Pages

Showing posts with label ஊர்சுற்றல். Show all posts
Showing posts with label ஊர்சுற்றல். Show all posts

ஒரு டயரிக் குறிப்பு....




ழக்கம்போல எல்லாரும் ஒண்ணா ஊருக்குப் போயிட்டுத் திரும்பி வந்தாலே, “நான் எங்க இருக்கேன்?” என்ற ரேஞ்சில்தான் சில நாட்கள் வரை சுற்றிக் கொண்டிருப்பேன். இதில், அப்பாவையும் மகனையும் மட்டும் முன்னாடி அபுதாபி அனுப்பி வச்சிட்டு, ஒரு பத்து நாள் கழிச்சு நான் மட்டும் வந்தா, வந்தா....  ஆளில்லாமல் பூட்டி இருக்கும் வீட்டைக் கூட சீக்கிரம் ஒழுங்குபடுத்திவிடலாம். ஆனால், ஆண்கள் மட்டும் இருக்கும் வீட்டை..... 😢😭


நான் ஊரில் இருக்கும்போது என்னிடம் ”இந்த குக்கருக்கு இந்த வெயிட்டுதானா” என்று வூட்டுக்காரர், படம் அனுப்பி கேட்க, #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திடுச்சு!! வீட்டுல இருக்கும்போதே, இருக்கும் நாலு குக்கர் வெயிட்டுகளில் எது எந்த குக்கருக்கு என்று தேர்ந்தெடுக்க “இங்கி-பிங்கி-பாங்கி” போடுமளவுக்குக் குழம்புவேன். ஒரு மாசமா சமையலையே மறந்துட்டு ஊரில் இருக்கிறவளிடம் கேட்டா....??? “இருங்க, யோசிச்சு சொல்றேன்..”ன்னு சொல்லிட்டு, ரூமைப் பூட்டிகிட்டு உக்காந்து யோசிச்சுப் பாத்துப் பதில் சொல்ல வேண்டியதாப் போச்சு!!

றவினரின் டீனேஜ் மகள், பொங்கலுக்காக, பள்ளியில் பாரம்பரிய உடை அணிந்து வரச் சொல்லிருக்காங்க என்று என்னிடம் அவளுக்குப் புடவை கட்டி விடச்சொன்னபோதும்,  #ஒரு_நிமிஷம்_தலை_சுத்திடுச்சு!! முகலாயர்களின் சுடிதார்-சல்வார், மேலை நாட்டின் ஜீன்ஸ், அரபுகளின் பர்தான்னு மாறிவிட்ட உலகமயமாக்கல் உலகில் திடீர்-குபீர் “மேக் இன் இந்தியா” மாதிரி திடீர் பாரம்பரியமா சேலையைக் கட்டச் சொன்னா..... மறுபடியும் உக்காந்து யோசிச்சுப் பாத்து, ஒரு வழியா எப்படியோ கட்டிவிட்டுட்டேன்...  

இந்த ஒரே ஒரு நாள் கூத்துக்காக, மாணவிகள் சேலை மற்றும் மேட்சிங் ஐட்டங்கள் வாங்குவதற்குச் செய்யும் செலவுகளைப் பார்த்து வாய் பிளந்த கதை தனி! பெற்றோர்கள் எப்படி இதை அனுமதிக்கிறார்கள் என்று பார்த்தால், அவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள்!! டீனேஜ் பெண்கள் மட்டுமல்ல, மற்ற பெண்களும் - ஏன் ஆண்களும்கூட ஒரே ஒரு நிகழ்வுக்காகச் செய்யும் ஆடைக்கான செலவுகளைப் பார்த்தால், பயம்மாக இருக்கிறது. 😕 எப்படித்தான் கட்டுப்படியாகுதோ என்று வியப்பாகவும் இருக்கு! 😱

ஒரு திருமணத்திற்கு அணிந்த உடையை வேறு விசேஷங்களுக்கு அணியக்கூடாது என்ற ”கொள்கை”யில் பெரும்பாலானோர் - வசதி உள்ளவர்கள், இல்லாதவர்கள், ஆண்கள்-பெண்கள் வித்தியாசமில்லாமல் ஒற்றுமையாக இருக்கிறார்கள். முன்பெல்லாம் உடன்பிறப்புகள் திருமணத்திற்கு மட்டும்தான் புத்தாடை வாங்குவார்கள். இப்போ, யார் வந்து திருமணப் பத்திரிகை கொடுத்தாலும், உடனே கடைக்கு படையெடுப்பு நடக்கிறது. கல்யாண வீட்டினரும், “லைஃப்ல ஒன்லி ஒன் டைம்”னு சொல்லிகிட்டு.... அந்த திருமணப் பத்திரிகைக்குச் செய்யும் செலவு இருக்கே....  அந்தப் பத்திரிகைகள், பல வீடுகளில் பின்னர் எதுக்குப் பயன்படும்னு சொன்னா....  சரி, வேணாம்....

திருமணங்கள் முன்பைவிட, மிக மிக விமர்சையாக நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம், பெண் வீட்டார்களைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மாப்பிள்ளை வீட்டினரின் demands-ஐச் நிறைவேற்றத் திணறுவார்கள். இப்போதெல்லாம், மாப்பிள்ளை வீட்டார்தான் பாவம்! ஆம்!! பெண் வீட்டார்கள், அவர்களுக்கு லிஸ்ட் போட்டுத் தரும் வேலைக்கே இடம் கொடுக்காமல், தாங்களே, போதும் போதுமெனுமளவுக்கு அதிஆடம்பரமாகத் திருமணத்தை நடத்திவிடுகிறார்கள். மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருக்கு ஈடாக, பதில் விருந்து-சீர்கள்-செய்முறைகள் செய்தாக வேண்டிய கட்டாய நிலை!! கொள்கை எதுவாக இருந்தபோதிலும், அல்லது கொள்கையே இல்லாதவர்கள் என்ற வேறுபாடோ, இந்த ஊர்-அந்த ஊர் என்றோ வேறுபாடில்லை இதில் மட்டும்.

க்கள் பெருக்கத்தைவிட, வாகனப் பெருக்கம் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக,  இருசக்கர வாகனங்கள் பெருமளவு காணப்படுகின்றன. சாலைகளில், தெருக்களில் நடக்கவே முடியாத அளவுக்கு இரு சக்கர வாகனங்கள் செல்கின்றன.

கீழேயுள்ள படத்தில், எங்க ஊரில், ஒரு தெருவின்  சிறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இரு சக்கர வாகனங்கள் இவை - என்றால், தெரு முழுதும் எவ்வளவு இருக்கும்?? கார்கள் கணக்கு தனி.


மேலப்பாளையம் மாநகராட்சியிலிருந்து பணியாளர்கள் நாள்தோறும் வந்து குப்பையை வாங்கிச் செல்வதால், தெருக்கள் குப்பையின்றி சுத்தமாக இருக்கின்றன.  ஆனால், பஜாரில், இறைச்சிக் கடைகளின் அருகே கழிவுகள் சாலையிலேயே கொட்டப்பட்டு வருகின்றன. அவ்வழியே செல்ல முடியாதபடி நாற்றமெடுத்தாலும்கூட,  அருகிலிருப்பவர்கள் யாரும் கண்டுகொள்ளாதது அதிர்ச்சி!! ஒரு கடைக்காரரிடம் கேட்டேன், பழகிடுச்சு என்றார். :-(

நாகர்கோவிலில் (கோட்டார்) மக்கள் வசிப்பிடங்களிலேயே குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. பக்கத்து காலி ப்ளாட்டுகளில் குப்பை போட்டுவிட்டு, ப்ளாட் ஓனரை “சுத்தம் செய்யாம வச்சிருக்கீங்களே” என்று கண்டிப்பார்கள்!!

ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவங்கள் இம்முறையும் - பல விதங்களில் மக்கள்...    ஒரு விஷயம் தெளிவு.... நல்ல உடல்நலமும், அதிகாரமும் கையில் இருக்கும் வயதில், வாழ்க்கைத்துணை, பிள்ளைகள், உறவுகளை எப்படி நடத்துகிறோமோ அது அப்படியே முதுமையில் திருப்பிக் கிடைக்கிறது.

திருச்சி சென்றிருந்த போது, தற்செயலாக அங்கு ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவர் அதன்புத்தக ஆசிரியரான  திருமதி. கமலா ராஜன் அவர்கள்! ஆச்ச்சரியத்திற்குக் காரணம் அவருக்கு 77 வயது!!  சிறுவயது முதல் எழுதி வந்த கதை, கவிதைகள் ”மங்கையர் மலர்” உள்ளிட்ட பல பத்திரிகைகளில் வந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் தொகுத்து, அத்தோடு அவர் வரைந்த ஓவியங்களில் சிலவற்றையும் சேர்த்து பதிப்பித்திருக்கிறார்.

ஓவியத்தில் அதீத ஆர்வம் உள்ள அவர், தனது 60--65 வயதுக்குமேல், அருகிலுள்ள ஸ்ரீரங்கத்திற்குச் சென்று பல வகை ஓவியங்களையும் பயின்று வந்தாராம். அவரது திறமைகள் குறித்த பேட்டிகள் தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் இப்போதும் வெளிவந்திருக்கின்றன.

60 வயது தாண்டினாலே, “இனி என்ன இருக்கு வாழ்க்கையில்....” என்று சோர்ந்து விரக்தியடையும் பெண்கள்  மத்தியில், கிடைத்த  ஓய்வை தன் திறமையை மெருகேற்றிக் கொள்ளப் பயன்படுத்தி, தன்னை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளும் திருமதி. கமலா இராஜன் அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உண்டு!!

விழாவில் தலைமையேற்றுப் பேசிய, திருச்சி காவேரி பெண்கள் கல்லூரி முதல்வர் திருமதி. சுஜாதா அவர்கள், மற்ற பேச்சாளர்கள் சொன்ன “பெண்களின் முன்னேற்றத்திக்கு ஆணாதிக்கமே தடை” என்ற கருத்தை உடைத்து, முன்னேறிய பெண்களுக்கும் ஆண்களே காரணம் எனப் பேசினார்.

முன்பெல்லாம் வகுப்புகளுக்குப் பாடம் எடுக்கச் செல்வதுண்டு எனவும், ஆனால் தற்போது தினமும் வரும் பஞ்சாயத்துகளைப் பேசி முடிப்பதற்கே நேரம் சரியாக இருப்பதால் வகுப்புகளுக்குச் செல்ல முடியவில்லை என்றும் வருத்தப்பட்டார். மாணவிகள் செய்யும் தவறுகளுக்குத் துணை செய்யும் பெற்றோர்களைக் கண்டித்தார்.

சில மாதங்கள் முன்பு, மழை நீரைச் சேகரிப்பது குறித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன். எங்கள் வீட்டிலும் அதைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இறையருளால் இம்முறை நிறைவேறியது. இப்பயணத்தில் மிகவும் மனநிறைவான விஷயம் இது.

எனது ஊரான மேலப்பாளையத்திலும் பல தெருக்களில் இளைஞர்கள் ஒன்றிணைந்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஆங்காங்கே மழைநீர் சேகரிப்பு துளைகள் ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை அறிந்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.  பல இடங்களில் மரங்களும் நட்டு வருகிறார்கள்.



திருச்சி போகும்போது, இரயிலில் உடன் இருந்த பெண், அவரது கைக்குழந்தை  தூங்காத காரணத்தால் தூங்காமல் விழித்திருந்தார். காலை 11 மணி அளவில் குழந்தை தூங்கியதும்,  அப்பெண்ணையும் படுங்க என்று சொல்லிவிட்டு நானும் எனது கணவரும் வேறு இருக்கைக்கு மாறிக் கொண்டு, திரும்பிப் பார்த்தால், அவர் தனது கணவரை ஓய்வெடுக்கச் சொல்லி அதில் படுக்க வைத்திருக்கிறார்!!!  ச்சே.... இந்தப் பெண்களே இப்படித்தான்!! 😠😠

திரும்பி வரும்போது பேருந்தில்தான், அதுவும் கடைசி இருக்கைகள் தான் கிடைத்தன. கொஞ்ச தூரம் வந்ததும், முன் வரிசைகளில் ஒரு இருக்கை காலியானதும் என் கணவரை அங்கு அமருமாறு வலியுறுத்தி  அனுப்பி வைத்தேன்!! பாவம்... அவருக்கு முதுகுவலிக்கும்ல.... ;-) 😉


Post Comment

புறப்பாடுகள்




வீட்டைப் பூட்டிவிட்டு எங்கும் போவதென்றால் அதற்கென செய்ய வேண்டிய வேலைகளும் முன்னேற்பாடுகளும் மலைப்பானவை. அது பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். அதுவும் இந்தியா போவதென்றால், கிளம்புமுன், தேவையான பொருட்கள் எடுத்துச் செல்வது போல,  மனதிலும் சில தயாரிப்புகள் செய்துகொள்ள வேண்டி இருக்கின்றது!!

மொழி:

அம்மா வீட்டில் நெல்லைத் தமிழ். மாமியார் வீட்டில், மலையாள ஆதிக்கம் செலுத்தும் தமிழ்!! இங்கு அமீரகத்தில் நாங்கள் பேசுவதோ ரெண்டுமில்லாத “நாகரீக” தமிழ்!! ஆகையால், ஊருக்குப் போகுமுன், ரெண்டு பிராந்திய பாஷைகளையும் அவற்றின் சிறப்புச் சொற்களையும் ரீ-கால் பண்ணிக்கணும். இல்லன்னா, அவோள்லாம் பேசும்போ பெப்ப்ரப்பேன்னு முழிச்சிகிட்டுலா நிக்கணும்.

