Pages

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

ஒரே ஒரு பொய் மட்டும்...




போன மாசம், லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங். இந்த மாசம் ஆஸ்கர் பிஸ்டோரியஸ்!

லான்ஸ் ஊக்க மருந்து பயன்படுத்தித்தான் பிடிபட்டார். ஆஸ்கர் அதையும் தாண்டி, கொலையே செய்திட்டார்னு குற்றச்சாட்டு. நாலஞ்சு மாசம் முன்னே நடந்த ஒலிம்பிக்ஸில் ஸ்டார் அட்ராக்‌ஷனாக இருந்த ஆஸ்கர், இப்ப கொலைகாரரா நிற்கிறார். 





ஆஸ்கர் பிஸ்டோரியஸ், பிறந்தவுடனே இரண்டு கால்களையும் இழந்தவர். பிற்பாடு செயற்கைக் கால்கள் பொருத்தப்பட்டன. இரண்டும் செயற்கைக் கால்களே என்றாலும், உடல் ஊனமுற்றவர்களுக்கான பாரா ஒலிம்பிக்ஸில் பல வெற்றிகளைக் குவித்திருந்தார். எனினும், பாரா ஒலிம்பிக்ஸோடு  தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல், முழு உடல் திறன் பெற்றவர்களுக்கான வழமையான ஒலிம்பிக்ஸில் பங்கு பெறும் உரிமையை, 2008 முதல் போராடி, சென்ற வருடம் பெற்றார். கால்களுக்குப் பதிலாக கார்பன் இழைகளால் செய்யப்பட்ட தகடுகளைக் கொண்டவர் என்பதால், “ப்ளேட் ரன்னர்” (Blade runner) என்றே அழைக்கப்பட்டார். 

சென்ற ஒலிம்பிக்ஸில் வெற்றி பெறாவிட்டாலும், மக்களுக்கு ஒரு நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்ந்தவர், இப்போது தனது காதலியைக் கொன்றதாகக் கொலைப் பழியோடு நிற்கிறார்!  “வேண்டுமென்றே கொல்லவில்லை; இரவில் திருடன் என்று நினைத்துத் தவறுதலாகச் சுட்டுவிட்டேன்” என்று மன்றாடினாலும், சாட்சியங்கள் மனக்கசப்பினால் நிகழ்த்தப்பட்டது என்றே நம்ப வைக்கின்றன.

லான்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்  “Tour de France" என்கிற சைக்கிள் மராத்தான் போட்டியில், கலந்துகொண்ட ஏழு முறையும் வென்றவர்.  இதுவே ஒரு அரிய சாதனை. அதிலும், கேன்ஸரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் என்பதால் கூடுதல் புகழ் பெற்றார். பலராலும் ஒரு முன்மாதிரியாகப் பார்க்கப்பட்டார்.

   

ஆனால்,  ஊக்க மருந்து பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மிகக் கடுமையாக அறிக்கைகள் விட்டு மறுத்துக் கொண்டிருந்தார்.  அமெரிக்க போதை மருந்து தடுப்புத் துறையும் (USADA) விடாமல் ஆதாரங்களோடு மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டியபோது, ஒரு கட்டத்தில், “இனி நான் போராட விரும்பவில்லை. இத்துடன் விலகிக் கொள்கிறேன்” என்றெல்லாம் கருத்து தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு அவருக்குப் பரிதாபங்களையும் பெற்றுத் தந்தது.  லான்ஸ் குற்றமற்றவராகவே இருப்பார்;  கேன்ஸரோடு போராடி உடல்நலம் பெற்று, பின் கடும்பயிற்சியின் மூலம் தொடர்வெற்றிகளைக் குவித்த அவரைப் பாராட்டுவதை விட்டுவிட்டு, இந்த அரசு இயந்திரங்கள் ரொம்பத்தான் படுத்துகின்றன என்றுதான் மக்களை எண்ண வைத்தன.

ஆனால், சில வாரங்கள் கழித்து ”நான் ஊக்க மருந்து பயன்படுத்தத்தான் செய்தேன்” என்று ஒத்துக் கொண்டபோது, உலகமே அதிர்ந்தது.   அவர் போதை தடுப்புத் துறையை மட்டும் ஏமாற்றவில்லை; இதன் மூலம் அவரை முன்மாதிரியாகக் கருதிப் பூஜித்து வந்த ரசிகர்களையும், அவரை நம்பி முதலீடு செய்த நிறுவனங்களையும் ஒருசேர நம்பிக்கை மோசம் செய்துவிட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டார்.

ந்நிகழ்வுகளைப் பார்த்து ஒரு சாமான்ய மனிதனுக்கு என்ன எண்ணங்கள் வரும்? ஜெயிப்பதற்காக எதுவும் செய்யலாம் என்றா? ஜெயித்துவிட்டால் எதையும் செய்யலாம் என்றா?

இனி வெற்றியாளர்களை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாமா?

ஆஸ்கரின் செயலாவது (நியாயப்படுத்த முடியாதென்றாலும்), கோபத்தினால் நொடியில் விளைந்தது. ஆனால், லான்ஸின் செயல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட துரோகம் அல்லவா? “ஊக்க மருந்து இல்லையென்றால் ஏழு வருடம் என்னால் வெற்றி பெற்றிருக்க முடியாது” என்று பகிரங்கமாக ஒப்புக் கொள்கிறார் இப்போது.  எனில், இத்தனை வருடங்களாக அத்தனை பேரையும் அல்லவா ஏமாற்றியிருக்கிறார்.

இனி, இதுபோன்ற வெற்றியாளர்களின்மீது எம்மாதிரியானக் கண்ணோட்டம் இருக்கும்? ஏற்கனவே இந்தியாவில் அரசியல் குறுக்கீடுகளால், விருதுகள், பரிசுகள் பெறுபவர்கள், இந்திய அணிகளில் இடம்பெறுபவர்கள் மீது ஒரு நம்பிக்கையற்ற தன்மை நிலவுகிறது. வெளிநாடுகளில் அவ்வாறான அரசியல் குறுக்கீடுகள் ஏறக்குறைய அறவே இல்லை என்பதால், விளையாட்டுகளில் வெற்றி பெறுபவர்கள்மீது மிகுந்த மதிப்பு இருந்து வந்தது. ஆனால், லான்ஸின் இந்தச் செயல் அதற்கும் முடிவு கட்டிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். 90களில் பென் ஜான்ஸன் நிகழ்வுக்குப் பிறகு, அதே தாக்கம் தந்திருப்பது லான்ஸின் செயலே.

இனி “ரோல் மாடல்கள்” என்று நிகழ்கால மனிதர்கள் யாரையும் குறிப்பிட்டு, குழந்தைகளுக்கு அடையாளம் காட்டுவதற்குப் பெரிய தயக்கம் வரும்.

ப்போதேனும் ஒரு பொய் சொல்வதென்பது வேறு;  திட்டமிட்டு ஒரே பொய்யை, ஏழு வருடங்களுக்கும் மேலாகத் தொடர்ந்து சொல்லி ஏமாற்றி வருவதென்பது வேறு என்று சிலர் சொல்லலாம்.  ஆனால், இந்தத் தொடர் பொய்யுரைத்தலுக்கு அந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் தொடக்கப் புள்ளி என்பதை மறந்துவிடுகிறோம்.

மனவள அறிஞர்கள் இது குறித்துச் சொல்லும்போது, “நாம் எல்லாருமே பொய் சொல்லத்தான் செய்கிறோம்.  எல்லாமே சின்னச் சின்னப் பொய்கள் என்பதால், அதில் தவறில்லையென்றே நம்புகிறோம்” என்கின்றனர். ஆஃபிஸிலிருந்து வீடு வரத் தாமதமானால், பரிட்சையில் மதிப்பெண் குறைந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவில்லையென்றால், கடனைத் திருப்ப முடியவில்லையென்றால், தொலைபேசி அழைப்பினை எடுக்கவில்லையென்றால்... இப்படி எத்தனையோ சந்தர்ப்பங்கள் பொய் சொல்ல.. அந்தப் பொய்யுரைத்தலை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்பதுதான் இதில் விந்தை.

“பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது” என்ற பயமுறுத்தல் ஒரு புறம்; “பொய்மையும் வாய்மையிடத்து, புரைதீர்ந்த நன்மை பயக்குமெனில்” என்கிற அறிவுரை ஒருபுறம் என்று குழம்பிப் போகும் மக்கள் “White lies" - கள்ளமில்லாப் பொய்கள் என்று ஒரு வகையைப் பகுத்துக் கொண்டார்கள். இந்த வகைப் பொய்கள் ஆபத்தைத் தராதவை என்பதால், இது சரியே என்பது அவர்களின் வாதம்.

ஒரு மேலைநாட்டு ஆசிரியர், “பைபிளின் பத்து கட்டளைகளில் “பொய் சொல்லாதே” என்று சொல்லப்படவில்லை. ஆகவே பொய் சொல்லுவதில் தவறில்லை என்று நினைப்பவர்களும் உண்டு” என்கிறார்!!

அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள் என்று எல்லாத் தரப்பினரும் பொய் சொல்வது வெளிப்படையாகத் தெரிந்தாலும், அதை எதிர்க்கும் திராணி இருப்பவர்களும்கூட நம் வேலை சரியாக நடந்தால் போதும் என்று தன்னலத்தோடு இருந்துவிடுகிறோம். அல்லது, ஆடையணியாத அரசனிடம் உண்மையைச் சொன்னால் நம் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்று இருந்த மக்களைப் போல, பொய்யைப் புகழ்ந்து கொள்கிறோம். இதனால்தான் இன்றும் இலைகள் இறக்கைகள் ஆகின்றன.  ஏழே நாளில் டல் திவ்யா, தூள் திவ்யா ஆகிறாள்.

பொய் சொல்வது வெகு சாதாரணமாகிவிட்ட இக்காலத்தில், ஒருவரின் பெரிய பொய்கள் வெளிப்படும் சூழ்நிலை உருவானால், உடனே சம்பந்தப்பட்டவரே “ஆமாம், அறியாமல் பொய் சொல்லிவிட்டேன். என்னை மன்னியுங்கள்” என்று சொல்லிவிட்டால் உடனே “அதான் ஒத்துக்கிட்டு, மன்னிப்பு கேட்டுட்டாருல்ல? விடுங்கப்பா” என்று பரிதாப அலையை அள்ளிக் கொடுத்து மேலும் புனிதராக்கிவிடுகின்றோம்.

மொடாக்குடி தொடங்குவது ஒரு சிறு ஸிப்பில்; செயின் ஸ்மோக்கிங்கின் ஆரம்பம் ஒரே ஒரு இழுப்பு. போலவே, எல்லாப் பொய்களுக்கும் தொடக்கம் ஆபத்தில்லாததாகக் கருதப்படும் ”ஒரு சிறு பொய்”தான்.  அது நாம் விரும்பும் பலனைத் தரும்பட்சத்தில், அது சரியெனக் கருதப்படுகிறது. ஒரு பொய் சொன்னால், அதை மறைக்க ஒன்பது பொய் சொல்லியாக வேண்டும். இப்படியே ஒரு பொய் வளர்ந்து, பெரிதாகி, குட்டிகள் போட்டு, பல்கிப் பெருகுகின்றது. இதுவரையிலான பொய்களால் தீயது விளைந்திருக்காது. அந்நேர மகிழ்ச்சி தரும் விளைவுகளே கிடைத்திருக்கும். பொய் சொல்லியும் போஜனத்திற்குக் குறைவில்லை என்று பொய்-நம்பிக்கை தரும். அது துணைக்கு மற்றவற்றையும் அழைத்துவரும்.

பொய்யின் வகைகளில் ஒன்றாக, வீட்டினுள் ஒரு முகம், வெளியே வேறு முகம் காட்டுவதை நியாயப்படுத்துகிறோம். Etiquettes என்ற பெயர்களில், போலித்தனமாக சிரித்து, புகழ்ந்து நடித்து, பொய்யான ஒரு இமேஜைக் காணத் தருகிறோம்.  உற்றவர்களானாலும் தவறுகளை எடுத்துச் சொல்லித் திருத்த முனையாமல், ’அது நாகரீகமல்ல’ என்று பொய்ச்சமாதானம் சொல்லிக்கொள்கிறோம்.

