Pages

புட்டி நீர்
புத்தகம்: உயிரைக் குடிக்கும் புட்டி நீர்
எழுதியவர்: நக்கீரன்

ன்றைய உலகில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் “பாட்டில் குடிநீர்” குறித்துப் பேசும் புத்தகம் இது. அதன் உற்பத்தியாளர்கள் சொல்வதுபோல, பாட்டில் நீர் சுத்தமானதும் இல்லை, தரமானதுமல்ல, சுவையானதுமல்ல,  தூய்மையானதுமில்லை, சத்து நிறைந்ததுமில்லை, பாதுகாப்பானதுமில்லை. ஆனால் கிருமிகள், பூச்சிக்கொல்லிகள், நோய்கள் நிறைந்தது என்று ஆதாரங்களோடு பட்டியலிடுகிறார். ஏன் பெட்ரோல்கூட இருக்கிறதாம்!!

இதில் காட்டப்படும் பெரும்பாலான ஆய்வக ஆதாரங்கள் வெளிநாடுகளில் உள்ளது. அங்கு சற்றேனும் தரக்கட்டுபாடுகள், சட்டங்கள் கடைபிடிக்கப்படும் அங்கேயே  இந்நிலை என்றால்.... இந்தியாவில்? எதை நம்பி குடிக்கிறோம் இவற்றை?

இன்று வீடுகள்தோறும் ஆர்.ஓ. எனப்படும் எதிர் சவ்வூடு பரவல் கருவி பொருத்தப்பட்டு அதன் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. அதை மிகவும் பாதுகாப்பானதாக நம்புகிறோம். ஆனால், அதில் தண்ணீரில் இயற்கையாக உள்ள தாதுக்கள் நீக்கப்பட்டு வெறும் சக்கையைத்தான் குடிக்கிறோம். கால்சியம், மெக்னீஷியம் உள்ளிட்ட தாதுக்கள் குறைபாட்டால், இதைத் தொடர்ந்து குடித்துவரும் மக்களுக்கு எலும்பு முறிவு, அடர்த்திக் குறைவு போன்றவை ஏற்பட வாய்ப்புண்டு. மேலும், தாதுக்குறைபாடு இதய நோய் உள்ளிட்ட பலவற்றிற்கும் வழிவகுக்கும் என்று ஆசிரியர் சொல்கிறார்.

எனில், எதைத்தான் குடிப்பது என்று கேள்வி எழும். அரசு, நகராட்சி குடிநீர் குழாய்கள் வழி வழங்கும் குடிநீரைத்தான் குடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் ஆசிரியர்!!! அதை நம் மனம் ஏற்க மறுக்கிறதல்லவா? ஆனால், அதில்தான் தேவையான தாதுக்கள் உள்ளதோடு, முறையான கிருமி நீக்கமும் செய்யப்பட்டுள்ளது என்று காரணத்தைத் தெளிவுபடுத்துகிறார்.


நகராட்சி தரும் குடிநீர் சுத்தமானதும் சத்தானதும்தான். ஒத்துக்கொள்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வரும் குழாய்கள்? துருப்பிடித்துப்போன குழாய்களும், குழாய் உடைந்து கழிவு நீர் கலந்து வரும் குடிநீரும்... நினைக்கவே அருவெறுப்பாக உள்ளதல்லவா...  அதைச் சரி செய்வது அரசின் பொறுப்பு; மாநிலம் முழுதும் பாட்டில் நிறுவனங்களைச் செயல்பட அனுமதித்துள்ள அரசு, முதலில் சரி செய்யவேண்டியது இதைத்தான் என்று சாடுகிறார். அதுதான் நமக்கும் தெரியுமே.... நடந்தால்தானே...

நகராட்சி குடிநீரையே தான் இத்தனை வருடங்களாகக் குடித்து வருவதாகவும், தனக்கு இதுவரை எதுவும் ஆகவில்லை என்று தைரியமளிக்கும் ஆசிரியர், குழாயில் வரும் குடிநீரை சூரிய ஒளி கொண்டு கிருமி நீக்கம் செய்யும் முறையையும், தேத்தாங்கொட்டை, முருங்கை விதை போன்றவற்றைப் பயன்படுத்திச் சுத்தம் செய்வதையும் சொல்லித் தருகிறார்.

