Pages

வருமுன் காப்போம்

நேசம் +யுடான்ஸ் இணைந்து வழங்கும் கதை/கட்டுரை போட்டி
 
கேன்ஸர் இலச்சினை
வீன உலகம் பல துறைகளில் அசாத்திய முன்னேற்றங்களைக் கண்டுவருகிறது. அதற்கு நாம் கொடுக்கும் விலையாகவோ என்னவோ, புதுப்புது வகை நோய்கள் அறிமுகமாவது மட்டுமின்றி, இருக்கும் நோய்களும் புதுப்புது வகைகளில் விஸ்வரூபம் எடுத்து வருகின்றன. அதில், புற்று நோயும் ஒன்று. 

ஒரு காலத்தில், அவ்வப்போது யாரோ ஒன்றிரண்டு பேருக்கு கேன்ஸர் என்று கேள்விப்பட்டதுபோய், தற்காலத்தில் சாதாரணக் காய்ச்சல் போல பெருகிவிட்டது. மருத்துவ முன்னேற்றங்கள் இதை “உயிர்கொல்லி” நோயாக இல்லாமல் ஆக்கிவிட்டன என்பது மகிழ்ச்சியே.  கேன்ஸர் நோய் வருவதற்கான காரணங்கள் என்ன என்று கேட்டால், மருத்துவர்களின் பதில் “இன்னதென்று வரையறுத்துச் சொல்ல முடியாது” என்பதாகத்தான் பெரும்பாலும் இருக்கும்.

ஆனால், மருத்துவம் மற்றும் விஞ்ஞானத்துறைகளின் பல ஆராய்ச்சிகள், பல்வேறு காரணிகளை முன்வைத்து, இவையாகவும் இருக்கலாம் என்று கூறுகின்றன. அக்காரணிகளை அறிவதும், விழிப்புணர்வே!! எங்ஙனமெனில், ஒருவேளை நாம் இந்தக் காரணிகளின் சூழலில் வாழ்ந்துகொண்டிருக்க நேர்ந்திருக்குமெனில், முறையானப் பரிசோதனைகளைக் குறித்த காலத்தில் செய்து, நம்மைப் பாதுகாத்து,  வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்வோம்.


1. வாழ்க்கைத் தரம் (Lifestyle)

நமது உடல்நிலையில் நமது வாழ்க்கை முறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை அறிவோம். ஆரோக்கியமாக வாழ்வதும், நோயை அடைவதும் நமது உடலின் பராமரிப்பின் அடிப்படையிலேயே அமையும் என்பது கண்கூடு.


மேற்கண்ட வரிகளை வாசித்தவுடன் நம் அனைவரின் நினைவுக்கும் வருவது, புகை மற்றும் குடிப்பழக்கம் ஆகியவையே!! ஆம், புற்றுநோயின் முதல் எதிரி அவை. புகை/குடிப்பவர்களுக்கெல்லாருக்கும் புற்று வந்துவிடவில்லையே என்பதே இவர்களின் வாதமாக இருக்கும். ஒரு ஆராய்ச்சியின்படி, நுரையீரல் புற்றுநோய் வந்தவர்களில் 85 சதவிகிதத்தினர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் என்பதுதான் இதற்குரிய பதில்.  அதுபோல, கேன்ஸர் வந்த 100 பேரில் 4 பேர் மது அருந்துபவர்கள்


பீர் (Beer) மட்டுமே குடிப்பவர்களுக்கும் இதிலிருந்து விலக்கில்லை. அதில் இருக்கும் நைட்ரோசமைன் எனப்படும் பொருளும் ஒரு கான்ஸர் உண்டாக்கும் பொருளே!!

அடுத்தது, நமது உணவுப்பழக்கங்கள், உடல் பருமன், உடற்பயிற்சி ஆகியவை.  இவை மூன்றுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.  காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துகள்,  அதிகம் சேர்த்துக் கொள்வதோடு,  பதனப்படுத்தப்பட்ட அல்லது செயற்கையாகக் கூடுதல் சுவையூட்டப்பட்ட (preservatives and additives) உணவுகளைத் தவிர்க்கவேண்டும்.  ரெடிமேட் உணவுகள், துரித உணவுகள் (frozen foods, fast food), பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், பானங்கள் போன்றவை இதில் அடங்கும்.  இவற்றில் கவனம் செலுத்தினாலே உடல் பருமன் கட்டுக்குள் வரும். 

உணவு சமைக்கும்போது, உணவை அதிக வெப்பத்தில் சமைக்கும்போது வெளிப்படும் வேதிப்பொருட்களும் ஆபத்தானவை. எண்ணெயை அதிகம் சூடாக்கிப் பொரிப்பது, அதிக வெப்பத்தில் கிரில்/ பார்பெக்யூ செய்வது போன்றவைவிட, கொதிக்க வைத்து வேக வைப்பதுபோன்ற முறைகளே நல்லவை.

2. வேதிப்பொருட்கள் (Chemicals):

கெமிக்கல்கள் என்றதும் ஆலைகள் பற்றிப் பேசப் போகிறோம் என்று நினைப்பீர்கள். இல்லை, அன்றாடம் நம் தினப்படி வாழ்வில் நாம் எத்தனையெத்தனை வேதிப்பொருட்களைப் புழங்குகிறோம் என்று அறிந்தால் வியப்பின் உச்சிக்குச் செல்வீர்கள்!! உணவுகளில் பதனப்படுத்தவும், சுவையூட்டவும், நிறம் கூட்டவும் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் பற்றி ஏற்கனவே பார்த்துவிட்டோம். 

thedailygreen.com
அழகுசாதனப் பொருட்கள் இன்று பெண்களுக்கு மட்டுமல்ல,  ஆண்களுக்கும் இன்றியமையாதவை ஆகிவிட்டன. குளியல் சோப்புகள், ஷாம்பூ, டியோடரண்ட், ஷேவின் க்ரீம், லோஷன்கள் ஏன் பற்பசைகள் உட்பட்ட அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில், அவை நீண்ட நாள் கெடாமலிருக்க வேண்டி  “பாராபென்” எனப்படும் வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது நம் உடலில் சேரும்போது, எஸ்ட்ரோஜன் ஹார்மோன் போல செயல்படும்.  மேக்கப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் என்னென்ன கெமிக்கல்கள் இருக்கின்றன என்பதை இங்கு விபரமாகப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மார்பகப் புற்று வந்தவர்களிடமிருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் பரிசோதனை செய்தபோது, 60 சதவிகிதத்தில் இந்த பாராபென் இருந்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!!

ewg.org
தலைக்கு அடிக்கும் “டை” க்கும், கேன்ஸருக்கும் தொடர்பு இல்லையென்று அறுதியாக நிரூபிக்கப்படவில்லை என்பதால், வழமையாக ‘டை’ அடிப்பவர்கள், இயற்கைப் பொருட்களுக்கு மாறுவது சிறந்தது.


இதுதவிர, ஆஸ்பெஸ்டாஸ் உடல்நலத்திற்குக் கேடானது என்று அறிந்திருக்கிறோம். இதன் துகள்கள் நம் மூச்சுக்குழலுக்குள் நுழைந்தால் நுரையீரல் கேன்ஸர் ஏற்படுத்தலாம்.  போலவே பெயிண்ட், பூச்சிக்கொல்லி மருந்து, பெட்ரோல் போன்ற வேதிப்பொருட்கள் சம்பந்தப்பட்ட தொழில்களில் இருப்பவர்கள் அததற்குரிய பாதுகாப்பு உபகரணங்களையும், நடைமுறைகளையும் தவறாது கடைபிடித்தல் இன்றியமையாதது.


3. நோய்த்தொற்று மற்றும் எதிர்ப்புச் சக்தி குறைபாடு:

வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படும் சில நோய்த் தொற்றுகள் தொடர்ச்சியாகக் காணப்பட்டால், அவை நாளடைவில் புற்றாக மாற சாத்தியமுள்ளது. உதாரணமாக, HIV  வந்தால் கேன்ஸரும் வரும் சாத்தியக்கூறுகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. ஏனெனில் ஹெச்.ஐ.வி. என்பதே உடலின் எதிர்ப்புச் சக்தி மண்டலத்தை அடியோடு அழிக்கும் நோய். எதிர்ப்புச் சக்தி இல்லா இடம் புற்றுநோய்க்கு ஏற்றதல்லவா?

அதுபோல, HPV - Human papillomaviruses - கருப்பை வாய் புற்றையும்,
Hepatitis B & C - ஈரல் புற்றுநோயையும் கொண்டுவரும் வாய்ப்புகள் உண்டு.

எனவே தொற்று ஏற்படாதவாறு காத்துக் கொள்ளுதல் வேண்டும்; மீறி வரும் நோய்களுக்குத் தகுந்த சிகிச்சையை அவசியமான கால அளவுக்கு முறையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. ஹார்மோன்கள்:

இத்தலைப்பைக் கண்டதும் உங்கள் புருவங்கள் வியப்பால் உயர்ந்திருக்கும், இல்லையா? ஆம், நம் உடலின் கிட்டதட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் நிர்வகிக்கும் அல்லது தொடர்புடைய ஹார்மோன்களும்கூட புற்று ஏற்படுத்தும் என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இயற்கையான ஹார்மோன்களால் என்றுமே பிரச்னையில்லாதபடிக்குத்தான் இருக்கும்படியானதுதான் இறைவன் படைப்பு. அந்த ஹார்மோன் அளவு புறக்காரணிகளால் தூண்டப்படும்போதுதான் பிரச்னை தொடங்கும். அந்தப் புறக்காரணிகள் எவையென கண்டு அவற்றில் கவனம் செலுத்துவோம்:

(அ) உடல் பருமன்:   என்னாதுன்னு துள்ளி எழுந்துட்டீங்களா? ஆம், உடல் எடை அதிகமானால், இன்சுலின், எஸ்ட்ரோஜன் போன்ற சில ஹார்மோன் சுரப்புகள் அதிகமாகும் என்பதால், அவை மார்பகம், உணவுக்குழல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பகுதிகளில் புற்று வரும் வாய்ப்பை அதிகரிக்கும்.

(ஆ) ஹார்மோன் சிகிச்சை: பெண்களுக்கு மெனோபாஸ் சம்யத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கான சிகிச்சையாக ஹார்மோன் ஊசிகள் போடப்படுகின்றன. மேலும் கருத்தடை மாத்திரைகளும் ஹார்மோனைக் கொண்டவையே. இவைகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்வது மார்பக, கருப்பை, ஓவரி கான்ஸர் வரும் வாய்ப்பை அதிகரிக்கலாம்.

(இ) வேதிப்பொருட்கள்: அழகுசாதனப் பொருட்கள், அடர்ந்த நிற தலைச்சாயங்கள் (hair dye) மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படும் “பாராபன்” போன்ற வேதிப்பொருள்கள், உணவுகளில் காணப்படும் பூச்சிகொல்லி மருந்துகள்,  மாசடைந்த சுற்றுச்சூழல் ஆகிவையும் நமது உடலின் ஹார்மோன் அளவுகளில் மாற்றங்கள் உண்டாக்கக்கூடியவை.

5. சுற்றுச்சூழல்:

i.  சிகரெட், பீடி, புகையிலை போடும் பழக்கம் இல்லாவிட்டாலும்கூட, சிகரெட்/பீடி  பிடிப்பவர்கள் வெளிடும் புகையால் பாதிப்படைவது. (Passive smoking)

ii.  அதிகப்படியான சூரிய வெளிச்சம்: சூரிய ஒளிதான் நமக்கு விட்டமின்-டி தருகிறது. ஆனால், அதில்தான் புற ஊதாக் கதிர்களும் வெளிப்படுகின்றன. எனவே குறிப்பிட்ட அளவு வரைதான் சூரிய ஒளி நல்லது. அதற்குமேல், சருமம் பாதிக்கப்பட்டு தோல் கேன்ஸர்கூட ஏற்படலாம்.   ஆகவே நேரடி சூரிய ஒளி  மற்றும் மண், பனி, நீர் ஆகியவற்றால் பிரதிபலிக்கப்படும் சூரியஒளியைத் தவிர்க்க, உடல் முழுவதையும் மறைக்குமாறு உடை அணிவதே சிறந்தது. சன் க்ரீம்களால், உடைக்கு நிகரான முழுமையான பயன் இராது.

iii. கதிர்வீச்சு: 

கதிர்வீச்சு என்றால் அணுஉலைகள், அணுகுண்டுகளின் கதிர்வீச்சுதான் நினைவுக்கு வரும். ஆனால், இன்னும் எத்தனையோ வகைகளில் கதிர்வீச்சை நாம் தினம்தினம் எதிர்கொள்ளத்தான் செய்கிறோம்.


       ##  இயற்கையாகவே சில இடங்களில் கதிர்வீச்சுத் தன்மையுடைய ரேடான் போன்ற வாயுக்கள், கனிமங்கள் நிறைந்திருக்கும். இவற்றால் கதிர்வீச்சுக்கு ஆளாக நேரலாம். மேலும், சுரங்கம் போன்ற இடங்களில் பணிபுரிவோருக்கு இதுபோன்ற இயற்கைவளங்களினால் ஏற்படக்கூடிய கதிர்வீச்சு பாதிப்பு வர வாய்ப்பு அதிகம்.
 
       ##  எக்ஸ்-ரே போன்ற மருத்துவப் பரிசோதனைகள். பொதுவாக மருத்துவப் பரிசோதனைகளுக்காக எடுக்கப்படும் எக்ஸ்-ரேக்களில் மிக மிகக் குறைந்த அளவே கதிர்கள் செலுத்தப்படும். அதனால் கேன்ஸர் விளைவது அரிதே.

       ##  கதிர்வீச்சு சிகிச்சை: கேன்ஸருக்குக் கொடுக்கப்படும் கதிர்வீச்சு சிகிச்சையும் இந்தப் பிரிவில் வரும். இது விஷத்தை விஷத்தால் முறிப்பதுபோலத்தான். இங்கு வந்திருக்கும் நோயைக் குணப்படுத்த வேண்டும் என்பதே முதல் நோக்கம். அதனால், இச்சிகிச்சை தவிர்க்க முடியாததே. எனினும், இந்த ரேடியஷன் சிகிச்சை, கேன்ஸர் கட்டிகளை மட்டுமே குறிவைத்துச் செய்யப்படுவதால், அதிகப் பாதிப்பு இராது.