பொய் பேசும் விளம்பரங்கள்.  அந்த விளம்பரங்களுக்கு ஆகும் செலவையும், பெரிய கட்டிடங்களின் வாடகையையும் பொருளின் விலையில் சேர்த்து அதிக விலைக்கு விற்கப்படுவதைத்தான் “க்வாலிட்டி நல்லாருக்கும்” என்று தெரிந்தே பொய்யாக நம்புகிறோம். ஒப்பனைகள் பூசி பொய்யான மு(அ)கத்தைக் காட்டுபவர்களை உயர்வானவர்களாகக் கருதுகிறோம். பொய் சொல்வதற்கென்றே ஏப்ரல் ஃபூல் என்றொரு நாள் ஒதுக்கி, பொய் சொல்லி ஏமாற்றுவதைப் பெருமையாக நினைத்துக் கொண்டாடி மகிழ்கிறோம். 


சிறுவயதில் படித்த கல்கண்டு வார இதழில் லேனா தமிழ்வாணன் ஒருபக்கக் கட்டுரைகள் எழுதி வந்தார்.  நல்ல அறிவுரைகளை, சுவாரசியமான நடையில் எழுதுவதால், பல மனதில் இறுக்கமாகப் பதிந்ததுண்டு. அவற்றில், “பிள்ளைகளிடம் நீங்கள் ஏதேனும் வாக்கு கொடுத்தால் அதைக் கண்டிப்பாக நிறைவேற்றுங்கள். “ஆமா, நீ எப்பவும் இப்படித்தான் சொல்லுவே, ஆனா செய்யமாட்டே” என்று சொல்லிவிட்டால் அது பெற்றோராக நீங்கள் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது” என்பதும் ஒன்று.

இதையே பின்னாட்களில் ஹதீஸ் புத்தகங்களில் நபிகளாரின் அறிவுரையாகவும் கண்டேன்:  ஒரு சிறுவனை,   அன்னை ”இங்கே வா, நான் உனக்கு ஒன்று தருகிறேன்” என்று அழைத்தபோது நபி(ஸல்) அவர்கள் ”அவ்வாறு அழைத்துவிட்டு, அவருக்கு ஒன்றும் தராமல் இருந்தால் நீங்கள் பொய் கூறியவராகியிருப்பீர்கள்” என்று கூறினார்கள்.

ஆனால், வீட்டில் இருந்துகொண்டே இல்லையென்று சொல்வது; அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா மகனுக்கு பாக்கெட் மணி தருவது என, பெற்றோர்களின் பொய்களைக் கேட்டு வளரும் குழந்தைகளும் பொய் சொல்லுவது தவறில்லை என்று எடுத்துக் கொள்கின்றனர்.  அப்பெற்றோர்களும், “என்னிடம் பொய் சொல்லாத வரை சரி” என்று அதைக் கண்டுகொள்வதில்லை.

இந்த ”எப்போதேனும் ஒரு பொய்”தான் எல்லா குற்றங்களுக்கும் ஆதாரஸ்ருதியாக இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்வதே இல்லை. 


திருந்தி வாழ நினைத்த ஒருவன், அதற்கான வழியைத் தேடியபோது, அவனிடம் ஒருவர் “எது வேண்டுமோ செய்துகொள். பொய் மட்டும் சொல்லாமலிரு.” என்றாராம்.  ”வாய்மை” என்ற தலைப்பில் ஓர் அதிகாரம் எழுதியுள்ள வள்ளுவரும் இதையே சொல்கிறார்:
”பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று"                        
”பொய்யுரைக்காமையை மட்டும் கடைபிடித்து வந்தாலே போதும்;  மற்ற அறங்கள் செய்யத் தேவையில்லை”  என்று திருவள்ளுவர் எடுத்துரைப்பதிலிருந்து தெரியவருவது: ஒரு பொய்.. அதைச் சொன்னால் அது எல்லாத் தீயவைகளின் தொடக்கமாக அமையும்.  தவிர்த்தால்,  நல்வாழ்வின் தொடக்கம்.


Post Comment

குழந்தையும் தெய்வமும்




ரு நண்பரின் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, பரபரப்பும், பதட்டமும் நிலவிக்கொண்டிருந்தது. அவரின் இரண்டு-இரண்டரை வயது மகளின் வளையலைக் காணவில்லையாம். ஒரு பவுன்!! குழந்தையிடம் கேட்டால்,  “ஆனி ஆன்த்தி” என்றே திரும்பத் திரும்பக் கூறினாள்.

அம்மாவுக்கோ தயக்கம்... பக்குவமாக, பக்கத்து வீட்டு ராணியிடம் குழந்தை அங்கு வந்திருந்தபோது ஒருவேளை தவறி விழுந்ததா என்று தேடச் சொன்னார். இப்போது அம்மாவைவிட, ராணி ஆண்ட்டிக்குத்தான் பதட்டம் அதிகமானது. சிறிது நேரத்தில் வேறொரிடத்திலிருந்து வளையல் கிடைத்ததும்,.  ராணிக்குத்தான் பெருத்த நிம்மதி. “இது மட்டும் கிடைச்சிருக்கலன்னா, என் மேலிருந்த சந்தேகம் போயிருக்காதே” என்று பெருமூச்சு விட்டார். அம்மா “அப்படிலாம் இல்லைப்பா. நான் உங்களைச் சந்தேகமெல்லாம் படல்லை” என்று மீண்டும் மீண்டும் சமாதானப்படுத்தினார்.

இருப்பினும் உண்மை அதுதானே? ”குழந்தை பொய் சொல்லாது”; “குழந்தையும் தெய்வமும் ஒன்று” என்ற அளவுக்கு அல்லவா நாம் குழந்தைகளின் innocence-ஐ போற்றுகிறோம்.  ஏன் பல வழக்குகளில்கூட, குழந்தைகளின் சாட்சியம்தானே அதிக நம்பகத்தன்மையுடையதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால், இன்றைய குழந்தைகளிடம் இந்த வெகுளித்தனம் மிச்சம் இருக்கிறதா?  கார்டூன்களில் ஆரம்பித்து, வீடியோ கேம்கள், தொலைக்காட்சி, திரைப்படங்கள், இண்டர்நெட், மொபைல் ஃபோன் உள்ளிட்ட பலவற்றால் அந்த வெகுளித்தனம், குழந்தைத்தனம், அழகிய அறியாமை தொலைந்தே போய்விட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

சில வருடங்களுக்குமுன், ஒரு பத்திரிகையில் படித்த ஞாபகம். தெருவில் ஒரு மாடு மிரண்டோடி வர, அதைக் கண்டு அனைவரும் ஒதுங்கினர். ஒரு வீட்டில் இருந்த சிறுவன், தன் அம்மாவிடம், ஒரு கார்டூன் நிகழ்ச்சியின் பெயரைக் கூறி, “அதில் வருவதுபோல மாடு ஏன் உன்னை முட்டவில்லை? முட்டியிருந்தால் நீ கீழே விழுந்திருப்பே, ரத்தமெல்லாம் வந்திருக்கும், நான் பார்த்திருப்பேனே?” என்கிற ரீதியில் பேச தாய் அதிர்ந்துவிட்டாராம்.

குழந்தையைச் சொல்லிக் குற்றமில்லை. கார்ட்டூன்கள் அநேகமாக எல்லாமே அப்படித்தான் இருக்கின்றன.  கார்டூன்களாவது வரைபடங்கள். ஆனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறைகளை அப்படி ஒதுக்கிவிட முடியவில்லை. பசுமரத்தாணி போல, பச்சைமண்களின் மனதில் இவையும் அப்படித்தானே பதியும்.


இயல்பாகச் சித்தரிக்கிறேன் என்கிற பெயரில், சூடான ரத்தம் நம்மேல் தெறித்துவிடுமோ என்று அஞ்சுகிற அளவுக்கு, அளவுக்கு மீறிய வன்முறைக் காட்சிகள்.  காட்சிப்படுத்துதல்தானே - நிஜமல்ல என்று நமக்கும் தெரியும்; குழந்தைகளுக்கும் சொல்கிறோம். என்றாலும், ”கேட்பதை” விட, “பார்ப்பதே” உண்மையாகத் தோன்றும் வயதில்,  அவை மனதளவில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாம் இப்போது உலகில் பல சம்பவங்களில் கண்கூடாகக் காணத்தானே செய்கிறோம்?

வகுப்பறையில் ஆசிரியையைக் கொன்ற மாணவன், ஏதோ ஒரு படத்தைப் பார்த்து தைரியம் வரவழைத்தேன் என்கிறான்.  திரையுலகினரோ, திரைப்படங்களில் வரும் நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டியதுதானே என்கிறார்கள். மிகச் சிலர் நல்லதையும் எடுத்துக் கொள்ளத்தான் செய்கிறார்கள் - “தவமாய்த் தவமிருந்து” படத்தைப் பார்த்து தன் பெற்றோரின் மீது கூடுதல் மதிப்பு கொண்டவர்களும் உண்டு. ஏன், என் தலைமுறையைச் சேர்ந்த மக்களின் மனதில் தேசப்பற்றை வளர்த்ததில், “ரோஜா” படத்திற்குத்தானே பெரும்பங்கு!!

ஆனால், நல்லவை மனதில் ஏறுவதைவிட, கெட்ட விஷயங்கள்தானே சட்டென ஈர்க்கின்றன. அதனால்தானே, எவ்வளவு நல்ல படம் என்றாலும், அதில் ஒரு குத்தாட்டப் பாடலும் சேர்க்கப்படுகின்றது. பெரியவர்களுக்கே அப்படி எனும்போது, சிறுவர்களின் மனதிற்கு இந்த உணர்வுகளெல்லாம் புரிவதில்லை. அவர்கள் “ஆக்‌ஷனை”த்தான் பார்க்கிறார்கள், “ரியாக்‌ஷனை” அல்ல. அடிப்பவனின் வீரம்தான் தெரிகிறது, அடிபட்டவனின் வலி புரிவதில்லை.

துவரை வன்முறை என்பது பெரியவர்கள் செய்யும் செயலே என்று திரைப்படங்களில் காண்பிக்கப்பட்டது போய், சிறுவர்களையும் வன்முறை வழிகளில் ஆர்வமுள்ளவர்களாகக் காண்பிக்க ஆரம்பித்துள்ளது திரை ஊடகம். வேண்டாம்! உங்கள் வன்முறைகளை பெரியவர்களோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதன் விளைவுகளே தடுக்கமுடியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இதில் சிறுவர்களும் வன்முறைகளில் ஈடுபடுவதுபோல காண்பிக்க ஆரம்பித்தால், வன்முறை தவறே இல்லை, நாம்கூட செய்யலாமென்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியாதா? அதிலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக் குழந்தைகளை மட்டும் அவ்வாறு காட்டுவதால், ஏற்படக்கூடிய விளைவுகள் சொல்லித்தான் தெரியவேண்டுமா?

இந்தச் சித்தரிப்புகளெல்லாம் அதிகமில்லாத என் கல்லூரிக் காலத்திலேயே,  மாணவியர் பலரும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருந்த ஒரு சமயத்தில், என்னிடம் - என்னிடம் மட்டும், “நீ பாகிஸ்தானுக்குத்தானே சப்போர்ட் செய்ற?” என்று முன்முடிவோடு கேட்கப்பட்டதன் அதிர்ச்சி இப்போதும் என்னிடத்தில் மிச்சம் உள்ளது. இந்த வலிகளை என் தலைமுறையோடு மறந்துவிடவேத் துடிக்கிறோம்.

ரி, இதெல்லாம் பிடிக்கவில்லை என்றால் பார்க்காதீர்கள் என்று சொல்லுவது எளிது. தீயவற்றைப் பார்க்காத என்னால் - என் குடும்பத்தால் சமூகத்திற்கு தீங்கில்லை. ஆனால், அது போதுமா? நான் சமூகத்தில் எதிர்கொள்ளும் மனிதர்களும் இதேபோல தீதில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறா?