குடிநீர்ப் பஞ்சம் நிலவும் மாநிலங்களில்கூட அதிக பாட்டில் நீர் நிறுவனங்கள் இல்லை; தண்ணீர் வளம் நிரம்பிய தமிழ்நாட்டில்தான் இந்தியா முழுதும் உள்ள 1200 பாட்டில் குடிநீர் நிறுவனங்களில் பாதி - 600 அமைந்துள்ளன என்று அதிர்ச்சி அளிக்கிறார் ஆசிரியர். மக்களுக்கு சுத்தமான நீரை வழங்கும் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, அதே நீரை வணிக நிறுவங்களிடம் இந்த அரசு ஒப்படைத்துள்ளது என்பது எத்தனை கேவலம்?

த்தனைக்கும், 2007-ல் உலக மேம்பாட்டு இயக்கம் வெளியிட்ட Going Public: Southern Solutions to the Global Water Crisis என்ற அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கு பொதுத்துறை நீர் விநியோக அமைப்புகளில் தமிழகத்தின் பொதுத்துறையும் ஒன்று. இத்தகைய பெருமையுடைய அரசு நிறுவனம், இன்று நீராதாராஅங்களைத் தனியாருக்குத் திறந்துவிட்டு செயலிழந்து நிற்கிறது!! குழாயில் நீர் வழங்குவதைக் காட்டிலும் “பாட்டில் நீர்” வழங்க 1000 மடங்கு அதிகம் செலவாகிறதாம்!! அந்த அதிகப்படி செலவு யார் தலையில் விடியும்? இதனால் சேரும் ப்ளாஸ்டிக் கழிவுகள் வேறு!!

பாட்டில் நீரைக் குடிக்கும் மக்களிடையே ஏற்படுத்தும் உளவியல் தாக்கம் பற்றி இவர் கூறும் உண்மை பகீரென்கிறது. வேதனையுடன் “கரெக்டுதான்” என்று சொல்ல வைக்கிறது. தண்ணீர்ப் பந்தல் வைத்து, அறியாத தெரியாத மக்களின் தாகம் தீர்த்த மக்கள் இன்று காசு கொடுத்து தண்ணீரை வாங்கும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதன்மூலம், பொதுநலம் மறந்து சுயநலம் பெருகியவர்களாக ஆகிவருகின்றனர். காசு கொடுத்து வாங்குவதால் தண்ணீரை மற்றவர்களுடன் பகிர மனம் வருவதில்லை.

அனைவரும் நீர் அரசியலைப் புரிந்துகொள்ள, கண்டிப்பாக வாசிக்கவேண்டிய புத்தகம். ஆனால், முழுதும் “சுத்தத் தமிழில்” எழுதப்பட்டுள்ளதால், சாமான்ய மக்களைச் சென்று சேருவதில் சிரமம் இருக்கும். தலைப்பே “புட்டி நீர்” என்றிருப்பதைவிட, “பாட்டில் நீர்” என்றோ அல்லது “குப்பி நீர்” என்றோ இருந்திருந்தால் அதிகம் பேரைச் சென்றடைந்திருக்கலாமோ....

