டிசம்பர் 1 உலக எய்ட்ஸ் தினம்.
எண்பதுகளின் தொடக்கத்தில் அங்கங்கே தென்பட ஆரம்பித்த இந்நோய் இன்று நீக்குபோக்கில்லாமல் எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. எய்ட்ஸ் வருவதன் முக்கிய காரணம் எல்லாரும் அறிந்ததே. அதாவது தவறான வாழ்க்கைமுறை வாழ்பவர்கள், ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடற்று வாழ்பவர்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள் ஆகியோர் தெரிந்தே தருவித்துக் கொள்ளும் நோய் எய்ட்ஸ். அதுதவிர, சுத்திகரிக்கப்படாத ஊசி, சோதிக்கப்படாத இரத்த மாற்று (blood transfusion), நோயை மறைத்துத் திருமணம் செய்பவர்களின் மனைவி, மக்கள் என்று அறியாமல் அதன் வலைக்குள் சிக்கிக்கொள்பவர்களும் உண்டு.
இந்த நோய்க்கு மருந்து இல்லை, வந்தால் நிச்சயம் மரணம்தான் என்பதால் இதைக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்த பல்வேறு அரசுகளும், WHO, UN ஆகியவை கணக்கில்லாமல் பணத்தைச் செலவழித்து முயன்று கொண்டிருக்கின்றன.ஆனால் HIV/எய்ட்ஸ் மூலம் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
வாழ்க்கையைச் சரியான முறையில் வாழ்ந்து வந்தால் எய்ட்ஸ் நோய் பாதிக்காது. ஏற்கனவே கூறியபடி முறையற்ற வாழ்க்கை வாழ்பவர்களுக்கே இந்நோய் பீடிக்கும் அபாயம் உள்ளதால், இதைக் குறித்த அறிவுரை என்னவாக இருக்க வேண்டும்? இல்லறத்தை நல்லறமாகப் பேணுவோம், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உடலுறவு கூடாது என்பதை மெதுவாகச் சொல்லிக் கொண்டு, அது முடியவில்லை என்றால் ஆணுறை பயன்படுத்துங்கள் என்று சத்தமாக நல்வழி காட்டுகிறார்கள்!!
முழுக்க முழுக்க தனிப்பட்ட ஒருவனின்/ ஒருத்தியின் திமிரெடுத்த ஆசைகளினால் வரும் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கங்களும், ஐ.நா., உலக சுகாதார மையங்களும் இந்தளவு மெனக்கெட வேண்டிய அவசியம் என்ன? இதற்கு அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை, மருந்து என்று இந்திய அரசாங்கம் செலவழிக்கும் தொகையும் மிக அதிகம். அதை வைத்துச் சில தொண்டு நிறுவனங்கள் ஆதாயம் பார்க்கும் கொடுமையும் நடக்கிறது.
இது போன்ற இன்னொரு கொடுமையான நோய் புற்றுநோய்!! இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில், சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப் பட்டால் மீண்டு விடலாம். உடலில் பலபாகங்களில் வரக்கூடியது. ஒருவரின் புகை, குடி, தவறான உணவுப் பழக்கங்கள் காரணமாக இந்நோய் தாக்குவதாகக் கூறப்பட்டாலும் பாதிக்கப்பட்ட பலரும் தவறான பழக்கங்கள் இல்லாதவர்களாகவே இருக்கின்றனர். கெட்ட பழக்கங்கள் இல்லாத ஒருவருக்கு கேன்ஸர் வருவதன் காரணம் இதுவரை அறியப்படவில்லை. அதுபோல காலம்காலமாகக் குடியும், புகையுமாக இருப்பவருக்குக் கேன்ஸர் வராததும் புதிரே!!
மேலும் இந்நோய்க்கு எடுக்க வேண்டிய சிகிச்சைக்கு அதிகப் பணம் தேவைப்படும்.அரசாங்க மருத்துவமனைகளில் (சில) தரமான மருத்துவர்களும், சிகிச்சை உபகரணங்களும் இருந்தாலும், அங்கு சிகிச்சைக்கு நேரம் ஒதுக்கப்பட காத்திருக்க வேண்டும். நாம் காத்திருக்கலாம், நோய் காத்திருக்குமா? முதல்வரே அரசு மருத்துவமனையை நம்பாமல்தானே தனியாரிடம் சிகிச்சை பெறுகிறார்!!
