Pages

”வட இந்தியாவைவிட தமிழ்நாடு பாதுகாப்பானது...!!!”ஃபாத்திமாவின் தாயின் இந்தக் கூற்று எத்தனை வலி நிறைந்தது என்று எனக்குத் தெரியும். ஏனெனில் நானும் என் மகனை இதைச் சொல்லித்தான் வட நாட்டில் படிக்க அனுமதி மறுத்தேன்!!

ஐ டி.....  இந்தியப் பெற்றோர்களின் பெருங்கனவு!!  என் பெரியவனையும் இந்தக் கனவோடுதான் வளர்த்தேன். ஐஐடியில் படிப்பு, அரசு வேலை,  இந்தியாவுக்கு சேவை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தேன். அவனும் அதிலேயே மனம் கொண்டான்.

ஆனால், சரியாக அவன் கல்லூரி சேரும் சமயத்தில் இந்தியாவில்  பிஜேபி அரசு ஆட்சிக்கு வந்தது. வருமுன்பே வெறுப்பை வேரடி வரைப் பரப்பியிருந்தார்கள் என்பதால், மிகுந்த தடுமாற்றம் அவனை இந்தியாவில் சேர்ப்பதா வேண்டாமா என்று.  இப்போது ஃபாத்திமாவின் தாயாருக்கு இருக்கும் அதே பயம்  எனக்கும் - அன்றும் இன்றும்!!  

அவனுக்கு ஐஐடி கிடைக்கவில்லை என்பது அப்போது ஏமாற்றமாக இருந்தாலும், பின்னர் நடந்தவற்றால், நல்லவேளை கிடைக்கலை என்றே தோன்றியது.  முதுகலை படிக்க ஐஐடி போகலாம் என்று நினைப்பவனை நாங்களே இப்போது வேண்டாமென்கிறோம்!!

 JEE தேர்வில், மேற்கு வங்காளத்தில் உள்ள பிரபல கல்லூரியில் அவன் விரும்பிய துறையில் இடம் கிடைத்தது. கட்டணமும் மிகக் குறைவு. ஆனால், மமதாவின் ஆட்சிக்கெதிராக சங் பரிவாரங்கள் அப்போது அதிரடிகள் செய்யத் தொடங்கியிருந்தனர் என்பதால் அனுமதிக்கவில்லை. 

படித்தால் தமிழ் நாட்டில், அதிக பட்சம் தென்னிந்தியாவில். அதுதாண்டி போக வேண்டாம் என்று மறுத்ததால், நிறைய வாதாடினான். உறுதியாக மறுத்து விட்டோம்.  நல்லவேளை தமிழ்நாட்டிலேயே என்.ஐ.டி.யில் இடம் கிடைத்தது. எனக்கு ஓரளவு நிம்மதி.   

இன்றும் அவனுக்கு அந்த வருத்தம் உண்டு. அவ்வப்போது சொல்லிக் காட்டுவான். உன் படிப்பைவிட நீ உயிரோடு இருப்பது எனக்கு முக்கியம் என்பேன். எங்கள் முடிவு சரிதான் என்பது போல, ரோஹித் வெமுலா, நஜீப், கன்ஹையா குமார், உமர் காலித்  என்று பலப்பல சம்பவங்கள் தொடர்ந்த வருடங்களில்....  

என் மகன் எந்த  இயக்கத்திலும் புரட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடுபவன் அல்ல.  ஆனால் தொழுவான், தாடி வைத்திருக்கிறான்... இது போதாதா உறுத்தலுக்கு... 

மட்டுமல்ல, மற்ற பெரும்பான்மை பிள்ளைகள் போல அல்லாமல், முகநூல் போராளியின் மகன் என்ற ஆபத்து வேறு அவனுக்கு!! 😅

அவன் படித்த நான்கு வருடங்களும் டென்ஷன்தான்...  ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினம், பாபர் மசூதி தினம், பிள்ளையார் சதுர்த்தி... என ஒவ்வொரு விடுமுறையின்போதும்... தமிழ்நாடு பாதுகாப்பானதுதான் என்ற சூழலும் மெல்ல மாறி வந்த சமயம் அது...   