                                                         https://www.facebook.com/Chennaites/

ந்தியாவின் Think Tank நிறுவனமான ”Indian Council for Research on International Economic Relations”,  இந்திய அரசு, குடிநீரை இலவசமாகக் கொடுக்கக் கூடாது; இஸ்ரேலைப் போல ஒவ்வொரு சொட்டு நீருக்கும் கட்டணம் விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது!! பிரதமரின் சமீபத்திய இஸ்ரேலிய விஜயத்திற்குமுன் கூறப்பட்டுள்ள இந்த ஆலோசனை செயல்படுத்தப்பட்டு, குடிநீரும் கார்ப்போரேட்டுகள் வசம் போகுமா  என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆசிரியர் மழைநீரைப் பற்றிப் பேசவேயில்லை. மழைநீர் சேகரிப்பு மிக அவசர, அவசியத் தேவையாக மாறி வருகிறது. சமீபத்தில் ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தம் வீட்டுக்கு  மழைநீரை மட்டுமே சேமித்துப் பயன்படுத்தி வருவதாக் கூறினார். ஒரு முறை பிடிக்கும் நீர் 6 மாதங்களுக்கு வருவதாகவும், அது தீரும் சமயத்தில், அடுத்த மழைக்காலம் ஆரம்பித்து விடுவதால், தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை என்று கூறினார். இனி ஒவ்வொருவரும் மழைநீரைச் சேமிப்பதைத்  தீவிரமாகச் செயல்படுத்துவதே இதற்கு ஒரே தீர்வாக அமையும்.

வீடுகளில் மட்டுமல்ல, மக்கள் ஒன்றிணைந்து தத்தம் தெருக்களிலும், பகுதிகளிலும் மழைநீர்த் தொட்டி அமைத்தாலொழிய பயமுறுத்திக் கொண்டிருக்கும் தண்ணீர்ப் பஞ்சத்திலிருந்து தப்பிக்க முடியாது!!

Post Comment

ச்சும்மா ரெண்டு புத்தகம் வாசிச்சு...
1. புத்தகம்அக்கா
    எழுதியவர்: துளசி கோபால்துளசிதளம்”  என்ற வலைப்பூவை பத்து வருடங்களுக்கு மேலாக நடத்தி வரும் திருமதி. துளசி கோபால் அவர்கள், தம் வலைப்பூவில் எழுதிவந்த தம் அனுபவங்களைத் தொகுத்து வெளியிட்ட புத்தகம்.

வீட்டின் கடைக்குட்டியான அவருக்கு, தன் சொந்த அக்கா, அண்ணன்களோடு கழிந்த - சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னான-   இளம்பிராயத்து அனுபவங்களின் தொகுப்புகளாக இப்புத்தகம் விளங்குகிறது.

“டீச்சர்” என்று அனைவராலும் மரியாதையாக விளிக்கப்படும் இப்பதிவரின் பதிவுகள் பொதுவாக  எள்ளலும், சிரிப்புமாக துடிப்போடு இருக்கும். அந்த எதிர்பார்ப்போடு இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்த எனக்கு, இதில் வரும் சோகக் காட்சிகள் மிகவும் பாதித்துவிட்டன.

ஆசிரியரின் தாயார் ஒரு மருத்துவர் (அப்போதே..) அதைவிட ஆச்சரியம், அவரது பாட்டியும், மற்றும் பலரும் ஆசிரியைகள். ஆனால்.... அப்போதே மருத்துவராக இருந்தவர், தன் மூன்று மகள்களில் ஒருவரைக்கூட மருத்துவராக ஆக்க முனையாதது ஏமாற்றமளிக்கிறது. மருத்துவரென்ன, குறைந்த பட்சம் ஆசிரியை கூட ஆக்காமல், சீக்கிரமே இருவருக்குத் திருமணம் செய்து வைத்ததும் என்ன காரணத்தால் என்று சொல்லப்படவில்லை.

அம்மா இருக்கும்வரை ஒன்றாக இருந்த சகோதர சகோதரிகள், அம்மாவின் மறைவினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்க வேண்டிவருவது கண்ணீர் வரவழைத்தது - நிதர்சன உண்மையன்றோ இது. எந்தக் குடும்பத்திலும் அம்மாவோ, அப்பாவோதான் பிள்ளைகளை இணைக்கும் புள்ளியாக இருக்கின்றனர். அவர்களின் மறைவிற்குப் பிறகு, அந்த நெருக்கம் குறைந்து, பின் மறைந்தே விடுகிறது.

மற்றபடி, அக்காவுக்கும் அண்ணனுக்கும் நடக்கும் சண்டையால், அவர்களிடம் மாட்டிக் கொண்டு ஆசிரியர் பட்ட அவஸ்தைகள் சுவாரசியம். “ஏழை வாத்தியாருக்கு ஏழு பிள்ளைகளா?” என்ற டயலாக்கில் டீச்சரின் பஞ்ச் மார்க் தெரிகிறது!

