Pages

இந்த வருஷ ’தீம்’ என்ன?
வருஷந்தோறும் மே-31 “உலக புகை எதிர்ப்பு நாள்” என்று உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அறிவிக்கப்பட்ட தினம். (இன்னிக்குத்தான்) அட,  இதெல்லாம் தெரிஞ்சிருக்கே, எப்படிங்க இப்பிடிலாம்?னு கேக்கப்படாது. இப்பத்தான் ஸ்கூல்ல, ‘ம்’ என்றால் ஒரு அஸைன்மெண்ட்’, ’ஏன்’ என்றால் ஒரு சார்ட் வொர்க்னு சொல்லி அனுப்பிடுறாங்களே. அப்படி அனுப்பப்பட்ட என் பசங்க சொல்லித்தான் எனக்கும் தெரியும்.

அப்பதான், என் பெரியவன்,  ”Anti tobacco day"-யின் இந்த வருஷத்துக்கான “தீம்” என்ன தெரியுமான்னு கேட்டான். இதென்ன பர்த்டே பார்ட்டியா, தீம் வச்சு கொண்டாடறதுக்கு? சிகரெட், பீடி பிடிக்கக்கூடாதுன்னு சொல்றதுக்கெல்லாம் போய் என்னடா தீம் வேண்டிக்கிடக்கு? வருஷா வருஷம் கொண்டாடப்படும் அந்த நாள், இந்த நாள் மாதிரி இதுவும் ஒரு சடங்காகிக் போச்சுன்னு புலம்பிகிட்டாலும்.  பதில் தெரியாததை மறைக்க முடியலை.  இண்டெர்நெட்டை நோண்டிப்பாத்து, “Tobacco industry interference" - அதாவது “புகையிலைத் தொழிற்துறையின் தலையீடு” அப்படின்னு பெரியவன் சொன்னதும் என்னாது!!ன்னு ஒரு அதிர்ச்சி. ஏன்னு கேக்குறீங்களா?


பொதுவா, இந்த மாதிரி தினங்களில், மக்களாகிய நம்மளைத்தான் ”புகை நமக்குப் பகை”, ‘புகை புற்று தரும்’ன்னெல்லாம் வழக்கமா  பயங்காட்டுவாங்க; இப்ப மட்டும் ஏன் அந்த தொழிற்துறையைச் சொல்றாங்கன்னு, எப்பவும் கேள்வி கேட்டே பழகிய மனசுல ஒரு கேள்வி.  அதுக்கப்புறம் சுறுசுறுன்னு நெட்டை ஆராஞ்சு, பீராஞ்சு தேடினதுல கிடைச்ச விவரங்கள் கிறுகிறுக்க வைக்குது. நம்ம பாரத்தை உங்ககிட்டத்தானே இறக்கிவைக்க முடியும்... அதான்... 

அபாயத்தைக் குறிக்கும் சிவப்பு வளையத்தை நீக்கும் “சிகரெட் உலக மொட்டை பாஸ்”!!
1987 முதல் WHO-வால் ஆரம்பிக்கப்பட்ட இந்த “புகை எதிர்ப்பு தினம்”, ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு ’மையக்கருத்து’ (theme) கொண்டு பிரச்சாரங்கள் இருக்கும். இதுவரை மேலே சொன்னதுபோல தனிமனிதனுக்குத்தான் அறிவுரை சொல்வதுபோல அந்த பேசுபொருள்கள் இருந்துவந்தன. இந்த வருஷம்தான், இந்தப் பிரச்னையின் ஆணிவேர் எங்கேன்னு (புதுசாக்) கண்டுபிடிச்சு, நேரே அதில் ஆப்படிப்பதுபோல, ”புகையிலை முதலாளிகளின் தலையீடுகள்”ங்கிற கருத்தை மையக் கருத்து ஆக்கியிருக்காங்க. இது எப்படின்னா, தமிழ்ப்பட ஹீரோக்கள், திடீரென வில்லனா மாறிட்ட தன் நண்பன்கிட்ட சண்டை போட்டுட்டு, ”என்னை இப்படி நடந்துக்க வச்சதே நீதான்”ன்னு சொல்ற மாதிரி, இந்த இண்டஸ்ட்ரியின் நடவடிக்கைகள்தான் இந்த வருஷ தீமுக்குத் தூண்டுதலா இருக்கின்றன. அப்படி என்ன செஞ்சுட்டாங்கன்னு பாப்போம்.

WHOவின் புகையிலைத் தடுப்பு வரைவு மாநாட்டில் (FCTC) 2005-ம் ஆண்டு எடுக்கப்பட்ட தீர்மானங்களை அதன் 175 உறுப்பு நாடுகள் அனைத்தும் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், அவற்றை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு இந்தப் புகையிலை மாஃபியாக்கள் கடுமையான தடங்கல்களை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால் இந்த வருஷம் பொறுத்தது போதும்னு, “இவர்களின் அதிகரித்துவரும் ஆணவம் நிறைந்த, அடாவடித்தனமான நடவடிக்கைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்து, தகர்ப்போம்”னு பொங்கியெழுந்துட்டாங்க!! (The campaign will focus on the need to expose and counter the tobacco industry's brazen and increasingly aggressive attempts to undermine global tobacco control efforts. )

WHO-வின் நடவடிக்கைகளை புகையிலை முதலாளிகள் தடுக்க நினைப்பதன் காரணம் வேறென்னவாக இருக்கும்? இதில் கிடைக்கும் அள்ளமுடியாத அளவுக்கான கொள்ளை லாபம்தான்!! இந்தப் பணம் தரும் பலத்தைக் கொண்டுதான் அவர்களால் தம் ராஜ்ஜியத்தை எல்லா நாடுகளிலும் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ள முடிகிறது. அதைத் தக்க வைக்க என்னென்ன செய்றாங்கன்னா:
 • உற்பத்தி செய்யப்படும் புகையிலைப் பொருட்களில் ஈர்க்கும்படியான, மேலும் அடிமைப்படுத்தக்கூடிய வகையில் மணங்கள், சுவைகள் சேர்ப்பது. பாக்கெட்டுகளின்மீதும் வாங்கத் தூண்டும் வகையிலானப் படங்களை அச்சிடுவது.
 • சில நாடுகளில், புகைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் படங்களை சிகரெட் பாக்கெட்டில் அச்சிடுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் சர்வதேச முதலீட்டு ஒப்பந்தங்களின்படி, சட்டபூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட தம் வியாபாரத்தைப் பாதிக்கும் செயல்கள் என அந்நாடுகளின்மீது வழக்குத் தொடுப்பது.
 • பால், தயிர் போன்ற பொருட்களில் “low fat" என்று எழுதப்பட்டிருப்பதைப் போல,  சிகரெட் பாக்கெட்டுகளில் “less nicotine", "low tar," "light," "ultra light," "mild," "natural" என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இவையெல்லாம், தாம் புகைக்கும் சிகரெட்  ஆபத்தில்லாதது என்ற எண்ணத்தை மனதில் விதைத்து, மக்களைப் புகைப்பதை விட்டுவிடாமல் இருக்கச் செய்யும் யுத்திகளாகும்.  பெண்களே இதன்மூலம் அதிகம் தக்கவைக்கப்படுகிறார்கள்!!
 •  பல நிகழ்ச்சிகளை ஸ்பான்ஸர் செய்வது; மேலும் சில இனம், மொழி, உணர்வு போன்றவை சார்ந்த குழுக்களுக்கு நிதி உதவி செய்வது - இவையெல்லாம் தம் பிரா(ண்)டுகளை மக்கள் மறக்காதிருக்கச் செய்யும் சந்தைப்படுத்துதல் தந்திரங்களாகும்.
 •  பல நாடுகளிலும் பொது இடங்களில் புகைபிடிக்கக் கூடாது என சட்டங்கள் இருந்தாலும், அவையெல்லாம் கடுமையாக நடைமுறையில் இல்லாததற்கும் இவர்களின் தலையீடும் காரணமா?
 •  பொது இடங்களிலும், ஊடகங்களிலும் விளம்பரங்கள் செய்யக்கூடாது என்றிருந்தாலும், திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகள் முழுமையாகத் தடை செய்யப்படவில்லை. யார் காரணமோ?
 •  மற்ற இடங்களில் விளம்பரம் தடை செய்யப்பட்டிருந்தாலும், விற்பனை செய்யும் இடங்களில் விளம்பரங்களுக்கு எந்தத் தடையுமில்லை. ஆகையால், அங்கே கண்ணையும் கவனத்தையும் கவர்ந்திழுக்கும் வகையில் பெரிய, நவீன விளம்பரங்களை வைத்திருப்பது.  மேலும்,  தம் பொருட்களைக் கடையின் பிரதான இடங்களில் அடுக்கி வைத்திருப்பதும், அதற்கெனக் கடைக்காரர்களுக்கு செலவு வைக்காமல் தாமே ஏற்றுக்கொள்வதும் இவர்களின் வியாபாரத் தந்திரங்கள்.
 • மிக முக்கியமாக, கடைகளில் பணம் செலுத்தும் இடத்தில் (cash counter)  புகையிலைப் பொருட்களைப் பரப்பி வைத்திருப்பது. இதன்மூலம், அதுவரை வாங்காமல் தயங்கிய மனதுகளையும் தூண்டி, வலைக்குள் சிக்க வைத்தல். (impulse purchase)
 • விற்பனை செய்யும் கடைக்காரர்களையும், ஏஜெண்டுகளையும் தன்வசப்படுத்தியதன் மூலமாக, புகையிலைப் பொருட்களுக்கெதிரான வரி விதிப்பு, விலைஉயர்வு போன்றவற்றை அவர்களைக் கோண்டே எதிர்த்துப் போராடச் செய்தல்.
 •  புகை இலைப் பயிரிடுவோர்களையும் அதிகப் பணம் கொடுத்து தம் கைக்குள் வைத்திருப்பதன்மூலம், அவர்கள் தம் நிலங்களில் வேறு உணவுப் பயிர்கள் பயிரிடாமல் தடுத்தல்; இதன்மூலம் உணவுப் பற்றாக்குறை என்கிற விளைவையும் ஏற்படுத்துவது.
 • புகை எதிர்ப்பு நடவடிக்கைகளை, ‘தனி மனித உரிமையில் தலையிடுதல்’ என்றும், ‘உரிமை மீறல்’ என்றும், ‘வணிக விதிகளை  மீறுகிறார்கள்” என்றெல்லாம் கருத்து தெரிவிப்பதன்மூலம் மக்களை குழப்புதல்.
 •  இப்படிப் பல தரப்பு மக்களையும் - பயிரிடுபவர்கள் தொடங்கி, வணிகர்கள், பணியாளர்கள், பயனீட்டாளர்கள்- எல்லாரையும் தமக்குச் சாதகமாகப் பேச வைப்பது. (தமிழ்நாட்டில் ‘டாஸ்மாக்’க்கை இப்ப மூடப்போறோம்னா, முதல் எதிர்ப்பு யாரிடமிருந்து வரும்? அதப் போலத்தான்)
  கார்ட்டூன் விளம்பரம்
  கண்ணைக் கவரும் சிகார்கள்
  மிட்டாய்கூட சிகார்களும்!!

இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்விதமாக இன்னொன்று செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்: தம் புகைப் பொருட்களைப் பயன்படுத்த சிறுவர்களைக் குறிவைத்திருப்பது!! சிறுவர்களைக் கவரும்வண்ணமாக, மிட்டாய் வடிவத்தில் நிகோடின் கலந்த புகையில்லாப் புகையிலைப் பொருட்களை உற்பத்தி செய்வது - அதாவது smokeless nicotine candies!!
சிகரெட் மிட்டாய்கள்!!
இன்னும், சிகரெட் போன்ற விளைவுகளைத் தரும் “Little cigar”-ம் சிறுவர்களுக்காகவே தயாரிக்கபடுகிறாது. மட்டுமல்லாமல், விளம்பரங்களையும் அவர்களுக்குப் பிடித்த கார்டூன் கேரக்டர்கள், பிடித்த நடிக, நடிகையரை வைத்துத் தயாரித்தல் என்று இப்போது அபாயகரமாக நடவடிக்கைகள் மேற்கொண்டிருப்பது. விளம்பரங்களின் விளைவுகளைச் சொல்லித்தான் தெரியணுமா நமக்கு? 

சிகரெட், பீடி, சிகார், நிகோடின் கலந்த மிட்டாய் போன்றவை போதைப் பொருட்கள் போல தடை செய்யப்பட்டதுமல்ல. மதுவைப் போல பிரத்யேக கடைகளில் மட்டுமே கிடைப்பதுமல்ல. எல்லாமே எங்கேயும் கிடைக்கும்படி, சட்டபூர்வமாக விற்கப்படும் பொருட்களே. மேலும், பொது இடங்களிலும், ஊடகங்களிலும் காண்பிக்கப்படும் பிரபலமானவர்களின் புகைப் பழக்கமும், இளைய சமுதாயத்தின் மனதில் இது ஒன்றும் தவறான பழக்கமல்ல என்ற எண்ணத்தை விதைக்கின்றது. இன்னும் சொல்லப்போனால், குடி, போதை போன்றவற்றையா செய்கிறோம், ஆஃப்டரால் சிகரெட்தானே என்ற அலட்சியமான எண்ணம் விளையும்படியான சூழல்தான் நாட்டில் நிலவுகிறது. ஆனால், இதுவே மற்ற கெட்ட பழக்கங்களையும் நாளடைவில் கொண்டுவந்துவிடலாம் என்பது அப்போது புரிவதில்லை.

புகைப் பண முதலைகளின் மேற்சொன்னதுபோன்ற  நடவடிக்கைகளாலும் கொடூர விளைவுகள் தரும் புகைப்பழக்கத்தை ஒழிக்க முடியாமல் திணறுகிறோம். சிலருக்கு தனிமனித ஒழுக்கம் இருந்தாலும்கூட, மனக்கட்டுப்பாட்டைத் தகர்க்கும்விதமான தூண்டுதல்கள் உலகில் நம்மைச் சுற்றி இருக்கும்போது, மனிதனும் சலனப்பட்டுத்தான் போவான். வளர்ந்த மனிதர்களாலேயே இந்தச் சலனங்களை எதிர்த்துப் போராட முடியாமல் அடிமைப்பட்டுவிடும்போது, சிறுவர்கள் எம்மாத்திரம்? 

புகையிலைப் பழக்கம் விளைவிப்பது, தனிமனிதனை மட்டும் பாதிக்கும்  உடல்நலக் கேடு மட்டுமல்ல; நம்  சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதாரம் எல்லாவற்றிற்குமேதான் பெருங்கேடு!! எனும்போது, பாதிப்பில்லா உலகத்தை ஒவ்வொரு மனமும் விரும்பவே செய்யும். அது நம் உரிமையும்கூட. இதுபோன்ற சாத்தான்களின் பிடியில் இருக்கும் இந்த உலகத்தை மீட்டெடுப்போம் - எப்படி??!!

Ref:
http://www.who.int/tobacco/surveillance/policy/country_profile/ind.pdf
http://webbbs.mingdao.edu.tw/~foo/www6/g.htm
http://www.tobaccofreekids.org/content/what_we_do/industry_watch/warning_to_parents

Post Comment

வியாபாரமாக்கப்படும் புனிதப் பயணம்
ஏப்ரல் 2012 சமரசம் இதழில் வெளியான கட்டுரை:

                  
ஐம்பெருங்கடமைகளில் இறுதியான ஹஜ் கடமையை இனிதே முடித்து,
வந்த ஹாஜியாரிடம்,  “ஹஜ் கடமைகள் சிறப்பாக முடிந்ததா? மக்கா ஹரமில் எல்லா நாளும் ஐவேளையும் தொழுதீர்களா? தங்குமிடம், பயணங்கள் வசதியாக இருந்தனவா?” என்று நலம் விசாரிக்க முற்படுகையில், அவரது கண்களில் பல்வித உணர்ச்சிகளும் கலவையாய்க் காணலாம். பின்னர், வலிந்து, மகிழ்ச்சியை மட்டுமே கண்களில் காட்டி, “எல்லாம் இறையருளால் சிறப்பாய் நடந்தது” என ஒற்றைவரியில் பதிலை முடித்துக் கொள்வார். இதை வாசிக்கும் நீங்கள், ஒருவேளை ஹஜ் கமிட்டி வழி சென்ற ஹாஜியோ என நினைப்பீர்கள். இல்லை, அதைவிட அதிகம் பணம் வசூலிக்கும் தனியார் ஹஜ் சேவை நிறுவனம் மூலம் சென்று வந்தவர்தான் இவரும்!!

இன்று ஹஜ் பயணம் செய்பவர்களில் பெரும்பாலோனோர் அறுபது வயதைக் கடந்த முதியவர்களே என்பதால், அவர்களைப் பொறுப்பேற்று அனுப்பிவைக்கும் அவர்களது உறவினர்களும், பணம் அதிகம் செலவானாலும் பரவாயில்லை. முதியவர்களுக்கு தரமான கவனிப்பும், சேவையும், பாதுகாப்பும் வேண்டும் என்பதற்காகவே, அரசு-சார் ஹஜ் கமிட்டியினைத் தவிர்த்து, தனியார் ஹஜ் பயண நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், இந்த நிறுவனங்கள் அவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதில்லை என்பதே வருத்தமான உண்மை.

சில காலம் முன்பு, தனியார் ஹஜ் பயண நிறுவனங்கள் என்பவை மிக அரிதாகத்தான் இருந்தன. ஆனால், புற்றீசல் போல, இன்று தெருவுக்கொன்றாக முளைத்துவிட்ட தனியார் நிறுவனங்களின் எண்ணிக்கைகளே சொல்லும், ஹஜ் பயணம் என்பது எவ்வளவும் லாபம் கொழிக்கும் பிஸினஸாக மாறிவிட்டது என்பதை.  ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாள் கடமையாகக் கருதும் ஹஜ்ஜை நிறைவேற்ற உதவுவதை, இவர்கள் லாப நோக்குடன் தொழிலாகச் செய்வது தவறில்லை என்றாலும், அதில் நியாயத்துடன் செயல்படுவது மிக அவசியமல்லவா? கிட்டத்தட்ட, வெளிநாட்டு வேலை பெற்றுத் தர உறுதியளிக்கும் ஏஜெண்டுகள் போல இவர்களும், சொல்வதொன்று, செய்வதொன்றாக மாறிவருவது வேதனையிலும் வேதனை.

ஹஜ் பயணம் செல்லும் மக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகும் தருணங்கள்:

1. மக்காவில் தங்குமிடம்:

தமிழகத்தில் புனித ஹஜ் பயணம் பொதுவாக 40 நாட்கள் பயணமாக கடைபிடிக்கப்படுகிறது. பெரும்பணம் செலவழித்து, வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே செல்லக்கூடியதாக இருப்பதால், கிடைத்த வாய்ப்பிலேயே அதிக நாட்கள் மக்காவில் தங்கி அதிகமதிகம் பிரார்த்தனைகள் செய்து, அதிகம் நன்மைகள் பெற்றுக் கொள்ளலாமே என்ற ஆவல்தான் காரணம். ஆனால், அங்ஙனம் அழைத்துச் செல்லப்படும் பயணிகள், மக்காவில் ஹரமில் இருந்து ஏழெட்டு கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் அஸீஸியா, ருஸைஃபா போன்ற இடங்களில்தான் தங்க வைக்கப்படுகிறார்கள்.

அங்கிருந்து கஃபா ஆலய ஹரமிற்குத் தினமும் ஐவேளை வந்து தொழுவதற்கு உரிய போக்குவரத்து வசதிகளும் நிறுவனத்தாரால் செய்துதரப்படுவதில்லை. ஹஜ் பயணி தன் தனிப்பட்ட ஆர்வத்தால், வாடகைக்கார் பிடித்து சென்றுகொண்டால் உண்டு.  அதுவும் ஹஜ் காலங்களில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெருக்கடியால் வாடகைக் கார் ஓட்டுநர்கள் ஹரத்திற்கு வர இலகுவில் சம்மதிப்பதும் இல்லை; சம்மதித்தாலும் பெருந்தொகை - 50 ரியால் முதல் 100 ரியால் வரை கேட்பர்!!

மொழி தெரியா ஊரில், ஒரு முதியவர் எப்படி தினமும்  சென்று வர முடியும்? உடல்நிலையோடு, பொருளாதார நிலையும் ஒத்துழைக்க வேண்டுமல்லவா? அது பெரும்பாலும் முடியாததாகையால், வாரத்தில் ஒருமுறையோ இருமுறையோ மட்டும் சென்றுவிட்டு, மீதி 20 நாட்கள் வரை ரூமில் அடைந்து கிடக்கின்றனர். வேளா வேளைக்கு உணவுண்டு, உறங்கி ஓய்வெடுப்பதற்காகவா 2 முதல் 3 லட்சம் கொடுத்து அவர்கள் தனியார் ஹஜ் நிறுவனத்தில் புனிதத்தலமான மக்கத்திற்கு வந்தனர்?

இதிலே, மக்காவின் எல்கைக்குள் எங்கு தொழுதாலும், ஹரத்தில் தொழுவதற்கு ஈடாக ஒரு லட்சம் நன்மைகள் கிட்டும்  என்று சொல்லி ஏமாற்றுபவர்களும் உண்டு; அதை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் உண்டு!!

2. முஜ்தலிஃபாவிலிருந்து மினா வருகை:

ஹஜ்ஜின் 10-ம் நாளன்று, முஜ்தலிஃபாவில் ஃப்ஜ்ர் தொழுதுவிட்டு, மினாவுக்கு சுமார் 3 முதல் 5 கிமீ தூரம் நடந்து வரவேண்டும். நடப்பதில் சிரமம் இல்லை. ஆனால், வரும் வழியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில், கல் எறிய ஜமராத்தை நோக்கிச் செல்லும் பெருந்திரளான மக்கள் கூட்டத்தைக் கடந்து வரவேண்டும். இது மிகவும் அபாயகரமான நெரிசல் ஏற்படும் இடம் என்பதால், கூட்டத்தில் மாட்டி ஹாஜிகள் பலர் தொலைந்து போவதும் இந்த இடத்தில்தான். அப்படிப்பட்ட இடத்தில், இவர்களை சிறு சிறு குழுக்களாகப் பிரித்து, திடகாத்திரமானவர்களைக் கொண்டு சங்கிலி வளையம் அமைத்து,  ஜனத்திரளைக் கடக்க வைக்கலாம். ஆனால், அப்படிச் செய்யாமல், முதிர்ந்தவர்களையும், பெண்களையும்கூட தம் பொறுப்பில் ஏற்காமல் விட்டுவிடுகின்றனர். நெரிசலில் சிக்கி, நைந்து போய் தப்பி வருகிறவர்கள் சிலரென்றால், பலர் தொலைந்தே போய்விடுகிறார்கள். அவர்கள் வழி அறியாமல், எங்கெங்கோ அலைந்து, திரிந்து வந்து சேருவார்கள். இரண்டு நாட்கள் கழித்து வருபவர்களும் உண்டு. அதிலும், பிபி, சுகர் உள்ளவர்கள் என்றால் வந்துசேரும்போது அவர்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம்.

அவர்களின் பாதுகாப்புக்கும் சேர்த்துத்தானே பொறுப்பேற்று, பணம் பெறுகிறார்கள் இந்நிறுவனத்தினர்?

3.  ஹஜ்ஜின் தவாஃப்:

துல் ஹஜ் 10-ம் நாள் அல்லது 11-ல் ஹஜ்ஜின் பகுதியாக தவாஃப், சயீ செய்ய ஹாஜிகள் மினாவிலிருந்து மக்கா வரவேண்டும். சுமார் 10 முதல் 12 கி.மீ. தூரமுள்ள இந்தப் பயணத்திற்கும், ஹாஜிகள் தாங்களே வாகனம் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும். அல்லது நடந்து வர வேண்டும். ஹஜ்ஜிற்கு வந்த அனைத்து லட்சக்கணக்கான மக்களும் இந்நாட்களில் தவாஃப், சயீ செய்ய மினாவிலிருந்து செல்வார்கள் என்பதால் வாகனங்கள் வாடகைக்கு கிட்டுவதும் மிக மிகச் சிரமம். அதனால் அடையும் தாமதத்தின் காரணமாய், மினாவில் இரவின் பெரும்பகுதியைச் செலவழிக்க வேண்டும் என்ற ஹஜ்ஜின் விதியை மீற வேண்டிய சூழலும் சிலருக்கு ஏற்பட்டு, ’தம்’ கொடுக்க வேண்டியவர்களாகிறார்கள்.

கட்டணம் வாங்கிக் கொண்டாவது,  நிறுவனத்தினர் இந்நாட்களில் தம் குழுவினருக்காக வாகனம் ஏற்பாடு செய்து தரலாமே என்பதே வயதான ஹாஜிகளின் ஏக்கக் கேள்வி.

4. மஹரமில்லாப் பெண்கள்:

ஹஜ்ஜின் விதிகளில், தகுந்த மஹரமில்லாமல், பெண் பயணிகளைத் தனியே அழைத்து வரும் பாவத்திற்கு பணத்திற்கு ஆசைப்பட்டு உடந்தையாகிறார்கள் நிறுவனத்தினர் என்றுதான் சொல்லவேண்டும். அதுவும் முதிய பெண்கள் என்றால், அது பெருங்கொடுமை!!  மேற்சொல்லிய மூன்று சூழல்களிலும் அதிகமதிகப் பாதிப்பிற்குள்ளாவது தனியே வரும் முதிய பெண்கள்தான்!! அவர்களால் தனியாகவும் செல்லமுடியாது; அழைத்து வரும் நிறுவனமும் பொறுப்பேற்காது; குழுவில் உடன் வருபவர்களும் அப்பெண்களின் உடல்நிலை அல்லது தத்தம் சூழ்நிலை காரணமாய் உதவிட முடியாத நிலை எனும்போது, ஹஜ்ஜின் கட்டாயக் கடமைகளிலேயே குறை ஏற்பட்டு, ஹஜ் முழுமையடைவதே கேள்விக்குறியாகிறது!! பெரும்பாலும் இப்பெண்களின் ஹஜ்ஜை முழுமையாக நிறைவேற்ற உதவுவது, மனிதாபிமானமுள்ள சக பயணிகளே தவிர அழைத்துச் சென்ற நிறுவனமல்ல!!

5. தவறான வழிகாட்டுதல்கள்:

இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக, ஹஜ்ஜின் கிரியைகள், பிரார்த்தனைகள் சிலவற்றில் ஒருசில நிறுவனங்களின் ஹஸரத்துகள் தவறுதலாக வழிகாட்டுவதும் நடக்கிறது. உதாரணமாக, அரஃபா தினத்தன்று, மதியம் லுஹர் வேளையிலேயே லுஹர் மற்றும் அஸரைக் கஸராகச் சேர்த்துத் தொழுதுகொள்வதுதான் நபி காட்டிய வழி. ஆனால், சிலர் லுஹரையும், அஸரையும் தனித்தனியே அவற்றின் வேளைகளில் தொழச் செய்கின்றனர்!! மேலும், இஹ்ராம் துணியை கபன் துணியாகப் பயன்படுத்த வேண்டி ஜம்ஜம் நீரில் நனைத்து வைத்துக்கொள்ளச் சொல்லும் ஃபித்-அத்தான அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன!!

6. கூடுதல் பணம் கேட்பது,  கடைசி நேரத்தில் பயணம் கேன்ஸலாவது:

நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போக, கிளம்பும் நேரத்தில் கூடுதல் தொகையாக 25,000 முதல் 50,000 கேட்பதும் ஒரு புதிய பழக்கமாக உருவெடுத்து வருகிறது. ஏற்கனவே லட்சங்களில் பணம்புரட்டி கட்டிய வசதியற்றவர்கள், கடைசி நேரத்தில் அவசரமாகக் கேட்கப்படுவதால், கடன் வாங்கித்தான் கொடுக்க நேரிடுகிறது. இதனால், ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கடன்களை அடைத்துவிடவேண்டும் என்ற விதியை மீறும் நிலை ஏற்படுகிறது!!

பயணிகள், சவூதியில் மேல்செலவுக்காகக் கொண்டுபோகும் பணத்தை நிறுவத்தினர் இங்கு ரூபாயாக வாங்கி, சவூதி வந்து ரியாலாகத் தந்துவிடுகிறோம் என்று வாங்கிவிட்டு, சொன்னபடி தராமல் இழுத்தடிக்கும் நிகழ்வுகளும் நடப்பதுண்டு!!

முறையான திட்டமிடுதல் இல்லாமை, நிறுவனத்திற்கு உரிய லைசன்ஸுகள் இல்லாமை, தமக்கு ஒதுக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கதிகமான ஆட்களை ஓவர்புக்கிங் செய்வது போன்ற காரணங்களால் கடைசி நேரத்தில் பலரின் பயணங்களை ரத்து செய்வதும் ஆண்டுதோறும் நடந்து  வருவதைப் பார்க்கிறோம். ஆவலோடு தம் வாழ்நாள் கடமைப் பயணத்திற்குத் தயாராகி, கடைசி நிமிடத்தில் இல்லையென ஆகும்போது அவர்களின் ஏமாற்றம் சொல்லமுடியாதது. ”இந்த வருடம் அல்லாஹ் உங்களுக்கு ஹஜ்ஜை நாடவில்லை போல! அடுத்த வருடம் நாங்களே அழைத்துச் செல்கிறோம்” என்று சால்ஜாப்பு சொல்கின்றனர். அடுத்த வருடம்வரை, அப்பயணிகளின் உயிருக்கோ, உடல்நிலைக்கோ உத்தரவாதம் தர முடியுமா இவர்களா?

ஏன் இப்படி?

இவற்றையெல்லாம் குறித்து, ஹாஜிகள் அவர்களிடம் கேள்வி கேட்பார்களானால், அவர்களின் பதில் இப்படித்தானிருக்கும்: “ஹஜ் என்பது மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி நிறைவேற்ற வேண்டிய கடமை. உங்கள் ஈமானைச் சோதிக்க இறைவன் தரும் சோதனைகள் இவை. எவ்வளவுக்கெவ்வளவு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு, சோதனைகளைக் கடந்து, கடமைகளை நிறைவேற்றுகிறீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு உங்கள் ஹஜ் சிறப்புறும்; உங்கள் ஈமான் உறுதி பெறும். உறுதியில்லாத ஈமான் உள்ளவர்கள்தான் இவையெல்லாம் சிரமம், சிரமம் என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள்.” என்று அவர்கள் வாயை அடைப்பார்கள்!! தம் ஈமானையே கேள்விக்குறியாக்கும்பொழுது, அவர்கள் பின் வாயைத் திறப்பார்களா?

எனில், “அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை” என்று தன் வேதத்திலும்(2:185);   ”(மார்க்க விஷயங்களில்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரப்படுத்தாதீர்கள்; ஆறுதலாக நடந்து கொள்ளுங்கள்; வெறுப்பேற்றிவிடாதீர்கள்” என்று இறைத்தூதரும்(ஸல்)   ஏன் சொன்னார்கள்? வல்ல இறைவனும், அவன் தூதரும் இஸ்லாமை எளிமையாக்கியிருக்க, இவர்களோ கடினமானதாகக் காட்ட  முயல்கிறார்கள். இறைவன் ஒருவனே நம் ஈமானை அறிபவன். அவனே நம் உள்ளங்களில் மறைந்திருப்பவற்றையும் அறிபவன். அப்படியிருக்க,  இவர்கள் தம் தவறுகளை மறைப்பதற்காக, ஹாஜிகளின் ஈமானுக்கு அக்னிப் பரிட்சை நடத்துகிறார்களா?

தாயகம் திரும்பிய ஹாஜிகள் இதுகுறித்து யாரிடமும் ஒரு வார்த்தையும் சொல்வதுமில்லை. வேறு யாரேனும் ஹஜ் பயணம் செல்லும்போது இதுகுறித்துக் கூறி அவர்களை எச்சரிப்பதுமில்லை. சிரமப்பட்டேன் என்று சொன்னால், எங்கே தன் ஈமான் சந்தேகத்திற்குள்ளாக்கப்படுமோ என்ற பயத்தால் அமைதி காக்கிறார்கள். இதுவே இந்நிறுவனத்தினருக்கு வசதியாகி, கேள்வி கேட்போரில்லாமல் தம் ”சேவை”களை வழக்கம்போலத் தொடருகின்றனர்.

