Pages

Showing posts with label வெளிநாட்டு வாழ்வு. Show all posts
Showing posts with label வெளிநாட்டு வாழ்வு. Show all posts

பெருமைப் பேச்சு




வெளிநாட்டில் வசிப்பதில் உள்ள சிலபல சவுகரியங்களில் ஒன்று, சில கல்யாண வீடுகளைத் தவிர்க்க முடிவது. இந்நாட்களில் கல்யாண வீடுகளின் அலப்பரைகள் தாள முடியாமல் போய்க் கொண்டிருக்கின்றன. ஆடம்பரமும், உணவு வீணடிக்கப்படுவதும்  கண்டு வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க முடிவதில்லை. செலவு செய்து நேரில் போய், ஏதாவது பேசி வம்பை விலை கொடுத்து வாங்குவதைவிட, இங்கிருந்து ஃபோனில் ஒரு வாழ்த்தைச் சொல்லி விட்டால் சுபம்!!

சவுகரியங்களில் தலையாயது, அறிந்தவர்களின் மரணங்கள். அசவுகரியம் என்றாலும், மரண வீடுகளை சந்திக்க வேண்டியில்லாததும் ஒரு சவுகரியமே. அறியாதவர்களின் மரணச் செய்திகளே நடுக்கத்தைத் தரும்போது, மரணம் நிகழ்ந்த வீடுகளுக்குச் செல்வது ஒருவித பயமேற்படுத்தும்.

கடைசியாக, பல வருடங்கள் முன் ஊரில் இருந்தபோது ஒரு வயதான உறவினரின் மரணம் நிகழ்ந்தது. அவரின் மனைவி, ”என் அந்தஸ்து போச்சே” என்று அழுதது ஏன் எனப் புரியாமல் விசாரித்தபோது, ”பழுத்த சுமங்கலி” என்பதால் உறவுகளின் திருமணங்களில் “தாலி கட்ட” அவரையே எப்போதும் முன்னிறுத்தி வந்தது இனி நடக்காது என்பதுதான் காரணம் எனத் தெரிய வந்தது. ஒருவரின் மரணத்திற்கு அழுவது, பிரிவை நினைத்து மட்டும் அல்ல, மரணித்தவரால் நமக்கு என்ன நஷ்டங்கள் என்பதையும் நினைத்தே என்பது புரிந்தது.

உரிய சமயத்தில் போக முடியாவிட்டாலும், நாம் இந்தியா செல்லும் சமயத்தில் அன்பு-மரியாதை-உறவுகளின் நிமித்தம் அந்த வீடுகளுக்கு விசாரிப்பதற்குச் சென்றே ஆகவேண்டும். மரணம் நிகழ்ந்ததற்கும், நாம் செல்வதற்கும் நடுவில் உள்ள கால இடைவெளியில் அவர்களின் மனம் ஓரளவு ஆறுதல் அடைந்திருக்கும் என்பதால், இயல்பாகப் பேசிவிட்டு வரமுடியும். 

ல்யாண வீடுகளையும் அவ்வாறே பின்னர் சென்று விசாரித்தே ஆக வேண்டும்!! அவர்களும் இயல்பு(!!!) வாழ்க்கைக்குத் திரும்பியிருப்பார்கள் என்றாலும், கொஞ்சமேனும் பரபரப்பு இருக்கும். அதுவும் நாம் பெண்வீட்டைச் சேர்ந்தவர்கள் என்றால், மாப்பிள்ளை வீட்டில்தான் போய் பெண்ணைப் பார்க்க வேண்டியிருக்கும். நாம் முதன்முதலாக அவர்கள் வீடுகளுக்குச் செல்வதால் அதிகமாகவே தங்களது செல்வாக்கை விளம்புவார்கள். 

சென்ற முறை இந்தியா சென்றபோது, கல்யாணம் முடிந்த சில மாதங்கள் ஆகியிருந்த  ஒரு வீட்டிற்கு, வருவதாகத் தகவல் சொல்லிவிட்டுச்  சென்றிருந்தோம். பெண்ணின் மாமியார்தான் அவ்வீட்டின் அச்சாணி என்று போனதுமே புரிந்தது.  வந்தவர்களை முறையாகக் கவனிக்கும்படி மருமகளைப் பாசமாக, அதே சமயம் அதிகாரமாகவும் ஏவினார். எங்களோடு அமர்ந்து தங்கள் வீட்டுப் பெருமைகள், குடும்பப் பெருமைகள், பிள்ளைகள் பெருமைகள், குலப் பெருமைகள் என்று விலாவாரியாகப் பேசினார்... பேசினார்... பேசிக் கொண்டே இருந்தார்.

எங்களுக்கு அதையெல்லாம் கேட்க வேண்டாம் என்றாலும், கேட்டே ஆகவேண்டிய நிர்பந்தம்!! அங்கே வாழ்வது எங்கள் குடும்பத்துப் பெண்ணல்லவா... மரியாதைக் குறைவு ஆகிவிடக்கூடாதே.... கொட்டாவியைக் கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு கேட்டோம். கேட்கிறோமா இல்லையா என்று செக் பண்ணுவதற்காகவோ என்னவோ, இடையிடையே “இன்னார் உங்களுக்கும் இன்ன வகையில் சொந்தம்தானே...” என்பது போன்றெல்லாம் கேள்விகள் கேட்டார்.

எனக்கு கல்யாணம் ஆனதிலிருந்தே வெளிநாட்டு வாழ்க்கை என்பதால் உள்ளூரில் யாரையும் தெரியாது என்று சொல்லி தப்பித்துவிட, தொடர்ந்த அடுத்தடுத்த கேள்விகள் என்னோடு வந்த இன்னொருவரிடமே கேட்கப்பட்டன!!  பாடம் நடத்தி முடித்ததும் டீச்சர்  கேட்பதுபோல,பேசி முடித்த பிறகு, அதிலிருந்து கேள்விகள்  கேட்டுவிடுவாரோ என்று வேறு பயமாயிருந்தது!! 

இருப்பினும் அவர் பேசுவது ரொம்பவே அதிகமாகப் பட்டது எனக்கு. இவ்வளவு பேச்சு தேவைதானா எனுமளவுக்கு இருந்தது. ’உங்கள் வீட்டுப் பெண் எப்பேர்ப்பட்ட குடும்பத்தில் வாக்கப்பட்டிருக்கிறாள் பார்த்துக் கொள்ளுங்க’ என்பதை நிறுவும் முயற்சிபோல என்று எண்ணிக் கொண்டேன். அல்லது வாங்கிய சீர்களுக்கான நியாயப்படுத்துதலோ என்னவோ... 

ருவழியாக சொற்பொழிவினூடே, “வாங்க வீட்டைச் சுற்றிப் பார்ப்போம்” என்று அழைத்தார். விருப்பமில்லை என்றாலும், அவர் பேச்சிலிருந்து தப்பித்தால் போதும் என்று கிளம்பினோம். வீட்டைக் கட்டிய வரலாறும் படமாக ஓடியது. ஒவ்வொரு அறையாகக் காட்டி, அதன் சிறப்புகளைச் சொன்னார். சமையலறைக்கு வந்தோம். மருமகள் எங்களுக்காக டீ போட்டுக் கொண்டிருந்தாள். 

கிச்சனின் ஒரு மூலையில் தாளிடப்பட்ட சிறிய கதவுகள் கொண்ட அறையை என்னோடு வந்தவர் ”இது ஸ்டோர் ரூமா” என்று இயல்பாகச் சொன்னவாறே திறக்க, அதைக்கண்ட மாமியாரும் மருமகளும் ஏனோ பதற..  அவர்களின் பதற்றத்தை உள்வாங்குமுன்பே இவர் கதவைத் திறந்துவிட, உள்ளிருந்து ஒரு இளம்பெண் பாய்ந்து வெளியே வர...  நாங்கள் இருவரும் அதிர்ந்து, வாய்வரை வந்த அலறலைக்  கஷ்டப்பட்டு அடக்கி நின்றோம்... 

ஒரு நிமிடம் அமானுஷ்ய அமைதி நிலவியது. வெளியே வந்த அந்தப் பெண்ணைப் பார்க்கும்போதே தெரிந்தது, அந்த மாமியாரின் மகள் என்பதும், மனவளர்ச்சி குன்றியவர் என்பதும். பதினாறு பதினேழு வயதுதானிருக்கும் அந்தப் பெண்ணிற்கு. அம்மாவின் அழகையும் சிவந்த நிறத்தையும் அப்படியே கொண்டிருந்தாள். முகத்தில் மனவளர்ச்சி குன்றியோருக்கே இருக்கும் சில அடையாளங்கள். 

