகளையும் விரிவாக - மருத்துவ ரீதியாக - அலசுகிறது. அதில் வந்த சில வரிகளை அப்படியே இங்கே பகிர்ந்து கொள்கிறேன்:
சிலர் சொல்வார்கள், ''எப்போவாச்​சும் குடிப்பேன்... கம்பெனி மீட்டிங்... ஃப்ரெண்ட்ஸ் கெட் டு கெதெர்... மன்த்லி ஒன்ஸ்... வெளியூர் போனால்தான்... ஆனா, நான் குடிகாரன் இல்லை'' என்று. குடிக்கும் பழக்கம் இருக்கும் எவருக்கும் நான் குடிகாரன் இல்லை என்று சொல்லும் தகுதி கிடையாது. ஏனெனில் மனநல மருத்துவர்கள் மது குடிப்பதை 'குடிப்பழக்கம்’ என்று சொல்வது இல்லை. 'குடிநோய்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ஒரு முறை குடித்தாலும் கிருமி, கிருமிதானே? அதேபோல, 'எப்போதாவது குடிக்​கிறேன் ஆசாமி’கள் பார்க்க ஆரோக்கிய​மாகத் தெரியலாம். ஆனால், குடிப் பழக்கம் உள்ள எவருக்கும் கல்லீரல், கணையம் போன்றவை குறைந்தது 10 சதவிகிதமாவது பாதிக்கப்பட்டு இருக்கும். ஆக, 'எப்போதாவது குடிக்கிறேன் ஆசாமி’கள் முதல்நிலைக் குடிநோயாளிகள்!

இது பற்றிய போற்றுதலும், தூற்றுதலும் விகடனுக்கே சமர்ப்பணம்!! :-))

                                                   -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

ஆம்பளை அழலாமா!


சென்ற மாதம் விம்பிள்டன் போட்டியில், (வழக்கம்போல) ரோஜர் ஃபெடரர் வென்றார். அதுவல்ல செய்தி, அவர் அழுததுதான் செய்தி!! அவர் ஜெயிப்பது வழக்கமாகிப் போனதைவிட, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் - ஜெயித்தாலும், தோற்றாலும்- அவர் அழுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

(அழத் தொடங்கிய) ஆரம்பத்தில், ஒரு ஆணாக இருந்துகொண்டு அழலாமா, அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில், எல்லார் முன்பும் அழுவது இழுக்கல்லவா என்ற ரீதியில்தான் அவரது அழுகை பார்க்கப்பட்டது. இன்று அவர் தனது (தொடர்) அழுகையைக் குறித்து கூறும்போது, “மனிதனாகப் பிறந்த எல்லாருக்கும் மனசு உடைந்துபோவதுண்டு. அழுவதில் தவறொன்றுமில்லை. என் அழுகையை, என் ரசிகர்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவே நான் உணர்கிறேன். அழுகை, என்னை ரசிகர்களோடு நெருக்கமாக்குகிறது.” என்று கூறுகிறார்.

அதாவது, அழுகின்ற ஒரு ஆண் அழுவது ஏன் என்று தன்னிலை  விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. (பெண்கள்னா கதையே வேற, அழலைன்னாதான் விளக்கம் கொடுக்கணும்!!) உலகம் முழுவதுமே, ஆம்பளைன்னா வீரம், தீரம், உறுதி எல்லாம் நிறைந்தவர்கள். கட்டுப்பாடுடையவர்கள். (சுயகழிவிரக்க)  உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் அல்லது கூடாது என்ற ஒரு பொதுவான வரைமுறை உள்ளது.

ஒரு முறை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹர்பஜனிடம் அடிவாங்கிவிட்டு அழுததற்கு  ’சின்னப் புள்ள மாதிரி அழுவுறான் பாரு’  எனத் தொடங்கி எத்தனை விமர்சனங்கள்!!

இயக்குனர்-நடிகர் சேரன், தன் படங்களில் கதாநாயகன் அழுவதாகக் காட்டுவார்.  அதுவும் பின்பக்கமாக சன்னமாக முதுகு குலுங்குவது போலத்தான். முதல் படம் ஆட்டோகிராஃபில் அதைச் சகித்துக் கொண்ட ஆண்களால், அடுத்தடுத்த படங்களிலும் அதே சீன் (அவசியத்தினால்) வந்தபோது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ அவமானமான செயலைக் காட்டுவதைப் போல விமரிசனங்களில் அலுத்துக் கொண்டார்கள்.

ஏன், வீட்டில் ஆண் குழந்தைகள் அழுதால்கூட, “ஆம்பளைப் புள்ள அழக்கூடாதுடா” என்றே கண்டிக்கப்படுகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டு வளர்வதாலேயோ என்னவோ, பதின்ம வயது இளைஞர்கள்கூட சிலசமயம் கல்லைப் போல இறுகி விடுகிறார்கள்.  சார்லி சாப்ளின் சொன்னதுபோல, ஆண்கள், யாருக்கும் தெரியாமல் மழையில் அழுவதைத்தான் விரும்புகிறார்கள்.

சில வருடங்கள்முன், எனக்கு ஒரு சிகிச்சைக்காக மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டர் சொண்டு செல்லப்படும்போது, என் தந்தை குலுங்கிகுலுங்கி அழுததை உறவினர் ஒருவர் சிலாகித்துச் சொன்னார். அதே இடத்தில் என் தாயும் அழுதுகொண்டுதான் இருந்தார், ஆனால் அம்மாக்கள் அழுவதென்பது இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆண்கள் பலர், உடலின் வலிகளைக் கூட, முகத்தில் அதன் பாதிப்பே தெரியாதபடிக்குக் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிகளில் ஊசி போடப்படும்போது ஒன்றுமே நடவாததுபோல அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, குழந்தைப்பேறு ஆண்களுக்கானது என்றிருந்தால், பிரசவ வார்டுகளில் அசாத்திய அமைதி நிலவுமோ என்று தோன்றும்!!


ஒரு நண்பர், தன் மனைவி இறந்தபோதும் தான் அழவில்லையென்றும்,  அவரின் நண்பர் ‘அழுதுவிடு’ என்று தன்னைச் சொன்னபோதும் இறுக்கமாய் இருந்ததாகச் சொல்லியிருந்தார். ஒருவரின் மரணத்தின்போது உறவுகள் அழுவது, இறந்துபோனவர் உலக வாழ்வை இழந்துவிட்டதற்காக என்பதைவிட, அவரைப் பிரிந்தபின் தன் நிலை என்னவாகுமோ என்பதற்கானக் கவலையாகத்தான் அழுகையின்  பெரும்பகுதி இருக்கும். ஆக, தன்னில் பாதியான ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அழுகை வரவில்லையென்றால், அது ‘நீ இல்லாமற் போனதால் எனக்கு எந்த இழப்புமில்லை’ என்று சொல்லாமல் சொல்லுவது போலாகாதா என்று கேட்கத் தோன்றுகிறது.இறப்பின் இழப்பினைக் கூட வாய்விட்டு அழாமல், கீழுதட்டைக் கடித்து, இமைகளில் லேசான ஈரத்தோடு தாங்கிக் கொள்ளும் இதே ஆண்கள், ஏதேனும் ஒரு பாடலையோ இசையையோ கேட்டு, அட ஒரு சூர்ய அஸ்தமனத்தைக்கூடப் பார்த்து ’ஓ, வாட் எ டிவைன் ஃபீலிங்’ என்று உணர்ச்சி வசப்பட்டு  கண்கள் பனித்தால், அது அவரைக்  ‘கலையுணர்ச்சிகள்’ மிகுந்தவரென்றும்; ஒரு சமூக அவலத்தைக் கண்டு கண்ணீர் விட்டால்,  ’ஸாஃப்ட் கார்னர்’ உடையவர் என்றும் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தும்.

பெண்களால் விடப்படும் கண்ணீர், ‘பெண்களின் ஆயுதம்’,  நீலிக்கண்ணீர், ‘முணுக்குன்னா அழுவுறதே வேலையாப் போச்சி’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் அதே சமூகத்தில், ஆண் எப்போதாவது அபூர்வமாய் ஒருமுறை சொந்தக் காரணங்களுக்காக அழுதுவிட்டால்கூட,  “ஆம்பளையே அழுதுட்டானே” (அ) “ஆம்பளயையே அழவச்சிட்டாளே” என்று  வேறுவிதமாய்க்  கையாளப்படும்!!

இப்படியான சமூகச் சூழலில் வளர்ந்ததாலேயே என்னவோ, முதன்முறை ஒரு பொது இடத்தில் நிறைய ஆண்கள் எந்தவித சங்கோஜமுமின்றி அழுவதைப் பார்த்தபோது எனக்கு வெகு  ஆச்சர்யமாக இருந்தது. மக்காவில், இறையில்லத்திற்கு முன், கையேந்தியவாறு கண்களில் நீர்வழிய ஆண்கள் நின்றிருப்பதைப் பார்க்கப் பார்க்க  அதிசயமாகத்தான் இருந்தது.

சின்ன வயசில் கேட்ட நாகூர் ஹனீஃபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலில்,  ”அன்பு நோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்” என்ற வரி வரும். ஆனால், எனக்கான பாடலாகவே நினைத்து கேட்டு வந்ததாலும், ஆண்கள் அழுது பார்த்திராத்தாலும், என்னால் அந்தவரி ஆண்-பெண் எல்லாருக்கும் பொதுவானதாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒருவர், தான் செய்த தவறுகளை உணர்ந்து, மனம்வருந்தி, கண்ணீர்விட்டு  மன்னிப்பு கேட்டால், தவறுகள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது.                                     

ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதத்தில் - பாவமன்னிப்பு அதிகம் தேடப்படும் இம்மாதத்தில் - சிறப்புக் கூட்டுத் தொழுகையின்போது, தொழுகையை வழிநடத்துபவர், உருக்கமாகக் கரைந்து அழுது பிரார்த்திக்கும்போது - நம்மையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ளும்போது... இதுதான் நிஜமான “டிவைன் ஃபீலிங்”!!

அறிவியல்  ரீதியாகவும், அழும்போது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் அழிவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அழுதுமுடிந்ததும், மனம் ரிலாக்ஸாகிறது. மனமுருகித் தானாக வரும் அழுகையின் கண்ணீர் எல்லா அழுக்கையும் கரைத்துவிடும் என்பது பொய்யில்லை. ஒருமுறை அழுதுதான் பாருங்களேன்!!

அழுகைக்கும் ஆண்-பெண் பேதமின்மை இருக்கட்டும்.

Post Comment

பெண்களும் சொத்துவரியும்

ரி கொடுக்குமளவுக்கு பெண்களுக்கென்ன சொத்துகள் இருக்கப் போகிறது என்று தோன்றும்.  தாமே சம்பாதித்தவைகள், நகைகள், பெற்றோர் வழி வந்த சொத்துகள், கணவர் பரிசளித்த வீடு/நிலம், மகன் வாங்கிக் கொடுத்தது என்று ஏதேனும் ஒன்றாவது பெண்களுக்கு இருக்கும்.

பெண்கள் வரி கொடுப்பதில், முக்கிய பிரச்னையாகப் பார்க்கப்படுவது, வருமானமின்மை. அதாவது, பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போவதில்லை என்பதால், அவர்களுக்கென்று தனி வருமானமில்லாத பட்சத்தில்,  எப்படி வரி செலுத்த முடியும்? ஆகவே, அவர்களுக்காக கணவனே அச்செலவை ஏற்றுக் கொள்ளவேண்டுமா என்பது பலரின் சந்தேகம். 

வருமானமில்லை என்பதைக் காரணமாகச் சொல்லும் அதே சமயம், அப்பெண்கள் வரிசெலுத்த வேண்டிய அளவு செல்வத்திற்குச் சொந்தக்காரர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். 

ன்றைய குடும்பங்களில், மனைவி-மருமகளின் நகை,சொத்தில் அவளைவிட கணவனுக்கும், அவன் குடும்பத்தினருக்கும்தான் அதிகப் பாத்தியதை இருப்பதைப் போல நடந்துகொள்கிறார்கள். குடும்பத்தில் ஒரு சின்ன பணத் தேவை வந்தாலும், உடனே மனைவியின் நகைகள்தான் அடமானத்திற்குப் போகும்!! எத்தனை பெண்களின் நகைகள் இப்படியே அடமானத்தில் முழுகிப் போயிருக்கின்றன? ஒருவேளை தனியே வாழும் அவசியம் அப்பெண்களுக்கு ஏற்பட்டால் ஒன்றுமில்லாமல் பரிதவிக்கும் நிலையிலாகிறார்கள்!!


எத்தனை குடும்பங்களில் மாமியார்கள், வீட்டுக்கு வந்த மருமகளின் நகைகளைப் போட்டு தன் மகளின் திருமணத்தை நடத்தியிருக்கிறார்கள்? அவளின் பெற்றோருக்குக் கஷ்டம் வந்தால்கூட, அவளுக்கு தன் உடமைகளைக் கொண்டு உதவிட உரிமையில்லாத நிலை உள்ளதே!

கேட்டால், ”என் மனைவியே எனக்குச் சொந்தம் எனும்போது அவளின் நகைகளும் என்னுடையதாகாதா?” என்று கேள்வி எழுப்புவார்கள் சில ‘பொறுப்பான’ ஆண்கள்!!Post Comment

டில்லிக்கு ராஜான்னாலும்...

ம்மாவிடம் தொலைபேசிக்கொண்டிருந்தேன். நலம் விசாரித்துவிட்டு அப்படியே மாத்திரை சாப்பிட்டியான்னு விஜாரிச்சு அதுக்கு நிச்சயம் “மறந்துட்டேன்” அல்லது “இப்பத்தான் டிஃபன் சாப்பிட்டு முடிச்சேன். மாத்திரை சாப்பிடத்தான் நிக்கிறேன்” என்றுதான் பதில்வரும்னு தெரியும். எப்படின்னு கேக்குறீங்களா? தாயைப் போலப் பிள்ளை..... ஹி.. ஹி.. . அதைச் சாக்கு வச்சு அம்மாவுக்கு ரெண்டு டோஸ் விடுறதும் (சின்ன வயசுல நாம வாங்கின டோஸுக்கெல்லாம் பழிக்குப் பழி வாங்கக் கிடைச்ச சான்ஸ் மிஸ் பண்ணலாமா..), அதை அப்படியே அம்மா இந்தக் காதில வாங்கி அந்தக் காதுவழியா விட்டுர்றதும் வழக்கம்.  (பிள்ளையைப் போலத் தாய்...  ஹி..ஹி..) அப்படியே கொஞ்சம் ஊர், உறவு கதைகளும் பேசிக்குவோம்.