இப்போது படித்து முடித்து விட்டு, வட இந்தியாவில் வேலை சார்ந்த பயிற்சிக்காக இருக்கிறான்!!   அவனுக்கும்  அவன் வேலைசார் வளர்ச்சி முக்கியமல்லவா? இந்தியாவில்தான் படிப்பு, வேலை என்று சொல்லிச் சொல்லியே வளர்த்தவனைத் திடீரென்று வெளிநாடு போ என்றால்?

சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தி அன்றும், பாபர் மசூதி தீர்ப்பு அன்றும்  அவனை ரூமை  விட்டு வெளியே வந்து விடாதடா என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டேன். இதுதான் இங்கு எதார்த்த நிலை.  அதனால்தான் எனக்கு ஃபாத்திமாவின் தாயின் வேதனை புரிகிறது!!

ற்கனவே இங்கு கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஒரு “சர்வ அதிகாரம்” பொருந்திய ”சாம்ராஜ்ய சக்கரவர்த்திகள்” போன்ற மனநிலைகளில்தான் இருக்கிறார்கள். அடித்தட்டுகளில் இருந்து வரும் மாணவர்களை ஏளனக் கண்ணோட்டத்துடன்தான் பார்க்கிறார்களே தவிர, அவர்களை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி, கை கொடுத்துத் தூக்கிவிடும் உயர்ந்த உள்ளம் அவர்களில் பெரும்பாலோனோர்க்கு இல்லை.  இது குறித்து ஏற்கனவே இரு பதிவுகள் எழுதியுள்ளேன்:

https://hussainamma.blogspot.com/2016/01/blog-post.html
https://hussainamma.blogspot.com/2012/05/blog-post_23.html

அதிலும், சங் பரிவார வளர்ச்சிக்குப் பின்னர், குறிப்பாக, தமிழகத்திலும் அது பள்ளி கல்லூரி அளவில் ஊடுருவிய பின்னர், இந்த மனோபாவம் இன்னமும் விரிந்து கொண்டுதான் போகும். அதன் விளைவுகள்தான் சமீபத்திய தற்கொலைகள்.

கல்லூரி படிப்பு என்பது முன்பு  போல ஜாலியானது அல்ல... கல்லூரி வாழ்க்கையை மாணவர்கள் அனுபவித்தது என்பதெல்லாம் சினிமாவில்தான்... இப்போது மட்டுமல்ல எப்போதுமே அது அதிக ஸ்ட்ரெஸ் கொடுக்கும் வாழ்க்கை.  

வெளிநாடுகளில் கஷ்டமான படிப்பை மட்டுமே சமாளிக்க வேண்டும்.  இந்தியாவிலோ படிப்போடு இது போன்ற அரசியல்களையும் சமாளிக்க வேண்டியிருப்பது நம் மாணவர்களின் துரதிர்ஷ்டம். மன உறுதி, தைரியம் இல்லாத மாணவர்கள் இதை எதிர்கொள்வதில் சிரமப்பட்டு வாழ்வில் தோல்வி அடைய வாய்ப்புண்டு. மன நலப் பிறழ்விற்கும் வாய்ப்புண்டு.

ல்லாம் முடித்து வெளியே வந்தாலும், இயற்கை விவசாயம் செய்பவர்கள்தான் உண்மையான தேசபக்தி உள்ளவன் என்று சொல்லி ஃபீல்டிலிருந்து துரத்தியடிப்பார்கள்!! 

ஏன், இந்தத் தற்கொலைகளைப் பார்க்கும்போது, நாமே நம் பிள்ளைகளை ”விவசாயமோ, பெட்டிக்கடையோ வச்சுப் பிழைச்சா போதும்பா!! நீ படிக்கலாம் வேணாம்பா...” என்று சொல்லிவிடக்கூடும்... அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்....

Post Comment

0 comments: