Pages

டிரங்குப் பொட்டி - 13
 
 
  எங்கே இந்த வாரம் பதிவெழுத முடியாமலே போயிடுமோன்னு கலங்கியிருந்தேன்... நல்லவேளை நேரம் கிடைச்சிடுச்சு, ஜென்ம சாபல்யம்!!


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

முந்தைய வாரம் பெருநாளை ஒட்டி கிடைச்ச ஒரு வாரம் லீவைக் குறி வச்சு, நானும் ரெண்டு தங்கைகளும் வீடு மாறினோம். மூணு வீடு மாற்றுதல்கள், நடுவிலே பெருநாள் - உறவினர் வருகைன்னு பெண்டு கழண்டு போச்சு. எப்படா ஆஃபீஸ் வந்து ஹப்பாடான்னு ரெஸ்ட் எடுப்போம்னு ஆகிப்போச்சு (இப்ப சிலருக்கு ஒரு நக்கல் புன்னகை அரும்பும் பாருங்க..). என் ரங்ஸோ, ரெண்டு நாள் லீவு போட்டு நிம்மதியா வீட்ல தூங்கி முழிக்கப் போவதாச் சொல்லி...கிட்டேயிருக்கார் (இப்ப சிலருக்கு இனப்பாசம் பொங்கும்; மீசை துடிக்கும்...)

ஆனா, கொடுமை கொடுமைன்னு கோயிலுக்குப் போனா... கதையா, ஆஃபீஸுக்கு வந்தா அங்கயும் அதிசயமா வேலை..வேலை.. வேலை.. பதிவுகூடப் போட முடியாம.. எப்படியோ சமாளிச்சு எழுதிட்டம்ல... வீட்டுக்கு இன்னும் நெட் கனெக்‌ஷன் வரல.. எதிசலாத்தோட (தொலை தொடர்பு நிறுவனம்) தகராறு.. நாம தகராறு பண்ணாத இடமே இல்லை போல.. வாசகர் கடிதம் எழுதட்டான்னு கேட்டா, “பேசாமப் போயிடு. இதென்ன குப்பைத்தொட்டி, தெரு விளக்கு மேட்டர்னு நினைச்சியா? அதெல்லாம் நானே பாத்துக்குவேன்”னு மிரட்டறார். நல்லதுக்கு காலம் இல்லை. முதல்ல இவரைப் பத்தி ஒரு வாசகர் கடிதம் எழுதணும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+


ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி... தெரிஞ்ச விஷயம்தான்... அரசியல்வாதிகள் இதில இருக்குறது ஆச்சர்யமோ, அதிர்ச்சியோ இல்லை. ஆனா பத்திரிகையாளர்களும் இருக்காங்கங்கிறதுதான் அதிர்ச்சியா இருக்கு. அதுவும், நானெல்லாம் மிகவும் மதிப்போட பார்த்த பர்கா தத் கூடன்னு நினைக்கும்போது நெஞ்சு குமுறுது. 

இந்திய நதிநீர் இணைப்புக்கு தேவை ஒரு லட்சம் கோடிதான்னு அப்ப சொன்னாங்க. (அப்ப, ஒரு லட்சம் கோடியான்னு வாயப் பிளந்தேன்; இப்ப ஒரு லட்சம் கோடிதானாம்னு ஆகிடுச்சு!!) அந்த 76-ஐ எடுத்துகிட்டு, ஒண்ணை மட்டும் தேத்திக் கொடுத்திடுங்களேன் ராஸா, புண்ணியமாப் போகும்!!

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

http://www.youtube.com/watch?v=zO5eoEzRlOI&feature=related


இந்த லிங்கைப் பாருங்க. பொதுவா இந்தியர்கள்தான் மேற்கத்திய இசைகளைக் விரும்புவதாக/காப்பியடிப்பதாகச் சொல்வதுண்டு. ஆனா, இங்கே நம்ம “பல்லேலக்கா”வை இவங்க பாடுற அழகைக் கேட்டா... அதுவும் நல்லாத்தானிருக்கு. இது ஒண்ணு மட்டுமில்லை, இதுபோல நிறைய ட்ரூப்கள் பல்லேலக்காவைப் பின்றது யூ-ட்யூப்ல கொட்டிக் கிடக்குது.