இருட்டு அறையிலிருந்து சுதந்திரம் கிடைத்ததும் அந்தப் பெண்ணிற்கு அப்படியொரு ஆனந்தம். அந்த மகிழ்ச்சி குழறலான அவளது பேச்சில் தெரிந்தது. தன் செய்கைகளிலும் அதை வெளிப்படுத்தினாள். அவளைக் கட்டுப் படுத்த முடியாத இக்கட்டான நிலைமை. அந்த அம்மாள் சர்வமும் ஒடுங்கிப் போய் அமர்ந்தார். அவரது நிறுத்தாத, பெருமை பொங்கிய பேச்சிற்கான காரணம் புரிந்தது. இவ்வளவு நேரம் இருந்த எரிச்சல் அடங்கி, பரிதாபம் மிகுந்தது. அவரருகில் அமர்ந்து வலிய பேச்சுக் கொடுத்து, இயல்பாகப் பேசிவிட்டுக் கிளம்பினோம். 

Post Comment

பக்கத்து வீடு




பக்கத்து வீட்டிற்கு மீண்டும் வாகனம் வந்த சத்தம் கேட்டது. சில மாதங்களாகவே காலியாயிருந்த  பக்கத்து பங்களாவிற்கு வரப்போவது யாராக இருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.  இரண்டு மூன்று நாட்களாக க்ளீனிங், பெயிண்டிங், மெயிண்டெனன்ஸ் எல்லாம் முடிந்து, இன்று வீட்டு உபயோகப் பொருட்கள் வந்து இறங்கிய வண்ணம் - அதுவும், “ராயல் ஃபர்னிச்சர்”, “ஜம்போ எலக்ட்ரானிக்ஸ்”, “ஜஷன்மால்” போன்ற உயர்ரகக் கடைகளிலிருந்து!! நான் நினைத்தது போலவே வரப்போவது ஒரு அமீரகக் குடும்பம்தானாம், என்னவர் சொன்னார்.

பெரிய குடும்பமில்லையாம், புதுமணத் தம்பதியராம். ஓ, அதான் புதுப்புது சாமான்செட்டு வருதா? எல்லாம் பெண்வீட்டு சீதனம் என்று நினைச்சிட்டீங்களா? இல்லை, இங்கே தலைகீழ்!!

இத்தனை வருஷமா இங்கே அமீரகத்தில் இருந்ததில், அமீரக மக்களின் கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் எல்லாம் ஓரளவு தெரிஞ்சுகிட்டேன்.  அமீரக அரசு, தன் குடிமக்களை எப்படித் தங்கத் தட்டில் வைத்துத் தாங்குகிறதுன்னு விலாவாரியாச் சொல்லி உங்களையும் புகைய விட்டாத்தான் எனக்கும் மனசு ஆறும்!! :-)

அமீரகத்தில் ஒரு திருமணம் முடிவானதும், மணமகன் பெண்ணின் குடும்பத்தாருக்கு ஒரு தொகையும், இஸ்லாமிய சட்டப்படி பெண்ணுக்குத் தனியே “மஹர்” என்ற தொகை அல்லது அசையாச்சொத்து கொடுக்க வேண்டும். கல்யாணம் என்பது ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் சிறு வைபவம்; அதன்பிறகு
ஒருநாள் மணமகன் தன் செலவில் இருவீட்டு உறவுகளுக்கும் பெரிய விருந்து ஒன்று கொடுக்க வேண்டும். பிறகே தனிக்குடித்தனம்.

மணமகளுக்கான திருமண உடை தொடங்கி, fully-furnished தனி வீடு, உதவிக்கு பணிப்பெண், வெளிநாடுகளுக்குத்  தேனிலவுப் பயணம், சிலசமயம் மனைவிக்குத் தனிக் கார் உட்பட எல்லாச் செலவுமே முழுசா மணமகனோடதுதான். நம்ம ஊர்ல கட்டுன சேலையோட வர்றதுன்னு சொல்வாங்களே -  அது இங்கே நிஜம்! கண்ணுமுழி பிதுங்குதா??!! இவ்வளவுக்கும் சம்பாதிச்சுட்டு கல்யாணம் பண்றதுன்னா, வழுக்கை விழுந்திடுமேன்னு தோணுதா?

அப்படியெல்லாம் இல்லை. அமீரகத்தில், ஒவ்வொரு குடிமகனுக்கும் பலவித சலுகைகள் தரப்படுகின்றன. கல்வி, மருத்துவம் எல்லாமே இலவசம். தவிர தேவையைப் பொறுத்து வீடு கட்ட நிலம்+பணம் அல்லது கட்டிய புதுவீடே இலவசமாகக் கொடுக்கப்படும். வீடுகளில் தண்ணீர், மின்சாரமும் இலவசம்!! மேலும், படித்து முடித்தவுடன், தகுதிக்கேற்றவாறு அரசாங்க நிறுவனங்களில்  வேலை அல்லது தனியே தொழில் தொடங்க அரசு முதலீடு தரும்.  அப்புறமென்ன, திருமணத்துக்கு சேமிச்சு ரெடியாகிடலாம். இதுதவிர, மணமகனுக்கு அரசாங்கமே “திருமண உதவித் தொகை” என்று ஒரு பெருந்தொகையைக் கொடுக்கிறது. பெற்றோர்களும் முடிந்தால் உதவலாம். அப்புறமென்ன?

ஒருமுறை ஒரு அரபுத் தாயிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “எனக்கு மூன்று மகள்கள்; நல்லவேளை ஒரே ஒரு மகன். இறைவனுக்கு நன்றி.” என்றார்.

முன்பு என்னுடன் வேலை பார்த்த அமீரகப் பெண்ணின் தங்கையின் திருமணத்திற்குச்  சென்றிருந்தேன். நிகழ்வுகளைப் பார்த்துக் கொஞ்சமல்ல, ரொம்பவேப் பொறாமையாக இருந்தது. முக்கியமாக, பெண்களுக்கான மண்டப வாசலில், இரு தரப்பு அம்மாக்கள், சகோதரிகள் இணைந்து நின்று, வருபவர்களை வரவேற்கிறார்கள்.  ”மாப்பிள்ளையோட, மச்சானோட சின்னம்மாவோட ரெண்டு விட்ட அண்ணனை உங்க அம்மா வாங்கன்னு சொல்லலை” என்று எந்தக் கம்ப்ளெயிண்டும் கிடையாது!!

அரங்கம் ஓரளவு நிரம்பியதும், மணமகளை அழைத்து அமர வைக்கிறார்கள்.  மேடைக்குப் போய் மோதிரம் போடுறது, டின்னர் செட் கொடுக்கிறது,  மொய் எழுதுறது - ஊஹும்... எதுவ்வும் இல்லை!! போலவே விருந்துக்கும் எல்லாரும் ஒரே மாதிரி அழைக்கப்பட்டு அமரவைக்கப்படுகிறார்கள். மேசைகளில் உணவு பரிமாறப்பட்டு ரெடியாக இருக்கிறது. மைனிகளுக்கும், அவர்களின் மாமியார்களுக்கும் தனியாக ஸ்பெஷல் பொறிச்ச கறியெல்லாம் கிடையாது!!

இவ்வளவுதான் திருமண விழா!! கல்யாணமும் முடிஞ்சுது, கத்தரிக்காயும் காய்ச்சுதுன்னு கிளம்ப வேண்டியதுதான். நம்ம ஊர் ஜமாத்களிலிருந்து மக்களை இந்த ஊர் கல்யாணங்களுக்கு அழைச்சு வந்து காமிக்கணும்!! :-(

நம்ம ஊர்களின் கல்யாண நிகழ்ச்சிகளில் காணப்படுற உணவு வீணடித்தல் இங்கும் இருக்கிறது. நேற்று செய்தித்தாளில், மிக முதிய அமீரகப் பெண்மணி ஒருவர் இதைச் சுட்டிக்காட்டி,  ”எங்கள் காலங்களில் நாங்கள் தேவைக்கு மட்டும் சமைத்து உண்டோம். இன்றோ உணவு பெருமளவு வீணடிக்கப்படுகிறது.” என்று வருத்தப்பட்டுக் கண்டித்திருந்தார்.

உண்மைதான், நம் நாட்டைப் போலவே இளந்தலைமுறையினரிடம் அதிகப் பணப்புழக்கம் இருப்பதால், உயர்ரகக் கார்கள், எலக்ட்ரானிக் கேட்ஜட்டுகள் பயன்பாடு அதிகம் உள்ளது. பணத்தின் அருமை முதியவர்களுக்குப் புரிந்ததுபோல,  இளையவர்களுக்கு இன்னும் புரிபடவில்லை.