ஒருநாள் அம்மாகிட்ட, “சாச்சிகிட்டயெல்லாம் பேசினியா? அவங்க ஃபோன் பண்ணாங்களா? நல்லாருக்காங்களா?”ன்னு கேட்டேன். என்னைமாதிரியே அம்மாவும் மூத்தப் பொண்ணு வீட்ல. அம்மாவுக்கும் என்னைமாதிரியே மூணு தங்கச்சிகள். (நோ... நோ.. இதுல தாயைப் போல.. வை இழுக்கக் கூடாது. ஏன்னா அம்மாவீட்ல தம்பிகள், தங்கைகள்னு ஒரு ஃபுட்பால் டீமே உண்டு!!)  அதுக்கு அம்மா, “எங்கே? எல்லாரையும் எப்பவும் நான்தான் கூப்பிட்டு பேசணும். அப்பிடியே நான் ஃபோன் பண்ணாலும் பேசமுடியாத அளவு பிஸியா இருக்காளுங்க. அதான் இந்த வாரம் ஃபோன் பண்ணலை” என்றார். எனக்கும் ஒரு விஷயம் புரியலை. எல்லா சித்தியும் பேரன், பேத்தி எடுத்து பாட்டியாகிட்டாலும், இப்பத்தான் படுபயங்கர பிஸியா  இருக்காங்க!! சரி, பேக் டு த பாயிண்ட். இந்த சான்ஸையும் விடக்கூடாது என்று, அவசரமாக, “இங்கேயும் அப்படித்தான். நாந்தான் என் தங்கச்சிகளுக்கும் ஃபோன் பண்ணிப் பேசணும். அவங்களும் எப்பவும் பிஸிதான்” என்று சந்தோஷமா போட்டுக்குடுத்தேன்!!

அம்மா உடனே அடிச்சாங்களே பாக்கணும் ஒரு பல்டி, அந்த்த்த்தர்பல்டி!! “அவங்கள்லாம் சின்னப் பொண்ணுங்க. கையில் எல்லாருக்கும் சின்னப் புள்ளைங்க இருக்குது. அதனால ஃபோன் பண்ண முடியலையாயிருக்கும். நீதானே பெரியவ. நீதான் பொறுப்பா எல்லாரையும் பாத்துக்கணும்”!! ஆத்தீ, நல்லவேளை, உங்க வாப்பா - அதான் என் தாத்தா - மாவட்ட லெவலோட அரசியலை நிறுத்திக்கிட்டாங்கன்னு மனசுல நினைச்சுகிட்டேன்.  மாநில லெவல்ல போயிருந்தா, என்னென்ன சர்க்கஸ்லாம் பண்ண வேண்டியிருக்கும்!! இதையெல்லாம் அம்மாகிட்ட வாய்விட்டு சொல்லமுடியாதபடி இன்னும் ஒரு மரியாதை (ச்சே.. ச்சே.. பயம்லாம் இல்லை) இருக்குது.

ரி, நாந்தான் மூத்தது. என்னவர் கடைக்குட்டி.  என் பக்கம்தான், “மூத்தவள்”ங்கிற பொறுப்பால நானே ஃபோன் பண்ணனும். அவர் பக்கம், அந்தப் பொறுப்பு, பருப்பெல்லாம் இல்லியே, ஜாலின்னு இருந்தா, அதுக்கும் குட்டு வைக்கிறாங்க.  பெரியவங்களுக்கு மரியாதை கொடுத்து நாங்க சின்னவங்கதான் ஃபோன் பண்ணிப் பேசணுமாம். அதுவும் வெளிநாட்டுல இருக்கவங்கதான் உள்ளூருக்கு ஃபோன் பண்ணனுமாம். அவ்வ்வ்வ்வ்.... எல்லா ஊருக்குக்கும் ஒரே ரூல்ஸா வக்கப்பிடாதா? ஆக, ரெண்டு பக்கமும் நாங்கதான் எல்லாருக்கும் ஃபோன் பண்ணனும். நல்ல நியாயம்!!