       ##  செல்ஃபோன் மற்றும் செல்ஃபோன் டவர்கள் - இவையும் ஆபத்து இருக்கா இல்லியா ரேஞ்சுக்கு பயமுறுத்துபவையே. அளவாகப் பயன்படுத்துவது, உடல்நலம், மனநலம், பணநலம் தரும்.

iv. மாசடைந்த சுற்றுச் சூழல்:

* வாகனங்களால் வெளியிடப்படும் புகைகள்
* ஆலைகளிலிருந்து வெளிப்படும் புகைமண்டலம்
* சுத்திகரிக்கப்படாத ஆலைக்கழிவுகள்
* தரம் பிரிக்காமல் குப்பைக் கிடங்குகளில் இடப்படும் பிளாஸ்டிக், மற்றும் ரசாயனப் பொருட்கள் கலந்துள்ள குப்பைகள்

இவையும், இவை போன்ற பலவும் நாளடைவில் காற்று, குடிநீர், மண் என எல்லாவற்றிலும் கலந்து உண்டாக்கும் கடுமையான பாதிப்புகளில் கேன்ஸரும் ஒன்று என்பது வேதனையான உண்மை.

6.  பரம்பரை காரணங்கள்:

குடும்பத்தில் யாருக்கேனும் ஒருவருக்கு இருந்தால், மற்றவர்களுக்கும் வரும் சாத்தியக்கூறு மிகமிகக் குறைந்த அளவே. அதுவும் ஒருசில வகை கேன்ஸர்கள்தான் பரம்பரையாக வரும் வாய்ப்புண்டு. அப்படியே, குடும்பத்தில் யாருக்கேனும் ஏற்கனவே வந்திருந்தால், நமது வாழ்க்கை முறையை (lifestyle) அதற்கேற்றவாறு மருத்துவர் அறிவுரையோடு மாற்றிக் கொண்டால் வரும் வாய்ப்புகளைக் கட்டுப்படுத்த முடியும்.

en.wikibooks.org
 மேலும்,  ஒருவர் பரம்பரை காரணமாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளவர் என்பதால், அவர் அடிக்கடி பரிசோதித்துக் கொண்டும் இருப்பதால்,  ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுகொள்ள முடியும் வாய்ப்பும் உண்டு!! அதாவது, பரம்பரை காரணம் அமையப் பெற்றவர்களை சீட்-பெல்ட்/ ஹெல்மெட் அணிந்து பாதுகாப்பாக வண்டி ஓட்டுபவர்களோடு ஒப்பிடலாம்!!

ஆனால், பரம்பரை காரணங்கள் இல்லாதவர்கள், ‘நமக்குத்தான் வர வாய்ப்பில்லையே’ என்று அலட்சியமாக இருந்துவிட நேருகிறது.  மேலும், பலர் தம் வாழ்க்கை முறையால் (சிகரெட், குடி, தவறான உணவுப்பழக்கங்கள்) தனக்கு கேன்ஸர் வரும் வாய்ப்புகளை அதிகரிப்பதன் மூலம், தம் பரம்பரைக்கும் அதன் ஆபத்தைத் தந்துவிடும் காரணியாக அமைந்து விடுகின்றனர்!!


ரு காலத்தில், ”இன்னதென்று காரணமே சொல்லமுடியாது” என்று கூறப்பட்ட கேன்ஸருக்கு, இன்று இவைகளாகவும் இருக்கலாம் என்று பல காரணங்கள் அறிவியல் உலகால் நம்முன் வைக்கப்பட்டுள்ளன. இனி வருங்காலத்தில், இவைஇவைதான் அறுதியான காரணங்கள் என்று கண்டறியப்படலாம்.  அப்போது கேன்ஸரும் முழுமையாக “வருமுன் காக்க” வாய்ப்புள்ள நோயாக மாறலாம். அதுவரை, கவனமாக இருப்பதன்மூலம், வாழ்வை நம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன்மூலம், வரக்கூடிய நோய்களையும் கட்டுப்படுத்த உறுதி கொள்வோம். 

நல்ல சுற்றுச்சூழல், மாசுபடாத காற்று, விஷமாகாத குடிநீர் முதலியனவற்றைப் போல, நமது தலைமுறைக்கு நல்ல உடல்நிலையைத் தந்து செல்வதும் நம் கடமைதானே!!

Ref:
1. http://cancerhelp.cancerresearchuk.org/
2. http://www.cancer.gov/
3. http://www.cancer.org/
4. http://www.medicalnewstoday.com/
5. http://quitsmoking.about.com/
6. http://www.reloveplanet.com/
7. http://medicmagic.net/
8. http://www.webmd.com/
9. http://urbanlegends.about.com

Post Comment

ஆணாதிக்கவாதியா நீ?


தலை காது மறைத்து உளர்
கையும் கண்ணும் மட்டும் தெரிய சிலர்
கால் முழுதும் மறைக்காதவர் இலர்
கைவிரல்கூட மறைத்துப் பலர்
என்ன இது புதுமை
இனம் மொழி நாடு மதபேதமில்லை

குளிர்காற்றே நீ செய்வதென்ன
அனைவருக்கும் கட்டாய பர்தா
அணிவித்தாய்
ஆணாதிக்கவாதியோ நீ

குளிர்காலமெனும் கயவனிடமிருந்து
காத்து மீட்டெடுக்கக்
கடமைப்பட்டக் காலைக்
கதிரவா எங்கே நீ போனாய்?

தமிழ்மண ஓட்டுகள் குத்திப்
பிரபல பிராப்ளமாக ஆக்கி
சூடான இடுகையுஞ் சமைத்து
மகுடமும் சூட்டி
பின்னூட்டங்கள் அள்ளித் தந்து
ஹிட்ஸைக் கொட்டிக் கொடுத்து
அலெக்ஸா ரேங்கும் தருகிறோம்
பொதியப்பட்டிருக்கும் அப்பாவிகள்
எங்களை மீட்க ஓடோடிவா!!

டிஸ்கி:

ஸ்வெட்டர் போட்டு, குல்லாய் போட்டு, அதற்குமேலே கம்பளி போர்த்தி, கையுறையும் போட்டு, ரூம் ஹீட்டரும் போட்ட பின்னும் குறையாத நடுக்கத்துடன் “உக்காந்து யோசிச்சது”!! அப்படியொரு குளிர் இங்கே!!


இன்னும் சிரிக்கணும்னா, முன்னொரு காலத்தில எழுதப்பட்ட இன்னொரு பதிவையும் பாருங்க.


Post Comment

டிரங்குப் பொட்டி - 21

இந்தியாவின் எல்லைகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள், பனிபடர்ந்த இமயமலைகளில் பணிபுரியும்போதுதான் மிக அதிகம். சராசரி தினப்படி வேலைகள் செய்வதுகூட மிகவும் கடினம் அங்கு. இதனை எதிர்கொள்ளவேண்டி இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி நிறுவனம் பல கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளது. இவை இயற்கை முறைகளை அடித்தளமாகக் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 25 கண்டுபிடிப்புகளை அடித்தட்டு பொதுமக்களின் நலன்கருதி, அவர்களின் பயன்பாட்டுக்குத் தகுந்தவாறு குறைந்த விலையில் சந்தைகளில் விற்கப் போவதாகக் கூறியுள்ளது.

பனிப்பொழிவினால் உடல் உறுப்புகள் மரத்துப் போதலைத் தவிர்க்க (Frost bite) சோற்றுக் கற்றாழையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட க்ரீம் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கிறதாம். அணுக்கதிர்வீச்சின் பாதிப்பிலிருந்து தப்பிக்க துளசியைக் கொண்டு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதாம். ஸ்வெட்டர் போன்ற கம்பளித் துணிகளில் பூஞ்சைக் காளான் பிடிக்காமல் இருப்பதற்கும் ஸ்ப்ரே, பனிமலைகளில் உபயோகிக்கத்தகுந்த (அண்டார்டிகாவில் கிடைக்கும் ஒருவகை பாக்டீரியாக்களைப் பயன்படுத்தும்) கழிவறைகளும் இந்தப் பட்டியலில் உண்டு.