பார்ப்பதை விடுங்கள், திரையில் குழந்தைகளை எப்படிச் சித்தரிக்கிறார்கள் என்று பாருங்கள். எந்தப் படத்திலாவது குழந்தைகளை அவர்களின் அழகான குழந்தைத் தனத்தோடு காட்சிப்படுத்துகிறார்களா? இந்த ட்ரெண்ட் “அஞ்சலி” படத்திலிருந்து ஆரம்பித்ததென்று நினைக்கிறேன்.  பெரியவர்களை மரியாதையில்லாமல் பேசுவது, காதலர்களுக்குக் காவல் இருப்பது என்று வயதுக்கு ஒவ்வாத பேச்சுகளைப் பேசுபவர்களாக, செய்வதாக அதில் காட்டியிருந்தது பார்த்து (அப்போது கல்லூரி மாணவியான) எனக்கு ஆச்சரியம், அதிர்ச்சி, பிரமிப்பு!! நகரத்துப் பிள்ளைகளெல்லாம் இப்படித்தான் மரியாதையில்லாமல் இருப்பாங்க போல என்றுகூட அப்போது நினைத்துக் கொண்டேன் என்றால் பாருங்கள்.

ஆனால், தற்போது கிராமம்-நகரம் என்றெல்லாமல் பேதமில்லாமல், சிறுவர்கள் வயதுக்கு மீறியவர்களாக மாறியிருப்பதற்கு திரை ஊடகங்களே முக்கியக் காரணம் என்பது மறுக்கவே முடியாது. சமீபகால இரு காமெடி காட்சிகள் நினைவிலிருந்து உதாரணம் தருகிறேன். ஒன்றில், ஒரு சிறுமி தன் சாக்லேட்டைப் பிடுங்கியதாக தந்தையிடம் பொய்சொல்லி, வடிவேலுவுக்கு அடிவாங்கித் தந்து, மகிழ்வதாகக் காட்சி.  இன்னொன்றில், ஒரு சிறுவன் தன் வீட்டு காலிங்பெல் எட்டவில்லை என்று பொய்சொல்லி, வடிவேலுவை உதவிக்கழைத்து வீட்டு உரிமையாளரிடம் அடி வாங்க வைக்கிறான்.

நாம் பெரியவர்கள், இதெல்லாம் பார்த்து, சும்மா படம்தானே என்று புரிந்து, சிரித்து வைக்கிறோம். இதுவே உங்களுடன் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஆறேழு வயதுக் குழந்தைக்குத் தெரியுமா? அவன் எப்படி புரிந்துகொள்வான் என்று யோசித்தோமா?

திரைப் படங்கள் மட்டுமில்லை, வீட்டில் குடும்ப உறுப்பினர்களில் ஒன்றாக இருக்கும் டிவியில் வரும் தமிழ் தொடர் நாடகத்தில் வந்த ஒரு காட்சியை, “அவள் விகடனில்” ஒரு வாசகி விவரித்திருந்தார் பாருங்கள், அதிர்ச்சியின் உச்சம் என்று அதைத்தான் சொல்வேன்!! ஒரு சிறுமியின் அம்மாவுக்குக் குழந்தை பிறக்கப் போவதாகவும், அப்படி பிறந்தால் அம்மா இவளைக் கவனிக்க மாட்டார், புதிய குழந்தையைத்தான் விரும்புவார். ஆகையால் கருவைக் கலைத்துவிட நான் தரும் மருந்தைக் கொடு என்று அந்தச் சிறுமியிடம் ஒரு பெண் நஞ்சைக் கலக்கிறாராம். ஆண்டவா, இதென்ன கொடுமை!!

ப்படி, ஒன்று வன்முறை, அல்லது வயதுக்கு ஒவ்வாத பேச்சு மற்றும் செயல்கள் என்று சிறு குழந்தைகளைக் குறி வைப்பது போதாதென்று, பதின்பருவத்தினரையும் குழப்புவதில் திரை ஊடகத்திற்கே பெரும்பங்கு.  பள்ளிகளில் படிக்கும்போதே காதலிப்பது போலச் சித்தரிப்பதுதான் அதிகம் விற்கும் கதைகள் போல. அதிலும், இப்போதையப் படங்களில், தன் உள்ளங்கவர் கள்வனை அடையாளம் கண்டபின்புதான் பெண்கள் பருவமே எய்துகிறார்களாம்!! காதல், மைனா உள்ளிட்ட படங்கள் சொல்கின்றன. இந்த மாதிரியானப் படங்களுக்குத்தான் எத்தனை எத்தனை பாராட்டுகள்!!

டீனேஜ் காதலே சரி என்றால், டீனேஜில் செய்யும் சட்டபூர்வமான கல்யாணத்தில் என்ன தவறிருக்கும் என்றுதான் புரியவில்லை.  ”குழந்தைத் திருமணம் கலெக்டரால் தடுத்து நிறுத்தப்பட்டது”, “பால்ய விவாகம் நடத்த முயன்ற பெற்றோருக்குக் காவல்துறை எச்சரிக்கை” என்று எத்தனைச் செய்திகள் வாசித்திருப்போம்? 13-14 வயசில் செய்யும் காதலில் இல்லா “பால்யம்”, 15-16 வயதில் விவாகத்தில்!!

தங்கள் லாபத்திற்காக டீனேஜ் காதலைப் போற்றும் திரை ஊடகத்தினர், அதுவே தங்கள் வீடுகளில் நடந்தால் ஒப்புக் கொள்வார்களா? எத்தனை பேர் தங்கள் பிள்ளைகளை,  12-13 வயதில் காதலிக்க விட்டிருக்கிறார்கள்?

தின்பருவக் காதலைச் சொல்லிப் பெருவெற்றி பெற்ற ”ழகி” படத்தில் நடித்த பார்த்திபன் ”அழகி படம் எனக்கு இப்போது அருவருப்பாக இருக்கிறது” என்று  தற்போது கூறியிருக்கிறார்.  ஏனாம்? “....பள்ளிக் குழந்தைகள் காதலிப்பதாக காட்டுவதை நான் அருவருப்பாகப் பார்க்கிறேன்..... விவரம் இல்லாத வயதில் அவர்கள் செய்யும் குறும்பையும் விளையாட்டையும் களவாடிக் காட்சிப்படுத்தி விடுவதுதான் கவலை அளிக்கிறது”.  அதுசரி!! உங்களுக்கு  காலம் கடந்தாவது ஞானோதயம் வந்துவிட்டது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்து அது சரியென்று நினைத்த இளம்பருவத்தினர் எத்தனை பேரோ? அவர்களுக்கு ஞானோதயம் வரும்போது, வாழ்க்கையே தொலைந்து போயிருக்குமே?

குழந்தைத் தொழிலாளிகளைப் பணிக்கு அமர்த்துவது தவறு என்கிறோம். ஆனால், திரை ஊடகங்களில் பணிபுரியும் குழந்தைகளை நாம் தொழிலாளியாகவே பார்ப்பதில்லையே, ஏன்? அவர்கள் திரையில் நடிப்பிற்காகச் சிரிப்பதை, நிஜமாகவே சிரித்து மகிழ்வதாக நம்பிவிடுகிறோமோ?

ப்படி நிஜவுலகில் தவறென்று கூறப்படுவதெல்லாம், திரையில் மட்டும் சரியாகிவிடுவது ஏன்? மீண்டும் நீ ஏன் சினிமா, டிவி பார்க்கிறாய்? பிடிக்கவில்லை என்றால் ஒதுங்கிக் கொள் என்ற வாதத்தை வைக்காதீர்கள். என்னைப் போல பல பெற்றோர்களும் தவறானவற்றைப் பார்ப்பதில்லை.  தம் குழந்தைகளையும் தம் மட்டில் பாதுகாக்கிறார்கள். ஆனால், அவர்கள் தனித்தீவல்லவே! சமூகத்தோடு ஒட்டுறவாடித்தானே வாழ்ந்தாகவேண்டும். எனில், அந்தச் சமூகத்தில் இந்தத் தீயதைச் சரியென வரித்துக்கொண்டவர்களும் இருப்பார்கள்தானே, அவர்களை இந்தக் குழந்தைகள் எப்படி இனம்பிரித்தறிய முடியும்?

மற்றவர்களை இனம்பிரித்துப் பார்ப்பதே சிறுவர்களால் முடியாதென்றால், தம்மை மற்றவர்கள் தவறாகப் பார்ப்பதைத் தடுப்பதும் எப்படி முடியும்?

ஒரு காலத்தில் மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டி, நற்குணங்களை வரித்துக் கொடுத்து, ஒற்றுமையைப் போதித்து வந்தவையாகப் பாராட்டப்பட்ட திரை ஊடகங்கள், தற்காலம் பொறுப்பற்றவையாக மாறியிருப்பது காலக்கேடு. 


ந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பதிலே”

என்றிருந்ததெல்லாம் அந்தக் காலம் - அன்னை மட்டுமே வளர்த்த காலம் அது. இன்று, தாய்-தந்தையைவிட, குழந்தையின் இயல்பை வடிவமைப்பதில் பள்ளி, ஆசிரியர்கள், நண்பர்கள், ஊடகங்கள் உள்ளிட்ட சமூகமும் பெரும்பங்கு வகிக்கிறது.

இவற்றில் காட்சி ஊடகங்களே சிறுவர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது யாவரும் அறிந்ததே. “ஒரு நிழற்படம் ஆயிரம் வார்த்தைகளுக்குச் சமம்” என்பார்கள். எனில், திரைப்படம்? UNESCO-வின் ஆய்வுக் கட்டுரை, சிறுவர்களிடமும், பருவவயதினரிடமும் ஒரு திரைப்படம் கதைப்புத்தகத்தை விட ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும், குறிப்பிட்ட காட்சிகளை அவர்கள் மறப்பதேயில்லைஎன்றும் கூறுகிறது.

அமெரிக்காவில் பள்ளிகளில் நடைபெறும் வன்முறைச் சம்பவங்களை ஆய்வு செய்ததில், பல குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும், சிறுவயதில் அமைதியற்ற சூழலில் வளர்ந்ததே முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  Disturbed childhood என்பதில், இளவயதில் பார்க்கும் படங்களில் உள்ள வன்முறைகளும் அடங்குமாம்!! 





வீட்டினுள் உள்ள சூழ்நிலைகள் என் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். ஆனால், விரும்பியும், விரும்பாமலும் வளைய வரும் வெளி உலகில் பல்வேறு காரணிகள் இருந்தாலும், நல்லது கெட்டதைப் பிரித்தறிய முடியாத சிறார்களின் மனதில் கல்வெட்டாகப் பதியும் காட்சி ஊடகங்கள் தம் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை உணரும் காலம் வந்தேவிட்டது!! 

ஏனெனில் ”குழந்தைகள் பெற்றோர்களினால் உருவாக்கப்பட்டவை அல்ல. பெற்றோர்களின் மூலம் இந்த உலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவை.” (கலீல் ஜிப்ரான்) அந்தக் குழந்தைகளைப் பொறுப்பான சமூகத்தின் அங்கமாக ஆக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையுமே.

மேல்வாசிப்புக்கு:
1. குழந்தைகள் சினிமா.. தமிழில்...
2. ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள் ...4
3. தமிழில் குழந்தைகளுக்கான சினிமா?
4. சின்னத்திரையும் வண்ணத்திரையும்

 

Post Comment

தன் பலமறியா ஆனை





ட்சித் தலைவரைச் சந்திக்க, அந்த ஊரின் பிரதிநிதிகள் வந்திருந்தனர். நகரத்திலிருந்து வெளியே செல்லவேண்டுமென்றால் அவர்களின் ஊரைக் கடந்துதான் செல்லவேண்டும். தாங்கள் ஏற்றுக் கொண்ட மாற்றங்களைத் தெரிவிக்கவும், அப்படியே தங்களின் நிலைகளை விளக்கிக் கூறி, தம் கோரிக்கைகளையும் பரிந்துரைக்கு ஏற்கும்படிக் கேட்டுக் கொள்ளவும் வந்திருந்தனர்.

பிரதிநிதிகளில் முக்கியமானவர் பேச ஆரம்பித்தார், “கலீஃபா அவர்களே!! நாங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்கிறோம். ஐவேளை தொழுகைகளையும் தவறாது தொழுதுகொள்கிறோம். ஆனால், ’ஸகாத்’ மட்டும் எங்களால் செலுத்தமுடியாது!! இந்த எங்களின் நிபந்தனை ஏற்கப்படுமெனில், இப்போதே எங்கள் ஊர் மக்கள் அனைவரும் இஸ்லாமை ஏற்கத் தயாராக உள்ளோம்.”

