Pages

Showing posts with label அழுகை. Show all posts
Showing posts with label அழுகை. Show all posts

ஆம்பளை அழலாமா!






சென்ற மாதம் விம்பிள்டன் போட்டியில், (வழக்கம்போல) ரோஜர் ஃபெடரர் வென்றார். அதுவல்ல செய்தி, அவர் அழுததுதான் செய்தி!! அவர் ஜெயிப்பது வழக்கமாகிப் போனதைவிட, ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் - ஜெயித்தாலும், தோற்றாலும்- அவர் அழுவது வழக்கமாகிவிட்டிருக்கிறது.

(அழத் தொடங்கிய) ஆரம்பத்தில், ஒரு ஆணாக இருந்துகொண்டு அழலாமா, அதுவும் ஒரு பொது நிகழ்ச்சியில், எல்லார் முன்பும் அழுவது இழுக்கல்லவா என்ற ரீதியில்தான் அவரது அழுகை பார்க்கப்பட்டது. இன்று அவர் தனது (தொடர்) அழுகையைக் குறித்து கூறும்போது, “மனிதனாகப் பிறந்த எல்லாருக்கும் மனசு உடைந்துபோவதுண்டு. அழுவதில் தவறொன்றுமில்லை. என் அழுகையை, என் ரசிகர்களின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பாகவே நான் உணர்கிறேன். அழுகை, என்னை ரசிகர்களோடு நெருக்கமாக்குகிறது.” என்று கூறுகிறார்.

அதாவது, அழுகின்ற ஒரு ஆண் அழுவது ஏன் என்று தன்னிலை  விளக்கம் கொடுக்க வேண்டிய நிலை இருக்கிறது. (பெண்கள்னா கதையே வேற, அழலைன்னாதான் விளக்கம் கொடுக்கணும்!!) உலகம் முழுவதுமே, ஆம்பளைன்னா வீரம், தீரம், உறுதி எல்லாம் நிறைந்தவர்கள். கட்டுப்பாடுடையவர்கள். (சுயகழிவிரக்க)  உணர்ச்சிகளை வெளிப்படுத்த மாட்டார்கள் அல்லது கூடாது என்ற ஒரு பொதுவான வரைமுறை உள்ளது.

ஒரு முறை கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், ஹர்பஜனிடம் அடிவாங்கிவிட்டு அழுததற்கு  ’சின்னப் புள்ள மாதிரி அழுவுறான் பாரு’  எனத் தொடங்கி எத்தனை விமர்சனங்கள்!!

இயக்குனர்-நடிகர் சேரன், தன் படங்களில் கதாநாயகன் அழுவதாகக் காட்டுவார்.  அதுவும் பின்பக்கமாக சன்னமாக முதுகு குலுங்குவது போலத்தான். முதல் படம் ஆட்டோகிராஃபில் அதைச் சகித்துக் கொண்ட ஆண்களால், அடுத்தடுத்த படங்களிலும் அதே சீன் (அவசியத்தினால்) வந்தபோது பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஏதோ அவமானமான செயலைக் காட்டுவதைப் போல விமரிசனங்களில் அலுத்துக் கொண்டார்கள்.

ஏன், வீட்டில் ஆண் குழந்தைகள் அழுதால்கூட, “ஆம்பளைப் புள்ள அழக்கூடாதுடா” என்றே கண்டிக்கப்படுகிறார்கள். அதைக் கேட்டுக் கேட்டு வளர்வதாலேயோ என்னவோ, பதின்ம வயது இளைஞர்கள்கூட சிலசமயம் கல்லைப் போல இறுகி விடுகிறார்கள்.  சார்லி சாப்ளின் சொன்னதுபோல, ஆண்கள், யாருக்கும் தெரியாமல் மழையில் அழுவதைத்தான் விரும்புகிறார்கள்.

சில வருடங்கள்முன், எனக்கு ஒரு சிகிச்சைக்காக மயக்க நிலையில் ஆபரேஷன் தியேட்டர் சொண்டு செல்லப்படும்போது, என் தந்தை குலுங்கிகுலுங்கி அழுததை உறவினர் ஒருவர் சிலாகித்துச் சொன்னார். அதே இடத்தில் என் தாயும் அழுதுகொண்டுதான் இருந்தார், ஆனால் அம்மாக்கள் அழுவதென்பது இயல்பான ஒன்றாகத்தான் பார்க்கப்படுகிறது.

ஆண்கள் பலர், உடலின் வலிகளைக் கூட, முகத்தில் அதன் பாதிப்பே தெரியாதபடிக்குக் கஷ்டப்பட்டு பொறுத்துக் கொள்வார்கள். ஆஸ்பத்திரிகளில் ஊசி போடப்படும்போது ஒன்றுமே நடவாததுபோல அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, குழந்தைப்பேறு ஆண்களுக்கானது என்றிருந்தால், பிரசவ வார்டுகளில் அசாத்திய அமைதி நிலவுமோ என்று தோன்றும்!!