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

ஒருவர்  ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிவதற்கு அவரின் உடல் மெலிவே முதல் அடையாளமாக இருக்கும். ஆனால், அப்படியொருவர்  “ஆணழகராக”  (கட்டுமஸ்தான உடல் உடையவராக) ஆக முடியுமா? மணிப்பூரைச் சேர்ந்த பிரதீப் குமார் சிங்கின் போதைப் பழக்கம் 2000-த்தில் ஹெச்.ஐ.வி. தந்தது.  ஆனால், அவர் மன உறுதியோடு போராடியதில், 2007-ம் ஆண்டு, மிஸ்டர். மணிப்பூர் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  “ஹெச். ஐ.வி. கொல்லுவதில்லை. சமூகப் புறக்கணிப்பே கொல்கிறது” என்கிறார் இவர். பாடமாக இருக்கட்டும் இவர் வாழ்க்கை.


=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+

கோழியா, முட்டையா - எது முதல்லங்கிற மில்லியன் டாலர் கேள்வி ஒரு வழியா முடிவுக்கு வந்துடுச்சு. சமீபத்துல விஞ்ஞானிகள் முட்டையின் ஓடு உருவாகத் தேவையான Ovocledidin-17 என்ற புரோட்டீன், கோழியின் சினைப்பையில் மட்டுமே காணப்படும் என்பதால் கோழிதான் முதலில் வந்திருக்க வேண்டும் என்று உறுதிபடுத்தியுள்ளனர்.

பரிணாமவாதிகளுக்கு உதவுமா இச்செய்தி? :-))))
  
 
 

Post Comment

பாத்துக்கோ.. நானும் ரவுடிதாம்லேய்....!!
 
  
1990களின் ஆரம்பம்.. கல்லூரிக் காலம்.. ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும் காலம். மகளிர் முன்னேற்ற கூட்டங்களிலெல்லாம் பங்கு பெறுமளவு துடிப்பான மாணவி... அப்போவெல்லாம் ஒரு விளம்பரம் வரும், ஏதோ ஒரு வங்கியினுடையது. “மகன்களின் படிப்புக்காகவும், மகள்களின் கல்யாணத்திற்காகவும் சேமியுங்கள்” என்று சொல்லும் விளம்பரம். ”அதென்ன பசங்கதான் படிக்கணுமா, பொண்ணுங்களுக்குச் செலவு பண்ணி படிக்க வைக்கக்கூடாதா!!”ன்னு நம்ம கதாநாயகிக்கு அப்படியே ரத்தம் கொதிக்குது.. உணர்ச்சி பொங்குது.. எதாச்சும் செய்யணும்.. என்ன செய்யலாம்... எடுத்தாள் அந்த வலிமையான ஆயுதத்தை.. அதாங்க பேனாவை.. வடித்தாள் உணர்வைக் காகிதத்தில் கடிதமாக.. அனுப்பினாள் சமுதாயத்தின் தூண்களில் ஒன்றுக்கு... அதாங்க பத்திரிகைக்கு.. அந்தக் கடிதமும் பிரசுரிக்கப்பட்டு,  பரிசாக நூறோ நூற்றைம்பதோ கூடக் கிடைத்தது.  தன் குறிக்கோளில் முழுதாக வெற்றி பெற்றதுபோலவே பெருமிதம் கொண்டாள் அந்தப் பேதை!! இப்படித்தான் துவக்கப் புள்ளி வைக்கப்பட்டது  அவளது எழுத்துக் கோலத்திற்கு!!

