Pages

Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

துளித்துளியாய்.....




“புட்டி நீர்” புத்தகத்தின் விமர்சனப் பதிவில் விரிவாகப் பார்த்தபடி, வீட்டிற்கு வரும் கார்ப்போரேஷன் தண்ணீரையும் நம்பி குடிக்க முடிவதில்லை; அதைச் சுத்திகரிக்க வீட்டிலேயே எதிர் சவ்வூடு பரவல் கருவி (R.O) வைத்தால் அதில் கிருமிகளோடு சேர்ந்து, தாதுக்களும் போய், தண்ணீர் சத்தில்லாமல் போய்விடுகிறது. அதிகப் பணம் கொடுத்து தரமான குடிநீர் என்று நினைத்து வாங்கும் பாட்டில் குடி நீரும் இவற்றிற்குக் குறைவில்லாதபடிக்கு, சுத்தமில்லாதவை என்று ஆய்வுகள் கூறுகின்றன!!

வற்றாத ஜீவ நதிகள் என்று பெயர் பெற்ற ஆறுகள் கூட, வற்றி வரண்டு போய்விட்டன!! நல்ல மழை பொழிந்து தண்ணீர் வரத்து அதிகரித்திருக்க வேண்டிய இந்த ஆகஸ்ட் மாதத்திலும், மக்கள் ஏப்ரல் - மே போல மக்கள் குடங்களோடு தண்ணீருக்காக அலைகின்றனர்!  இனி ஒரு உலகப் போர் வந்தால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என்று செய்திகள் வேறு பயமுறுத்துகின்றன.... உலகப் போர் வருமுன்பே, தெருக்களில், நம்  மக்கள் தண்ணீர் லாரி முன்பும், குழாயடிகளிலும் சண்டை போடும் பரிதாப நிலை நிலவுகின்றது.    என்னதான் செய்வது?

ழக்கம்போல, கையில் இருக்கும் வெண்ணெயை மறந்துவிட்டு, நெய்க்கு அலைகின்றோம்!! ஆம், மழை நீர்!! இந்த மழை நீரை முறையாகச் சேமித்தால், எங்கும் தண்ணீருக்காக அலைய வேண்டியதில்லை. நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து வெயில் காலத்திலும் நம் தேவை தீர்க்குமளவு ஆழ்குழாயில் நீர் வரத்து இருக்கும்.

மழை நீர் மற்ற நீரைவிட தூய்மையானது, சுவையானது. இதில் சமைத்தால் சுவை அதிகமாக இருக்கும்.

ழை நீர் சேகரிப்பு இரு வகைப்படும்:
          
            1. குடி நீருக்காக
            2. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த.

தற்போதைய சூழலில், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழை நீர் தொட்டி அமைப்பதைவிட, குடி நீருக்காக மழை நீரைச் சேமித்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்!!

குடி நீருக்காக:

குடி நீர்த் தேவைகளுக்காக மழை நீரைப் பல வகைகளில் சேமிக்கலாம்... 

1. வீடுகளில் தொட்டியில் மழை நீரை நேரடியாகச் சேமிப்பது:

மொட்டை மாடியில் அல்லது கூரை வீடுகளில் கூரை மீது விழும் மழையை நேரடியாக தொட்டிகளில் பிடித்து வைத்துக் கொள்ளலாம். பின்னர் அதை, பல மாதங்கள் வரை அந்த நீரை குடிக்கவும், சமைக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது எளிதான முறை.


அதிக செலவு பிடிக்காத  இந்த அமைப்பை, ஒரு முறை செய்து வைத்து கொண்டால், பல வருடங்கள் தொடர்ந்து பயன்படும். ஒவ்வொரு மழைக்கு முன்பும், மொட்டை மாடியைக் கொஞ்சம் சுத்தம் செய்வது மட்டுமே நமது வேலை!!

இதைப் பல வருடங்களாகப் பின்பற்றி வரும் ஒரு மழைநீர் சேகரிப்பாளரின் செய்முறைவிளக்க அனுபவம் இங்கே: 


2. ஓட்டு வீடாக இருந்தாலும் மழை நீர் சேகரிப்பு சாத்தியமே!!

3. மழை நீர்ப் பொறியாளர் என்றழைக்கப்படும் திரு. வரதராஜன் அவர்கள், தனது வீட்டையே மழை நீர் ஆராய்ச்சி மையமாக மாற்றி, தற்போது பத்து லட்சம் லிட்டர் மழை நீரைச் சேமித்து வைத்துள்ளார். இரண்டாயிரம் வீடுகளுக்கு மேலாக, மழை நீர் சேமிக்க ஆலோசனைகள் கூறி சேமிக்க உதவியுள்ளார்.  விரும்புவோருக்கு, பஸ் செலவுக்குக் கொடுத்தால், வீட்டுக்கு வந்தே மழை நீர் சேகரிப்பு குறித்த ஆலோசனைகள் கூறத் தயாராக உள்ளார் - கட்டணம் ஏதுமின்றி!!