எனவே பொதுமக்களாகிய நாமே நம்மைத் தயார் செய்து கொள்வோம். முதிய வயது வரை காத்திருக்காமல், உலகக் கடமைகளின்மீது பழி போடாமல், உடல் உறுதியாய் இருக்கும் காலத்தே ஹஜ் செய்வோம். முதியவர்களை, குறிப்பாக  பெண்களைத் தனியே அனுப்பாமல், உரிய துணைகளோடு, உண்மையான சேவைநோக்கோடு பணிபுரியும் நல்ல நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவோம். இறைவன் நம் முயற்சிகளுக்கு பலம் சேர்த்து, பயன் அளிப்பானாக!!

Post Comment

டென்த் டென்ஷன்

+2 தேர்வு முடிவுகள் வந்திருக்கு. அதிக மதிப்பெண்கள் பெற்றவர்கள் பாராட்டு மழைகளில் நனைகிறார்கள். பரவசத்தோடு டாக்டராவேன், இஞ்ஜினியராவேன் என்று பேட்டிகள் கொடுக்கிறார்கள். வாழ்த்துகள். ஓயாத உழைப்புக்குக் கிடைத்த வெற்றி!! ரெண்டு வருஷம் கிடந்து படிப்பு, படிப்பு, படிப்பைத் தவிர வேறொண்ணையும் பார்க்காமக் கிடந்து உழைச்ச உழைப்பு!! ஆனா, நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்க, இக்காலத்து மாணவர்களைப் பாத்தா ஒரு பரிதாபம் வருதா இல்லியா?

யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னேங்கிறதைப் போல, ரிஸல்ட் வர்றதுக்கு ஒருநாள் முன்னாடியே தற்கொலைச் செய்தியும் வர ஆரம்பிச்சிடுச்சு!! :-(( இன்னும் எத்தனையோ!!

நான் இந்தியா போயிருந்த சமயத்தில்தான் +2 தேர்வு நடந்துகிட்டிருந்தது. +2 மாணவர்களின் குடும்பத்தினர் யாரைப் பாத்தாலும் முகத்துல ஒரு பீதியோடவே இருந்தாங்க. கரண்ட் கட்டால, பச்சக்குழந்தையும், வயசானவங்களும் அவதிப்படுறதைவிட, +2, 10வது மாணவர்கள் அவஸ்தைப்படுறதைத்தான் கவலையோடப் பேசிக்கிட்டாங்க. ஒரு குடும்பத்தில்  +2 அல்லது 10-ம் வகுப்பு மாணவர்கள் இருந்தால், கிட்டத்தட்ட ‘ஊர்விலக்கம்’ செய்ததுபோல, பரீட்சைகள் முடியும்வரை அவர்கள் வீட்டுக்கு யாரும் போவதுமில்லை; அழைப்பதுமில்லை!!

முன்பெல்லாம், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள்தான் மன அழுத்தத்தால் அவதிப்படுவர். நான் கல்லூரியில் படிக்கும்போது,  ஒரு தேர்வு நாளன்று, சகமாணவி தேர்வு ஆரம்பிக்கச் சற்றுமுன் கல்லூரியைவிட்டு வெளியேறிக் கொண்டிருப்பதைப் பார்த்து, நானும் என் தோழியும் அவளை அழைத்து விசாரித்தோம். கஷ்டப்பட்டுப் படித்தபின்னும் ஒன்றும் மனதில் ஏறவில்லை என்பதால், தேர்வை எதிர்கொள்ளப் பயந்துபோய் வெளியேறியதாகச் சொன்னாள். நாங்களிருவரும், ”பரவால்லை, தெரிந்ததை எழுது. கண்டிப்பாக ஜஸ்ட்-பாஸ் ஆகிவிடலாம். இல்லையென்றாலும் அடுத்த செமஸ்டரில் பார்த்துக் கொள்ளலாம்” என்று தேற்றி, பரிட்சை எழுதச் சொன்னோம். ஆனால், அவள் ஒரேயடியாக மறுத்துவிட்டுப் போயேவிட்டாள்!!

இதேபோல இன்னொரு மாணவியும் படிக்க முடியவில்லையென்று படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாள். பின்னர் நான் அந்தக் கல்லூரியிலேயே வேலை பார்க்கும்போது, படிப்பைத் தொடரவிரும்பி அதற்கான விதிகளைத் தெரிந்துகொள்ள சம்பந்தப்பட்ட பொறுப்பாசிரியரைச் சந்திக்க வந்திருந்தாள். மகிழ்வோடு அவளுடன் ஆசிரியையைக் காண நானும் சென்றேன். இவள் விஷயத்தைச் சொன்னதும், அந்த ஆசிரியை “ஏன், படிக்கலைன்னா வீட்டுல கல்யாணம் பண்ணிவைக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?” என்று சக ஆசிரியரோடு சேர்ந்து கிண்டல் செய்துப் பெரிதாகச் சிரித்தார்!! அவள் பின்னர் வரவேயில்லை.

இன்னொரு இறுதியாண்டு மாணவருக்கும் மனநிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அவருடன் பேசியபோது புரிந்தது. மூன்றாம் வருடம் வரை அரியர்ஸ் இல்லாமல் இருந்தால்தான் கடைசி வருடப் பரிட்சை எழுதமுடியும் என்ற ’பிரேக்’ சிஸ்டம் அப்போது இருந்ததால், வருடத்திற்கொரு தற்கொலையும் உண்டு எங்கள் கல்லூரியில்!! இஞ்சினியரிங் படிப்பது இத்தனைக் கஷ்டமா என்று அவர்களைப் பார்த்த அதிர்ச்சியில் நான் பாதிக்கப்படாமலிருந்ததே பெரிய விஷயம்தான்!!

இன்னொரு சக மாணவி, இப்போது பெரிய பதவியில் இருக்கிறாள். படிக்கும்போது ஏற்பட்ட மனநிலை பாதிப்பினால், அவளிடமிருந்து சில சமயங்களில் weird-ஆக மெயில்கள் வரும்!! அறியாதவர்கள் அவளைப்  பார்த்தால், பேசினால் அப்படித் தெரியாது.

கல்லூரியளவில் நடந்த இவையே ஜீரணிக்கக் கஷ்டமாக இருந்தது.  இப்போ, பள்ளிகள் லெவலிலும் இதுபோன்ற பாதிப்புகள் சகஜமாகிவிட்டன!!

இந்த வருட +2 இயற்பியல் தேர்வு முடிந்த அன்று, ரொம்பக் கஷ்டமான கேள்விகளாக இருந்தன என்று உறவினர் வீட்டு மாணவர் வருத்தப்பட்டுகிட்டிருந்தார். அவரது வகுப்பில் உள்ள ஒரு மாணவிக்குத் முதல்தேர்வு தொடங்கியதிலிருந்து மனநிலை பாதிப்பு ஏற்பட்டு ஏதேதோ பேசிக்கொண்டிருந்ததாகவும், கஷ்டமான இயற்பியல் கேள்வித்தாளைப் பார்த்துவிட்டு பரிட்சை எழுத மறுத்துவிட்ட அப்பெண், பிறகு பரிட்சை எழுத வரவேவில்லையாம்!!

அவரின் பள்ளியில்(லும்) ப்ளஸ் ஒன் தொடக்கத்திலேயே +2 பாடங்களை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். அதுவும் இரு வருடங்களும் பள்ளி நேரம், காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை என்றால் நம்புவீர்களா? இது எதுக்குன்னா, வேற எங்கயும் ட்யூஷன் போய் நேரத்தையும், பணத்தையும் வேஸ்ட் பண்ணத் தேவையில்லை என்பதற்காகவாம்!! இந்த இருவருடங்களும் இவர்களுக்கு விளையாட்டு பீரியட், ஆர்ட் பீரியட் எதுவும் கிடையாது!! ஒன்லி ‘படி, படி, படி’ தான்!!

தற்போது மாநிலத்தில் முதலிடம் பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவரும் ஒரு வலைத்தளத்தில் இதைத்தான் கூறியுள்ளார்.  ஆக, மாநிலம் முழுதும் எல்லா (தனியார்) பள்ளிகளிலும் இதே நிலைமைதான் போல!! 

அந்நாட்களிலாவது, பள்ளிகளில் இப்படி ‘தீவிரப் பயிற்சி’ கிடையாது. ஆனால், இன்று இவ்வாறானப் பயிற்சிகளின் விளைவுகளே, அதலபாதாளத்திற்குச் செல்லும் கல்லூரி முதலாமாண்டு தேர்ச்சி விகிதங்களும், பலப்பல தற்கொலைகளும்.

மத்திய அரசின் ‘CBSE’ பாடத்திட்டம் ஒப்பீட்டளவில் கொஞ்சம் நல்ல முறையில் இருப்பதாகச் சொல்லலாம். “CCE" (Continuous and Comprehensive evaluation) என்ற முறையில் அன்றாடச் செயல்பாடுகளையும் மதிப்பீட்டில் சேர்த்துக் கொள்கிறார்கள். அதிகச் செயல்முறை பயிற்சிகள் தருகிறார்கள். Once again,  இதிலும் பள்ளி மற்றும் ஆசிரியர்களும் திறன் வாய்ந்தவர்களாக இருக்கவேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் பெற்றோர்கள் ப்ளஸ்-2வுக்கு மட்டுமாவது மாநிலக் கல்விமுறையைத்தான் விரும்புகிறார்கள். அதில்தான் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியும் என்பதால்!! 

இப்போதெல்லாம் மாணவர்களைவிட, பெற்றோர்கள்தான் அதிக பாதிப்புக்கும், பிரஷருக்கும் உள்ளா(க்கு)கிறார்களோ என்று தோன்றுகிறது. எஙகள் உறவு வட்டத்தில் +2, 10 எழுதியவர்களின் தேர்வு முடிகளெல்லாம் வந்துவிட்டன. நல்ல மதிப்பெண்கள்தான். இருந்தாலும் பெற்றோர்கள் இன்னும் அதிகம் எதிர்பார்த்தேன் என்று புலம்புவதைப் பார்த்தால் பயம்ம்மாக இருக்கிறது. அதைவிட, “அடுத்த வருஷம் உன் மகன் டென்த் எக்ஸாம் எழுதுறானே?” என்று கேட்கும்போது இன்னும் அதிகமாகப் பயம் வருகிறது!!

எத்தனை “நண்பன்”கள் வந்தாலென்ன? ‘தோனி’கள் வந்தாலென்ன? ஆமா, சங்கர் ‘இந்தியன்’படம் எடுத்ததுனால, லஞ்சம் என்ன காணாமலாப் போயிடுச்சு?

ட்யூஷன் டீச்சர்கள் யாரும்  இந்த ஏரியாவில் இருக்காங்களான்னு விசாரிக்கணும். இனி தினமும் 5 மணிக்கு அலாரம் வச்சு நானும் எழுந்து, ‘நல்ல’ அம்மாவா டீ போட்டுக் கொடுக்கணும். நல்லவேளை வீட்டில் டிவி இல்லை. நியூஸ்பேப்பரையும், ஃபோன், இண்டர்நெட்டையும் கட் பண்ணிடலாமான்னு யோசிக்கிறேன். எம்புள்ளை இப்போ டென்த்ப்பா!! 

Post Comment

நட்சத்திர வானில்...

திரையுலகில் நடிக்கத் தொடங்குமுன்பே சி.எம்., பி.எம். கனவுகள் கண்முன் வந்து நிற்பதுபோல, பதிவு எழுதத்துவங்கும் எல்லாருக்குமே நட்சத்திரமாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருக்கும். என்ன ஒண்ணு, சிஎம் ஆகணும்னா,  பணம் நிறையச் சேர்ந்ததும், நாமே தேர்தலில் நின்றுகொள்ளலாம். ஆனால், நட்சத்திரமாவதற்கு திரட்டிகளே அழைப்பு விடுத்தால்தான் உண்டு.  அந்த வகையில் எனக்கும்(கூட) நட்சத்திர வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. தமிழ்மண நட்சத்திரமாக எனக்கு வாய்ப்பு தந்த தமிழ்மணத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நட்சத்திரமானால், குறைந்தபட்சம் தினமும் ஒரு பதிவு எழுதவேண்டும். பொதுவாக இது எளிதானதுபோல தோன்றினாலும், அடுத்தடுத்துப் பதிவெழுதுவது சிரமமானதே. நல்ல பதிவுகளாகத் தரவேண்டுமே. எனினும், இரண்டு-மூன்று வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிடுவதால் ஓரளவு திட்டமிட்டு, எழுதிவைத்துக் கொள்ளலாம். இது குறித்து “வீடு திரும்பல்” பதிவர் மோகன்குமார் கொடுத்திருந்த டிப்ஸ்கள்  மிக உதவியாக இருந்தன. சென்ற ஃபிப்ரவரி மாதம் “யுடான்ஸ்” நட்சத்திரமாக இருந்த அனுபவமும் கைகொடுத்தது.

தினம் ஒரு பதிவு என்பதால், ஒரே மாதிரியாக இல்லாமல், வெரைட்டியாக எழுதுவதுதான் அதிக வாசகர்களை ஈர்க்கும்.  ஆரம்பப் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள், பின்னர் படிப்படியாகக் குறைய ஆரம்பிக்கும்.  தினமும்  பதிவெழுதுவதால், அதிக வாசகர்களைச் சென்றடையவில்லையோ என்று தோன்ற வைக்கும். 

நட்சத்திரமாக இருப்பதால் பொதுவாக வாசகர்கள் எண்ணிக்கை கூடத்தான் செய்யும்.  தினமும் நம் பதிவைத் தவறாமல் வாசித்தாலும், (வழக்கமாகப் பின்னூட்டமிடும்) எல்லாருக்கும் எல்லாப் பதிவுகளிலும் கருத்திட நேரம் இருக்காது. நண்பர்கள் சிலர் நட்சத்திரமாக இருந்தபோது எனக்கும் அப்படித்தான் இருந்தது. பதிவுகளை ரீடரில் சேர்த்துவைத்தாவது வாசித்துவிடலாம். பின்னூட்டம் எழுதுவதுதான் பெரிய வேலை. சிரமம் பாராமல், என் பதிவுகளுக்குத் தொடர்ந்து  பின்னூட்டமிட்டவர்களுக்கு எனது சிறப்பு நன்றிகள்.

வாசிச்சவங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்!!  பதிவு-’உலக வரலாற்றில் முதல் முறையா’ எனக்கு முதல் இடம் கிடைக்குமளவு வாசகர்கள்!!  புகழனைத்தும் இறைவனுக்கே.


என் நட்சத்திர வாரப் பதிவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறேன், நீங்கள் நிதானமாக வாசிப்பதற்காக!! :-))) இவற்றை எல்லாரும் வாசித்து முடிக்கும்வரை அடுத்த பதிவு வராது என்பதை தெரிவித்து உங்களை ஆனந்த சாகரத்தில் அமிழ்த்துவதில் நானும் பேரானந்தம் கொள்கிறேன்!! (ஸ்ஸப்பா... சோடா எங்கேப்பா...)

மீண்டும் தமிழ்மணத்திற்கும், வாசக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


Post Comment

சாந்தியும் சமாதானமும்
தலைப்பிலிருந்தே இந்தப் பதிவின் மையக் கருத்து எதுவென்று  புலப்பட்டிருக்கும்: “முகமன் கூறுதல்”!!

”முகமன்” என்பதை, “மனிதர்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது பரிமாறிக் கொள்ளும் வார்த்தைகள்” என்று ‘தமிழ் விக்சனரி’ வரையறுக்கின்றது.  அதாவது அறிமுகமுள்ள அல்லது அறிமுகமற்ற இருவர், (நேரிலோ, எழுத்திலோ) சில காரணகாரியங்களுக்காகச் சந்தித்துக் கொள்ளும்போது, பேச்சைத் துவங்குமுன் சில உபசார வார்த்தைகள் பரிமாறிக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் ”greetings" என்பார்கள்.

