Pages

பதினேழாம் வாய்ப்பாடு




சென்ற வாரம் தோனி படம் பார்த்தோம். நல்ல படம். நல்ல மெஸேஜ் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள். அதாவது, மாணவர்களுக்கு விருப்பமானதைப் படிக்க விடுங்கள், திணிக்காதீர்கள் என்று சொல்றாங்க. இதுவரை ஓகே, fine. ஆனால், எல்லாப் பாடங்களிலும் ஒரு அடிப்படை அறிவு என்பது அவசியம்தானே?

உதாரணமாக, ஒரு எஞ்சினியர் தொழிற்சாலைத் தொடங்குகிறார் என்றால், அவருக்குத் தொழிற்நுட்ப அறிவு கண்டிப்பாக வேண்டும். அத்தோடு, ‘மேலாண்மை’, ‘கணக்கியல்’, போன்றவற்றிலும் அடிப்படை அறிவு இருந்தால்தானே தொழிற்சாலையைச் சரியாக நிர்வகிக்க முடியும்? அட, அதுக்குன்னு ஆட்களை நியமிச்சாலுங்கூட, அவர்கள் சொல்லும் கணக்கைப் புரிந்துகொள்ளும் அளவுக்காவது அந்தத் துறைகளைத் தெரிஞ்சு வச்சிருக்கணும்ல?

அதேபோல, ’கணக்கு’ என்கிற பாடம் எல்லா துறைகளுக்கும் அடிப்படை. ஆனால், படத்திலோ மாணவன், அடியோடு அதை வெறுத்து, அதைப் புரிந்துகொள்வதற்குத் துளிகூட முயற்சி எடுக்கவில்லை. எனக்கும் 12-ம் வாய்ப்பாடே திணறத்தான் செய்யும். இன்றைக்கும் வாய்ப்பாடு பயன்படுத்த வேண்டிவந்தால், அதைப் பத்து, பத்தாகப் பிரித்து எளிமைப் படுத்தி பெருக்கி, கூட்டிச் சொல்லத்தான் தெரியுமே தவிர, வாய்ப்பாடுகள் மனப்பாடமாகத் தெரியாது.

படம் முழுதும், பிரகாஷ் ராஜ், செவண்டீன் எய்ட்ஸ் ஆர் எவ்வளவு தெரியுமா என்று பார்ப்பவர்களிடமெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார். எனக்கோ யோவ், அது பைத்தெட்டு எம்பது, ஏழெட்டு அம்பத்தாறு, ஆக நூத்துமுப்பத்தாறு என்று கத்தணும் போல இருந்தது. (17x8 = (10x8) + (7x8) = 136)

கணக்கிலும், அறிவியலிலும் அந்த மாணவன் ஒற்றை இலக்க மதிப்பெண்களே எடுக்கிறான். விளையாட்டில் ஆர்வம் இருக்க வேண்டியதுதான். ஆனால், அடிப்படைப் பாடங்களைத் துறந்துதான் ஆர்வம் காட்ட வேண்டுமென்றில்லை. பாடங்கள், விளையாட்டு இரண்டிலுமே அடிப்படைகளைத் தெரிந்துகொள்ளுமளவுக்காவது ஆர்வம் இருக்க வேண்டும். கணக்கில் ஆர்வம் இருப்பதால், மொழிப் பாடத்தைத் திரும்பிப் பார்க்காமல் இருக்க வேண்டும் என்றில்லை; தமிழ் பிடிக்கும் என்பதால் அறிவியலை ஒதுக்கக் கூடாது. அதே போலத்தான் விளையாட்டும்கூட.

ஒருவேளை கணக்கையும், அறிவியலையும் எளிதாக்கிச் சொல்லித் தரும் ஆசிரியர்கள் அவனுக்கு வாய்க்கவில்லையோ என்னவோ? நல்ல ஆசிரியர்கள் கிடைப்பதும் வரமே. இந்தச் செய்தியையும் படத்தில் தெளிவாகச் சொல்லியிருக்கலாம்.