கலீஃபாவின் உடனிருந்த தோழர்களும் - உமர் (ரலி) உட்பட- இந்நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு ஆலோசனை கூறினார்கள். ”முஹம்மது (ஸல்) இறந்துவிட்ட இச்சூழ்நிலையில், எதிரிகள் பெருகிவரும் வேளையில், இக்கூட்டத்தாரையும் நம்மோடு இணைத்துக் கொண்டால், நம் பலம் பெருகும். எனவே, சம்மதியுங்கள்” என்றார்கள்.

கலீஃபா அபூபக்கர்(ரலி) அவர்கள் அப்பிரதிநிதிகளிடம், “இஸ்லாத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்கள் என்றால், அதன் அத்தனை அடிப்படை அம்சங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஒன்றை ஏற்று, ஒன்றை விட்டுவிடுகிறீர்கள் என்றால், இஸ்லாத்திலிருந்து வெளியேறியவர்களாகிறீர்கள். இஸ்லாத்தை உங்களின் வாழ்க்கை நெறியாக்கிக் கொள்ளும்பட்சத்தில், நீங்கள் கொடுக்கவேண்டிய ஸகாத், ஒரு ஒட்டகத்தின் மூக்கணாங்கயிற்றின் அளவே இருந்தாலுங்கூட, அதை உங்களிடமிருந்து நான் பெறாது விடமாட்டேன்” என்று சொல்லியனுப்பினார்கள்!!

ரமதான் என்றதும் நினைவுக்கு வருவது நோன்பு மட்டுமல்ல, ‘ஸகாத்’ எனப்படும் வரியும்தான்!! இதைத் தானம், தர்மமென்று சிலர் சொல்வர். அதைவிட, இது இஸ்லாம் விதித்த ‘சொத்தின்மீதான வரி’ என்பதுதான் சரியானது. ‘ஸகாத்’ என்ற சொல்லுக்கு ‘தூய்மைப்படுத்துதல்’, ‘வளர்ச்சியடைதல்’ என்று அர்த்தங்கள் உண்டு. சொத்திற்குரிய வரியைக் கொடுத்துத் தூய்மைப்படுத்திப் பெருக வைத்தல் என்று சொல்லலாம்.  ஸகாத் கொடுப்பதால், சொத்துக்கள் மட்டுமல்ல, கொடுப்பவரின் உள்ளமும் தூய்மை பெறும். இறைவனின் அருளும் பெருகும்.

நம்மிடம் இருக்கும் எல்லாவிதமான சொத்திற்கும் - வீடு, நிலம், நகை, விவசாய விளைபொருட்கள், கால்நடைகள், வருமானம், இருப்புத்தொகை, கடனாக கொடுத்துள்ள தொகை - இப்படி எல்லாவற்றின்மீதும், ’தனக்குப் போய்த்தான் தானமும், தர்மமும்’ என்பதாக, சொந்தத்தேவைக்குப் போக மிஞ்சியவற்றின்மீது மட்டுமே வரி கடமையாகிறது.  பொருளைப் பொறுத்து, குறைந்த பட்சம் 2.5% முதல் குறிப்பிட்ட சதவகிதம் வரி உண்டு.

ஸகாத் வரியின் நோக்கம், செல்வம் ஒரே இடத்தில் குவிந்திருக்காமல், பரவலாக்கப்பட வேண்டும். இல்லாதவர்களுக்குக் கொடுக்கப்படுவதன்மூலம், அவர்களும் பின்னாட்களில் ஸகாத் கொடுக்கக்கூடியவர்களாய் ஆகுமளவு வளம்பெற வேண்டும் என்பதே. இதன்மூலம் ஏழ்மை ஒழிக்கப்பட வேண்டும். 

’ஸகாத் தொகை கொடுப்பதற்கு அதிகத் தகுதியுடையவர்கள் உறவினர்களே’ மற்றும் ’ஸகாத்தை ஒருவரின் சொந்த ஊரிலேயே கொடுப்பதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்’ என்ற அறிவுறுத்தல்கள் தம் உற்றார், பிறந்த ஊரை முன்னேற்றுவதே ஒருவரின் முதல் கடமை என்பது புரியவரும்.

ஸகாத் கொடுப்பதற்குச் சில நிபந்தனைகள் உண்டு. அவற்றில் முதலாவது, எந்தச் சொத்தின்மீது ஸகாத் கொடுக்கிறீர்களோ, அதன் முழுமுதல் சொந்தக்காரர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அதாவது அந்தச் சொத்தின்மீது எல்லா உரிமையும் உங்களிடம் இருக்க வேண்டும். உங்களின் தேவைக்குப் போக, குறிப்பிட்ட அதிகபட்ச அளவை அடைந்திருக்க வேண்டும். அந்தச் சொத்து (விளைபொருட்கள் தவிர) உங்களை அடைந்து ஓராண்டு (இஸ்லாமிய வருடம்) நிறைவு பெற்றிருக்க வேண்டும். 

ஸகாத் கடமையாகும் பொருள் நம்மிடம் ஒரு வருடம் முழுமையாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் பார்த்தால்,  இந்த வருடம் முஹர்ரம் மாதத்தில் ஒரு சொத்து வாங்குகிறீர்கள் என்றால், அது வாங்கி ஒரு வருடம் முழுமையடைந்தவுடன்தான் வரி கடமையாகிறது. அதன்படி, இந்த ரமலான் மாதம் அதற்கு வரி கொடுக்க வேண்டாம். அதே சமயம், அடுத்த ரமலான் வரும்வரை காத்திருக்காமல், முஹர்ரமிலேயே வரி கொடுத்துவிடவேண்டும். ஆக, இந்திய இன்கம்டாக்ஸிற்கு மார்ச் மாதம் மாதிரி, ஸகாத்திற்கு ரமலான் மாதம் ’எல்லை’ கிடையாது. ஒருபொருள் எவ்வப்போது அதன் ஓராண்டுகால எல்லையை அடைந்துவிடுகிறதோ அப்போது அதன் வரியைச் செலுத்திவிடவேண்டும்.

எனில் ரமலான் மாதம் ஏன்? அம்மாதத்தில் செய்யும் நற்செயல்கள் அதிகமதிக நன்மையைப் பெற்றுத் தரும் என்பதால் இருக்கலாம். எனினும், அததற்கான வரியை, தாமதப்படுத்தாமல் அவ்வப்போதே செலுத்திவிடுவதே நல்லது.  மேலும், நடுத்தரக் குடும்பங்களுக்கு இது ஒருவகையில் பொருளாதார அழுத்தத்தையும் குறைக்கும். அதாவது, ரமலான் மாதத்தில் கணக்குபோட்டு ஸகாத் கொடுக்கப் போகிறீர்கள் என்றால், ஸகாத்தின் மொத்தத் தொகையை ஒரே நேரத்தில் புரட்டுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கலாம். அதுவே ஒவ்வொரு பொருளுக்கும் , அதை வாங்கிய மாதத்தில் ஸகாத் என்று கொடுத்து வந்தால், சிரமம் குறையும்.

மேலும், மொத்தமாக ரமலானில் கொடுக்கும்போது, அந்த மாதத்திற்குள் ஸகாத்தைக் கொடுத்து முடித்துவிட வேண்டும் என்று ஏற்படுத்திக் கொண்ட  கட்டாயத்தால், சில வேளைகளில் தகுதியற்றவர்களுக்குக் கூட கொடுத்து விட நேரிடுகிறது. அதுவே ஸகாத்தை வருடம் முழுதும் பரவலாகக் கொடுத்து வந்தோமானால், தக்கமுறையில் பயன்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இருப்பினும், வருடமொருமுறை மொத்தமாகக் கொடுக்க நினைக்கிறோம் என்றால், அத்தொகையைப் பயனுள்ள வகையில் செலவழிப்பது நல்லது. வெறுமே சிலருக்கு 500, 1000 என்று கொடுக்காமல், ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வதற்கேற்ற தொழில்செய்ய உதவிகள் செய்து, அவர்களும் ஸகாத் கொடுக்குமளவு தன்னிறைவு பெறவைப்பது பொருத்தமானது. இதுபோலவே பலரும் கூட்டாகச் சேர்ந்து ஸகாத் தொகையை ஒன்றிணைத்து பெரிய அளவில் பயன்கள் தரக்கூடிய நல்லகாரியங்கள் செய்யலாம்.

திருக்குர் ஆனில், “ஸகாத்தைச் செலுத்துவீர்களாக” என்று மக்களுக்கு அறிவுறுத்தியதுபோலவே, “அவர்களுடைய செல்வத்திலிருந்து ஸகாத்தை எடுப்பீராக” என்றும் நபி(ஸல்) அவர்களுக்கு ஆணையிடுகிறான் இறைவன். இஸ்லாமிய ஆட்சியில் ஸகாத் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படவேண்டும். அரசு அதை ஒருங்கிணைத்து, மக்களின் நலத்திட்டங்களிலும், பாதுகாப்பிற்கும் செலவழிக்கும்.

இதைச் சுட்டிக்காட்டி, சிலர் தம் நாட்டில் செலுத்தும் வரிகளை ஸகாத்தில் கழிப்பார்கள். அது தவறு. ”ஒருவருடைய சொத்தில் ஜகாத் சொடுத்துவிட்டு, அதே நேரம் அரசாங்க விதிகளுக்கு உட்பட்டு வேறு வரிகளும் இருந்தால் அதனையும் ஒருவர் தன் சொத்தில் இருந்து கொடுக்க வேண்டும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆகவே, நாம் இந்திய/தாம் வாழும் நாட்டின் அரசிற்குச் செலுத்தும் வருமான/சொத்து/இத்யாதி வரிகள் ‘ஸகாத்’தில் அடங்காது. ஸகாத் செலுத்தப்படுவதற்கு இஸ்லாமிய அரசே தகுதிபெறும்.

முன்காலத்தில் இஸ்லாமிய அரசுகள், வேறு நிலையான வருமானங்கள் அதிகம் இல்லாத நிலையில் தம் மக்களிடமிருந்து பெற்ற ஜகாத், ஜிஸ்யா வரிகளே ஆட்சி நடத்த உதவின.  ஜகாத்தைப் போலவே ஜிஸ்யாவிற்கும் ’தன்னிறைவு’ போன்ற நிபந்தனைகள் இருந்தது. தற்காலத்திய இஸ்லாமிய நாடுகளில் வேறு நிலையான வருமானங்கள் உள்ளதால், அந்நாட்டு அரசாங்கங்களால் ஸகாத் வசூலிக்கப்படுவதில்லை (என்பது என் எண்ணம்).

மக்களின் ஸகாத்தை ஒன்றிணைத்து, எல்லாத் துறைகளிலும் பெரிய பெரிய நல்ல திட்டங்களைச் செயல்படுத்த இன்று அரசாங்கத்தைப்போல கட்டுக்கோப்பான அமைப்பு எதுவும் இல்லாததால், மக்கள் சில்லறை சில்லறையாக ஸகாத்தை விநியோகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.  ’ஸதகா’ எனும் நன்கொடை கொடுக்க வேண்டிய முறையில் ஸகாத்தைக் கொடுத்து வருகிறோமோ என்று எண்ணத் தோன்றுகிறது. இதனாலேயே, முழு வளர்ச்சி நிலையை எட்ட முடியவில்லை. தற்காலங்களில் சில முஸ்லிம் அமைப்புகளும், சில ஊர்களின் ஜமாத்களும் ‘பைத்துல் மால்’ என்ற நிதிக்கருவூல அமைப்பை ஏற்படுத்தி பணம் வசூலித்து வருகிறார்கள். இவற்றின்மூலம், பெரும்பாலும் கல்வி உதவி, மருத்துவ உதவி, வட்டியில்லாக் கடன், பெண்கள் திருமண உதவி என்று கொடுத்து வருகிறார்கள். 

எனினும்,  என் மனதிற்கு, ”யானை தன் பலம் அறியாது” என்பதாக  நாம் இன்னும் “ஸகாத்”தின் முழுபலத்தை அறிந்திடவில்லை என்றே தோன்றுகிறது.  இறைவனருளால், இக்காலங்களில் இஸ்லாமியர்களில் செல்வந்தர்கள் பெருகியுள்ளார்கள். ஒரு ஊரைச் சேர்ந்த ஒருசிலரின் ஸகாத்தை ஒன்றுசேர்த்தாலே,  அவ்வூரை வளம் கொழிக்க வைத்து, தன்னிறைவு பெறச் செய்யலாம், இன்ஷா அல்லாஹ். ஆனால், அதற்கான விழிப்புணர்வும், திறம்பட முன்னெடுத்துச் செயலாற்ற வேண்டியவர்களைக் கண்டடைவதுமே இன்றைய அவசியம்.