எனினும், இளைய தலைமுறையினர் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நம் நாட்டுக் இளைஞர்களைப் போலவே, மேலைநாடுகளில் படித்து பட்டம்/முதுநிலைப் பட்டம் பெறுகிறார்கள். மேலும், இங்கே அமீரகத்திலேயே நிறைய வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின்  கல்லூரிகள் இருக்கின்றன. இந்தியாவின் பிட்ஸ்-பிலானி கிளைகூட உண்டு தெரியுமா?

பெண்கள் முன்னேற்றமும் - படிப்பு, வேலை, தொழில்கள் ஆகியவை நம் நாட்டுக்கு இணையாகவே உள்ளது. அநேகம் பெண்கள் படிச்சு, நல்ல வேலைகளில் இருக்காங்க அல்லது சுயதொழில் செய்றாங்க.  ஆனால் இதனால் வீட்டில் பணியாளர்களை அதிகம் சார்ந்து இருக்க வேண்டியிருப்பதால், குழந்தைகள் வளர்ப்பில் இதன் பக்க விளைவு எதிரொலிப்பதாகவும் அமீரகப் பெரியவர்கள் வருத்தப்படுறாங்க.  இன்னொன்று,  இந்தியாவைப் போலவே இங்கும் லேட் மேரேஜ், விவாகரத்து விகிதம், விவாகரத்தான பெண்கள் தனித்து வாழ விரும்புவது ஆகியவை அதிகரித்து வருகிறது. நாட்டுக்கு நாடு வாசப்படி!!!

நான் கேட்டு வியந்த ஒரு சம்பவம் உண்டு. ஒரு நண்பருக்கு அறிமுகமான அமீரகக் குடிமகன் ஒருவருக்கு (முதல்)  திருமணம் ஆனது. திருமண ஒப்பந்தம் கையெழுத்தான ஒருசில தினங்களில் அப்பெண் விவாகரத்து வாங்கிக் கொண்டாள். அப்பெண்ணுக்கு இது இரண்டாவது திருமணம், முதல் முறையும் இதேபோலவே ஒப்பந்தம் கையெழுத்தானதும் விலகினாளாம்!! இதில் யார் பக்கம் சரியோ, தவறோ. ஆனால், அப்பெண் துணிச்சலாக இருமுறை உடனடி விவாகரத்து கோரும் சாதகமான சூழ்நிலை இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்!!

ஆம், இங்கு விவாகரத்து அதிகம் இருந்தாலும்,  விவாகரத்தான பெண் மறுபடி முதல் தாரமாகவே வாழ்க்கைப் படுமளவுக்கு, மறுமணம் என்பதும் மிக சகஜமான ஒன்று.

ஒரு குடும்பத்தில் பல சகோதர சகோதரிகள் இருந்தால், முதலில் அக்காவுக்குக் கல்யாணம், பிறகு தங்கைக்கு என்றெல்லாம் கிடையாது. யாரைப் பெண் கேட்டு வருகிறார்களோ, அது கடைசிப் பெண்ணாக இருந்தாலும், உடன் திருமணம். போலவே சகோதரர்களுக்கும் - சகோதரிகளின் திருமணம் முடிந்துதான் அண்ணனுக்குக் கல்யாணம் என்கிற சம்பிரதாயங்களெல்லாம் கிடையாது.  இதற்கு வரதட்சணை, சீர்கள், கூட்டுக்குடும்பம் இல்லாதது காரணமாக இருக்கலாம்.

ஆண்கள் திருமணமானதும் (பொருளாதாரத்தைப் பொறுத்து) உடனே தனிக்குடித்தனம் போய்விடுவார்கள்!! இதனாலேயே மாமியார்/நாத்தனார்-மருமகள் பிரச்னைகளெல்லாம் இல்லையோ என்னவோ. அதற்காக பிள்ளைகள் தம் பெற்றோரை அப்படியே விட்டுவிடுவதில்லை. வார இறுதி நாட்களில் இருதரப்பு பெற்றோர் வீடுகளிலும் அனைத்து மக்களும் கூடுவது கட்டாயக்கடமை!! அமீரகக் குடும்பங்களில் தாய்க்கே அதிகாரம் அதிகம். பல அமீரகத் தொழிலதிபர்கள் பேட்டி கொடுக்கும்போது, தன் தாய்க்கு இன்றும் கட்டுப்படுவதுண்டு என்று சொல்லிப் பார்த்திருக்கிறேன். மேலும், வீடு, மருத்துவம், உதவித் தொகை உள்ளிட்ட பெரிய செலவுகளுக்கெல்லாம் அரசே பொறுப்பேற்றுக் கொள்வதால், பணத்திற்காக பிள்ளைகளைச் சார்ந்திருக்கும் அவசியமும் இல்லை!!

எங்கள் பக்கத்து வீட்டுத் தம்பதியரும் வாரம் தவறாமல், வேறு மாநிலமான ராஸ்-அல்-கைமாவில் இருக்கும் தம் பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிடுவர். கணவர், விண்வெளித் துறையில் வேலை பார்க்கிறார். மனைவியும் ஒரு அரசு நிறுவனத்தில்.

உறவுமுறைத் திருமணங்கள் அதிகம் என்பதால், அவசியத்தை உணர்ந்து, திருமணத்திற்குமுன் மருத்துவப் பரிசோதனைகள் பல வருடங்களுக்குமுன்பே கட்டாயமாக்கப்பட்டுவிட்டன.  இந்நாட்டு மக்கள் மனவளர்ச்சிக் குறைபாடுள்ள சிறப்புக் குழந்தைகளை ”இறைவனின் நன்கொடையாகக்” கருதுகிறார்கள் என்று செய்தித்தாளில் வாசித்து ஆச்சரியப்பட்டேன். அதேசமயம் மரணத்தை மிக இலகுவாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இங்கும் கிராமங்களும், அங்கு வாழும் எளியவர்களும் உண்டு. ஏன் நாகரீகம் பெரிதும் எட்டாத மலைவாழ் மக்கள்கூட உண்டு. ஆனால், சுகாதாரம், கல்வி வசதிகள் எட்டாத இடம் இல்லை.

விவசாயம் பெரிதும் போற்றப்படுகிறது. மானியங்களும், இலவச தண்ணீர்-மின்சாரம், உற்பத்திப் பொருளை அதிக விலைக்குக் கொள்முதல் எல்லாம் உண்டு. புதிய முயற்சிகளையும், ஆராய்ச்சிகளையும் உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறார்கள். இதனால், கடும் கோடையிலும் குறையாத உற்பத்தி தரும் Green-house farming பயன்பாட்டில் உள்ளது. மண் இல்லாமல், தண்ணீரில் பயிர் செய்யும் Hydroponics முறையும்  ஒரு (படித்த) விவசாயி மேற்கொள்கிறார்!!

கல்வி, மருத்துவத்துறைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி வருகிறது அரசு. அரசுப் பள்ளிகளில், பாடங்கள் அரபிமொழியில்தான் கற்பிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த, எல்லா ஆசிரியர்களுக்கும் தற்போது ஒரு வருட பயிற்சி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலப் புலமையை அதிகரிக்க பிரைமரி வகுப்புகளில் ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு ஆங்கிலேய ஆசிரியையும் பிரத்தியேகமாக வரவழைத்து நியமித்துள்ளார்கள்.

அரசு மருத்துவமனைகளும் அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் போன்ற பிரபல மருத்துவமனைகளோடு இணைந்து செயலாற்றும்படி சீரமைக்கப்பட்டு, பல அரிய சிகிச்சைகள் இங்கேயே கிடைக்குமளவு தரம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது.  



நாட்டின் வளர்ச்சிக்குரிய இத்தனை ஏற்பாடுகளும், நாட்டின் பெட்ரோலிய மற்றும் இதர வருமானங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. தனிநபர் வருமான வரிகள் உட்பட பல வரிகள் இங்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


அமீரகத்தின் தொடர் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் இந்நாட்டின் தொலைநோக்குள்ள ஆட்சியாளர்களே காரணம். மக்களோடு மக்களாகக் கலந்து பழக முனையும் முயற்சியாகவும், நிர்வாகத்தைக் கண்காணித்து முறைப்படுத்தவும் ஆட்சியாளர்கள் அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், சேவை மையங்களுக்கு திடீர் வருகைகள் தருவதுண்டு. அமீரக “தேசிய தினமான” நேற்று (டிசம்பர் 2) வெளிநாட்டு மக்கள் உள்ளிட்ட எல்லாருக்கும் மொபைல் ஃபோனில் வாழ்த்துச் சொல்லி, உப ஜனாதிபதியான துபாய் ஆட்சியாளரிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது எல்லாருக்கும் இன்ப அதிர்ச்சி!! 