இன்னொன்றும் சொல்ல வேண்டும். விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும், மாவட்ட, மாநில, தேசிய அணிகளில் சேர்ந்து விளையாட வேண்டுமென்றால், பள்ளி/கல்லூரிகளின் மூலம்தானே எளிதாகச் சேரமுடியும்? அதற்காகவாவது பாஸ் மார்க் எடுக்க வேண்டாமா? ஏன், ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் கல்லூரி சீட், வேலைவாய்ப்புப் பெற வேண்டுமென்றால்கூட, இந்தப் பாடங்களைப் படித்து பாஸ் செய்தால்தானே முடியும்? கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் வரும்போது ஒருவேளை இந்நிலை மாறலாம். ஆனால், தற்போது இந்தக் கல்வித் திட்டத்தைத்தானே பின்பற்றியாக வேண்டும்.

படத்திலோ மாணவன், திமிராகப் பேசுவது சரியெனவேச் சித்தரிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. அதென்ன எப்பப் பாத்தாலும், ‘பிடிக்கலை, பிடிக்கலை’ன்னே சொல்லிகிட்டிருக்கிறான்? ’புரியவில்லை’ என்று சொன்னால், சற்றேனும் ஈடுபாடு இருப்பதாகவும், முயற்சி செய்பவனாகவும் கொள்ளலாம். தன் தந்தை பணத்திற்காகப் படும் கஷ்டங்களை உணர்ந்தவனாகவும் தெரியவில்லை.  இதைப் பார்க்கும் மாணவர்கள் தவறாகவே புரிந்துகொள்வார்கள். என் மகனிடமும் மேற்சொன்ன விஷயங்களை எடுத்துச் சொன்ன பிறகே எனக்கும் நிம்மதி.

நல்லவராகக் காட்டப்படும் ’கோச்’சாவது நிதர்சனங்களை எடுத்துச் சொல்லியிருக்கலாம். தோனின்னா அவ்ளோ உசிரா இருக்கிறவன், தோனியின் புள்ளிவிவரங்களை மனப்பாடம் ஆக்கி வைத்திருக்கிறவன், கிரிக்கெட் உலகின் ஸ்டாராக இருக்கிற இந்த நேரத்திலும், தோனி B.Com. படிப்புக்கானத் தேர்வுகள் எழுதி வருவதையும் தெரிந்து வைத்திருக்கலாம்!!

என்னைப் பொறுத்தவரை, தன் வருமானத்துக்கு மீறீய வகையில் செலவு செய்து பெரிய பள்ளியில் படிக்கவைக்கும் பிரகாஷ் ராஜ்தான் (உடனடியாக) மாறவேண்டியவர். மகனுக்கு ஆர்வம் படிப்பில் இல்லை, கிரிக்கெட்டில்தான் என்று தெரிந்ததும் செலவு குறைந்த (அரசு) பள்ளியில் சேர்த்துவிட்டு, கிரிக்கெட் கோச்சிங்கிற்குச் செலவழித்திருக்க வேண்டும். படத்தில் இதை யாருமே அவருக்கு எடுத்துச் சொல்லவில்லை!! கல்வித் திட்டம் மாற்றப்பட வேண்டியதுதான். ஆனால் உடனடி மாற்றங்கள் தேவைப்படுவது பெற்றோர்களிடத்தில்தான் என்பது என் கருத்து.

சொல்ல வந்தது நல்ல விஷயம்; சொல்லப் பட்டிருப்பதோ தவறான மெஸேஜ். Miscommunication!!


Post Comment

அப்படி நான் என்ன சொல்லிட்டேன்?





“என்னது, இப்பவா?”

“என்ன சொல்றே நீ? யோசிச்சுதான் பேசுறியா?”

“பிள்ளைக? பாவம் அதுக!!”

“நல்லா யோசிச்சுக்கம்மா. நல்ல விஷயம்தான் சொல்றே. ஆனாலும் இப்பவான்னுதான் வருத்தமா இருக்கு”

“ஏய், அறிவிருக்காடி உனக்கு? நீயெல்லாம் ஒரு அம்மாவா?” - இது தோழி.

”இப்ப என்ன அவசரம்? எப்பவும்போல ஜூலை, ஆகஸ்ட்னு பாக்கலாம்ல?”

இதெல்லாம் இந்தியாவில் உள்ள உறவுகள், நட்புகளிடமிருந்து கிடைத்த கமெண்ட்ஸ். அப்படி நான் என்ன சொல்லிட்டேன் இப்ப? ”இன்ஷா அல்லாஹ் மார்ச்சில் இந்தியா வரலாம் என நினைக்கிறோம்” - என்றதற்கான பதில்கள்தான்!! அவ்வ்வ்..... எல்லாம் இந்த கரெண்ட் கட் படுத்தும் பாடு!!


என்னாதிது, ஆளாளுக்கு இப்பிடி திகிலைக் கிளப்புறாய்ங்களேன்னு யோசிச்சுகிட்டே, துபாயில் இருக்கும் நண்பர் ஒருவரை, ஆலோசனை கேட்கலாம் என அழைத்தேன். அவர் வருடாவருடம் மார்ச், ஏப்ரலில்தான் இந்தியா செல்வார். அவர் அனுபவத்தைக் கொண்டு டிப்ஸ் கேட்கலாம் என்று நினைத்து அழைத்தேன். அவரிடம் ஊருக்கு எப்பண்ணே போறீங்க என்றதுதான் தாமதம். புலம்பித் தள்ளிட்டார், இந்த வருஷம் ஊருக்குப் போகலையாம். ஏன்? போன வருஷம் மார்ச்ல ஊருக்குப் போயிருந்தப்போ, வாயை வச்சுட்டுச் சும்மா இருக்காமே, அதிமுகவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு கேன்வாஸ் பண்ணிருக்கார். 

அவருக்கென்ன, சொல்லிட்டு டுபாய் வந்துட்டார். அவர் பேச்சைக் கேட்டு ஓட்டு போட்டவங்கள்லாம் பயங்கரக் கடுப்பாகி, அவர் எப்ப ஊருக்கு வருவார்னு காத்துகிட்டிருக்காங்களாம்!! அவரோட வீட்டம்மாகிட்ட ஒரே விசாரிப்பாம் எல்லாரும்!! அவரு ஊருக்கு வரட்டும் இருக்குன்னு, ஊர்க்காரவுங்க மட்டுமில்ல, வீட்டம்மாவும் திட்டுறாங்களாம்!!

”கவலைப்படாதீய, என்னா இப்ப அடுத்தாக்ல சங்கரங்கோயில் தேர்தல், அப்புறமேட்டு இன்னொரு எங்கவுண்டர் அப்படி இப்படினு எதாவது நடக்கும். அதுல மக்கசனம் இதெல்லாம் மறந்துருவாங்க. நீங்க ஜூலையில ஊருக்குப் போய்ட்டு வாங்க” டிப்ஸ் கேக்கலாம்னு போய் ஆறுதல் சொல்லிட்டு வந்தேன். என்ன செய்ய!! அந்த அளவுக்கு கரெண்ட் கட் ப்ராப்ளம், பிரபலமா இருக்கு.

அப்பத்தான் நான் போன வருஷம் கரண்ட் கட் குறித்து என் பதிவுகளில் எழுதுனது ஞாபகம் வந்தது!! (#பதிவருங்கோ!!) 

