Pages

சங்கு சுட்டாலும்..


”அல்ஹம்துலில்லாஹ், என் பிள்ளைகள் எல்லாரின் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன். நம் வீட்டு விசேஷம் ஒவ்வொன்றிலும் என்னிடம் பிரச்னை செய்தவர்களை இனி பார்த்துக் கொள்கிறேன்!!” என் கடைசி தங்கையின் கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் இப்படிச் சொன்ன என் வாப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்தேன்.  என் வாப்பாவோடு பழகியிருந்தால் நீங்களும் அப்படித்தான் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்.

நான்கு மகள்கள், மூன்று தங்கைகள்,  வயதான பெற்றோர், மனைவி இவர்களோடு, முதுகுத்தண்டில் மேஜர் ஆபரேஷன்கள் காரணமாக மாதக்கணக்கில் படுக்கையில் இருந்துப் பிழைத்து, பரம்பரை சொத்து என்று எதுவுமில்லாத  ஆனால்  குடும்பப் பொறுப்பு முழுதும் தலையில் ஏற்றுள்ள ஒரு ஆண் என்ன நினைப்பார்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தங்கைகளையும், மகள்களையும் கட்டிக் கொடுத்துக் கடமையைக் கழிக்க வேண்டும் என்றுதானே?

பெண்கல்வி என்பது அர்த்தமில்லாத வார்த்தையாகிவிட்ட இந்நாளில், அரிதாக மிகச்சில இடங்களைத் தவிர, ஆண், பெண் வித்தியாசமில்லாமல் எல்லாருமே படிக்கிறார்கள் இன்று. ஆனால் 1980களில் கிராமங்களில் பெண்கள் படிப்பது என்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம்தான். அதிலும், தன் உடல்நிலையும் சரியில்லாமல், தன் சம்பாத்தியம் மட்டுமே கொண்டு எல்லாரையும்/ எல்லாவற்றையும் நடத்த வேண்டிய சூழலில், தன் இரண்டு தங்கைகளையும், நான்கு மகள்களையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்ததென்பது ஆச்சர்யமென்ன, அதிசயமேதான் அப்போ.

உறவினர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளைத்  தான் தாங்கிக் கொண்டு,  எங்களை அந்த வீச்சுக்கள் எதுவும் அண்டாதவாறு காத்தவர் என் தந்தை. அதே சமயம், “பெண்பிள்ளைகளை நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறேன் பாத்தீங்களா” என்று எந்த பெருமைவார்த்தைகளும் சொல்லியதில்லை ஒருபோதும். அதுவே ஊக்கமாகி,  நாங்கள் ஆறு பேரும் பட்டங்கள் பெற்றோம். எங்கள் ஊரின் மூன்றாவது பெண் பொறியியல் பட்டதாரி எங்கள் குடும்பத்திலிருந்து என்பதிலிருந்தே பெண்கல்வி அந்நாட்களில் எந்த அளவில் இருந்தது என்பது புரியும். ஏன்,  வியாபாரப் பிண்ணனி கொண்ட குடும்பத்தில் வந்ததால், படிப்பதற்கு என் வாப்பாவும் இதே அளவு போராட வேண்டியிருந்தது.  ஸ்காலர்ஷிப் புண்ணியத்தில், என் வாப்பாவும் ஊரின்  முதல் பத்து இஞ்சினியர்களில் ஒருவரானார்.

ஆண் குழந்தைகளும் உடைய என் தந்தையின் நண்பர்களெல்லாம், மகன்களைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்துவிட்டு, மகள்களைப் பள்ளிப் படிப்புகூட முடிக்காமல் திருமணம் செய்து கொடுத்து கடமையை நிறைவேற்றியதாய் நிம்மதிப் பெருமூச்சுவிட, தனியொரு ஆளாய் எல்லா பாரத்தையும் சுமந்து நின்றார் என் வாப்பா.