முக்கியமாக, மலையாளத்திலும் தமிழிலும் சில பல வார்த்தைகள் க்ராஸ் ஆகும். அவற்றை கவனமா கேட்டுக்கணும்.  உதாரணமா,  மலையாளத்தில்  “ராவில”ன்னா காலை. அதுவே தமிழில் இரவு!! தமிழில் வருவதைச் சொல்லும் “வரறது” என்ற வார்த்தை, மலையாளத்தில் “வராதே” என்று அர்த்தம்!!

இதுக்கே “ஙே...”ன்னு இருக்கா..?  இதுக்கெல்லாம் மேலாக இன்னொண்ணு இருக்கு!! தமிழில் “மிளகு” என்றால் பெப்பர். ஆனால், மலையாளத்தில் அது மிளகாயைக் குறிக்கும்!!  


உணவு:

மாமி: இன்னிக்கு ”தோரன்” (பொரியல்) என்ன செய்யப்போறே?
நான்:  பீட்ரூட் வைக்கலாமா?
அது சுகருக்கு ஆகாது.
அப்ப, உருளை வறுவல் செய்வோமா?
அது “கேஸ்” (வாய்வு) வேண்டாம்.
 தக்காளி கறி?
“ஸ்டோனுக்கு” (சிறுநீரகக் கல்) தக்காளி சேக்கக் கூடாது!


இப்படியாக எல்லா காயும் க்ளீன் போல்ட் ஆகி, மிஞ்சுவது கேரட்-பீன்ஸ் மட்டுமே!!

திருநெல்வேலியில்:

நான்: வெண்டைக்காய் செய்வோம்.
அம்மா: அது “குளிர்ச்சி”, கால் வலிக்கும்.
அப்ப, கத்தரிக்காய், மாங்காய் போட்டு சாம்பார்?
ரெண்டுமே “சூடு”, வேண்டாம்.
முட்டைகோஸ்?
வாய்வைக் கிளப்பும்.

வாழைக்காய்?
”சிக்கல்” வரும்.
புளிக்குழம்பு?
”வாதம்” உண்டாக்கும்.

”ஆணியே புடுங்கவேண்டாம்”னுட்டு, அதே பீன்ஸ்-கேரட்தான் இங்கயும்!!

உறவுகள்:

நாகர்கோவிலில்:

“ஏங்க, இப்ப நாம யாரு வீட்டுக்கு போயிட்டிருக்கோம்?”

“ப்ச்... ஒவ்வொரு வருஷமும் சொல்லிக் கொடுத்தாலும், புதுசு மாதிரியே கேட்டுகிட்டிருக்க... என் சின்னம்மா மகள் வீடு”

இடையில் புகுந்த சின்னவன், “ம்மா.... இங்க போன வருஷம் நாம வரும்போது இங்க ஒரு ஆடு இருந்துச்சே...”

அவனுக்கே தெரியுது, எனக்குத்தான் 20 வருஷமாகியும்...

திருநெல்வேலியில்:

“இப்ப கல்யாணத்துக்கு அழைக்க வந்திருக்காங்களே, இவங்க யாரு...”

“என் தங்கச்சியோட மைனியோட பேத்திக்குக் கல்யாணம். போன வருஷமும் நீ வந்திருந்தப்பதான் அவங்க வீட்டுல ஒரு கல்யாணம் அழைக்க வந்தாங்க, மறந்துடுச்சா.... ” முறைப்புடன் பதில் வரும்.  யாருக்கு அதெல்லாம் ஞாபகம் இருக்கு....

இப்படி, எல்லாமே நாகர்கோவிலில் ஒரு விதம் என்றால், திருநெல்வேலியில் இன்னொரு விதம்!! அதற்கேற்ற மாதிரி நம் மூளையை மாற்ற வேண்டுமே.... அதானே கஷ்டம்!! ஒரு வழியா சமாளிச்சு, மறுபடி அபுதாபி வரும்போது, நாகர்கோவில் திருநெல்வேலி சமாச்சாரங்களை மைண்டிலிருந்து க்ளீன் செய்யும்போது அபுதாபி மேட்டரும் சேந்து காணாமப் போயிடுது!!! அவ்வ்வ்வ்.....

“என்ன, கிச்சன்ல நின்னு ரொம்ப நேரமா முறைச்சு பாத்துகிட்டே நிக்கிற....”

“இல்லங்க,  அடுப்புக்குப் பக்கத்துல ரெண்டு பாட்டில் வச்சிருப்பேன்னு ஞாபகம் இருக்கு. ஆனா, அதுல என்ன போட்டு வச்சிருந்தேன்னு யோசிச்சு யோசிச்சு பாக்கறேன், நினைவுக்கே வரமாட்டேங்குது....”

“அதுசரி... ஒரு இருவது நாள் ஊருக்கு போய்ட்டு வந்ததுக்கே இப்படியா..... சமையல் செய்றது எப்படின்னு ஞாபகம் இருக்கா, அதுவும் மறந்து போச்சா....”

Post Comment

சிஸ்டம் டவுன்






 லைப்பூவில் மீண்டும் பதிவு எழுதலாம்னு முடிவு பண்ணேனே தவிர, எங்கே தொடங்க என்ன எழுதன்னு இன்னும் கன்ஃப்யூஷன்தான். “ஸ்டார்டிங் ட்ரபிள்”!!

ஊருக்குப் போயிட்டு வந்த கதையையே எழுதிடுவோம்னு ஆரம்பிக்கிறேன். போய்ட்டு வந்து ஆறு மாசம் ஆச்சு!! 


துரை விமானநிலையத்தில் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என்று அறிந்ததும், “இனி இந்த திருவனந்தபுரம் ஏர்போர்ட்டில் மல்லுக் கட்டத் தேவையில்லை” என்று அகமகிழ்ந்துபோனோம். நெல்லையிலிருந்து இரண்டரை மணிநேரமே; சாலையும் தரமாக இருக்கும். உடன் டிக்கட் புக் செய்தோம். முதல் முறையா மதுரை விமானநிலையம் போய் இறங்கினோம்; நிலையத்தைவிட்டு வெளியே வரும்போது இனி இந்தப் பக்கம் வரவே கூடாது என்று உறுதி பூண்டோம்!!

விமான நிலையம் புதிதாக அழகாக உள்ளது; ஆப்பீசர்கள் புதிதாக சர்வதேச விமானங்களைக் கையாள்வதாலோ என்னவோ ரொம்பவே ஓவர் விறைப்பாக உள்ளனர்; பயங்கர கெடுபிடி, மிரட்டல்கள்!! குறிப்பாகப் பேச்சிலர்களை உண்டு-இல்லை என ஒருவழி செய்துவிட்டனர்.


திரைப்படக் காமெடி காட்சிகளை மிஞ்சும் ஒரு பயங்கர ஜோக்
காட்சி காணக்கிடைத்தது: முதல்முறையாக ஊருக்கு வர்ற ஒரு ஆர்வக்கோளாறு “கிராமத்து ஃபாரின் பார்ட்டி”, காதுவரையிலான "விருமாண்டி” கடாமுறுக்கு மீசையோடு அரபிகளின் உடையான வெள்ளை நிற “கந்தூரா”வை அணிந்து வர... வகைதொகையில்லாமல் ஆப்பீசர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடி அவரை வறுத்து எடுத்துவிட்டனர்!! வடிவேலுவின் “இவன் ரொம்ப நல்லவன்னு சொன்னாங்கடா...” காமெடிக் காட்சிதான் ஞாபகம் வந்தது.

ந்தியா செல்லும் முன்பே, போக வேண்டுமென்று எண்ணியிருந்த இடங்களில் ஒன்று “கோ-ஆப்டெக்ஸ்”!! சென்ற வருடம் அக்டோபர் மாதவாக்கில், முன்னாள் கலெக்டர் திரு. சகாயம் அவர்களின் தலைமையில் கோ-ஆப்டெக்ஸ் மிகவும் சீரடைந்துள்ளது; கோ-ஆப்டெக்ஸை ஆதரியுங்கள்னு ஃபேஸ்-புக்கில் பலரும் (நானுந்தான்) போஸ்ட் போட்டிருந்தார்கள். சரி, டாஸ்மாக் வருமானத்தை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக அரசுக்கு நம்மாலான சிறு உதவி செய்வோமேன்னு போகலாம்னு நெனச்சேன்.


திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் கோ-ஆப்டெக்ஸ் கடைகளுக்குப் போனோம். நல்லா ஏஸி குளுகுளுன்னு போட்டு வச்சிருக்காங்க; பணியாளர்களும் நன்றாகக் கவனிக்கிறார்கள். ஆனாலும்.... ஒரு திருப்தி இல்லை - நிறைய ரகங்கள் இல்லை என்பதும் ஒரு காரணம்.  இரு கடைகளிலும் பட்டுச் சேலைகள் பகுதிதான் டாப் க்ளாஸாக இருக்கிறது - விலையும். 

எனினும், நைட்டிகள் நன்றாக இருக்கின்றன; சுடிதார் துணிகள், வழக்கமாக வெளியே கடைகளில் டாப்ஸுக்கு 2 மீட்டர்தான் இருக்கும்.  Side-cut இல்லாமல், umbrella மாடலில் தைக்கவும், முழுநீளக்கை வைக்கவும் எப்பவும் கூடுதல் துணி தனியாக வாங்க வேண்டியிருக்கும். ஆனால், கோ-ஆப்டெக்ஸில் டாப்ஸுக்கு 2.50 மீட்டர் துணி வைத்திருக்கிறார்கள்!! அது மிகவும் வசதியாக இருக்கிறது. 

 ரில் மகன்களைப் பார்த்த அநேக உறவுக்காரர்களும் என்னிடம் ”நல்லாயிருக்கியா” என்று கேட்டு முடிக்குமுன்பே, “ஏன் பிள்ளைங்க இப்படிக் கருத்துப் போயிட்டாங்க?” என்று தொடர் கேள்வி கேட்டு, அதையும் முடிக்கும்முன்பே ”ஃபேர்னெஸ் டிப்ஸு”ம் கொடுக்க ஆரம்பித்து விடுகிறார்கள். நல்லவேளை, பெண் குழந்தையாக இல்லை என்று நிம்மதியடைந்த தருணங்களில் இதுவும் ஒன்று.:-)

முன்ணனி தனியார் நிறுவனங்கள் போலவே, வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் எல்லாமே கணினி மயமாக்கப்பட்டு விட்டதால், அலுவலர்களின் வேலைகள் மிகவும் எளிதாகிவிட்டன! எப்படின்னு கேளுங்க... கரண்ட் கட் கூட இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரைக் கொண்டு சமாளிக்கப்பட்டு விடுகிறது. மேலும், கரண்ட் கட் நேரங்கள் முன்பே தெரியும் என்பதால், அதற்கேற்றவாறு திட்டமிட முடிகிறது.   ஆனால், சமாளிக்க முடியாத ஒரு விஷயம்... “சிஸ்டம் டவுன்”!! துணிக்கடை, ஆஸ்பத்திரி, மொபைல் நிறுவனம் என்று எங்கு போனாலும், இந்த வார்த்தைதான் காதில் விழுகிறது.




பவர் கட் நேரம்கூட முன்னரே தெரிந்துவிடுகிறது. ஆனால், “சிஸ்டம் எப்போ சரியாகும்?” என்பதுதான் மில்லியன் டாலர்
கேள்வி!! தினமும் ஒருமுறையாவது இதைச் சந்திக்க நேர்கிறது. தண்ணீர்ப் பிரச்னை, மின்சாரப் பிரச்னை, ட்ராஃபிக் ஜாம் போன்றவைகளுக்குக் கூட - நடைமுறைப் படுத்தவில்லை என்றாலும் - தீர்வு என்னவென்றாவது தெரியும். ஆனால், தீர்வே இல்லாத பிரச்னை, இந்த “சிஸ்டம் டவுன்”!! ஆனாலும், அவற்றைப்  போலவே, இதையும் சகித்துக் கொள்ளப் பழகிவிட்டோம்.

ப்படியாக இந்தியப் பயணம் சிறப்பாக முடிவுற்று, அமீரகம் வந்து சேர்ந்தோம். வீட்டுத் தொலைபேசி, இணையத் தொடர்புகளை இயங்க வைக்க வேண்டி, தொலை தொடர்பு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டோம்.  ”இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடும்”னு சொன்னாங்க. சொன்னபடி இணையம் சரியானது, ஆனால் தொலைபேசி இயங்கவில்லை. என்னாச்சுன்னு கேட்டா, “ஸாரி சார், சிஸ்டம் டவுன்”!!! ஙே...



Post Comment

விடைபெறுகிறேன் - 3





தலைப்பைக் கண்டு பதறவும் வேண்டாம்,  மனசுக்குள் ரகஸியமாகக் கொண்டாடவும் வேண்டாம். தலைப்பிற்கானக் காரணம் கீழே!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்ற வழக்காடலில், இனி ‘வீட்டை மாற்றிப் பார்’ என்பதையும் சேத்துக்கணும்!! 

