கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு புதுமணத் தம்பதியரைப் பார்க்கப் போயிருந்தேன். தனக்கு இன்னும் சுவையாக டீ போடும் பக்குவம் கைவரவில்லை என்று வருத்தப்பட்டார் அந்தப் பெண். சரினு நானே போட்டு (demo) சொல்லிக் கொடுத்தேன். ரொம்ப நல்லாருக்குனு ரசிச்சுக் குடிச்சுட்டுச் சொன்னார், ’உங்களுக்குச் சமைக்கிறதுல நிறைய எக்ஸ்பீரியன்ஸ், அதான் இவ்வளவு ஈஸியா நல்லா டீ போடுறீங்க, இல்லையா?’னு அப்பாவியாக் கேட்டார். நான் சொன்னேன், “அப்படியில்லை. 15 வருஷமாச் சமைக்கிறவங்கிறதால, நான் சமைச்சா நல்லாருக்கும்னு (புதுசாச்) சாப்பிடுறவங்களுக்கு ஒரு நம்பிக்கை. அந்த நம்பிக்கைதான் என்னோட பலம். எப்படி சமைச்சாலும், டேஸ்டாருக்குன்னு சாப்பிடுக்கிடுவாங்க. பெரிய பெரிய படிப்பு படிச்சிருந்தாலும், புதுசா படிச்சுமுடிச்ச டாக்டரவிட, ஆயிரம் பேரக் கொன்னாத்தான் அரை வைத்தியன்னு, கொஞ்சம் அனுபவமுள்ள டாக்டர்கிட்டதானே வைத்தியம் பாக்க விரும்புவோம்? !!”
14 வருஷம் முன்னே, ஒரு கையில ஆறுமாசப் பிள்ளையும், இன்னொரு கையில என் மைனி (அவங்க தம்பி நலனைக் கருதி) எழுதித் தந்த சமையல் குறிப்புகளுமா அபுதாபி வந்து இறங்கினப்போ நானும் இந்த நிலைமையிலத்தான் இருந்தேன். அதுவும் அப்பல்லாம், அபுதாபியில குடும்பத்தோட இருக்கவங்க ரொம்ப ரொம்ப அரிது. ஒரு சந்தேகம் கேக்கணும்னாகூட, ஊருக்கு ஃபோன் பண்ணி அம்மாகிட்டத்தான் கேக்கணும். இலவச இணைப்பா, ”கூடமாட நின்னு வேல செஞ்சாத்தானே”ன்னு ஆரம்பிக்கும் ஒரு பாட்டும் பாடித் தருவாங்க எங்கம்மா!! இப்பப் போல இணையமோ, சமையல் தளங்களோ கிடையாதே. எல்லா டிவி சேனல்களிலும் வர்ற சமையல் நிகழ்ச்சிகளை (மட்டும்) ஒண்ணுவிடாமப் பார்ப்பேன் - மறு ஒளிபரப்பா இருந்தாலும்!!
நான் அமீரகம் வந்தப்போ, ஒவ்வொரு வார இறுதியிலயும் குறைஞ்சது 10-15 பேரு விருந்தினர்கள் வருவாங்க - எல்லாரும் பேச்சிலர்ஸ்தான். ரெண்டுபேருக்குச் சமைக்கவே திண்டாடிகிட்டிருக்கும்போது, 15 பேர்னா.. அழுகை அழுகையா வரும்... இப்பப் போல ஹோட்டல்களோ, “ஃப்ரீ ஹோம் டெலிவரி”யோ கிடையாது. ஆனாலும் சமாளிச்சு நான் செஞ்ச சாப்பாடு, பெரும்பாலும் எனக்கே ஒண்ணும் மிஞ்சாது. அவ்வளவு ருசியான்னு சந்தேகம் வந்தாலும், ‘ஆலை இல்லா ஊருக்கு இலுப்பைப்பூ சக்கர’யும் ஞாபகம் வரும். இன்னொரு உண்மையும் சொல்லணும், சரியான அளவு தெரியாம குறைச்சுச் சமைச்சிருப்பேன். ரெகுலரா வர்ற சில (சமைக்கத் தெரிஞ்ச) பேச்சிலர்ஸ், எனக்கு நிறைய டிப்ஸ் சொல்லித் தந்தாங்க. இப்படித்தான் சமையல் வளர்த்தேன்.