தேர்தலில் வெற்றி பெற்றதும், ‘அம்மா, ”சூரியன் இனிமே உதிக்கவே உதிக்காது”னு அடிச்சு சொல்லிருக்காங்க. ”தமிழகத்திற்கு இனி இருண்ட காலம்தான்”னு சிம்பாலிக்காச் சொல்றாங்களோ? (டிரங்குப் பொட்டி - 16)

ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க? (டிரங்குப் பொட்டி - 15)
 
போன வருஷம் மாதிரியே இப்பவும் பவர் கட்; போன வருஷம் மாதிரியே இப்பவும் மழை, புயலால் இழப்புகள், சாலை பள்ளங்கள்; போன வருஷம் மாதிரியே சாலை விபத்துகள்; போன வருஷம் மாதிரியே இந்த வருஷமும் எல்லாத்துக்கும் முந்தைய அரசுதான் காரணம்னு பழி சொல்றது...

மின் உற்பத்தியை அதிகரிக்கத்தான் உடனே முயற்சிகள் செய்யலை. அட்லீஸ்ட் இப்பவாவது முழிச்சுகிட்டு, transmission loss-ஐ தடுக்க வழிமுறைகள், மின்திருட்டைத் தடுக்க நடவடிக்கை, இலவச மின்சாரத்தை முறைப்படுத்துதல் - இப்படியான உடனடி நடவடிக்கைகளை எடுத்தால் ஏதோ கொஞ்சநஞ்ச மின்சார விரயத்தையாவது தடுக்கலாம். யார் செய்ய...

(”தடையில்லா மின்சாரம் சாத்தியமே” என்ற பதிவில் சொல்லிருக்க ’ரேஷன்’ வழிமுறைகளும் சாத்தியமானதாகவும், பலன்தரக்கூடியவையாகவும் இருக்குது. கட்டாயம் படிங்க!!)

என் பதிவில் இருந்து ஒரு டிப்ஸையும் தருகிறேன். ஏதோ என்னாலானது...

ஒரு பாட்டிலில் தண்ணீர் பிடித்து, வீட்டுக்கூரையில் ஒரு துளை இட்டு, சொருகி வைத்து விடுகிறார்கள். சூரிய ஒளி அந்தத் தண்ணீரில் பட்டு பிரதிபலித்து, வீட்டின் எல்லாத் திசைகளிலும் பரவி வெளிச்சம் அளிக்கிறது.(டிரங்குப் பொட்டி-17)

இந்தப் பதிவைப் பார்த்துவிட்டு பதிவர் ரஜின் கொடுத்த ஐடியா இது: இரவில் தண்ணி பாட்டில்  கீழ எல்.இ.டி. லைட் வச்சு பாத்தா பளீர்ன்னு ரூம் புல்லா லைட்... கரண்ட் போனா தேவை ஒரு பாட்டில் தண்ணி, ஒரு லைட்..அவ்ளோதான்...ரூம் ப்ரைட்..


வழக்கம்போல தமிழக மக்கள் எதையும் தாங்கும் இரும்பு மனது உள்ளவர்கள்னு நிரூபிச்சுகிட்டிருக்காங்க. பெரிசா ஒண்ணும் ரியாக்‌ஷன் இல்லை. ஏன்னா, ஆலைகளும் மின் ‘விடுமுறை’க்கேற்ற மாதிரி, தம் விடுமுறை தினங்களை மாற்றிக் கொண்டுவிட்டன. வீடுகளிலும், அதைக் கணக்குபண்ணி மின்சாரம் இருக்கிற நேரங்களில் வேலைகளை முடித்துக் கொள்ளப் பழகிவிட்டார்கள். எதிர்பாராத சமயங்களில் ஏற்படும் மின்வெட்டு மட்டுமே திணறடிக்கிறது. அப்படிப் பார்க்கும்போது மின்வெட்டினால் என்ன பயன் என்றுதான் தோன்றுகிறது.