ஆரம்பப் புள்ளி வச்சாலும், கோலம்  வரையத் தெரியாததால.. சே.. சே.. அந்தப் பேதைக்கு எழுத்துல ஆர்வம் இருந்தாலும், என்ன எழுத எப்படி எழுதன்னு தெரியாததாலும், அப்புறம் படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு பிஸியாகிட்டதாலும் ஒரு ‘ஃபுல்-ஸ்டாப்’ விழுந்து, கிளி அபுதாபிக்கு பறந்துடுச்சு.

ஆனாலும், அவளுக்கு கையில் அரிப்பு இருந்துகிட்டே இருந்துது. அட.. சொறியெல்லாம் இல்லை... இருந்தாலும் சரியான வழிகாட்டுதல்கள் இல்லாததால் வெறுமே (செய்தித்தாட்களை) வாசிக்க மட்டும் செய்துகொண்டு இருந்தாள். அப்படியும் சொல்லலாம், அல்லது, இவ எழுதினா அதைப் பிரசுரிக்குற அளவு ’முற்போக்குப்’ பத்திரிகை எதுவும் இல்லைன்னும் சொல்லலாம். #தன்னடக்கம்.

இப்படியே போய்ட்டிருக்கும்போது, அவ மனசுல இருந்த சமூக ஆர்வலர் முழிச்சுகிட்டா. வீட்டைச் சுற்றி இருக்கும் சில சுற்றுப்புறப் பிரச்னைகள் அவளைத் தூண்டிவிட்டன. நம்மூரா இருந்தா, முனிசிபாலிட்டிக்கு ஃபோன் பண்ணி மிரட்டலாம்; அல்லது அங்குள்ளப் பணியாளர்களைக் கொஞ்சம் ‘கவனிச்சா’ சுற்றுப்புறம் சுத்தமாகும். இங்கே அபுதாபியில அதுக்கெல்லாம் வழியிருக்க மாதிரித் தெரியலன்னாலும், விட்டுட முடியுமா? மறுபடியும் எடுத்தா அதே ஆயுதத்தை.. அதேதான் வாசகர் கடிதம் எழுதினா செய்தித்தாளுக்கு!! பிரசுரமும் ஆச்சு, நடவடிக்கையும் இருந்துது!!

அப்புறமென்ன, ருசி கண்டாச்சு!! ஆ, ஊன்னா உடனே நம்ம கலைஞர் எழுதின மாதிரி கடிதம் எழுத ஆரம்பிச்சாச்சு. இப்படியே போயிட்டிருக்கும்போது, அந்தப் பத்திரிகைக்காரங்க அபுதாபி அரசாங்கத்துகிட்டே‘இப்படி ஒரு அம்மா, புகார் எழுதியே நேரத்தைக் கழிக்குது. இவங்க கடிதத்துக்குன்னே நாங்க தனி பக்கம் ஒதுக்கணும் போலருக்கு. கொஞ்சம் என்னான்னு பாருங்க’ அப்படின்னு முறையிட்டிருப்பாங்க போல, உடனே அவங்களும் உடனே நம்ம மனுநீதிச் சோழன் மணி கட்டி வச்ச மாதிரி,  அபுதாபியில் என்ன குறையிருந்தாலும் உடனே கூப்பிடுங்கன்னு ஒரு ‘இலவசத் தொலைபேசி எண்’ணை அறிவிச்சாங்க.

இலவசம்னா விடுவோமா, உடனே அங்கயும் அடிக்கடி ஃபோன் பண்ண ஆரம்பிச்சாச்சு. ஒரு வாரம் ஃபோன் பண்ணலைன்னாலும், “என்ன நாலு நாளா ஃபோனே பண்ணலை? உடம்பு சரியில்லியா?” அப்படின்னு அவங்களே கேக்கிற அளவுக்கு ஆகிடுச்சு!! இப்படி இருக்கும்போது, அவங்க ரங்ஸ் ஒருநாள் “நீ இப்படி அபுதாபியில இருந்துகிட்டே, அது சரியில்ல, இது சரியில்லன்னு புகார் பண்ணிகிட்டே இரு. ஒருநாளில்லைன்னா ஒரு நா உன்னைத் தூக்கி உள்ள வைக்கப் போறாங்க பாரு!!” அப்படின்னு சொன்னார் (மிரட்டினார்?). அதுலருந்து அந்த மடந்தை கொஞ்சம் சுதாரிச்சுகிட்டு, பிளாக் ஆரம்பிச்சு, அதில மட்டும் குறை சொல்லிகிட்டு இருக்காங்க. (சே.. சே.. அதிகார வர்க்கத்தைக் கண்டு பயமெல்லாம் இல்லை.. இந்த ஊர்ல ‘உள்ள’ போட்டா, எநத ஊர் ஜெயில்னு கண்டுபிடிக்கவே மாசக்கணக்காகிடும். இதான் சான்ஸ்னு ரங்க்ஸே போட்டுக் கொடுத்துட்டு  நடையைக் கட்டிட்டாருன்னா? அவரை நிம்மதியா இருக்க விடலாமாங்கிற நல்லெண்ணம்தான்)

எல்லாரும் கதை எழுதுனாங்க, கவிதை வடிச்சாங்க, புக் போட்டாங்க. நீயென்ன போயும் போயும் வாசகர் கடிதங்கள் எழுதுனதைப் பெரிய பெருமையாச் சொல்லிகிட்டுருக்கே?ன்னு கேக்கிறீங்க, தெரியுது. எனக்கு இந்த கதை, கவிதை, கற்பனைன்னு பொய் சொல்லத் தெரியாது.  அதனாலத்தான், சுற்றுப்புறத்தில் உள்ளவைகளை  ‘உள்ளது உள்ளபடி’ சொல்லவேண்டிய இடத்தில் சொன்னேன். இதனால் என்ன பயன்கள்னா, எங்க ஏரியாவுல இன்னும் ரெண்டு குப்பைத் தொட்டி வைக்க வச்சது, நாலு தெருநாய்களைப் பிடிக்க வைச்சது, எங்க வீட்டுல ரொம்ப நாளா இருந்த சில ரிப்பேர்களை ஓடிவந்து ஒரே நாள்ல சரிசெய்ய வைச்சது இதைத்தான் சொல்லமுடியும். சரி, எழுத்தாளர்கள் மட்டும் என்ன சாதிச்சாங்க சொல்லுங்க? பிரபலமாயிருக்கவங்களுக்கே ஒரு சினிமா டிக்கட் கூட ஃபிரீயா கிடைக்கிறதில்லையாம். ;-)))

அது தவிர பள்ளிகளில் நடக்கும் யூனிஃபார்ம் கொள்ளைகள், டியூஷன் கொள்ளைகள், இப்படி என்னையும், சமூகத்தையும் பாதிக்கிற சில விஷயங்களை என்னால் முடிந்த வழியில் சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முனைகிறேன். உடனே இல்லாவிட்டாலும், நிச்சயம் நடவடிக்கைகள் இருக்கும் என்ற நம்பிக்கையில். சமீபத்தில், “And the trees lived ever after happily?" என்று அலுவலகங்களில் நடக்கும் காகித வீணாக்குதல்களைப் பற்றியும் எழுதியிருந்தேன். (பதிவிலும் எழுதிருக்கேன் இதைப் பத்தி). இன்னொரு பத்திரிகையில் என் கருத்து, படத்துடன் இரண்டு முறை வெளிவந்துள்ளது (அதிலொன்று பர்தா குறித்து).