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”ஏன் இப்படி லொட்டு லொசுக்கு சாமான்களையெல்லாம் சேத்து வச்சுருக்கீங்க? பெரிய்ய மெக்கானிக்னு நெனப்பு!! எந்த காலத்துல இதெல்லாம் தேவைப்பட்டுச்சு? இத்தோட தூக்கிப் போடுங்க. புதுவீட்டுக்கும் இதைத் தூக்கிட்டு வந்து இடத்தை அடைக்காதீங்க!!”

“நீயுந்தான் கிச்சன் சாமான்கள் எவ்ளோ சேத்து வச்சிருக்கே? !! ”போகாத போருக்கு இத்தனை ஆயுதம் தேவையா?”ன்னு நான் உன்னைக் கேட்டேனா?”

“!!!!!!!!!!!!?????.....”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

”கிச்சன்ல இவ்வளவு இடம் இருக்குல்ல, அப்புறம் ஏன் மிக்ஸியை மூலையில கொண்டு வைக்கச் சொல்ற? அந்தப் பக்கமே வைக்கிறேன்.”

“சொல்றதைக் கேளுங்க. இத்தனை வருஷமா சமைக்கிறேன், எனக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரியும்?”

“ஏன், வாஸ்துப்படி ’மிக்ஸி மூலை’ அதுவா?”

 ”ஸ்ஸப்பா...  விடமாட்டீங்களே... ஓரமா வச்சாத்தான், மிக்ஸி அரைக்கும்போது தண்ணி அதிகமாகி வெளியே தெறிச்சாலும் இந்தக் கார்னரை மட்டும் சுத்தம் பண்ணாப் போதும். நட்ட நடுவுல வச்சா, எல்லாப் பக்கமும் தெறிச்சு, கழுவி விடுறது பெரிய வேலையாகிடும்”

‘இதான் உன் அனுபவ அறிவா?’ - இது அவர் மைண்ட் வாய்ஸ்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

“இந்த அலமாரித் தட்டுகளைக் கொஞ்சம் ஈரத்துணியால் துடைச்சுத் தாங்களேன்”

“நீயே துடைச்சிடு. நான் தொடச்சா, சரியா தூசி போகலைன்னு சொல்லுவே.”

“சரி, பெரிய பெட்டியில் இருக்கற சாமான்களை இந்த ஷெல்ஃபில அடுக்கிடுங்க”

அலமாரியையும், பெட்டியையும் சில நொடிகள் ஆராய்ந்தவர், “இல்லே நீயே வச்சுடு. நான் வச்சா அப்புறம் அது சரியில்ல, இது இப்படி வைக்கணும்னு எதாவது சொல்லுவே...”

“க்ர்ர்ர்.... சரி, போய்ச் சாப்பிடுங்க..”

போனவர் உடனே திரும்பி வர... ”என்னாச்சு... சாப்பிடலையா?”

“இப்ப சாப்பிட்டா, என்னை வேலை செய்ய விட்டுட்டு, நீங்க மட்டும் சாப்பிட்டீங்களான்னு திட்டுவே. நீ வர்ற வரை நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். அப்புறம் சாப்பிடுவோம்.”

“!!!!!!!!!!!!?????.....”

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

 "நாந்தான் வருவேன்ல... அதுக்குள்ள நீ ஏன் பெட்டியெல்லாம் தூக்கி வச்சுகிட்டு இருக்க...”

“என்கிட்ட சொல்றதுதானே... நான் வந்து கிரைண்டர் தூக்கித் தந்திருப்பேனே....”

கரெக்டாகக் கடைசிப் பாத்திரம் கழுவும்போது ஓடிவந்து, “தள்ளு, தள்ளு.. .நான் கழுவித் தர்றேன்...”

”நான் இங்கதானே இருக்கேன். சொல்லிருந்தேன்னா ஃபோன் பேசும்போதே அப்படியே துணி காயப் போட்டிருப்பேன்ல...”

தமிழ் சினிமாவுல போலீஸ் வேஷத்துக்குப் படு பொருத்தமான ஆளு இவர்தான்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

ஒருவழியா புதுவீட்டில் செட்டிலாகி,  ஆற அமரக் கையக் காலை நீட்டி உக்காரத்தான் ஆரம்பிச்சேன்... அதுக்குள்ளே ஊருக்குப் போய்ட்டு வரலாம்னு ஐடியா வந்துடுச்சு.... அடுத்த பரபரப்புகள் ஆரம்பம்.... வீடு மாத்துறதைவிட இவை மஹா டென்ஷன் தரக்கூடியவை.  தலைப்புக்குக் காரணம் இதுதான்!!

ஆமா, என்னவோ வாரம் ரெண்டு பதிவு எழுதுற மாதிரி ‘விடைபெறுகிறேன்’னு பந்தா வேறயான்னு நினைப்பீங்க. கல்யாணம் ஆன புதுசுல அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வருவோம். அதுவே வருஷங்கள் பல கழிந்த பின், அரிதாகிவிடும். இருந்தாலும் அந்த அரிதான சந்திப்புதான் அருமையானதாக இருக்கும். அதுபோலத்தான், ஃபேஸ்புக்கில் என்னதான் எழுதினாலும், வலைப்பதிவில் எழுதியது போன்ற திருப்தி வருவதில்லை.

அப்புறம், அதென்ன தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? அதுக்குக் காரணம் இங்கே இருக்கு!!

இறைவனருளால், போய் வந்து சந்திப்போம்!!

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

Post Comment

துபாய் ரொம்ப சீப்!!





இந்தியா போகும்போது ரொம்பப் பயந்த (எல்லாரும் பயங்காட்டுன) விஷயம் மின்சாரத் தடை. கஷ்டத்தை எதிர்பார்த்தே போனதால், பெருங்கஷ்டமாத் தெரியலை. சமையலறையில் மட்டும் - கரண்ட் இருந்தாலும், இல்லாவிட்டாலும்- வியர்க்கத்தான் செய்கிறது. வீட்டில் இன்வர்ட்டர் இல்லை என்பதால் வாடகைக்கு எடுத்து வைத்துக் கொண்டோம். ஆனால், அதுவும் கடைசி நாட்களில் கொஞ்சம் அதிகமாகப் பயன்படுத்த வேண்டிவந்ததால் உயிர் ஊசலாடும் நிலைமைக்குப் போய்விட்டது.

only4funny.blogspot.com
இன்வர்ட்டரில் ஒருமுறை முழுமையாக சார்ஜ் இறங்கிவிட்டதென்றால், பின்னர் 12 மணிநேரம் தொடர்ச்சியாக சார்ஜ் ஏற்றினால்தான் சரியாக வேலை செய்யுமாம். இருக்கும் கரெண்ட்கட்டில் 12 மணி நேரம் எப்படி சார்ஜ் செய்வது? அந்த கம்பெனிக்காரர்களிடம் சொன்னால், எடுத்துக் கொண்டுபோய் (ஜெனரேட்டர் மூலம்) சார்ஜ் செய்து தருவார்கள்.

மின்சாரப் பற்றாக்குறை ஒருபக்கம் என்றால், சமையல் கேஸ் பற்றாக்குறை இன்னொரு பக்கம். அதற்காக, இண்டக்‌ஷன் அடுப்பு வாங்கிவைத்து, “நேரங்காலம்” பார்த்து, சமைக்கிறார்கள் மக்கள்!!

இந்த வெயில் காலத்திலும் கொசுக்கள் தாராளமாக இருக்கின்றன என்பது ஆச்சர்யம்!!

பாண்டிச்சேரி போயிருந்தேன்.   கரண்ட் கட் இல்லை; வியர்வை இல்லை... ஹூம், கொடுத்துவச்ச மக்கள்ஸ்.


தமிழகத்தில் இன்னும் பல குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு இல்லை. அதனால் போர் தண்ணியையே குடித்து வந்தனர். இம்முறை அநேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு "RO plant with filter" (உப்புநீரை குடிநீராக்கிச் சுத்திகரிக்கும் மெஷின்) இருக்கிறது. விலையும் 12,000 ரூபாயதான்; பராமரிப்பும் வருடத்திற்கொருமுறை மட்டுமே என்பதால் யாரும் கார்ப்பரேஷன் தண்ணீர் குறித்துக் கவலைப்படுவதில்லை!!


அதேபோல பாரபட்சமில்லாமல் எல்லா மக்களிடமும் இருக்கும் கண்டிப்பாக இருக்கும் இன்னொரு பொருள் - டார்ச்!! வெளியே செல்லும் எல்லாரும் ஒரு சிறிய பென் டார்ச் கொண்டுசெல்லத் தவறுவதில்லை. ”எவரெடி” காலம் திரும்புகிறது!!

மதுரை திருமலைநாயக்கர் மஹாலில் நடைபெறும் “ஒலி - ஒளி காட்சி” பார்க்கப் போயிருந்தோம். பல வருடங்களாய் மதுரையில் இருக்கும்  நண்பர்களிடம் கேட்டபோது ”பார்த்ததில்லை” என்றார்கள்!! ம்ம்ம்... முற்றத்து மல்லிகைக்கு வாசமில்லை!!




 வெளிநாடுகளில் “ஒலி-ஒளி” காட்சிகளைப் பார்த்தபின், இது ரொம்ப சிம்பிளாகத்தான் தெரிகிறது. இருந்தாலும் பார்க்கலாம். காட்சிக்கேற்றபடி நகரும் ஒளி அமைப்புகள் வித்தியாசம். ஒலியோடு, ஒளியாலான உருவ அமைப்புகளும் இருந்திருந்தால் (animation போல) இன்னும் சுவாரஸ்யமாய் இருந்திருக்கும்.

ஒலி-ஒளி காட்சியின்போது பிரகாசிக்கும் மஹால்
திருமலை நாயக்கரின் காலத்தில் நடந்த சில நிகழ்வுகளை “ஒலி”யாக தகுந்த இசையோடு விவரிக்கிறார்கள். நாங்கள் பார்த்தது ஆங்கிலக் காட்சி. அவ்வளவாக இனிமையாயில்லை. தமிழ்க் காட்சி பார்த்திருந்தால் நன்றாக ரசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆரம்பத்தில் நிறைந்திருந்த பார்வையாளர் அரங்கம், ஆங்கிலத்தில் வர்ணனை ஆரம்பித்ததும் மெல்ல மெல்லக் காலியாகியே விட்டது!!


இக்காட்சி நடப்பது நாயக்கர் அரண்மனையின் தர்பார் ஹாலில். அருகிலேயே உள்ள அரண்மனையையும் சுற்றிப் பார்க்கலாம். ஆனால், மாலை ஐந்து மணி வரை மட்டுமே அதற்கு அனுமதி. ஒலி-ஒளி காட்சிகள் 7 மணிக்குத் துவங்கும்.
மேலதிகத் தகவலுக்கு: http://www.maduraidirectory.com/palace/sl.php


வழக்கம்போல ”பைக்”குகள் ராஜ்யம்தான் நாட்டில். ஏப்ரல் வெயிலில் நானும் என்னவரோடு பைக்கில் சுற்ற வேண்டியிருந்த போது,   ஒரு கடைக்குப் போயிட்டு வந்து வெயிலில் நிற்கும் பைக்கில் உக்கார முடியல.. சீட் கொதிக்குது.... “ஹெல்மெட் மாதிரி, பைக் சீட்டுக்கும் ஒரு தெர்மோகோல் கவர் செஞ்சு வச்சுக்கணும்” என்று தோன்றியது.  உடல்நலத்தைப் பாதிக்கும் விஷயம் என்பதால் பைக்கிலேயே சுற்றும் மக்கள் யோசிக்கவும்.

என்னவரிடம் இதைச் சொன்னபோது, “இதுக்கே இப்படியா? அபுதாபியின் கோடைக்குமுன் இது ஒன்றுமேயில்லை. எப்படியோ எங்க (ஆண்களின்) கஷ்டம் புரிஞ்சாச் சரி” என்றார். அபுதாபி சம்மரில் காரினுள் இதுபோல அனலாக இருக்கும். ஸ்டீரிங்கைக் கூடத் தொடமுடியாது. ஏஸியை ஆன் செய்தாலும், கார் குளிர வெகுநேரம் எடுக்கும்.

இரு புதிய நாகர்கோவில்/கேரளா ஸ்பெஷல் பழவகைகள் உண்ணக் கிடைத்தன. ஒன்று, அயினிச் சக்கை; மற்றது “ஜம்பக்கா”!! யாரக்கா? ஜம்பக்கா..




மேலே படத்தில் இருப்பது அயினிச் சக்கை. இது பலாப்பழ வகையைச் சேர்ந்தது. பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட  ஒரு மினி பழாப்பழம் போலவே, ஆனால் ஆப்பிள் சைஸில் இருக்கும். பலாப்பழத்தின் “மைக்ரோ-மினி” வடிவம் என்றுகூடச் சொல்லலாம். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை.

ஜம்பக்கா(ய்), பார்க்க அழகாய் இருக்கிறது. முழுதாக அப்படியே கடித்துச் சாப்பிடவேண்டியதுதான். ஆனால், இனிப்பே இல்லாமல், துவர்ப்பாய் இருக்கும் என்பதால் தொடர்ந்து சாப்பிட ஆசை வராது.  Looks deceive!! :-D

 
ஆங்கிலத்தில் Wax apple என்று பெயர். சில மனிதர்களைப் போல, தோற்றத்தில் ஜம்பமாக இருந்து, உள்ளே சுவையில்லாமல் இருப்பதால்தான் இதுக்கு “ஜம்பக்காய்” என்று பேர் வந்ததோ? 