அப்புறம் அஞ்சாறு வருஷம் கழிச்சு நிறைய குடும்பங்கள் அமீரகத்துக்கு வர ஆரம்பிச்சுது. சந்தேகம் கேக்க, வேற யாராவது சமைச்சதைச் சாப்பிட, புது ரெஸிப்பிகள் கேக்கன்னு வாய்ப்புகள் அமைஞ்சுது. ஆனா ரொம்பவே நடுக்கம் தந்த விஷயம், யாராவது குடும்பத்தோட விருந்துக்கு வர்றாங்கன்னு சொன்னாத்தான். பின்ன, பேச்சிலர்ஸ்னா என்னத்த போட்டாலும், அவங்க சாப்பிடுற ஹோட்டல்/மெஸ் சாப்பாட்டுக்கு இது அமிர்தம்னு சாப்பிட்டுகிடுவாங்க. ஆனா, சமையல்ல எக்ஸ்பர்ட் ஆன சீனியர் பெண்கள் வரும்போதுதான் தர்மசங்கடமாயிருக்கும். சிலர், பெருந்தன்மையா சாப்பிட்டு, நம்மை என்கரேஜ் பண்ணி, நிறைய டிப்ஸ்கள் தருவாங்க. இவங்க வந்தாலே சந்தோஷமாருக்கும்.
ஒருசிலர் இருக்காங்க, நாம செஞ்சு வச்சிருக்க மெனுவைப் பாத்துட்டு, “அய்ய, சப்பாத்திக்கு வெஜ் குருமாவா? எங்க வீட்டுக்காரர் தொடவே மாட்டார். மட்டன் முழம்புதான் வேணும்பார்”, “என் பொண்ணுக்கு சப்பாத்தியே பிடிக்காது. பரோட்டாதான் பிடிக்கும்” “குருமால கரம் மசாலா போடலையா, வாசனையே இல்லியே”னு என்னென்னவோ சொல்லுவாங்க. அப்பல்லாம் எனக்கு அவ்வளவு விவரம் தெரியாதா, (நிஜம்ம்மாங்க) அதனால கண்ணுல தண்ணி முட்ட, அவங்க சொல்றதக் கேட்டுகிட்டு சும்மா நிப்பேன்!! அப்புறம் கொஞ்ச கொஞ்சமாத் தேறி, யாராவது அப்படி சொன்னாங்கன்னா, “வழக்கமா மட்டன்தானே சாப்பிடுறீங்க, இன்னிக்கு வெஜ் குருமா சாப்பிட்டுப் பாருங்க. இனி மட்டன் பக்கமே போகமாட்டீங்க. உடம்பும் குறையும்”, “சப்பாத்தி நீங்க செய்ற மாதிரி இருக்காது. அதனால உங்க பொண்ணு கண்டிப்பா விரும்பி சாப்பிடுவா பாருங்க” அப்படின்னு ஒரு “உள்குத்தோட” பதில் சொல்லிடுவோம்ல!!
விருந்துக்குப் போனா, வழக்கமா வீட்டில சாப்பிடறதா இல்லாம, வித்தியாசமா வகைகளையும், டேஸ்டையும் சாப்பிடணும், செய்முறை கேக்கணும்னுதான் நிறைய பேரு விரும்புவோம் - என்னைப் போல. அப்படியில்லாம, வீட்டில சாப்பிடுற அதே வெரைட்டிதான் விருந்துக்கும் இருக்கணும்னு எதிர்பார்க்கிறவங்களப் பாத்தா எனக்கு ஆச்சரியமாவும், கடுப்பாவும் இருக்கும். எங்க பக்கம் ஒருத்தங்க இருக்காங்க, அவங்க வர்றாங்கன்னா ஃப்ரைட் ரைஸும், சில்லி சிக்கனும்தான் செய்யணும். இது அவங்க வீட்டிலயும் அடிக்கடி செய்றதுதான். கொஞ்ச நாள் ’கட்டுப்பட்டு’ செஞ்சேன், இப்ப எனக்கே அலுத்துப் போயி வேற எதாவது செஞ்சிடுவேன்.