-o0o-o0o-o0o-

இரட்டையர்கள் என்றாலே ஒரே பிரசவத்தில் ஒரே நாளில் சில நிமிட வித்தியாசத்தில் பிறந்தவர்கள் என்றுதான் அர்த்தம். அரிதாக டிஸம்பர் 31 நள்ளிரவு பிறக்க நேரிட்டால் ”ஒரு வருட வித்தியாசம்” இரட்டையர்களுக்கு நேரும். ஆனால், ஐந்து வருட வித்தியாசத்தில் இரட்டையர்கள் பிறந்திருக்கிறார்கள் என்றால் நம்புவீர்களா?

இங்கிலாந்தில் 2005-ம் வருடம் இரு தம்பதியர் குழந்தைபெற எடுத்துக் கொண்ட சிகிச்சையில், ஐந்து கருக்கள் உருவாகின. அவற்றில் ஒன்றை தன் கருப்பையில் செலுத்தி பெற்றெடுத்தவர்கள், மீதியை “சேமித்து” வைத்திருந்தனர். இன்னொரு குழந்தைக்கு தேவையெனக் கருதியதும், இன்னொரு கருவை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து, பெற்றுக்கொண்டனர்!! 

சீனாவிலும் குழந்தைக்கான ட்ரீட்மெண்டுகள் அதிகம் செய்துகொள்கிறார்களாம். அங்கு ஒருவருக்கு ஒரே குழந்தை நியதி. ஆனால், அந்த ஒரு குழந்தையும் தாமதமாவது அதிகரித்துள்ளதாம். அதிலும், பெண்களுக்கு கருமுட்டை உருவாவதில்தான் அதிகப் பிரச்னை என்பதால், கருமுட்டை தானம் என்பது பல இளம்பெண்களுக்கு பெரும்பணம் சம்பாதிக்கும் இலகுவான வழியாக ஆகிவிட்டது!! அதிலும், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் முதுநிலைப் படிப்புகள் படிக்கும் அழகான பெண்களுக்குத்தான் மிக டிமாண்டாம்!! கருமுட்டை தானம் செய்வது சீனாவில் சட்டவிரோதமானது என்றாலும், பயமில்லாமல் திரைமறைவில் வியாபாரம் அமோகமாக நடக்கத்தான் செய்கிறது. 

ஒரு குழந்தையிடம் அதன் தந்தை யார் என்று அம்மா சொன்னால்தான் தெரியும். இனி “அம்மா”வும் யார் என்று அம்மாதான் சொல்லணும்போல! மருத்துவத் தொழில்நுட்பம் வளர்ந்ததற்கு மகிழ்வதா, இல்லை மெடிக்கல்/ சோஷியல் எதிக்ஸ் தொலைந்ததற்கு வருந்துவதா.

-o0o-o0o-o0o-

சென்னை “எழிலகத்தில்” நடந்த தீவிபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் இறந்ததும், மேலும் சிலர் காயமடைந்ததும் வருத்தற்குரியது. எனினும், எரிந்து கொண்டிருக்கும் கட்டிடத்திற்குள் எப்படி  இவ்வளவு அஜாக்கிரதையாக உள்ளே சென்றார்கள் என்ற கேள்வி எழுகிறது. 

முன்பு தீயணைப்பு வீரர்கள் குறித்து நான் எழுதிய பதிவொன்றில்    இப்படி எழுதியிருந்தேன்:

திறந்தவெளி தீ விபத்தைவிட, மூடிய இடங்களின் தீ விபத்துகளில் (closed fire) ரொம்பக் கவனமாகத் தீயணைப்பை மேற்கொள்ள வேண்டுமாம்.  ... எரியும் தீ, ஒரு கட்டத்தில், போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் இருக்கும்; ஆனால் முழுதும் அணைந்துவிடாது. ... அச்சமயத்தில் கதவையோ, ஜன்னலையோ திறப்பது, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்ததுபோல, பெரும்வெடிப்பை ஏற்படுத்தி, பலத்த உயிர்ச்சேதத்தையும் ஏற்படுத்த வல்லது. தணலில் ஊதினால் நெருப்பு பற்றிக் கொள்ளுமே, அதுபோல!! இதற்கு backdraft, flashover என்று பெயர். ... இதைத் தவிர்க்க, இவ்விளைவினால் ஆபத்து ஏற்படாமலும், புகையை வெளியேற்றவும், முதலில் கூரைப் பகுதியிலோ அல்லது அதிக ஆபத்து ஏற்படாதபடி ஒரு இடத்திலோ ஒரு திறப்பு ஏற்படுத்திக் கொள்வார்களாம்.

அந்தத் துறை அதிகாரிகளுக்கு இது தெரியாமலா இருந்திருக்கும்? என்ன காரணம் என்று அதிகாரி பிரியா சொன்னால்தான் தெரியும்.

-o0o-o0o-o0o-

தமிழ்ப் பதிவுலகில் இப்ப நிறைய திரட்டிகள் வந்துவிட்டன. ஒவ்வொன்றிலும் ரிஜிஸ்டர் செய்து, வோட் பட்டனையும் பதிவில் இணைப்பதே ஒரு பெரிய வேலை. அதை ஒரு வழியாச் செஞ்சு முடிச்சுட்டேன்.  (ஒண்ணு மட்டும் இன்னும் தகராறா இருக்கு..) ஆனா, இப்ப என்னன்னா, ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் அதை  இணைக்கவோ, ஓட்டு போடவோ, மற்றவர்களின் பதிவுகளுக்கு ஓட்டு போடவோ செய்யணும்னா, அதுக்கு ஒவ்வொரு முறையும் லாகின் செஞ்சு, புது ஜன்னல் (தானே) திறந்து, ஓட்டுப் பட்டனைத் தேடி, கிளிக்கி, அதை மூடி... ஸ்ஸப்பா... இதுக்குப் பயந்தே ஓட்டு போட சோம்பலா இருக்கு.

1. ஒவ்வொரு புது பதிவிற்கும், நாம் சென்று இணைப்பதைவிட, ஏன் இந்தத் திரட்டிகள் தம்மிடம் ரிஜிஸ்டர் செய்துகொண்டவர்களின் பதிவுகளைத் தானாகவேத் திரட்டிக் கொள்ளக் கூடாது? (இண்டி பிளாக்கர் இப்படித்தான் செய்கிறது)

2. பதிவுகளுக்கு ஓட்டு போட, அந்த ஓட்டுப்பட்டையைக் கிளிக்கினால், புது Window/tab திறக்காமலே ஓட்டு சேரும்படி ஏன் செய்யவில்லை? (யுடான்ஸ் பட்டை இப்படித்தான் செயல்படுகிறது)

இதெல்லாம் எல்லாப் பதிவர்களுக்குமே இருக்கும் கோரிக்கைகள்னு நினைக்கிறேன். திரட்டிகளிடம் சொல்லுவோமா? சங்கம் வச்சுச் சொன்னாத்தான் மதிச்சுக் கேப்பாய்ங்களோ? :-)))))))

-o0o-o0o-o0o-

பாகிஸ்தானைச் சேர்ந்த “அர்ஃபா கரீம்” என்கிற 16 வயதுப் பெண் ஜனவரி 14 அன்று இறந்துவிட்டாள். இவள், 9 வயதிலேயே, மைக்ரோஸாப்டின் தேர்வுகள் எழுதி, கின்னஸ் சாதனை புரிந்தவள். இதன்மூலம் கிடைத்த புகழ் வெளிச்சத்தால், மேலும் பலப்பல விருதுகளும், பாராட்டுகளும் பெற்று, தொடர்ந்து செய்திகளில் இருந்து வந்தாள். நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லாமல், ஆரோக்கியமாக இருந்தவள். மற்ற சில ஆய்வுகளோடு, தனது ”O” லெவல் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்தவள், திடீரென வலிப்பு வந்து கோமாவில் ஆழ்ந்து அப்படியே போயும்விட்டாள்.

மிகச்சிறுவயதிலேயே சாதனை புரிபவர்களைப் பற்றி வாசிக்கும்போதெல்லாம் போன்ஸாய் மரம்தான் நினைவுக்கு வருகிறது.

-o0o-o0o-o0o-

ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளில், ஏதாவது குற்றம் நடந்தால், அதற்குக் கண்ணால் கண்ட சாட்சிகள் அல்லது சிசிடிவிதான் முக்கிய ஆதாரம்.  அப்படி ஜனங்க நிறைஞ்ச இடத்துல ஒரு குற்றம் நடந்து, ஆனா யாருமே அதைப் பாத்திருக்க முடியலைன்னா எப்படி இருக்கும்? (நோ, நோ.. நான் நம்ம ஊர்ல பட்டப்பகல்ல நடுவீதியில் ரவுடிங்க கொலையே பண்ணாலும், நாம யாருமே “பாத்திருக்க” மாட்டோமே, அதைச் சொல்லலை... ) இதுல நிஜமாவே நம்மால “பார்க்க” முடியாது.  குழப்புறேனா? இது ஒரு கண்கட்டு வித்தை மாதிரின்னு கற்பனை பண்ணிக்கோங்களேன்.. புரியும்..

அதாவது, ஒரு பொருளை நாம ”பாக்கிறோம்” அப்படின்னா என்ன அர்த்தம்? ஒளிக்கற்றைகள் அந்தப் பொருளின்மேல் பட்டு, பின் நம் கண்ணில் பிரதிபலிக்கின்றன. இந்த நிகழ்வைத்தான் “பார்ப்பது” அப்படின்னு சொல்றோம். ஆனா, ஒளிக்கற்றைகளை அந்தப் பொருளின்மேல் விழாமல் செய்துவிட்டால், அந்தப் பொருள் இருப்பதே நமக்குத் தெரியாது இல்லியா? (லைட் ஆஃப் பண்ணாலும் தெரியாதேன்னு சின்னப்புள்ளத்தனமாச் சொல்லக்கூடாது :-)))) ) 

அதாவது, ஒரு சிறிய கருவியின் உதவியோடு, ஒரு குறிப்பிட்ட பொருளின்மீதோ அல்லது ஒரு இடத்தின்மீதோ விழக்கூடிய ஒளிக்கற்றைகளைத் தடுத்துவைத்து, சிறிது நேரம் கழித்து அனுப்பினா, குறிப்பிட்ட அந்த நேர இடைவெளியில் (time delay) அந்த இடத்தில் நடந்தவைகளை நாம் காண முடியாது.  புரியும்படிச் சொல்லணும்னா, ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டா போய்ச்சேர வேண்டிய இடத்துக்கு லேட்டாப் போய்ச் சேருவோம்ல, அதுமாதிரி ஒளிக்கற்றைகளையும் (light rays)  தாமதப்படுத்துவது!!


ரெண்டு வாரம் முன்னே, ஆராய்ச்சியின் ஆரம்பநிலையில் உள்ள விஞ்ஞானிகள், இந்த முறையில் 50 trillionths of a second என்ற மிகநுண்ணிய நேர அளவுக்கு time delay செஞ்சு காமிச்சிருக்காங்க. இதற்கு “time cloak" - நேரத்தை மறைக்கும் அங்கி என்று பெயர் சூட்டிருக்காங்க. 

எனக்கு ஒரு சந்தேகம், ஒளியை மறைக்கலாம்; ஒலி?  மறைக்கப்பட்ட நிகழ்வினால் எழும் சத்தத்தை எப்படி மறைப்பாங்க?

-o0o-o0o-o0o-

இதுவும் பதிவுலகு சம்பந்தப்பட்டதுதான். இப்ப “பஸ்”ஸை இழுத்து மூடிட்டதால, பிளாக்கிலருந்து அங்கே போன பதிவர்களில் நிறைய பேர் மீண்டும் பிளாக்குக்குத் திரும்பி வர ஆரம்பிச்சிருக்காங்க. அவங்களை வரவேற்கிறேன்.  சிலபேரு டிவிலருந்து சினிமாவுக்குப் போய், அங்கே மார்க்கெட் போனதும், மறுபடியும் டிவிக்கு வருவாங்க. இல்ல.. ஞாபகம் வந்துச்சு.. சொன்னேன்... :-))))

-o0o-o0o-o0o-

Post Comment

விசேஷம் எப்போ

(படங்கள் அனைத்தும் யூத்ஃபுல் விகடன் பக்கத்தில் இக்கட்டுரையுடன் பிரசுரமாகியிருந்தவை)


  திருமணமாகி ஒரு வருடம்போல ஆகியிருந்த ஒரு பெண்ணிடம் அடிக்கடி ஃபோன் பேசுவதுண்டு. யாரிடம் நான் பேசினாலும்,  "வேறென்ன விசேஷம் சொல்லுங்க" என்று பேச்சைத் தொடரும் முயற்சியாகக் கேட்பதுண்டு. இந்தப் பெண்ணிடம் ஒருமுறை அப்படிக் கேட்டபோது, "என்னக்கா, விசேஷமா இருந்தா நானே சொல்லமாட்டேனேக்கா? எப்போப் பேசினாலும் இதயே கேக்குறீங்களே?" என அழத்துவங்க, நான் அதிர்ந்துவிட்டேன். ஒவ்வொரு முறை தொலைபேசும்போதும், அவர் இந்தக் கேள்வியோடு பேச்சைமுடித்தது அப்போதுதான் ஞாபகம் வந்தது.

சகஜமாகப் பயன்படுத்தும் ஒரு வார்த்தைக்கு இப்படி ஒரு அர்த்தம் வருமா என்று குழம்பிய நான், அந்தப் பெண்ணிடம் விளக்கித் தெளிய வைக்க, பட்ட சிரமத்தில், அந்த வார்த்தையையே என் ‘அகராதி’யிலிருந்து எடுத்துவிட்டேன்!! விளையாட்டாகச் சொன்னாலும், இப்பெண்களின் வேதனைகள் விளையாட்டல்ல!

குழந்தை பெறத் தாமதமாவது என்பது பெண்களின் மனதைக் கீறும் ரணமாக, இந்த நவீனயுகத்திலும் இருப்பதுதான் பெரும்வேதனை!


முந்தைய காலங்களில்கூட இந்தளவு வேதனை இருந்திருக்குமா என்று எனக்கு சந்தேகமாகத்தான் இருக்கிறது. காரணம், என் குடும்பத்தில் பெரிய பாட்டி ஒருவருக்குத் திருமணமாகி 16 வருடங்கள் கழித்தே (சிகிச்சைகள் ஏதுமின்றி) குழந்தைகள் பிறந்துள்ளன. குடும்பத்தின் 'இரும்புப் பெண்மணி'யான அவரை யாரேனும் மனதாலும்கூட குறை நினைத்திருப்பார்களா என்றே சந்தேகம் வரும். என் சின்ன மாமியாருக்கு குழந்தைகள் இல்லை என்பதே எனக்குத் திருமணமான சில மாதங்கள் கழித்துத்தான் தெரியும். அந்தளவுக்கு அவரைச் சுற்றி குழந்தைகள், உறவுகள் கூட்டம் இருக்கும். முக்கிய நிகழ்ச்சிகளில் அவர் பிரதானப்படுத்தப்படுவார். கதைகளில்தான் குழந்தைப் பேறு இல்லாத பெண்களை அம்மாதிரி இழிவுபடுத்தப்படுவதை வாசித்திருக்கிறேனே தவிர, நிஜத்தில் அவர்கள் மனம் வருந்தக்கூடாது என்பதில் உறவுகள் பெருங்கவனம் கொள்கின்றனர் பெரும்பாலும்.