மகன்களுக்கு வெள்ளியில் மோதிரம் வாங்க நகைக்கடைக்குப் போயிருந்தேன். அங்கேதான் ’பகல்கொள்ளை’  என்றால் என்னவென்று புரிந்தது. 3 கிராம் எடையுள்ள மோதிரத்திற்கு சேதாரம் 2.5 கிராம் எனச் சொன்னார்கள்!!  பேசியதும் கொஞ்சம் (மட்டும்)  குறைத்தார்கள்.

அதே கடையில், ஒரு நடுத்தரக் குடும்பம், நகைச்சீட்டில் சேர்ந்திருந்த பணத்திற்கு நகை வாங்க வந்திருந்தார்கள். நகைச்சீட்டில் உள்ள பணத்திற்கு ஏற்றபடி, ஒரு சிறிய வெள்ளி டம்ளர் தேர்ந்தெடுத்து பில் போடச் சொன்னார்கள். (ரூ. 2000+)  உடன்வந்திருந்த மகளின் கல்யாணத்திற்காயிருக்கும்போல. அந்த மகளோ, “ரெண்டா வாங்கினாத்தான் என்னவாம்?” என்று அம்மாவைக் கேட்டுக் கொண்டிருந்தாள்!! அதுவல்ல விஷயம்.

நகைச்சீட்டு சேரும்போது செய்கூலி, சேதாரம் கிடையாது என்று சொன்னார்களாம். இப்போது எவ்வளவு நகை வாங்கினாலும் - தங்கமோ, வெள்ளியோ - எவ்வளவு வாங்கினாலும்,  அதில் 0.850 மில்லிகிராமுக்கு மட்டுமே செய்கூலி கிடையாது; மீதி நகைக்கு செய்கூலி உண்டு என்றார்கள்!!  ஒரு கிராம் கூட இல்லை, வெறும் 0.850 மில்லிகிராம்!! அந்தக் குடும்பத்தலைவர் வெறுத்துப்போய் ஒன்றும் வாங்காமலே கிளம்பிவிட்டார். ஏப்ரல், மே கல்யாண சீஸன் என்பதால், கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டுதான் இருந்தது.

ரயில் - சாலைப் பயணங்கள்...  வழக்கம்போலத்தான். சாலைப் பயணங்கள் தற்போது விரைவாகவும், சுகமாகவும் இருந்தாலும், பயமாக இருக்கிறது. அதற்காக ரயிலில் போனால், சர்வம் அழுக்கு மயம்!!

ஒரு ரயில்பயணத்தில், நடு இரவில்  “குடிமகன்” ஒருவன் செய்த அலம்பலில் பயணிகள் எரிச்சலடைய, டி.டி.ஆர். அவரை அவரது சீட்டுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்து,  ”இதுதான் உங்க இடம். இங்கேதான் இருக்கணும். வேற எங்கயும் போகக்கூடாது. சரியா?” என்று மிகப் பவ்யமாகப் பேசினார்!! அரசு ஊழியர், அதுவும் மத்திய அரசு ஊழியர் இவ்வளவு பணிவாகப் பேசியது ஆச்சர்யம்தான். ஆனாலும் ஒரு குடிகாரனிடம்போய் இந்தப் பணிவு தேவையா என்றும் கோபம் வந்தது. ஒருவேளை கோவப்பட்டிருந்தால் அவன் இன்னும் அதிகம் கலாட்டா செய்திருக்கலாம் என்று பொறுமையாப் பேசினாரோ என்னவோ.

அடுத்த ஸ்டேஷனில் வேறொருவர் வந்து அந்த குடிமகனின் சீட்டைத் தன் இடம் என்று சொல்ல, டிடிஆர் செக் செய்து பார்த்தால், குடிமகன் இருப்பது சரியான சீட் எண்தான்; ஆனால் ‘கம்பார்ட்மெண்ட்’ நம்பர்தான் வேறே!!


சமச்சீர் கல்வி பத்தாம் வகுப்பு புத்தகங்கள் பார்த்தேன். நல்லா இருக்கு. Monotone-ஆக இல்லாமல், தியரி, செய்முறை விளக்கம், டிப்ஸ், புதிர் என்று கலர் கலர் கட்டமாக, பார்க்கும்போதே படிக்கும் ஆவலைத் தூண்டுகிறது (- பெற்றோர்களுக்கு!!).  ஒரு மாணவியிடம் (உறவினர் மகள் ) கேட்டபோது, வெறுமே மனப்பாடம் செய்ய முடியாது, புரிந்தால்தான் படிக்க முடியும், அதுவும் அறிவியலில், தியரியாக இல்லாமல், ப்ராக்டிக்கலாக தியரியை அப்ளை செய்து தீர்க்கும் முறையில் பாடங்கள் இருக்கின்றன என்று சொன்னாள்.

தமிழ்ப் பாடத்தில், கொடுக்கப்படும் தலைப்புக்குக் கவிதைகூட எழுதணுமாம். ரொம்பக் கடினமா இருக்குன்னு சொன்னாள். ஒரு பதிவரா இருந்துட்டு கவிதை எழுதத் தெரியலைன்னு சொல்றதைக் கேட்டுட்டுச் சும்மா இருக்க முடியுமா? கவிதை எழுதுவதற்கு எளிய வழி சொல்லிக் கொடுத்துவிட்டு வந்தேன். ஹி.. ஹி.. அதான் “எண்டர் தட்டுறது”!!

  பள்ளிகள் கட்டணம் இன்னும் பயமுறுத்துவதாகத்தான் இருக்கின்றன. இங்கிருக்கும் ஒரு நண்பர், தம் மூன்று பிள்ளைகளையும் இந்தியாவில் பள்ளியில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்தவர், எண்ணத்தை மாற்றிக் கொண்டார். மூன்று பேருக்கும் பள்ளி கட்டணம், பேருந்து கட்டணம், வீட்டுச் செலவுகள் எல்லாமே அமீரகம் போலத்தான் இருக்கின்றது. மேலும் டொனேஷனாகப் பெருந்தொகை வேறு கொடுக்க வேண்டும். எல்லாம் கணக்கிட்டுப் பார்க்கும்போது, பள்ளிப் படிப்பு இங்கு முடித்துவிட்டு, கல்லூரிப் படிப்புக்கு இந்தியா போவதே நல்லது என்று முடிவெடுத்துவிட்டார்.

துபாய்த் தோழியின் தம்பி, சென்னைவாசி. துபாய்க்குச் சுற்றுலா வந்திருந்தவன், “அக்கா, சென்னையைவிட துபாய் சீப்பாகத் தெரிகிறதே!!” என்று சொன்னானாம்.  ஒவ்வொருமுறை இந்தியா போய் வரும்போதும் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது!!

Post Comment

திறப்புவிழா






ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..



இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment

விடை பெறுகிறேன் - 2




தலைப்பைப் பாத்ததும் என்னவோ ஏதோன்னு  அடிச்சுப் பிடிச்சு, “எல்லாம் நல்லாத்தானே போயிட்டிருக்கு, இப்ப என்னாச்சு?”னு கேள்வியோட பதட்டமா வந்திருப்பீங்க. ஒண்ணுமில்ல நல்ல விஷயந்தான். ஜந்தோஜமா வந்தவங்களுக்கு “ஆசை தோசை அப்பளம் வடை”!!  சீரியல் மாதிரி எபிசோட் நம்பரெல்லாம் ஏன்னு கேக்கிறவங்களுக்குப் பதில்  "விடை பெறுகிறேன்-1"-ல் இருக்கு!!

ஏற்கனவே மக்காவுக்குச் சென்று, இறைவனருளால், இரண்டுமுறை “சின்ன ஹஜ்” எனப்படும் “உம்ரா” செய்திருந்தாலும் முழுமையான ஹஜ் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையிருந்தது. சரி, சின்னவன் வளரட்டும், அதுக்குள்ள நமக்கும்  மனசுல ஒரு பக்குவம், maturity, ஒரு முதிர்ச்சி, பொறுப்புணர்ச்சி வந்துடும் அப்படின்னு நினைச்சுக் (நம்ம்ம்ம்ம்பி) காத்திருந்தோம்.

முதல் கண்டிஷன்படி, அல்ஹம்துலில்லாஹ், சின்னவன் நல்லபடியா வளந்துட்டான். ஆனா, அடுத்ததுதான்.... பக்குவம், முதிர்ச்சிக்கு எல்லாம்  அளவுகோல் ஏது?   மேலும், போன பதிவுல சொல்லியிருந்த மாதிரி, நாளை என்ன நடக்கும்கிறது நம்ம கையிலயா? அதனால, அலை எப்ப ஓயறது, தலை எப்ப முழுகுறதுன்னு காத்திருக்காம, ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டுக் கிளம்பிட்டோம். ஆமா, நாங்க இந்த வருட ஹஜ்ஜுக்குப் போறோம், இன்ஷா அல்லாஹ். 
முன்னே ரெண்டு முறை உம்ராவுக்காகப் போனப்போ, ஹஜ் போல  அதிகக் கூட்டமில்லை என்றாலும், அதற்கே அங்கு வந்திருக்கும் பல நாட்டு மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், தனித்துவங்கள்னு நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், பிரார்த்தனைநேரம் என வரும்போது அனைவரும் ஒரே மாதிரி, ஒரே இறைவனை நோக்கி ஒருமுகப்பட்டு நிற்பது ஆச்சர்யமாக இருக்கும். இதுதான் வேற்றுமையில் ஒற்றுமையோ!!!




ஒருமுறை கஃபா அருகில் திறந்த வெளியில் நின்று நாங்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தபோது, மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே சுற்றிலும் உள்ள மூடிய பகுதிக்கு எல்லாரும் வர முற்பட்டுக் கொண்டிருந்தபோது, தடதடவென போலீஸ்காரர்கள் நிறைய பேர் கஃபாவின் ஒரு பகுதியில் சென்று அரண் போல வளைத்து நின்று கொண்டார்கள். நாங்கள் அதைக் கண்டு, ஒருவேளை அரச குடும்பத்தைச் சார்ந்த அல்லது வேறு நாட்டுத் தலைவர்கள் யாரும் வரப்போகிறார்கள் போல (நம்ம ஊர்ப் பழக்கதோஷம்!!)  என்று  நினைத்துக் கொண்டே, மழையிலிருந்து பாதுகாப்பாக கூரையடியில் நின்றுகொண்டே வருவது யாராக இருக்கும் என்று உடன்வந்த உறவினரிடம் (சவூதியில் கிட்டத்தட்ட 20-25 வருடங்களாக இருப்பவர்!!) கேட்க, அவர் சிரித்துக் கொண்டே, “கஃபா மேல விழுற மழைத்தண்ணி வடிகால் வழியா வழியும்போது அதைப் புனித நீர்னு சிலர் பிடிச்சுக்க ஓடி வருவாங்க. அதைத் தடுக்கத்தான் போலீஸ்காரங்க சுத்தி நிக்கிறாங்க” என்றார்!! 


இப்படிப் பல சுவாரசியங்கள் நிறைந்த படிப்பினைகள் கிட்டும் இடம். இந்த முறை பதிவராகவும் இருப்பதாலும், ஹஜ்ஜுக்குப் பெருந்திரள் வருமென்பதாலும், அலைபாயும் கவனத்தைக்  கட்டி இழுத்து பிரார்த்தனையில் செலுத்தமுடியுமா என்று பயமாருக்கிறது என்று தோழியிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். ”அங்கே எப்பேர்ப்பட்ட ராஜாவானாலும் ஒரே மாதிரி எளிய ஆடையில் கூடாரங்களிலும், மைதானங்களிலும் பாலைவன மணல்தரையில் தங்கி, செருக்கு மறைந்து ஏக இறைவனைப் பிரார்த்திப்பதைக் காணும்போது நீ யார் எவரென்றெல்லாம் மறந்து, அந்த மனிதக் கடலில் நீ ஒரு துளி மட்டுமே என்பதை உணரும் தருணத்தில், கவனம் வேறு எதிலும் போகமுடியாது” என்றாள். இறைவன் நாட்டம்.
 

நட்புகளுக்கு என் மனமார்ந்த தீபாவளி மற்றும் பெருநாள் வாழ்த்துகள். நவம்பர் இறுதியில் சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்!!

(பின்னூட்டங்களைப் பப்ளிஷ் செய்யவோ, பதிலளிக்கவோ நேரமில்லை என்பதால் பின்னூட்டப் பெட்டி இந்தப் பதிவிற்கு மட்டும் இல்லை!! நன்றி.)

Post Comment

பட்டிக்காடா பட்டணமா




ஸாதிகாக்கா அழைத்த தொடர்பதிவுக்காக, எங்க ஊரைப் பத்தி எழுதுறேன். பிறந்த ஊரா, புகுந்த ஊரா, வாழும் ஊரான்னு இத்தனை நாளா மனசுக்குள்ள  பட்டிமன்றம் நடத்தியதில் சொந்த ஊர்தான் ஜெயித்தது!! (ஹி.. ஹி.. லேட்டாகிடுச்சுன்னு நேரடியாச் சொல்லமாட்டோம்ல!!)

தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் தின்னவேலிச் சீமைதான் எங்க ஊர். கடல் போல பெருக்கெடுத்து ஓடும் தாமிரவருணி ஆறு உள்ள ஊர். கடல் இல்லாததால், சுனாமி ஆபத்து இல்லைன்னு நிம்மதியா இருந்தோம்; பொறுக்க முடியாம, கூடங்குளம் அணு ஆலையை அந்தப் பக்கம் கொண்டு வந்து வச்சிட்டாய்ங்க!!

பக்கத்து ஊரான நாகர்கோவில் முதல் பக்கத்து மாநிலமான கேரளம் வரை எங்க ஊரைத் தேடிவர வைக்கும் ஆரெம்கேவி, போத்தீஸ் போல அரசன் ஐஸ்கிரீம்ஸும் திருநெல்வேலியின் அடையாளங்களில் ஒன்று!!  நகரில் தனியார் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டல்களோடு போட்டி போடும், மருத்துவக் கல்லூரிகளோடு இணைந்த ஹைகிரவுண்ட் அரசு ஆஸ்பத்திரியும், அரசு சித்த மருத்துவமனையும் உண்டு.

 இது பாரதிராஜா பட கிராமமில்லை;  நெசமா எங்க ஊருதான்!!

திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் டவுண் ஆகியவற்றிலிருந்து 5-6 கிமீ தூரத்தில் உள்ள எங்க ஊரில், தாமிரவருணியின் வாய்க்கால் ஒன்று ஓடுகிறது. வாய்க்காலின் ஒருகரையில் வரிசையான தெருக்களில் வரிசையாக அமைந்த வீடுகள், மறுகரையில் வயல்கள், மலைத் தொடர், அதையொட்டி ரயில் பாதை என்று அழகான ரம்மியமான பசுமைக் காட்சிகள் கொண்ட ஊர்.  அந்த வாய்க்கால்தான் விவசாய ஆதாரமாக மட்டுமின்றி, குளிக்க, குடிக்கவும் ஆகியிருந்தது - அப்போ!!

முற்காலங்களில் விவசாயம், நெசவு, பர்மா/சிலோன் வியாபாரங்கள் ஆகியவையே வருமான வழிகளாக இருந்து, பின்னர் அவற்றின் அழிவினால், பீடி சுற்றுதலில் வந்து நின்றாலும், வறுமை குறையவில்லை எங்க ஊரில். மக்கள் கல்வியின் சிறப்பை அறிந்திருக்கவில்லையாதலாலும், உடன் பசிதீர்க்கவேண்டிய அவலமிருந்ததாலும், பதின்மப் பருவத்திலேயே அரபு நாடுகளில் கீழ்நிலை வேலைகள் செய்யத் தொடங்கி, அதில் பல சிரமங்களை அனுபவித்தபின், கல்வியின் சிறப்பை உணர்ந்து, தற்போது எப்பாடு பட்டேனும், தம்மக்களை - ஆண்-பெண் பேதமில்லாமல் - ஒரு பட்டம் பெற வைத்துவிடுகிறார்கள்.

எங்கள் ஊரும் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ஊர்களைப் போலவே,  கல்வியிலும் சிறந்து விளங்க ஆரம்பித்துவிட்டது என்பதற்கு இவ்வருடம் 10ம் வகுப்புத் தேர்வில் மாநிலத்தில் இரண்டாம் இடமும், +2 தேர்வில் மாநிலத்தில்  நான்காம் இடமும் பெற்றதே சாட்சி. இஞ்சினியர்கள், ஆசிரியர்கள், மென்பொருளாளர்கள், கடுபொருளாளர்கள் (ஹி.. ஹி.. hardware specialists!!), கணக்காளர்கள் என்று பல்வேறு துறையிலும் இளைய தலைமுறையினர் சிறந்து விளங்குகின்றனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள் அரிதாகத் தெரிந்தாலும், சிலர் இருக்கிறார்கள். அத்தோடு மருத்துவக் கல்லூரியில் சேர்பவர்களது எண்ணிக்கையும் வளர்ந்து வருகிறது.  (கலெக்டர்தான் இன்னும் யாரும் ஆகலை :-((   ) ஊருக்குள்ளேயே பல பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி, இஸ்லாமிய கல்லூரிகள் இருப்பதும் வளர்ச்சியின் அறிகுறிகள். இவையெல்லாவற்றோடு இஸ்லாமிய விழிப்புணர்வும் வளர்ந்து வருகிறது, புகழனைத்தும் இறைவனுக்கே.

இத்தோடு, வணிக முறையிலும், எங்கள் ஊர் மிகுந்த வளர்ச்சி கண்டிருக்கிறது.  ஒரு பட்டிக்காடு பட்டணம் ஆனது என்று சொல்லுமளவு, முன்பெல்லாம் எதற்கெடுத்தாலும் திருநெல்வேலி ஜங்ஷன் அல்லது டவுண் செல்ல வேண்டிய நிலை மாறி, தற்போது எல்லாமே ஊருக்குள்ளேயே கிடைக்கிறது. முஸ்லிம்களே பெரும்பான்மையாக உள்ள ஊர் என்றாலும், எல்லா தரப்பினரும் வாணிபம் செய்கிறார்கள் எங்கள் ஊரில். உள்ளுர்லயே தரமான மருத்துவர்களும் உண்டு. எனினும், சில சிறப்பு தேவை/சேவைகளுக்கென்று நகருக்குச் செல்வோம்.

மற்றபடி, என் சொந்த ஊர் மிகவும் எளிமையான ஊர். நிறையப் பதிவர்கள் அவரவர் ஊரின் சிறப்பாகக் குறிப்பிட்டிருந்ததுபோல, விதவிதமான சாப்பாட்டு வகைகளென்று லிஸ்ட் போட்டு எழுதுமளவு இல்லையென்றாலும் மற்ற ஊர்களில் உள்ளதுபோல, மருந்துச் சோறு, சேமியா பிரியாணி, தக்கடி, மடக்குப் பணியாரம், ஓட்டுமாவு, எனச் சில உண்டு. இதையெல்லாம் தாண்டி, உணவைப் போலவே, எங்கள் ஊரின் பல எளிமையான நடைமுறைகள்தான் எங்கள் ஊரின் தனித்துவம் என்று நினைப்பதால், அவற்றைப் பகிர்கிறேன்.

 #%#  ஊருக்குள்ளேயேதான் கல்யாண சம்பந்தம் செய்துகொள்வார்கள். மிக மிக அரிதாகத்தான் வெளியூர் சம்பந்தம் செய்வது.

 #%#  எல்லாருமே உள்ளூர்க்காரர்கள் என்பதால், யார் வீட்டுக்குச் சென்றாலும், தேநீர்/ஹார்லிக்ஸ்/பூஸ்ட் மட்டுமே பரிமாறப்படும். நெருங்கிய உறவுகளாக இருந்தால், அல்வா, மிக்சர் போன்ற ஸ்நேக்ஸும் பரிமாறப்படும். விருந்துக்கென்று பிரத்யேகமாக அழைக்கப்பட்டாலொழிய உணவருந்துவதில்லை. (அதுவே வெளியூர்க்காரர்களாக இருந்தால், எந்நேரமானாலும் விருந்துடன் பலமான கவனிப்பு இருக்கும்). 

 #%#  கல்யாணத்திற்கு அல்லது விசேஷங்களுக்கு அழைப்பதும் இன்னார்தான் போய் அழைக்க வேண்டும் என்ற வரைமுறையெல்லாம் இல்லை. பெரும்பாலும் வீட்டிலிருக்கும் பள்ளியிறுதி/கல்லூரி மாணவர்கள்தான் இதற்குப் பொறுப்பு. வீட்டுப் பெரியவர்கள் தெருவாரியாக லிஸ்ட் போட்டுக் கொடுக்க, இவர்கள், அழைக்கப் போவார்கள். குடும்ப வகையறாக்களை அடையாளம் சொல்ல, உடன் ஓரிரண்டு நடுத்தர வயதுப் பெண்களும் செல்வார்கள்.

#%#  அழைக்கச் செல்லும் வீட்டில் யார் இருந்தாலும் பத்திரிகையைக் கொடுத்து விபரம் சொல்லிவிட்டு வந்துவிடலாம். பெரியவர்களை நேரில் பார்த்துத்தான் சொல்ல வேண்டும் என்றில்லை. “என்கிட்டே நேரில சொல்லல” அல்லது “எம்பொண்டாட்டிய அழைக்கலை” என்றெல்லாம் வீம்பு பிடிக்க வழியில்லை!!
 
#%#   ஆனால், அழைக்கப்படும்போது முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, உங்களை கல்யாணத்திற்கு மட்டும் கூப்பிடுகிறார்களா அல்லது விருந்திற்கும் அழைக்கிறார்களா என்பதை!! ஆமாம், “இந்த நாள், இந்த நேரம் ஆண்-பெண் அனைவரும் சாப்பிட வாங்க” என்று அழைத்தால்தான் விருந்துண்ண செல்லவேண்டும்!! அதிலும், உறவின் நெருக்கத்தைப் பொறுத்து, ஆண்-பெண் அனைவரும், ஆண்கள் மட்டும் அல்லது குடும்பத் தலைவர் மட்டும் என்று விருந்து அழைப்புகள் அமையும். ரொம்பக் கவனமாக் கேக்கணும்!!

#%#    வீட்டில் பெரியவர்கள் இல்லாத சமயம், சிறுவயதினர் மட்டும் இருந்தால், இதைக் கவனிக்கத் தவறிவிட்டால், பெரியவர்களிடம் திட்டு வாங்க வேண்டியிருக்கும்!! (நாங்களும் வாங்கிருக்கோம்ல!!) ஏனெனில், கூப்பிட்டும் விருந்துக்குப் போகவில்லையென்றால், நமது அதிருப்தியைத் தெரிவிப்பதாகக் கருதப்படும்.

#%#    இது உங்களுக்கு வியப்பைத் தந்தாலும், மிகவும் வசதியான முறையாக எனக்குத் தெரிகிறது. முதலில், விருந்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை தெளிவாகத் தெரிந்துவிடுமாகையால், உணவு தயாரிக்கும் அளவை முடிவு செய்வது எளிது. வீணாகும் அளவு வெகுவாகக் குறையும். மேலும், விருந்துக்குச் செல்லவிலையென்றாலும், உறவின் நெருக்கத்தைப் பொருத்து, விருந்து முடிந்தபின், உணவை நம் வீட்டிற்கு அனுப்பிவைப்பார்கள். வரமுடியாத வயதானவர்கள், வர வசதிப்படாத நிலையில் உள்ளவர்கள் இருப்பது முன்பே தெரிந்தால், விருந்து தயாரானதும் உடன் அவர்களுக்கு வீட்டிற்கே கொடுத்துவிடுவார்கள்.

#%#    வெளியூர்க்காரங்களுக்கு இந்த விதி பொருந்தாது. உங்களை எங்க வீட்டு கல்யாணத்துக்கு அழைச்சோம்னா, அது கல்யாணத்தன்று நடக்கும் விருந்துக்கும் சேர்ந்த அழைப்புதான்!! ஆனா, வராதவங்களுக்கு பார்ஸல் அனுப்பப்படமாட்டாது என்பதைக் கவனத்தில் கொள்ளவும்!! ;-)))))

 #%#   எவ்வளவு பெரிய ஆளானாலும், கல்யாணம், விருந்து எல்லாம் வீட்டில்தான். நோ கல்யாண மண்டபம்!! ஒரு வீட்டில் விசேஷம் என்றால், விருந்து வைப்பதற்கு, வட்டாரத்தினர் (பக்கத்து வீடுகள்) தம் வீட்டின் முன்னறை/ஹாலைக் காலி செய்து தரவேண்டியது கட்டாயக்கடமை. சமையலும் நடுத்தெருவில் வைத்துதான் நடக்கும். சமையலுக்கு தயார்செய்வதிலும், கலத்தில் (பந்தியில்) பரிமாறுவதிலும் வட்டாரத்துக்காரர்கள்  உதவவேண்டும்.

#%#    கல்யாணம் முடிந்தபின், பெண் தினமும் மதியம் தன் தாய் வீட்டிற்கு  வந்துவிட்டு, அந்தியில்தான் கணவன் வீட்டிற்குச் செல்வாள். கூட்டுக் குடும்பங்கள் என்பதாலும், முன்பு தனியறைகள் இல்லா மணமகன் வீட்டில் பெண்ணுக்கு ஓய்வு எடுக்க வசதியிருக்காது என்ற காரணத்தாலும் ஏற்படுத்தப்பட்ட பழக்கமாக இருக்கலாம். இப்போதும் தொடர்கிறது.

#%#    திருமணமான புதிதில் முதல் ஒருவாரம் வரை மணமகன் வீட்டினர் வந்து மாலையிலும், அடுத்த நாள் மதியம் பெண்வீட்டினரும் வந்து பெண்ணை  அழைத்துப் போவார்கள். ஏன்னா, புதுமணப்பெண்ணுக்கு மாப்பிள்ளை வீடு போய்வர வழிதெரியாதே? அதன்பிறகு பெண்களே சென்றுவருவார்கள். இப்போல்லாம், (பெரும்பாலும்) பைக் வைத்திருக்கும் சகோதரனிடமும், கணவரிடமும் இந்த ட்யூட்டி தரப்படுகிறது!!

#%#    கல்யாணத்தில் பெண்ணுக்குப் போடப்படும் நகைகளின் அளவு என்பது மணமகள் வீட்டினரின் இஷ்டம்!! எந்த டிமாண்டும் வைக்கப்படமாட்டாது!! ஒரே டிமாண்டான வரதட்சணையையும் இப்போல்லாம் பெரும்பாலான இளைய தலைமுறை ஆண்கள் தடுத்துவிடுகிறார்கள்.

#%#    மேலும் கல்யாணச் சீர் என்பது கட்டில்-மெத்தை தவிர்த்து, 11 பாத்திரங்கள் மட்டுமே!! இதில் கும்பா (சின்னக் கிண்ணம்) முதல் பெரிய கொப்பரை வரை அவரவர் வசதிப்படி எவர்சில்வர் மற்றும் வெண்கலத்தில் வாங்கிக் கொடுக்கலாம்.

#%#    கல்யாண விருந்தும், இரு தரப்பும் தனித்தனியே தத்தம் உறவினர்களுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலும், இந்த விருந்து கல்யாணத்திற்கு முந்தைய தினம் “ஊர்ச்சாப்பாடு” என்ற பெயரில் நடத்தப் படும்.

#%#    பொதுவிருந்து என்பதும் - வலியவரானாலும், எளியவரானாலும் -  நெய்ச்சோறு, மட்டன் குழம்பு, தாளிச்சா என்ற எளிமையான ஒரே பொதுமெனுதான்!! அதிலும், மட்டன் குழம்பு மட்டும் ஒருமுறைதான் பறிமாறப்படும். “ரீ-ஃபில்” கிடையாது!!
     #%#   ஆஹா, இவ்வளவு எளிமையா என்று தோணினாலும், இதில் சேமிச்சதையெல்லாம் விருந்துகளில் பெண்வீட்டினர் விட்டுவிடவேண்டிவரும். பெண்வீட்டுத் தரப்பில், மணமகன் வீட்டாருக்கு வைக்க வேண்டிய விருந்துகள் பலவகை உண்டு.  ஏழுநாட்கள் பெண் அழைப்பு விருந்து வைத்து, மணமகன் வீட்டிற்கும் தினமும் கொடுத்து விடுவது, மறுவீடு, மாமி பசியாற, மாப்பிள்ளை பசியாற, இன்னும் என்னென்னவோ பெயர்களில் விருந்து உண்டு. மணமகன் தரப்பிலோ ஏழுநாள் மணமகள் அழைக்க வருபவருக்கு விருந்து தவிர, ஒன்றிரண்டு சிம்பிளான விருந்துகள் மட்டுமே.

    இருந்தாலும், பல ஊர்களின் பழக்க வழக்கங்களைக் கேட்ட/பார்த்த பிறகு, எங்க ஊர் பழக்கங்கள்தான் எளிமையா தெரியுது!! எனினும், இதுவே அதிகபட்சச் சுமையாகத் தெரியுமளவுக்கு வறுமையும், அறியாமையும்  இன்னும் இருக்கிறது ஊரில்.

    தற்போது இளைஞர்கள் மத்தியில் இஸ்லாமிய விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வரதட்சணையைத் தடுத்து வந்தாலும், மற்றவைகளைத் தடுக்க அதிக முயற்சி எடுப்பதில்லை. ஏனெனில் பலருக்கும் இத்தகைய பழக்கவழக்கங்கள் இருப்பதே தெரிவதில்லை என்பதோடு, இதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம் என்பதாகக் கருதிவிடுவதாலும் கூட இருக்கலாம். அதேசமயம், சில செல்வந்தர்கள், தம் அந்தஸ்தை நிரூபிக்க எளிமையாக இருக்கும் நடைமுறைகளையும் மாற்றி வருவதால், உண்மையாகவே இவற்றைத் தடுக்க நினைப்பவர்களுக்கும், எளியவர்களுக்கும் தடைக்கல்லாக அமைகிறது.

    எனினும், மாற்றங்கள் ஏற்படத்தான் செய்கின்றன, மனங்களிலாவது.

    Post Comment

    தேசிய நெடுஞ்சாலைகள்




     
     
    (இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில்  செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)

    என்னே ஒரு பசுமை! அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்! 
    சென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்!!

    சாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் வாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான். 

    திருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திருச்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.

    இப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்!

    முதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை! பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் "single carriage way" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.



    ஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way)  இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு  குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்!!

    திருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள்,  தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.

    இந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை. 

    காரணங்கள்...
     
    இரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர். 

    அதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்!!

    நாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு "piaggio" எதிரே வந்து தடுமாற வைத்தது!! 

     www.team-bhp.com

    அதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன!

    கிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே!



    மேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது.  தடம் மாற்றும்போது  முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.

    இவற்றையெல்லாம் எப்படிக் களைவது?
     
    சிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

    மக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்!

    மேலும், நெடுஞ்சாலைகளில்  நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு!
      
     

    Post Comment

    டிரங்குப் பொட்டி - 11




    இம்முறை ஊருக்குப் போகும்போது (இன்னும்ம்மா ஊர்ப்புராணம் முடியலைன்னு கேக்கிறது கேக்குது!) எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் போனோம். இருக்கையில் இருக்க டி.வி.யில், ஃப்ளைட் கிளம்பும்போதும், இறங்கும்போதும் வெளியே இரண்டு கேமராக்கள் வைத்து லைவ்வாகக் காட்சிகளை ஒளிபரப்புகிறார்கள். அழகான காட்சிகள்!! அதுவும், லேண்ட் ஆகும்போது ஓடுதளம் தொட்டு சரசரவென ஓடி நிற்கும்போது ஆங்கிலப் படம் பார்ப்பதுபோலத் திரில்லா இருந்துது!!

    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இத்திஹாத் இரண்டிலும் சிலர் அளவுக்கதிகமா குடிச்சுட்டு சலம்பல் பண்ணிகிட்டிருப்பாங்க. அவங்ககிட்ட ஏர்ஹோஸ்டஸ் அக்காக்கள் கெஞ்சிகிட்டு இருப்பாங்க, ப்ளீஸ், ப்ளீஸ்னு. ஆனா ஒரு பலனும் இருக்காது; இறங்கற வரை அவங்க பிரசங்கங்களைக் கேட்டுத் தொலையணும். இப்பவும் அதே மாதிரி ஒரு சேட்டன் ஆரம்பிச்சார். அக்கா கெஞ்சியும் அடங்கலை; அப்புறம் கோ-பைலட் வந்தார்; அவர்கிட்ட குனிஞ்சு ஒரு ரெண்டு நிமிஷம் பேசினார் (மிரட்டினார்??); அதுக்கப்புறம் மூச்!!

    **********^^^^^^^^^^^^^************

    பதிவுகளைப் பற்றி பதிவுலகில் அல்லாமல், ட்விட்டர், ஃபேஸ்புக், குழும மடல்கள் எல்லாத்துலயும் டிஸ்கஷன் நடக்குதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னும் சொல்லப் போனா, சர்ச்சையான சமயங்களில், பதிவுகளில் பே(ஏ)சப்படுவதைவிட, மேற்சொன்ன இடங்களில்தான் அதிகக் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன, விமர்சிக்கப் படுகின்றன என்றும் அறிகிறேன். இது எந்தளவு சரி என்பது ஒருபுறமிருக்க,  இவை எதனிலும் இல்லாத (நம்புங்கள், நிஜம்தான்) என்னைப் போலப் பதிவர்களின் பதிவுகள் குறித்து கருத்துரையாடல் நடந்தால் நான் எப்படித் தெரிந்துகொள்வது, பதிலளிப்பது? (ரொம்ப ஓவர் ஸீனா இருக்கோ?)

    உண்மையாகவே ட்விட்டர், ஃபேஸ்புக்,(அக்கவுண்ட் மட்டும்(மே) உண்டு) குழும மடல்கள் என்று எவற்றிலும் நான் பங்குபெறுவதில்லை. அவற்றில் இணைந்தால், ஒரு அடிக்‌ஷன் வந்துவிடுமோ என்ற பயமே காரணம்; பிளாக்கே நேரத்தைக் கொல்கிறது. இருந்தாலும், எல்லாரும் அதைப் பற்றிப் பேசும்போது, நாம் அப்டேட்டாக இல்லியோ என்ற தாழ்வு மனப்பான்மை வருவது போலிருந்தாலும், பிடிவாதமாக விலகி இருக்கிறேன்!!


    **********^^^^^^^^^^^^^************

    பாகிஸ்தானின் வெள்ளப்போக்கும், அதனால் ஏற்பட்ட/ படவிருக்கும் இழப்புகள் சுனாமியால் உலகுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமாம். இந்த இழப்புகளிலிருந்து மீண்டு வருவதற்கு எத்தனை காலம் எடுக்கும் என்று தெரியவில்லை; 1947 பிரிவினையின்போது இருந்ததை விட மோசமான நிலை,  நாட்டின் முன்னேற்றம் 50 ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளப்பட்டது என்று பிரதமர் கூறியுள்ளார். 20 மில்லியன் மக்கள் வீடிழந்து நிற்கிறார்கள். இன்னும்  பாதிப்புகள் தொடர்கின்றன. பகை நாடாக இருந்த போதிலும், இப்படி பாதிக்கப்பட்டு, அழிவின் விளிம்பில் நிறபதைக் கண்டு மனம் கலங்கத்தான் செய்கிறது. அதுவும் பாதிக்கப்பட்டவர்கள் உணவுக்குச் சண்டை போடும் படங்களைக் கண்டால்.....

    இன்னும் கொடுமையாக, வழங்கப்பட்ட நிவாரண உணவுப் பொருட்கள், சமூக விரோதிகளால் சந்தையில் விற்கப்படுவதாக வந்தத் தகவல்கள் தமிழகத்தில் சுனாமி நிவாரண நிதியை நினைவுபடுத்தியது. பாதிக்கப்பட்ட மாகாணங்களிலிருந்து உயிர்தப்ப அண்டை நகரங்களில் நுழைபவர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் சில விஷமிகள் விஷப் பிரச்சாரம் செய்கிறார்களாம்!!


    **********^^^^^^^^^^^^^************

    பல வருடங்களுக்கு முன், வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற ஆண்கள் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, வந்த முதல் வாரத்திலேயே உடல்நலக் குறைவால் அவதிப்படுவார்கள். கேட்டால், “தண்ணி மாறுச்சுல்ல,  அதான்” என்பார்கள். சிலர் நாட்டு வைத்தியமாக, ஊருக்கு வந்தவுடன் முதலில் சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்டு விட்டு பின் தண்ணீர் குடிக்கச் சொல்வார்கள்.

    இப்பவும் பல நோய்களுக்கு நீர்தான் ஆதாரம் எனும்போது, சில வாரங்கள் மட்டும் விடுமுறைக்கு வருபவர்கள், வெளியே தண்ணீர், ஜூஸ் போன்றவை  அருந்தாமல் கவனமாக இருப்பதில் தவறில்லையே? மினரல் வாட்டர் கேன்கள், வாட்டர் ப்யூரிஃபையர்கள் எங்கள் ஊரில் இன்னும் புழக்கத்திற்கு வரவில்லை; தண்ணீரைக் கொதிக்க வைத்துதான் பயன்படுத்துகிறோம். ஆனால், எத்தனை பேருக்கு 15 - 20 நிமிடங்களாவது கொதிக்க வைத்தால்தான், கிருமிகள் முழுதும் அழியும் என்பது தெரியும்? ஓரளவு சூடானதும் அடுப்பை அணைத்து விடுகிறார்கள். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை, கேஸ் விலை அப்படி!!


    உறவினர்கள் வீட்டுக்குச் செல்லும்போது, நான் எதையும் மறுப்பதில்லை; ஆனால் பிள்ளைகளுக்குக் கொடுப்பதில் கவனமாகவே இருப்பேன். அவர்களுக்கு உடல்நலக் குறைவு என்றால் எதுவும் ஓடாது அல்லவா? உறவினர்களும் அதைப் புரிந்து கொள்கிறார்கள்; குற்றம் பிடிப்பதில்லை என்பது ஆறுதலாக இருக்கிறது.

    **********^^^^^^^^^^^^^************

    சென்ற வாரம் ஒரு இஃப்தார் விருந்துக்குச் சென்றிருந்தோம். இரவு உணவாக இடியாப்பம் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து பந்தியில் சிலர் பேசிக்கொண்டார்கள்:
    “இடியாப்ப அச்சு சரியில்ல போல; அதோட மாவுல தண்ணியும் கூடிப்போச்சு போல, அதான் திரிதிரியா இருக்கு”
    “ஆமா, மாவு கிண்டறதுலதான் இருக்கு இடியாப்பத்தின் டேஸ்ட். என்னச் சொல்றீங்க?”
    “இல்ல, நான் பிழிய மட்டும்தான் செய்வேன். மாவு கிண்டித் தந்துடுவாங்க. அதனால தெரியல.”
    “அப்படியா, பரவாயில்லையே. நீங்க என்ன ஒண்ணுமே சொல்லல?”
    “இதுவரை இடியாப்பம் செஞ்சதில்ல வீட்டில. நீங்கல்லாம் பேசிக்கிறதைப் பாத்தா இது ரொம்ப கஷ்டம் போல! இனி கேட்டா செய்யமுடியாதுன்னு சொல்லிடணும்!”

    இதுல என்ன மெஸேஜ்னு கேக்கிறீங்களா? இப்படி பேசிக்கிட்டது சில ரங்கமணிகள்!!
      
     

    Post Comment

    நகர்வலம் - 2




      
     
    இதோ நம்ம நகர்வலத்தோட இரண்டாம் பாகம்!! ( ஒரு வேலையை ஆரம்பிச்சா, முழுசா முடிக்கிற வரை விடமாட்டம்ல!!)


    [#]    நாகர்கோவிலில் பிளாஸ்டிக் கவர்கள் தடை செய்து விட்டார்கள் என்றதும் சந்தோஷமாருந்தாலும், அதை நம்பிப் பிழைப்பு நடத்தும் குடும்பங்கள் என்னாகுமோ என்ற கவலையும் இருந்தது. இப்போது அழகாக, டிஷ்யூ பேப்பர் போன்ற மக்கக் கூடிய மெல்லிய துணியில் அழகான பைகள் வந்துவிட்டன். ஆனாலும் பல கடைகள் இதை இலவசமாகத் தருவதில்லை. (ஹி. ஹி.. அப்படியே பழகிடுச்சு..)

    [#]    ஆனா, நாகர்கோவில்ல ஹெல்மெட் கட்டாயமாக்கப்படாததும்,  குப்பை சேகரிப்பது சரியாக நடைமுறைப்படுத்தப்படாததும் ஆதங்கமா இருக்கு. அதச் செஞ்ச கலெக்டர் இதுவும் செஞ்சா நல்லாருக்கும்.

    [#]   நெல்லையிலும் பயங்கர போக்குவரத்து நெரிசல் எங்கப் பாத்தாலும். பாளை ஹிக்கின்பாதம்ஸ்லருந்து, வ.உ.சி. ஸ்டேடியம் எதிர்ல ஈகிள் புக் ஷாப் வரைக்கும் (அஞ்சு நிமிஷம்கூட ஆகாது) நடந்து போலாம்னு பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போயிட்டுத் திணறிட்டேன்.

    [#]   நெல்லை ஆரெம்கேவியில செக்யூரிட்டி சோதனைகள். போத்தீஸில் சோதனைகள் எதுவும் இல்லை. ஏன்? 

    [#]   பல நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது: நெல்லை - நாகர்கோவில், மதுரை-திருச்சி, சென்னை-புதுவை - எல்லா சாலைகளுமே சூப்பர். MNC நிறுவனங்கள் மேற்பார்வையும் பங்களிப்பும் செய்து உருவாக்கிய சாலைகள். அதே சமயம், ஊருக்குள்ள காண்ட்ராக்டர்கள் போடுற சாலைகள் ஒரு மழைக்கே தாங்குறதில்லயே ஏன்னு கேள்வி வருது.

    [#]  திருச்சி - மதுரை சாலையில் உள்ள பசுமையான சூழல் ஆச்சர்யம் தந்தது. முதல்முறை பகல்ல இந்த வழியே செல்வதால் மலைகளும், மரங்களும், தோப்புகளும் நிறைந்த சுற்றுப்புறம் வியப்பளித்தது. (இதுவரை ரயிலில்தான் (இரவில்) இந்த ஊர்களின் வழியேச் சென்றிருக்கிறேன்).

    [#]   மதுரை அருகே இருக்கும் ஆனைமலை - அழகான காட்சி. ரொம்ப வியந்து பார்த்தேன். இந்த மலையைக் குடைந்து ஒரு “சிற்பப் பூங்கா” ("Sculpture Park") உருவாக்க அரசு திட்டமிட்டதாகவும், அது இந்த மலையிலுள்ள  கிரானைட்டைக் கவர்வதற்கான சதி என்று எழுந்த எதிர்ப்பால் திட்டம் கைவிடப்பட்டதாகவும் அறிந்தேன். 

    ஆனைமலை
     இந்த மலை இப்படியே இருப்பதுதான் அழகு என்று தோன்றுகிறது. என்னா நீளமான மலை, ஒரு ஒற்றைக்கல் சிற்பம் போல!! ஆனை படுத்திருப்பதுபோல இருப்பதால் இந்தப் பெயராம்!! (எங்களுக்கே பாடமான்னு கேக்கக்கூடாது; ஒரு ஆர்வம்தான்!!)

    [#]   மதுரை நாயக்கர் மஹால் போகத் திட்டமிட்டு, வழக்கம்போல பிள்ளைகளின் உடல்நிலையால் கேன்ஸல் ஆனது.  தமிழ்நாட்டுலயே இப்படி பாக்க வேண்டியது எவ்வளவு இருக்கு!!

    [#] திருச்சி ஒரளவு சுத்தமாகத் தெரிகிறது, மற்ற ஊர்களை விட.  

    [#]   இன்ஷ்யூரன்ஸில் வேலை பார்க்கும் நண்பர், மக்களிடையே மெடிக்கல் இன்ஷ்யூரன்ஸ் குறித்து நல்ல விழிப்புணர்வு இருப்பதாகச் சொன்னார்.  அவரது அலுவலக வாசலில் பான்கடை வைத்திருப்பவர், தனது குடும்பத்தின் மருத்துவக் காப்பீட்டுக்காக 17,000 ரூபாய் பிரீமியம் கட்டுகிறாராம்!!

    [#]  எல்லா ஊரிலும், வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பதே இல்லை;  உறவினர் வீட்டில் வேலை பார்ப்பவர், தான் வேலை பார்க்கும் ஐந்து வீடுகளிலும் ரேஷன் கார்டை வாங்கி அதில் அரிசியை வாங்கி வெளியே விற்கிறார். அன்றாட உணவு வேலை செய்யும் வீடுகளில் (பழசில்லை; சூடானதுதான்) அதிகப் படியாகவே கிடைத்துவிடும். தவிர, அரசு தரும் ரேஷன் அரிசி, மளிகைப் பொருட்கள், காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு, தொலைக் காட்சி, வீட்டு வசதித் திட்டத்தில் வீடு,... ம்ம் ..

    [#] நெருங்கிய உறவினரொருவர்,  இயற்கை விவசாயம் செய்ய விரும்பி நிலம் வாங்க முயற்சி எடுத்தார். பண்ணைக்காரர்கள் முதல் சிறு விவசாயிகள் வரை, ஏன் நில புரோக்கர் கூடச் சொன்ன அறிவுரை “வேண்டாம். வாங்காதீங்க!” காரணம், மழையோ, தண்ணீர் தட்டுப்பாடோ இல்லை; வேலைக்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதே!!

    [#] வீடு கட்டுபவர்களிடையேகூட இதே புலம்பல்தான், கட்டுமானப் பணியாளர், தச்சு வேலை செய்பவர், எலெக்ட்ரீஷியன், ப்ளம்பர், பெயிண்டர் - எல்லாருக்குமே பயங்கர டிமாண்ட்; சம்பளமும் கொஞ்ச நஞ்சமில்லை!! அப்புறமும் வெளிநாட்டு வேலைக்கு வந்து கஷ்டப்படுபவர்களும், ஏமாறுபவர்களும் குறைவதாக இல்லயே!!
      
     

    Post Comment

    நகர்வலம் - 1




     
    இந்தியா வந்த பயணக் குறிப்புகள் எழுதுறேன்னு சொல்லிருந்தேன்லியா, இதோ: (வாக்குத் தவறக்கூடாதுல்லா!)

    சிங்காரச் சென்னை:

    ##  கிட்டத்தட்ட எட்டு வருஷங்கள் கழிச்சு சென்னைக்கு வந்தேன். நிறைய மாற்றங்கள்!! புதுப்புது கண்ணாடி வேய்ந்த கட்டிடங்களில் பன்னாட்டு நிறுவனங்கள் அபரிமித வளர்ச்சியைக் காட்டுகின்றன. 

    ##  சென்னையில எங்குநோக்கினும் காணக்கிடைப்பது ரெண்டு விஷயங்கள்: மேம்பாலங்களும், பைக்குகளும்!!

    ##  ”சைக்கிள் கேப்பில ஆட்டோ நுழைவது” எல்லாம் பழைய மொழி; புதுசு, “காற்றுபுகா இடத்துலயும் ரெண்டு பைக் நுழையும்!!” அதுலயும் “தூணிலயும் இருப்பான், துரும்புலயும் இருப்பான்”கிற மாதிரி, எதிர்பார்க்கவே முடியாத சைடுலருந்து ஒரு பைக் வந்து உங்களத் திணறடிக்கலாம்.

    ##  பைக் ஓட்டுநர்கள் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட் போட்டுருப்பதைப் பாத்து ரொம்ப சந்தோஷமாருந்துச்சு!!

    ##  ஆனா, அதுல 80 சதவிகிதத்தினர் ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்பை மாட்டாமல் விட்டிருந்ததப் பாத்து ...

    ##  நந்தனம் ஷெரட்டான் நுழைவாயிலில், காருக்கு பாம் டிடெக்டர், ஆளுக்கு மெட்டல் டிடெக்டர், மொபைல், பர்ஸ், பெல்ட் உட்பட எல்லா பொருட்களுக்கும் ஸ்கேன்னர் என்று ஏர்போர்ட் ரேஞ்சில் செக்யூரிட்டி சோதனைகள்!! (திருநெல்வேலியில் ஆரெம்கேவி யிலயும் இது போல சோதனைகள்!!)

    ##  சங்கீதாவில் சாப்பிட்டுட்டு, ஒரு மில்க் ஷேக் குடிச்சோம். பில்லைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது, (லிமிடெட்) மீல்ஸ் 60 ரூபாய், மில்க் ஷேக் 90 ரூபாய்!! தமிழ்நாட்டுல அரிசி பருப்பு ரொம்ப சீப் போல!!

    ##  டிராஃபிக் ஜாம் - துபாய், அபுதாபியெல்லாம் தோத்துடும். புதுச்சேரியிலருந்து சென்னை நுழையிற புறநகர்ப்பகுதிகள்லயே  கடும்நெரிசல் ஆரம்பிடுச்சு!! இத்தனை மேம்பாலங்கள் இருந்துமே, இவ்ளோ நெரிசல்னா....

    ##  சென்னை மக்களைப் பார்க்கப் பார்க்கப் பரிதாபம் இன்னும் அதிகமாகுது; தமிழ்நாட்டுல செட்டில் ஆகறப்போ, சென்னையில் மட்டும் செட்டில் ஆகிவிடக்கூடாதுன்னு வழக்கம்போல வேண்டிகிட்டேன்!!


     புதுச்சேரி:

    ##   கேரளா போல பசுமை, காலநிலை உடைய நகரம்.

    ## ஆரோவில் - அமைதியான, பசுமையான சூழ்நிலை, இயற்கை முறை உணவு,  சூரிய மின்சாரம் என்று எல்லாமே மனதைக் கவருகிறது.

    ## ஆரோவில் வளாகத்தில் உள்ள பெரிய ஆலமரத்தின் விழுதுகள், தனியே ஒரு மரம் போல உறுதியாக வியக்கவைக்கின்றன. (ஆனாலும் அடையாறு ஆலமரம்தான்..)

    ##  நகர் முழுவதும் வித விதமான மதுபானக் கடைகள் ... லிக்கர், விஸ்கி, பிராண்டி, ஒயின்.. இன்னும் என்னென்னவோ... இதுக்கெல்லாம் என்ன வித்தியாசம் என்று பெரியவன் கேட்டான். “ஏண்டா என்னைப் பாத்தா எப்படித் தெரியுது?” ன்னு கேட்டேன்.  இதுல ஒரு “லிக்கர் ஹோல்சேல் ஷாப்” வேற.. இதுக்குமா ஹோல்சேல்?!!

    ##   ”பொட்டானிக்கல் கார்டன்” என்று ஒரு பூங்கா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட போனோம். உள்ளே போனால், ஓங்கி உயர்ந்த ஒரு அடர்ந்த காட்டுக்குள் போன ஃபீலிங். ஆனால் பராமரிப்பு என்பதும் இல்லை; மேற்பார்வையும் இல்லை என்பது அங்கங்கே வழியில் “கிடப்பவர்”களாலும், கும்பல்களாக இருந்தவர்களாலும் தெரிந்தது. போன சுருக்கில் வெளியே வந்துவிட்டோம். யாரும் போய்டாதீங்க!!

    ## ”ஸண்டே மார்க்கெட்” - பிளாட்பாரக் கடைகளில் பேரம்பேசி வாங்கும் அனுபவம் பல வருடங்களுக்குப் பின் கிடைத்தது. நிறையப் புத்தகக் கடைகளும் இருந்தன; ஆசையாப் போய்ப் பாத்தா, எல்லாமே மெகா சைஸ் பொறியியல், மருத்துவப் புத்தகங்கள். நம்ம ஏரியா இல்லை!!
     
     
     

    Post Comment

    விடைபெறுகிறேன் - 1




     
     
    ஹி.. ஹி.. என்னடா, காணாமப் போய் ஒரு மாசம் கழிச்சு ஆற அமர வந்து விடை பெறுகிறேனேன்னு பாக்குறீங்களா? என்ன செய்ய, எவ்வளவு ப்ளான் பண்ணாலும், ஊருக்குப் போற சமயத்துல ஹரிபெரியாகி செய்ய நினைச்சு விட்டுப் போன பல விஷயங்கள்ல இந்த விடைபெறுகிறேன் பதிவும் ஒண்ணு.

    வரும்போது சொல்ல விட்டுப்போனா என்ன, போகும்போது மறக்காம சொல்லிட்டுக் கிளம்பிடுவோம்ல!!  என் இனிய தமிழகமே!  என்னுயிர் தமிழ் மக்களே!! உங்களிடமிருந்து தற்போது விடை பெறுகிறேன்!! கூடிய சீக்கிரமே மீண்டும் சந்திப்போம்!! அதுவரை, என் பதிவுகளில் என்னைக் கண்டு ஆறுதல் கொள் தமிழினமே!!