அரசு மருத்துவமனைகளில் இருக்கும் அதிகப்படியான கூட்டத்தினால், நோயாளிகளுக்கு மிக அவசியமான ஆதரவும், ஆறுதலும் மருத்துவர்களால் தரமுடிவதில்லை. இன்னும் பல காரணங்களால் அரசு மருத்துவமனைகளை மக்கள் அதிகம் நாடுவதில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் மருத்துவமனைகள் இதில் கொள்ளை லாபம் பார்க்கின்றன. ஒரு கட்ட சிகிச்சைக்கு மட்டுமே குறைந்தது 15 லட்ச ரூபாய் தேவைப்படும். இது சாமானிய மனிதனால் புரட்டக்கூடியதா?
இது தவிர, மேல் சிகிச்சை, மருந்துகள், தொடர் கண்காணிப்பு பரிசோதனைகள் என்று மிகுந்த செலவு பிடிக்கும் நோய் இது. நோய் வருமுன் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தால் ஓரளவு சமாளித்துவிடலாம். நோய் வந்தபின் எடுப்பதற்கு காப்பீட்டு நிறுவனங்களின் கட்டண முறைகள் அத்துணை சாதகமாக இல்லை.
நோயிலிருந்து மீண்டு வருவதற்கும், சிகிச்சை விளைவுகளைத் தாங்கிக் கொள்ளவும் மிகுந்த மனதைரியமும், பொறுமையும், தன்னம்பிக்கையும் வேண்டும். அதோடு செலவுகளும் கைமீறிப் போனால்?
திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கேன்ஸரால் பாதிக்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் சித்திரைத் திருநாள் மருத்துவமனைகளுக்கே செல்கின்றனர்.
பதிவர் திருமதி. அனுராதா அவர்களின் கேன்ஸருக்கு எதிரான போராட்டத்தைப் பலமாதங்கள் முன்பே வாசித்திருக்கிறேன். பலரின் அனுபவங்களைப் பத்திரிக்கைகளில் படித்திருந்தாலும், அவர்களின் விரிவான பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு நடுக்கம் வருகிறது. யாருக்கும் இந்நிலை நேரலாம் நாளை. அதற்குத் தேவையான விழிப்புணர்வு இருக்கிறதா நம்மிடையே?
சில வெளிநாட்டுத் தனியார் தொண்டு நிறுவனங்களின் புண்ணியத்தில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பரவி வருகிறது. சுய பரிசோதனைகள் விளக்கப்படுகின்றன.
கேன்ஸர் எதனால் வரும்? எவ்வாறு அறியலாம்? தடுப்பது எப்படி? முன்னெச்சரிக்கையாகச் செய்ய வேண்டிய பரிசோதனைகள் என்னென்ன? இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டில் இதற்கென என்ன செய்யப்படுகிறது என்று யாருக்காவது தெரியுமா? புத்தகங்கள், பத்திரிக்கைகள் வாசிக்கும் மக்களுக்கு வேண்டுமானால் சுயமுயற்சியால் இதுகுறித்த சிறு விழிப்புணர்வு இருக்கலாம். ஆனால் நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு மக்களிடம் இதுகுறித்த எந்த விழிப்புணர்வும் இல்லை. வந்தபிறகுகூட, சரியான சிகிச்சை பெறவேண்டும் என்று அறியாமலே இருக்கிறார்கள். தெரிந்தாலும் அதற்குரிய பணமும், நேரமும் செலவழிக்க இயலாத நிலையே பலருக்கும். அரசாங்கமும் அதுகுறித்து கவலைப்படவில்லை.
புள்ளிராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா என்று கேட்டு கேட்டு எய்ட்ஸ் பற்றி அறியாதவர்கள் இன்றில்லை. ஆனால் புற்றுநோய் குறித்த அறிவு மக்களுக்குக் கிடைப்பது தமிழ்த் திரைப்படங்களின் மூலமே! அதுவும் கேன்ஸர் வந்தால் ரத்தம் கக்கியே செத்துவிடுவார்கள் என்று போதித்து எய்ட்ஸை விட கேன்ஸர் மோசமாகச் சித்தரிக்கப்படுகிறது .
சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கிடைத்தால் புற்றுநோயை வெல்லலாம். அதற்குப் போதுமான விழிப்புணர்வு தேவை. அரசை எதிர்பாராமல் நாமே விழித்துக் கொள்வோம்.
|
|
Tweet | |||