4. அடுக்கு மாடி கட்டிடங்களில் மழை நீரைச் சேகரிக்க, கட்டிடம் கட்டும்போதே அதற்கான அமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால் நல்லது. இல்லையென்றாலும், பிற்பாடு செய்யலாம். வீடியோவில் உள்ளது போல...



5. பிரத்யேகமாகக் கட்டப்பட்ட நிலத்தடி தொட்டிகளில் மழைநீரைச் சேமித்தல்:

வீடு கட்டும்போதே, இம்முறையில் ஒரு தொட்டி கட்டி, அதில் மழை நீர் சேகரம் ஆகும்படி செய்துவிட்டால், வருடம் முழுதும் நீரைப்பற்றிக் கவலையேயில்லை!!


நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த:

இன்று “போர்” எனப்படும் ஆழ்குழாய் வழியாக நிலத்தடி நீர் எடுக்கப்படாத வீடுகளே இல்லை எனலாம். எடுத்துக்கொண்டே இருந்தால், அது என்ன அமுதசுரபியா... நீர் வந்து கொண்டே இருப்பதற்கு?

மழை நீரோ, கழிவு நீரோ உள்ளே செல்லமுடியாதபடிக்கு கான்க்ரீட் தரைகள், சாலைகள் என்றான பின் எவ்வாறு நிலத்தின் தண்ணீர் மட்டம் உயரும்? விளைவு, இன்று 200 - 300 அடியெல்லாம் தாண்டி, 1000 அடியில் போர்கள் தோண்டுவது சர்வ சாதாரணமாகிவிட்டது!!

அப்படி இலட்சங்கள் செலவழித்து ஆயிரம் அடி தாண்டி போர் போட்டாலும், மிகச்சில ஆயிரம் செலவில் மழை நீர் வடிகால் ஒன்றைக் கட்டமாட்டேன் என்று மக்கள் இருபப்து வேதனையான விந்தை!!



போர்வெல்லின் அருகே, சில மீட்டர்கள் மட்டுமே தோண்டி ஒரு குழாயை நட்டு, அதைச் சுற்றி மணலும், ஜல்லியும் போட்டுவிட்டால் அதுதான் மழைநீர் வடிகால். நிலத்தடி நீரின் மட்டத்தை விரைவில் உயர்த்திவிடுவதோடு, தண்ணீரின் உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்து விடும்!!


 


மழைநீர் சேகரிப்பு முறைகள் குறித்தும, செய்முறைகள் குறித்தும் விபரமாகப் பேசும் ஒரு வலைத் தளம்: https://tinyurl.com/y7m4x482

இல்லங்க....எனக்கு இதெல்லாத்தையும் உக்காந்து வாசிக்கவும், அதன்படி செய்யவும் நேரமில்ல... பணம் கொடுத்தா யாராவது செஞ்சு தருவாங்களான்னு கேட்பவர்களுக்கும் பதில் இருக்கிறது!! ஒரு தனியார் நிறுவனம், இதைத் தொழிலாகவே செய்து வருகிறது!! இந்நிறுவனம உருவாக்கிய "#மழை இல்லம்" குறித்து  விகடனில் வந்த தகவல்கள் இங்கும, இங்கும்.    http://rainstock.in/rainwater-harvesting/

இன்னுமொரு நிறுவனம்:

https://www.facebook.com/guna.sekaran.54772728/posts/1668151173209158


வலையில் கொஞ்சம் தேடினால் போதும், ஏகப்பட்ட விபரங்கள் வந்து விழுகின்றன....  வீடே இல்லாதவர்கள் கூட மழை நீரை சேகரிக்க வழிகள் கிடைக்கும்!  தவிர, நிறைய பேர் செய்திருப்பதால், அவர்களிடம் ஆலோசனை பெற்று செய்துவிடலாம். எதிர்வரும் மழைக்காலத்தை உத்தேசித்து, இப்போதே தயாரானால், அடுத்த கோடையை குளுகுளுவெனக் கழிக்கலாம்!!

Post Comment

என் குத்தமா, உங்குத்தமா





சில வருடங்களுக்கு முன், இதுபோல பெய்த ஒரு பேய்மழையில், என் உறவினர் ஒருவரின் வீட்டிற்குள்ளும் வெள்ளம் புகுந்துவிட்டது.  செய்திகளில் மட்டுமே அதுவரை கண்டுவந்த ஒரு நிகழ்வு, முதன்முதலாக தெரிந்த ஒருவருக்கும் நிகழ்ந்தது என்றபோது, அதன் நடைமுறைத் தாக்கங்கள் தெரிய வர அதன் அதிர்ச்சியிலிருந்து நான் - நேரடியாகப் பாதிக்கப்படாத நான் - மீளவே பல காலமாயிற்று.