உலக வழக்கில், பொதுவாக இருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘குட் மார்னிங்’, ஹாய், ஹல்லோ என்று முகமன்கள் சொல்லிக் கொள்வதுண்டு. ஒவ்வொரு நாட்டுக்கும், ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனிப்பட்ட வழக்கங்கள் இருந்தாலும், ”உலகமயமாக்கப்பட்ட” உலகில் இவையே ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுமுறையாகிப்போனது.  இந்தியாவிலும் - தமிழகம் உட்பட -  எந்த அர்த்தமுமற்ற ‘ஹாய்’, ’ஹல்லோ’ வில் இன்றைய இளையதலைமுறையினர்  இன்பங்காண்கின்றனர் - ‘ஹாய் பட்டி’ (buddy), ’ஹல்லோ ட்யூட்’ என்பதாக.

மீதிப்பேர் (hai - hi - helloவை முகமனாக ஏற்க முடியாதவர்கள் உட்பட)  ‘குட் மார்னிங்’, குட் ஈவினிங்’ போன்றவற்றைப் பிரயோகிக்கின்றனர். ’நல்ல காலை/மாலைப் பொழுது வாய்க்கட்டும்’ என்பது நல்ல வாழ்த்தாக இருப்பினும், இதைப் பயன்படுத்தமுடியா தர்மசங்கடமான அசந்தர்ப்பச் சூழ்நிலைகளும் அமைவதுண்டு.

உலகமுழுதுமுள்ள முஸ்லிம்களின் முகமன் வார்த்தைகள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பதாகும். இதனைத் தமிழாக்கினால், ”உங்கள்மீது சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக” என்று பொருள்படும்.  Al+salam+alaikum = the+peace+be upon you என்பதாக வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்க்கலாம். ஆங்கிலத்தில் உள்ள “peace"  என்ற வார்த்தைக்குத் தமிழில் சாந்தி, சமாதானம் என்று இரு பொருள் உள்ளதால், தமிழில் இரண்டையுமே எடுத்துக் கொள்கின்றனர். இரண்டில் எதை விடுவது? இரண்டுமே இன்றைய சூழ்நிலையில் மனிதனுக்கு மிகமிக அத்தியாவசியமாயிற்றே!!

ஆமாம், இல்லையென்றால் “எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும்” பாடல் இன்றும் சூப்பர்ஹிட்டாகுமா? ஏன் பலரின் புலம்பலே “லைஃப்ல நிம்மதியே இல்லைப்பா”; “ஆஃபிஸ்ல ரொம்ப ஸ்ட்ரெஸ், அதான் ரிலாக்ஸ் பண்ணிக்க ஜிம்/பார் போறேன்”; “மைண்ட் ரிலாக்ஸ் பண்ணத்தான் ப்ளாக் பக்கம் வர்றேன்”, “மனக்கவலைகளிலிருந்து விடுபடத்தான் சுற்றுலா போகிறேன்” -  என்றுதானே இருக்கிறது.

”குட் மார்னிங்” அல்லது “குட் ஈவினிங்” சொல்வதால் அவர்களுக்கு நல்ல பொழுது அமைய வாழ்த்துகிறோம். ஆனால், அன்றைய ஒரு பொழுதுக்கான வாழ்த்தாக மட்டும் இல்லாமல், ஒருவருக்கு முழுமையான நிம்மதிக்காக “உங்களுக்கு அமைதி கிடைக்கட்டும்”  என்று வாழ்த்துவது அதீத அன்புக்கு வழிவகுக்கும்.

இஸ்லாம் “ஸலாம்” என்ற முகமன் கூறுவதை முஸ்லிம்களுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. அதாவது ஸலாம் என்ற முகமன் கூறுவதும், பசித்தோருக்கு உணவளிப்பதும் ஒரே தரத்தில் வைக்கப்படுமளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஒருவர் மற்றொருவரைக் காணும்போது - அவர் நண்பரானாலும், எதிரியானாலும், வயதில், குணத்தில், செல்வத்தில், பொறுப்பில் தம்மைவிட உயர்ந்தவரானாலும், தாழ்ந்தவரானாலும், அறிந்தவரானாலும், அறியாதவரானாலும் ஸலாம் சொல்லுவது ஒரு முஸ்லிமின் கட்டாயக் கடமையாகும்.

இதனால் என்ன பலன்(ம்)?  இஸ்லாம் ஸலாம் சொல்லுவதை மட்டுமல்ல, அதற்கு முறையாகப் பதிலளிப்பதையும் முஸ்லிமுக்குக் கட்டாயமாக்கியுள்ளது. ஆகையால்,  முன்பே அறிந்தவர்களிடையே ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால், ஸலாம் சொல்லப்படும்போது மனம் சமரசமடையும். சமாதானம் நிலவும் வாய்ப்பு அதிகரிக்கும்.  ஒருவேளை இருவரும் புதியவர்கள் என்றால், ஒரு "ice breaker" ஆக அமையும், நட்பு பெருகும். 

இச்சூழ்நிலைகளில் சாதாரணமாக சொல்வதுபோல,  கருத்துவேறுபாடுடைய ஒருவரிடம் ”குட் மார்னிங்” சொல்லப்பட்டால் அது ஏற்கப்பட்டு பதில் கூறப்படவேண்டும் என்று கட்டாயமுமில்லை. சம்பிரதாயமாகப் பதில் கூறப்பட்டாலும் அதில் பெரியளவில் மனஇறுக்கம் அகல வாய்ப்புமில்லை. பொதுவாகவே உயர்பதவியிலுள்ளவர்களிடமோ, செல்வந்தர்களிடமோ அவரைவிடத் தாழ்ந்த பொறுப்பில்/நிலையில் இருப்பவர்கள் இவ்வாறான முகமன் கூறினால், பெரும்பாலானவர்கள் அதற்கு வெறும் தலையசைப்பையே பதிலாகத் தருவதைப் பார்த்திருக்கிறோம்.

ஆனால், இஸ்லாம் நம்மிடம் கூறப்படும் ஸலாமிற்குத் தக்கமுறையில் பதில்கூறவும் உத்தரவிடுகிறது . ஆகையால் ஒரு முஸ்லிம் எத்தரத்தவர் ஆயினும், அவரிடம் ஸலாம் கூறப்பட்டுவிட்டால் பதில்கூறியே ஆகவேண்டும்!!
உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்” 4:86, அல் குர் ஆன்.

மேலும் எச்சந்தர்ப்பங்களுக்கும் - மகிழ்ச்சி, துக்கம் என இருவேறுபட்ட நிலைகளுக்கும் பொருத்தமான முகமன் ஸலாம். அதிகப் பூரிப்போடு இருக்கும் நிலையில் உள்ள நிம்மதி இனியும் தொடர வேண்டும்; சஞ்சலமான பொழுதிலும் அதே நிம்மதிதானே வேண்டும்!! எனவே ”அமைதி”யை யாரும் (மனதார) நிராகரிக்கப் போவதில்லை.  வாழ்க்கையின் இலக்கே அமைதியைத் தேடித்தான் எனும்போது, அதற்கான வாழ்த்தை மறுக்கமுடியாது.

இஸ்லாமிய முகமனைச் சிலர் தமிழில் “இறைவனின் சாந்தியும், சமாதானமும் உங்கள்மீது நிலவட்டும்” என்று மொழிபயெர்ப்பதுண்டு. இதற்கு இரு காரணங்கள் சொல்லலாம். அதாவது இறைவன் மட்டுமே பூரண நிம்மதி தரக்கூடியவன் என்பது ஒன்று. மற்றொன்று, இறைவனுக்குரிய  திருநாமங்களில் ஒன்று “ஸலாம்” என்பது. அதன் பொருள் - “அமைதி அளிப்பவன்”.  ஆகையால்தான் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்பது இறைவனை முன்னிலைப்படுத்தியும் மொழிப்பெயர்க்கப்படுகிறது.

சரி, இதைத் தமிழிலேயே சொல்லலாமே என்று தோன்றும். தமிழில் சொன்னால் தமிழர்களுக்கு மட்டுமே புரியும்.   உலக இஸ்லாமியர் அனைவராலும் அறியப்பட்ட மொழியில் சொல்வதால் “யாதும் ஊரே, யாவரும் கேளிர்”  என்பதை மெய்ப்பிக்க முடிகிறது.  "அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு“ என்று சொல்வதில் உள்ள இனிமை “எழுத்துக்களுக்கெல்லாம் அ என்ற எழுத்து முதன்மையானதைப் போல உலகத்தின் முதன்மையானவன் இறைவனே” என்று சொல்வதில் முழுமையாக இருக்காதுதானே. எனினும் முஸ்லிமல்லாத தமிழர்களிடம் சொல்லப்படும்போது அவ்வாறே தமிழிலேயேச் சொல்லப்படுகிறது.

இந்த முகமன், இஸ்லாமியர்களிடையே மட்டுமல்ல,  மாற்று மதத்தவர்களிடமும் சொல்ல வேண்டும் என்பது ”உனக்குத் தெரிந்தவருக்கும் தெரியாதவருக்கும் ஸலாம் கூறுவது மிகச் சிறந்த நல்லறமாகும்'” என்கிற நபிமொழியிலிருந்து புலப்படும். எனினும், முஸ்லிமல்லாதவர்களிடம் ஸலாம் சொல்லப்பட்டால், அவர்கள்மீது இஸ்லாமைத் திணிப்பதாகச் சிலர் தவறாகக் கருதிவிடுவதால், பொதுவாக முஸ்லிம்கள் இதைத் தவிர்க்கிறார்கள்.

லகம் முழுதும் பல்வேறுவித முகமன்கள் புழங்கிவந்த போதிலும், இதேபோன்ற முகமன் - “சாந்தியும், சமாதானமும் நிலவட்டும்” என்ற முகமன் - முஸ்லிமல்லாத ஒருசில நாட்டு மக்களிடமும் புழக்கத்தில் உண்டு என்பது ஆச்சர்யமான விஷயம்.
கிறிஸ்தவத்தைப் பெரும்பான்மை மதமாகக் கொண்ட மால்டா என்கிற நாட்டிலும், மக்கள் சந்தித்துக்கொள்ளும்போது ”Sliem għalikom” என்று அவர்கள் மொழியில் அமைதி நிலவட்டும் என்பதாக வாழ்த்துவார்கள்.

ஒரு குறிப்பிட்ட இனத்து யூதர்களிடையேயும் இந்த “அமைதி” வாழ்த்து உண்டு.  ”Sholom aleikhem” என்று சொல்லப்பட்டால், "Aleikhem shalom" என்று பதிலளிக்க வேண்டும்.

அவ்வளவு ஏன், நமக்கு வெகு அருகில் உள்ள இலங்கையில், பெரியவர்கள் பண்டிகை போன்ற முக்கிய தினங்களில் “சாந்தியும், சமாதானமும், சுபீட்சமும் நிலவட்டும்” என்றுதான் வாழ்த்து தெரிவிப்பார்கள்.

இந்தியாவிலேயே சில இந்து சாதுக்கள், “ஓம் ஷாந்தி” என்று ‘அமைதி’யைத்தான் அருளாசியாக வழங்குவார்கள்.

இதிலிருந்து முற்கால மனிதர்களிடம் அமைதிக்கான முகமனே புழங்கி வந்திருக்க வேண்டும்; நாகரீகம் வளர வளரத்தான் மற்ற முகமன் முறைகள் மக்களிடையே ஊடுருவியிருக்கலாம் என்று புலப்படுகிறது. இதையே இந்த நபிமொழியும் நிரூபிக்கின்றது.

அல்லாஹ் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களைக் களி மண்ணிலிருந்து படைத்தான்.... பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம்  கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான்....  (நூல்: புகாரி 6227, 3326)

ஆத்திகமோ, நாத்திகமோ, இந்துவோ, இஸ்லாமியனோ, இந்நாடோ, எந்நாடோ எல்லாரும் மனதார விரும்புவது நிம்மதியான வாழ்வே.  பாரபட்சமில்லாமல் அனைவருக்கும் அமைதிகிட்ட மனதார முகமன் கூறுவோம். நிம்மதிக்கான வழிகளையே கடைபிடிப்போம் - நம்மளவிலாவது.

Post Comment

பெண்ணுரிமைப் புலிகள்
வெகுநாளைக்குப் பிறகு - மாதங்களுக்குப் பிறகு என்றுதான் சொல்லவேண்டும் - கலாவைச் சந்திக்கிறேன். அவளிடம் என்னவோ வித்தியாசமாகத் தெரிகிறது, ஆனால் என்னவென்று சட்டென்று பிடிபடவில்லை. அவளோ ”அக்கா, அக்கா” என்று ஆர்வமாகப் பேசிக்கொண்டே இருக்கிறாள்.  என் எண்ணத்தை ஓடவிட்டுக்கொண்டே, அவளிடமும் பேசிக் கொண்டிருக்கிறேன். 

பேசிமுடித்ததும், அவள் சுடிதார் துப்பட்டாவைச் சரிசெய்தவாறே.. ஆ.. சுடிதார்.. எப்பவும் சேலையில் மட்டுமே பார்த்த கலா இப்போ சுடிதாரில்!!”இப்போ சுடிதார் போடத் தொடங்கியாச்சா? வெரிகுட்!!” என்றேன். புன்னகைத்தவாறே விடைபெற்றாள்.  “அக்கா, இவருக்கு சுடிதார், நைட்டி எதுவும் பிடிக்காதாம். சேலைதான் கட்டிக்கணும்னு சொல்றார். எனக்குச் சேலைன்னாலே பிடிக்காது. இதவச்சே பெரிய்ய சண்டை வருது” என்று முன்பு புலம்பியது நினைவுக்கு வந்தது.

”ஊருலகத்துல ஹஸ்பெண்ட் வைஃபுக்குள்ள என்னென்னவோ பிரச்னைகள் வருது. பேப்பர் வாசிக்கிறீங்கள்ல? அதெல்லாம் பார்க்கும்போது சேல கட்டிக்கச் சொல்றதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை கலா. உங்களவரை ஒரு ஃப்ரெண்டா நினைச்சுக்கோங்க. உங்க டியர் ப்ரெண்ட் கேட்டாச் செய்யமாட்டீங்களா? அப்புறம் கொஞ்ச நாள்ல அவரும் புரிஞ்சுகிட்டு மாறிடுவார்” என்றதற்கு, “என் ஃப்ரெண்ட்ஸ்கிட்ட சொன்னப்போ, எல்லாருமே இப்பவே அவர் சொல்றதுக்கெல்லாம் தலையாட்டினா, அப்றம் உன் பேச்சே எடுபடாதுன்னாங்க. நீங்கதான் முதமுதல்ல வேற மாதிரி சொல்றீங்க”  என்று பதிலளிக்கும்போது அவள் முகத்தில் இருந்த பலத்த சிந்தனை நன்றாக நினைவிருக்கிறது. அதன்பிறகு அவளை இப்போதான் பார்க்கிறேன்.

ரஹீமாவும் இப்படித்தான் சொன்னாள். புதிதாய்த் திருமணமாகி அமீரகம் வந்தபோது அளவிலா மகிழ்ச்சியோடுதான் வந்தாள்.  பின்னர், வெளிநாட்டு வாழ்வுக்கேயுரிய இயல்பான தனிமையில் துவங்கியது பிரச்னை. கணவரின் நீண்ட வேலைநேரம் காரணமாய்,  தனிமை வாட்டத்துவங்கிய போது, புதுவாழ்வு சலிக்க ஆரம்பித்தது.  தொடங்கிய  சண்டை சச்சரவுகள் கொஞ்சம் சீரியஸாகி, அவள் ஊருக்குச் செல்லப் போவதாக என்னிடம் சொன்னபோது,”எவ்வளவோ பெண்கள், வெளிநாடுகளில் வேலைபார்க்கும் தம் கணவரின் நிதிநிலைமை அல்லது குடும்பச்சூழ்நிலை இடம்கொடுக்காததால் வருடக்கணக்கில் பிரிந்து இருக்கிறார்கள்.  ஆனால், உங்களுக்கு இறைவனருளால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்கிறது.   தனிமையை வெல்வதொன்றும் பெரிய விஷயமில்லை. இதற்காக ஊருக்குச் செல்வதென்பது முட்டாள்தனம்.  மேலும் அங்கும் பேனைப் பெருமாளாக்கும் சிலரால் பிரிவு பிளவாகலாம்” என்றபோது “ஊருல நான் இங்க கிளம்பும்போதே நிறையப் பேர் போர் அடிக்குமேன்னுதான் சொன்னாங்க.  இபபவும் நாங்கதான் அப்பவே சொன்னோமேன்னு சொல்றாங்க.  நீங்க ஒருத்தர்தான் இப்படிச் சொல்லிருக்கீங்க.” என்றாள். எனினும் கிட்டத்தட்ட 12 வருடங்கள் அமீரகத்தில் இருந்துவிட்டு, தற்போது அவள் ஆசைப்படியே கணவரோடே இந்தியா போய் செட்டிலாகிவிட்டாள்!!