இவர்களைக் காயப்படுத்துபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். அதற்கும் ஏதேனும் காரணம் இருக்கலாம்; கவனித்துப் பார்த்தால், அப்படிக் குறை கூறுபவர்கள், குழந்தை பிறந்த பின்னும்கூட அதை வேறுவகையில் தொடருவார்கள். ஒரு தோழி, தன் கணவர் மற்றும் புகுந்த வீட்டினர் அனுசரணையாக இருந்தாலும், அவரது உறவினர் ஒருவர் காணும் இடத்திலெல்லாம் இதைக் குறித்துப் பலர் அறிய விசாரித்து தன்னை குமைய வைப்பதாக வருந்தினார்.  அடுத்த முறை அவரைக் காணும்போது, "எவ்வளவோ வேண்டுதல் செஞ்சும் பலனில்லை. நீங்களாவது எனக்காக முடி காணிக்கை தர்றதா வேண்டிக்கோங்களேன். பெரியவங்க உங்க பிரார்த்தனை கண்டிப்பாப் பலிக்கும்னு நம்பிக்கை இருக்கு"னு  வைக்கச் சொன்ன ‘செக்’ சரியாக வேலை செய்தது. சில இடங்களில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்!!

மன உறுதி அதிகரித்து, பல துறைகளில், ஆண்களுக்கே சவாலாகத் திகழுமளவு முன்னேறியிருக்கும்  இக்காலப் பெண்கள், இந்தவொரு விஷயத்தில் மட்டும் மனதளவில் இன்னும் பலவீனமாக இருப்பது ஏன்?   இதற்குக் கைகாட்டப்படுவது,  சமூகம் மற்றும் மாமியார் தொடங்கி புகுந்த வீட்டு உறவினர்களின் எதிர்பார்ப்புதான்.  மாறிவரும் உலகில், மாமியார்களும் மாறித்தான் இருக்கிறார்கள். மருமகளுக்குக் குழந்தைப்பேறு தாமதமாவதற்கு,  தன் மகனும் காரணமாக இருக்கலாம் என்பதை இக்கால மாமியார்கள் பலரும் உணர்ந்தே இருக்கிறார்கள்.  எனவே அவர்களும் விதிப்படி நடக்கட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். அண்டை, அயல், உறவுகள், நட்புகள் எல்லாரும்கூட ஆதரவாகவே இருக்கிறார்கள் இவர்களுக்கு.

எனில், எங்கே தவறு? கூட்டுக் குடும்பங்கள் தொலைந்துவரும், ஏன், தனிக்குடும்ப வாழ்வே மின்னும் நட்சத்திரம்போல மின்னிவிட்டு மறைந்துவிடும் இக்காலங்களில், தன் முதுமைக்காலத்தில் ஆதரவற்றுப் போய்விடுமோ எனும் பெண்மைக்கேயுரிய பாதுகாப்பு உணர்வுதான் அவர்களை இப்படி வீழ்த்துகிறதோ?

வேலையைத் தக்கவைக்க, வேலைகளில் பதவி உயர்வு, இடமாறுதல்கள், வசதிவாய்ப்புகள் பெருகக் காத்திருத்தல் எனப் பல்வேறு காரணங்களால் திருமணம் அல்லது பிள்ளைப்பேற்றைத் தள்ளிப்போடுதல் முதலியவை குழந்தைப்பேறு வாய்ப்புகள் குறையவும் காரணமாக அமைகின்றன. போதாதற்கு வேலை டென்ஷன், ஸ்ட்ரெஸ், வேலைக்கான களம், உண்ணும் உணவுகள், பயன்படுத்தும் நவீனக் கருவிகள் என்று பல்வேறு காரணங்களும் கூட்டணி போடுகின்றன.

பெருகிவரும் இணையதளங்களால், சாதாரண மக்களுக்கும் மருத்துவ அறிவு அதிகரித்துவிட்டதைப் போல,  குழந்தையின்மை சிகிச்சை முறைகளிலும் பெண்களில் சிலருக்கு இருக்கும் அறிவு பிரமிக்க வைக்கிறது! அதேசமயம், அளவுக்கு மீறிய தகவல்களால், தனக்கு ஏற்பட்டிருப்பது இந்தக் குறையா, அல்லது அதுவா, அதற்கு இது ஏற்ற சிகிச்சை முறையா, அல்லது அதுதான் சரியா என்று தங்களைக் குழப்பிக் கொள்ளும் நிலைக்குச் செல்லுவதைப் பார்க்கும்பொழுதில் "அறியாமையே ஆனந்தம்" (Ignorance is bliss)  எனத் தோன்றுவதும் உண்மையே.

அதிவேகமாய் அபரிதமாய் வளர்ந்திருக்கும் தொழில்நுட்பங்களினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருந்தாலும், பலவற்றால் மனித உறவுகளின் மதிப்பு குறைந்ததுபோலவே, சேவைகளும் தரத்தில் குறைந்து வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. இவற்றில் மருத்துவத்துறையின் தரம்தான் நம்மை அதிகக் கவலைப்படுத்துவது. மேலும், வழமையாய் வரும் சிறு உடற்பிணிகளே தற்காலங்களில் நவீன மருத்துவத்துறைக்குச் சவால் விடுகின்றன. அப்படியிருக்கும்போது, பெரும்பாலும் ‘நிகழ்தகவின்’ அடிப்படையிலேயே வெற்றிதரும் குழந்தையின்மை சிகிச்சை முறைகள் வெற்றிபெற சிகிச்சைக்கு உட்பட்டவர் மட்டுமின்றி, சக துணையும் மன உளைச்சல் இல்லாது இருத்தல் அவசியம்.  அவர்கள் மனதில் அமைதிச்சூழல் ஏற்பட, சிகிச்சை தரும் மருத்துவர் உள்ளிட்ட குழு நம்பிக்கை தரும்விதமாகவும், ஆதரவாகவும், திறமையாகவும் அமைதல் மிகமிக அவசியம்.

குழந்தையின்மைக்கு சிகிச்சை என்ற பெயரில் நடத்தப்படும் மருத்துவமனைகள்தான் குழந்தையில்லாப் பெண்களின் மனச்சோர்வுக்கு முக்கியக் காரணமோ எனத் தோன்றுகிறது. மிகச் சிலரே, உண்மையான சேவை மனப்பான்மையில் தரமான, சரியான சிகிச்சை வழங்குகின்றனர். மற்றவர்கள்,  பெருகிவரும் இன்றைய நவீனகால மருத்துமனைகளுக்கு ஒப்பாக, இவர்களுக்குப் பொய்யான நம்பிக்கைகள் கொடுத்து, பணம் பறிக்கும் நடவடிக்கைகளிம் ஈடுபடுகின்றனர்.