நான் 12ம் வகுப்பு படிக்கும்போது, தோழிகளோடு அடுத்தது என்ன படிப்பது என்று அரட்டை நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் அப்போதைய கனவான இஞ்சினியர், டாக்டர் படிப்பைச் சொல்லிக்கொண்டிருக்க, நல்லா படிக்கக்கூடிய ஒரு தோழி, ”எங்கம்மாப்பா, நீ சம்பாரிச்சு எங்களுக்காத் தரப்போறே; அதனால வெறும் பி.ஏ. இல்ல பி.எஸ்ஸி. படி போதும்னு சொல்லிட்டாங்க” என்றபோது எனக்கு அவளிடம் ஏற்பட்ட பரிதாபத்தைவிட, என் தந்தையிடம் ஏற்பட்ட ஆச்சர்யம்தான் அதிகம்.


அதுமட்டுமல்ல, ஆண்மக்கள் இல்லை என்பதால், பொம்பளப்புள்ளயள படிக்கவச்சு காசைக் கரியாக்கிட்டு, கடைசி காலத்துல அதுககிட்டத்தான் கையேந்தப் போறார் என்ற எதிர்பார்ப்போடு இருந்த பலரின் எண்ணத்திலும் மண்ணைத் தூவி, இறையருளால், இன்றும் தன்னிறைவோடு வாழுகின்றார். (இதற்கு என் தாயின் சிக்கனமும்கூட காரணம்). ஆண்மக்கள் பெற்றதற்காக பெருமையுற்றவர்கள் பலர் இன்று மகன்கள் அனுப்பும்  பணத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.

படித்துமுடித்து என் வாப்பாவோடு அமீரகத்தில் இருந்த போது,  நண்பரொருவர் என்னிடம் காஷ்மீர் பற்றி பேசும்போது, தவறான தகவல்கள் தந்து குற்றம் சாட்ட, என் வாப்பாவிடம் நானும் ஏன் இப்படி என்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். சில மாதங்கள் கழித்து, "Plebiscite" என்ற கவர்ஸ்டோரியுடன் வந்த இந்தியா டுடே பத்திரிகை அந்நண்பரின் விஷமத்தனத்தை விளக்கியது. அன்று என் வாப்பா விளக்கியிருந்தால்கூட ஒருசார்பாகப் பேசுவதாக நினைத்திருப்பேனோ என்னவோ.

நெருங்கிய உறவுகளில் சிலர் அவ்வப்போது ஏதாவது பிரச்னை கிளப்பி, அங்கேயிங்கே சென்று அவதூறு பேசிக்கொண்டு இருந்தாலும் அதைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டார். வாப்பாவிடம் நீங்க ஏன் எதிர்க்காம இருக்கீங்க என்று கேட்டாலும், இதையெல்லாம் கண்டும்காணாம விட்டுர்றதுதான் நல்லது; பெரிசா எடுத்தா நம்ம நிம்மதிதான் கெடும்; அதுதான் அவங்க எதிர்பார்ப்பு என்று சொல்லி, "Ignorance is the best policy" என்று கற்பித்தவர். சிலர்,  சரியாக எங்கள் நால்வரின் திருமணங்களின்போதெல்லாம் பிரச்னையை உண்டாக்கி, வரமாட்டேன் என்று முறைத்துக் கொண்டு நிற்கும்போதெல்லாம், எதுவுமே நடக்காததுபோல, சென்று அழைத்துவிட்டு வருவார். அவர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி வருவார்கள்.

அப்படிப்பட்ட என் வாப்பாவிடமிருந்து அவ்வார்த்தைகள் வந்தபோதுதான் எனக்கு ஆச்சர்யம் வந்தது. சரி, சாது மிரண்டால் கதையாக, என் வாப்பாவும் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். சில நாட்கள்முன், அவ்விதம் பிரச்னை செய்வதையே வழக்கமாகக் கொண்ட ஒருவரின் வீட்டு நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை தம்பதி சமேதராக முன்னின்று நடத்திக் கொடுத்துவிட்டு வந்திருக்காங்க!!  இதைத் தோழியிடம் சொல்லியபோது, “இன்னா செய்தாரை..?” என்றாள்.  நான், “மேன்மக்கள் மேன்மக்களே!!” என்றேன்.


Post Comment

புலம்பிக்கவாவது செய்றேன்

தேர்தல் ஜுரம் பத்திகிச்சு!! இருபெரும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைப் பார்த்து நம் கண்ணில் ரத்தம் வராத குறைதான்!! போட்டி போட்டுகிட்டு இலவசங்களை அறிவிச்சிருக்காங்க.  அதுசரி, அவங்க காசா என்ன கொள்ளை போகுது? இதை, “ஊரான் வீட்டு நெய்யே, எம்பொண்டாட்டி கையே”ன்னு சொல்லவா, இல்லை “கடைத் தேங்காய வழிப்பிள்ளையாருக்கு உடைக்கிறது”ன்னு சொல்லவா?

ஒரு அரசு தன் மக்களுக்கு இலவசமாத் தரவேண்டிய கல்வியையும், மருத்துவத்தையும் தவிர, மற்ற எல்லாத்தையும் இலவசமாத் தர முன்வருது. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய தேர்தல் கமிஷனோ, “இது விதிமுறைகளை மீறுவதாகாது”ன்னு ரூல்ஸ் பேசுறாங்க.

எது எதுக்கோ பொதுநல கேஸ் போடுற புண்ணியவான்கள் இதுக்காக ஒரு கேஸ் போடக்கூடாதா? (நீ போட்டா என்னன்னு கேட்டுடாதீங்க).

அநேகமா எல்லாப் பதிவர்களுமே இதைக் கண்டித்துத்தான் பதிவு எழுதிருக்காங்க. பதிவர்கள் ஒன்றுசேர்ந்தாவது எதாவது செய்ய முடியுமா?

போன தேர்தல்ல, தி.மு.க. இலவசங்களை அறிவிச்சப்போ, அ.தி.மு.க. அதை எதிர்த்து, “இலவசங்களைத் தந்து ஏழை மக்களின் தன்மானத்தைத் தகர்க்க முனைகிறது தி.மு.க.”ன்னு கோஷம் எழுப்பும்னு நம்ப்ப்ப்பி இருந்தா, அம்மாவும் இலவசங்களை அள்ளித் தெளிச்சாங்க!! இப்ப இலவசங்களால குளிப்பாட்டவே செய்றாங்க ரெண்டு பேரும்!! கேள்வி கேட்க ஆளில்லாமப் போச்சு.

இதுல அங்கங்க சில நாடுகள்ல ஜனநாயகம் வேணும்னு புரட்சி பண்றாங்களாம். அவங்ககிட்ட நம்ம நாட்டு பணநாயகம் பத்தி யாராவது எடுத்துச் சொல்லி இருக்கிறதைக் கெடுத்துக்க வேணாம்னு சொல்லுங்கப்பா!!

 

Post Comment

பூ - புஷ்பம் - மலர் - ஃப்ளவர்

அந்த தம்பதியர் ஆவலோடு காத்திருந்தார்கள், தங்களுக்கு தாத்தா, பாட்டி என்ற மகிழ்ச்சியான பதவி உயர்வு தரக்கூடிய தம் பேரன் பிறந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்க. முதல் குழந்தை ஆண் என்றால்தான் பெருமை, கௌரவம், அந்தஸ்து. இவையெல்லாம் தமக்கும் கிடைக்கப் போகும் ஆனந்தத்தில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.  முதலில் பெண் என்றால் ஊர்மக்களில் சிலரின் அவமான/எள்ளல் பார்வை தவிர்க்க முடியாது.

ஆனால், ஸ்கேன் வசதிகள் இல்லாத 70-களில் எப்படி பேரன்தான் என்று உறுதியாக இருந்தார்கள்? அந்தத் தம்பதியருக்கு அந்தக் கவலையெல்லாம் இல்லை. ஏனென்றால், பரம்பரை பரம்பரையா அந்தக் குடும்பத்தில் தலைப்பிள்ளை ஆண்தான். இப்ப மட்டும் மாறிடுமா என்ன? பெயர் கூட ரெடி. ஆமாம். பெயருக்கென்ன, இப்போப் போல நெட்டில் தேடி, யாரும் வைக்காத ஸ்டைலான புதுப்பேரா  தேடப்போறாங்க? பரம்பரை பரம்பரையா, முதல் ஆண்குழந்தைக்கு தாத்தாவின் தாத்தா பெயர்தான்.

ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பையெல்லாம் வேரோடு அழித்து, இத்துப்போன பழைய வழக்கங்களையெல்லாம் அறுத்தெரிய, பெண்ணின் பெருமை சொல்ல, ஆணாதிக்கத்தை ஒழிக்க, அந்தப் புதுமைப்பெண் பூலோகத்தில் அவதரித்து பிறப்பிலேயே புரட்சி செய்தாள்!!

அவர்களுக்கு வருத்தம்தான் என்றாலும், தங்களை தாத்தா-பாட்டியாக்கியதால் பேத்தியை ஒதுக்கவில்லை. ஆனால், அந்த அதிர்ச்சியில் அவளுக்குப் பெயர் வைக்கத்தான் மறந்துவிட்டார்கள். அவளை, செல்லமாக குட்டிம்மா, பாப்பா என்பதுபோல ஒரு பெயரில் அழைத்து வந்தார்கள். அழைக்க ஏதோ ஒரு பெயர் இருந்ததால் யாரும் முறைப்படி பெயர் வைக்காதது பற்றி கவலைப்படவில்லை. அப்போவெல்லாம் பர்த் சர்டிஃபிகேட்டிலும் பெயர் தேவையில்லையே. மூன்று வயதானதும் பள்ளியில் சேர்க்க அழைத்துப் போனார்கள். பள்ளியில் பேரென்னவென்று கேட்டதன் பிறகே அஃபீஷியல் பெயர் வைக்காதது ஞாபகம் வந்து தாத்தா முழிக்க, ஆசிரியர் மீண்டும் அதட்ட, வேறு பெயர் யோசிக்க அவகாசம் இல்லாமல் போக, தம் தாத்தாவின் பெயரிலேயே ஒரு “ஆ” (a) (அகில்-அகிலா என்பதுபோல்) சேர்த்து பெண் பெயராக்கிச் சொன்னார்கள்.

நல்லவேளை அவர்கள் அந்தப் பெயரை அவளுக்கு வைத்தார்கள், இல்லையெனில் அதன்பிறகும் அவர்களுக்கு அந்தப் பெயரைச் சூட்ட வாய்ப்பு கிடைக்காது போயிருக்கும்.  அத்தோடு, அப்பெயரில் இதுவரை வேறு எந்தப் பெண்ணையும் அறிந்ததில்லை. ஆக, எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று என்னிடம் இருக்கிறது!!

எல்லாம் நல்லாத்தான் போயிட்டிருந்துது, அமீரகம் வரும்வரை. இங்கே வந்ததும் முதல் பெயரான ‘முஹம்மது’வும், இரண்டாவது பேரான ஆ-சேர்த்த ஆண் பெயரும்  போகுமிடமெல்லாம் விசித்திரப் பார்வைகளையும், கேள்விகளையும் சந்திக்க வைத்தது. அதிலும் கடைசில உள்ள அந்த 'a'-ய எல்லாருமே கரெக்டா மிஸ் பண்ணி கூப்பிட்டுட்டு, நான் போய் நின்னா“உன்ன யாரு கூப்பிட்டா”னு பாப்பாங்க. சரி, நாமதான் புரட்சிப் பெண்ணாச்சே, அப்ப நமக்கு எப்பவுமே எல்லாம் ஏறுக்குமாறாத்தானே இருக்கும், அதான் இப்படின்னு பொறுத்துப் போயிட்டே இருக்கேன்!!

ஸ்ஸப்ப்பா.. இதான்ப்பா அவளுக்கு பெத்தவங்க பேர் வச்ச கதை!! இனி அவளே அவளுக்குப் பேர் வச்சுகிட்ட கதையப் பாப்போம்!! (இனி யாராவது தொடர் பதிவுக்குக் கூப்பிடுவீங்க?)

கல்யாணம் ஆனதும், கொஞ்ச நாள் கழிச்சு என் ரங்க்ஸ், என் பேரில எந்த மாற்றமுமில்லாததைக் கவனிச்சு, “ஏன் நீ என் பேர உன் பேர்கூடச் சேத்து எழுதலை?”ன்னு (பாவமாக்) கேட்டார். அப்ப நான் கொடுத்த லெக்சர்லயும், கேட்ட கேள்விகளிலும் அரண்டுபோய், மன்னிப்பு கடிதம் கொடுக்கற லெவலுக்கு வந்துட்டார். ஹா.. ஹான்னு வெற்றிக் களிப்போட சிரிச்சேன், நானே எனக்கு வச்சுக்கப்போற ஆப்பு காத்திருக்கிறது தெரியாம.

அப்புறம் இ-மெயில் புழக்கத்திற்கு வந்துது. அப்புறம் சாட் தளங்கள் வந்தன. அதிலெல்லாம் நான் போறதில்லை. (நல்ல பொண்ணு + முன் ஜாக்கிரதை) அதனால எந்தப் புனைபெயருக்கும் அவசியமில்லை. அப்பத்தான், என் தங்கச்சிக்கு கல்யாணப்பேச்சு ஆரம்பிச்சுது. மூத்தப் பொண்ணு என்ற பொறுப்பான பதவியால மேட்ரிமோனியல் தளங்களில் மாப்பிள்ளை தேடும் பொறுப்பை என்கிட்ட ஒப்படைச்சாங்க. அப்பத்தான் யோசிச்சேன் - அதுல என் பேரையும், ஊரையும் சொன்னா எங்க குடும்பத்த ஊர்ல ஈஸியா கண்டுபிடிச்சுடலாம். ஸோ, பேரைச் சொல்லாம, மிஸஸ். ஹுஸைன்னு ரிஜிஸ்டர் செஞ்சேன். இப்ப ரங்ஸ்க்கு அடிச்சுது சான்ஸ், என்னை நக்கல் பண்ண. அரசியல்ல இதெல்லாம் ஜகஜமப்பா!!

அப்புறம், அதே பெயரில் “அறுசுவை” என்ற தளத்தில் ஃபோரம்களில் உரையாடும்போது, மிஸஸ்.ஹுஸைன்னு டைப் பண்ண சிரமமா இருக்குன்னு சிலர் சொன்னதால, ஹுஸைனம்மாவா மாறினேன். அப்படியே வலைப்பூவிலும்!! பிளாக் மூலம் பழக்கமான சிலரிடம் என் பெயரை ஏற்கனவே சொல்லியிருந்தாலும், ஃபோனில் பேசும்போது என் பெயரைச் சொன்னால், “அது எந்த லூஸுப்பா?”ன்னு பேய்முழி முழிக்கிறது மறுமுனையில் உள்ள  எனக்கே தெரியுமளவு, ‘ஹுஸைனம்மா’வாத்தான் எல்லாருக்கும் பரிச்சயமாகியிருக்கிறேன்!!

இன்னொரு பெயரில் இருப்பது, எனது வலைப்பூ சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை, மெயில்கள், பின்னூட்ட ஃபாலோ-அப்கள் போன்றவற்றை, மற்ற இணைய நடவடிக்கைகள், மெயில்களிலிருந்து பிரித்து பரிபாலனம் செய்ய எளிதாகவும் வசதியாகவும் இருக்கிறது.

எந்தப் பெயரானாலும், நான் நானாகத்தான் இருக்கிறேன். பெயருக்கொன்றாக என் கருத்துகள் மாறுவதில்லை. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சொலவடை உண்டு, “பூவுன்னும் சொல்லலாம்; புஷ்பம்னும் சொல்லலாம்; மலருன்னும் சொல்லலாம்; ஃப்ளவருன்னும் சொல்லலாம்". அதுபோல. 

Post Comment

வன்முறையும் சமஉரிமையும்

இருதினங்களாக எங்கு பார்த்தாலும் மகளிர்தின சிறப்புப் பதிவுகள். மகளிரின் பெருமை பேசும் கட்டுரைகள். பத்திரிகைகளிலும் மகளிர்தின சிறப்பிதழ்கள், பேட்டிகள். டிவி சேனல்கள் இதையொட்டி எந்தெந்த நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ தெரியவில்லை.