    அதென்னா தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? இது இப்ப ஊருக்கு வந்துட்டுப் போறதுனால விடை பெறுகிற பதிவு. அப்புறம், ஒருவேளை என்னை யாராவது ஏதாவது சொல்லி திட்டிட்டாங்கன்னா, கோவப்பட்டு இன்னொரு விடைபெறுகிறேன் பதிவு போடவேண்டி வரலாம்!! அப்புறம், என்னை வேற யாராவது `உங்கள் சேவை பதிவுலகுக்குத் தேவை`ன்னு கெஞ்சினதும்(!!)  திரும்பி வந்துடுவேன்; அப்புறம்,  அடுத்து ஊருக்குப் போகும்போது, வரும்போது விடைபெறும் பதிவு போடணும். இப்படி நிறைய தேவை இருப்பதால, இப்பவே முன்னெச்சரிக்கையா நம்பர் போட்டுட்டேன்!!

    அப்புறம், இந்த ஒரு மாசமா கிட்டத்தட்ட பதிவுலக வனவாசம் இருப்பதனால, இங்க என்ன நடந்தது, நடக்குதுன்னே தெரியாது!! ஏன், என் வீட்டுக்கு வெளியே என்ன நடக்குதுன்னுகூடத் தெரியாத அளவுக்கு பிஸியா இருக்கேன்!! அதனால, யாராவது அப்டேட்ஸ் தாங்க.  தொடர்பதிவுகூட நடக்குதுபோல!!

    அப்புறம், பதிவரா இருந்துகிட்டு, பயண அனுபவங்கள் எழுதலன்னா எப்படி? அதுவும், புதுச்சேரி, சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, குற்றாலம்னு ஒரு பத்து பதிவு போடற அளவுக்கு சூறாவளி சுற்றுப்பயணமேல்ல போயிருக்கேன்!! அதனால, கண்டிப்பாப் பயணத் தொடர் உண்டு, கவலைப் படாதீங்க!! (கவலைப்பட்டாலும் பிரயோஜனமில்லை!!)

    அமீரகமே...  இதோ வருகிறேன்!! என்னைக் காணாமல் அனலாய்த் தவிக்கிறாயாமே? வந்தவுடன் குளிர்ந்துவிடு!! (அங்க அடிக்கிற வெயில்... கேட்டாலே பயமாருக்கு!! இப்படி ஐஸ் வச்சாலாவது, குறையுதா பாக்கலாம்!! ஹும்... )
     
    இவ்வளவு தூரம் வந்துட்டு, பதிவுலக நண்பர்கள் யாரையும் சந்திக்க முடியலை, ஏன் நான்கைந்து பேரைத் தவிர யாரிடமும் தொலைபேசக்கூட முடியவில்லை என்பது வருத்தமாகத்தான் இருக்குது. இருந்தாலும், பதிவுகளில் நாம் எப்போது சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம் என்று திருப்திபட்டுக் கொண்டேன். (வேறுவழி?) ஆனால், ஒருமுறையும் இல்லாதபடி, இம்முறை என் கல்லூரி நண்பர்கள் சிலரைச் சந்தித்தது எனக்குப் பெரிய மனநிறைவைத் தந்தது.  சில உறவினர்களை ஆற, அமர சந்திக்கவும் முடிந்தது, இறைவன் அருளால்.

    சனிக்கிழமை அமீரகம் வந்து, செட்டிலானதும் அடுத்த பதிவு, இன்ஷா அல்லாஹ்!!

     
     

    Post Comment

    மேலே.. மேலே... மேலே....




    போன வாரம், என் நெருங்கிய கல்லூரித் தோழி கலிஃபோர்னியாவிலருந்து இந்தியா போற வழியில இங்க என்னோட ரெண்டு நாள் தங்கிட்டுப் போனா!! 14 வருஷம் கழிச்சு சந்திக்கிறோம்னா சந்தோஷத்துக்குக் கேக்கணுமா? துபாயில இருக்கிற இன்னொரு தோழரும் (’அந்தத்’ தோழர் இல்லீங்கோ!) சேந்துகிட்ட கடைசி நாள்ல, கலகலப்புக்குப் பஞ்சமேயில்ல!!

    அவளோட ரெண்டு நாள் அபுதாபி, அல்-அய்ன், துபாய்னு ஒரே ஊர்சுத்தல்தான்.  ஊர்சுத்திட்டு, படங்களோட பதிவு போடலன்னா நீயெல்லாம் ஒரு பதிவரான்னு பதிவுலகம் பல்லுமேல நாக்கைப் போட்டுக் கேட்டுடாது?  அதனால, எடுத்த படங்களோட, சுட்ட படங்களையும் வச்சு ஒரு பயணக்கட்டுரை இதோ!!

             இது அபுதாபில உள்ள பிரமாண்ட ஷேக் ஸாயத் பள்ளிவாசல்  (arabnews.com)


    இதுதான் தலைநகர வாசல் (Capital Gate) - உலகின் மனிதனால் கட்டப்பட்டமுதல் சாய்ந்த கட்டிடம் (கட்டுமானம் முடியலை இன்னும்.(ameinfo.com)

    அல்-அய்ன்ல  வழக்கம்போல ஜபல் ஹஃபீட் மலையேறிட்டு,  அதன் அடிவாரத்துல உள்ள கொதிநீர் ஊற்றுகளையும் பாத்துட்டு (மட்டும்தான், கொளுத்துற வெயிலுக்கு சாதா தண்ணியே கொதிக்குது!!)   மறக்காம மினி ட்ரெயின்லயும் ஒரு த்ரில் சவாரி போய்ட்டு வந்தோம். 
    (படம் மகன் எடுத்தது; அதில் நிக்கிறவங்க யாருன்னு தெரியாதுங்கோ!)

    நிறைய பேருக்கு இந்த மாதிரி ஒரு ட்ரெயின் இருக்கிறதே தெரியாது. இதுல போனா சூப்பரா இருக்கும். இருவர் இருக்ககூடிய இதில், மேனுவல் கண்ட்ரோல் பயன்படுத்தி, மலையடிவாரச் சரிவுகளில் அமைக்கப்பட்ட பாதையில் சறுக்கி வந்தா  ஒரு சின்ன ரோலர்-கோஸ்டர் அனுபவம் கிடைக்கும்.

    அப்புறம், மிருகக் காட்சி சாலையில இரவுப் பறவைகள் காட்சிகள் பாத்துட்டு,  டைனசர் Animatrons பாத்துட்டு மறுநாள் துபாய் வலம்!! இந்த டைனசர் Animatrons-ஐ இரவு நேரத்துல பாத்தா நல்லாருக்கும். சிறுவர்களுக்கான இவற்றைப் பெரியவங்க போய்ப் பாத்துட்டு “இத நாங்க ஜுராஸிக் பார்க்லயே பாத்துட்டமே”ன்னு கமெண்டக் கூடாது!!

    துபாய்ல வழக்கம்போல க்ரீக் பார்க, மால்கள்னு வலம் வந்திருப்போம்னு நீங்க நினைச்சா, ஸாரி, நாங்க “மாகி கெட்ச்-அப்” (அதாங்க, “Its' different boss!!").

     penthouses.com                                                                                                                                            beborealestate.com
    முதல்ல போனது,  Palm Jumeirah - ஈச்ச மரம்போல கடலில் மனிதனால் உருவாக்கப்பட்ட தீவு நகர். இதன் கிளைகள் போன்ற பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் வீடுகள் ஒவ்வொன்றின் பின்வாசலிலும் கடற்கரை!! ம்ம்.. சுனாமி வரும்னு பயமா இருக்காதா இங்க இருக்கவங்களுக்கு??


                                  panoramio.com                                                                    2daydubai.com    
    அப்புறம், மோனோரெயில் - ஒற்றைப் பாலத்தில் போகிறது. கடல் மேல் போகும்போது கொஞ்சம் த்ரில்லாகத்தான் இருக்கிறது. அட்லாண்டிஸ் ஹோட்டல் பக்கத்தில், ரெயில் வரும் திசையைப் பொறுத்து  ரெயில் பாதையில் ட்ராக் மாறுவது கவனித்துப் பார்த்தால்தான் தெரியும்.
    வலது படத்துல இருக்கதுதான் பிரமாண்ட அட்லாண்டிஸ் ஹோட்டல். ட்ரெயின்ல இருந்து இறங்கி உள்ளே போய், நம்ம தகுதிக்கு ஒரு ஐஸ்கிரீம் மட்டும் சாப்பிட்டுட்டு, திரும்பி அதே ரயிலைப் பிடிச்சு, பட்டணத்துக்கு வந்துட்டோம்.

     wikipaedia.com
    அடுத்து, துபாயின் தற்போதைய பெருமையான  உலகின் உயர்ந்த கட்டிடமான “புர்ஜ் கலீஃபா”விற்குச் சென்றோம். ஏறக்குறைய 160 மாடிகள் உள்ள கட்டிடத்தின், 124வது மாடியின் பால்கனியில் நின்று நகரைக் கண்டு ரசிக்கலாம். இதில என்ன பெரிசா இருக்கப்போகுதுன்னு நினைச்சுதான் இதுவரை போகலை. தோழிக்காகப் போனது. ஆனா, ஒரு மிக நல்ல அனுபவம்.   
    முதலில் இதன் லிஃப்ட்! தரைத்தளத்திலிருந்து, சரியாக ஒரே நிமிடத்தில் 124வது மாடிக்குச் சென்றுவிடுகிறது. லிஃப்ட் கருப்பு கலரில், வெளிச்சமே இல்லாமல், ஒரு நைட் லேம்ப் மாதிரியான சூழலில் இருப்பது கொஞ்சம் பயம் தருகிறது. ஆனால், லேசான காது அடைப்பு தவிர வேறொன்றும் தெரியவில்லை. ஏன், லிஃப்ட் போகிறதா, நிற்கிறதா என்றுகூடத்  தெரியவில்லை!! போய்க்கொண்டுதான் இருக்கிறது என்று நினைக்கும்போது நின்று, கதவு திறக்கிறது.


    இந்த லிஃப்டில்தான், சில மாதங்கள்முன் பத்து பேர் ஒரு மணிநேரம்போல மாட்டிக்கொண்டார்களாம். ஒரு டார்க் ரூம் போல இருக்கும், நிக்குதா, போகுதா என்றே தெரியாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும் லிஃப்டில் மாட்டிக்கொண்டால் பயமாத்தானே இருக்கும்? நல்லவேளை அதற்கப்புறம் அப்படி எதுவும் நடக்காதமாதிரி சரி செய்து கொண்டார்கள்!!

    அதிலே  ஏறி மேலே போனா, வாவ்!! ரொம்ப அழகா இருக்கு!! அங்கிருந்து ஊரைப் பார்ப்பது ஒரு தனி அழகு!! போறவங்க, பகல்ல , வானம் தெளிவா இருக்கும்போது போனா, பார்க்க வசதியா இருக்கும்.

    படங்கள் ரெண்டும் மகன் எடுத்தது; வலது படத்துல புர்ஜ் கலீஃபாவின் நிழல் தெரியுதா?

    இன்னும் தெளிவாப் பார்க்கணும்னா, அங்கே டெலஸ்கோப்புகள் வச்சிருக்காங்க. அதுல விபரங்களோடு பாத்துக்கலாம்.  அங்கிருந்து பார்க்கும்போது, பாம் ஜுமைரா போலவே, கடலில் உருவாக்கத் திட்டமிட்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள “தி வேர்ல்ட்” - உலக வரைபடம் போன்ற தீவுகள் - மணல் திட்டுகள் மட்டும் தெரிகின்றன.

     gulfnews.com                                                        flashydubai.com

    மேலிருந்து, அடுத்துள்ள துபாய் மாலில் நடக்கும் "Dancing Water fountain show" பார்க்கத் தவறாதீர்கள்!! அற்புதமாக இருக்கும்!! இங்கிருந்து பார்த்துவிட்டு, கீழே வந்து மறுபடியும் பார்க்கும்போது, ஒரு புதிய “பரிமாணம்” நிச்சயம் கிடைக்கும்!! இந்த நீர் நடனம்தான் உலகிலேயே மிகப் பெரியதாம். இரவு வரை அரைமணி நேரத்திற்கொருமுறை நடக்கும் இந்த நடனத்திற்கு ஒவ்வொரு முறையும் இசைக்கப்படும் வெவ்வேறு அரபி பாடல்கள் உங்களை ரசித்துத் தாளம் போட வைக்கும். இதற்காகவே இரண்டு, மூன்று முறை பார்க்கலாம் இந்நடனத்தை!!

    சொல்ல மறந்துட்டேனே, கீழே இறங்கி, வெளியே வரும்வழியில், புர்ஜ் கலீஃபா உருவான விதம், வடிவமைக்கப்ட்டது, உயரத்தில் காற்றழுத்தம் தடுக்கும் நுட்பங்கள், கட்டுமானத்தின் ஒவ்வொரு கட்டம், முக்கியப் பங்காற்றியவர்களின் விபரங்களுடன் கூடிய படங்கள் என்று ஒரு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். கட்டிடக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்குத்  தகவல்கள் கிடைக்கும்.

    தோழியைப் பார்த்தது மட்டுமல்ல, அவள் காரணமாக, இதுவரை பார்க்காத பல இடங்களைப் பார்த்தது என்று, மொத்தத்தில் ஒரு நிறைவான ஊர்சுற்றல்!!

      டிக்கெட்டக் காமிச்சாத்தான் நம்புவாங்களாம்!!
      
     

    Post Comment