Pages

டிரங்குப் பொட்டி - 27

சமீபத்தில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் அடிப்படையில், இயற்கை விவசாயத்தால் விளைந்த உணவுப்பொருட்களும், ரசாயன உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப் பொருட்களும் ஒரே அளவிலான சத்துக்கள் கொண்டவையே. இயற்கை விவசாயத்தால் அதிகப்படி சத்துக்கள் ஒன்றும் கிடைப்பது இல்லை என்பதாக ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்கள். இதையொட்டி,  பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்றவாறு மொத்த உணவு உற்பத்தி செய்வது ரசாயன உரங்களினால்தான் சாத்தியப்படும் என்று ஒரு கட்டுரை New York Times பத்திரிகையில் எழுதப்பட்டிருந்தது. இதன் வலைத்தளக் கருத்துப் பகுதியில் வாசகர்கள் “அதிகச் சத்துக்கள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை; நஞ்சுகள் இல்லாத உணவே வேண்டும்” விளாசித் தள்ளிவிட்டார்கள்.

‘சத்யமேவ ஜெயதே’யில் அமீர் கானும், இயற்கை விவசாயத்தை ஆதரித்து ஒரு நிகழ்ச்சி நடத்தினார். அவர், அமீரகத்திற்கு வந்திருந்தபோது, ஒரு பத்திரிகையில் ‘இந்தியா குறுவிவசாயிகளின் நாடு. அதனால்தான் இயற்கை விவசாயம் இங்கு சாத்தியமாகிறது’ என்கிற தொனியில் பேட்டியளித்திருந்தார்.


அப்படின்னா, பலநூறு ஏக்கர் பரப்புள்ள பெரிய விவசாய பண்ணைகளில் இயற்கை விவசாயம் சாத்தியமில்லை என்று கூறப்படுவது சரிதானோ?


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Food garnishing & Food carving: ”உணவு அழகுக்கலை” - அப்படின்னு தமிழ்ல சொல்லலாமா? எல்லா சமையலறைகளிலும், இந்த ‘கார்னிஷிங்’ என்பது வேகமாப் பரவிகிட்டு வருது. முன்பெல்லாம், கொஞ்சம் மல்லி இலையை மேலாகத் தூவிவிடுவது என்றளவில் இருந்தது, இப்போ அதுக்குன்னே தனி கருவிகள்,  தனிப் பயிற்சி வகுப்புகள் நடக்குமளவு ‘வளர்ந்து வரும்’ கலையாகிவிட்டது. அழகுணர்ச்சியை வளர்க்கும், பசியைத் தூண்டி ருசிக்க வைக்கும் கலை என்றாலும் இதிலும் உணவுப்பொருட்கள் வீணடிக்கப்படுவதே அதிகம்.


இதோ இந்த தர்பூசணியில் ரோஜாப் பூக்களைப் பார்க்கும்போது, உங்களுக்கு என்ன தோன்றுகிறது? எனக்கு,  பூ செய்யும்போது  வெட்டிப் போட்ட பழத்தை வேஸ்ட் பண்ணாமச் சாப்பிட்டிருப்பாங்களா, இந்தப் பூ(பழம்)வையும் இப்படியே வச்சு, பிறகு வீணாக்கிடக் கூடாதேன்னுதான் தோணுது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்ச்சிகளில் (food festival) அதுதான் நடக்கிறது.
-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

நம்ம ஊரில், கட்சிக் கூட்டங்களுக்கு, உண்ணாவிரதத்துக்கு ஆட்களைக் கூட்டி வந்து பலத்தை ’நிரூபிப்பார்கள்’! நம்ம ஊர்லதான் இப்படி, வெள்ளைக்காரங்கள்லாம் அப்படி கிடையவே கிடையாதுன்னு நம்புற வெள்ளை மனசுக்காரங்க நாம.


வெளிநாட்டுக் கட்சிக் கூட்டத்தை விடுங்க. ட்விட்டர்லயே ஆயிர-லட்சக்கணக்கில் பின் தொடர்பவர்கள் வைத்திருப்பவர்கள், எல்லோருக்குமே அது ‘தானா’ வந்தவங்க கிடையாதாம். ‘வாங்கின’ கூட்டமாம்!! வாங்கித்தருவதுக்குன்னே
நிறைய தளங்கள் இருக்காம். விலையும் ரொம்ப சல்லிசுதான் - அஞ்சு டாலருக்கு, ஆயிரம் பேர்!!

ப்ளாக்குக்கும் இந்த மாதிரி (தமிழ்) ஃபாலோயர்ஸ் மொத்தமா கிடைப்பாங்களான்னு விசாரிக்கணும்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனின் தனிப்பட்ட படங்களை ஐரோப்பாவில் சில பத்திரிகைகள் வெளியிட்டுள்ளதைக் கண்டித்து, அரச குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்ததில், படம் வெளியிடுவதற்குத் தடை விதித்து, ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரவேற்கவேண்டியது.


அவதூறான செய்தி, படங்கள் வெளியிடுவதென்பதில் இரட்டை நிலை எடுக்காமல், நாடுகளும், நீதிமன்றங்களும் ஒரே நிலையைப் பின்பற்றவேண்டும்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


தேக்கடி படகு விபத்து மறந்திருக்காது. நடந்து மூன்று வருடங்களாகியும், இன்னும் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லையாம். காரணம் - அதில் சம்பந்தப்பட்ட இரு
அரசு (சுற்றுலாத்துறை) ஊழியர்களின் பெயர்களைச் சேர்ப்பதற்கு இன்னும் சம்பந்தப்பட்ட அரசுத்துறையின் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைச்சுட்டாலும்....

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
சீனாவுக்கும், ஜப்பானுக்கும் இப்ப நடக்கிற மோதலுக்குக் காரணம், இரு நாடுகளுமே சொந்தம் கொண்டாடும் ஒரு தீவு.  இந்தியா - பாகிஸ்தானுக்கு ஒரு காஷ்மீர் போல!! ஆனா, ஒரு வித்தியாசம், பிரச்னை இருந்தாலும், இரண்டு நாடுகளுமே அதை, காஷ்மீர் என்றுதான் அழைக்கின்றன. அங்கு சீனா பிரச்னைக்குரிய அந்தத் தீவை ‘டையாவூ’  என்ற பெயரிட்டு அழைக்க, ஜப்பான் அதை ‘சென்காகு’ என்றழைக்கிறது.  இப்ப சீனாவில் ஜப்பானிய தூதரகத்தின்முன் போராட்டம், ஜப்பானிய பணியாளர்களைத் திருப்பி அனுப்புவது என்று எதிர்ப்பு நடவடிக்கைகள் வலுக்கின்றன்.


நம்மளப் போலவேத்தான் மத்த மெத்தப் படிச்ச நாட்டுக்காரங்க(ன்னு சொல்லிக்கிறவங்க)ளும்னு தெரியும்போது, ஒரு அல்ப சந்தோஷம்.


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


’பர்ஃபி’ ஹிந்தி திரைப்படம்:   வழக்கமாக, படங்களிலும், நிஜத்திலும், ஆணுக்கு மனவளர்ச்சி குன்றியிருந்தாலும், காதல்-காமம் எல்லாம் இருக்கும்; திருமணமும் நடக்கும். ஆனால், அதுவே பெண் என்றால், அந்த உணர்ச்சிகளே இருக்காது - இருக்கக்கூடாது.  அந்த வகையில், நல்ல  முயற்சி.  படம் பார்க்கும்போது, இந்த மாதிரி படங்கள் தமிழில் வருவதில்லையே என்று தோன்றியது.  தமிழில் எடுத்திருந்தால், க்ளைமேக்ஸில் தாலி செண்டிமெண்ட் சீன் அல்லது பிரசவ சீன் வச்சு,  ஜில்மில் (ப்ரியங்கா) குறைபாடு நீங்கி, அக்மார்க் தமிழ்ப் பெண்ணாக ஆகியிருப்பாள்.  படமும், இன்னொரு ‘சின்னத்தம்பி’ ஆகியிருக்கும்.


’பர்ஃபி’ பார்த்து, ரெண்டு நாள் கழிச்சு என்னவர் கேட்டார், “இந்தப் படத்துல ப்ரியங்கா சோப்ரா நடிச்சிருக்காப்லயாமே.  கெஸ்ட் ரோலா? வரும்போது நான் தூங்கிட்டேனோ?”!!!!


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-


Post Comment

அவன்

காலையில் தோட்டத்திற்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக, வீட்டுக் கதவைத் திறந்தபோதுதான், வாசல் கேட்டின் ஓரமாக நின்றிருந்த அவனைக் கவனித்தாள். பார்க்கவே பரிதாபமான தோற்றத்துடன், கெஞ்சும் பார்வையுடன் நின்றிருந்தான்.

யாருக்கும் மனதில் ஈரத்தை ஏற்படுத்தும் காட்சி. அவளையும் ஒரு நிமிடம் தடுமாறத்தான் வைத்தது. உடலெல்லாம் அங்கங்கே காயங்கள் - இவனைப் போன்று ஊரில் அலையும் சில ரவுடிகளுடன் ஏற்பட்ட தகராறுகள் காரணாமாயிருக்கும். இங்கே அவளோடு வீட்டில் ஒன்றாக இருந்தவரை, புஷ்டியாகத்தான் இருந்தான். ஒருநாள் தன் புத்தியைக் காட்டப் போய், அவள் அவனை விரட்டியடித்தாள்.

அவன் தற்போது அவளுடன் இல்லை என்று தெரிந்ததும், அவ்வப்போது சில அக்கம்பக்கத்துப் பெருச்சாளிகள் வந்து குதறப் பார்க்கத்தான் செய்கின்றன. போன வாரம்கூட, இருட்டியபின் தோட்டத்தில் ஒரு பெருச்சாளி கள்ளத்தனமாக ஒளிந்து நிற்பதைப் பாத்து அலறவும், வழியே போன நல்லவர் ஒருவர் வந்து உதவினார்.  இப்படி எத்தனை நாளுக்கு அடுத்தவர் உதவியை எதிர்பார்க்க முடியும்?

இதற்காகவாவது அவனை வீட்டில் சேர்த்துக் கொள்ளலாம்தான். ஆனால், அந்தச் சிட்டுகள்? மகன்கள் பள்ளியிலிருந்து மாலை வரும்வரை, தனியே இருக்கும் அவளுக்கு, பகலில் அவள்வீட்டைத் தேடிவரும் அக்கம்பக்கத்துச் சின்னஞ்சிட்டுகள்தான் துணை. இதோ இன்னும் கொஞ்ச நேரம் போனால் எல்லாரும் வந்துவிடுவார்கள். தோட்டத்தில்தான் அத்தனை ஆட்டங்களும், பாட்டங்களும். இவள் கொடுக்கும் டிஃபனைக் கொறித்துக் கொண்டு, தண்ணீரையும் குடித்துக் கொண்டே விளையாட்டுகள் தொடரும்.

ஒருவரையொருவர் சீண்டிக் கொண்டும், துரத்திக் கொண்டும், பாடிக் கொண்டும், ஓடிக் கொண்டும், மண்ணைக் கிளறி விளையாடுவதென துறுதுறுவென்று அலையும் அந்த மொட்டுகள்தான் அவளின் நண்பர்கள்.  குறும்புக்கார பயல்கள், பிள்ளைகளைச் சீண்டுவதும், இப்பவே அப்படியா என்று அவள் அவர்களை ரசித்துச் சிரிக்க, அந்தப் பெண்குட்டிகள் நேக்காக  அவர்களைத் தவிர்க்கும் லாகவம் பார்த்து அதிசயப்படுவதுமாக அவள் நாள் கழியும்.  


மதிய நேரம், பக்கத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் இவர்கள் ஆட்டம் தொடரும். அங்கே மரத்தடிகளில் மதிய உணவருந்தும்நேரத்தில், மாணவிகளும் இவர்களோடு சேர்ந்து சிறகடித்து விளையாட,  அவர்கள் உணவையும்  சுவைத்துவிட்டு, பிறகு மீண்டும் மாலையில் இவள் தோட்டத்தில் தஞ்சமடைபவர்கள், இருட்டும்வரை அங்குதான் சுற்றிக் கொண்டிருப்பார்கள். 

இருட்டத் தொடங்கியதும், எல்லாரும் சிட்டாகப் பறந்து தத்தம் வீடு திரும்புவார்கள். இப்படி இவளுக்கு நேரம் போவதே தெரியாமல், தனிமை பயமில்லாமல் பார்த்துக் கொள்ளும் அவர்களை இவனுக்காக இழக்கவா? இவளிடமே இன்னும் தயங்கியேப் பழகும் அந்த பிஞ்சுகள், இவனைக் கண்டால் இனி இவள் வீட்டுப் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டார்கள்.

ஏற்கனவே அந்த கயவன் ஒருமுறை இவர்களிடம் எண்ணிப் பார்க்கவே இயலாத மாபாதகத்தைச் செய்யத் துணிந்ததன் விளைவாய்த்தான், விரட்டப்பட்டு, வீடிழந்து தெருக்களில் சுற்றிக் கொண்டிருக்கிறான். அந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்தச் சின்னஞ்சிறுசுகளிடம் நம்பிக்கையை மீட்டெடுக்க இவள் பட்ட பாடு!! இப்போது மீண்டும் வந்து நிற்கிறான். அவன் இருந்தால், எச்சில்காக்கைகளிடமிருந்து பாதுகாப்புதான். ஆனாலும், இவர்களை இழப்பதா!! குழம்பினாள்.

ஒரு உறுதியான தீர்மானத்திற்கு வந்தவளாய், கையில் கம்புடன் வாசலுக்கு வந்து, முன்பு குருவியைக் கவ்வித் தின்ற
அந்தப் பூனையை “ச்சூ... ச்சூ...” என விரட்டினாள்.

Post Comment

கவன ஈர்ப்பு
கவனத்தை ஈர்த்த சில செய்திகள்!!


ஊறிய கால்கள்!!
 சத்தியாக்கிரகம் தெரியும்; “ஜல சத்தியாக்கிரகம்” தெரியுமா?

மத்திய பிரதேசத்தில், கோங்கோல் என்ற ஊரில், நர்மதா ஆற்றின் இந்திரா சாகர் அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதால், தம் ஊரிலுள்ள வீடுகள், பயிர்நிலங்கள் மூழ்கப் போவதை எதிர்த்தும், அதற்குரிய நிவாரணங்களை முறையாக வழங்கக் கோரியும் அம்மக்கள் ஆற்றில் நின்று போராட்டம் நடத்திவருகிறார்கள். ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் அல்ல; 15 நாட்களுக்கு மேலாக, நாள்முழுதும் தண்ணீரிலேயே நின்றுக் கொண்டிருக்கிறார்கள்!! 

முதலில் நெஞ்சுவரை இருந்த நீர்மட்டம், தற்போது கழுத்து அளவு வந்துவிட்டது. மழையும் பெய்துவருகிறது. என்றாலும், மனம்தளராமல் நின்று போராடி வருகிறார்கள்.  மாநில பிஜேபி அரசு, 15 நாட்களுக்குப் பின்னரே தன் மந்திரிகளை அனுப்பி விசாரித்துள்ளது. எனினும் தம் கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை, காலவரையற்ற போராட்ட்டத்தைக் கைவிடப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

மகாராஷ்டிர மாநில தேசியவாத காங்., கட்சியைச் சேர்ந்த  அமைச்சர் லட்சுமணராவ் டோப்லே, ”கற்பழிப்புக்கு ஆளானவர்களுக்காக நியாயம் கேட்டு, நேரத்தை வீணடிக்கும்  போராட்டங்கள் நடத்துவதால், எந்த பயனும் இல்லை. பதிலாக, பாதிக்கப்பட்ட பெண்களின் குழந்தைகளுக்கு, முறையான கல்வியும், சட்ட நடைமுறைகளையும் கற்றுத்தர வேண்டும். பின்  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும். இதைவிடுத்து, போராட்டங்கள் நடத்துவது என்பது, வழக்கின் தீவிர தன்மையை குறைத்து விடும்” என்று கூறியுள்ளார்.

ரஜினி-சத்தியராஜ் நடித்த ’என்னம்மா கண்ணு சௌக்கியமா’ பாடல் இடம்பெற்ற   ”மிஸ்டர். பாரத்” படம் மாதிரியான நடவடிக்கைகள்தான் இந்த நாட்டுக்குச் சரிவரும்னு சொல்றாரு அரசாங்க மந்திரி!! :-(((

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

கூடங்குளம் அணு உலையை எதிர்த்து இன்று முற்றுகைப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்காக போராட்டக் குழுவினர், போராட்டத்தின்போது இறப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இது உண்மையெனில், என்ன சொல்ல வருகிறார்கள் இதன்மூலம்? 

விபத்துகளில் உயிரிழப்பு ஏற்பட்டால், அதுக்குன்னே காத்திருக்கும் அரசாஙகமே ஓடிவந்து உடன்ன்ன்னே பணம் தருமே. பின், இவர்களுக்கும் அரசிற்கும் என்ன வித்தியாசம்?

சிவகாசி வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் அரசு வழங்கிய நிகழ்ச்சியில், ஒரு சிறுமி, “பணம் வேண்டாம்; என் அப்பாதான் வேணும்” என்று அழுதாளாம்.

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

சிவகாசி வெடிவிபத்து நடந்த இடத்திற்கு வெகுஅருகில் அரசு பள்ளி ஒன்று இருக்கிறது. முதல் வெடிச்சத்தம் கேட்ட நேரம்,  உணவு இடைவேளை நேரம் சமீபத்திருந்தது என்பதால் குழந்தைகளை வெளியே விடாமல் ஆசிரியர்கள் பார்த்துக் கொண்டனர். விட்டிருந்தால், ஆர்வத்தின் காரணமாக விபத்தை வேடிக்கை பார்க்கச் சென்றிருப்பர். அடுத்து நடந்த வெடிப்பில் இவர்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம்!! 