எல்லா வீட்லயுமே மூத்தப் பிள்ளைன்னா, ஒழுக்கம், பொறுப்பு, படிப்பு எல்லாம் அதிகமா இருக்கணும்கிற எதிர்பார்ப்பினால பொதுவாகவே அதிகக் கண்டிப்பு இருக்கும். அதக்கூடப் பொறுத்துக்கலாம். ஆனா, கடைசில உள்ள பிள்ளைகளுக்குக் கிடைக்கிற செல்லம் இருக்கே...ரெண்டு வருஷம் முன்னே அம்மாவும், நாங்க நாலுபேருமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தோம். அம்மா தன் பிளேட்ல இருந்த ஈரல் துண்டை எடுத்து, கடைக்குட்டி மகளிடம் கொடுத்தாங்க.  கடைக்குட்டின்றதாலே இன்னும் செல்லமான்னு நாங்கல்லாம் கிண்டல் (மட்டும்) பண்ணிகிட்டோம்.

அந்த அருமை கடைக்குட்டி என்ன செஞ்சா தெரியுமா? (கடைக்குட்டின்னவுடனே கன்னுகுட்டி சைஸுக்குச் சின்னப் பப்பான்னு நினச்சுக்ககூடாது.  அவளுக்கே ஒரு பிள்ளை இருக்கு). அம்மா  தந்த ஈரலை ப்ளேட்ல ஓரமா ஒதுக்கி வச்சா. ஏற்கனவே எங்களுக்கெல்லாம் தராம, அவளுக்கு மட்டும் கொடுத்ததால,  தர்மசங்கடத்துல இருந்த அம்மா இதைப் பார்த்து டென்ஷனாகிட்டாங்க. “ஏய், ஏன் அதைச் சாப்பிடலை”ன்னு அதட்டுனாங்க. அவ ரொம்பக் கூலா, ”என் பிள்ளைக்கு ஈரல் பிடிக்கும். அதுக்குத்தான் வச்சேன்”னு சொன்னா. ஓ.... அந்தத் தாய்ப்பாசம் சீன் இருக்கே... தமிழ்ப்படங்கள்ல வழக்கமா இதுக்கு குஞ்சுகளுக்கு தாய்ப்பறவை சாப்பாடு ஊட்டுற சீனைக் காட்டுவாய்ங்க.. நீங்களும், “க்கீ..கீ... க்வி.. க்கீ.. க்வி...” ந்னு பேக்ரவுண்ட் ம்யூஸிக்கோட அந்த ஸீனை மைண்ட்ல ஓடவிட்டுக்கோங்க.. அம்மாவுக்குத்தான் செம பல்பு!!

எங்கம்மா, அவங்க மாமியாருக்கு ஒரே மருமக. ஹை, இதென்ன புதுசா இருக்குன்னு கேட்டா. மாமியாருக்கு ஒரே மகன்; ஸோ, ஒரே மருமக. லாஜிக் கரெக்டா இருக்கா? அம்மாப்பாக்கு ஒரே புள்ளைன்னா, ரொம்பப் பாசமாவும் இருப்பாங்க. அதுகூட ஓகே. ஒரே புள்ளைங்கிறதால, ரொம்ப நல்ல்ல்ல்ல ஸ்கூல்லச் சேத்து விடுவாங்க. அங்க படுத்துற பாடு காணாதுன்னு, பாட்டு க்ளாஸ், டிராயிங் க்ளாஸ், கராத்தே க்ளாஸ், யூஸிமாஸ் (UCMAS), ட்யூஷன் க்ளாஸ் அதுஇதுன்னு அவங்க எல்லாக் கனவையும் அந்த ஒர்ரே புள்ளை மேலே திணிப்பாங்க. புள்ளைங்களுக்கு ஏண்டா ஒத்தையா வந்து சேந்தோம்னு இருக்கும்.

இதுவே ஒரே மருமகன்னா எப்படி இருக்கும்? நாலஞ்சு இருந்தா, ஒருத்திகிட்ட கொஞ்சமா கோவப்படலாம். அடுத்தவ கிட்ட, முந்தினவளை வெறுப்பேத்தறதுக்காகவாவது, கொஞ்சம் அன்பா இரு(க்கிற மாதிரி காட்டி)க்கலாம். ஆனா, ஒரே புள்ளையா பிறக்கறத விட கொடுமையானது, சிலரிடம் ஒரே மருமகளா போய் மாட்டிக்கிறது. அந்த வகையில எங்கம்மாவும் கொஞ்சம் பட்டுட்டாங்களா, அதுனால, தான் பட்ட கஷ்டம் தன் பிள்ளைகளும் படக்கூடாதுங்கிறதுல ரொம்ப உறுதியா இருந்தாங்க.

எங்க நாலுபேருக்கும் வரன் பாக்கும்போது, ஒரே மகனா இருந்தா, முடியவே முடியாதுன்னு மறுத்துடுவாங்க. “டில்லிக்கே ராஜான்னாலும், ஒரே பையன்னா டாடாதான்”னுட்டாங்க. என் தங்கச்சிகளுக்கு மாப்பிள்ளை பாக்கும்போதுதான் நான் வெறுத்திட்டேன். கஷ்டப்பட்டு அலசி, அரிச்சு, வடிகட்டி யாரைக் கொண்டு நிறுத்தினாலும், இந்தக் காரணத்தைச் சொல்லி முடியாதுன்னுடுவாங்க. ஊர் உலகத்துல எல்லாரும், ஒரே மகனா இருக்கணும், சின்னக் குடும்பமா இருக்கணும்னு நினைக்கும்போது எங்கம்மா மட்டும் ஒரே மகனா இருக்ககூடாதுன்னு அடம் பிடிச்சது முரணாகத் தெரிஞ்சுது. அவங்ககிட்டயே ”வொய் மம்மி, வொய்?”னு கேட்டப்பதான், சிங்காரவேலன்ல கமலுக்கு அவங்கம்மா ஃப்ளாஷ்பேக் சொன்னாமாதிரி தன் கதையைச் சொல்லி “இளைய மருமக வந்தாத்தான், மூத்த மருமக அருமை தெரியும்”னு அருமையா, ஒரு வாக்குன்னாலும் திருவாக்காச் சொன்னாங்க.

சொன்னபடியே, தன் நாலு மகள்களுக்கும் பெரிய குடும்பங்களில் கல்யாணம் செஞ்சு வச்சாங்க. என் தங்கச்சிங்க மூணு பேரும் அவங்கவங்க குடும்பத்துல மூத்த மருமகளுங்களா ஆகிட்டாங்க. அவங்க அருமை பெருமையெல்லாம் அடுத்த மருமக வரும்போது, அம்மா கணிச்ச மாதிரியே,  இன்னும் அதிகமா நல்லாப் புரிஞ்சுடுச்சு.

என் அருமை தெரிஞ்சுதான்னுதானே கேக்கறீங்க?.... எங்க வீட்லயும், எனக்கு முன்னே உள்ள மூணு மருமகள்களோட அருமையை, நாலாவதா தி க்ரேட் நான் மருமகளா வந்ததுக்கப்புறம் என் மாமியார் ரொம்ப ரொம்ப நல்லாவே தெரிஞ்சுகிட்டாங்க. ஆனா, என் அருமை..... ஹூம்... எங்காத்துக்கார் கடைக்குட்டி!!


Post Comment

தன் பலமறியா ஆனை

ட்சித் தலைவரைச் சந்திக்க, அந்த ஊரின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். நகரத்திலிருந்து வெளியே செல்லவேண்டுமென்றால் அவர்களின் ஊரைக் கடந்துதான் செல்லவேண்டும். தாங்கள் ஏற்றுக் கொண்ட மாற்றங்களைத் தெரிவிக்கவும், அப்படியே தங்களின் நிலைகளை விளக்கிக் கூறி, தம் கோரிக்கைகளையும் பரிந்துரைக்கு ஏற்கும்படிக் கேட்டுக் கொள்ளவும் வந்திருந்தனர்.

பிரதிநிதிகளில் முக்கியமானவர் பேச ஆரம்பித்தார், “கலீஃபா அவர்களே!! நாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறோம். ஐவேளை தொழுகைகளையும் தவறாது தொழுதுகொள்கிறோம். ஆனால், ’ஸகாத்’ மட்டும் எங்களால் செலுத்தமுடியாது!! இந்த எங்களின் நிபந்தனை ஏற்கப்படுமெனில், இப்போதே எங்கள் ஊர் மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்கத் தயாராக உள்ளோம்.”

கலீஃபாவின் உடனிருந்த தோழர்களும் - உமர் (ரலி) உட்பட- இந்நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள். ”முஹம்மது (ஸல்) இறந்துவிட்ட இச்சூழ்நிலையில், எதிரிகள் பெருகிவரும் வேளையில், இக்கூட்டத்தாரையும் நம்மோடு இணைத்துக் கொண்டால், நம் பலம் பெருகும். எனவே, சம்மதியுங்கள்” என்றார்கள்.

கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அப்பிரதிநிதிகளிடம், “இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்றால், அதன் அத்தனை அடிப்படை அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஒன்றை ஏற்று, ஒன்றை விட்டுவிடுகிறீர்கள் என்றால், இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாகிறீர்கள். இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ளும்பட்சத்தில், நீங்கள் கொடுக்கவேண்டிய ஸகாத், ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றின் அளவே இருந்தாலுங்கூட, அதை உங்களிடமிருந்து நான் பெறாது விடமாட்டேன்” என்று சொல்லியனுப்பினார்கள்!!