சுவாரசியமாக ஆரம்பித்த புத்தகம், குணச்சித்திர படம் போல, சோகமாக முடிகிறது. பெரிய அக்காவும், அண்ணனும் இப்போது என்ன செய்கிறார்கள்? ஆசிரியர் அவர்களோடு தொடர்பில் இருக்கிறாரா? டீச்சர் தன் கணவரை எங்கு சந்தித்தார், எப்படி திருமணம் செய்தார்கள்? இப்படிப் பல கேள்விகளையும் எழுப்பிச் செல்கிறது புத்தகம்.

2. புத்தகம்: மகளிர் தினம் - உண்மை வரலாறு
    எழுதியவர்: இரா.ஜவஹர்

உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுகிறது. இத்தினம் மார்ச் 8 என்று வரையறுத்தது யார், அதன் பிண்னணி ஆகியவற்றில் நிலவி வரும் குழப்பங்களை நீக்கி, அதன் உண்மை வரலாறு இப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆரம்ப காலங்களில், 1907-ல் நடந்த “உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாட்டில்” பெண்களுக்கு வாக்குரிமை கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் மகளிரால் நடத்தப்பட்ட  பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள், ஒரு பொதுவான  ”உலக மகளிர் தினம்” கடைபிடிப்பதின் அவசியத்தை உணர்த்தின. ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், பின்வந்த வருடங்களில் வேறுபட்ட தினங்களில் (பெரும்பாலும் மார்ச் மாதத்தில்) ”உலக மகளிர் தினம்” கடைபிடிக்கபப்டன.

1917-மார்ச் 8-ல் பெண் தொழிலாளர்களால், ”உணவும் சமாதானமும்” என்ற பெயரில் ரஷ்யப் புரட்சி  நடத்தப்பட்டு, மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு, சோவியத் ரஷ்யா உருவானது. 1920-ல், மார்ச் 8 மகளிர் தினமென  விடுமுறை அறிவிக்கப்பட்டது.

ஆக, உலக மகளிர் தினம் ஒவ்வொரு வருடமும் மார்ச் 8- அன்று கடைபிடிக்கப்படுவதற்கு, சோஷலிச-கம்யூனிஸ பெண்களே காரணம் என்றும், ஐ.நா.சபையோ, வேறு நாடுகளோ காரணமல்ல எனப்து வரலாற்றுப் பிண்னணியில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. பல பெண் கம்யூனிஸ தலைவர்களையும் அவர்களின் செயல்பாடுகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

ப்புத்தகத்தில் ஒரு சம்பவம் கவனத்தை மிக ஈர்த்தது. நம(என)க்கும் மிகப் பொருந்திப் போகக்கூடியது என்பதால் இருக்குமோ....

ரஷ்யாவில் கம்யூனிஸம் தொடங்கிய காலத்தில் மன்னராட்சியின் அடக்குமுறை அதிகமாக இருந்ததால், இயக்க நடவடிக்கைகளை இரகசியமாகவே தொடர முடிந்தது. அதில் ஒன்றாக, 1923-ல் மார்ச் 2 அன்று மகளிர் தினக்கூட்டம் ஒன்று, “அறிவியல் காலை” என்ற பெயரில் நடத்தப்பட்டது. அதில் பேசுவதற்காக “அலெக்சீவா” என்ற ஒரு பெண் தொழிலாளி, தன் உரையைத்  (தலைவர்களின் உதவியோடு) தயாரித்துக் கொண்டு வந்திருந்தார். அரங்கில் மக்கள் கூட்டத்தோடு, போலீஸும் குவிக்கப்பட்டு இருப்பதைப் பார்த்து, வாழ்நாளில் முதல் முறையாக உரை நிகழ்த்த வந்த அந்தப் பெண்ணிற்கு ஏற்பட்ட நடுக்கத்தில் எழுதி வைத்திருந்ததில், எழுத்துகள் மறைந்து,  எல்லாமே புள்ளிகளாகத் தென்பட்டன.

குறிப்பேட்டை மூடி வைத்துவிட்டு, தன் தொழிற்சாலை அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தார். அங்கு பெண்கள் எப்படியெல்லாம் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்,  நேரும் பாலியல் தொந்தரவுகள், நிர்ணயிக்கப்பட்ட 11 மணி நேர வேலைக்குப் பதிலாக, 18 மணி நேரம் வேலை வாங்குவது  போன்ற எல்லாவற்றையும் சொன்னார். இந்தக் கொடுமைகளால் பெண்கள் விபசாரத்திற்குத் தள்ளப்படும் அவலம் குறித்துப் பேசினார். பேசி முடித்ததும், கைதட்டல் விண்ணைப் பிளந்தது. அவர் பேச்சு ஏற்படுத்திய தாக்கம், அன்று இரவே அவர் கைது செய்யப்பட்டதில் தெரிந்தது!!

Post Comment

சூரிய உதயத்தைக் காணாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம்
ந்த ஆசிரியரின் இன்னொரு புத்தகத்தை முன்பு வாசித்தபோது, எடுத்த கையோடு முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது. ஆனாலும், இந்தப் புத்தகம் ஒரு  இந்திய  சுதந்திரப் போராட்ட வீரரின் கதை என்பதால், ஒரு பத்து  நிமிஷ time-filling-காக வாசிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்று நம்ம்ம்ம்பி எடுத்தேன்... ஆனால்... ஒரு ஆங்கில ஆக்‌ஷன் படம் பார்க்கும் விறுவிறுப்புடன் விழிவிரித்து வாசித்து முடித்துவிட்டே கீழே வைக்க முடிந்தது.

கீழே வைத்தது புத்தகத்தை மட்டும்தான். புத்தகம் தந்த பிரமிப்புகளும், நினைவுகளும், உணர்வுகளும் விட்டு விலகவே இல்லை. இதன் தொடர்ச்சியாக இன்னொரு புத்தகத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். ஆம்!!

”அகண்ட பாரதமாக” இருந்த இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர்களால், கடைசி வரை தன் ஆளுகைக்குக் கொண்டு வரவே முடியாதது, (இன்றைய பாகிஸ்தானின்) வடமேற்கு எல்லை மாகாணமான வஜீரிஸ்தானை!! இந்தத் தோல்வியை அன்றைய இங்கிலாந்து பாராளுமன்றத்திலேயே ஆட்சியாளர்களால் அவமானத்துடன் ஒப்புக்கொண்டுள்ளனர்!!

ந்த வீர வரலாற்றை விவரிக்கும் புத்தகம்தான், நாவலர் ஏ.எம்.யூஸுஃப் அவர்கள் எழுதிய “இப்பி ஃபக்கீர்”!!  இவர்களின் வீரத்திற்குச் சான்றாக ஒரே ஒரு தகவலைப் பகிர்கிறேன்...  ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்குகளைக் கொள்ளையடித்துச் செல்லும் இவர்கள், “உங்கள் துப்பாக்கிகள் எங்கள் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் பயிற்சி அளிக்கத்தான் பிரயோஜனம்” என்று எள்ளலாகச் சொல்லிச் செல்வார்கள்!!  அது உண்மையே என்று அவர்களின் கையில் இருக்கும் அதிநவீன ஆயுதங்கள் சாட்சியளிக்கும். 
தங்களால் கட்டுக்குக் கொண்டுவர முடியவில்லை என்று உணர்ந்துமே, வீராப்பிற்காக 18 முறை அப்பிராந்தியத்தினர் மீது தாக்குதல் நடத்தியும், ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இத்தாக்குதல்களில் ஒன்றை முன்நின்று நடத்தியவர் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமர் ஆன “வின்ஸ்டன் சர்ச்சில்” ஆவார்.