அதே சமயம், சிலருக்கு சில உணவு ஒத்துக்காது. அதக் கேட்டுத் தெரிஞ்சுகிடறது அவசியம்தான். பிபி, சுகர் இப்பவெல்லாம் ரொம்ப சகஜமாகிட்டது. அதனால, அதுக்கேத்தமாதிரி மாற்று உணவும் வச்சிருக்கணும். அப்படிப்பட்டவங்க சிரமம் பாக்காம, விருந்து சமைக்கறவங்ககிட்ட கூப்பிட்டுச் சொல்லிடுறது நல்லது. அப்புறம், “எனக்கு பிபி இருக்குனு தெரிஞ்சே, பிரியாணியும் சிக்கன் ஃப்ரையும் செஞ்சு வச்சிருந்தா”னு குத்தம் மட்டும் சொல்லக் கூடாது!! ஒரு உறவினர், இப்படித்தான் ஹை பிபி, வீட்டில உணவுக் கட்டுப்பாடு இருந்துதுன்னு, கல்யாண வீடு வந்தா முத ஆளா போயிடுவாங்க. அப்புறம், வாதம் வந்து, படுக்கையில கஷ்டப்பட்டு.. எதுக்கு அதெல்லாம்..
என் வாப்பாவோட சிறுவயது நண்பர் ஒருவர், அவரே எழுதின கவிதை(!!) ஒண்ணை அடிக்கடி சொல்வார்:
பருப்புன்னா வெறுப்பு
பொறியல்னா மறியல்
சட்டினின்னா பட்டினி
கறின்னாதான் சரி!!
சில சமயம் கரெக்டா (உரிமையா) சாப்பாட்டுவேளையில் என் பாட்டி வீட்டிற்கு வந்தாலே புரிந்துவிடும்!! :-)))))
இன்னொரு கஷ்டம், எத்தனை பேரு வர்றாங்கன்னு தெரிஞ்சுக்கிறது. சில சமயம், சிலர் நண்பர்களையோ, குடும்பத்தையோ உடன் அழைச்சுகிட்டு வருவாங்க. நேரா கேக்கவும் தயக்கமாருக்கும். சிலர், அப்படிக் கேக்கறதையே குத்தமா எடுத்துக்குவாங்க!! எத்தினி பேர் வந்தாலும் நிமிஷத்துல சமைச்சுப் போடத் தெரியணுமாம்ல குடும்பப் பொண்ணுக்கு?! பல சமயம், அளவு தெரியாம நிறைய சமைச்சு, மிஞ்சுனத ரெண்டு நாள் சாப்பிட்டு, அப்புறமும் காலியாகாம, மனசில்லாம தூரப் போட வேண்டிய நிலையும் (ராப்பிச்சை கிடையாதே இங்கே) வந்ததுண்டு. அதுக்குப் பயந்து, நாலு பேர் வருவாங்கன்னு அளவாச் சமைச்சா, எட்டு பேர் வந்து நிப்பாங்க!! இப்பல்லாம் இதுக்கொரு வழி கண்டுபிடிச்சுட்டேன்.. வரமுன்னாடி விருந்தாளிக்கு ஃபோன் பண்ணி, “எல்லாரும் கண்டிப்பா வரணும். அத்தை, மாமா, சித்தி எல்லாரையும் கூட்டிட்டு வாங்க”னு மனசார அழைச்சா, அவங்க மனசும் குளிரும்; “இல்லைம்மா, மாமாவுக்கு கால் வலி. அதனால வரமுடியாது. அத்தை அவங்க துணைக்கிருப்பாங்க. நானும், மச்சானும், பிள்ளைகளும் மட்டும் வர்றோம்”னு துல்லியமா சமைக்கிறதுக்கு அளவும் தெரிஞ்சிடும். ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்!!