Post Comment

பதினேழாம் வாய்ப்பாடு




சென்ற வாரம் தோனி படம் பார்த்தோம். நல்ல படம். நல்ல மெஸேஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதாவது, மாணவர்களுக்கு விருப்பமானதைப் படிக்க விடுங்கள், திணிக்காதீர்கள் என்று சொல்றாங்க. இதுவரை ஓகே, fine. ஆனால், எல்லாப் பாடங்களிலும் ஒரு அடிப்படை அறிவு என்பது அவசியம்தானே?

உதாரணமாக, ஒரு எஞ்சினியர் தொழிற்சாலைத் தொடங்குகிறார் என்றால், அவருக்குத் தொழிற்நுட்ப அறிவு கண்டிப்பாக வேண்டும். அத்தோடு, ‘மேலாண்மை’, ‘கணக்கியல்’, போன்றவற்றிலும் அடிப்படை அறிவு இருந்தால்தானே தொழிற்சாலையைச் சரியாக நிர்வகிக்க முடியும்? அட, அதுக்குன்னு ஆட்களை நியமிச்சாலுங்கூட, அவர்கள் சொல்லும் கணக்கைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது அந்தத் துறைகளைத் தெரிஞ்சு வச்சிருக்கணும்ல?

அதேபோல, ’கணக்கு’ என்கிற பாடம் எல்லா துறைகளுக்கும் அடிப்படை. ஆனால், படத்திலோ மாணவன், அடியோடு அதை வெறுத்து, அதைப் புரிந்துகொள்வதற்குத் துளிகூட முயற்சி எடுக்கவில்லை. எனக்கும் 12-ம் வாய்ப்பாடே திணறத்தான் செய்யும். இன்றைக்கும் வாய்ப்பாடு பயன்படுத்த வேண்டிவந்தால், அதைப் பத்து, பத்தாகப் பிரித்து எளிமைப் படுத்தி பெருக்கி, கூட்டிச் சொல்லத்தான் தெரியுமே தவிர, வாய்ப்பாடுகள் மனப்பாடமாகத் தெரியாது.

படம் முழுதும், பிரகாஷ் ராஜ், செவண்டீன் எய்ட்ஸ் ஆர் எவ்வளவு தெரியுமா என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது. (17x8 = (10x8) + (7x8) = 136)

கணக்கிலும், அறிவியலிலும் அந்த மாணவன் ஒற்றை இலக்க மதிப்பெண்களே எடுக்கிறான். விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடிப்படைப் பாடங்களைத் துறந்துதான் ஆர்வம் காட்ட வேண்டுமென்றில்லை. பாடங்கள், விளையாட்டு இரண்டிலுமே அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளுமளவுக்காவது ஆர்வம் இருக்க வேண்டும். கணக்கில் ஆர்வம் இருப்பதால், மொழிப் பாடத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றில்லை; தமிழ் பிடிக்கும் என்பதால் அறிவியலை ஒதுக்கக் கூடாது. அதே போலத்தான் விளையாட்டும்கூட.

ஒருவேளை கணக்கையும், அறிவியலையும் எளிதாக்கிச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் அவனுக்கு வாய்க்கவில்லையோ என்னவோ? நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் வரமே. இந்தச் செய்தியையும் படத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் சேர்ந்து விளையாட வேண்டுமென்றால், பள்ளி/கல்லூரிகளின் மூலம்தானே எளிதாகச் சேரமுடியும்? அதற்காகவாவது பாஸ் மார்க் எடுக்க வேண்டாமா? ஏன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரி சீட், வேலைவாய்ப்புப் பெற வேண்டுமென்றால்கூட, இந்தப் பாடங்களைப் படித்து பாஸ் செய்தால்தானே முடியும்? கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் வரும்போது ஒருவேளை இந்நிலை மாறலாம். ஆனால், தற்போது இந்தக் கல்வித் திட்டத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும்.

படத்திலோ மாணவன், திமிராகப் பேசுவது சரியெனவேச் சித்தரிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதென்ன எப்பப் பாத்தாலும், ‘பிடிக்கலை, பிடிக்கலை’ன்னே சொல்லிகிட்டிருக்கிறான்? ’புரியவில்லை’ என்று சொன்னால், சற்றேனும் ஈடுபாடு இருப்பதாகவும், முயற்சி செய்பவனாகவும் கொள்ளலாம். தன் தந்தை பணத்திற்காகப் படும் கஷ்டங்களை உணர்ந்தவனாகவும் தெரியவில்லை.  இதைப் பார்க்கும் மாணவர்கள் தவறாகவே புரிந்துகொள்வார்கள். என் மகனிடமும் மேற்சொன்ன விஷயங்களை எடுத்துச் சொன்ன பிறகே எனக்கும் நிம்மதி.

நல்லவராகக் காட்டப்படும் ’கோச்’சாவது நிதர்சனங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். தோனின்னா அவ்ளோ உசிரா இருக்கிறவன், தோனியின் புள்ளிவிவரங்களை மனப்பாடம் ஆக்கி வைத்திருக்கிறவன், கிரிக்கெட் உலகின் ஸ்டாராக இருக்கிற இந்த நேரத்திலும், தோனி B.Com. படிப்புக்கானத் தேர்வுகள் எழுதி வருவதையும் தெரிந்து வைத்திருக்கலாம்!!

என்னைப் பொறுத்தவரை, தன் வருமானத்துக்கு மீறீய வகையில் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கும் பிரகாஷ் ராஜ்தான் (உடனடியாக) மாறவேண்டியவர். மகனுக்கு ஆர்வம் படிப்பில் இல்லை, கிரிக்கெட்டில்தான் என்று தெரிந்ததும் செலவு குறைந்த (அரசு) பள்ளியில் சேர்த்துவிட்டு, கிரிக்கெட் கோச்சிங்கிற்குச் செலவழித்திருக்க வேண்டும். படத்தில் இதை யாருமே அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை!! கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டியதுதான். ஆனால் உடனடி மாற்றங்கள் தேவைப்படுவது பெற்றோர்களிடத்தில்தான் என்பது என் கருத்து.

சொல்ல வந்தது நல்ல விஷயம்; சொல்லப் பட்டிருப்பதோ தவறான மெஸேஜ். Miscommunication!!


Post Comment

டிரங்குப் பொட்டி - 22





ராஜஸ்தான் ஹவா மஹல் - இதன் இன்னொரு பெயர், “பிங்க் மஹல்”. பேருக்கேத்த மாதிரி பிங்க் கலர்ல இருக்கிற இத வச்சுத்தான் ஜெய்ப்பூருக்கே “பிங்க் சிட்டி”னு பேர் வந்தது. இந்த மஹல், அப்போதைய அரசக் குடும்பத்துப் பெண்கள் நகரை வேடிக்கை பார்க்கப் பயன்படுத்துவதற்காகக் கட்டப்பட்டது. புராதனச் சின்னமான இக்கட்டிடம் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் இந்நகரில் நடந்த NRIக்களின் தினமான ‘ப்ரவாசி பாரதிய திவஸ்”க்காக இந்நகரை அழகுபடுத்தினர். அப்போது, புறா எச்சங்களும் தூசியுமாய் இருந்த ஹவா மஹலையும் சுத்தம் செய்ய, தீயணைப்புக் குழாயால் நீரை வேகமாகப் பீச்சியடித்ததில், அதன் வெளிப்புறச் சுவரின் சில இடங்களில் காரை பெயர்ந்துவிட்டதாம்.

ஒரு புராதனக் கட்டிடத்தின்மீது இப்படிக் கடுமையான அழுத்தத்தில் நீரை அடித்துச் சுத்தம் செய்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தொல்பொருள் துறையினரும், தீயணைப்புத் துறையினரும் இதுகூடத் தெரியாத குழந்தைகளா என்று ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
______________

காற்று மாசுபடுவதைத் தடுப்பதற்காக 27 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான EU, கடந்த ஜனவரி முதல் தம் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் விமான நிலையங்களைப் பயன்படுத்தும் விமானங்கள் வெளியிடும் புகையில் உள்ள நச்சுப்பொருளான கார்பன் அளவைப் பொறுத்து "Carbon tax" கட்ட வேண்டும் என்று EU சட்டம் நிறைவேற்றியுள்ளதற்கு, பல்வேறு விமான நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதை ஐரோப்பிய யூனியன் கண்டுகொள்ளாததால், விமான நிறுவனங்கள் இக்கட்டணத்தை விமான டிக்கட்டுகளில் ஏற்றி, பயணிகளின் தலையில் கட்டிவிட்டன!!

உலகில் வாகனப் பெருக்கம் அதிகமாகிவிட்டதன் ஒரு விளைவு இந்த “கார்பன்” emissions. இவை மிகக் கெடுதலானவை என்பதால், இதைக் கட்டுப்படுத்தியே ஆகவேண்டிய சூழலில் இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கைகள் அத்தியாவசியமாகி வருகின்றன. இதற்கான இன்னொரு  நடவடிக்கையான "Carbon capture and storage" குறித்து WFES - 2011 பதிவில் முன்பே பார்த்திருக்கிறோம்.
______________________

ங்கே அமீரகத்தில் சமீபகாலமாக, பூட்டியிருக்கும் வீட்டில் திருட்டுகள் அதிகரித்து வருகின்றன. அதிலும் பாதிக்கப்படுபவை குறிப்பாக இந்தியர்களின் வீடுகளே மிகமிக அதிகம். அதுகுறித்து அமீரகக் காவல் துறை தலைவர் பேசும்போது குறிப்பிட்டதாக செய்தியில் படித்த விஷயத்தைப் பகிரவேண்டும் என்று வெகுநாட்களாக நினைத்திருந்தேன். ஆனால், அந்தச் செய்தியின் லிங்கைச் சேமித்துவைக்க மறந்துவிட்டதால், தற்போது தேடியபோது ஒரு ஆச்சர்யமான ஒற்றுமை அறியக் கிடைத்தது.

அதாவது அமீரகத்தில் மட்டுமல்ல, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற இந்தியர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும்கூட, இந்தியர்களின் வீடுகளே பெரும்பாலும் திருடர்களின் தாக்குதலுக்கு உள்ளாவதாகத் தெரிய வந்தது. காரணம், ஒன்றுதான்!! அதாவது, பெரும்பான்மையோர் தம் வீட்டுக்கதவுகளில் தாம் இந்தியர் என்று தெரியும் விதமான அடையாளங்களைச் செய்கின்றனர். அதாவது, கதவில் ஸ்வஸ்திக் வரைவது, மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, கோலங்கள் போடுவது போன்றவை மூலம் அது இந்தியர்களின் வீடுகள் என்று உறுதியாகத் தெரிய வருகிறதாம்.

சரி, அதனால் என்ன என்று தோன்றும். இந்தியர்களுக்குத்தான் நகைப் பற்று அதிகம். அதுவும் 22 காரட் நகைகளை இந்தியர்கள் மட்டுமே வாங்குவர். ஆங்கிலேயர்கள் 12 காரட், 14 காரட் நகைகளே பெரும்பாலும் வாங்குவர். அதன் மதிப்பு 22 காரட்டுக்கு முன் ஒன்றுக்கும் தேறாது. அதனால்தான்!!