நேற்றைய தேசிய தினத்தின் கொண்டாட்டங்களில், இந்நாட்டு குடிமக்களுக்கு இணையாக, வெளிநாட்டினரும் குறைவில்லாத உற்சாகத்துடன் தம் வீடுகள், கார்களை அலங்கரித்துக் கலந்துகொண்டது ஒன்றே சாட்சி, அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி தரும் நாடு இது என்பது!!

Post Comment

திறப்புவிழா






ஸ்ஸப்பா... வருஷா வருஷம் இது ஒரு வேலையாப் போச்சு. நம்மூர்ல போகிப் பொங்கலுக்கு இதைச் செய்வாங்க. நான் வருஷத்துக்கொருவாட்டி ஊருக்குப் போகும்போதெல்லாம் இதைச் செய்யவேண்டி இருக்கு...

என்னன்னு சொல்லாமலே புலம்பிகிட்டிருக்கேன் பாத்தீங்களா.. என் ரங்க்ஸும் இதத்தான் சொல்வாரு. முதல்ல விஷயத்தைச் சொல்லிட்டு அப்புறம் புலம்புன்னு. அப்படின்னா அவரும் கரெக்டாத்தான் சொல்லிருக்காரு போல.. நாந்தான் உடனே அதுக்கும் கூட நாலு புலம்பல் சேர்த்துப் புலம்புவேன்.

சரி..சரி.. நீங்களும் டென்ஷனாகாதீங்க..  வேறென்னங்க.. வருஷா வருஷம் லீவுல ஊருக்குப் போறோம்னு ஒருவார்த்தையில சொல்லிட்டுக் கிளம்பிடுறோம். ஆனா, அந்த ஒரு வார்த்தைக்குப் பின்னாடி எம்புட்டு வேலை இருக்கு தெரியுமா? கிளம்புற ஒரு மாசத்துக்கு மின்னயே அரிசி, பருப்பு, புளின்னு மளிகைகளை எல்லாம் கணக்குப் பாத்துச் செலவு பண்ணிக் காலி பண்ணிடனும். ஃப்ரிட்ஜிலயும் காய்கறிகளோட பட்டர், ஜாம், சாஸ்,சீஸ் எல்லாத்தையும்  காலி பண்ணனும். அதுவும் எப்படின்னா, கரெக்டா கடைசி நாள்தான் எல்லாம் காலியாகிற மாதிரி பாத்துக்கணும். கடைசி நாள் சிம்பிளாவாவது சமைக்கவேண்டாமா பின்ன? (யாரது.. தினமுமே என் சமையல் சிம்பிள்தானே நக்கலடிக்கிறது..)

அப்புறம் பேப்பர், ஃபோன், தண்ணி கட் பண்றதுக்கு ஃபோன் பண்ணியாச்சான்னு ரங்க்ஸை நச்சரிக்கணும்.. கிச்சன்ல அடுப்பு, மிக்ஸி, கிரைண்டர் முதல் ஹால் ஃபர்னிச்சர் - ஸோஃபா, டைனிங் டேபிள், சேர், கம்ப்யூட்டர்+டேபிள் போன்ற எல்லாத்தையும் தூசி அடையாம இருக்க பெட்ஷீட் அல்லது பேப்பர் போட்டு மூடணும். இடையில் ஊருக்குப் போற ஷாப்பிங், பேக்கிங்.. நடுவுல பசங்க பரிட்சை, ஹோம் வர்க்.. இதுல குக்கிங்கும் செய்யணும்...  கதவு, ஏஸி, ஜன்னல்னு காத்துல தூசி வீட்டுக்குள்ள வர்ற வழிகளை டைட்டா மூடி/பேப்பர் வச்சு அடைக்கணும்.

இருந்தாலும் ஒரு பத்து நாளைக்கொரு தரம் வீட்டைத் திறந்து பாத்துக்கச் சொல்லி யார்கிட்டயாவது பொறுப்பாச் சாவி கொடுக்கணும். நட்புகள், உறவுகள்னு எல்லார்கிட்டயும் ஊருக்குப் போறேன்/வர்றேன்னு தகவல் சொல்லணும். செடிகளுக்குத் தண்ணி ஊத்த ஆள் ஏற்பாடு பண்ணனும். அந்த ஆள் தவறாம வர்றாரான்னு கவனிச்சுக்க இன்னொரு ஆள்கிட்டச் சொல்லி (alternative) வைக்கணும்... என்னது இதுக்கே “ஸ்ஸப்பா”ங்கிறீங்க..



இப்ப ஊருக்குப் போயாச்சு. அப்பாடான்னு மூச்சு விடாதீங்க.. அங்க பூட்டிக் கிடக்கிற வீட்டைத் திறந்து ”திறப்பு விழா”  நடத்தணும்.. அதாங்க.. சுத்தம் செய்யணும். அவ்வ்வ்வ்...  பேப்பர், பால், தண்ணி, வேலைக்காரர் எல்லாத்துக்கும் ஏற்பாடு பண்ணனும்.  சமையலுக்கு இங்க போட்ட மாதிரியே ஒரு ஸ்பூன் மிளகாய்ப் பொடியைப் போட்டுட்டு, “அச்சச்சோ, காரம் கூடிப் போச்சே”ன்னு மாமியார்கிட்டே அசடு வழியணும்... ஒரு வழியா “கை திருந்தி” சமைக்க ஆரம்பிக்கும்போது லீவு முடியும். மறுபடி எல்லாம் ஏறக்கட்டி,  காலி பண்ணி...  கிளம்பி இங்க வந்து... ”இனிமே யாராவது லீவுல ஊருக்குப் போணும்னு சொல்லிப் பாருங்க”ன்னு புலம்பிகிட்டே இங்க மறுபடி எல்லாத்துக்கும் ”திறப்பு விழா” நடத்தி...

அதெங்கே..? ‘பிரசவ வைராக்கியம்’ மாதிரி அடுத்த மாசமே, “இன்ஷா அல்லாஹ் அடுத்த வாட்டி ஊருக்குப் போகும்போது...”ன்னு ஆரம்பிக்கிறது வேற யாரு.. நானேதான்... ஹூம்...

இதெல்லாம் போறாதுன்னு இப்ப ஒரு மூணு வருஷமா இன்னொன்னுக்கும் சேத்து மூடு விழா/ திறப்புவிழா நடத்த வேண்டியிருக்கு. என்னன்னு கண்டுபிடிங்க பாப்போம்..  ஆமாம், “வலைப்பூ”வுக்குத்தான்!!

ஊருக்குப் போயாச்சு, வந்தாச்சு.. அப்புறமென்ன... வழக்கம்போல அடுத்த பதிவு “India Special Edition"தான்!!

Post Comment

Gகத்தாமா - 2




"Gகத்தாமா - 1": 

அச்சமயம் என் சின்னவன் எல்கேஜி படித்துக் கொண்டிருந்தான். நான்கே வயதுச் சிறுவன், மதியம் 12 மணிக்கு பள்ளிவிட்டு வந்தபின் மாலை ஏழு மணிவரை பணிப்பெண் பொறுப்பில்தான் இருக்கவேண்டும் எனும்போது, அதற்கேற்ற குணமும், பொறுமையும், தமிழ் தெரிந்தவராயும் இருத்தல் வேண்டும். வேலைக்காரரை ஒரு குடும்ப உறுப்பினரைப் போலவேக் கருதி, நடத்துவேன். அப்போதுதான் அவருக்கும் நம் குழந்தையின்மீதும், குழந்தைக்கு அவரின்மீதும் ஒட்டுதல் வரும்.  எனவே, வேலைக்காரர்களை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு விருப்பமில்லை. அடிக்கடி ஆள் மாறுவது என்பது சிறுகுழந்தையின் மனதை பாதிக்கவும் செய்யுமே. (பள்ளியில் அடிக்கடி ஆசிரியர் மாறினாலே நல்லதில்லை என்று சொல்வோமே). பெரியவனுக்கும் 10 வயதுதான் ஆகியிருந்தது.

இருந்தாலும், இப்படி எத்தனை நாள் இப்படி சமாளிக்க முடியும்? என்னதான் அவசியத்திற்கோ அல்லது ஆர்வத்திற்காகவோ வேலைக்குப் போகிறோம் என்றாலும், குழந்தைகள் முக்கியம் என்பதால்தானே பார்த்துக் கொள்ள ஆட்களை நியமிக்கிறோம்? அங்கீகரிக்கப்பட்ட ”டே கேர்” சென்டர்கள் மிகச்சில இருந்தாலும், அவற்றின் தூரம் காரணமாகவோ, அல்லது அதிகக் கட்டணம் காரணமாகவோ பலரும் அதை விரும்புவது இல்லை. இங்கும் இந்தியாபோலவே பள்ளிக் கட்டணங்கள் மிக அதிகம்தான். அதற்குமேல் டே-கேருக்கெல்லாம் கொடுப்பதற்கு எல்லாராலும் இயலாது. அதே சமயம், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு வீட்டிலும் வேலை உண்டு என்பதால், குழந்தைகளோடு செலவிட நேரம் கிடைப்பது குறைவு. ஆகவே, பணிப்பெண்களை வைத்தால், நாமில்லாத சமயம் குழந்தையைத் தனிப்பட்ட கவனத்தோடு பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலை செய்வதிலிருந்தும் நேரம் மிச்சமாகும்.

இதனால்தான், இங்கு பலரும் பகுதி-நேரப் பணிப்பெண்களை வைத்துக்கொள்ள விழைவது. ஆண்கள் உதவுவார்கள் என்றாலும், அது ‘உதவி’தான் என்பதால் பெண்களின் “பொறுப்பு” பெரியதாக ஒன்றும் குறைந்துவிடுவதில்லை. உயிரான குழந்தையைப் பார்த்துக் கொள்வதோடு, வீட்டு வேலைகளிலிருந்தும் விடுதலை தருவதால், பெண்கள் தம் பணிப்பெண்களை மதிப்புடனேதான் நடத்துகிறார்கள். தமிழ்நாட்டை விடவும் இங்கு வேலைக்குத் தகுந்த ஆள் கிடைப்பதென்பது அரிதானதால், கிடைத்திருப்பவர்களைத் தக்கவைக்கவேணும் மரியாதையாகவே நடத்தப்படுவர்.

எனினும் பெரும்பான்மையான பணிப்பெண்கள் ஃப்ரீ விஸாவில் இருப்பவர்கள் என்பதால், எந்தக் கட்டுப்பாடும் அவர்களுக்கில்லை. திடீரென காரணமேயின்றிகூட நின்றுவிடுவார்கள். எதுவும் கேட்க முடியாது. எந்த சட்டபூர்வ அக்ரிமெண்டும் கிடையாது. அவர்களின் தொலைபேசி எண் மட்டுமே நமக்கு அவர்களோடான தொடர்பு எனும்போது, திடீரென தொடர்பு அற்றுப் போவது கடினமானது அல்லவே. மேலும், யாரையும் உடனே நம்பி வீட்டில் வைத்துவிட முடியாதே. இந்தமாதிரி வேலைக்கு வருபவர்கள் வீட்டில் உள்ளவற்றைத் திருடிவிட்டு ஓடிப் போவதும், குழந்தைகளைக் காயப்படுத்துவது என்றும் எத்தனை கேள்விப்படுகிறோம்.

இப்படி தொடர்ந்து மூன்று  பேர் அடுத்தடுத்து வேலையை விட்டு நின்றுபோனதால், நாங்கள் செய்வதறியாது திகைத்து நின்றோம். அப்போதுதான், ஃப்ரீ விஸா என்பதால்தானே இத்தனை சிரமங்கள், அதிகச் செலவு என்றாலும், நாமே ஒருவரை நமது ஸ்பான்ஸரில் கொண்டு வருவோம் என்று முடிவு செய்தோம். அதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து, அதுபோல பணிப்பெண் விஸா எடுத்தவர்களிடம் விசாரித்தால், அனைவரிடமிருந்தும் வந்த முதல் பதில் “வேண்டாம், நீங்கள் விஸா எடுக்காதீர்கள்” என்று அட்வைஸ்! ஃபிரீ விஸா பணிப்பெண்கள் கிடைப்பதின் சிரமங்கள் குறித்துச் சொன்னால், பதில் “இவற்றைவிட அவை எவ்வளவோ பரவாயில்லை” என்று பதில்!! நாமல்லாம் சொன்னாக் கேட்டுப்போமா? பட்டாத்தானே புரியும்!!

ஊரில் ஆளைத் தேடிக் கண்டுபிடித்து, ஆயிரக்கணக்கில் செலவழித்து விஸா (இரண்டு முறை ரிஜக்ட் ஆகி, பின்) எடுத்து, கூட்டியும் வந்தாயிற்று.  ஏர்போர்ட்டில் வந்து இறங்கியவர் உடனே ஒரு மொபைல் வாங்கிக் கேட்டார். அமீரகத்திற்கு அவர் புதிது எனவும், அங்கு தன் உறவினர்கள் யாரும் இல்லை என்றும் சொல்லியிருந்தததால், தன் தாய் மற்றும் மகளோடு பேசுவதற்காக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.   திருநெல்வேலிக்கார பெண், ஏற்கனவே பத்து வருடங்கள் சவூதியில் அரபி வீட்டில் பணிபுரிந்திருக்கிறார் என்பதால் இங்கு பழகிக்கொள்ளப் பிரச்னையில்லை. எல்லாம் நல்லாத்தான் போய்கிட்டிருந்தது கொஞ்ச நாள்.  பிறகு அவர் ஃபோனுக்கு கணக்கில்லாத அழைப்புகள் வருவதும், நான் அலுவலகத்திலிருந்து அழைத்தால் வீட்டில் இல்லாதிருப்பதும், பிறகு ஒரு நாள் கையுங்களவுமாய் அகப்பட்டதும், போலீஸில் சொன்னதும் என... இரண்டு பதிவுகளுக்கான அளவு உண்டு சொல்வதற்கு.

உடனே அன்றே விஸா கேன்ஸல் செய்து, ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவரின் விஸா புதுப்பித்து ஒரு மாதம்தான் ஆகியிருந்தது என்பதால், எனக்கு கிட்டத்தட்ட ரெண்டு லட்சம் ரூபாய் வரை நஷ்டம்.. பெருநஷ்டம்.. ரெண்டு லட்சம் என்பது எனக்கு சிறிய தொகையல்ல. அதைவிட, எனக்கும், என் குடும்பத்திற்கும் ஏற்பட்ட மன உளைச்சல் எவ்வளவுக்கு மதிப்பிட முடியும்? ஐந்து வயது மகனிடம் என்ன காரணம் சொல்வது? இதுகுறித்துப் பலரிடம் பேசியதிலும், படித்ததிலும், பலருக்கும் என்னைவிடக் கசப்பான அனுபவங்கள் உண்டென அறிந்துகொண்டேன்.

அத்தோடு வேலைக்காரிகளுக்கு முழுக்குப் போட்டுவிட்டு, தங்கைகள் உதவியோடு சிலகாலம் கடத்தினேன். என்றாலும், பிள்ளைகள் பள்ளிவிட்டு வீட்டில் தனியே நிற்பது (சிலமணி நேரமே என்றாலும்) என்பது, மனதளவில் அவர்களுக்கும் பாதிப்பு தரும். தனியே வீட்டில் இருப்பது எத்தனை கொடுமையானது என்று வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள் உடைய என் நண்பர்கள் சொல்லியிருக்கிறார்கள்.  எனக்கும் குற்ற உணர்வு. பொறுப்பான, அறிவான பிள்ளைகள் என்றாலும், அவர்களும் சிறுவர்கள்தானே? எப்போது என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியுமா? மேலும், சிறுவர்கள் வீட்டில் தனியே இருப்பதும் பாதுகாப்பல்லவே என்ற பயம் வேறு. என்னதான் அடிக்கொருதரம் ஃபோன் செய்துகொண்டாலும், ஆபத்து நேர்ந்தால் ஃபோன்வழியா காப்பாற்ற முடியும்?

ரெண்டு வருடம் முன்பு ஸ்டெல்லாவைத் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்தது. தற்போதும் (கிட்டதட்ட 30 வருடங்கள்!!) அதே அரபியின் ஸ்பான்ஸரில்தான் இருப்பதாகவும், அதே மலையாளிக் குடும்பத்தில்தான் வேலை செய்வதாகவும், மேலும் தன் இரு மகள்களையும், மருமகன்களையும் கூட அதே ஸ்பான்ஸரின் உதவியோடு இங்கு அழைத்து வந்திருப்பதாகவும் கூறினார்.