மற்றபடி, நியூஸ் விகடனில் என் கட்டுரை வெளியானதுதான் என் முதல் (இணையப்) பத்திரிகைப் பதிப்பு!! போன ரமதான் பெருநாளின்போது, ரமதான் குறித்த என் பேட்டி ஆஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பானது. நன்றி: தமிழ்ப்பிரியன் & கானா பிரபா. ரமதான் நோன்பைக் குறித்து ஒரு நிகழ்ச்சி வழங்கவேண்டி தமிழ்ப்பிரியனை கானா பிரபா தொடர்பு கொண்டபோது, அவர் என்னை சிபாரிசு செய்தார். இப்படியொரு நல்ல விஷயத்துக்காக தமிழ்ப்பிரியனுக்கு  என் ஞாபகம் வரவைத்த இறைவனுக்கு நன்றி!! என் ஊடகப் பயணம் எனக்குப் பிடித்த முறையில் இஸ்லாம் சம்பந்தப்பட்டதோடு தொடங்கியிருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி!! பேட்டி இங்கே கேளுங்க:போன பெருநாளைப் பேசினதை இப்ப ஏன் சொல்றேன்னா, அடுத்த வாரம் ஹஜ் பெருநாள் வருது; அதுக்கு பேட்டி எடுக்கலாம்னு யாராவது நினைச்சிட்டிருக்கலாம்; இப்ப இதைப் பாத்தா பொருத்தமாயிருக்கலாம்.

இப்ப சொல்லுங்க, நானும் ஜீப்ல ஏறிட்டேனா இல்லையா? என்ன ஒண்ணு, இது வேற சாதாரணப் பேட்டியா இருந்தா, உடனே யாராவது எதிர்வினை, செய்வினை செஞ்சு பெரியாளாகி, என்கவுண்டர்ல போடத் தேடுற அளவு பெரிய ரவுடியாகிருக்கலாம்!! சரி, அதுக்கும் காலம் வராமலாப் போயிடும்!!
 
   

Post Comment

திறந்த வீடு
தலைப்பைப் பாத்துட்டு, பின்நவீனத்துவ பாணியில ஒரு தரமான இலக்கியப் படைப்பு அப்படின்னு நினைச்சுகிட்டு ஆசையா வந்தீங்கன்னா, ஸாரி, அது என் தப்பில்லை; அல்லது, ‘திறந்த வீட்டில நாய் நுழைஞ்ச கதையோ’ அப்படின்னும் விஷமப்புன்னகையோட வந்திருந்ந்தீங்கன்னா, அகெய்ன் ஸாரி, நான் வீட்டைத் திறந்து போடறதேயில்லை!! :-))

அப்ப என்ன இழவுன்னு சொல்லித்தான் தொலையேன்னு சிடுசிடுத்தா, அகெய்ன் அகெய்ன் ஸாரி, இது சிரிக்க மறந்தவர்களுக்கான இடம் இல்லை. அட, கண்டுபிடிச்சுட்டீங்களே, இது வழக்கமான மொக்கைப் பதிவேதான்!! தொடர்ந்து ரெண்டு பதிவு ரொம்ப சீரியஸாப் போயிடுச்சு, நம்ம கடை வழக்கத்தை மீறி!! அதான் உடனே நம்ம  டிரேட் மார்க் மொக்கைப் பதிவு.

சரி, சரி, வள்ளுன்னு பாயறதுக்குள்ளே சொல்லிடுறேன் - திறந்த வீடு = ஓபன் ஹவுஸ்!! (தமிழ்ல தலைப்பு வச்சா,  ஏதோ ஃப்ரீயாமே!! நான் தமிழேண்டா!!) பள்ளிக்கூடத்துல படிக்கிற வயசுல பிள்ளைங்க இருக்க வீடுன்னா நான் என்ன சொல்றேன்னு தெரிஞ்சிருக்கும், யெஸ், பள்ளிக்கூடத்துல நம்ம புள்ளைகளோட அருமை பெருமையெல்லாம் டீச்சர்கள் நம்மகிட்ட விலாவாரியா விளக்கிச் சொல்ற நாள்!! :-(