ஒரு நண்பர், தன் மனைவி இறந்தபோதும் தான் அழவில்லையென்றும்,  அவரின் நண்பர் ‘அழுதுவிடு’ என்று தன்னைச் சொன்னபோதும் இறுக்கமாய் இருந்ததாகச் சொல்லியிருந்தார். ஒருவரின் மரணத்தின்போது உறவுகள் அழுவது, இறந்துபோனவர் உலக வாழ்வை இழந்துவிட்டதற்காக என்பதைவிட, அவரைப் பிரிந்தபின் தன் நிலை என்னவாகுமோ என்பதற்கானக் கவலையாகத்தான் அழுகையின்  பெரும்பகுதி இருக்கும். ஆக, தன்னில் பாதியான ஒருவர் இறந்துவிட்ட நிலையில் அழுகை வரவில்லையென்றால், அது ‘நீ இல்லாமற் போனதால் எனக்கு எந்த இழப்புமில்லை’ என்று சொல்லாமல் சொல்லுவது போலாகாதா என்று கேட்கத் தோன்றுகிறது.



இறப்பின் இழப்பினைக் கூட வாய்விட்டு அழாமல், கீழுதட்டைக் கடித்து, இமைகளில் லேசான ஈரத்தோடு தாங்கிக் கொள்ளும் இதே ஆண்கள், ஏதேனும் ஒரு பாடலையோ இசையையோ கேட்டு, அட ஒரு சூர்ய அஸ்தமனத்தைக்கூடப் பார்த்து ’ஓ, வாட் எ டிவைன் ஃபீலிங்’ என்று உணர்ச்சி வசப்பட்டு  கண்கள் பனித்தால், அது அவரைக்  ‘கலையுணர்ச்சிகள்’ மிகுந்தவரென்றும்; ஒரு சமூக அவலத்தைக் கண்டு கண்ணீர் விட்டால்,  ’ஸாஃப்ட் கார்னர்’ உடையவர் என்றும் பெருமிதத்துடன் அடையாளப்படுத்தும்.

பெண்களால் விடப்படும் கண்ணீர், ‘பெண்களின் ஆயுதம்’,  நீலிக்கண்ணீர், ‘முணுக்குன்னா அழுவுறதே வேலையாப் போச்சி’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படும் அதே சமூகத்தில், ஆண் எப்போதாவது அபூர்வமாய் ஒருமுறை சொந்தக் காரணங்களுக்காக அழுதுவிட்டால்கூட,  “ஆம்பளையே அழுதுட்டானே” (அ) “ஆம்பளயையே அழவச்சிட்டாளே” என்று  வேறுவிதமாய்க்  கையாளப்படும்!!

இப்படியான சமூகச் சூழலில் வளர்ந்ததாலேயே என்னவோ, முதன்முறை ஒரு பொது இடத்தில் நிறைய ஆண்கள் எந்தவித சங்கோஜமுமின்றி அழுவதைப் பார்த்தபோது எனக்கு வெகு  ஆச்சர்யமாக இருந்தது. மக்காவில், இறையில்லத்திற்கு முன், கையேந்தியவாறு கண்களில் நீர்வழிய ஆண்கள் நின்றிருப்பதைப் பார்க்கப் பார்க்க  அதிசயமாகத்தான் இருந்தது.

சின்ன வயசில் கேட்ட நாகூர் ஹனீஃபாவின் ’இறைவனிடம் கையேந்துங்கள்’ பாடலில்,  ”அன்பு நோக்கு தருகவென்று அழுதுகேளுங்கள்” என்ற வரி வரும். ஆனால், எனக்கான பாடலாகவே நினைத்து கேட்டு வந்ததாலும், ஆண்கள் அழுது பார்த்திராத்தாலும், என்னால் அந்தவரி ஆண்-பெண் எல்லாருக்கும் பொதுவானதாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. ஒருவர், தான் செய்த தவறுகளை உணர்ந்து, மனம்வருந்தி, கண்ணீர்விட்டு  மன்னிப்பு கேட்டால், தவறுகள் மன்னிக்கப்படும் என்று இஸ்லாம் சொல்கிறது.                                     

ஒவ்வொரு வருடமும், ரமலான் மாதத்தில் - பாவமன்னிப்பு அதிகம் தேடப்படும் இம்மாதத்தில் - சிறப்புக் கூட்டுத் தொழுகையின்போது, தொழுகையை வழிநடத்துபவர், உருக்கமாகக் கரைந்து அழுது பிரார்த்திக்கும்போது - நம்மையும் அந்த அழுகை தொற்றிக் கொள்ளும்போது... இதுதான் நிஜமான “டிவைன் ஃபீலிங்”!!

அறிவியல்  ரீதியாகவும், அழும்போது, மன அழுத்தத்திற்குக் காரணமான ஹார்மோன்கள் அழிவதாகக் கூறப்படுகிறது. அதனால்தான் அழுதுமுடிந்ததும், மனம் ரிலாக்ஸாகிறது. மனமுருகித் தானாக வரும் அழுகையின் கண்ணீர் எல்லா அழுக்கையும் கரைத்துவிடும் என்பது பொய்யில்லை. ஒருமுறை அழுதுதான் பாருங்களேன்!!

அழுகைக்கும் ஆண்-பெண் பேதமின்மை இருக்கட்டும்.

Post Comment