என் தோழியின் மாமியார், திடீர்விருந்தினர்களுக்காகன்னு தினமும் சமைக்கும்போது இரண்டு கப் அரிசி சேர்த்துத்தான் சமைப்பாராம். அவர்கள் இருப்பது நகரத்தில் என்பதால், விருந்தினர்கள் அவ்வப்போது வருவதுண்டு என்றாலும், தினமும் வருவதில்லை. அரிசி விலை கிலோ முப்பத்தாறு ரூபாய். இதிலே தினமும் அதிகமா சமைத்து பழையது சாப்பிடவோ அல்லது வேலையாளுக்குக் கொடுப்பதோ ஏன்? அருகிலே நிறைய உணவகங்கள் உண்டு. அதுவுமில்லாமல், பழைய காலம் போலல்லாமல், இப்போ அலைபேசி வசதி இருப்பதால், தெரிவிக்காமல் யாரும் வருவதில்லை எனும்போது பணமும், உணவும் ஒருசேர வீணாக்க வேண்டாம் என்று எடுத்துச் சொல்லியதில், மாமியார் புரிந்துகொண்டார்.
உண்மைதானே? ஹோட்டல்களும், வேகத்தகவல்தொடர்பு முறைகளும் இல்லாத அக்காலங்களில் விருந்தோம்பல் என்று காரணம் சொல்லி, ஒருபடி அரிசி அதிகமாகவே சமைப்பார்கள். அப்படி யாரும் வரவில்லையென்றாலும், அந்த உணவு வீணாகாதபடிக்கு, இரவிலும் சாதம் உண்ணும் பழக்கமோ, அல்லது பணியாளர்கள், உறவினர்கள் என்று நிறைய பேர் இருப்பார்கள். இப்போவெல்லாம் மாலையில் டிஃபன்தான் பெரும்பாலான வீடுகளில். பணியாளர்களும் சரி, இரப்பவர்களும் சரி, மீந்த சாதம் பெற விரும்புவதில்லை. கால மாற்றத்திற்கேற்ப நாமும் மாறித்தான் ஆக வேண்டியிருக்கிறது.
இன்னும் சிலர், சும்மா அவங்க வீட்டுக்கு நட்புரீதியில் (அறிவிக்காமல்) பார்க்கப் போனாக்கூட, சாப்பிட்டுட்டுத்தான் போணும்னு அடம்பிடிப்பாங்க. வீட்டில் அதற்கான பொருட்கள் இருக்கிறதா, கைக்குழந்தை வைத்திருக்கும் மனைவிக்குச் சமைக்க வசதிப்படுமா, உடல்நலக்குறைவு இருக்கிறதா என்று எதுபற்றியும் கவலைப்படுவதில்லை. அதற்குமேலே செல்ல மிரட்டலும் விடுப்பார்கள், “எங்கவீட்ல சாப்பிடாட்டி, உங்க வீட்லயும் நாங்க சாப்பிடமாட்டோம்” - சின்னப் பிள்ளைகள் ‘உன் பேச்சு கா’ என்பதுபோல..
இன்னும் சிலரின் வீட்டுக்கு விருந்துக்குப் போகவே பயமாருக்கும். எக்கச்சக்க வகைகளில் உணவு செய்து/வாங்கி வைத்துக் கொண்டு, எல்லாத்தையும் சாப்பிட்டே ஆகணும்னு அன்புத் தொல்லை செய்வாங்க. ஒருசாண் வயித்துல எவ்வளவுதான் திணிக்க முடியும்? வேண்டாம்னு மறுத்தா, ‘பந்தா’ பண்றோம்னு நினைக்கிறாங்க. அப்படித்தான் ஒரு நண்பர் வீட்டில், கட்டாயப்படுத்த, ‘வேணும்னா பார்சல் கொடுத்திடுங்க. ரெண்டு வேளை உங்க பேரைச் சொல்லிச் சாப்பிட்டுக்கிறேன். ஆனா, இப்ப என் வயித்துல துளிகூட இடமில்லை”னு கெஞ்ச வேண்டிய நிலைமையாகிடுச்சு.