பெய்யும் மழையின் நீர் சுத்தமானது என்றாலும், அது கொண்டு வரும் வெள்ளம் மிக மிக அசுத்தமானது. அதில் வீட்டுப்பொருட்கள் மூழ்கும்போது, ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரணமானவை அல்ல. வீட்டினுள் மழைவெள்ளம் புகுவது  என்பது மனம், உடல், பொருள், உறவு என எல்லா வகைகளிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்!!

வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாவற்றிலும் சகதி படியும்!!  எவ்வளவு சுத்தம் செய்து கழுவினாலும் நாற்றம் எளிதில் போகாது. துண்மணிகளை துவைத்த பின்னரும் உடுத்த மனம் வராது. எதிர்பாராமல் வந்த வெள்ளம் என்பதால், குழந்தைகளின் பள்ளிப்பைகள் முதல் பாஸ்போர்ட் வரை தண்ணீரில் ஊறிப் போயின. பள்ளிப் புத்தகங்களைக் கூட பின்னர் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், பாஸ்போர்ட் மாற்றுவதைவிட மறந்துவிடுவதுதான் நல்லது.

ப்போது எல்லார் மனதிலும், “ஏரி, குளம் இருந்த இடத்துல வீடு கட்டுனா வெள்ளம் வராம வேறென்ன வரும்?” என்று ஒரு எண்ணம் தோன்றும்!! இந்த இடங்களில் வீடு கட்டியவர்கள் எல்லாம் அனுமதி வாங்காமல் கட்டவில்லை! அது புறம்போக்கு நிலமும் அல்ல! படிப்பறிவு மிகுந்துவிட்ட இந்த காலத்தில், அரசின் அப்ரூவல் இருக்கிறதா என முறையாக எல்லாம் பரிசோதித்துத்தான் வாங்குகிறார்கள். எனில் இதில், மக்களைக் குறை சொல்வது என்ன நியாயம்?

புறநகர்ப்பகுதி என்பதால் இன்னும் குடிநீர், கழிவுநீர் வசதிகள் ஏன், பேருந்து வசதிகூட இல்லை என்றபோதும், விலை குறைவாகக் கிடைப்பதால், அத்தனை வசதிக்குறைவுகளையும் பொறுத்துக் கொண்டு,  வாழ்க்கையில் பாதியை அலுவலகம்/பள்ளி சென்று வருவதிலேயே தொலைக்க நேரிட்ட போதும், சொந்தமாக இருக்க ஒரு சிறு வீடு வேண்டும் என்ற ஒரு எளிய குடும்பத்தின் கனவு இல்லம் அது. வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி, ஏரியா கவுன்சிலர்களுக்கும்கூட கப்பம் கட்டி, கட்டிய வீடு அது.

இடத்திற்கான அப்ரூவல், கட்டும் வீட்டிற்கான அப்ரூவல் எல்லாம் அரசாங்கம்தானே தருகிறது? பிறகேன் கட்டியவர்கள் மீது பழி?

ன்னொரு பழி, கழிவுநீர் வடிகால்கள் எல்லாம் பிளாஸ்டிக்கால் அடைபட்டு விட்டன என்பது. அதுவும் உண்மையே. ஆனால், இந்த ப்ளாஸ்டிக் கவர்கள் எல்லாம், பயனீட்டாளர்கள் தம் வீட்டில் சொந்தமாக உருவாக்கிக் கொண்டவையா என்ன?

ப்ளாஸ்டிக் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானது என்றால், அதை உற்பத்தி நிலையிலேயே தடுக்கும் வாய்ப்பு அரசுகளுக்கு இல்லையா? தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது போல, ப்ளாஸ்டிக் கவர்கள் உற்பத்திக்கு தடையில்லை. பயன்படுத்த மட்டுமே தடை என்றால்?

சரி, ப்ளாஸ்டிக் மறுசுழற்சி செய்யலாம்தான். ஆனால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஏற்றவையாக, எளிதில் அணுகக்கூடியவையாக எத்தனை மறுசுழற்சி மையங்கள் உள்ளன? அன்றாடம் வயிற்றுப் பாட்டுக்கே நேரம் போதாத சூழ்நிலையில் உள்ள மக்களுக்கு வலிந்து மறுசுழற்சிக்கு ஒதுக்க ஏது நேரம்?

உற்பத்திக்கு அனுமதி கொடுத்த அரசின் கடமையல்லவா உரிய முறையில் அகற்றலும், மறுசுழற்சியும்? எல்லாவற்றையும் மக்களே பார்த்துப் பார்த்துச் செய்து கொண்டிருந்தால், அரசாங்கம் எதற்கு?