கனடா முதல் ஆஸ்திரேலியா வரை, கிழக்கிலிருந்து மேற்கு வரை பல நாடுகளில் தங்கள் ஆட்சியை நடத்தி, “சூரியன் அஸ்தமிக்காத ஆட்சி” என்று பெருமை பாராட்டிக் கொண்டவர்களால் இந்த மாகாணத்தில் மட்டும், இந்தியாவிற்கு விடுதலையளித்த 1947 வரை சூரியோதயத்தைக் காணவே முடியவில்லை.இதைத் தனது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். 

தை வாசித்து முடித்ததும், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்  ”கான் அப்துல் கஃபார் கான்” -  அவரது காந்தீயக் கொள்கைகளின் காரணமாக  “எல்லை காந்தி” என்று அழைக்கப்பட்டவர் - இவரின் வரலாற்றை வாசிக்கும் ஆவல் மிகைத்திருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக தமிழில் இரு புத்தகங்கள் மட்டுமே இருக்கின்றன இவரைப் பற்றி. ஒன்று ஆங்கிலப் புத்தகத்தின் மொழிபெயர்ப்பு - இதன் பதிப்பகம் குறித்த தகவல்கள் இல்லாமையால் கிட்டவில்லை, இன்னொன்று தமிழில் எழுதப்பட்ட சிறு வரலாற்று ஏடு. இப்புத்தகம் கைக்கு வரக் காத்திருக்கிறேன்.

இப்பி ஃபக்கீரின் வரலாறு ஏன் கஃபார் கானை நினைவுபடுத்தியது எனக்கு? காரணம், நோக்கம் ஒன்று என்றாலும், இருவேறு பாதைகளில் பயணித்த இருவரின் இரு வேறு குணங்கள்!!  இப்பி ஃபக்கீர் என்றழைக்கப்பட்ட குலாம் மிர்ஸா கான்,  வீரதீரச் செயல்களால் கவர்கிறார் என்றால், எல்லை காந்தி அஹிம்சையில் மிகுந்தவர். இந்தியாவைப் பிரிக்கவே கூடாது என்று தீவிரமாக  எதிர்த்தவர். தங்களை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் அலல்து தனிநாடாகவேனும் அறிவிக்க வேண்டுமெனக் கோரியவர்; பிரிக்கப்பட்ட பாகிஸ்தானின் தலைமையை ஏற்றுக் கொள்ள மறுத்தவர்;  அதன் காரணமாக சிறையில் 12 ஆண்டுகளுக்கு மேல் அடைக்கப்பட்டவர்.

இப்பி ஃபக்கிர், முதலில் ஜின்னாவின் ஆட்சியை ஏற்றுக் கொண்டாலும், பின்னர் அதுவும் பிரிட்டிஷின் பிரதிபலிப்பாய் இருந்ததால், எதிர்த்துப் போர்க்கொடி உயர்த்தினர் எனவும் சில தகவல்கள் கூறுகின்றன.

இவர்கள் இருவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்றாலும் ஒன்றாக இணைந்து போராடியது போல தகவல்கள் கிடைக்கவில்லை. இருவரும் சந்திருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை. 

வையெல்லாம் வலையில் வாசித்து அறிந்தவையே. பள்ளியில் வரலாற்றுப் பாடப்புத்தகத்தில் இருவரைப் பற்றியுமே படித்ததில்லை!!  என் தலைமுறையாவது பரவாயில்லை....  ஆனால், இனிவரும் தலைமுறையோ பாவம்...  மன்னிப்புக் கடிதம் கொடுத்தவர்களையெல்லாம் வீரர்கள் என்று படிக்க வேண்டிய   பரிதாபம்!!


For Further reading:

https://www.facebook.com/JanPalwasha/posts/197213384034930:0
http://www.khyber.org/publications/021-025/faqiripi.shtml
http://pakteahouse.net/2016/01/26/bacha-khan-faqir-of-ipi-and-the-afghanistan-angle/


 reg. Ghaffar Khan:
https://www.youtube.com/watch?v=mcY1QHlRHlo
http://www.thefrontiergandhi.com/excerpts.html
The Frontier Gandhi: Badshah Khan, A Torch for Peace
https://www.youtube.com/watch?v=0fSnlTFsPf8
 

Post Comment