(இதெல்லாம் ஒரு பிரச்னையா என்று கேட்பவர்கள், சிநேகா-சேரன் நடித்த “பிரிவோம் சந்திப்போம்” படத்தைப் பார்க்கக் கேட்டுக்கொள்கிறேன். )

இதற்கு நேரெதிர் நிலை ஃபௌஸியாவினது. மாமியாரின் தலையீடு காரணமாய் திருமணமாகிச் சில வருடங்கள் கழித்தே கணவனுடன் அமீரகம் வந்து குடித்தனம் செய்ய முடிந்தது.  இப்போது மாமியார் இங்கு வரப்போகிறாராம். வந்தபின், மகனை எதெற்கெல்லாம் தூண்டிவிடுவாரோ என்ற பயம் அவளுக்கு. பொதுவாகவே ஆண்களுக்குள்ள குணம், கல்யாணம் வரை அம்மாவை அலட்சியப்படுத்தியதற்கான பிராயசித்தமாகக் கருதிக்கொண்டு, கல்யாணத்திற்குப் பின் மனைவியை அலட்சியப்படுத்துவது!! அதைப் புரிந்துகொள்ளாத சில பெண்கள் சரியாகக் கையாளத் தெரியாமல் குழம்(ப்)பிவிடுகிறார்கள்.  அப்படியிருந்த ஃபௌஸியாவிடம் “அதுக்கேன் பயப்படுறீங்க? வரட்டுமே! நினைச்சாலும் வீண் செலவுகள் செய்யமுடியாதபடி, நீங்க இங்கே குழந்தைகளோட இப்பிடி ஒரு குருவிக்கூட்டுல, அதுவும் கட்டுசெட்டா (சிக்கனமாக) இருக்கீங்கன்றதைப் பார்த்துப் பாராட்டிட்டுத்தான் போவாங்க பாருங்க.” என்று நம்பிக்கை கொடுத்தேன்.  வெளிநாடு வரும் அநேக மாமியார்கள் இந்தியா திரும்பிச் செல்லும்போது தவறாமல் சொல்லிச் செல்வது தான்!!

விவாகரத்தின் விளிம்பில் நின்ற சஜினாவிடம் பேசியதுதான் மறக்கமுடியாது. “என் சிரமங்களையெல்லாம் சொல்லிட்டேன். கஷ்டம்தான்னு ஒத்துக்கிறீங்க. ஆனா, விவாகரத்து செய்யப் போறேன்னு சொன்னா மட்டும் அவசரப்படாதே, யோசிக்கலாம், பேசிக்கலாம்னு சொல்றீங்களே” என்று புலம்பினாள். உண்மைதான். துயரங்களிலிருந்து விடுபடட்டுமே என்று தோன்றினாலும், பிரிந்துவிடும்படி மனதாரச் சொல்லமுடியவில்லை. எப்படியாவது இருவரும் மனம்மாறி ஒன்றுசேர்ந்துவிடமாட்டார்களா என்றுதான் இருந்தது. பிரிப்பது மிகச்சுலபம். “உனக்கென்ன, சொந்தக் காலில் நிற்கிறாய். பெற்றோர் ஆதரவும் இருக்கு, அப்புறமென்ன” என்று ஒருவரி போதும் அதற்கு.  பின், நீதிமன்றம் வரை துணைக்குப் போகலாம். அதன்பின்னான வாழ்வை அவர்களல்லவா தனியே, அதுவும் குழந்தைகளோடு, எதிர்கொள்ளவேண்டும்?

விரும்பியபடியே, ஆனால் எதிர்பார்க்கவே இல்லாமல், ஒருசில லீகல் கவுன்சிலிங்குகளின் பின்னர் இப்போது சஜினாவும் கணவரும் இணைந்துவாழ்கிறார்கள்.  இது இன்னுமொரு படிப்பினை எனக்கு.

ஒருமுறை நெருங்கிய உறவினப் பெண்ணின் கணவர் ஃபோன் செய்து தன் மனைவியைக் குறித்து குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.  எல்லாம் கேட்டபின், அவரிடம் இப்பிடியிப்பிடி நடந்து பாருங்களேன் என்று ஆலோசனை கூறியபோது, வைத்தாரே ஒரு குற்றச்சாட்டு!! “அவ உங்க சொந்தக்காரிங்கிறதனாலத்தானே அவளைக் குத்தம் சொல்லாமே, நாந்தான் திருந்தணும்னு சொல்றீங்க?” என்று எகிறினார். இது பரவால்லை, உறவு என்பதால் குற்றமானது. சிலர், நீங்களும் பெண் என்பதால் பெண்களை விட்டுக்கொடுக்கவேமாட்டீங்களே என்பார்கள்.

அவரிடம் “ஏற்கனவே நீங்க கோவமா இருக்கும்போது, அவ செய்றது தப்புதான்னு உங்ககிட்ட சொன்னா உங்களுக்கு வெறுப்புகூடித்தான் போகுமே  தவிர குறையாது. அது பிரச்னையத் தீர்க்கவும் செய்யாது. அதனாலத்தான், அவ இப்படி நடந்துக்கிறதுக்கு என்ன காரணமா இருக்கும்னு என் பார்வையில் யோசிச்சு, உங்களைக் கொஞ்சம் மாத்திக்கச் சொல்றேன். உங்க தவறுகளை உங்ககிட்டதான் சொல்லணும். உங்க வைஃப்கிட்டதான் அவ எப்படியிருக்கணும்னு சொல்லமுடியும். அவங்கவங்க தப்பு அவங்களுக்குத் தெரியாது, வெளியே இருந்து பார்க்கிறவங்களுக்குத்தான் தெரியும்.” என்று விளக்கியபிறகு அமைதியானார்.

இதுவே அவளிடம் பேசியபோது, “நீ பெரூசா பெண்ணுரிமை, பெண்ணீயமுன்னெல்லாம் பேசுற. ஆனா, இப்போ என்னை அட்ஜஸ்ட் பண்ணிக்கோன்னு சொல்றே. பேச்சுல புலி, வீட்டுல எலிதானா நீயும்!!” என்று கிண்டல் செய்தாள்!! அடிப்பாவி, பெண்ணுரிமை பேசினால், பாயும் புலியாய்தான் எப்போதும் இருக்க வேண்டுமா? சூழ்நிலைக்கேற்ப “பதுங்கும்” புலியாகவும் அவ்வப்போது இருந்தால்தான் ராஜாவான ‘சிங்கமும்’ அடங்கும் என்று அவள்பாணியிலேயே விளக்கினேன்.

பெண்ணுரிமைகள் காப்பதற்கு புலியாகவோ, சிங்கமாகவோத்தான் இருக்கவேண்டும் என்றில்லை.  அல்லது கொடிபிடித்து, போராட்டம் நடத்தினால்தான் பெண்ணுரிமை காக்கிறோம் என்றும் பொருளில்லை. அதுவெல்லாம் இல்லாமல், எத்தனையோ அக்காக்கள், மாமிகள் வீட்டிலேயேயிருந்தாலும், உள்ளார்ந்த அன்போடு தக்க அறிவுரைகொடுத்து வழிகாட்டுகிறார்கள். இணைந்துவாழ்வதே நன்மை என்று, புதுவாழ்வெனும் சக்கரசுழற்சியில் தோன்றும் சின்னச்சின்னப் பொறிகளை அணைத்து விடுபவர்களாயிருக்கிறார்கள். 

சின்னப் பொறிகள்தானே பெருநெருப்பின் தொடக்கம்? அந்தப் பொறியை, ‘விட்டுக்கொடுத்தல்’ என்ற நீரைத் தெளித்து ஆரம்பத்திலேயே அணைத்துவிட்டால், சிறு புகையோடு தப்பித்துவிடலாம். விட்டுக் கொடுத்தல் என்றால் தங்கள் உரிமைகளையோ, சுயமரியாதையையோ விட்டுக் கொடுப்பதல்ல;  ’ஈகோ’வை விட்டுவிடுதல் மட்டுமே.  உரிமைகளை விட்டும்விடாமல், பறிக்கவும் அவசியப் படாமல், வேண்டிய இடத்தில், தக்க நேரத்தில் பெண்ணுக்குத் தானே கிடைக்கும்படியான வாழ்க்கையை வழிகாட்டும் இவர்களெல்லாம் தங்களைப் பெண்ணுரிமைப் புலிகள் என்று பெயரிட்டுக் கொள்வதுமில்லை.

Post Comment

நேசத்துடன் நான்
திவுலகத்தை வாசித்துமட்டுமே வந்த காலத்தில், வாசிக்க நேர்ந்த திருமதி. அனுராதா சேகர் அவர்களின் பதிவுகளால்தான் கேன்ஸர் பாதிப்படைந்த ஒருவர் என்னமாதிரியான சிகிச்சைகள் எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிந்துகொண்டேன். அதுவரை, அங்கொன்று இங்கொன்றாகக் கேள்விப்பட்டிருந்தேனேயொழிய நேரில் அறிந்ததில்லை. (இறைவன் இனியும் காப்பானாக) அந்தப் பாதிப்பில் நான் எழுதிய ஒரு பதிவே “எய்ட்ஸும், கேன்ஸரும்”. பெரும்பாலும் தவறான தொடர்புகளாலேயே வரும் எய்ட்ஸுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம், காரணமேயில்லாமல் - அதுவும் தவறிழைக்காமலிருந்தாலும் -  வரக்கூடிய கேன்ஸருக்குக் கொடுக்கப்படவில்லையே என்ற ஆதங்கத்தைக் கொட்டியிருந்தேன் அந்தப் பதிவில்.

”நேசம்” அமைப்பு விழிப்புணர்வுக் கட்டுரைப் போட்டி அறிவித்தபோது, அதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரை எழுத எண்ணி, இணையத்தை வலம்வந்தபோது அறிந்துகொண்ட எண்ணற்ற விஷயங்களில் ஒன்று(மட்டும்) இனித்தது:  ”கேன்ஸர் வராமல் ஓரளவுக்குப்  பாதுகாக்க முடியும்” என்பதே அது.  புகை, குடி தவிர்ப்பதல்லாமல் இன்னும் சில வழிகள் புலப்பட்டது.  உதாரணமாக, நாம் பயன்படுத்தும் அழகுசாதனப் பொருட்களான க்ரீம்கள், பவுடர் முதல் அத்தியாவசியப் பொருளான பல்தேய்க்கும் பேஸ்ட் வரை சேர்க்கப்பட்டிருக்கும் ”பாராபென்” என்ற வேதிப்பொருள் ஒரு முக்கிய கான்ஸர்-காரணி என்றறிந்துகொண்டேன்.

இப்படி நான் எழுதிய இரு கட்டுரைகளும் எனக்கும், வாசித்தவர்களுக்கும் சில புதிய தகவல்களைத் தந்தாலே அதற்கான பயன்கிடைத்த மாதிரி என்று நினைத்திருந்தேன். ஆனால் இரண்டு கட்டுரைகளுமே முதல் பரிசு பெற்றது ஒரு இன்ப அதிர்ச்சிதான். (என்ன, ரெண்டு கட்டுரைக்கும் தனித்தனியா பரிசுத் தொகை தந்திருக்கலாம்கிற ஒர்ரே வருத்தம்தான். :-D )

”நேசம்”  கட்டுரைக்களுக்காக இணையத்தை வலம்வந்தபோது, தொடர் அறிவியல் ஆராய்ச்சிகளாலும், அதன்விளைவாய் வளர்ந்து வரும் மருத்துவத் தொழில்நுட்பங்களாலும் புற்றுநோய் சிகிச்சை முறைகள் முன்னேற்றமடைந்துள்ளன என்ற நம்பிக்கை ஊட்டும் செய்திகளும் அறிய முடிந்தது. அவ்வாறான சில மருத்துவத் தொழில்நுட்பங்களையும், நம்பிக்கை தரும் சிகிச்சை முறைகளையும் பகிர்ந்து கொள்கிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை!!

1. கண்ணிவெடிகள்!!

மார்பகப் புற்றுநோயைக் கண்டுபிடிப்பதற்கு, “மேம்மோகிராம்” எனப்படும் அடர்த்தியான எக்ஸ்-ரே கதிர்களை உடலில் அனுப்பிச் செய்யப்படும் பரிசோதனை முறையே இந்நாள்வரை பின்பற்றப் படுகிறது.  இதில் எக்ஸ்-ரே கதிர்கள் பயன்படுத்தவதால், உடலுக்குக் கேடு என்பதாலேயே 40-வயதுக்குக் கீழுள்ளோருக்குப் பரிந்துரைக்கப் படுவதில்லை. மேலும், இளவயதினருக்கேயுரிய அடர்த்தியான திசுக்களினுள்ளே இக்கதிர்கள் சரியாக ஊடுறுவாமல் போய்விட வாய்ப்பிருக்கிறதென்பதும் ஒரு காரணம். 

ஆனால், தற்போது ஒரு புது பரிசோதனை முறை அறிமுகத்தப்படவுள்ளது. கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம்தான் இதன் அடிப்படை என்று அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!! இப்புதிய முறை தீங்கு விளைவிக்காதது, செலவு குறைந்தது, முக்கியமாக வலியில்லாதது. வெறும் எட்டு நொடிகள் போதும் இந்தப் பரிசோதனைக்கு!! 

2. கொதிக்க வைத்துக் கட்டியைக் கரைப்பது:

தற்போது ஆராய்ச்சியின் இறுதிகட்ட நிலையில் இருக்கும் இந்த சிகிச்சை முறை, மார்பகப் புற்றுநோய்க்குரியது. புற்றுநோய்க் கட்டியின்மீது, ஊசியில் இணைக்கப்பட்ட ஒரு மின்தகடை (electrode), மிகச்சரியாகக் கட்டியின்மீது வைத்து, மின்சாரத்தினால் 70 - 90c வரைச் சூடாக்கினால் கட்டி அப்படியே கரைந்துவிடும். இதுவும் பின்விளைவுகளற்ற, வலியில்லாத, நேரம் குறைவாக எடுக்கும் செலவு கூறைந்த சிகிச்சை முறை. இதற்கு Preferential Radio Frequency Ablation  என்று பெயர். இம்முறை பயன்படுத்த, புற்றுநோய்க் கட்டியின் அளவு குறைந்தது 2 செ.மீ. அளவேனும் இருக்க வேண்டும்.

3. பெயிண்ட் அடிச்சாப் போய்டும்:

இம்முறையில், அரிதாகக் கிடைக்கும் ரீனியம்-188 என்ற கதிரியக்க ஐஸோடோப்பு பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட கதிரியக்கக் க்ரீம் உயோகிக்கப் படுகிறது.  தோல் கேன்ஸரின் ஒரு வகையான, கார்ஸினோமா வகை புற்றுநோய்க்கு அக்கட்டி இருக்கும் இடத்தின் மேல்தோல்மீது மருத்துவ உலோகத்தாள் (surgical foil) வைத்து, அதன்மீது இந்த க்ரீமை பெயிண்ட் போலத் தடவி இரண்டு மணிநேரம் வைத்தால், போயே போச்சு அந்தக் கட்டி!!
 
கதிரியக்கக் க்ரீமிலிருந்து வரும் கதிரியக்கங்கள் அந்தக் கட்டியைக் கரைப்பதுடன், நல்ல செல்களை 
(தோலை) வளரவும் வைக்கிறது என்கிறது ஆராய்ச்சி. இம்முறையில் பக்கவிளைவுகளில்லை, செலவு குறைவு, வலி இல்லை, தழும்புகூட ஏற்படுவது இல்லை என்பதால் பிரபலமடைந்து வருகிறது. முகம் போன்ற இடங்களில் ஏற்படும் கான்ஸர் கட்டிக்கு இம்முறையிலான சிகிச்சை ஒரு வரப்பிரசாதமே!!

4. ஆசைகாட்டி கட்டியைக் கரைப்பது!!

வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஈடாக, நம் இந்திய இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும் (DRDO) புற்றுநோய் சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகள் மேற்கொண்டு வருகிறது. அதில் முக்கிய சிகிச்சை முறை ஒன்று நல்ல பலன் தருவதாக அமைந்துள்ளது.

கேன்ஸர் செல்கள், நம் உடலில் இருக்கும் குளுக்கோஸை உறிஞ்சி சக்தி பெறுகின்றன. மேலும், அதை உறிஞ்சுவதில் மட்டுமே தம் சக்தியைச் செலவழிக்கின்றன.  இச்சிகிச்சை முறையில், குளுக்கோஸ் போன்றே தோற்றம்  தன்மையும் கொண்ட 2-DG என்ற வேதிப்பொருளை உடலில் செலுத்தவேண்டும். செலுத்தினதும், கேன்ஸர் செல்கள் இவற்றை உறிஞ்சி தம் சக்தியை இழக்கும். ஆனால், 2-DG செல்களிடமிருந்து சக்தி எதுவும் கிடைக்காது. அதனால், கேன்ஸர் செல்கள் சக்தி இழந்து, தளர்ந்துவிடும்.  இச்சமயத்தில் வழக்கமான ரேடியேஷன் சிகிச்சை மேற்கொண்டால், கேன்ஸர் செல்களால் எதிர்த்துப் போராட முடியாதென்பதால், பலன் அதிகமாக இருக்கும். ரேடியேஷனின் பக்க விளைவுகளும் குறைவாக இருக்கும்.

5. ரேடியேஷன் பக்கவிளைவுகள்:

ரேடியேஷன் - கதிர்வீச்சு என்பது புற்றுநோய் சிகிச்சையில் மிக அவசியமான சிகிச்சையாகும். ஆனால், இதன் பக்க விளைவுகள் அதிகம். நோயாளிக்குப் பல்வேறு துன்பங்களைத் தரக்கூடியது. இத்தகைய பக்க விளைவுகளை, துளசிச் செடியின் ஆண்டி-ஆக்ஸிடண்ட் தன்மையானது பெரிதும் குறைக்கக்கூடியது என்று இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) கண்டறிந்துள்ளது. இன்னும் சில மாதங்களில்  சந்தைப்படுத்தப்படப்போகும் இந்த மருந்து புற்றூநோயாளிகளுக்கு மிகுந்த பயனளிக்கக்கூடியதாக எதிர்ப்பார்க்கப்படுகீறது.

6. ஊதினால் கான்ஸரைக் கண்டுபுடிக்கலாம்!!

அமெரிக்க நிறுவனம் ஒன்று கண்டுபிடித்துள்ள ”ரெவெலர்” (Revelar) என்ற கருவியின்மூலம், வாயால் ஊதினாலே, நுரையீரல் புற்றுநோய் உள்ளதா இல்லையா என்று ஏழே நிமிடங்களில் கண்டுபிடித்துவிடலாம். நம் உடலில் செல்கள் தாக்கப்படும்போது, “ஆல்டிஹைட்ஸ்” (aldehydes) என்ற வேதிப்பொருள் நாம் வெளிவிடும் மூச்சுக்காற்றில் காணப்படும்.  இதுவே இச்சிகிச்சை முறையின் அடிப்படையாகும். வழக்கம்போல, இந்தப் பரிசோதனை முறையும் வலியில்லாத முறை என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது.


7. தடுப்பு ஊசிகள்:

புற்றுநோய்க்குத் தடுப்பூசி என்பது இன்னும் ஆராய்ச்சி அளவிலேயே உள்ளது. காரணம், புற்றுநோய்க்குக் காரணம் இன்னதுதான் என்று வரையறுக்கப்படாததால், தடுப்பூசிகள் கண்டுபிடிப்பது சிரமமானதாக உள்ளது. கருப்பை புற்றுநோய்க்கு தற்போது தடுப்பூசிகள் - Gardasil and Cervarix -  கண்டுபிடிக்கப்பட்டு, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது என்றாலும், இது ஒரு குறிப்பிட்ட வகை வைரஸால் வரும் புற்றை மட்டுமே தடுக்கும். 

இந்தத் துறை ஆராய்ச்சியில் மட்டும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் வந்துவிட்டால், மனித இனத்தைப் பிடித்தாட்டும் புற்றை முழுமையாக ஒழிக்கும் காலம் வந்துவிடும்.

8. மூல உயிரணு (Stem-cell) சிகிச்சை:

ஸ்டெம் செல் சிகிச்சையானது மிகவும் நம்பிக்கையூட்டும், நிச்சயமான பலன்தரும்  சிகிச்சை முறையாகும். ஆனால், இது, எலும்புப் புற்று, ரத்தப்புற்று போன்ற குறிப்பிட்ட வகைகளுக்கு மட்டுமே செய்யக்கூடிய சிகிச்சையாகும். இதிலே சிகிச்சைக்கான ஸ்டெம் செல்கள், அந்த நோயாளியின் உடம்பிலிருந்தே எடுக்கப் படுவதால் ஒவ்வாமை போன்ற பின்விளைவுகளும் இருப்பதில்லை.

முதலில் நோயாளியின் உடலில் உள்ள கேன்ஸர் கட்டிகளை, அடர்ந்த ரேடியேஷன் மற்றும் கீமோதெரபி மூலம் அழித்தபின்னர், முன்பே அவரின் இடுப்பெலும்பிலிருந்து எடுத்துப் பாதுகாத்து வைத்திருந்த மூல உயிரணுக்களை உடலினுள் செலுத்தினால், அவை நல்ல செல்களாகப் பல்கிப் பெருகி, கேன்ஸர் செல்களைப் பெருகவிடாமல் செய்யும்.

கேன்ஸர் சிகிச்சையின் பக்க விளைவுகளையும், வலிகளையும் குறைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களாலும், ஆராய்ச்சிகளாலும் புதியப்புதிய முறைகள் மருத்துவத் துறையில் அறிமுகமாகி வருவது நோயாளிகளுக்கு மட்டுமல்லாது, அவர்தம் உறவுகளுக்குமே மகிழ்ச்சியான செய்தி.

முன்காலத்தில், போலியோ, காசநோய் போன்ற பலநோய்கள் உலகை ஆட்டிப் படைத்து வந்தன. இவற்றைக் குணபாடுத்தவே முடியாது என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது. ஆனால், அவை இன்று முழுமையாக அழிக்கப்பட்ட/ குணப்படுத்தக்கூடிய நோய்களாக ஆக்கியதும் இதே மருத்துவ முன்னேற்றங்களே. புற்றுநோயும் அவற்றின் வரிசையில் சேரும் நாள் தூரமில்லை!!

Post Comment

காலமாற்றம் (சிறுகதை)
 


"லேடீஸ் ஸ்பெஷல்” தீபாவளி மலரில் (2011) வெளிவந்த என் சிறுகதை.


 வீட்டுக்கு முதன்முறையாக அந்தத் தோழியை அழைத்து வந்திருந்தேன். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பார்க்கில் தினமும் நடைபயிற்சிக்குச் சென்றதில், அறிமுகமான புதுமுகம். புன்னகையில் ஆரம்பித்து, சேர்ந்து நடப்பதில் வந்து, வீட்டுக்கு வருமளவு ஆகியிருக்கிறது தற்போதைக்கு.

நடக்கும்போது பேசியதில், குடும்பம், கணவர், குழந்தைகள், சொந்த ஊர் என்று பலதும் பேசியிருந்தோம். என்றாலும், இன்னும் பேசவா விஷயம் இருக்காது? பலதும் பேசிப்பேசி, இந்த ஊர்த் தோழிகள், சொந்த ஊர்த் தோழிகள், கல்லூரித் தோழிகள், பள்ளித் தோழிகள் என்று வந்தபோது, அவரின் ‘நான் கல்லூரி சென்றதில்லை’ என்ற கூற்றில் கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஆகி, “அப்படியா?” என வாய்பிளந்தேன். ஏனெனில், அவரது உடை எளிமை என்றாலும், அதிலுள்ள நேர்த்தியும்; பேச்சின் அதிகப்படியில்லாத நளினமும், இடையிடையே சரளமாய்க் கலந்துவரும் ஆங்கிலச் சொற்களும், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதை எனக்கு நம்ப முடியாமலாக்கியது.

இன்னமும் அதிர்ச்சியானதைச் சொன்னார், படித்ததும் ஏழாவது வரைதானாம்!! கணவரும் பெரிய வேலையில் இருக்கிறார்; குழந்தைகளும், வசதியானவர்கள் படிக்கும் பள்ளிகல்லூரிகளில் படிக்கின்றனர். இருந்தும், இவர்..

அவரே சொன்னார், “எங்க ஊர்ல, பெண்களுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிடுவாங்க. அதேபோல எனக்கும் ஆனது.” என்றார்.

“ஆனாலும், படிப்பை நிறுத்தும்போது உங்களுக்கு கஷ்டமாயில்லியா?”

”ம்... அப்போதைய காலத்தில் பள்ளிப் படிப்பு என்பதும், வெறும் ஏட்டுப் படிப்பாய், தினப்படி வாழ்க்கைக்கு எந்தவித பயனும் அதனால் இல்லாத வண்ணமாய்த்தான் இருந்தது. தற்போது போல கடினமான உழைப்பு தேவைப்படும் பாடத்திட்டமும் இல்லை. எழுதப் படிக்க தெரிந்து கொண்டதுதான் பள்ளி சென்றதன் பயன். மேலும், பாடப் புத்தகங்களைவிட, கதைப் புத்தகங்கள்தான் சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு. ஆனால், ஆசிரியர்கள் அருமையானவர்கள். புத்தகம்தான் வாழ்க்கைக்கு உதவவில்லையே தவிர, ஆசிரியர்கள் செய்யும் போதனைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமானதாய் இருந்தன. இன்னொரு விஷயம் சொல்லணும். என்னன்னா, வீட்டில அம்மா, அப்பா, பாட்டினு பெரியவங்க அறிவுரைன்னு சொன்னதைத்தான் ஆசிரியைகளும் சொல்லித் தந்தாங்க!! அதனால, படிப்பை நிறுத்துவது எனக்கு பெரிய விஷயமாய்த் தெரியலை.  தோழிகளைப் பிரிவதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது!!” புன்னகையோடு சொன்னார்.

“இருந்தாலும், பதிமூணு, பதினாலு வயசுல கல்யாணம்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அந்த வயசுல உடம்புல என்ன தெம்பு இருக்கும் குடும்பம் நடத்தவும்,  பிள்ளைபெறவும்?”

வாய்விட்டுச் சிரித்தவர், “என்கிட்ட நிறைய பேர் இதத்தான் கேக்கிறாங்க. அந்தக் காலத்துப் பெண்பிள்ளைங்க இந்தக் காலத்து பிள்ளைங்க போல சோனியாய் இருக்க மாட்டாங்க. இப்பப் போல சத்துக்களைப் பிழிஞ்செடுத்த மிஷின் -பாலிஷ்ட் அரிசியோ, ரீ-ஃபைண்ட் எண்ணெயோ, அப்ப கிடையாது. ஃபாஸ்ட்-ஃபுட் வகையறாக்களும் கிடையாது. நாங்க சாப்பிட்டது எல்லாமே முழு போஷாக்கான உணவுகள்தான்; அதோட, சாப்பிடற சாப்பாடுக்கேத்த வேலைகளும் உண்டு. அப்ப எல்லாம் அம்மியும், உரலும், கிணறும்தானே? அதனால, சிறு வயசுலயே எங்க உடம்பு உரமாத்தான் இருக்கும். இதோ என் கல்யாண ஃபோட்டோ பாருங்க, நான் எப்படியிருக்கேன்னு?”

அவரது கைப்பையிலிருந்து எடுத்துத் தந்த அந்தப் புகைப்படத்துக்கும் தற்போதைக்கும் முகத்தில்தான் வயதுகூடியது தெரிந்ததே தவிர, உயரம், உடல் பூரிப்பு எல்லாம் இக்காலத்திய இரண்டு பிள்ளை பெற்ற ஒரு சராசரிப் பெண்ணின் வாகில் இருந்தது.

”சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிகிட்டதுல வருத்தமில்லன்னு சொல்லி நியாயப்படுத்துறீங்க. தப்பா நினைக்காதீங்க. உங்க பொண்ணு, இப்ப காலேஜ் படிக்கிறாளே....” வென்று இழுத்தேன்.

”ஆமாம்.  இஞ்சினியரிங் முடிச்சுட்டு, இப்ப எம்.இ. படிக்கிறா. படிச்சு முடிச்சப்புறம்தான் கல்யாண பேச்சு ஆரம்பிக்கணும். நீங்க கேட்டது புரியுது. அந்தக் காலம் வேற. இந்தக் காலம் வேற. முதல்ல, நீங்க சொன்ன மாதிரி, இந்தக் காலத்து உணவுமுறைகளாலயும், “ஸ்லிம்” பைத்தியத்தாலயும்,  காலேஜ் படிக்கிற வயசு வந்தும்கூட, பொண்ணுங்க ஆரோக்கியமும், சத்தும் இல்லாம  இருக்காங்க.”

“ரொம்ப கரெக்டுங்க. இந்த ‘ஸ்லிம்-மேனியா’ படுத்துற பாடு இருக்கே!!” நானும் புலம்பிக் கொண்டேன்.

“ஆமாங்க. இன்னும், என் காலத்தில, எனக்குப் படிப்பில ஆர்வமில்லை; அத்தோட பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடத்துவதும் அப்போதைய வழக்கம் என்று தெரிந்திருந்ததாலும் எனக்கு படிப்பில் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். அப்போவெல்லாம் திருமணமான பெண்களுக்கு எல்லாமே கணவர்தான். வீட்டுக்காரர்தான் எல்லாம்னு நினைச்ச எங்க நம்பிக்கைக்கு ஏத்த மாதிரியே, அவரது பாதுகாப்பு முழுசா இருந்துது. ஆனா, இப்போ, நிலைமை அப்படியில்லை. பெண்களும் படிப்புல ஆர்வமாருக்காங்க. இந்தக் காலத்து திருமணங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையுற மாதிரி தெரியலை. சின்னச்சின்ன பிரச்னைக்கெல்லாம் ஈகோ தலையெடுக்குது. அதனால, பெண்கள், ஒரு டிகிரியாவது முடிச்சு,  வேலையில் இருக்கிறதுதான் தனக்கு பாதுகாப்புனு நினைக்கிறாங்க. அதனால, மாறியிருக்கிற காலத்துக்கேத்த மாதிரி, நானும் மாறிக்கிட்டேன். மாறித்தான் ஆகவேண்டியிருக்கு.”

கடந்த கால பெருமையையும், நிகழ்கால நிதர்சனத்தையும் அழகாக அவர் எடுத்துரைத்ததில்,  வியந்து நின்றேன்.