ரமதான் என்றதும் நினைவுக்கு வருவது நோன்பு மட்டுமல்ல, ‘ஸகாத்’ எனப்படும் வரியும்தான்!! இதைத் தானம், தர்மமென்று சிலர் சொல்வர். அதைவிட, இது இஸ்லாம் விதித்த ‘சொத்தின்மீதான வரி’ என்பதுதான் சரியானது. ‘ஸகாத்’ என்ற சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்துதல்’, ‘வளர்ச்சியடைதல்’ என்று அர்த்தங்கள் உண்டு. சொத்திற்குரிய வரியைக் கொடுத்துத் தூய்மைப்படுத்திப் பெருக வைத்தல் என்று சொல்லலாம்.  ஸகாத் கொடுப்பதால், சொத்துக்கள் மட்டுமல்ல, கொடுப்பவரின் உள்ளமும் தூய்மை பெறும். இறைவனின் அருளும் பெருகும்.

நம்மிடம் இருக்கும் எல்லாவிதமான சொத்திற்கும் - வீடு, நிலம், நகை, விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், வருமானம், இருப்புத்தொகை, கடனாக கொடுத்துள்ள தொகை - இப்படி எல்லாவற்றின்மீதும், ’தனக்குப் போய்த்தான் தானமும், தர்மமும்’ என்பதாக, சொந்தத்தேவைக்குப் போக மிஞ்சியவற்றின்மீது மட்டுமே வரி கடமையாகிறது.  பொருளைப் பொறுத்து, குறைந்த பட்சம் 2.5% முதல் குறிப்பிட்ட சதவகிதம் வரி உண்டு.

ஸகாத் வரியின் நோக்கம், செல்வம் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், பரவலாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதன்மூலம், அவர்களும் பின்னாட்களில் ஸகாத் கொடுக்கக்கூடியவர்களாய் ஆகுமளவு வளம்பெற வேண்டும் என்பதே. இதன்மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும். 

’ஸகாத் தொகை கொடுப்பதற்கு அதிகத் தகுதியுடையவர்கள் உறவினர்களே’ மற்றும் ’ஸகாத்தை ஒருவரின் சொந்த ஊரிலேயே கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்ற அறிவுறுத்தல்கள் தம் உற்றார், பிறந்த ஊரை முன்னேற்றுவதே ஒருவரின் முதல் கடமை என்பது புரியவரும்.

ஸகாத் கொடுப்பதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றில் முதலாவது, எந்தச் சொத்தின்மீது ஸகாத் கொடுக்கிறீர்களோ, அதன் முழுமுதல் சொந்தக்காரர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அதாவது அந்தச் சொத்தின்மீது எல்லா உரிமையும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களின் தேவைக்குப் போக, குறிப்பிட்ட அதிகபட்ச அளவை அடைந்திருக்க வேண்டும். அந்தச் சொத்து (விளைபொருட்கள் தவிர) உங்களை அடைந்து ஓராண்டு (இஸ்லாமிய வருடம்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

ஸகாத் கடமையாகும் பொருள் நம்மிடம் ஒரு வருடம் முழுமையாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால்,  இந்த வருடம் முஹர்ரம் மாதத்தில் ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால், அது வாங்கி ஒரு வருடம் முழுமையடைந்தவுடன்தான் வரி கடமையாகிறது. அதன்படி, இந்த ரமலான் மாதம் அதற்கு வரி கொடுக்க வேண்டாம். அதே சமயம், அடுத்த ரமலான் வரும்வரை காத்திருக்காமல், முஹர்ரமிலேயே வரி கொடுத்துவிடவேண்டும். ஆக, இந்திய இன்கம்டாக்ஸிற்கு மார்ச் மாதம் மாதிரி, ஸகாத்திற்கு ரமலான் மாதம் ’எல்லை’ கிடையாது. ஒருபொருள் எவ்வப்போது அதன் ஓராண்டுகால எல்லையை அடைந்துவிடுகிறதோ அப்போது அதன் வரியைச் செலுத்திவிடவேண்டும்.

எனில் ரமலான் மாதம் ஏன்? அம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் அதிகமதிக நன்மையைப் பெற்றுத் தரும் என்பதால் இருக்கலாம். எனினும், அததற்கான வரியை, தாமதப்படுத்தாமல் அவ்வப்போதே செலுத்திவிடுவதே நல்லது.  மேலும், நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒருவகையில் பொருளாதார அழுத்தத்தையும் குறைக்கும். அதாவது, ரமலான் மாதத்தில் கணக்குபோட்டு ஸகாத் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், ஸகாத்தின் மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் புரட்டுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். அதுவே ஒவ்வொரு பொருளுக்கும் , அதை வாங்கிய மாதத்தில் ஸகாத் என்று கொடுத்து வந்தால், சிரமம் குறையும்.