தொடர்புடையச் சுட்டிகள்: 
1. http://aathimanithan.blogspot.com/2012/01/blog-post_08.html
2. http://uberdesi.com/blog/2009/08/12/burglarizing-ganesh/
3. http://www.dailymotion.com/video/xhohy3_homes-with-religious-symbol-meaning-good-targeted-by-burglars_news
 ___________________________

பெரியவனின் பள்ளியில் குடியரசு தினத்தையொட்டி, வகுப்புகளில் சில அலங்கார வேலைகளைச் செய்யச் சொல்லியிருந்தனர். இவன் வகுப்பில், இவன் பொறுப்பெடுத்துச் சகமாணவர்களிடம் காசு வசூலித்துச் செய்தான். அப்போது வேலைகளையும், அதற்கான பணத்தையும் மாணவர்களோடு வேலைகளைப் பகிர்ந்து செய்யவேண்டி வந்ததில், பலரும் காசையும், வாங்கிய பொருட்களையும் ஆட்டையைப் போடுவதிலேயே குறியாக இருப்பதைப் பார்த்து நொந்துபோய் இருக்கிறான். “நீ தந்த காசைப் பையில் வச்சிருந்தேன். வகுப்பில் வச்சுக் காணாமப் போயிடுச்சு. அதனால் நான் பொறுப்பில்லை”; “வாங்கின ரிப்பனை வீட்டுல வச்சிருந்தேன்; தம்பி எடுத்துக் கிழிச்சிட்டான். ஒண்ணும் செய்ய முடியல”; “இன்னிக்கு லீவாயிருந்தாலும், உனக்கு உதவத்தான் வந்தேன், அதனால பெப்ஸி, சிப்ஸ் வாங்கக் காசு கொடு” - இதெல்லாம் சொல்லப்பட்டச் சில காரணங்கள். எதிர்கால இந்தியா!!

இதை மிஞ்சுற மாதிரி இன்னொன்ணு நேத்து கேள்விப்பட்டேன். திருச்சியில் முதலாமாண்டு பொறியியல் தேர்வில் மூன்று பாடங்கள் ஃபெயிலானதால் மாணவன் தற்கொலை செய்துகொண்டான். அதுவல்ல விஷயம் (!!). அவன் இறந்த சில நிமிடங்களில், அவனின் மொபைல் ஃபோன் காணாமல் போய்விட்டதாம்!!
__________________

”நண்பன்” படத்தில் எஸ்.ஜே. சூர்யாக்குப் பதிலாக விஜய் படிச்சு, பரிட்சை எழுதுவதை ரசித்துப் பாராட்டினோம். கல்வி முறை மாற வேண்டும் என்றெல்லாம் வீராவேசமாக வாதாடுகிறோம். ஏங்க, புதுச்சேரி மினிஸ்டரும், படிக்கக் கஷ்டமாயிருக்கப் போய்த்தானே ஆளு வச்சு பரிட்சை எழுதினார்? இத ஏன் யாரும் அந்தக் கோணத்துல யோசிக்கவேயில்லை? பாவம் அவரு!! :-)))))
________________

கடலூர்!!
ம்ம ஊர்ல சிலர், அவங்க விளைபொருட்களின் கொள்முதல் விலையைக் கூட்ட வேண்டும்னு போராட்டம் பண்றாங்க. உதாரணமா, பாலுக்கு கொள்முதல் விலையை உயர்த்தணும்; அரிசிக்கும் அதேபோலன்னு. எல்லாம் சரிங்க. ஆனா அதுக்கு ஏன் அந்தப் பாலையும், நெல்லையும், அரிசியையும் ரோட்டில கொட்டுறீங்க? முன்னெல்லாம் சினிமாவில் சண்டைக் காட்சியில்தான் இப்படி அநியாயம் பண்ணுவார்கள். இப்ப நிஜத்திலேயே!! :-((((
 

Post Comment

கல்லூரிப் படிப்பு





சமரசம்  என்ற பத்திரிகையில், செப்டம்பர் மாதம் வெளிவந்த எனது சிறுகதை. எனது முதல் பத்திரிகைப் படைப்பு!

 

ஹாஜா மைதீன் பெரியாப்பாவின் இளைய மகள் சகீனாவுக்குக் கல்யாணம். காலை கல்யாணம் சிறப்பாக முடிந்து, மதிய விருந்தும் முடிந்து, எல்லாரும் சற்றே இளைப்பாறிக் கொண்டிருந்தனர். ஊர் வழக்கப்படி வீட்டில் வைத்துத்தான் திருமணம். ஹாஜா மைதீன் பெரியாப்பா, பெரியம்மா ரெண்டு பேருக்குமே பெரிய குடும்பப் பிண்ணனி.  அதனாலும் வீடு முழுக்க,  நெருங்கிய உறவினர்களால் நிரம்பி வழிந்தது. கல்யாண மண்டபம் போல பெரிய, அந்தக் காலத்துக் கல்வீடு. குழந்தைகள் ஓடியாட, இளைஞர்கள் வீட்டுவாசலில் அணிவகுத்திருந்த பைக்குகளின் மீதமர்ந்து மொபைல்களில் விட்டுப்போன அழைப்புகளையும், குறுஞ்செய்திகளையும் பார்க்க, பெண்கள் நடுவீட்டில் ஓய்வெடுக்க,  மற்ற ஆண்கள் தெருவீட்டில் பாய்களிலும், சேர்களிலும் நிரவியிருந்தனர்.

மாலை நேரத்துத் தேநீர் தயாரென்று சமையல் கட்டிலிருந்து அழைப்பு வர, பெண்கள் அனைவருக்கும் பரிமாற ஆரம்பித்தார்கள். குடித்த தேநீர் தந்த சுறுசுறுப்பில் எல்லோரும் ஹாலில் குவிய, கலகலப்பானது வீடு. சற்றே கட்டைக் குரல் உடைய செய்ராத்து பெத்தும்மா, “எலே கபூரு, உம்மவ கமருன்னிஸா பண்ணெண்டாப்புல எம்புட்டு மார்க்கு?” என்று கேட்க, எல்லார் கவனமும் அதில் திரும்பியது. கஃபூர், “ஆயிரத்து நூத்தி முப்பது மாமி” என்றதும், “மாஷா அல்லாஹ். நல்ல மார்க்காச்சே. எந்த காலேஜ்? என்ன கோர்ஸ்ல சேத்திருக்கீயோ காக்கா?” என ஜெய்னம்பு சாச்சி கேட்டார். சாச்சி துபாயில் வசிக்கிறார். அங்கே ஒரு பெரிய நிறுவனத்தில் வேலையும் பார்க்கிறார். அவரது கலகலப்பாலும், தெளிந்த சிந்தனைகளாலும், இளையவர் எல்லாருக்குமே அவர் “சாச்சி”தான். வயது “சாச்சி”க்குரிய நாற்பதுகளில் என்றாலும், பேச்சும், செயல்களும் ஒரு ஆச்சியின் அனுபவத்தைக் கொண்டதாயிருக்கும்!!

“ஊர் கிடக்க கிடப்புல, பொம்பளப்புள்ளய படிக்க வக்கிறது, வவுத்துல நெருப்பக் கட்டிகிட்டு இருக்கமாதிரி இருக்கும். அதான் படிச்சது போதும்னு, மாப்பிள்ளை பாக்க ஆரம்பிச்சிட்டேன் ஜெய்னம்பு” என்று சொல்ல, அங்கே ஒரு தர்மசங்கடமான அமைதி நிலவியது.

“என்ன காக்கா சொல்றியோ? இந்தக் காலத்துல பொம்பளப் புள்ளயளுவோ என்னென்ன படிப்பெல்லாம் படிக்குதுவோ. எம்புட்டுப் பெரிய வேலலெல்லாம் இருக்குதுவோ. நீங்க என்ன, படிக்க வக்கதுக்கே இப்படி யோசிக்கிறியோ?”

”வேற என்ன செய்யம்மா? நீயே பாரு, ஒரே எங்கப்பாத்தாலும், அந்தூட்டுப் பிள்ள இவன்கூட ஓடிப்போயிட்டு, இந்தூட்டுப் புள்ள அவன்கூட ஓடிப்போயிட்டுன்னுதான் ஊருல பேச்சாக் கிடக்கு. அதுவும் இப்பும்லாம், கல்யாணம் ஆன பிள்ளையளே ஓடிப்போவுதுவோ. நீ வெளிநாட்டுல இருக்கதுனால உனக்கு வெவரம் கிடக்கலபோல. அந்தப் பிள்ளையளும் படிச்சதுகதான்.”

“அஸ்தஃபிருல்லாஹ்!! இந்தப் பிள்ளையளுக்கு ஏன் இப்படி கூறுகெட்டுப் போச்சு?” என்று ஆதங்கத்துடன் சொன்னாள் ஜெய்னம்பு. ”சரி, அதுக்கும் நம்ம வீட்டுப் புள்ளய படிக்க வக்கதுக்கும் என்ன சம்பந்தம்? நம்ம பிள்ளைய நாமே நம்பாம இருக்கலாமா?”

“என்ன ஜெய்னம்பு நீ பேசுற? படிக்க பிள்ளையள வழிகெடுக்கதுக்குன்னே ஒரு கூட்டம் இருக்குது. பொம்பளப் பிள்ளையள வளத்தமா, கட்டிக்குடுத்தமான்னு நம்ம கடமைய முடிச்சமான்னுகூட இப்பம் இருக்க முடியல. அம்புட்டு தலாக்கு நடக்குது ஊருல. அதுக்கும் புள்ளெயளு படிக்கதத்தான் காரணம் சொல்றா.”

“இதென்ன விவரங்கெட்டத்தனமா இருக்கு? படிச்சா பிள்ளைகளுக்கு திமிர் கூடும்னு சொல்ற மாதிரில்ல இருக்கு இது? தப்பு பண்ற பிள்ளைக எதனால அப்படிச் செய்யுதுவோன்னு பாத்து அதுகளத் திருத்த வழிபாக்காம, மொத்தமா, அம்புட்டுப்பேரையும் தண்டிச்சா எப்புடி காக்கா?”

”இதுல என்ன தப்பு? படிக்கதுனாலத்தான ரொம்ப விவரந் தெரிஞ்சுபோவுது இதுகளுக்கு. இப்ப எல்லாம் காலெஜில ஆம்பள, பொம்பள சேந்து படிக்குதுவோ. பயலுவோகூட வரமுறயில்லாமப் பழவுறது. அப்புறம் அந்தப் பயலுவோ குடுக்க தைரியத்துல இதுக இப்படி ஒரு காரியத்தைச் செய்யத் துணியுதுவோ. அதனால, படிக்க வக்காம இருக்கதுதான் சரி. வேணுன்னா, மார்க்கக் கல்வி படிக்கட்டுமே? குடும்பம் நடத்த மார்க்கம் தெரிஞ்சாப் போதாதா?” இடையில் விழுந்து ’கருத்து’ சொன்னான், இளந்தாரியான கரீம்.

“அதானே? காணாததுக்கு இந்த செல்ஃபோனும், கம்ப்யூட்டரும்!! அதுக அதுல என்ன செய்யுதுன்னு உம்மாமாரும் கவனிக்கதே இல்ல..” பாய்ந்தது இன்னொரு வீரன், ஜலீல்.

“ஆகக் கடைசியில, எல்லாத் தப்புக்கும் காரணம் பொம்பளைகதான்னு வழக்கமா வர்ற முடிவுக்கு வந்தாச்சா?”; ”பையங்க மட்டும் என்னவாம்? நாலஞ்சு மாசத்துக்கொருக்க மாத்திக்கிற லேட்டஸ்ட் மொபைல் என்ன, காஸ்ட்லி வாட்ச் என்ன, பிராண்டட் ஷர்ட்-பேண்ட் என்ன, பல்ஸர் பைக் என்ன..”;  “எங்க அடுத்தூட்டு மம்மாத்து மூணு புள்ளை பெத்ததுக்கப்புறம், எவனோடயோ ஓடிப்போச்சு. அவ எந்த காலேஜில படிச்சா? மழைக்குக்கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவ அவ.”  பெண்கள் தரப்பிலிருந்தும் கொதிப்புடன்  பதில்கள் வந்தன.

“அடடா.. இருங்க.. இருங்க.. இப்படி ஒருத்தர ஒருத்தர் மாத்தி மாத்தி குத்தம் சொல்லிகிட்டா, எல்லாம் சரியாகிடுமா? சரி, இப்ப காலேஜில படிச்சா உடனே காதல் வந்துடும்னு என்ன கட்டாயம்? நூறு பேர் படிச்சா, ஒண்ணுரெண்டு அப்படி இருக்கும். அதிலும்கூட, நம்ம வளர்ப்பு சரியா இருந்து, இஸ்லாம்ங்கிற வாழ்க்கை நெறியை சரியாப் புரிஞ்சுகிட்டா, பாதிப் பிரச்னை தீர்ந்துடும்.” ஜெய்னம்பு சற்றே நிறுத்தினாள்.

காத்திருந்த கரீம், “அதத்தான் நாங்களும் சொல்றோம். மதரஸா போதும், காலேஜ்லாம் வேண்டாம்னு.”