மேலும் வெடிவிபத்தின் அதிர்வால் பள்ளி கட்டிடத்திலும் விரிசல் விழுமென்று எதிர்பார்த்து, மாணவர்களை கட்டிடத்தைவிட்டு வெளியேற்றி மைதானத்தில் வைத்துப் பாதுகாத்துள்ளனர் ஆசிரியர்கள்!! எதிர்பார்த்ததுபோலவே, விரிசலும் விழுந்துள்ளதாம்.

இதற்கிடையே  சாலை மோசமாக இருந்ததால், தீயணைப்புப் படையினர் வந்துசேரத் தாமதமாகியிருக்கிறது. இதுவும் நல்லதுக்குத்தானாம். ஒருவேளை சீக்கிரம் வந்திருந்தால், கடைசி வெடிப்பின்போது தீயணைப்பு வீரர்கள், அதனருகே இருந்திருப்பார்கள்!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-
 
அமெரிக்கா, தன் நாட்டில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள் என்று சொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்களை வெளியேற்றி வருகிறது.  மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்க நாட்டினரே இவ்வாறு குடியறியவர்களில் பெரும்பான்மை. என்றாலும், இவர்கள் அமெரிக்கா வந்தபின் பெற்ற பிள்ளைகள் அமெரிக்கக் குடியுரிமை கொண்டவர்கள் என்பதால், பல குடும்பங்களில் பெற்றோர் வெளியேற்றப்பட்டு, குழந்தைகள் அமெரிக்காவில் என குடும்பங்கள் பிரிக்கப்படுவதும் நிகழ்கிறது.

இந்நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்களிடையே  “அமெரிக்கர்கள் செய்யத் தயங்கும் கீழ்மட்ட வேலைகளை இவர்கள் செய்தார்கள். அவர்களை வெளியேற்றுவது துரோகச் செயல்” என்று ஆதரவும், “இவர்களால்தான் நாட்டில் குற்றங்கள் பெருகிவிட்டது; குறைந்த சம்பளத்தில் இவர்கள் வேலை பார்க்க முன்வருவதன்மூலம் மற்றவர்களின் வேலைவாய்ப்பில் குறுக்கிட்டார்கள். எனவே வெளியேற்றுவது சரியே” என்று எதிர்ப்பும் எழுந்துள்ளது.

இதெல்லாம் மற்ற நாடுகளில்தான் உள்ளது என்ற நினைப்பு இருந்தது. அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கில்லைபோல!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

இந்தியாவிலும், பிற நாட்டிலிருந்து குடியேறுபவர்கள் மட்டுமல்ல, பிற மாநிலங்களிலிருந்து குடியேறுபவர்களைக்கூட வெளியேற்ற வேண்டும் என்று சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்க, நம் அண்டை நாடான “பூடான்” சத்தமேயில்லாமல், 31 இந்தியர்களை தன் நாட்டிலிருந்து இதே சட்டவிரோதக் குடியேற்றக் காரணத்தால்  வெளியேற்றியுள்ளது!!

-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

நீதி தாமதமானாலும் சாகாது என்பதை மெய்ப்பிக்கும்விதமாக இரண்டு தீர்ப்புகள்: கசாப் மரணதண்டனை மற்றும் நரோடா பாட்டியா தீர்ப்புகள். என்ன, கசாப்  இனி அடுத்து ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புற சாத்தியக்கூறுகளைத் தடுக்கணும்.

 -=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-

Post Comment

தேவை இன்னொரு பசுமைப் புரட்சி!

த்தனை பேர் இந்தச் செய்தியைக் கவனித்தீர்களோ தெரியவில்லை. கவனித்தும், சிலருக்கு மனதில் பதியாமல் போயிருக்கலாம். காரணம், விலைவாசி உயர்வு என்பது நமக்கு ஒன்றும் புதிய செய்தி அல்லவே? தென்னை மரத்துல தேள் கொட்டினா பனை மரத்தில் நெறி கட்டும் கதையாக, ஏதேனும் ஒர் காரணத்தைச் சொல்லி, நித்தம் ஒரு விலை உயர்வு நடந்துகொண்டுதானே இருக்கிறது. ஆனால், இம்முறை ‘புலி வருது’ கதை இல்லை!! நிஜமாகவே புலி வந்தே விட்டது. அரிசி, கோதுமை போன்ற தானியப் பொருட்களின் தட்டுப்பாடும், தொடர்ந்து விலையேற்றமும் வருகிறது, பராக், பராக்!

சர்வதேச உணவு மற்றும் விவசாயக் கழகம், கடந்த ஜூலை மாதம் “உணவுக் குறியீடு” 213-ஆக உயர்ந்திருப்பதாகக் கூறியுள்ளது. இந்த உணவுக் குறியீடு என்பது, குறிப்பிட்ட அத்தியாவசிய உணவுப் பண்டங்கள் நிறைந்த ஒரு உணவுக் கூடையின் விலை. தற்போது ஒரே மாதத்தில் 6% அதிகரித்துள்ளதுதான் கவலைக்குரியது.

கடந்த 2008-ம் ஆண்டு இதேபோல உணவுத் தட்டுப்பாடும், தொடர்ச்சியாக விலைவாசி உயர்வும் இருந்தது நினைவிருக்கிறதா? அது மறந்திருக்கலாம், ஆனால் அந்தச் சமயத்தில் திருவாளர் ஜார்ஜ் புஷ், உலகில் உணவுப் பஞ்சம் ஏற்பட இந்தியர்களின் அதீத உண்ணும் பழக்கம்தான் காரணம் என்று திருவாய் மலர்ந்தாரே, அது மறந்திருக்காது! ஆனால், இந்த மற்றும் அடுத்த வருடம் அதைவிட மோசமான நிலை ஏற்படலாம் என்று ஐ.நா. எச்சரிக்கிறது.


டந்த 56 வருடங்களாக இல்லாத அளவிலான அமெரிக்காவின் வறட்சி இதற்கு ஒரு முக்கியக் காரணம். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப் பெருக்கும்கூட. இந்தியாவிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பெய்யாமல் பொய்த்துக் கெடுத்திருக்கும் பருவ மழை, ஐரோப்பாவில், சீனாவில், ஃபிலிப்பைன்ஸில் பெய்து கெடுக்கிறது. அங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

உணவுப் பயிர்களான சோளம் மற்றும் சோயாவை, இயற்கை எரிபொருளான ethanol தயாரிப்புக்காகத் திருப்பிவிட்டதும் பஞ்சத்துக்குக் கட்டியம் கூறிய இன்னொரு காரணம். சரி, இனி அந்தப் பயிர்களை உணவாக்கிக் கொள்ளலாமே என்றால், தற்போது விளைவிக்கப்படும் பெரும்பான்மையான பயிர் ரகங்கள் உண்ணத் தகுதியில்லாத, எரிபொருள் எடுக்க மட்டுமே லாயக்கான வகையிலானது. இவ்வகைப் பயிர்களை விளைவிப்பதற்காக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் விவசாயிகளுக்கு அதிக மானியம் மற்றும் வரிவிலக்கு கொடுத்து ஊக்குவித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளாகவே உணவுக்கான சோளத்தின் உற்பத்தி 50% குறைந்துவிட்டது.

போகட்டும், இனியேனும் உணவுப் பயிர்களை விளைவிப்போமே என்றால், விளைநிலத்துக்கு எங்கே போவது? இருந்த விளைநிலங்கள் எல்லாமே ரியல் எஸ்டேட்டுகளால் பட்டா போடப்பட்டு, வீடுகளாக, பங்களாக்களாக, அடுக்கு மாடிகளாக, வணிக வளாகங்களாக உருமாறி விட்டதே!

அப்படியொன்றுமில்லை, கொஞ்சமாவது விவசாய நிலங்கள் இருக்கத்தான் செய்கின்றன, அதிலெல்லாம் விவசாயம் நடக்கத்தான் செய்கிறது என்று சொன்னால், உலகம் உருண்டை – மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே வருகிறோம். மழை இல்லாமல் வறட்சியால் தவிக்கும்போது எங்கே விவசாயம் செய்ய? அப்படியே செய்தாலும், யானைப்பசிக்குச் சோளப்பொறிதான் அது! மட்டுமல்ல, அரிசி, கோதுமை போன்ற உணவுப் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுமென்பதால், தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் பணப்பயிர்களைத்தான் விவசாயிகள் தேர்வு செய்வார்கள்.