teachers.saschina.org

என் பெரியவன், சின்னவனா இருக்கும்போதுதான், நானும் இந்த ஓபன் ஹவுஸ்னா என்னன்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவரை நம்ம படிக்கிற காலத்துல ஏது ஓபன்/க்ளோஸ்ட் ஹவுஸெல்லாம்? பள்ளிக்கூடத்துல டீச்சர், “நாளைக்கு வரும்போது அப்பாவைக் கூட்டுட்டு வரணும்” அப்படின்னு சொன்னாலே வயித்தக் கலக்கும். இப்ப, எல்லா பள்ளிகளிலும் அதுக்குன்னு ஒரு நாள்  ஒதுக்கி, மாணவர்களின்  வளர்ச்சியை, முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்துரையாடவும், பெற்றோர்களும் ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து திட்டமிடவும் ஏற்படுத்தப்பட்ட நல்ல திட்டம் இது.

இம்முறை வந்த பிறகு, பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்குமிடையே நல்ல ஒரு புரிதல்(!!) வந்துள்ளது என்றே சொல்லலாம். கற்பிப்பது ஒரு பக்கக் கடமையாக மட்டும் இல்லாமல், இரு தரப்பினரும் அதில் பங்கெடுக்கும் முறை ஏற்பட்டுள்ளது.

பிள்ளைங்க படிப்புல பெருசா மார்க் எடுக்கலைன்னாலும், ரொம்ப கம்ப்ளெயிண்ட் கேக்காம வர்ற பெரும்பாலான பெற்றோர்களுக்கு இது ரொம்பப் பிடிச்ச நாள்! ஆனா, பள்ளியில ஓபன் ஹவுஸுக்குத் தேதி குறிச்சிட்டாலே, எனக்கு கதிகலங்க ஆரம்பிச்சிடும். காரணம் என்  அனுபவங்கள்!!

அன்னிக்கு பள்ளியில கல்யாண மண்டபம் போல கூட்டம் இருக்கும். நல்லா வேடிக்கைப் பாத்து, டென்ஷனை ரிலாக்ஸ் பண்ணிக்கலாம். சில பெற்றோர்கள் நல்லா அழகா ஏதோ கல்யாண வீட்டுக்குப் போறதுபோல ஜகஜ்ஜோதியா வந்திருப்பாங்க. தனியா வரும் அப்பாக்கள் டீச்சர் முன்னாடி பவ்யமா உக்காந்திருக்கதைப் பாத்தாலே, எனக்கு டென்ஷன்லயும் சிரிப்பு வரும். சில பெற்றோர் டீச்சர்கிட்ட ரொம்ப சீரியஸா மணிக்கணக்குல பேசுவாங்க. பாத்தாப் பொறாமையா இருக்கும். ஏன்னா, டீச்சர்ஸ்கிட்ட நான் பேசுறதைவிட, டீச்சர்கள் என்னிடம் “பேசுறதுக்குத்”தான் நிறைய இருக்கும். நான் முதல்ல தர்ற மார்க் ஷீட்ல கையெழுத்துப் போட்டுட்டு, “ஓகே, பை டீச்சர்னு” சட்னு எழுஞ்சிடுவேன். இல்லை, மாட்டினேன் அன்னிக்கு!! என் பிள்ளைங்க அப்படி!!

“நல்லாதான் படிக்கிறான்; ஆனா பாருங்க, கொஞ்சம் பேச்சும், சேட்டையும்தான் ஜாஸ்தி..” இப்படித்தான் எல்லா டீச்சரும் ஆரம்பிப்பாங்க. அதுக்கப்புறம் ஒரு பதினைஞ்சு நிமிஷம் நான்-ஸ்டாப்தான்!! இதுக்குப் பயந்தே கூட்டம் அதிகமா இருக்க சமயத்துல் போவேன். ஹூம்!!