ப்ளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மீது எந்த பொறுப்புமில்லை; ஆனால் பயன்படுத்துபவர்களுக்கு மட்டும்தாம் அந்தப் பொறுப்பு என்பது என்ன நீதி?

மேலை நாடுகளில், ப்ளாஸ்டிக் பொருளை உற்பத்தி செய்பவர்களுக்கும், தமது உற்பத்திகளில் ப்ளாஸ்டிக்கைப் பயன்படுத்தினாலும், அந்நிறுவனங்கள் மீது கூடுதல் வரி போன்ற நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. இதன்மூலம் தமது தயாரிப்புகளில், சுற்றுச் சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்த அல்லது பொருட்களின் பயன்பாட்டு காலம் முடிந்த பின், கன்ஸ்யூமர்களிடமிருந்து அப்பொருளை மறுசுழற்சிக்கு வாங்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். இம்முறைக்கு Extended producer responsibility  என்று பெயர்.

நம் தமிழ்நாட்டிலேயே, முன்பு காளிமார்க் போன்ற உள்நாட்டுத் தயாரிப்பு குளிர்பானங்கள் வாங்கும்போது, அந்த போத்தலைத் திருப்பிக் கொடுத்தால்தான் அதை வாங்கும்போது அதிகப்படியாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். கன்னியாகுமரி மாவட்டத்தில் 2010 முதல் சில வருடங்கள் மட்டும் கடுமையான ப்ளாஸ்டிக் தடை இருந்தது. இந்தியாவில் சில சுற்றுலா தளங்களிலும் தடை உண்டு. அங்கெல்லாம் சாத்தியம் என்றால், பிற இடங்களிலும் சாத்தியமே. நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமையே. ஆனால் அக்கடமைகள் இங்கு பயனாளிகளின் மீது ஒருதலைபட்சமாகத் திணிக்கப்படுகின்றன.

தைப்போலவே, ஒரு இடம் விற்பனைக்கும், வீடு கட்டுவதற்கும் உரிய இடம்தான் என்று ஒப்புதல் அளித்து ஒப்பிட்ட அரசு அலுவலர், அதன் விற்பனையைப் பதிவு செய்த அலுவலர், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான வரைபடத்தை சரிபார்த்து ஒப்பிட்ட அலுவலர் ஆகியோருக்கும், கொள்கை வரைந்த அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையா இதில்? ஒரு சாதாரண பொதுஜனம் - காமன் மேன் - தான் வாங்கும் இடம் முன்பு ஏரியாகவோ, குளமாகவோ இருந்ததா என்பதை அறிந்து கொள்வதொன்றும் சுலபமில்லை. அரசு அந்த இடத்தை விற்க அப்ரூவல் கொடுத்திருக்கிறது என்பதுதான் பொதுஜனத்திற்கு இருக்கும் ஒரே உத்தரவாதம்.

மக்களின்மீது எந்தத் தவறுமே இல்லை என்றோ, மக்களுக்கு எந்தப் பொறுப்புமே இல்லை என்றோ வாதிடவில்லை. தனியொரு மனிதன் எல்லாவற்றையும் சுயமாக ஆராய்ந்தறிந்து சரியாக வாழ்ந்திட முடியும் என்றால், அரசாங்கம் எதற்கு, ஆட்சியாளர்கள் எதற்கு, அரசாங்கப் பணியாளர்கள்தான் எதற்கு?

மக்கள்தான் சுயபொறுப்போடு நடந்து கொள்ள வேண்டுமென்றால், ஏன் டாஸ்மாக்கை மூடச் சொல்லிக் கேட்கிறோம்? மக்கள் கட்டுப்பாட்டோடு இருந்துகொண்டால் போதுமே?

தாம் எடுக்கும் முடிவுகளுக்கும், போடும் கையெழுத்துகளுக்கும், அதன் விளைவுகளுக்கும் ஒரு போதும் தான் ஜவாப்தாரி இல்லை என்ற தைரியம்தான் தொடர்ந்து இத்தவறுகள் நடக்க வாய்ப்பாகின்றன.  வழக்கமாக, அனுமதி பெற்ற அளவைவிட அதிக இடம் ஆக்கிரமித்து விட்டார்கள் அல்லது கூடுதல் தளங்கள் கட்டிவிட்டார்கள் என்று அரசு தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும். அதேபோலே,மழைநீர் புகுந்த வீடுகளின் உரிமையாளர்களில் ஒருவராவது இவ்வாறு ஏரி-குளமாக இருந்த இடத்தை விற்கவும், வீடுகட்டவும் அனுமதித்தது தவறு என்று, கையொப்பமிட்ட அதிகாரிகள் மற்றும் அரசுத் துறைகளின்மீது வழக்குத் தொடர வேண்டும்!!

Post Comment