ரேஸில் செல்லும் குதிரையை ’கமான், கமான்’ என்றழைப்பது போல, இப்பெண்களை, அவர்களின் உண்மை உடல்நிலைக்கு மாறாக,  மீண்டும் மீண்டும் பல்வித பரிசோதனைகளுக்கு உள்ளாக்குகின்றனரோ என்று கவலை தோன்றுகிறது.  ஒரு ஏமாற்றத்தை எப்போதாவது எதிர்கொண்டால், அதிகப் பாதிப்பு இராது. தொடர்ச்சியாகப் பலமுறை தோல்வியாக அமையும்போதுதான் பாதிப்பு அதிகமாக  இருக்கும்.

ஒரு என்.ஆர்.ஐ. நண்பரின் மனைவி, தமிழகம் சென்று, குழந்தையின்மைக்காக மருத்துவரை நாடி, சிகிச்சைகள் மேற்கொண்டு,  பரிந்துரைத்தபடி, பல்விதப் பரிசோதனைகள் செய்துகொண்டார். இன்னும் மேலதிகப் பரிசோதனைகள் செய்யும்படி சொல்லப்பட்டது.  விடுமுறை முடிந்துவிட்டதால், தான் வாழும் நாட்டில் செய்துகொள்ளலாம் என்று எழுதி வாங்கிவந்தார்.

அங்கே, குழந்தையின்மைச் சிகிச்சைகள் காப்பீடுகளால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதால், தம் பொறுப்பிலேயே பெரும்தொகை செலவழித்துச் செய்துகொள்ளவேண்டும். என்றாலும், ஆர்வம், அவசியத்தின் காரணமாகச் செய்துகொள்ள முன்வந்து மருத்துவமனைக்குச் சென்றபோது, குறிப்பிட்ட அந்தப் பரிசோதனையைச் செய்ய மறுத்துவிட்டனர்! காரணம்? பரிந்துரைக்கப்பட்ட அப்பரிசோதனைகள் திருமணமாகி குறைந்தது ஏழெட்டு வருடங்களாவது ஆகியிருந்தால்தான் அந்நாட்டில் செய்வார்களாம். இவர்களுக்கோ ஒன்றரை வருடங்களே ஆகியிருப்பதால், மறுத்திருக்கிறார்கள்!! நண்பருக்கு மிகுந்த அதிர்ச்சி.  சிகிச்சைகள் எடுப்பதையே நிறுத்திவிட்டார். பின்னர் இயல்பாகவே, சில மாதங்களில் அப்பெண் கருவுற்றார்.

இன்னொரு விஷயம் கவனித்திருக்கிறீர்களா? முதல் குழந்தை பிறக்கத் தாமதமாகும் சிலருக்கு, இரண்டாவது, மூன்றாவது குழந்தைகள் அடுத்தடுத்து இடைவெளியே இல்லாமல் பிறந்திருக்கும். காரணம் - எந்த டென்ஷனும் இல்லாமல், எதிர்ப்பார்ப்புகளும் திணிக்கப்படாமல் இருப்பதால்தானே?

எனில் சிகிச்சையே கூடாதா என்றால், இல்லை. சிகிச்சை எடுத்துக் கொள்ளுமுன் அவசியப்பட்ட கால அளவு பொறுமையாய் இருக்கவேண்டும். கருவுறுவதில் தாமதம் ஏற்பட்டால், அதை அமைதியான மனதோடு, பொறுமையாக எதிர்கொள்ளுதல் மிக அவசியம். ஏற்கனவே சிகிச்சை பெற்றவர்களிடம் விசாரித்து, வாங்கும் கட்டணத்தின் அடிப்படையில் அல்லாமல், தரமான சிகிச்சையின் அடிப்படையில், நம்பிக்கையான மருத்துவரைத் தேர்ந்தெடுக்கவேண்டும். இச்சிகிச்சை முடிவுகளும் கணவன்-மனைவி இருவரின் மனத்திண்மையைப் பெருமளவு பொறுத்திருக்கும் என்பதால், இருவருக்கிடையில் இச்சமயத்தில்தான் புரிதல், இணக்கம் அதிகமிருக்க வேண்டும்.

ஒருவேளை, முடிவுகள் சோர்வைத் தரும்வகையில் அமையுமெனில், தளர்ந்துவிடாது, வேறு வழிகளைப் பரிசீலிக்க வேண்டும். அதில் முதலாவதாய், தத்தெடுத்தல் இருப்பது நலம்.
தத்தெடுப்பதில் இருக்கும் மனத்தடைகளும் இளைய தலைமுறையினரிடம் பெருமளவில் நீங்கிவருகின்றன. செய்திகளில், ஒரு குழந்தை கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியோடு அருகிலேயே, அதனை அப்பகுதியைச் சேர்ந்த யாரேனும் ஒரு தம்பதியர் வளர்க்க விருப்பம் தெரிவித்திருப்பதாயும் செய்தி இருக்கும். எனினும், மக்களின் மனத்தடை நீங்கிய அளவுக்கு, சட்டத்தின் இடர்கள் நீங்கிவிடவில்லை. சாதாரணர்களும் எதிர்கொள்ளுமளவு தத்தெடுத்தலை இலகுவாக்க அரசு முன்வந்தால், பெரும் வரவேற்பு இருக்கும் என்பது உறுதி.

எத்துன்பம் வாய்த்தாலும் தனக்கு நேர்ந்ததை எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பதைவிட, தன்னைவிட கீழ்நிலையில் இருப்பவர்களைக் கண்டு மனம் தேற்றிக்கொள்ளல் வேண்டும். இவ்விடத்தில், தன்னைவிடக் கீழ்நிலை என்றால், இச்சிகிச்சை முறைகளை மேற்கொள்ளமுடியாத அளவு வறுமையிலும், அறியாமையிலும் இருப்பவர்கள், மற்றும், குழந்தைபெறத் தகுதியிருந்தும், தனக்கோ தன் துணைக்கோ ஏற்பட்ட நிரந்தரப் பாதிப்புகளால் குழந்தை பெறுவதைத் தவிர்ப்பவர்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள் எனலாம்.

உதாரணமாக, எய்ட்ஸ் போன்ற தீரா நோய் தாக்கியவர்களின் மனைவியர் அல்லது புற்றுநோய், காசநோய் போன்ற கருவையும் தாக்கும் நோயுடையோர் நிலை. குழந்தை பெற தாமதம் ஆகுபவர்களுக்கு என்றாவது ஒருநாள் இறையருளால் குழந்தை பாக்கியம் வாய்க்கும் நம்பிக்கை உள்ளது; ஆனால் ’கைக்கெட்டியது வாய்க்கெட்டாத’ நிலையிலுள்ள இவர்கள்?
திருமணம் ஆகி, குழந்தைப் பேறு அடைய தாமதமானால் பொறுமையும், மன உறுதியும், நிறைய நம்பிக்கையும் கொள்வது மிக அவசியம். மேலும்,  இயன்றவரை இயற்கை வழிகளிலான சிகிச்சைகளைக் கைக்கொள்வதே சாலச் சிறந்தது.

'சொல்வது எளிது, எங்கள் நிலையில் இருந்துப் பார்த்தால் தெரியும்' என்றால், நான் அறிந்த மிகச்சிறந்த குழந்தைப்பேறு மருத்துவர் ஒருவர் குழந்தையில்லாதவர். அவர் பெறவில்லையே தவிர, எத்தனை ஆயிரம் குழந்தைகளை அவர் கையில் முதலில் ஏந்தியிருப்பார்? எத்தனை உள்ளங்கள் அவரை வாழ்த்தியிருக்கும்? அவர் இவ்வாறு துவண்டிருந்தால், மற்றவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் பாக்கியம் கிடைத்திருக்குமா?