ஒரு சாம்பிள் சொல்றேன் கேளுங்க: பெரியவனை எல்.கே.ஜி. படிக்கும்போது, வேற ஸ்கூல்ல சேத்தோம் (வேலை மாறுதல் காரணமாத்தான், வேற ஒண்ணும் விவகாரமில்ல, நல்லவேளை!) அவன் ஸ்கூல் போன முத நாள், நானும் சின்னப் பையன் என்னச் செய்றானோன்னு கவலைப்பட்டுகிட்டே டீச்சருக்கு ஃபோன் பண்ணேன். நான் இன்னாருன்னு சொன்னதுதான் உண்டு, படபடன்னு பொரிஞ்சாங்க பாருங்க - “எங்கிளாஸ் பசங்க நேத்தி வரைக்கும் நல்ல பசங்களாத்தான் இருந்தாங்க. இன்னிக்கு உங்கப் பையன் வந்ததுதான் வந்தான், கிளாஸே கலவரமாகிப் போய் கிடக்குது”ன்னு புலம்பினாங்க. விட்டா அழுதுடுவாங்க போலருந்துது.

அதுலேருந்து அது ஒரு தொடர்கதையா ஆகிப்போச்சு. அதுக்கப்புறம் ஒரு ஒண்ணுரெண்டு வருஷம் கழிச்சு, எங்க நண்பர் ஒருத்தர் அதே பள்ளியில படிக்கிற தன் மகனைப் பாக்கப் போனவர், எங்கிட்ட திகிலடிச்சுப் போன கண்களோட ஒரு விஷயம் சொன்னார். அதாவது, இவர் போனப்போ, என் பையனை அவங்க டீச்சர் கையில  ஸ்கேலோட துரத்திகிட்டிருந்தாங்களாம்!! அவன் டெஸ்கைச் சுத்திச்சுத்தி வர, அவங்க “ஓடாதே, நில்லு!!”ன்னு கெஞ்சிகிட்டே போறாங்களாம். நான் என்ன சொல்ல? வழிஞ்சுவச்சேன்!!

அதுக்கடுத்த ஓப்பன் ஹவுஸ் நடுங்கிகிட்டே போனா, டீச்சர் அவனைப் பாத்து  ”சொல்லிடவா?” அப்படிங்கிற மாதிரி நக்கலாச் சிரிக்கிறாங்க; அவனும், கீழே குனிஞ்சுகிட்டே கள்ளச்சிரி சிரிச்சுகிட்டு, கண்ணைமட்டும் உசத்தி டீச்சரைப் பாக்கறான். ”டேய் என்னடா நடக்குது இங்கே?”ன்னு நான் கத்தாத குறைதான்!! மெதுவா டீச்சர்கிட்ட என்னாங்கன்னேன். அவங்க அதே சிரிப்போட “ஹி இஸ் ஃபர்ஸ்ட் இன் எவ்ரிதிங்க்” அப்படின்னு பொடி வச்சுப் பேசினாங்க. நானும் புரியாத மாதிரியே, “ஹி..ஹி.. தேங்க் யூ டீச்சர்னு” நீட்டின இடத்துல கையெழுத்துப் போட்டுட்டு ஓடிவந்தேன்.

இப்படியே ஓப்பன் ஹவுஸுகளெல்லாம் நம்ம வாரிசுகளோட பெருமை பறைசாற்ற ஆரம்பிச்சதும், ரங்க்ஸ் அந்த மீட்டிங் இருக்கு, இந்த இன்ஸ்பெக்‌ஷன் இருக்குன்னு மெதுவா கழண்டுக்க ஆரம்பிச்சார். ஒண்ணுரெண்டு ஓப்பன் ஹவுஸுக்குத் தனியாப் போயிட்டு வந்த நான், அப்புறம் ரங்க்ஸ் வந்தாத்தான் போவேன்னு சொல்லிட்டேன். பின்னே, ஈன்ற பொழுதின் பெரிதுவப்பது தாயா மட்டும் இருந்தாப் போதுமா, தந்தைக்கும் அந்தச் “சந்தோஷம்” வேணும்ல? நாங்கல்லாம் சம உரிமை கொடுக்கிறவங்களாக்கும்!! ;-)))