ன் சந்தேகம் இதுதான்: அரபிகள் கொடுமைப்படுத்துகிறார்கள என்று சொல்கிறார்கள்.  எவ்வளவுக்கு உண்மையோ.  ஆனால், எந்தக் கொடுமைகளும் செய்யாத, பணிப்பெண்களைக் குடும்பத்து அங்கத்தினர் போலப் பாவித்துப் பழகும் எங்களைப் போன்ற சக நாட்டவரை ஏன் இப்பெண்கள் ஏமாற்றிக் கைவிடுகின்றனர்? சொந்தமாக விஸா எடுக்குமளவு வசதி இல்லாதவர்கள், ஃபிரீ விஸா பணிப்பெண்களை வைத்தால், திடீர் திடீரென நின்றுவிடுவது, அல்லது இருப்பதைக் கொள்ளையடித்துவிட்டு ஓடுவது போன்றவையில் ஈடுபடுவது; அதிகச் செலவு செய்து விஸா எடுத்தால், வீட்டில் ஆள் இல்லாததைப் பயன்படுத்தி, தவறான காரியங்களில் ஈடுபடுவது, திடீரென (காரணமேயில்லாமல்) ஊருக்குப் போகணும் என அடம் பிடிப்பது, தூதரகத்தில் பொய்யான புகார் கொடுப்பது - இவையெல்லாம் ஏன்? எங்களைப் போலவே நீங்களும் குடும்பத்திற்காக வருந்தி பணம் சம்பாதிக்க வந்திருக்கிறீர்கள் என்பதாலும், உறவுகளை விட்டுப் பிரிந்திருக்கிறீர்கள் என்பதாலும், எங்களுக்கும் உங்கள் சேவை அவசியம் என்பதாலும் உங்களிடம் அன்போடு நடந்துகொண்டும் ஏன் இப்படி வஞ்சகம் செய்து எங்களை நோகடிக்கிறீர்கள்?

இவை என் கேள்விகள் மட்டுமல்ல; என்னைப் போலவே இந்தப் பிரச்னையாலும் “ஆணியே புடுங்க வேண்டாம்” என்று வீட்டில் இருக்கும் பல ஆயிரக்கணக்கானப் பெண்களின் கேள்விகளும்கூட.

Post Comment

Gகத்தாமா - 1




என் பெரியவனுக்கு இரண்டேமுக்கால் வயது ஆனதும், அதுவரை என்னுள் உறங்கிகொண்டிருந்த ’பட்டதாரி’ முழித்துக் கொள்ள, நான் இருக்கும் அபுதாபியிலேயே வேலை தேட ஆரம்பித்தேன். அதற்குரிய முன்னேற்பாடுகளாய், முதலில் மகனை ‘ப்ளே ஸ்கூலில்’ சேர்த்துவிட்டு,   மதியம் ஸ்கூல் விட்டு வந்த பின் அவனைக் கவனித்துக் கொள்ள வேலைக்கு ஒரு பெண்ணைத் தேட ஆரம்பித்தேன். தனியே மகனோடு வீட்டில் இருக்க வேண்டும் என்பதால், நம்பிக்கையான ஆள் வெண்டுமே!! அதனால், பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்காமல், தெரிந்தவர்கள் மூலம் தேடிக்கொள்ள நினைத்தோம்.  இந்தியாவில் இருந்தால் யாரிடமாவது பொறுப்பைப் பகிரலாம்.  இங்கே வெளிநாட்டில் அம்மா, மாமியார், அல்லது கூட்டுக் குடும்பத்தில் உள்ளவர்கள் என்று எல்லாருக்கும் பகரமாவது பணிப்பெண்தான்!!

தொடருமுன், அமீரக வீட்டுப்பணியாளர்கள் மார்க்கெட் நிலவரங்களைப் பார்ப்போம்.  அரபு நாடுகளில் பணிப்பெண்களை “Gகத்தாமா” என்பார்கள்.  இந்நாட்டு குடிமகன்களைப் போலவே, வெளிநாட்டினரும் தம் சொந்த ஸ்பான்ஸர்ஷிப்பில் வேலையாட்கள் வைத்துக் கொள்ளலாம். ஆனால், அதற்கான செலவுகளைத் தாக்குப் பிடிக்க முடிந்த பணக்கார expats மட்டுமே வைத்துக் கொள்வார்கள். அப்படியென்ன செலவு? Non-refundable deposit மற்றும் விஸா கட்டணங்கள், விஸாவுக்கான மருத்துவப் பரிசோதனைச் செலவு என்று வருடம் ஒன்றிற்கு - 7000 திர்ஹம்கள் வரை (ரூ. 1 லடசம்) ஆகும். பணிப்பெண் இந்தியர் என்றால், இந்திய தூதரகத்தில் 10,000 திர்ஹம்கள் refundable deposit. மேலும், ஸ்பான்ஸர் செலவில் உணவு, உறைவிடம், சிம்கார்டுடன் செல்ஃபோன் ஆகியவற்றுடன் இந்தியச் சட்டப்படி அவருக்கு 1100 திர்ஹம்கள் மாதச்சம்பளமும் தரப்பட வேண்டும்.

ஏன் இத்தனை காஸ்ட்லி என்றால், அதற்குக் காரணமும் நம்மவர்கள்தான்!! அறிந்தோர், தெரிந்தோரையெல்லாம் காசு வாங்கிகிட்டோ, வாங்காமலோ Maid விஸாவில் அமீரகம் அழைத்து வருவதனால் வந்த வினை. இவர்கள் செய்யும் தவறால், கஷ்டப்படுவது அவசியத்தில் இருப்பவர்களே. இத்தனைச் செலவுகளும் செய்வதற்கு ஒன்று அவர் அரபியாக இருக்கவேண்டும்; அல்லது மிகப் பெரியப் பொறுப்பில் இருப்பவராக இருக்க வேண்டும்.  குடும்பத் தேவைகள் கருதி அவசியத் தேவைகளைக் கூட மிச்சம் பிடித்து, “ஷேரிங்” முறையில் ஒரு வீட்டின் ஒரே அறையில் பிள்ளை, குட்டிகளுடன் குடித்தனம் நடத்தும் மிடில் க்ளாஸ் குடும்பங்களே இங்கே அதிகம். அவர்கள் இத்தனைச் செலவுக்கும் எங்கே போவார்கள்? அதனால், அவர்கள் தேடுவது, “ஃப்ரீ விஸா” பணிப்பெண்களை!! அதென்ன ஃப்ரீ விஸா?

மேற்சொன்ன அத்தனைச் செலவுகளையும் செய்து ஒருவரால் (இவர் ஸ்பான்ஸர் என்று அழைக்கப்படுவார்) அழைத்து வரப்பட்ட ஒரு பணிப்பெண், அழைத்து வரப்பட்ட அந்தக் குடும்பத்திற்கு வேலை செய்யாமல், வெளியாட்களுக்கு வேலை செய்வதுதான் ஃப்ரீ விஸா!! இது எப்படி சாத்தியம்?  ஒன்று, அந்தப் பணிப்பெண், தம் ஸ்பான்ஸருடன்  ஒரு வாய்மொழி ஒப்பந்தம் செய்து கொள்வார், ’விஸாவுக்கானச் செலவைத்  தந்துவிடுகிறேன். ஆனால், வெளியே தனிப்பட்ட முறையில் வேலை செய்துகொள்கிறேன்’ என்று.   

இரண்டாவது முறை: மேற்சொன்ன முறையில் ஸ்பான்ஸருக்குப் பணம் தரவேண்டுமே, அந்தச் செலவைத் தவிர்க்க இந்த முறை. அதாவது, கொஞ்ச நாள் ஸ்பான்ஸர் குடும்பத்தில் சிலகாலம் வேலை செய்யவேண்டியது. பிறகு, அவர்கள் அசந்த நேரத்தில், வெளியேயுள்ள தம் நண்பர்கள் உதவியோடு வீட்டை வெட்டு வெளியேறி, வெளியே தங்கிக்கொண்டு, வேலை தேடிக்கொள்ள வேண்டியது.

சரி, ஸ்பான்ஸரைத் தவிர இன்னொருவருக்கு வேலை செய்வது சட்டப்படி தவறில்லையா? குற்றம்தான். ஆனாலும், போலிசில் பிடிபட்டால், தண்டனையெல்லாம் பெரிதாக ஒன்றுமில்லை.  அவரது ஸ்பான்ஸரைத் தேடிக் கண்டுபிடித்து, அவரிடமிருந்தே, இப்பணிப்பெண்ணுக்கான டிக்கட் தொகையை வசூலிக்கும்வரை, அரசாங்கச் செலவில் ஜெயிலில் சிலநாட்கள் வைத்திருப்பார்கள். ஸ்பான்ஸர் செலவிலேயே விஸாவைக் கேன்ஸல் செய்துவிட்டு, டிக்கட்டும் வாங்கி, ராஜமரியாதையோடு - அதான் போலீஸ் காவலோடு - விமான நிலையம் கூட்டிவந்து, விமானத்தில் ஏற்றியும் விடுவார்கள்!! மேலும், இவர்களை (சட்டத்திற்குப் புறம்பாக) வேலைக்கு வைத்திருந்தார்களே அவர்களுக்கு 50,000 திர்ஹம் அபராதம்!! ஆக, அந்தப் பணிப்பெண்ணுக்கோ ஒரு செலவுமில்லை - விஸாவும் ஃப்ரீ, டிக்கட்டும் ஃப்ரீ, இடைப்பட்ட காலத்தில் சம்பாதித்த பணமும் கிடைச்ச மாதிரி ஆச்சு!! இங்கே வீட்டு வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை ஏன் மிக அதிகம் என்பதன் சூட்சுமம் இதுதான்.