மகளிர் தினத்தையொட்டி சிறப்பு தள்ளுபடிகள், புதிய மாடல் நகைகள் - நகைக்கடைகளில் பல தினங்கள் முன்னதாகவே விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த விளம்பரங்களும், பேட்டிகளும் இடம்பெறும் அதே பக்கங்களில், கடந்த ஒருவாரமாக இன்னொரு செய்தியும் பரபரப்பாக எழுதப்பட்டு வருகிறது. அருணா ஷான்பாக்!! எல்லாருக்குமே தெரிந்தவர் இப்போது. அறிமுகம் தேவையில்லை.  நான் பிறந்து, வளர்ந்து, படித்து, கல்யாணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவும் தொடங்கிவிட்ட இத்தனை வருடகாலங்களாகப் படுக்கையிலேயே சுயநினைவற்று கிடக்கிறார்.  ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு எனக்கென்று பல நினைவுகள் இருக்க, அவருக்கோ எதுவுமே நினைவில்லாமல்.தெரிந்ததெல்லாம் அலறல் மட்டுமே - அவர் சுயநினைவோடு இருந்தபொழுது கடைசியாக செய்த செயல் அபயம் தேடி அலறியது என்பதால் அதுவே  இன்றும் தொடர்கிறதோ என்னவோ? இவரைப் பார்க்கும்போது, நல்லவேளை சௌம்யா இறந்துவிட்டார் என்று தோன்றுகிறது. சௌம்யா - சென்ற மாதத்தில் கேரளாவில், ஒரு திருடனால், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபோல, இன்னும் எத்தனையோ பேர் - கோவை சிறுமிகள் அனுசுயா, முஸ்கன், தர்மபுரி கனகலட்சுமி - இவர்களெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ கணக்கிலடங்கா உதாரணங்கள் உண்டு.  தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் கணக்கில்.

பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கக் கடைபிடிக்கப்பட்டு வரும் மகளிர்தினம் எனக்கு வெறுமையைத்தான் தருகிறது இவர்களைப் பார்க்கும்பொழுதில்.  எனக்குள் அச்சத்தையேற்படுத்திவிடுமோ என்றும் அச்சமாகவும் இருக்கிறது. பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள், சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி.  முன்னேற்றப் புள்ளிவிவரங்களைப் போலவே, பெண்களின் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் இருக்கும்தானே? எனில் எதை கணக்கிலெடுப்பது?

எவ்வகை ஆண்களும், பெண்களின் மீதான தன் கோபத்தை, வஞ்சத்தை, வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இந்தப் பாலியல் வன்முறை. ஏன், ஒரு ஆணைப் பழிதீர்க்கவும் அவர்சார்ந்த குடும்பத்தின் பெண்ணையே வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர் அல்லது பழி போடுகின்றனர்.

தனிப்பட்ட மனிதர்களின் அல்லாமல், அமைப்புகள் சார்ந்த வன்முறைகளும் பெண்களின்மீதே கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குஜராத் - அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண், காஷ்மீர் - ஆசியா, நிலோஃபர் இன்னும் எண்ணிலடங்கா பெண்கள், வடமாநிலங்களில் கௌரவக்கொலை செய்யப்பட்ட பெண்கள் - பத்திரிகையாளரான நிரூபமா பதக் போல. மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா எதிர்த்துப் போராடுவதும் எதை? பெண்ணைத் தெய்வமாகவும், ஆறுகளாகவும், சக்தியின் வடிவமாகவும், ஏன் தேசத்தையே தாயாகவும் கொண்டாடும் நாட்டில்தான் இவையும் நடக்கின்றன.

மற்ற நாடுகளும் விதிவிலக்கல்ல என்று சொல்லும் உதாரணங்கள், இலங்கை - இசைப்பிரியா, ஆஃப்கன் - மூக்கறுக்கப்பட்ட ஆயிஷா, முன்னேறியதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தையாலேயே வன்புணரப்பட்ட மகள்கள்...

எங்கு நோக்கினும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள். அல்லது அடக்குமுறைகள். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லையென பல  நாட்டினரும், இனத்தவரும் பாகுபாடில்லாமல் போட்டியிடுகின்றனர்.