சின்னவன் வந்தப்புறம், சரி இவனாவது நம்ம பேரைக் காப்பாத்துவான்னு நினைச்சேன். யூ.கே.ஜி.ல  டீச்சர் எழுதிப் போடுறதை பாதி எழுதாம வந்திருந்தான் ஒரு நாள். ஏண்டான்னா, ”நுஸ்ரத் கூடப் பேசிகிட்டிருந்தேன். அதான் எழுதலை. ஆனா, வீட்ல வச்சு காப்பி பண்றதுக்கு ஸாராவோட நோட்டை வாங்கிட்டு வந்திருக்கேம்மா”ன்னான் விவரமா!! சரிதான், இவன் அண்ணனையே மிஞ்சிடுவான்னு புரிஞ்சுபோச்சு!! அதுலயும் ஏண்டா கேர்ள்ஸ்கிட்ட நோட்டு வாங்கிட்டு வந்திருக்க, பாய்ஸ் யாரும் உனக்கு ஃபிரண்ட் இல்லையான்னா, “போம்மா; பாய்ஸ் யாருமே நோட் கம்ப்ளீட் பண்ண மாட்டாங்க. கேர்ள்ஸ்தான் நீட்டா எழுதுவாங்க”ங்கிறான்!! அப்பவே!!

நினைச்ச மாதிரியே, இவனுக்கும் ஓப்பன் ஹவுஸ்கள்ல அதே ரிஸல்ட்தான் “Too much talkative and too much active!! but good in studies, so ok!!" ஏதோ இம்மட்டுக்கும் மானத்தைக் காப்பாத்தினானேன்னு சந்தோஷப்பட்டுக்குவேன், வேறென்ன செய்ய?

ஒரு ரெண்டு வாரம் முன்னாடி சொன்னான், “ம்மா, எங்க ஹிந்தி டீச்சர் நான் மட்டும்தான் கிளாஸ்ல கேள்வி கேக்கிறேன்னு சொல்லி, எல்லாரையும் எனக்கு கிளாப் பண்ணச் சொன்னாங்க”ன்னான். அகமகிழ்ந்து போனேன். நேத்து ஓப்பன் ஹவுஸுக்குப் போனப்ப, கிளாஸ் டீச்சர் சொன்ன கம்ப்ளெயிண்ட்ல நானும் ஆதங்கத்தோட, “என்ன டீச்சர் இப்படிச் சொல்றீங்க? ஹிந்தி டீச்சர் இப்படியெல்லாம் பாராட்டியிருக்காங்க இவனை”ன்னு எடுத்துச் சொன்னேன். அவ்வளவுதான், “என்கிட்டயும் அவன் தினமும், ஹிந்தி டீச்சர் இப்படிச் சொன்னாங்களே, நீங்க ஏன் கிளாப் பண்ணச் சொல்ல மாட்டேன்கிறீங்கன்னு படுத்தறான். ஹிந்தி டீச்சர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். அதனால, அவங்க கிளாஸ்ல வேற எதுவும் பேச முடியாது. என் கிளாஸ்லதான் எல்லா விளையாட்டும் நடக்கும்”னு அவங்க புலம்புறாங்க. ஆறுதல் சொல்லிட்டு வந்தேன்!!

என் பிள்ளைகளின் குறும்புகளை ரசித்து, அதே சமயம் தேவையான அளவு கண்டிப்போடும் இருந்து, கேட்கும் கேள்விகளுக்குப் பொறுமையாகப் பதிலளிக்கும் ஆசிரியர்களே இதுவரை பெரும்பாலும் அமைந்ததில் எனக்கும் மகிழ்ச்சி, பிள்ளைகளுக்கும்.

சரி, இப்ப என்னோட முந்தைய சில பதிவுகள்ல, ”என் பிள்ளைங்க அப்பாவைப் போலவே”னு பாராட்டினவங்கல்லாம் எங்கே? வந்து வரிசையா அதை மறுபடியும் சொல்லிட்டுப் போங்க பார்ப்போம்!!

 
  

Post Comment