தோழிகளே.. மனம் துவளாமல் இருப்பது தான் குழந்தை பாக்கியம் பெற முதல் வழி. சீக்கிரமே மழலைச் செல்வம் உங்களை மகிழ வைக்கும்.
நம்பிக்கையோடு இருங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்!

Post Comment

கேள்வியின் நாயகன் - 2

கேள்வியின் நாயகன்-1

 
இப்ப பள்ளிகளுக்கெல்லாம் குளிர்கால விடுமுறை. பசங்க சும்மா இருக்கறதைப் பார்க்கப் பொறுக்காம, சின்னவனை, அவன் வேண்டாம், வேண்டாம்னு அலறுனாலும் விடாம, தமிழ் படிக்க வாடான்னு பிடிச்சு உக்கார வச்சதப் பாத்த ரங்ஸ், “அவந்தான் வேணாங்கிறான்ல, விடேன். தமிழ் நல்லா பேசத் தெரியுதுல்ல, அது போதாதா”ன்னார்.

“நாமெல்லாம் தமிழங்க! பேசத் தெரிஞ்சாப் போதுமா? எழுதத்தெரியலன்னாலும் அட்லீஸ்ட் வாசிக்கவாவது தெரிஞ்சிருக்க வேண்டாமா? நீங்க சும்மாருங்க. ”

“அவன் இப்போ எந்த காவியத்தை வாசிக்கப் போறான்? இப்பல்லாம் யாரும் லெட்டரும் எழுதுறதில்லை. லீவுல கூட ஃப்ரீயா விடாம தொணதொணன்னுட்டு..”

“ஊருக்குப் போறவாற நேரம், ஒரு பஸ் ரூட்டு வாசிக்க, நாட்டு நடப்பு தெரிஞ்சுக்க ஒரு நியூஸ்பேப்பர் வாசிக்கத் தெரியவேணாமா? அட, நாளபின்ன என் பிளாக் வாசிக்கணும்னு ஆசப்பட்டான்னா முடியாமப் போயிடக்கூடாதே?”

”அது நடந்திடக்கூடாதேன்னுதான் சொல்றேன். அப்புறம் உம்பிள்ளை உம்மேல வச்சிருக்க கொஞ்சநஞ்ச மரியாதயும் போயிடும்!! விஷப்பரீட்சை வேணாம்.”
______________________________

இதுக்கெல்லாம் பயப்படுவோமா? நாமெல்லாம் யாரு? ”உக்காந்து வாசிடா”ன்னு மூணாங்கிளாஸ் தமிழ்ப் புத்தகத்தைக் கொடுத்தேன்.

“மரா-த்தில்-லிருந்த குரங்கு இதைப்பு பார்த்துக்கு கோ-ண்டிருந்தது.” வாசித்தவன் சந்தேகம் கேட்டான், “ம்மா, புக்ல இருக்க தமிழ் ஏன் இவ்வளவு கஷ்டமா இருக்கு? நாம பேசுற தமிழ் எவ்வளவு ஈஸியா இருக்கு? அதேமாதிரியே புக்லயும் இருக்கலாம்ல?”

அவ்வ்வ்... அப்ப நாளைபின்ன மொபைல்ல எஸ்.எம்.எஸ். அனுப்ப ஆரம்பிச்சான்னா, புஸ்தகத்துல இருக்க இங்லீஷ் ஏன் இவ்வளவு கஷ்டமாருக்குன்னு கேப்பானோ?

______________________________

“குரங்கு வாரிக்கு-திரையை நோக்கி....  ம்மா, இது தமிழ் புக்தானே, அப்புறம் ஏன் ”நோக்கி”னு மலையாளம்லாம் வருது? தமிழ்னா தமிழ் மட்டுந்தான இருக்கணும்?”

அவ்வ்வ்...  ”அது தமிழ்லருந்துதாண்டா மலையாளத்துக்குப் போச்சு!!”
______________________________

”இ-ரயில் (e-ரயில் இல்லை; சாதாரண ரயில்தான்!!) ....  ம்மா, ரயில்னுதானே சொல்வோம்? ஏன் இ-ரயில்னு எழுதிருக்கு புக்ல?”

அவ்வ்வ்... இத எப்படி விளக்குவேன்? “அது... ’ர’ வச்சு ஆரம்பிக்குற nouns-க்கு முன்னாடி இப்படி ஒரு ‘இ’ போடணும். ஆனா, அது “சைலண்ட்”தான்”

“அது ஏன் அப்படி...”ன்னு ஆரம்பிச்சவன், “ஓ.. இங்க்லீஷ்ல, "Knight" “tsunami" - இதிலெல்லாம் வர்ற மாதிரியா?”ன்னான்.

ஹப்பாடா, பிழைச்சேன்!!
______________________________

”ஆட்டு மந்தை.... மந்தைன்னா என்ன?”

” ’Herd of cattle’னு சொல்வோம்லியா, அதுல ’herd’னா மந்தைன்னு அர்த்தம்..”

“அப்படியா.. அப்ப நீ ஏன் முன்னாடியே சொல்லல”

அதானே, நான் ஏன் சொல்லல? ஆனாலும் சமாளிப்போம். “நீ கேக்கல, அதான் சொல்லல”

“அது எப்படி? ஒரு நல்ல உம்மான்னா, கேக்காமலே எல்லாம் சொல்லித் தரணும்..”

ஹும்ம்.. இதுதான் சொ.செ.சூ.வா!!

______________________________

’பொருத்தமான சொற்களை எழுதுக’வில் ‘உடை’ என்பதன் அர்த்தமான ‘ஆடை’ என்ற வார்த்தை கொடுக்கப்படிருக்கிறது.

“ம்மா, இதுல ‘உடை’ங்கிறதுக்கு அர்த்தமே கொடுக்கலை”

“ஒழுங்காப் பாரு, இருக்கத்தான் செய்யும்”

“எங்க இருக்கு? ‘உடை’ன்னா ஒடைக்கிறதுதானே? அந்த வேர்டே இல்ல பாரு”

மறுபடியுமா... “அடேய், உடைக்கு  டிரஸ்ஸுன்னும் அர்த்தம் உண்டு. அதான், ‘ஆடை’ன்னு கொடுத்திருக்கு பார்!!”

”அப்ப ஆடைன்னா, பால்ல இருக்குற ஆடை இல்லியா?”

அவ்வ்வ்வ்...

அதன்பிறகு ’அரை, அறை’ வார்த்தைகள் வந்தன. ”அரைன்னா அரைக்கிறது, அறைன்னா அறையறதுதானே”ன்னான்.

”அப்படியும் சொல்லலாம். அரைன்னா பாதி, அறைன்னா ரூம்னும் அர்த்தம் உண்டு”

“இதென்ன லாங்வேஜ் இந்தத் தமிழ், இப்படி ரெண்டு ரெண்டு மீனிங்கா இருக்கு? பேசும்போது எந்த வேர்ட் சொல்றதுன்னு குழப்பாதா? கேக்குறவங்களுக்கும் கன்ஃப்யூஸ் ஆகும்ல...”

“அதெல்லாம் பழகப் பழகப் புரியும்..”

“அதெப்படி... நீ என்கிட்ட இந்தமாதிரி எதாவது சொன்னா, எதச் சொல்றேன்னு புரியாததால நான் செய்யாம  இருப்பேன். அப்புறம் சொன்னத ஏன் செய்யலன்னு நீ என்னத்தான திட்டுவே!!”

முடீல... என்னால முடியல...

Post Comment