பெண்ணையும், அதன்மூலம் சமூகத்தையும் பாதுகாக்கவென ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அவளை ஆதிக்கம் செலுத்தத் தமக்குத் தரப்பட்ட அதிகாரமெனத் தவறாக அர்த்தப்படுத்தி, அடக்கி வைக்கும் ஆணினம் விழிப்புணர்வு அடையும் வரை பெண்களுக்கு விடிவில்லை!!

எனக்கு நீங்கள் சம உரிமை தரவேண்டாம், 33 சதவிதம் வேண்டாம்,  படிப்பு, வேலைகளில் முன்னுரிமை வேண்டாம். ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம். உங்கள் படங்களில், பத்திரிகைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், பாடல்களில், விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள். அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் காட்சிப் படுத்தாதீர்கள். இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள்  எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.
 
 

Post Comment

நான் சமையல் குறிப்பு எழுதினால்...

(தலைப்பைக் கண்டு டெரராகிவிட வேண்டாம். நான் பதிவுலகத்துக்கு வரும்போதே செய்த சத்தியங்களில் ஒன்று, சமையல் குறிப்பு எழுதமாட்டேங்கிறதும்!!)

என்னவரின் நெருங்கிய நண்பர் ஒருவர்.  மனைவி, ஒரு வயசுக் குழந்தையோடு அபுதாபியில் எங்கள் வீட்டருகில் வசித்து வந்தார். வார விடுமுறை நாளான ஒரு வெள்ளிக்கிழமை மதிய ஜும் ஆ தொழுததும் வீட்டுக்குப் போகாமல் நேரே எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒருமணிநேரம்போல பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். சாப்பிடச் சொல்லியும் சாப்பிடவில்லை. (ஹலோ, என் சமையலுக்கு  பயந்தெல்லாம் இல்லை). இது அன்றுமட்டுமில்லாமல், வாராவாரம் வெள்ளிதோறும் அப்படியே தொடர்ந்தது.

எங்களுக்கோ ஒரே புதிராக இருந்தது. நேரே வீட்டுக்கும் போகாமல், எவ்வளவு வற்புறுத்தினாலும் இங்கேயும் சாப்பிடாமல், அதுவும் எல்லா வெள்ளியும் இப்படி சும்மா வந்துட்டுப்  போறாரேன்னு. என்ன காரணம்னு கேட்டாலும் சும்மா பேசிட்டுப் போலாம்னுதாங்க வர்றேன்னு சொன்னார். இப்படியே சிலபல வாரங்கள் போச்சு. நான் அவரிடம் ஒருநாள் நீங்க நேரத்தோட வீட்டுக்குப் போனா உங்களைச் சமைக்க விட்டுடுவாங்கன்னுதானே இங்க வர்றீங்கன்னு கிண்டல் பண்ணேன். அவ்வளவுதான் பொங்கி எழுந்துட்டார்!!

“அட, சமைக்கச் சொன்னாகூடப் பரவால்லைங்க. நல்ல சாப்பாடு சாப்பிடலாமேன்னு செஞ்சுடுவேன். நான் வீட்டுக்குப் போற நேரம், சமையலை முடிச்சிட்டு, கரெக்டா பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கிற டைம். நான் போனவுடனே, பையன் சாப்பிடணும்; அவனுக்கு வெளாட்டு காமிங்கன்னு என்னை சர்க்கஸ் பஃபூன் ரேஞ்சுக்கு ஆக்கிடறாங்க.  ஆடுறா ராமான்னு குச்சி எடுக்காத குறைதான்”னு புலம்பித் தள்ளிட்டார் போங்க!!

இந்தக் கதை எதுக்குன்னா: “ரொம்ப நாளா  உன் பிளாக்ல ஆப்பம் பதிவே இருக்குது. வேற எழுதலையா?”ன்னு கேட்டுகிட்டிருந்தார் ரங்க்ஸ். ரெண்டுமூணு தரம் கேட்டதும் “அதுவா, எழுதுற மாதிரி வீட்டுல நீங்க எந்த ‘பஞ்ச் டயலாக்’கும் சொல்லலியே, அதான்”னு சும்மா அடிச்சுவிட்டேன். உடனே மேலே சொன்ன மாதிரியே புலம்ப ஆரம்பிச்சுட்டார்.  உடனே “அட, என்னங்க நீங்க, நான் பிளாக் எழுதுறதுக்கு ஆதாரசுருதியே நீங்கதான்னு மறைமுகமாச் சொன்னா, புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே?”னு ஐஸ் வச்சேன். (வேற வழி?)