“ம்க்கும்.. நம்ம பஹ்ரைன் சாச்சா மகன் ஜெய்லானி தெரியுமா சாச்சி? ‘படிச்ச புள்ளன்னா திமிரா நடக்கும், ஓதுன பொண்ணுதான் வேணும்’னு சொல்லி,  மதரஸாவில ஓதி, அங்கேயே வேலைபாக்ற நஸ்ரினைக் கட்டினான்.  பெண்கள் சம்பாத்தியம் பெண்களுக்கேன்னு குர் ஆன்ல சொல்லிருக்குதுல்ல. அதைச் சுட்டி,  சம்பளத்தக் கணவனிடம் தரத் தேவையில்லனு நஸ்ரின் சொல்ல, ‘அப்படின்னா, வேலைக்கே போவேணாம்’னு ஜெய்லானி சொல்ல... இப்படியே ஆரம்பிச்சு ரெண்டு பேருக்கும் சண்டை. மதரஸாவோ, காலேஜோ.. பெண்களுக்கு இப்ப விழிப்புணர்வு அதிமாகிட்டதைப் பொறுக்க முடியாதவங்கதான், இப்படிலாம் சட்டம் போடுறது” ஃபாயிஸா பதிலுரைத்தாள்.

“ஆமா, பெரிய விழிப்புணர்வு.. எதுக்கெடுத்தாலும் வூட்டுல ஆம்பளைங்ககிட்ட மல்லுக்கு நிக்கது.. நம்ம உம்மாமாரெல்லாம் படிக்கவா செஞ்சாங்க? அழகா, வாப்பாவுக்கு, மாமா-மாமிக்கு அடங்கி குடும்பம் நடத்தலையா? இந்தக் காலத்துலதான், படிக்கிறேன், படிக்கிறேன்னு சொல்லிட்டு, இவளுவோ செய்ற அட்டகாசம் தாங்க முடியல..” நாட்டமை பாணியில் நாசர் சொல்ல, ஜெய்னம்புக்கு இவ்வளவு நேரம் இருந்த பொறுமை போய், கோபம் வந்துவிட்டது.

“படிச்சாதான் திமிர் வரும், அட்டகாசம் பண்ணனும்னு இல்லை. படிக்காமலயே அப்படி இருக்கவங்களும் உண்டு.   படிக்கிறது நம்ம அறிவை விசாலமாக்க. கல்விங்கிறது ஆணுக்கு மட்டும்தான்னு இஸ்லாத்துல எங்கயும் சொல்லல. மார்க்க அறிவு, உலக அறிவு இரண்டையும் அறிஞ்சுதெரிஞ்சு, வாழ்க்கைக்கு, குடும்பத்துக்குத் தேவையான விஷயங்கள்ல சரியாப் பயன்படுத்திக்கறதுலதான் படிச்ச புள்ளையோட திறமையே இருக்கு. இது புரியாத சிலர், தப்பு பண்றாங்க. அதுக்காக, படிக்கவே கூடாதுன்னா எப்படி? படிக்க வைங்க, கூடவே இஸ்லாமையும் சரியாச் சொல்லிக் கொடுங்க. அதுக்கு, முதல்ல பெற்றோர் சரியான இஸ்லாமிய அறிவோட இருக்கணும். எத்தனை பெற்றோர் இங்க அப்படி இருக்காங்க சொல்லுங்க? அதுதான் முதல் தப்பு. இஸ்லாம்னா, தொழுறது, நோன்பு பிடிக்கிறது, பர்தா போட்டுக்கிறது அப்படின்ற அளவுலதான் நிறைய பெண்கள் இருக்காங்க. உங்க வீட்டுப் பெண்கள் அப்படி இருக்காங்கன்னா, தவறு வீட்டு ஆண்கள் மேலத்தான். ஏன் அவங்களுக்குத் தெரியாததைத் தெரிஞ்சுக்க வழிவகைகள் செஞ்சுக் கொடுக்கல?”

“எங்க? சமைக்கிற நேரம் போக, டிவியே கதின்னு இருந்தா எப்படித் தெரியும்?”

“எல்லாரும் பொதுவாச் சொல்ற குற்றச்சாட்டு இது. ஆண்களும் டிவி பாக்கிற விஷயத்தில் திருந்த வேண்டியிருக்கு.  பெண்களுக்கு ஃப்ரீடைம் நிறைய இருக்கதால டிவியில் அதிகம் ஈடுபாடு காட்டறாங்க. அந்த நேரத்தை அவங்க ஆர்வத்துக்கேத்த மாதிரி, பயனான விஷயத்துல கவனம் செலுத்த வசதி செஞ்சு கொடுங்க. உங்க பிஸினஸ்களில், ஆஃபீஸ் வேலைகளில்கூட சிறிய அளவில் உதவச் சொல்லலாம். நிறைய வீடுகள்ல, ஆண்கள் வீட்டுக்கு வர்றதே, சாப்பிடவும், தூங்கவும்தான். மனைவிட்ட மனசுவிட்டுப் பேசுறதே கிடையாது. வெளியே நாலு இடத்துக்கு வேலையாப் போயிட்டு வர ஆண்கள், தம் மனைவியிடம் தான் பார்த்த இடம், ஆட்களைப் பத்திப் பேசுனா, அவங்களுக்கும் டிவி-சினிமாவுல வர்றது போல, உலகம் அவ்வளவு சொகுசு கிடையாதுன்னு புரியும். மேலும், உங்க வேலையின் தன்மை, அதிலுள்ள கஷ்டநஷ்டம் புரியும். பாசம் கூடும். அவங்களையும் பேசவிட்டுக் கேளுங்க.”

“இதெல்லாம் தெரிஞ்சுக்கிறதுக்கும், நாம பேசுற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்?” அத்துலக் (அப்துல் ஹக்) சின்னாப்பாதான் எரிச்சலோடு கேட்டார்.

“இப்படித்தான் சின்னாப்பா, நிறைய ஆம்பளைங்க புரியாம இருக்கீங்க. முதல்ல கணவன் -மனைவிக்குள்ள அண்டர்ஸ்டாண்டிங் இருக்கணும். ஒரு கணவன், தன் வருமானம், செலவுகள், சேமிப்பு, கடன், நட்புனு எல்லாத்தையும் தன் மனைவிகிட்ட மறைக்காமச் சொல்லணும். முடிஞ்சா அவ ஆலோசனையையும் கேட்டுக்கிடணும். இது அவங்களுக்கிடைல பந்தத்தை இறுக்கமாக்குறதோட, மனைவிய தன் வருமானத்துக்குள்ள குடும்பம் நடத்த வைக்கவும் உதவும். இப்படி இல்லாம, மனைவிய வேலைக்காரி போல நடத்துனா, அவ படிச்சா என்ன படிக்காட்டி என்ன - மனசு வெறுத்துதான் போகும். இந்தச் சமயத்துல, யாராவது கொஞ்சம் சிநேகமாப் பேசினாலும், தெளிவில்லாதவங்க தவறு செய்ய வாய்ப்பாயிடுது. இப்படி ஆம்பளங்கட்டயும் தப்பை வச்சுகிட்டு, பெண்களை மட்டும் குத்தம் சொன்னா எப்படி?”

“அது சரி. இப்ப நாம பேசிகிட்டிருக்கது, படிக்கிற புள்ளைங்க ஓடிப் போறதுபத்தி..” கரீம் முடிக்குமுன், ஜெய்னம்பு தொடர்ந்தாள்.

“இதச் சரின்னு நீ ஒத்துகிட்டதே சந்தோஷம். எப்பவும் ஃபவுண்டேஷன் ஸ்ட்ராங்கா இருந்தா, பில்டிங்கும் ஸ்ட்ராங்கா இருக்கும். தெளிவான இஸ்லாமிய சிந்தனையோடும், தங்களுக்குள்ள இறுக்கமான பாசத்தோடயும் இருக்க பெற்றோர்கள் வளர்க்கிற பிள்ளைகளும், அதே தெளிவோட இருப்பாங்க. தப்பு செய்ய மாட்டாங்க.  பெத்தவங்களுக்கும் பிள்ளைகளின் நண்பர்கள் யாராரு, ஈ-மெயில், ஃபேஸ்புக் அக்கவுண்ட்களின் பாஸ்வேர்ட் நிச்சயம் தெரிஞ்சிருக்கணும். இதையெல்லாம் உங்ககிட்ட தயக்கமில்லாமப் பகிர்ந்துக்கிற அளவுக்கு நீங்க அவங்ககிட்ட அந்நியோன்யமாப் பழகணும்.  ஃபேஸ்புக்கில என்ன பண்றாங்கன்னு மேலோட்டமா பாக்கற அளவுக்காவது பெற்றோர்கள் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக்கணும்.  பிள்ளைக மேலே கொஞ்சம் கண்காணிப்பும்  இருக்கணும். அதுக்காக, எப்பவும் அவங்க தோள் பின்னாடி நின்னு எட்டிப் பாத்துகிட்டே இருக்கணும்னு சொல்லல. சுதந்திரமோ, கட்டுப்பாடோ, ரெண்டுமே அளவோட இருக்கணும். அளவுக்கு மிஞ்சினா, அமிர்தமே நஞ்சில்லியா?”

“ஆமா, ஒரேடிக்குக் காலைக் கட்டிப்போட்டா, புள்ளையளுக்கும் எரிச்ச வராதா?” ஆமினா மாமி.

“இதயும் மீறி, ஒண்ணுரெண்டுபேர் காதல்,கத்தரிக்கானு போகலாம். அப்படிப் போனா, உடனே தாம்தூம்னு குதிக்காம, கூப்பிட்டு வச்சிப் பேசுங்க. பிள்ளைக சந்தோஷமும் முக்கியம்தானே? பையனோ, குடும்பமோ, சூழ்நிலைகளோ சரியில்லன்னா, எடுத்துச் சொல்லுங்க. புரிஞ்சுக்கிடுவாங்க. இல்லன்னாலும், சமாளிக்க நிறைய வழிகள் இருக்கு. சம்மதமில்லாம வேற மாப்பிள்ளைக்குக் கட்டிக் கொடுக்கதுதான் இந்த மாதிரி தவறான முடிவெடுக்க வைக்கும்.”

யாரும் ஒன்றும் பேசாமல் இருக்க, இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த வேண்டிக் கேட்டாள். “சரி, பொண்ணுங்க படிச்சதுனால ஓடிப்போறாங்கன்றது ஒரு வாதத்துக்கு சரின்னு வச்சுகிட்டாலும், கூடப் போற முஸ்லிம் பையங்களும் படிச்சவங்கதானே? கரீம் சொன்ன மாதிரி, அவங்க குடுக்கிற தைரியம்தானே, பொண்ணுகள எதுவும் வேணாம்னு உதறிட்டு வர வைக்குது? அப்ப ஆம்பளப் பசங்களுக்கும் படிச்ச திமிர் இருக்குதா இல்ல மார்க்க அறிவு இல்லையா? அந்தப் பசங்க செஞ்சத எப்படி நியாயப் படுத்துவீங்க? சொல்லுங்க?”

“தப்புதான். ஆனா, ஒரு ஆம்பள இத ஈஸியா தாண்டிப் போயிடமுடியும்...” நாஸர் முடிக்குமுன் ஜெய்னம்பு இடைமறித்தாள்.

“ஆங், இதத்தான் “ஆம்பளைன்னா சேறு கண்ட இடம் மிதிச்சு, தண்ணி கண்ட இடம் கழுவுவான்”ன்னு சொல்வாங்க. இந்த எண்ணந்தான் முதல்ல  மாறணும்.  இந்த மாதிரி பேச்சுகள்தான், பையங்களுக்கு தப்பு பண்ணிப் பாக்கலாம்கிற தைரியத்தைக் கொடுக்குது. இந்த உலகத்துக்கு இதுசரி வரும். ஆனா, முஸ்லிம்களுக்கு, நாம செய்ற நல்லது கெட்டது எல்லாத்துக்கும் நாளைக்கு மஹஷர்ல ஆண்டவன்ட்ட பதில் சொல்லியே ஆகணுமே? இஸ்லாத்தில, ஆம்பளை, பொம்பளை எல்லாருக்கும் ஒரே கேள்வி கணக்குதான்கிற அச்சம் பையங்களுக்கும் இருக்கணும். தப்புப் பண்ற பெண்களைக் குற்றப்படுத்துவதுபோல, உடந்தையாருக்க பையங்களுக்கும் தண்டனை கொடுக்கணும். அப்பத்தான், இனியும் இது நடக்காது. இல்லன்னா, ”உங்களில் சிலரை, சிலரைவிட மேன்மையாக்கி வைத்திருக்கிறோம்”னு அல்லாஹுத்தாலாவால கூடுதல் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும் ஆண்கள், அதைத் தவறுகள் செய்றதுக்குக் கொடுத்த உரிமையா நினைக்கிற அளவு சமூகம் பொறுப்பில்லாம இருக்குதுன்னு அர்த்தமாகாது?”