Post Comment

கேமராக் கண்கள்
இதுவும் கவிதையோன்னு பயந்துடாதீங்க.  தலைப்பு மட்டுமே அப்பப்போ கவிதைத்தனமா இருக்கும்னு நாஞ்சொல்லாமலே உங்களுக்குத் தெரியும்கிறதாலத்தான் தைரியமா உள்ளே வந்திருக்கீங்க.  இது ஒரு ”டெக்னிக்கல் வரலாற்றுப் பதிவு”ன்னு சொல்லலாம். அடடா... ஓடக்கூடாது. வரலாறு முக்கியம் தோழர்களே!!
ஆரம்பகாலங்களில் - கி.பி. 300-400க்கு இடைப்பட்ட காலங்களில், கண்ணின் பார்வை என்பது, கண்ணிலிருந்து வெளிவரும் ஒளி பொருட்களின்மீது பட்டு பிரதிபலித்து, மீண்டும் கண்ணினுள் நுழைவதாலேயே என்றே டாலமி (Ptolemy), யூக்ளிட் (Euclid) போன்ற அறிஞர்களின் புரிதல் இருந்தது. பின்வந்த அரிஸ்டாட்டில், கேலென் (Galen) போன்றவர்கள் நாம் பார்க்கும் பொருளிலிருந்து நம் கண்ணிற்குள் ஏதோ ஒரு  ஏதோ ஒரு ”இயற்பொருள்” (physical form) நுழைவதாலேயே பார்க்க முடிகிறது என்று கூறினர்.  எனினும் இதை ஒரு ஊகமாகவே அல்லாது, அந்த இயற்பொருள் என்னவென்று அவர்கள் தகுந்த ஆய்வுகளின் மூலம் விளக்கவில்லை. 
அதன்பிறகு இதில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது. காரணம் 5ம்  நூற்றாண்டு முதல் 10-ம் நூற்றாண்டுவரையான காலம், ஐரோப்பாவின் “இருண்ட காலம்” என்று அழைக்கப்படுமளவுக்கு அங்கு குறிப்பிடத்தகுந்த அறிஞர்கள் யாரும் இல்லை.  பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிடுவது மாதிரி, இது உலகம் முழுமைக்குமான இருண்ட காலம்போல வரலாற்றில் சித்தரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில்,   அந்த காலகட்டங்களில்தான் பெர்ஷியா, எகிப்து, இந்தியா உள்ளிட்ட ஆப்பிரிக்க-ஆசியப் பகுதிகளில் அறிஞர்கள் பலர் தோன்றினர்.
அவர்களில் ஒருவர்தாம், கி.பி. 965-ல் ஈராக்கின் பஸ்ரா நகரில் பிறந்த ”அல்ஹஸன் இப்ன் அல்-ஹைதம்” என்பவர்.  ”இப்ன் அல்-ஹைதம்” என்று அரேபிய வரலாற்றில் அழைக்கப்பட்ட இவர், ஐரோப்பாவில் அல்ஹாஸன் (Alhazen) என்று அறியப்பட்டார்.  ஒளியியல், இயற்பியல், கணிதம், வானவியல், தத்துவம், விஞ்ஞான முறைகள் என்று பல்துறைநிபுணராக (Polymath) ஆக விளங்கினார்.  எல்லாத் துறைகளுக்கும் சேர்த்து இவர் எழுதிய புத்தகங்களும், ஆய்வுக்கட்டுரைகளும் 200க்கும் மேலே!!

இவர், அறிஞர்கள் டாலமி மற்றும் யூக்ளிட் ஆகியோரின் “பார்வை”க்கான விளக்கத்தை மறுத்தார்.  நாம் பார்க்கும்போது, கண்ணிலிருந்து ஒளி தோன்றி பொருட்களின்மீது விழுவதாலேயே பார்க்க முடிகிறது என்பது உண்மையானால், பிரகாசமான அதிக வெளிச்சத்தினால் கண்கள் கூசுவது ஏன்? மேலும், விண்ணில் இருக்கும் சில நட்சத்திரங்களைக்கூட வெறும் கண்ணால் - அதுவும் கண்ணைத் திறந்த உடனே - பார்க்க முடிவதெப்படி என்றும் கேள்விகள் எழுப்பி, அது தவறென்று உணர்த்தினார். மேலும், ஒளிக்கற்றைகள் பொருட்களின்மீது விழுந்து, பின் நம் கண்களுக்குள் நுழைவதாலேயே “பார்வை” நடக்கிறது என்றும் நிரூபித்தார்.  லென்ஸ்கள், கண்ணாடிகள் உதவிகொண்டு ஒளிக்கற்றைகள் எப்போதும் நேர்க்கோட்டிலேயே பயணிக்கின்றன என்றும் நிரூபித்தார்.


இவரது பரிசோதனைகளின் முக்கியமான மைல்கல் “கேமரா அப்ஸ்க்யூரா” (Camera Obscura) என்ற “ஊசித்துளை கேமரா” முறையாகும். ஒரு இருட்டு அறையின் சுவற்றில் இட்ட சிறு ஊசித்துளைவழி ஊடுறுவும் புறவெளிச்சம், வெளியே உள்ள காட்சியைத் தெளிவாகக் காட்டும் (ஆனால், தலைகீழாக)  என்பதைச் செயல்படுத்திக் காண்பித்தார். இதுவே பின்னாட்களில் உருவாக்கப்பட்ட கேமராவின் செயல்முறைக்கும், பெயருக்கும் அடிப்படையாகும்!!  அல்-ஹைத்தம் அரபியில் இருட்டு அறையை  “பைத் அல்முத்திம்” என்கிறார். அதாவது, லத்தீன் மொழியில் “கேமரா அப்ஸ்க்யூரா”; ஆங்கிலத்தில் “dark chamber"!! இதுபோதுமே கேமராவின் ஆரம்பம் எங்கென்று தெரிந்துகொள்வதற்கு!!


http://www.youtube.com/watch?v=a5icY1dMin4

மேலும் இச்சோதனையைக் கொண்டே, “பார்வை” என்பது என்ன, கண்ணின் அமைப்பு, கண்ணில் உருவங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதையெல்லாமும்கூட விவரித்தார்.  “காட்சி” (vision) என்பதில் மூளையின் செயல்பாடும் உண்டு என்பதையும் விவாதித்த முதல் விஞ்ஞானியும்கூட!! இதன்மூலம், கண் மருத்துவத்திற்கும் பங்காற்றியுள்ளார்.

இன்னும் ஒளியியலில் எண்ணற்ற கோட்பாடுகள், பரிசோதனைகள், கண்டுபிடிப்புகள் செய்துள்ளார். அவற்றையெல்லாம் “Book of Optics" (Kitâb al-Manâzir) என்ற தலைப்பில் ஏழு தொகுதிகளாக எழுதி வைத்துள்ளார். இப்புத்தகம் லத்தீன் மொழியில் 12-ம் நூற்றாண்டில் மொழிபயர்க்கப்பட்டது.

இந்நூல், பின்னாளைய அறிஞர்களான ராபர்ட் க்ரோஸெடெஸ்ட், ரோஜர் பேகான், ஜான் பெக்ஹாம், விடேலோ, வில்லியம் ஆஃப் ஓக்ஹம்,  லியனார்டோ டாவின்ஸி, ஜோஹன்னெஸ்  கெப்ளர், கலிலியோ, நியூட்டன் உள்ளிட்டவர்களின் ஆய்வுகளுக்கு உதவியுள்ளது. அதோடல்லாமல், மூக்குக் கண்ணாடி, கேமரா, டெலஸ்கோப், மைக்ரோஸ்கோப், கண் அறுவை சிகிச்சை, ரோபாட்டுகளின் “பார்வை” ஆகியவை உள்ளிட்ட பார்வை மற்றும் ஒளி சார்ந்த முக்கிய கண்டுபிடிப்புகளுக்கும் இந்தப் புத்தகம் பெரிதும் துணையாயிருந்தது.

இக்காரணங்களாலேயே அல்-ஹைத்தம் ”ஒளியியலின் தந்தை” (Father of Modern Optics) என்று அழைக்கப்படுகிறார்.

இவர் சார்ந்த துறைக்கு மட்டுமல்லாமல், பொதுவாகவே ஆராய்ச்சித் துறைக்கு ஒரு முன்மாதிரியாகவும் இருக்கிறார்.  இவர் காலத்திற்கு முன்பு வரை, அறிவியல் தத்துவார்த்த ரீதியாகவே அணுகப்பட்டது.  ஒரு புதிய கோட்பாடு உருவாகும் சமயத்து, அது தர்க்க ரீதியாக, யூகமாகத்தான் சொல்லப்பட்டது. அல்லாமல், இன்றுள்ளது போல அது தகுந்த ஆராய்ச்சிகள், பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்படும் வழக்கம் இல்லை. அல்-ஹைத்தம்தான் இதிலும் முன்னோடியாக  இருக்கிறார். ஒரு புதிய கோட்பாட்டை உருவாக்கும்போதோ அல்லது முந்தையவர்களின் கோட்பாட்டை மறுக்கும்போதோ, முதலில் அதைச் சரியாகக் கூர்ந்து கவனித்து,  விவர அறிக்கை எழுதி, ஒரு உத்தேசக் கோட்பாடு வகுத்து, அதை ஆராய்ந்து பரிசோதித்து, பரிசோதனையின் முடிவுகளை ஆய்ந்து, தரவுகளின் விளக்கமளித்து, அதனடிப்படையில் ஒரு முடிவை எத்தியபின், இவ்விபரங்களோடு தன் கண்டுபிடிப்புகளைப் பகிர்தல் என்ற வரிசைக்கிரமப்படி உலகில் முதன்முதல் செயலாற்றியவர் இவரே.  பரிசோதனை-  ”experiment"  என்கிற வார்த்தைக்கான அடித்தளமே அவரது ஒளியியல் குறித்த நூலில்தான் இடப்பட்டது என்றால் மிகையில்லை.

ஒரு விஞ்ஞானி எனப்படுபவர் எவ்வாறு பணியாற்றவேண்டும் என்பதற்குரிய வரைமுறைகளை வகுத்துத் தந்தவராகையால், இவர் “உலகின் முதல் விஞ்ஞானி” (World's first scientist) என்றும் அழைக்கப்படுகிறார்.

இறையியல்” (Theology) துறையையும் விட்டுவைக்காத அல்-ஹைத்தம் சொல்கிறார்:

"உண்மை, அதன்பொருட்டே தேடப்படுகிறது. உண்மையைக் கண்டறிவது கடினமானது. அதை நோக்கிய பாதை கரடுமுரடானது.. ஏனெனில் உண்மை தெளிவற்ற இருட்சியில் மூழ்கியுள்ளது... அறிவியலாளர்கள் பிழைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்கள் அல்லர்; அறிவியலும் குற்றங்குறைகள் உடையதே......

அறிவையும், உண்மையையும் நான் தொடர்ந்து தேடிவருகிறேன். ஏனெனில் இறைவனின் ஒளிர்வை அணுகவும், அவனோடு நெருக்கத்தை அடைவதற்கும் இதைவிடச் சிறந்த வழியில்லை என்பது என் நம்பிக்கை!!"


Ref:
http://en.wikipedia.org/wiki/Alhazen
http://en.wikipedia.org/wiki/Book_of_Optics
http://www.1001inventions.com/ibnalhaytham
http://harvardmagazine.com/2003/09/ibn-al-haytham-html
http://ezinearticles.com/?Who-Was-the-First-Scientist?&id=637076
http://news.bbc.co.uk/2/hi/7810846.stm
http://www.firstscientist.net/
http://www-history.mcs.st-andrews.ac.uk/Biographies/Al-Haytham.html
Book: 1001 inventions: Muslim heritage in our world
Published by: Foundation for Science Technology and CivilisationPost Comment

கவலைப்பட ஒரு கவலை
motivart.wordpress.com


 செய்தித்தாள் பக்கங்கள்
சொல்லும் சோகங்கள்

தோழிகளின் அழைப்புகள்
தெரிவிக்கும் தேம்பல்கள்

உறவுகளின் உரையாடல்களில்
உறைக்கும் நிதர்சனங்கள்

நினைத்துப் பார்க்கையில்
நெஞ்சு கனக்கும்

சீரான வாழ்வு
சுகமான துணை

அழகான மக்கள்
ஆரோக்கியமாய் நான்

துன்பமில்லா வாழ்வு
தானென்றாலும் மனதின்

ஓரத்தில் ஏனோ
ஒரு கலக்கம்

புலம்பும் எனைப்பார்த்து
புன்னகைக்கிறார் என்னவர்

பிரச்னையில்லா வாழ்வை
புவியனைத்தும் வேண்ட

பிரச்னையே இல்லையென
பிரகலாபிக்கும் பைத்தியமென்றார்!!

பொடிக்கல் தடுக்கினால்
பாதகமில்லை பாறைபோல்

பெருந்துயர் வந்தால்
பொறுப்பேனோ பேதை

சிறிதெனில் சிணுங்கினாலும்
சிரமேற் கொள்வேனென்றேன்

துயரே ஆனாலும் இறைவா
துணை நீ இருந்தால் போதும்

பிரார்த்தனையால் தாங்கிப் பிடிக்க
பெற்றோரும் பெற்ற மக்களும்

உடன்பிறப்புகளும் கொண்டவனும்
உற்றவர்கள் சூழ மற்ற நட்பும்

எனக்காக உனைவேண்ட
எம் வேண்டுதல் ஏற்பாய்

எல்லாம் வல்ல நாயனே
போற்றுகிறேன் உனை!!Post Comment

டிரங்குப்பெட்டி - 23

நட்சத்திரங்கள் - எல்லாருக்கும் உவப்பான ஒன்று.  விண்வெளியில் எண்ணிக்கையிலடங்கா நட்சத்திரங்கள் உள்ளன.  ஒரு விண்மீன் தோன்றிய இளம்பருவத்தில் protostar என்று பெயர். வளர்ந்து, முழுவீச்சில் ஒளிவீசும் பருவத்தில் “main sequence star" என்றறியப்படும். (நமது சூரியன் இப்போது இப்பருவத்தில்தான் உள்ளது!!) பின்னர் அவற்றிலுள்ள வாயுக்கள் எரிந்துமுடியும்போது ஒளியிழக்கும். அது red giants, white dwarfs, black dwarfs என்று பல கட்டங்களாக நடந்து, முடிவில் வெறும் கரும்புள்ளிகளாக மாறிவிடும்.

நட்சத்திரங்களின் வாழ்வு, தாழ்வில் அவற்றின் நிறை (mass) முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான நிறை உள்ள விண்மீன்கள், பல பில்லியன்கள் அல்லது ட்ரில்லியன் கணக்கான வருடங்கள் வாழ்ந்து ஒளிவீசி, பின்னர் மேலே சொன்ன நிலைகளில் வரிசையாக, மேலும் சில பில்லியன் வருடங்களில் மெதுவாக மரணத்தைத் தழுவவும். அதுவே, மிக அதிக நிறை  கொண்ட நட்சத்திரங்கள் என்றால்,  “main sequence star"  என்ற நிலையை அதிவேக வளர்ச்சியில் அடைந்து, பின் அதைவிட வேகமாக வெடித்து கருந்துளைகளாகிவிடும்.

நட்சத்திரத்திற்கு அதிக நிறை, விரைவில் அழிவு தரும்.  மனிதனுக்கு (தலைக்) கனம்.
                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

மரணம் என்றதும், ‘தி ஹிந்து’வில் படித்த ஒரு டாக்டரின் கட்டுரை  நினைவுக்கு வருகிறது.  பண்டைய காலத்தில், ஒருவர் இறந்துவிட்டார் என்று உறுதிசெய்வதற்கு கிரேக்கர்கள் மூன்று நாட்கள் காத்திருப்பார்களாம்-  பிணத்துடன். ரோமானியர்கள் ஒன்பது நாட்கள். இந்தியாவில், இறந்தவரின் விரலை அறுத்துப் பார்க்கும் பழக்கமும், நெற்றியில் நெய்யை வைத்து, அது உருகுகிறதா என்று பார்க்கும் பழக்கமும் இருந்ததாம். அப்போதைய அறிஞர் ஒருவர் கூறியுள்ளார்: ”மனிதனின் திறனாய்வுப் பண்பு, மரணத்தைக் கூட முடிவு செய்யமுடியாதபடிக்கு ஐயப்பாடுடையதாக உள்ளது!!”

இன்றைய காலத்தில் மிகச்சில ஆண்டுகள் இடைவெளியில் “மரணம்” என்பதன் அர்த்தமும் மாறியுள்ளது. முன்பு மரணம் என்பது, “மூச்சு நிற்பதைக்” குறிக்கும். மனிதன் ’இறந்த’ பின்பும் வாழ வைக்கும் வெண்டிலேட்டர்கள் போன்ற கருவிகள் வந்தபின் மரணத்தின் வரையறையும் மாறிவிட்டது. எனினும், நிஜ மரணம் என்பது ஒரு கரு உருக்கொண்ட நாள் முதலேதொடங்கி எல்லா செல்களிலும் இடைவிடாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் (continuous ongoing process) ஒரு செயல்பாடாம்.

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
 

தமிழகத்திற்குக் கூவம் மாதிரி, வடக்கே அரசியல்வாதிகளுக்கு கங்கை!! “கூவத்தை அழகுபடுத்துவோம்” போல “கங்கையைச் சுத்தப்படுத்துவோம்”னு தேர்தலுக்கு தேர்தல் அறிக்கைகள் அங்கே ஜகஜம். கடேசில ஒரு வழியா இதுக்குன்னு 2009-ல் ஒரு ஆணைக்குழு (NGRBA) தொடங்கிட்டாங்க. அப்புறம் என்னாச்சுன்னு ஆர்வமாக்(!!) கேப்பீங்க. என்ன ஆகும்? வழக்கம்போலத்தான். மொத்தத் திட்டத்தொகையான 1.556 பில்லியன் டாலரில், 2011-ல் உலக வங்கியிலருந்து 1 பில்லியன் டாலர் கடன் வாங்கி, அதுல 6000 கோடி ரூபாயும் செலவழிச்சாச்சு. ஆனா,  செலவழிச்சு என்ன செஞ்சாய்ங்கன்னுதான் தெரீலை. ஏன்னா, கங்கையின் நிலைமை அப்படியேதான் இருக்கிறது.