மேலும், மொத்தமாக ரமலானில் கொடுக்கும்போது, அந்த மாதத்திற்குள் ஸகாத்தைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்று ஏற்படுத்திக் கொண்ட  கட்டாயத்தால், சில வேளைகளில் தகுதியற்றவர்களுக்குக் கூட கொடுத்து விட நேரிடுகிறது. அதுவே ஸகாத்தை வருடம் முழுதும் பரவலாகக் கொடுத்து வந்தோமானால், தக்கமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இருப்பினும், வருடமொருமுறை மொத்தமாகக் கொடுக்க நினைக்கிறோம் என்றால், அத்தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது நல்லது. வெறுமே சிலருக்கு 500, 1000 என்று கொடுக்காமல், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்கேற்ற தொழில்செய்ய உதவிகள் செய்து, அவர்களும் ஸகாத் கொடுக்குமளவு தன்னிறைவு பெறவைப்பது பொருத்தமானது. இதுபோலவே பலரும் கூட்டாகச் சேர்ந்து ஸகாத் தொகையை ஒன்றிணைத்து பெரிய அளவில் பயன்கள் தரக்கூடிய நல்லகாரியங்கள் செய்யலாம்.

திருக்குர் ஆனில், “ஸகாத்தைச் செலுத்துவீர்களாக” என்று மக்களுக்கு அறிவுறுத்தியதுபோலவே, “அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை எடுப்பீராக” என்றும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆணையிடுகிறான் இறைவன். இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படவேண்டும். அரசு அதை ஒருங்கிணைத்து, மக்களின் நலத்திட்டங்களிலும், பாதுகாப்பிற்கும் செலவழிக்கும்.

இதைச் சுட்டிக்காட்டி, சிலர் தம் நாட்டில் செலுத்தும் வரிகளை ஸகாத்தில் கழிப்பார்கள். அது தவறு. ”ஒருவருடைய சொத்தில் ஜகாத் சொடுத்துவிட்டு, அதே நேரம் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு வேறு வரிகளும் இருந்தால் அதனையும் ஒருவர் தன் சொத்தில் இருந்து கொடுக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் இந்திய/தாம் வாழும் நாட்டின் அரசிற்குச் செலுத்தும் வருமான/சொத்து/இத்யாதி வரிகள் ‘ஸகாத்’தில் அடங்காது. ஸகாத் செலுத்தப்படுவதற்கு இஸ்லாமிய அரசே தகுதிபெறும்.

முன்காலத்தில் இஸ்லாமிய அரசுகள், வேறு நிலையான வருமானங்கள் அதிகம் இல்லாத நிலையில் தம் மக்களிடமிருந்து பெற்ற ஜகாத், ஜிஸ்யா வரிகளே ஆட்சி நடத்த உதவின.  ஜகாத்தைப் போலவே ஜிஸ்யாவிற்கும் ’தன்னிறைவு’ போன்ற நிபந்தனைகள் இருந்தது. தற்காலத்திய இஸ்லாமிய நாடுகளில் வேறு நிலையான வருமானங்கள் உள்ளதால், அந்நாட்டு அரசாங்கங்களால் ஸகாத் வசூலிக்கப்படுவதில்லை (என்பது என் எண்ணம்).

மக்களின் ஸகாத்தை ஒன்றிணைத்து, எல்லாத் துறைகளிலும் பெரிய பெரிய நல்ல திட்டங்களைச் செயல்படுத்த இன்று அரசாங்கத்தைப்போல கட்டுக்கோப்பான அமைப்பு எதுவும் இல்லாததால், மக்கள் சில்லறை சில்லறையாக ஸகாத்தை விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  ’ஸதகா’ எனும் நன்கொடை கொடுக்க வேண்டிய முறையில் ஸகாத்தைக் கொடுத்து வருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே, முழு வளர்ச்சி நிலையை எட்ட முடியவில்லை. தற்காலங்களில் சில முஸ்லிம் அமைப்புகளும், சில ஊர்களின் ஜமாத்களும் ‘பைத்துல் மால்’ என்ற நிதிக்கருவூல அமைப்பை ஏற்படுத்தி பணம் வசூலித்து வருகிறார்கள். இவற்றின்மூலம், பெரும்பாலும் கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லாக் கடன், பெண்கள் திருமண உதவி என்று கொடுத்து வருகிறார்கள். 

எனினும்,  என் மனதிற்கு, ”யானை தன் பலம் அறியாது” என்பதாக  நாம் இன்னும் “ஸகாத்”தின் முழுபலத்தை அறிந்திடவில்லை என்றே தோன்றுகிறது.  இறைவனருளால், இக்காலங்களில் இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பெருகியுள்ளார்கள். ஒரு ஊரைச் சேர்ந்த ஒருசிலரின் ஸகாத்தை ஒன்றுசேர்த்தாலே,  அவ்வூரை வளம் கொழிக்க வைத்து, தன்னிறைவு பெறச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ். ஆனால், அதற்கான விழிப்புணர்வும், திறம்பட முன்னெடுத்துச் செயலாற்ற வேண்டியவர்களைக் கண்டடைவதுமே இன்றைய அவசியம்.

Post Comment