”அதில்ல சாச்சி, பிராக்டிகலாப் பாத்தா, பாதிப்பு ஆணைவிட பெண்ணுக்குத்தானே அதிகம்?”

”இல்லைன்னு சொல்லல. ஒரு முஸ்லிம் ஆண் தப்பு செஞ்சாலும், அங்கயும் பெற்றோர்கள் இணக்கம்-வளர்ப்பு முறை-இஸ்லாம் அறிவு- சரியில்லன்னுதான் அர்த்தம். நான் மேலே சொன்ன ரூல்ஸ் ஆண்பிள்ளைகளுக்கும்தான். ஆம்பளப் பிள்ளன்னு பெருமைய்யா கண்டிக்காம இருந்துட்டு, நாளைக்கு அவன் நரகத்துக்குப் போவ பெத்தவங்களும் ஒரு காரணமாயிடக்கூடாது.”

“என்னத்த சொல்லி என்ன, முஸ்லிம் பயலுவோகூடப் போனதுபோயி, இப்பம் மத்த மதத்துக்காரன்கூடயுமில்லா போவ  ஆரம்பிச்சுட்டாளுவ? ஏற்கனவே டாக்டர்மாரெல்லாம் பணத்தாசையால சிஸேரியனாச் செஞ்சி, நம்ம சனத்தொகையைக் குறைக்கப் பாக்குறாவ. இப்ப இதுவும் அதிகமாகிடுச்சுன்னா?”  வேற யார் இப்படி யோசிக்க முடியும்? அத்துலக் சின்னாப்பாதான்.

“அட ரஹ்மானே!!  சிஸேரியன் அதிகமாறதுக்கு இந்தக்காலத்து உணவுப் பழக்கங்களும், உடற்பயிற்சியே இல்லாத வாழ்க்கைமுறையும்தான் முக்கிய காரணம்.  ஆப்ரேஷன்ல அனஸ்தீஷியா உட்பட நிறைய ரிஸ்க் இருக்கதனால, நினச்சமேனிக்குப் பண்ணிட முடியாது.  டாக்டர்ஸ் கவனமாத்தான் இருப்பாங்க. அப்படில்லாம் அநியாயமாப் பேசக்கூடாது.” சொல்லிவிட்டு, யாரும் பதிலுரைக்க முற்படுமுன், அர்த்தம் பொதிந்த கேள்வியை முன்வைத்தாள்.

”சரி, மாற்றுமத டாக்டர்ஸ் பிரசவம் பாக்கறதனாலத்தானே இப்படிப் பழி சொல்றீங்க. அப்ப ஏன் நாம நம்ம பெண்பிள்ளைகளப் படிக்க வெச்சு டாக்டர் ஆக்கக்கூடாது?” ஊஹூம்... மூச்... பதிலில்லை!! ஜெய்னம்புவே தொடர்ந்தாள். 

“நம்ம பிள்ளைக படிக்கவுங்கூடாது. ஆனா, நமக்கு சேவை செய்றவங்களையும் நாம குத்தம் சொல்வோம். அப்படித்தானே? நாம படிச்சு, எல்லாத் துறைகளிலும் கால்பதிச்சா, மத்தவங்ககிட்ட இதுபோல எதையும் எதிர்பார்க்காம, நம்ம மக்களை நாமளே காக்க முடியுமே? அந்தக் குறிக்கோளுக்காக நம்ம சமுதாயத்து ஆண், பெண் எல்லாரையும் முழுமுனைப்போடு தயார்படுத்துறத விட்டுட்டு, சின்னச் சின்ன தப்புக்கெல்லாம் பயந்து, இப்படி கட்டுப்பெட்டித்தனமா கட்டுப்பாடுகள் விதிச்சா, நஷ்டம் நம்ம சமூகத்துக்குத்தான். “எந்த ஒரு சமுதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக்கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை”னு அல்லாஹ் சொல்லிருக்கான். புரியறவங்க புரிஞ்சிப்பாங்க.” முத்தாய்ப்பாய்ச் சொல்லிவிட்டு எழுந்தாள் ஜெய்னம்பு.

“நான் புரிஞ்சுகிட்டேம்மா” கஃபூர் காக்காவின் பதிலில், ஒரு டாக்டரை உருவாக்கும் உறுதி தெரிந்தது, அல்ஹம்துலில்லாஹ்!!

Post Comment

டாக்டர் அடிச்ச கொட்டுமேளம்







மருத்துவமனை போக வேண்டியிருந்தது. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போனாலே, குறைஞ்சது ஒருமணிநேரமாவது காவல் காத்தாத்தான் ”தரிசனம்” கிடைக்கும். நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ்சிட்டாங்களான்னு புரியலை. அதனால், ஒவ்வொரு ஹாஸ்பிட்டலா கூப்பிட்டு, டாக்டர் யாராவது நம்ம வசதிப்படி ‘ஃப்ரீயா’   இருக்காங்களான்னு கேட்டப்போ, ஒரே ஒரு ஆஸ்பத்திரியில மட்டும் இருக்காங்கன்னு சொன்னாங்க.  அதுவும், இந்திய டாக்டராம். ஹை, டபுள் டமாக்கான்னு நினைச்சுகிட்டே பேரைக் கேட்டேன்.

வேற நாட்டு டாக்டரா இருந்தா, மொழிப் பிரச்னை என்பதால்தான் இந்திய டாக்டரா தேடுறது.  அப்புறம் ‘ஜீன்ஸ்’ பட லட்சுமிப்பாட்டிக்கு நடந்த மாதிரி, இடது மூளைக்குப் பதிலா வலது மூளைல ஆபரேஷன் பண்ணி வைக்கவா?  எனக்கு இருக்கிறதே ஒரேயொரு ‘குட்டி’ மூளை.  ஏன்னா, ஒண்ணு நான் பேசுற ‘இங்லிபீஸ்’ அவங்களுக்குப் புரியாது; அல்லது,  அவங்க பேசுற ’அரபுலீஸ்’ எனக்கு தகராறு ஆகும்.   இதுவாவது பரவால்ல, டாக்டர் ஆங்கிலத்தைத் தாய்மொழியா கொண்ட நாட்டவரா இருந்துட்டா இன்னும் சிக்கல். அவரோட ’தூய’ ஆங்கிலம் நம்ம ‘சிற்றறிவுக்கு’ ..ஊஹூம்.... பிரியவே பிரியாது!!

இந்த யோசனையில இருந்ததாலயோ என்னவோ, ஃபோன்ல பேசுன ‘ஃபிலிப்பைனி’ மேடம் சொன்ன பேரைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஒரு எச்சூஸ்மி போட்டு, மறுக்காச் சொல்லச் சொன்னா.. என்ன பேர் இது? “ஏஸிசாய்”!!  இப்படி ஒரு இந்தியப் பேரா? ஒரு வேலை கோவாக்காரப் பெண்ணா இருப்பாரோ டாக்டர்?

இப்படித்தான், ரொம்ப நாள் முன்னாடி, வேறொரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் பேரை, “டேங்காமேனி போன்யா” என்றார் இன்னொரு ஃபிலிப்பைனி அக்கா. போய்ப்பார்த்தால், அவர் “தங்கமணி பொன்னையா”!! அதுலயும் அக்மார்க் தின்னவேலிக்காரர் வேற.  நல்லவேளை, அவர் பேர் “நேசமணி பொன்னையா” இல்லை; இருந்தா, அதையும் கவுண்டமணி மாதிரி, ’நாசமா’ ஆக்கிருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன்.  சரி,அந்த அதிர்ச்சியையே தாங்கிட்டோம். இது முடியாதான்னு நினைச்சுகிட்டு ஆஸ்பத்திரி போனேன்.

அதான் சொன்னோம்ல, அவங்க பேர் என்ன தெரியுமா? எனி கெஸ்?

அவங்க பேர் “ஏழிசை”!!  பக்கா தமிழச்சிங்க .. அட.. தமிழ்நாட்டவங்கன்னு சொன்னேன்!!  ஆங்கிலத்துல பேரை ”Ezhisai" னு எழுதினதால வந்த வினை!! அட, ரஹ்மானேன்னு நொந்துகிட்டு, பரிசோதனைலாம் முடிஞ்சப்புறம் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, டீனேஜர்ஸ் பத்தி பேச்சு வந்துது.  அவர்களின் லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதான மோகம், எதிர்வாதங்கள், வீட்டு வேலைகளில் பங்கெடுத்தல் குறித்த எதிர்ப்புகள் இப்படி பேசிக்கிட்டிருந்தோம்.  எனக்கும் டீனேஜ்ல ஒரு வாரிசு இருக்கதால, நானும் கொஞ்சம்  புலம்பினேன்.

அப்ப அவங்க எதிர்கொண்ட சில நிகழ்வுகளை உதாரணமாச் சொன்னாங்க.

அபுதாபியில் அவரது டீனேஜ் மகளின் இந்தியத் தோழி அபுதாபியில் தன் பெற்றோர் வாங்கிய புதிய வீட்டுக்கு குடிபோயிருப்பதாகச் சொன்னாளாம். குறிப்பிட்ட அந்த ஏரியாவில், வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாதென்பதுகூட அவளுக்குத் தெரியவில்லையே என்று மகள் சொல்ல, வாடகைக்கு வீடு எடுப்பதற்கும், சொந்த வீடு வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாமல் அவளை வளர்த்திருப்பது பெற்றோரின் தவறே என்று அவர் சொன்னாராம்.

விடுமுறைக்கு தமிழகம் சென்றிருந்தபோது, அதற்கு மூன்றே மாதங்கள் முன்னர் நடந்த இரு திருமணங்களுக்கான பரிசுபொருட்களுடன் இரு தம்பதியரையும் சந்திக்கப் புறப்பட்டால், அதிர்ச்சி.. இரு ஜோடிகளுமே பிரிந்துவிட்டிருந்தனர் என்று தகவல் வந்ததாம்!! அவர் கணித்த காரணம், செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது.

இன்னொண்ணும் சொன்னார். சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிறதில்லை. பின்னாளில் அவன் மேல்படிப்பு/வேலை விஷயமா, வெளிநாடுகளில், தன் அறைத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம் வரும்போது, எதுவுமே தெரியாததால் பாத்திரங்கள்/அறை சுத்தம் செய்யும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த வேலையில் தவறில்லை என்றாலும், இந்தச் செல்லப் பிள்ளைகளுக்கு அதுவும் அவமானமாகத் தெரியும். மேலும், சிலரால், ’கைப்புள்ள’ ரேஞ்சுக்கு நடத்தப்படுகிறார்கள்.

இப்படிப் பலதும் பேசிட்டு, கடைசியில் அவர் சொன்னார், “நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ”நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். அதனால், குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது  பெற்றோர்களின் கட்டாயக் கடமை”  என்று முடித்தார்.

வீட்டுக்கு வந்து, என்னவரிடம், இதையெல்லாம்சொன்னேன். பின்னே, அவர்தானே எனக்கும் பெரியவனுக்கும் நடுவுல ‘அம்பயர்”!!  ”கேட்டீங்களா? நானும் இதத்தானே தெனைக்கும் சொல்வேன் வீட்டில, யார் கேக்கிறீங்க? படிச்ச டாக்டரே அதத்தான் சொல்றாங்க பாருங்க. இனிமே  நீங்க என்ன சொன்னாலும், நான் சொல்றதச் சொல்லத்தான் செய்வேன்”னு பெருமையாச் சொல்லிகிட்டேயிருக்க...

பாருங்க, பாருங்க, நான் என்ன பல்பு வாங்கினேன்னு ஆவலா நீங்க எல்லாரும் தேடுறீங்க... ஹூம்...

கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”


Post Comment