செவ்வாய் கிரகத்தில் கால் பதிக்கிறோம்; நிலவில் நீரைக் கண்டுபிடிக்கிறோம். ஆனால், இல்லாத மண்ணில் பொல்லாத உணவை விளையவைக்கத்தான் வழி தெரியவில்லை. சமீபகால ‘அரேபிய வசந்தம்’ புரட்சிகளின் தொடக்கப் புள்ளியான துனிஷியா புரட்சிக்கு வித்திட்டது அடிப்படையில் வயிற்றுப் பசியே. எனில், இன்னும் வருங்காலங்களில் எத்தனைப் புரட்சிகளைச் சந்திக்க இருக்கிறோமோ?

க்ளோபல் வார்மிங்கின் விளைவுகளைப் பற்றி இத்தனை நாட்கள் பேசிக்கொண்டு மட்டுமே இருந்தோம். காலம் தப்பிய மழை, பொய்த்த மழை, அதீத வெயில் என்று காலநிலை மாற்றங்களை பார்த்தும் நாம் திருந்தவில்லை. நாம் அன்றாடம் வீடுகளிலும், விருந்துகளிலும், உணவகங்களிலும் வீணாக்கிய உணவுகள் மனக்கண்ணில் வந்துபோகுதா?

ரி இறக்குமதி செய்துகொள்ளலாமே என்றால் அதுவும் முடியாது. காரணம், உலகமெங்கும் தட்டுப்பாடு பரவுகிறது. 2008-ல் நடந்ததுபோலவே, எல்லா நாடுகளும் உணவு ஏற்றுமதியைத் தடை செய்யும் சாத்தியங்கள் அதிகம். ரஷ்யா இவ்வருட இறுதிவரை மட்டுமே கோதுமை ஏற்றுமதி என்று இப்போதே அறிவித்துவிட்டது.
இதே போன்ற பிரச்னைகளைச் சந்தித்துவரும் சீனா  போன்ற பல நாடுகள், செழிப்பான விளைநிலங்கள் அபரிமிதமாக உள்ள ஆப்பிரிக்க நாடுகளில் விவசாயத்தில் பெரும் முதலீடு செய்துள்ளன. இதில் கிடைக்கும் மிகுதியான விளைச்சலைத் தம்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துகொள்வதுதான் நோக்கம்.

டந்த ஜூன் மாதம் நடந்த ரியோ +20 ‘வளங்குன்றா வளர்ச்சி’ (Sustainable Development) உச்சி மாநாட்டில், ஐ.நா. செயலர் பான் கீ மூன், வறுமைப்பசியை ஒழிப்பதற்காக ‘Zero Hunger Challenge’ என்ற உலகளாவிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். ஐந்து அம்ச திட்டமான இதில், சிறு-குறு விவசாயிகளை ஊக்குவிப்பது முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் இவர்களைச் சரியான முறையில் ஆதரித்து, அவர்களின் வருமானம் மற்றும் உற்பத்தியை இருமடங்காகப் பெருகச் செய்வது மிக அத்தியாவசியமானது என்று வலியுறுத்துகிறார்.

அதன் இன்னொரு அம்சம், உணவுப் பண்டங்களை வீணாக்குதலைத் தடுத்தல் மற்றும் முறையான உணவு நுகர்வு. விளைநிலங்கள் தொடங்கி, வீட்டு டைனிங் டேபிள் வரை நடக்கும் பெரும் விரயத்தைத் தவிர்த்தாலே பஞ்சம், பசியைப் போக்குவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணலாம். அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வீணாக்கப்படும் உணவுப் பொருட்களின் அளவு, சஹாராவை மையப்படுத்திய ஆப்பிரிக்காவின் மொத்த உணவு உற்பத்திக்குச் சமம் என்றால் எந்தளவு விரயம் நடக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.

ந்தியாவில் வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டித்தள்ள ஆரம்பித்திருக்கும். சென்னை, மும்பை உள்ளிட்ட பெருநகரங்களும் அந்த வெள்ளத்தில் வருடாவருடம் மிதக்கும். ஆனால், இந்த வருடம்? வெள்ளத்திலிருந்து தப்பிவிட்டோமே என்று சந்தோஷப்பட முடியாதபடி, வறட்சி நம்மை விரட்டிக் கொண்டுவருகிறது.

தமிழ்நாட்டிலும், வருட ஆரம்ப குறுவை சாகுபடி அப்போது நிலவிவந்த கடும் மின்சாரத் தடை காரணமாகக் கைவிடப்பட்டது. இப்போது செய்திருக்க வேண்டிய சம்பா சாகுபடிகள், மழை இல்லாததால் செய்யவில்லை. மழை பொய்த்ததன் விளைவுகளில் ஒன்றாகத்தான், கடந்த ஆடிப்பெருக்கின்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் போனது. சென்னையின் நீராதாரமான வீராணம் ஏரி, இவ்வருடம் ஜூலை மாதத்திலேயே காய்ந்து விட்டது.

தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தராமல் போக்கு காட்டிய காவிரி கொண்ட கர்நாடகாவின் பி.ஜே.பி. அரசு மழைக்காக சிறப்புப் பூஜைகள் நடத்தியுள்ளது. கேரளாவும் தன் தலைநகரில் குழாய்த் தண்ணீர் விநியோகத்துக்கு ரேஷன் முறை கொண்டுவரலாமா என்று ஆலோசிக்கும் அளவுக்கு, அங்கும் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழ்நாட்டில் எந்த முன்னேற்பாடுகளும் இல்லை. ஆனால், மழை இல்லாததால், விதைக்கும் பருவமும் தாண்டிப் போய்விட்ட பின்னர் முதல்வர் ஜெயலலிதா குறுவை சாகுபடி முறையாக நடக்கும் என்று கூறுகிறார். மந்திரக்கோல் எதுவும் வைத்திருக்கிறாரோ என்னவோ!

உணவுப் பஞ்சம் வந்துகொண்டிருக்கிறது என்று தெரிந்தும் மத்திய, மாநில அரசுகள் வழக்கம்போல, மெத்தனமாக இருக்கின்றன. அவர்களுக்கென்ன, திட்டக் கமிஷனே, மக்களின் அன்றாடச் செலவுக்கு இருபத்தைந்து ரூபாய் போதும் என்று சொல்லிவிட்டதே.

பஞ்சம் அடித்தட்டு மக்களுக்குத்தானே தவிர, பணம் படைத்தவர்களுக்கல்ல என்கிற அலட்சியம். அவர்களுக்குப் புரியவில்லை, பணம் இருக்கும், ஆனால் வாங்க அரிசி இருக்காது – இதுதான் பஞ்சம் என்று. அப்போது பணத்தையா தின்னமுடியும்?

ரண்டாவது பசுமைப் புரட்சிக்கான அவசியம் இந்தியாவில் இப்போது வந்திருக்கிறது. அதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இப்போதே தொடங்கினால்தான், சுற்றுப்புறச் சூழல் சீர்கேடு காரணமாக வருங்காலங்களில் அடிக்கடி வர சாத்தியமுள்ள இதுபோன்ற நிலைமைகளை எதிர்கொள்ள முடியும்.

தற்போதைக்கு, அரசு உணவுக் கிடங்குகளில் தேவைக்கு மேலேயே இருக்கும் கோதுமையையும் நெல்லையும் பத்திரமாக வைத்திருந்தாலே, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தி, எதிர்வரும் தட்டுப்பாட்டையும் ஓரளவுக்குச் சமாளித்துவிடலாம்.

பண்டைய காலத்தில் எகிப்தில் கடும்பஞ்சம் வரப்போகிறதென்றுஅந்நாட்டு அரசருக்குக் கனவில் அறிவிப்பு வந்ததும், முறையாகப் பயிரிடுதல், சேமிப்பு, சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், அண்டை நாடுகளுக்கும்கூட, ஏழு ஆண்டு கடும் பஞ்சத்தின்போது உணவளிக்க முடிந்தது.

தனது சுதந்தர தின உரையில், விரைவில் செவ்வாய்க் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பப்போவதாகப் பிரதமர் அறிவித்துள்ளார். அரசு உணவுக் கிடங்குகளில் சேமிக்கப்படும் பயிர்களின் பாதுகாப்புக்கான நவீன வசதிகள், எலிகளிடமிருந்து பாதுகாத்தல், கிடங்குகளின் கொள்முதல் மற்றும் கொள்ளளவைப் பெருக்குதல், நாட்டின் சேமிப்புக் கிடங்குகளை ஒருங்கிணைத்தல், மழைக்காலங்களில் மழையில் நனைந்து அழுகிவிடாதபடிக்கு முறையாகச் சேமித்து வைத்தல் போன்ற ஏற்பாடுகளுக்கு ராக்கெட் டெக்னாலஜி தேவையில்லை என்பதையும் யாராவது ‘லேட்டஸ்ட் டெக்னாலஜி’ மூலம் அரசாள்பவர்களின் கனவில் வர வையுங்களேன்!

(படங்கள் அத்தளத்தினால் இணைக்கப்பட்டவை)

Post Comment