hyderabaddaily.com
மின்வெட்டு... இல்லையில்லை.. மின்’விடுமுறை’ தரப்படுவது எதற்காக? போதிய மின்சாரம் இல்லை, இருப்பதைச் சிக்கனமாக்ப் பயன்படுத்தவென்றுதான். ஆனால், இங்கே அநேகமாக எல்லா வேலைகளையும் மின்சாரம் இருக்கும்போது திட்டமிட்டு முடித்துக் கொள்கிறோம். மின்சாரம் இல்லாததால் நிற்பது டிவியும்,  ஏஸியும் மட்டுமே. மீதி அத்தியாவசியங்களுக்கான மின்சாரம் இன்வெர்ட்டரில் சேமிக்கப்பட்டுவிடுகிறது. அப்புறம் என்னத்த சிக்கனம்?
நண்பர் ஒருவர் வீட்டில், மின்சாதனம் பழுதுபார்க்க எலெக்ட்ரீஷியன் ஒருவரை அழைத்திருந்தார்கள். அந்தா, இந்தான்னு இழுத்து ஒரு சுபயோக நேரத்தில் வந்தும்விட்டார். வந்த நேரம் பவர்கட் ஆகிவிட, ”நீங்க கூப்புடலயின்னா வேற இடத்துக்கு வேலைக்குப் போயிருப்பேன். இப்ப இங்க வந்ததால அதுபோச்சி. அதனால, என் ஒரு நாள் கூலியைத் தந்துடணும்’னு சொல்லி வாங்கிட்டேப் போய்ட்டார்!! நண்பர் பணம் போனதுபற்றிகூடக் கவலைப்படவில்லை; ‘இனி அடுத்தாக்ல ஆளு எப்ப கையில கிடைப்பானோ’ன்னுதான் கவலைப்படுகிறார்!!


மின்வெட்டால் பாதிக்கப்படுவது சிறு தொழில் செய்பவர்கள்தான். வெளிநாடுகளில் யாரேனும் வேலை பார்க்க வர நினைத்தால், ‘என்ன வளம் இல்லை நம் நாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’,  ’அங்க உழைக்கிறதை இங்க உழைக்கக் கூடாதாய்யா?’ என்றெல்லாம் உணர்ச்சிகரமாகப் பேசுவார்கள். அதை நம்பி லோன் வாங்கி, மீதிக்கு தாலிமுதற்கொண்டு அடகுவைத்து தொழில் தொடங்கினால், இப்படி ‘பவர்’கட் செய்து, அவர்களின் வாழ்வை கட் செய்துவிடுகிறார்கள். இந்தப் பணத்தைவச்சு ஒரு ’விஸா’வாவது வாங்கியிருக்கலாமே என்றுதான் தோணும் அவர்களுக்கு!!

சிறுதொழிலையும் ஏதாவது ஃபாரின் கம்பெனி கொல்லாபரேஷனில் ஜாயிண்ட் வென்ச்சர் வச்சு  துவங்கினா ‘தடையில்லா மின்சாரம்’ கிடைக்குமோ?

மின்வெட்டால் வாழ்வு திருடர்களுக்குத்தான்!! சொல்லிவச்சு கரெண்ட் போவதால், அவர்களுக்கும் இன்ன நேரம் இன்ன இடம் என்று பக்காவா ப்ப்ப்ளான் பண்ணி திருட வசதியாருக்கு!! காற்றுக்காக ஜன்னலைத் திறந்துவைத்துக் கூடத் தூங்க முடியவில்லை மக்கள். திருடிவிட்டு உயிரோடு விட்டுட்டால் பரவாயில்லை. நகைக்காகக் கொலையும்ல பெருகிப்போச்சு -  ஒரு பவுன் இருபத்தியையாயிரமாமே!!

இதுல ஒருசில திருட்டுச் சம்பவங்களில் வடநாட்டவர் ஈடுபட்டதால்,  தமிழர்களை வேலையில் வைக்காமல், இவர்களை வைத்தால் இப்படித்தான்; ஊரைவிட்டே அனுப்பவேண்டும் என்கிற ‘தாக்கரே சிண்ட்ரோம்’ தமிழகத்திலும் பரவிவருகிறது. அய்யா, தமிழர்கள் வேலை  செய்வார்களாயிருந்தால் இவர்களின் வருகைக்கு அவசியம் என்ன? ஆமாம், பீஹாரிலும் ஒரிசாவிலும் இங்கே இருக்கிற மாதிரி இலவசங்கள் கிடையாதே!!

