Pages

Showing posts with label அறியாத வயசு. Show all posts
Showing posts with label அறியாத வயசு. Show all posts

ஓரம்போ.. ஓரம்போ..






டீனேஜ்ங்கிறது 13 லருந்து 19 வயசுவரைதானே? அதாவது எட்டாங்கிளாஸ்லருந்து காலேஜ் ஃபர்ஸ்ட் இயர் வரைக்கும்.  இப்பத்தான் அந்த வயசெல்லாம் ரொம்ப உற்சாகமான வயசு, சிறகடிக்கும் வயசு, பட்டாம்பூச்சி வயசு, ரொம்ப கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும், (அளவோட) சுதந்திரமா விடணும், அவங்க கருத்துக்களையும் கேட்கணும், ஃபிரண்ட்லியாப் பழகணும் அப்படி இப்படின்னு சொல்றாங்க. நான் அந்த வயசுல இருந்தப்போல்லாம் அது ஒரு டெரர் வயசாத்தான் இருந்துது, பொண்ணப் பெத்தவங்களுக்கு!! கிராமத்துல வளர்ந்ததுனால,   உறவினர்கள் தயவால எங்கம்மாவுக்கும் அந்த டெரர் அதிகமாத்தான் இருந்துது . வாப்பாவின் ஆதரவால் தொடர்ந்து படித்தாலும் சிலபல எழுதப்படாத சட்டங்களும் கடைபிடித்தாக வேண்டிய கட்டாயம்.

உள்ளூர்ல சில பள்ளிகள் இருந்தாலும், ஆங்கில வழிப் படிப்புக்காக பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில்தான் படித்தது. அப்போ எங்க தெருவில கார்ப்போரேஷன் குழாய் கிடையாது. அதனால, காலையில பக்கத்துத் தெருக்கள்ல போய் ஒரு ஏழெட்டு குடம் தண்ணி பிடிச்சு வச்சிட்டு,  தெருக்கடைசியில ஓடுற வாய்க்கால்ல குளிச்சு, துணி துவைச்சிட்டு, வந்து சாப்பிட்டுட்டு, சாப்பாடு எடுத்துட்டு ஸ்கூலுக்குப் போகணும். எதில? மாட்டு வண்டியில!! சிரிக்காதீங்க!! பஸ்ல போறேனேன்னு லேசா கேட்டுப் பாத்ததுக்கே,  ”இதுல போய் படிச்சுக் கிழிச்சாப் போதும்”னு வந்த பதில்ல அதுபத்திப் பேசுறதே கிடையாது.

ஏழாங்கிளாஸ் வரை அதில்தான். அதிர்ஷடவசமாக, எட்டாம் வகுப்பில், தந்தையின் நண்பர் ஒருவர் ஒரு வேன் (மாதிரி ஒண்ணு) வாங்கி, ஸ்கூல் டிரிப் அடிக்கப் போவதாகச் சொல்ல, மாட்டு வண்டியிலிருந்து வேனுக்குப் பிரமோஷன் கிடைத்தது.  ஆனால் போன பிறகுதான் தெரிந்தது, அதுக்கு மாட்டு வண்டியே எவ்வளவோ பரவாயில்லைன்னு. பிறகு வாடகை கட்டுப் படியாகாமல் அவரே நிறுத்திவிட, அடுத்து ஆட்டோ பயணம் ஆரம்பித்தது.  அது சுவாரசியமாகவே இருந்தது. ஊரெல்லாம் சுற்றி, ஒவ்வொருத்தர் வீட்டிலும் சென்று பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு, கதை பேசிக் கோண்டே போனதும் சுவாரசியம்தான் என்றாலும்,  ஜனநெருக்கடி அதிகமானது கடுப்பாக இருக்கும். இறங்கும்போது கை, காலை உருவித்தான் எடுத்து வரவேண்டியிருக்கும்.

காலேஜ் வரை இந்த ஆட்டோ பயணம்தான்.  இடையிடையே சில காரணங்களால்,  பஸ் பயணம் வாய்க்கும். பஸ்ஸுக்குக் காத்திருத்தலும், கூட்டத்தில் நசுங்குவதும், வீட்டிலிருந்து பஸ் ஸ்டாண்டிற்கு 15 நிமிடம் நடக்க வேண்டும் என்பதும் அலுப்பைத் தந்தன.  ஆனாலும் அரிதாகவே வாய்த்ததால், பஸ் பயணம் சுவையாகவே இருந்தது.

இதுக்கிடையில எங்க தெருவுக்கும் முனிசிபல் தண்ணிர் விநியோகம் ஆரம்பிச்சதுல தண்ணி எடுக்குற வேலையும் மிச்சமாச்சு. வீட்டிலயே துணி துவைக்கற அளவு தண்ணியும் வந்தது. நேரம் அதிகம் கிடைத்தது. எண்பதுகளின் நடுவில் சென்னைத் தொலைக்காட்சி, கொடைக்கானல் ரிலே மூலம் தென்மாவட்டங்களுக்கும் ஒளிபரப்பு சேவையைத் தொடங்க, அந்த அதிகப்படி நேரம் அதில் செலவழிந்தது.

 படிச்சது கிறிஸ்தவப் பள்ளிகள்ங்கிறதால பைபிள் கதைகளும், துதிப் பாடல்களும் மனப்பாடமாயின. இடையில் இரண்டு வருடம் ஒரு இந்துப் பள்ளியில் படித்ததால் (ஓரளவு) மஹாபாரதமும் கேட்கக் கிடைத்தது. டி.வி.யில் பின்னாளில் மஹாபாரதம் ஒளிபரப்பப்பட்டபோது பார்ப்பவர்களுக்கு நான் முன்கூட்டியே கதையைச் சொல்லி சஸ்பென்சை உடைத்துத் திட்டு வாங்கினேன்!!

பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது, கணக்கு டீச்சர், என்னையும், நல்லா படிக்கும் சில தோழிகளையும், நீங்கல்லாம் எஞ்சினியரிங் போகணும்னா இந்த மார்க்கெல்லாம் காணாது; உங்களுக்குள்ள கோட்டாவில கிடைக்க இந்த மார்க்கெல்லாம் பத்தாது என்று திட்ட, என்னவென்றே புரியாமல் தோழிகளிடம் விசாரித்ததில் FC, BC, MBC, SC எல்லாம் விளக்கினார்கள்.

வேறு ஒன்றும் சுவாரசியமாய் நடக்கவில்லை (நீங்களெல்லாம் எதிர்பார்ப்பதுபோல). எனக்கு வாய்த்த தோழிகளும், ஒரு பூவைப் பார்த்தால் கூட petals, sepal, anther, stamen என்று அதன் அனாட்டமியும், பாட்டனியும் பேசுபவர்களாக அமைந்ததில் நானும் ரொம்பவே நல்ல பிள்ளையாக இருந்துவிட்டேன்!!

இந்த பதிவு என் சிறுவயசு நினைவுகளை ரொம்பவே ஞாபகப்படுத்திவிட்டது.  நன்றி அம்பிகா!! 

Post Comment