முதல் முறையாக அரபுநாடுகளுக்கு வேலைக்கு வருபவர்களில், பெரும்பாலும் அதிகப் பணிச்சுமை, சம்பளம் தராதது போன்ற காரணங்கள் இருந்தால் மட்டுமே ஸ்பான்ஸர் வீட்டைவிட்டு வெளியேறுபவர். அப்படி வெளியேறினாலும், அதிர்ச்சியடைந்த நிலையில் இருக்கும் இவர்களது நோக்கம் எப்படியாவது ஊர் போய் சேர்ந்தால் போதும் என்பதாகத்தான் இருக்கும் என்பதால், பிறர் உதவியுடன் நேராகத் தம் நாட்டு தூதரகத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோதான் செல்வார்கள். இப்படி வெளியே வேலைபார்க்க முன்வருவது மிக அரிது.

ஏற்கனவே ஒரு ஸ்பான்ஸர் குடும்பத்தில் பல வருடங்கள் வேலைபார்த்து அனுபவம் பெற்றவர்கள், தம் நண்பர்கள் மூலம் வெளிமார்க்கெட் நிலவரத்தைக் கண்டு, இங்கிருந்து வெளியேறினால் நிறையச் சம்பாதிக்கலாம் என்று மனப்பால் குடித்து, வெளியேறுவதே அதிகம் நடக்கிறது. பின்னர், அது வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாகி விடுகிறது. ஏனெனில்,  ஸ்பான்ஸரோடு இருந்த வரை, உணவு, உறைவிடம், உடை, அத்தியாவசியப் பொருட்கள், டிக்கெட், டாக்டர் செலவு எல்லாமே கிடைத்துவிடும்.  ஏன் ஃபோன் செலவுகூட பெரும்பாலும் அவர்களே தந்துவிடுவார்கள். வெளியே வந்தா, தனிக்குடித்தனம் வந்த கதையாக, வரவுக்கு மிஞ்சிய செலவு ஆகும்கிறதை பின்னர்தான் உணர்கிறார்கள்.  

சரி, இப்ப என் கதைக்கு வருவோம்.  அங்கேயிங்கே விசாரித்து, சில மாதங்களில் ஒரு (நண்பரின்) நண்பர் வீட்டில் வேலை செய்துவந்த இலங்கைத் தமிழரான ஸ்டெல்லா,  வேறு வேலை தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இவர் நான் சொன்ன முதலாம் வகை ஃப்ரீ விஸாவில் - அதாவது, ஸ்பான்ஸர் அனுமதியோடு - வெளியே வேலை செய்பவர். அவர் அமீரகம் வந்து (அப்போதே) 16 வருடங்கள் - அதுவும் ஒரே ஸ்பான்ஸரின் விஸாவில்தான் - ஆகிவிட்டது என்பது எனக்கு ஆச்சர்யத் தகவல்.

அப்படியே ஆறு வருடங்கள் என்னோடு இருந்தார். (வந்து செல்வார்).  பின்னர், என் கணவரின் பணி இட மாறுதல் காரணமாய் வேறு ஊர் சென்றபோது, என் வேலையையும் விட நேர்ந்தது. ஸ்டெல்லாவும் வேறு வேலை தேடிக்கொண்டார். பின்னர் மீண்டும் அபுதாபி வந்து, மீண்டும் வேலை+பணிப்பெண் தேடும் படலம் ஆரம்பித்தபோது, அவரைத்தான் முதலில் தொடர்பு கொண்டேன். என்னைவிட்டுப் போனதிலிருந்து, ஒரு மலையாளக் குடும்பத்தோடு இருப்பதாகவும், திடீரென அவர்களைவிட்டு வருவது முறையல்லவே என்றும் வருத்தம் தெரிவித்தார்.

பிறகு, நண்பர்களிடம் விசாரித்தும் ஆள் கிட்டாததால், பேப்பரில் விளம்பரம் கொடுத்து, (யப்பா... விளம்பரம் வெளிவந்த முணுநாளும் என் ஃபோனுக்கு ஓய்வில்லை!!) அதன்மூலம் ஒரே வருடத்தில் மூன்று பேர் அமைந்தும், மாறியும் விட்டார்கள்.மூவருமே ஃப்ரீ விஸாக்காரர்கள்தான்.

பிறகு என்ன செய்தேன்? நாளை தொடரும்....
Gகத்தாமா - 2

Post Comment

லொக்.. லொக்.. வந்துட்டோம்ல.. லொக்.. லொக்..




 
 

தலைப்பைப் பாத்தே புரிஞ்சிருப்பீங்க என் நிலைமையை!! இப்ப நல்லா (பதிவு எழுதுற அளவுக்குத்) தேறிட்டேன்.  பசங்களுக்குப் பெரிசா உடல்நலம் பாதிக்காதவரை சந்தோஷம்!!

சின்னவனுக்கு 2 முறை  காய்ச்சல் வந்து, டான்ஸில்ஸ் ஆபரேஷன் பண்ணியே ஆகணும்னு இங்க சொன்ன மாதிரியே அங்கயும் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க. ஆனாலும், மாற்று மருத்துவ முறை முயற்சி செய்து பாக்கலாம்னு, ஆயுர்வேத சிகிச்சை எடுத்துகிட்டிருக்கோம்.  ஏற்கனவே பயனடைஞ்சவங்க இருந்தீங்கன்னா சொல்லுங்க. கூடுதல் நம்பிக்கை வரும்.

இந்த முறை ஓடோமாஸ் புண்ணியத்துல கொசுக்கடியிலருந்தும் நல்லா தப்பிச்சுகிட்டோம், . டிப்ஸ் தந்து காப்பாத்துனது என் வாப்பா. பின்ன, வீட்டுக்குள்ள குட் நைட், ஆல் அவுட்னு வச்சு கதவடைச்சுகிட்டு தப்பிச்சுக்கலாம். வெளியே போகும்போது, முக்கியமா ரெயில்வே ஸ்டேஷன்லயும், ரயில்லயும் என்ன செய்ய முடியும்? ஓடொமாஸே துணை!!

இந்தியா போக முன்னாடி, சீக்கிரம் இந்தியாவில செட்டில் ஆகிறதுக்குண்டான வழிகளைப் பாக்கணும்னு நினைச்சிகிட்டுப் போனேன். இப்போ, இன்னும் கொஞ்ச நாள் போகட்டுமேன்னு தோணுது. வேறென்ன, வழக்கம்போல சுத்தம், சுகாதாரம்தான். அப்ப இங்க இருக்க நாங்கள்லாம் மனுசங்க இல்லையான்னு கேக்கக்கூடாது. என்கிட்ட பதிலில்ல. ஏன்னா, இருவத்தஞ்சு வருஷம் அங்கதான் நானும் இருந்தேன்.

இன்னொரு காரணம், விலைவாசி!!  சென்னை அடையாறில தோழி வாங்கின நடுத்தரமான 3 அறை அடுக்குமாடி வீடு ஒண்ணேகால் கோடி ஆச்சாம்!! மூச்சு நின்னுடுச்சு ஒரு செகண்ட்!! ”புறநகர்ல கொஞ்சம் சீப்பா கிடைக்கும்; ஆனா, கணவர் ஐரோப்பாவில் இருப்பதால், பாதுகாப்பு கருதி இங்க வாங்கினேன்”னு சொல்றா.

இன்னொரு ஷாக், பள்ளி கட்டணங்கள் மற்றும் கடுமையான பாடவேளைகள். நாகர்கோவிலில் ஒரு குறிப்பிட்ட பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் சேர (நன்கொடை உட்பட) ஒரு வருடக் கட்டணம் ரூ. 80,000!! இதை நான் அதிர்ச்சியோடு ஒருவரிடம் சொல்ல, அவரின் உறவினரோ தனது மகளைச் சென்னையில் மிகப் பிரபலமான பள்ளியில் எல்.கே.ஜி. சேர்க்க நன்கொடை (மட்டும்) ஒரு லட்சம் கொடுத்தாராம்!! நான் மயங்கி விழாத குறைதான்!!