ஜூவியில் வாசித்தேன். சங்கரன்கோவில் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளரிடம் கரண்ட்கட் பற்றிப் புகார் செய்த வயதானவரிடம், தொணடர் ஒருவர் “வெளிநாட்டிலருந்து ஏகப்பட்ட கரெண்ட் வாங்கி வச்சிருக்கோம். தேர்தல் கமிஷன்தான் தர வுடமாட்டெங்குது. தேர்தல் முடிஞ்சதும் குடுத்துருவம்” என்று சொன்னாராம்.இப்படி கில்லாடித்தனமா பேசுறவுகளும், அத நம்பி ஏமாந்துப் போற அப்புராணிகளும் இருக்கிறவரை.... கரெண்ட் கட்டும் இருக்கும்!!

Post Comment

வலியெனும் வரம்




வல்லமை” இணைய இதழில் நேற்று வெளியானது:
 
பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் படித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு அரசு மருத்துவச் சமூக ஆர்வலர் ஒருவர் வந்திருந்து, தொழுநோய்க்கான விளக்கவுரை நிகழ்ச்சி நடத்தினார். உரை முடிந்ததும், கேள்விகள் இருந்தால் கேட்கலாம் என்று கூறவும், பலரும் பல கேள்விகள் கேட்டனர். அமுதா என்கிற என் சக மாணவி, “இந்நோய் வந்தால் வலி இருக்காதா?” என்று கேட்டாள். “நல்ல கேள்வி” என்று மிகவும் சிலாகித்துப் பாராட்டிச் சொன்ன அவர், எல்லாரையும் கைதட்டவும் சொன்னார். எனக்கோ இந்த கேள்வியில் பாராட்டுமளவு அப்படியென்ன பெரிய விஷயம் இருக்கிறது என்று வியப்பாக இருந்தது.

அவர் தொடர்ந்தார், “எந்த ஒரு நோய்க்குமே வலிதான் அதன் முதல் அறிகுறியாக இருக்கும். அதை வைத்துத்தான் நாம் எச்சரிக்கையடைந்து உடனே சிகிச்சை எடுக்க மருத்துவரிடம் செல்வோம். ஆனால், இந்தத் தொழுநோய்க்கு மட்டும் வலி என்பதே கிடையாது. வலி இல்லாததாலேயே, இந்நோய் தாக்கப்பட்டவர்கள் அலட்சியமாக இருந்து விட நேரிட்டு, நோய் முற்றிக் குணப்படுத்தச் சிரமமான நிலைக்குச் சென்று விடுவதால் கை, கால் விரல்களை இழந்து விடுகிறார்கள்” என்று கூறினார். சட்டென்று பிடிபடவில்லை என்றாலும், ‘உக்காந்து யோசித்த’போதுதான் வலி என்பது நமக்கு ஒரு வரமே என்பது புரிந்தது.

சமீபமாக விகடனில் ஒரு கதை வந்தது, “வலி” என்ற தலைப்பு என்பதாகத்தான் ஞாபகம். கிராம மக்களைப் பலவித அடி, உதை என்று சித்ரவதை செய்து, வலிக்கு அஞ்ச வைத்து, அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கும் பண்ணையாருக்கு, வலி என்கிற உணர்வே இல்லாமல் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த உணர்வு இல்லாததால் அக்குழந்தை படும் பாடுகள் விவரிக்கப்பட்டு, அவர் தன் குழந்தைக்கு ‘வலி’ கிடைக்க வேண்டி மருத்துவர்களையும் தெய்வங்களையும் வேண்டி அலைவதாகப் போகும் கதை.

உடலில் நோய்த் தாக்குதல் ஏற்பட்டால், அது நமக்கு ஏதேனும் ஒரு சிரமத்தைத் தராத வரை அப்பாதிப்பை நாம் அறிய மாட்டோம். அது தலைவலி, வயிற்று வலி, முதுகுவலி, கால்வலி, காதுவலி என்று ஏதேனும் ஒரு வலியாக ரூபமெடுக்கும்போதுதான் அதனைக் குறித்து யோசிப்போம்.

உதாரணமாக, உயர் இரத்த அழுத்த நோய். இதன் இன்னொரு பெயரே “சைலண்ட் கில்லர்” என்பதுதான். ஆரம்ப நிலையிலோ, சற்று முற்றிய நிலையிலோ இதனால் எந்தப் பாதிப்பும் வெளிப்படையாகத் தெரியாது. மிகவும் முற்றிய நிலைக்குச் சென்ற பின்னர் வாதம், சிறுநீரகப் பாதிப்பு முதற்கொண்டு கோமா உள்ளிட்ட விளைவுகளை ஏற்படுத்திய பின்பே பி.பி. வந்திருப்பதைக் கண்டறிய முடியும். இதுபோலவே சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்றவையும் ஆரம்ப கட்டங்களில் வலி இன்மையால் கண்டறிவது தாமதப்படும். ஏன், கேன்ஸர் கூடச் சிலருக்குக் கடைசி நேரத்தில் கண்டறியப்படுவது இந்த வலியின்மையால்தானே?

இன்னொன்று, வலி ஏற்பட்டாலும், அதற்குச் சுய மருத்துவம் செய்வதும் நமக்கு வாடிக்கையாகிவிட்டது. முதுகுவலி என்றால், எடு ஒரு ப்ரூஃபனை; தலைவலியா இந்தா ஒரு பெனடால்; சளிக்காய்ச்சல்தானே, ஒரே ஒரு ‘அட்வில்’ போதுமே என்று நாமே திறமையான மருத்துவர்களாக இருக்கிறோம். இது பெண்களுக்கே மிக மிகப் பொருந்தும் என்றாலும், ஆண்களும் பல சமயங்களில் இதில் பெண்களுக்கு நிகராகவே அலட்சியமாக இருக்கின்றனர்.

இன்றைய சூழலில், ஒரு நெடும் பயணம் செய்து அலுவலகம் சென்று, வீடு வந்து சேருவதற்குள் அலுத்துச் சலித்துப் போய் விடுகிறது. அதற்கு மேல், மருத்துவமனைகளுக்குச் சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடந்து மருத்துவரைப் பார்க்கவும், பரிசோதனைகள் செய்யவும் எரிச்சல்பட்டு “தினம் பைக்கில் போய்ட்டு வரதுனால வர்ற முதுகுவலிதான். ரெண்டு நாள் ப்ரூஃபன் சாப்டுக்கிட்டாச் சரியாயிடும்” என்கிற சமாதானங்களால் மனசைத் தேற்றிக் கொள்கிறோம்.

ஏற்கனவே சொன்னதுபோல, ‘வலி’ என்பது ஒரு அடையாளக் குறியீடு. எங்கோ, எதுவோ சரியில்லை என்பதற்கான அபாயமணி. என்ன சரியில்லை என்று சரி பார்க்காமல் வெறுமே வெளியே தெரியும் அடையாளங்களை மட்டும் அழித்துக் கொண்டிருந்தால், உள்ளே புரையோடிப் போகும். நோய் நாடுவது மட்டுமல்ல, “நோய்முதலும்” – காரணமும் – கண்டறிந்து அகற்றினாலேயொழிய வலியிலிருந்தும் நிவாரணமில்லை; கடும் விளைவிலிருந்தும் தப்பிக்க முடியாது.