நம்பிட்டார். (அவருக்கும் வே.வ?)  “சரி, சரி, என்னவானாலும் சமையல் குறிப்பு மட்டும் எழுதிடாதே”ன்னதும், பெரியவன் “ஏன் வாப்பா?”ன்னான். “உங்கம்மா சமையல் குறிப்பு எழுதினா எப்படிருக்கும்னு சொல்லவா?”

”முதலில்  தேவையான பொருட்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு, வீட்டில் இல்லாதவற்றை ரங்கமணியை அனுப்பி உடனே வாங்கிவரப் பணிக்கவும். பின்னர், அதில் உள்ள வெங்காயம், காய்கறிகளை சுத்தம் செய்து, வெட்டும் பொறுப்பை ரங்கமணியிடம் கொடு்க்கவும். மல்லி, புதினா, கருவேப்பிலையை பிள்ளைகளிடம் கொடுத்துச் சுத்தம் செய்யச் சொல்லவும். மட்டன், சிக்கன் போன்றவை இருந்தால் அதைக் கொழுப்பு நீக்கிச் சுத்தம்செய்கிறேன் பேர்வழி என்று விலைவாசியை நினைக்காமல் ஒரு கிலோ மட்டனை அரைகிலோவாக்கி, ரங்கமணியின் பி.பி.யை எகிற வைக்கவும்.

பின்னர், அடுப்பில் எல்லாவற்றையும் ஒரு குத்துமதிப்பாகக் போட்டு வைத்துவிட்டு, உப்பு, காரம், புளியை ரங்கமணியிடம் சரிபார்க்கச் சொல்லவும். இதுமிக முக்கியம்; அப்போத்தான் "end product" எப்படியிருந்தாலும் ரங்கமணியின்மீது “நீங்கதானே காரம் சரியாருக்கான்னு பாத்தீங்க; அப்பவே சொல்லிருக்கலாம்ல?”னு பழிபோட முடியும்.

பிறகு, அது வேகும்நேரத்தில் அஞ்சாறு பிளாக் பார்த்து, பின்னூட்டங்கள் இடவும். இடையிடையே ரங்கமணியிடம் அடுப்பிலுள்ளதைக் கிண்டிவிடச் சொல்ல மறக்கவேண்டாம். (இதுவும் ப.போ. உதவும்).

எல்லாம் முடிந்த பிறகு, சமையல் மேடை, அடுப்பு மற்றும் பாத்திரங்களை ரங்கமணி மற்றும் பிள்ளைகளின் உதவியோடு கழுவவும் (அதாவது மேற்பார்வை செய்யவும்).”

கேட்டுக்கொண்டிருந்தவன், “எல்லாம் சரி. ஆனா முக்கியமான ஒண்ணை மறந்துட்டீங்களே?”ன்னான். என்னவாம்? “என்ன ஐட்டம் செய்யறதுன்னே சொல்லலியே?”

” அதானா? முதலில் லேப்டாப்பைத் திறந்து,  நீங்கள் செய்ய விரும்பும் உணவு பதார்த்தத்தின் பெயரை கூகிளில் டைப் செய்யவும். வரும் பக்கங்களில் கலர்ப் படங்களோடு அழகாக இருக்கும் ஒன்றைத் தேர்ந்துகொள்ளவும். அவ்வளவுதான்!”

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த நான் கொதிச்சு, பொங்கியெழுந்து “என் சமையலையா கிண்டல் பண்றீங்க? இனி நான் சமைக்கவே மாட்டேன்”னு வேலைநிறுத்தம் செஞ்சுருப்பேன்னுதானே நினைக்கிறீங்க? நோ, நோ. நான் சொன்னது என்னன்னா, “ இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான்.   வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!”


 

Post Comment