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முழுவதும் வகுப்பு நடந்துள்ளது. அப்பத்தானே சீக்கிரம் நவம்பரிலேயே பத்தாம் வகுப்பு பாடங்களைத் தொடங்க முடியும்!!

பதினொன்றாம் வகுப்பில் பாட நேரம் எப்படி தெரியுமா? காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை!! நெசமாத்தாங்க!! 6-8 am & 5-7 pm 12ம் வகுப்பு பாடங்களும், 9-4 ல் 11ம் வகுப்பு பாடங்களும் நடத்தப்படுமாம். கேட்டுக் கொண்டிருந்த எனக்கே மூளை குழம்பியது. படிக்கும் பிள்ளைகள் என்னாவார்களோ!!

என் பையனை இப்படிக் கொடுமைக்கு ஆளாக்கணுமானு தோணுது!! ஆனா, ’பொறுப்பான பெற்றோரா’ அப்படிப் படிக்க வைக்கலியேன்னு குற்ற உணர்வும் வருது!!

பல பள்ளிகளில், இம்மாதிரிக் கொடுமையெல்லாம் இல்லை. ஆனால், அம்மாணவர்கள் பிரைவேட்டாக டியூஷன் போவதால் அவர்களுக்கும் இந்நேர முறைதான்!! டியூஷன் ஃபீஸ் இப்பவெல்லாம் வருஷ முழுமைக்கும் முதல்லயே கட்டிடணுமாம்!! 9-ம் வகுப்பிலேயே டியூஷன் சேர்ந்து, 10-ம் வகுப்புக்கான முழு கட்டணத்தையும் கட்டினால், ரூ. 2000 தள்ளுபடி உண்டு!!

அரைமணிநேர தொலைவில் உள்ள கல்லூரியின் பேருந்து கட்டணம் ரூ. 3000/; ஐந்து பேர் மட்டும் பள்ளி செல்லும் ஆட்டோவுக்குக் கட்டணம் ரூ. 1000/. ஒரு மாசத்துக்கு மட்டும்ங்க!!

இப்படி பலப்பல ஷாக்குகளைக் கண்டு, கேட்டு வந்ததினாலத்தான் ஜுரம் வந்துடுச்சோ என்னவோ!!

  
 
 

Post Comment

உள்ளூர் உறவுகள்




"லோ, சாச்சி!! நல்லாருக்கியா?”

“அலோ!  நீயா? நாங்க நல்லாருக்கம். நீ நல்லாருக்கியா? மருமவேன், புள்ளையல்லாம் எப்பிடிருக்காங்க?”

“எல்லாரும் நல்லாருக்கோம் சாச்சி.  சாச்சா சொகமாருக்காங்களா?”

“ஆமா. அதாரு அங்கன இருமுற சத்தம் கேக்குது. சின்னவனா? ஏன் இப்பிடி இருமுறான்? குளுந்ததுகள குடிச்சானா? நாளக்கழிச்சு நம்ம மேலத்தெரு காஜா அங்க வர்றான்; அவன்ட்ட அக்கரா பொடி குடுத்துவுடுறேன், தேன்ல குழப்பி மூணுநாளைக்கி குடு புள்ளைக்கி, சரியாயிடும்.”


லோ, மாமா, நாந்தான் பேசுறேன். எல்லாரும் சொகமா?”

“ஆமாம்மா.  ஏம்மா, அங்க இந்த வருஷம் வெயில் ஜாஸ்தியாமே? மாப்பிளைக்கு இப்பவும் வெளிய சைட்ல வேலை இருக்கா? நிறைய தண்ணி, மோர் குடிக்கச்சொல்லு. பிள்ளைகளுக்கும் தலையில குளுகுளுன்னு நல்லெண்ணை தேச்சு விடும்மா. இங்கன உள்ள வெயிலே நமக்குத் தாங்க முடியலை?”

 ”சரி மாமா...”

“ஏம்மா, முந்தி வாங்கின நிலத்துக்கு வேலி போட்டாச்சுல்ல? இல்லன்னா சொல்லு, ஏற்பாடு செஞ்சிடலாம்.  சொத்து வாங்குறதவிட, அத முறையா பாதுகாக்கணும், அதான் முக்கியம்! ஆமா, அதுக்கப்புறம் ஒண்ணும் வாங்கலியா? கட்டுசெட்டா இருந்து சேத்தாத்தானேம்மா பின்னாடி ஒதவும்? சுதாரிப்பா இருந்துக்கம்மா? ”

லோ, மைனி நல்லாருக்கீங்களா?”

“நல்லாருக்கோம்; பிள்ளைகளுக்குப் பரிட்சைதானே இப்ப?”

“ஆமா மைனி; மைனி, இப்பத்தான் ஞாபகம் வந்துது, ரேஷன் கார்டுல சின்னவன் பேரைச் சேக்கலைன்னு நினைக்கிறேன். அண்ணன்ட சொல்லி கொஞ்சம் பாத்து சேத்துடச் சொல்லமுடியுமா மைனி? இப்ப சென்ஸஸ் வேற எடுக்குறாங்களே, அதுக்கும் வேணும்ல, அதான்..  அண்ணனுக்குக் கஷ்டம் இல்லியே?”

“அதெல்லாம் நீ கவலைப்படாதே. இதில என்ன பெரிய கஷ்டம்? நான் பாத்து  எல்லாம் முடிச்சுட்டு தகவல் சொல்றேன். நீ சின்னவன் முழுப்பேரும், பிறந்த தேதியும் மெஸேஜ் பண்ணு போதும். நேத்துதான் உனக்கும் சேத்து மாசி பொடிச்சேன். யார் வர்றான்னு பாத்து குடுத்து விடுறேன் என்னா?”

லோ, அண்ணே,  வீட்டில எல்லாரும் சுகம்தானே?”

“எல்லாரும் சுகம். அங்க எப்படி? ஆமா, அடுத்த மாசம் லீவாச்சே பிள்ளைகளுக்கு? ஊருக்கு வரலியா? அப்புறம், சொல்ல மறந்துட்டேன், எல்.ஐ.ஸி. பாலிஸி ரெண்டுத்துக்கும் பணம் கட்டியாச்சு. வீட்டுத் தீர்வையும் கட்டிட்டேன். நீ வரும்போது பில்லை மறக்காம வாங்கிக்கோமா!”

“அண்ணே...”

“நீ என்ன சொல்லுவன்னு தெரியும். தாங்க்ஸெல்லாம் சொல்ற அளவுக்கு உன் வீட்டுக்காரரோட எனக்கு மேலோட்டமான ஃப்ரண்ட்ஷிப் இல்லன்னு உனக்கும் நான் எத்தினிவாட்டி சொல்றது?”

லோ சின்னாப்பா, நாந்தான். நல்லாருக்கியளா?”

“அட நீயா? நல்லாருக்கம் மவளே. அங்கன எல்லாரும் சவுக்கியந்தானே? உன் வாப்பா, உம்மாட்ட நான் நெதம் பேசிட்டுதான் இருக்கேன். நீ ஊருக்கு வர்றியாமே? நம்ம ஃபைஸல் இந்த வருஷம் பி.ஈ. முடிச்சிட்டான் தெரியுமா? ”

“ஆமா சின்னாப்பா. என்ன செய்யப் போறானாம்? இந்தப் பக்கம் வர்ற மாதிரி ஐடியா இருக்காமா?”

“இல்லம்மா. அங்கல்லாந்தான் இப்ப நெலம சரியில்லன்னு சொல்றாங்களே. இருக்கிறவங்க வேலைகளுக்கே பிரச்னைன்னு சொல்றாங்க. அதில நீங்க வேற ஏம்மா இவனுக்கு விஸா, வேலைன்னு அலையணும்? இங்கயே எதாவது பாத்துக்கடான்னு சொல்லிட்டேன். சரிதானே? ஆமா, சின்னவனுக்குப் புடிக்கும்னு கோதுமைப் பணியம் கொடுத்துவுட்டேனே, விரும்பிச் சாப்பிட்டானா?”

ருகில் இல்லையென்றாலும் எனையும் மறவாது, உரிய அறிவுரைகளும் தந்து,  பலப்பல உதவிகளும் செய்யும் என் அருமை சொந்தங்களாலும், நட்புகளாலும்தான் என் நிம்மதியான வெளிநாட்டு வாழ்வு சாத்தியப்படுகிறது.  இதற்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்? நான் தரும் சின்னச் சின்ன  அன்பளிப்புகள்கூட அவர்களின் அன்புக்கு முன் ஒன்றுமேயில்லை!!
  
  

Post Comment