இந்த ஆணைக்குழுவின் செயல்பாடுகளைக் கண்டித்து, முன்னாள் ஐஐடி பேராசிரியராகவும், மத்திய சுற்றுச்சூழல் சீர்கேடுக் கட்டுப்பாட்டு கழகத்திலும் (CPCB)முக்கிய பொறுப்பிலுமிருந்த, 80-வயதாகும் சாது ஒருவர் ஜனவரி 15 முதல் மார்ச் 23-வரை உண்ணாவிரதமிருந்தார்.  பிறகு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளின்பேரில் உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதற்காகவே 35-வயது சுவாமி நிகமானந்தா என்பவர் 115 நாட்கள் உண்ணாவிரதமிருந்தே இறந்துபோனார். அச்சமயம் (ஜூன் 2011)  நடந்த பாபா ராம்தேவின் உண்ணாவிரத அலம்பலில் இச்செய்தி வெளியே வரவேயில்லை!!

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

நம்ம தமிழ் சினிமாக்களின் லாஜிக்குகளில் ஒன்று, நல்லா இருக்கிற ஹீரோவுக்கு தற்செயலாக விபத்தில் தலையில் அடிபட்டதும் எல்லாம் மறந்துபோகும். அப்புறம் கிளைமேக்ஸில, வில்லன் ஹீரோவின் தலையில் அடிச்சதும் பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடும்.

நிஜமாவே கிட்டத்தட்ட அதேசாயலில் ஒரு சம்பவம் நடந்திருக்கு. அமெரிக்காவில் நடந்த ஒரு திருட்டு சம்பவத்தில், திருடர்கள் ஒருவரை பலமாகத் தலையில் தாக்கினர். 41 வயதான அவருக்கு, அதற்குப் பின சரளமாகக் கணக்குப் பாடம் வருகிறதாம். Mathematical formulas-களில் புகுந்து விளையாடுகிறாராம்.  அவரது மூளையில் அடிபட்ட இடங்கள் செயலிழந்துபோனதால், அதைச் சமப்படுத்த வழக்கமாக மூளையின் யாரும் பயன்படுத்தாத இடங்களைத் தானே தூண்டிவிட்டுள்ளதால் இது சாத்தியப்பட்டுள்ளது என்று மருத்துவர்கள் விளக்குகின்றனர்.  உதாரணமாக, கண் தெரியாதவர்களுக்கு, அதைச் சமப்படுத்த மற்ற புலன்கள் கூடுதல் தெளிவாக இருப்பதைப் போல.
ஆமா, இதனாலத்தான் ஏதாவது புரியலன்னா, ”சுவத்துலத்தான் முட்டிக்கணும்”னு சொல்வாங்களோ??!!

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}

நடுத்தர வயதைத் தாண்டிய சிலரிடம் வயசைக் கேட்டீங்கன்னா, ”உடம்புக்குத்தான் வயசாச்சு; மனசு இன்னும் இளமையாத்தான் இருக்கு” என்பார்கள். அப்படின்னா உண்மையிலேயே மனசுக்கு வயசாகாதா? ஒரு விஷயத்தை/செயலை/பிரச்னையை, ஒருவர் 18 வயதில் பார்த்த பார்வைக்கும், 40-வயதில் பார்க்கும் பார்வைக்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்கிறது? வயதாகும்போது, உடல் தளர்ந்து போகிறது; ஆனால், மனம் “முதிர்ச்சி” அல்லவா அடைகிறது? இளைய பருவத்தில் இல்லாத நிதானமும், விவேகமும் வயதாக ஆகத்தானே வருகிறது. அப்புறம் என்ன ”as young as 18” என்று வெற்றுப்பெருமை என்றுதான் தோன்றுகிறது.

                                                     {}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
தத்துவம்:


என்னதான் பெரீய்ய படிப்பெல்லாம் படிச்சாலும், ஆப்பீஸ்ல கைநாட்டுதான் வைக்கோணும் - finger-print attendance machine #காலச்சக்கரம் சுழல்கிறது!!

Post Comment

ரீ-ஸைக்ளிங்கும், பழைய இரும்புச்சாமானும்
புதாபியின் நீலாங்கரையான அல்-பத்தீன் ஏரியா.

விதவிதமான வடிவங்கள், அமைப்புகள், நிறங்களில் பெரிய பெரிய பங்களாக்கள்.  பிரமிப்பு தரும் பிரமாண்டம!! வாயிற்கதவினூடே தெரியும் தோட்டங்களும் பச்சைப் பசேலென்று இருக்கும். பெரும்பாலும் இந்நாட்டு குடிமக்களும், ஆங்கிலேயே ஐரோப்பிய மக்களுமே இங்கு வசிக்கின்றனர். சில நிறுவனங்களில் உயர்பதவியில் இருக்கும் சில இந்தியர்களும் இங்கு உண்டு. ஒவ்வொரு வீட்டின் முன்னும் குறைந்தது இரண்டு பெரிய கார்களாவது நிற்கும். சில கார்களின்பின் ஒரு சிறுபடகும் இழுவையின் மூலம் மாட்டப்பட்டிருக்கும்.

அந்த பகட்டுக்கு ஒவ்வாத உருவமாக, கரீம்பாய் தனது மெலிந்த சரீரத்துடன், கட்டிடப் பணியாளருக்கேயான நீலநிற யூனிஃபார்ம் உடையில்,  கையில் கனத்த பெரிய கீஸுடன் அடுத்த குப்பைத் தொட்டி நோக்கி நடந்தார். அதைக் கிளறி, அதில் கிடக்கும் காலியான குளிர்பான டின்களைச் சேகரித்து வெளியே எடுத்தார்; ஒவ்வொன்றாகக் காலின் கீழ் வைத்து மிதித்து நசுக்கி, கீஸ் (பிளாஸ்டிக் பை) உள்ளே போட்டார்.  நசுக்காமல் முழுதாகப் போட்டால் கவரில் இடம் போதாமல் போய்விடும்.

அந்த ஏரியாவில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள் ஒன்றில் கட்டிட வேலை பார்க்கிறார் கரீம்பாய். காலை ஏழு மணிக்குத் தொடங்கும் பணிக்கு, ஐந்தரை மணிக்கே கம்பெனி பஸ் கொண்டுவந்து இறக்கிவிடும். பலப்பல சைட்களில் பணியாளர்களை இறக்கிவிட வேண்டியிருப்பதால் இப்படி சீக்கிரமே வந்துவிட வேண்டும்.

சக பணியாளர்கள், கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் துண்டையோ, பேப்பரையோ விரித்து, விட்ட தூக்கத்தைத் தொடர்ந்துகொண்டிருக்க, இவர் அந்நேரத்தில் ‘பார்ட்-டைம்’ ஜாப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்தக் காலி டின்களைச் சேகரித்து வைத்து, சைட்டில் பழைய இரும்பு சாமான்கள் எடுக்க பிக்-அப் வண்டி கொண்டுவரும் பாக்கிஸ்தானியிடம் கொடுத்தால், எடையைப் பொறுத்து,  அஞ்சோ, பத்தோ திர்ஹம்கள் கிடைக்கும். இந்தியப் பணத்துக்கு, அம்பது, நூறு ரூபாய் கிடைக்குமே!! அப்போ ‘பார்ட்-டைம்’ ஜாப் தானே இது?

ஏழு மணி வரையிலும் இதைச் செய்யலாம் . பின் கட்டிட வேலை தொடங்கும். கரீம் பாய், கையிலிருக்கும் கீஸைப் பார்த்தார். ”ரொம்ப அழுக்கா இருக்கு. கிழியவேற ஆரம்பிச்சுட்டுது. வெள்ளிக்கிழம கடைக்குப் போவும்போது, இதவிடப் பெரிய கீஸ் ஒண்ணு கேட்டு எடுத்துட்டு வரணுன்னு எப்பவும் நினைக்கதுதான். எழவு மறந்துல்ல  தொலையுது.” சலித்துக் கொண்டார்.

அடுத்த குப்பைத் தொட்டியை அடையுமுன், வழியிலேயே அங்கொன்றும், இங்கொன்றுமாக டின்கள் கிடந்ததை எடுத்துக் கொண்டார். ”இளந்தாரிப் பயலுவ குடிச்சுட்டு ரோட்டில போட்டுட்டு போயிருக்கானுவளாருக்கும். குப்பைத் தொட்டி பக்கத்துல இருந்தும் கொண்டு போட என்னா வருத்தம்?” நினைத்துக் கொண்டே நடந்தார். இந்தக் குப்பைத் தொட்டியில் அவ்வளவாக காலி டின்கள் இல்லை. ”இப்பத்தான் பெப்ஸி, கோக்கெல்லாம் குடிக்காதீய. ஒடம்புக்கு நல்லதில்லன்னு பெரச்சாரம் பண்றாவளாமே. எல்லாரும் கேட்டுக்கிட்டாவ போல. அதான் இப்பல்லாம் நெறய கெடைக்க மாட்டுக்குது.”


டாடி, எங்க ஸ்கூல்ல இன்னிக்கு ”ரீ-சைக்ளிங் டே” அப்ஸர்வ் பண்றோம்.” மகள் கொஞ்சிக்கொண்டே காதர் பாஷாவின் அருகில் வந்தமர்ந்தாள்.

காதர் பாஷா அல்-பத்தீனில் வில்லாவில் (பங்களா) தங்கியிருக்கிறார். நகரில் ஒரு பெட்ரோலிய நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர். அதன் பலன்களில் சில,  இந்த வில்லாவும், இண்டர்நேஷனல் பள்ளியில் பிள்ளைகளின் படிப்பும். காலை வேளைகளில் வீட்டுத் தோட்டத்தில் சிறு உடற்பயிற்சிகள் செய்துவிட்டு, அங்கேயே அமர்ந்து பேப்பர் படிப்பது அவர் வழக்கம். பத்தாவது படிக்கும் மகள் இந்நேரம் இந்தப் பக்கம் வருவது அரிதிலும் அரிது.

“அதுக்கென்னம்மா செய்யணும்? பணம் எதுவும் கொடுக்கணுமா? ப்ரோக்ராம் வச்சிருக்கீங்களா? ட்ரஸ் வாங்கணுமா?

“ஓ டாட்!! திஸ் இஸ் நாட் அவர் கல்ச்சுரல் டே டு டூ ப்ரோக்ராம்ஸ்! திஸ் இஸ் ரீ-ஸைக்ளிங், யூ நோ?” சிணுங்கினாள்.

“எனக்கென்னம்மா தெரியும்? அதுக்கு நான் என்ன செய்யணுன்னு சொல்லு? நீ அவசியமில்லாம என்கிட்ட இதெல்லாம் சொல்லமாட்டியே? உன் உம்மாகிட்ட சொல்லி நடக்கலன்னாதானே என்கிட்ட வருவ?”

“ஸோ கூல் டாட்!! யூ நோ மீ பெட்டர் தேன் மாம்!! “ரீ-சைக்ளிங் டே”வுக்கு, நாங்க எல்லாரும் ஆளுக்கொரு கவர்ல யூஸ்ட் பிளாஸ்டிக் பாட்டில்ஸ் ஆர்  கேன்ஸ் கொண்டு போணுமாம். ஸ்கூல் வில் கலக்ட் இட் அண்ட் கிவ் தெம் டு த ரீ-சைக்ளிங் கம்பெனி.”

“சரிம்மா. அதான் நம்ம வீட்டிலயே தண்ணி பாட்டில்கள், உன் தம்பி குடிக்கிற மவுண்டன் டியூ கேன்கள், நீ மணிக்கொருதரம் குடிப்பியே அந்த கோக் கேன்களச் சேத்தாலே நாலு கூடை வருமே?”

“ஓ டாட்! பட் ஐ வாண்ட் டு டேக் தெம் நவ், டுடே டு ஸ்கூல். இப்ப உடனே எங்கருந்து அவ்வளவு கேன்ஸ் கிடைக்கும்? மம்மி நேத்தே மெய்ட் சர்வண்ட்கிட்ட சொல்லி எல்லா டஸ்ட் பின்ஸையும் காலி பண்ணிட்டாங்க.”

“டெல் மீ வாட் யூ வாண்ட் எக்ஸாக்ட்லி?” அவள் பாஷைக்கே மாறினார்.

“நத்திங் டாட். இட்ஸ் ஆல்ரெடி 6.15 நவ். 7 ஓ க்ளாக் ஸ்கூல் பஸ் வந்துடும். ஸோ, வாட் ஐ சஜஸ்ட் இஸ், ஐ வில் பை அ பாக்ஸ் ஆஃப் கோக் கேன்ஸ் அண்ட் ஸ்பில் அவுட் த கன்டென்ட்ஸ் அண்ட் கிவ் டு மை டீச்சர். தட்ஸ் வாட் மை ஃப்ரண்ட்ஸ் ஆர் ஆல்ஸோ கோயிங் டு டூ. பட் மம்மி இஸ் அப்ஜெக்டிங் திஸ்.”

காதர் பாஷா பதில்சொல்லாமல் எழுந்து கிரில்கதவருகில் நின்று வெளியே பார்த்தார். ஒரு பெட்டி நிறைய கேன்களை குளிர்பானத்தோடு வாங்கி கீழே கொட்டிவிட்டு, காலி கேன்களை கொடுக்க நினைக்கும் மகள்!! தனது  வறுமையான இளமையை நினைத்து அவர் மனம் நொந்தது.

ரீம் பாய் நடந்துகொண்டிருந்தார். வேர்வை வழிந்து சட்டையெல்லாம் நனைந்து விட்டது. ’கோடை தொடங்கமுன்னயே இப்படி வெயிலடிக்குதே!!’  ஒரு பை நிறைந்து, இரண்டாவது பையும் அரைவாசி ஆகிவிட்டது. அப்படியே வேலை செய்யும் கட்டிடத்தின் திசையில் போனார். கிடைப்பதை எடுத்துக் கொண்டு போய்ச் சேர்ந்தால், ஒரு அஞ்சு நிமிஷம் ரெஸ்ட் கிடைக்கும்.  காண்ட்ராக்டரின் சூபர்வைசர் வந்துவிட்டால் நிற்க விடமாட்டார். கோடை தொடங்கும் அடுத்த மாதத்திலிருந்து மதியம் மூன்று மணிநேரம் கட்டாய ரெஸ்ட் கொடுக்கவேண்டுமென்று அரசாங்க உத்தரவாம். வழக்கமா ரெண்டு மாசந்தான் இந்த ரெஸ்ட். அப்போ இன்னும் கொஞ்சம் சேத்துப் பாத்துக்கலாம். ஆனா, இந்த வருஷம் நோன்பும் கோடையிலதான்  வர்றதுனால, ரொம்ப அலையமுடியுமோ என்னவோ. 

ரீம்பாய் காலி டின்னை நசுக்கிப் பையில் போடுவதை, வீட்டு கேட்டில் நின்றிருந்த   காதர்பாஷா பார்த்தார். ‘பார்த்தால் இந்தியரென்று தெரிகிறது. மலையாளியாக இருக்குமோ’வென்று  எண்ணிக்கொண்டே அவரைச் சைகையால் அழைத்தார். “எவிடயா ஸ்தலம் நாட்டில?” கேட்க, அவர் தடுமாறி, “தமிழ்நாடானு” என்றார்.

“அட தமிழ்தானா!! நானும் தமிழ்தான். சரி, கையில என்னது?”

“அது.. இல்ல.. சும்மா இருக்க நேரத்துல.. இதச் சேத்துக் கொடுத்தா.. கொஞ்சம் காசு.. “

“எவ்ளோ கிடைக்கும்?”

“அது என்னத்த.. பத்து திர்கம் கெடச்சாப் பெரிசு!”

காதர்பாஷா உள்ளே திரும்பி மகளைப் பார்த்தார். பின் கரீம்பாயிடம் “இன்னிக்கு நான் வாங்கிக்கிறேன்” என்றார்.

Post Comment