அதை விடுத்து, ”இது ஒண்ணுமில்லை; ஒரு மாத்திரையப் போட்டுட்டு கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடுத்தா வலி சரியாய்டும்” என்றே சொல்லிக்கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை மட்டும் எடுத்துக் கொண்டிருந்தால், குடலும், சிறுநீரகமும் பாதிக்கப்பட்டுக் கூடுதல் விளைவுகளைத்தான் இழுத்துப் போட்டுக் கொண்டதாக ஆகிவிடும். வலி மருந்துகளின் விளைவுகள் மிகக் கடுமையானவை. இவற்றை அதிகமாக, தக்க அறிவுரை இல்லாமல், எடுத்துக் கொள்வதென்பது நம் சிறுநீரகத்தை நாமே அழிப்பதற்குச் சமம்.

“இல்லை, நாங்கல்லாம் ஆயின்மெண்ட்தான் தடவுறோம். மாத்திரைலாம் சாப்பிடுறதேயில்லை தெரியுமா” – இப்படிப் பெருமையாகச் சொல்லிக்கிறீங்களா? வாங்க, உங்களைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். ஆயின்மெண்ட்களும் நம் சருமம் வழியாக நம் உடம்பில் ஊடுறுவிப் போய்த்தான் வலியைக் குறைக்கிறது. அப்படியென்றால் என்ன அர்த்தம்? வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்கள் எல்லாமும் கூடத் தொடர்ந்து வழமையாக உபயோகிக்கக் கூடாதவையே!!

வலி நிவாரண ஆயின்மெண்டுகள், க்ரீம்கள், லோஷன்கள், ஸ்ப்ரேக்கள், பாம்களினால் ஏற்படும் விளைவுகள் குறைவாக இருக்குமென்று சொல்லமுடியாதபடிக்கு, இவையும் சரும அரிப்புகள், அல்சர், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு தருபவையாக இருக்கின்றன.

பயமுறுத்துவதாகத் தோன்றுகின்றதா? இல்லை, நம்மில் பலரும் இந்த வலி நிவாரணிகள் ஏற்படுத்தும் பாதிப்புகளின் வீரியத்தை அறியாதவர்களாக இருக்கிறோம். அறிந்திருந்தாலும், நேரமின்மை, வேலைப்பளு, இன்னபிற காரணங்களின்மீது பழியைப் போட்டுவிட்டு இதைச் செய்து கொண்டிருக்கிறோம். இதனை அதிகமாகச் செய்பவர்கள் பெண்கள்தான். குடும்பத்திற்காக ஓடாய்த் தேயும் பெண்கள், தம் நலன் என வரும்போது ‘அடுத்த வாரம் பார்க்கலாம்’; ‘பசங்களுக்கு லீவு வரட்டும்’ என்றே தள்ளிப் போட்டு விடுகின்றனர்.

ஒரு சிறு வலி என்றாலும் மருத்துவரை நாடி ஓடச் சொல்வதல்ல கட்டுரையின் நோக்கம். வலி என்பது ஒரு பாதிப்பின் அடையாளம் என்பதால், அந்தப் பாதிப்பைக் கண்டறிந்து அதை நீக்கி முழுக் குணமடையவேண்டுமேயல்லாது; தற்காலிக வலி நிவாரணிகளை அளவில்லாமல் எடுத்துக்கொண்டு, அதனால் வரும் பாதிப்புகளையும் இலவச இணைப்பாக வாங்கி வைத்துக் கொண்டுச் சிரமப்பட வேண்டாமே.

தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே வலி நிவாரணிகளைப் பயன்படுத்துங்கள். அச்சமயங்களில் அதிக அளவு தண்ணீர் குடித்து, சிறுநீரகத்தில் தேங்கும் கழிவுகளை உடனுக்குடன் வெளியேற்றுங்கள். இதை நம் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், நம் வீட்டுக்கு உதவிக்கு வரும் பெண்களிடமும், தெருவில், அண்டை அயலில் உள்ளவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்!! பெண்கள் நலன் காப்போம்!!

Post Comment