அதேபோல, விருந்துக்கு வர்றவங்களையும் இப்படிக் கட்டாயப்படுத்தணும்னு சிலர் எதிர்பார்ப்பாங்க.. எனக்கு நிஜமாவே அதல்லாம் வரமாட்டேங்குது. எப்படி நான் விருந்தினராகப் போகும்போது, எனக்குப் பாசாங்கு பண்ணத் தெரியாதோ, அதேபோல, வந்த விருந்தினர்கள் ‘வேண்டாம்’னு ரெண்டுதரம் சொல்லிட்டா, நிஜமாவே போதும்போலன்னு விட்டுடுவேன். எனக்கு அப்படிக் கட்டாயப்படுத்தத் தெரில.. இதுக்கும் ஒருத்தர் இருக்கார், இடியாப்பம் (அல்லது வேற எதாவது) வைக்கட்டுமா என்று கேட்டால், ‘ஒண்ணே ஒண்ணு வை’ என்று சொல்லிக் கொண்டே ‘முன்று விரல்’ காட்டுவார்!!
இப்ப நோன்பு நேரம்கிறதால, ‘இஃப்தார்’ விருந்துகள் களைகட்டும் காலம்!! (’இஃப்தார்’ விருந்துன்னா, நோன்பு திறக்கும் விருந்து - அரசியல்வாதிகள் நோன்பு கஞ்சி குடித்தார்கள்னு செய்திகள்ல படிச்சிருப்போமே - அதுபோல!!) மற்ற நேரங்களிலாவது கொஞ்சம் அதிகப்படியா சாப்பிட முயற்சிக்கலாம். ஆனா, நோன்பு நேரத்துல அப்படி முடியாது. பசிச்சிருந்த வயிறைக் கவனமாப் பாத்துத்தான் உணவு கொடுக்கணும். ஒரேடியாத் திணிச்சா, மக்கர் பண்ணிடும் - வயிறு மட்டுமில்லை, முழு உடம்பும்!! நோன்பினால் உண்டாகக்கூடிய உடல் சூட்டையும், வாய்வையும் குறைக்கக் குடிக்கும் நோன்புக் கஞ்சியைக் கூட சிலர் கறி போட்டு, பிரியாணி ரேஞ்சுக்குச் செஞ்சிருப்பாங்க!! அதுமட்டுமில்லை, பொறித்த அயிட்டங்களும் கணக்கில்லாம சேத்துப்பாங்க சிலர். இறைவனுக்காகப் பசித்திருக்கிறோம். அதேசமயம், இறைவன் தந்த உணவையும், உடலையும் வீணாக்காமல் பராமரிக்க வேண்டியதும் நம் கடமைதானே.
மற்ற சமயங்களில் வீணாகும் உணவு அளவைவிட, நோன்பு காலங்களில் இஸ்லாமியர்கள் வீணாக்கும் உணவு அதிகமோன்னு தோணுது. இதுக்கு எச்சரிக்கை தர, சோமாலியாவைப் பாருங்கன்னு சொல்ல மாட்டேன். நம்ம அண்டை, அயல்களைப் பார்த்தாலே போதும்!! பசியைக் கட்டுப்படுத்த நாம் பெறும் பயிற்சி, சரிவிகித உணவை அளவோடு உண்பதிலும் இருக்க வேண்டும். உணவை வீணடித்தலைவிட பெரிய பாவம் இல்லைன்னுதான் சொல்லணும். அளவோடு சமைத்து, அளவோடு உண்டு, அவசியமானவர்களுக்குப் பகிர்வோம்.
Post Comment