Pages

திருத்தாத தீர்ப்புகள்
என்னென்ன முன்னேற்பாடுகள்!! கூட்டம் கூடக்கூடாது, க்ரூப் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, சில இடங்களில் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை, “மக்களே, அமைதி காக்கவும்”னு அரசியல் மற்றும் மதத்தலைவர்கள் வேண்டுகோள்கள்... பதிவர்கள் பதிவு போட்டு அமைதியா இருங்கங்கிறாங்க, கவிதை எழுதுறாங்க.. குழு மடல்கள் அனுப்புறாங்க...  இதெல்லாம் என்னத்துக்குன்னு தெரிஞ்சிருக்குமே உங்களுக்கும்? ஆமா, நாளைக்கு வரவிருக்கிற ஒரு நீதிமன்ற  தீர்ப்புக்காகத்தான் இத்தனை அலப்பறைகளும்!!

நாளை தீர்ப்பு வரவிருக்கின்ற வழக்கு குறித்தோ, அதன்  விவரங்கள் பற்றியதோ இல்லை எனது இந்தப் பதிவு!!

ஒரு வழக்கின் தீர்ப்புக்கு ஏன் இத்தனை எதிர்பார்ப்பும், எதிர்வினைகளும்? ஒரு வழக்கு நடந்து, அதன் தீர்ப்பு வந்தால் அதை ஏற்றுக் கொள்ளவேண்டும்; அல்லது மேல் முறையீடு செய்ய வேண்டும். அதை விடுத்து. சாதகமாகத் தீர்ப்பு பெற்றவர்கள்/பெறாதவர்கள்  ஏன் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவேண்டும்?

இதுகுறித்துப் பேசும்போது, நிச்சயம் எல்லாருக்கும் தர்மபுரி பஸ் எரிப்புக்குக் காரணமான வழக்கு முடிவும்,  தினகரன் வழக்கு முடிவும், இன்னும் பல வழக்குகளின் “ட்ராமடிக்” முடிவுகளும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது!!


இப்போது நடக்கும் பல வழக்குகளின் தீர்ப்புகளும் வியப்பையும், சலிப்பையும்தான் தருகின்றன. கீழ்கோர்ட்டில் ஒருவித தீர்ப்பு வந்தால், அதே வழக்கிற்கு  மேல்கோர்ட்டில் வேறுவித தீர்ப்பு வருகிறது. அப்படின்னா என்ன அர்த்தம்? நீதிபதிகளையோ, அவர்கள் வழங்கும் தீர்ப்புகளையோ குறை சொல்லவில்லை. ஒரு வழக்கு ஆரம்பிக்கும்போது, சம்பவத்தின் தாக்கத்தில் சாட்சிகள், பிரதிகள், வாதிகள் எல்லாரும் சரியாக வழக்கில் பங்குபெறுவார்கள். அதுவே,  வழக்கு இழு, இழுவென்று  இழுத்து, வாய்தா மேல் வாய்தா வாங்கி நொண்டியடிக்க ஆரம்பிக்கும்போது வழக்கில் சம்பந்தப்பட்ட எல்லாருக்குமே ஒரு வெறுப்பு வரும்.

அதுவே, கீழ்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின், தீர்ப்பில் ஒப்புதல் இல்லாதவர், மேல்முறையீடு செய்து மீண்டும் வழக்கு நடக்கும்போது, சாட்சிகள் வலியவரின் மிரட்டல் காரணமாகவோ, அல்லது பணத்துக்கு மயங்கியோ பல்டி அடிக்க நேரும்போது தீர்ப்புகள் வேறுவிதமாக வரும் வாய்ப்புகள் அதிகம்.  பல வழக்குகளிலும் அதைக் கண்கூடாகக் கண்டும் இருக்கிறோம்.

சமீபத்தில் நடந்த சில வழக்குகளில் கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவர்கள், மேல்கோர்ட்டில் விடுதலை ஆயினர். இதனை அறியும்போது, நம் மனதில் என்ன தோன்றும்? சாட்சிகளை விலைக்கு வாங்கியிருப்பார்களோ என்றுதானே? சென்ற வருடமோ, முன்போ, இதுபோல ஒரு வழக்கில் இவ்வாறு சாட்சி பிறழ்தல்கள் நடந்தபோது, சாட்சிகளுக்கு நீதிபதியால் அபராதம் விதிக்கப்பட்டது.

இன்னொன்று, காலம் கடந்து சாட்சியம் சொல்ல வரும் சாட்சிகள் ஞாபகக் குறைபாடு காரணமாகத் தடுமாற, அது “benefit of doubt" என்ற வகையில் குற்றம் சாட்டப்பட்டவருக்குச் சாதகமாகப் போய்விடுகிறது.

இதோ, இபோதும் நாளை தீர்ப்பு வழங்கவிருக்கப்படும் வழக்கும் பாருங்களேன், 60 வருடங்களாக நடந்து வருகிறது!! இது ஒரு பொது இடம் குறித்த வழக்கு என்றாலும் ஆதாரங்களைத் திரட்ட 60 வருடங்களா வேண்டும்? (இச்சமயத்தில் ஒரு கேள்வி எழுகிறது: ஒரு கட்டிடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அதை இடித்து விடுவது நீதிமன்ற அவமதிப்பாக ஆகாதா? #டவுட்)


அதேபோல, நீதிமன்ற வழக்கு விசாரணையாக அல்லாமல், அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன்களின் முடிவுகள்/ஆலோசனைகளும் செயல்படுத்தப்படாமல் அல்லது படவிடாமல் தடுக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கின்றன.  உதாரணம், கிருஷ்ணா கமிஷன்.

சட்டக்கல்லூரிகளில் நடக்கும் அராஜகங்களும், நாட்டின் சட்ட-ஒழுங்கைப் போற்றிப் பராமரிக்க வேண்டிய காவலர்கள்-வக்கீல்கள் மோதல்களும், ஏழை இந்தியனுக்கு,  நீதி கிடைக்க இவர்களிடம் வருவதைவிட கட்டப்பஞ்சாயத்து நடத்துபவர்களிடம் போவதே மேல் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன.

ஏற்கனவே, வழக்குகளுக்கு ஏற்படும் செலவுகளும், கால விரையமும் மக்களை நீதிமன்றங்களில் வழக்குப் போடுவதைத் தவிர்த்து, கோர்ட்டுக்கு வெளியே சமரசமாகப் போய் (அல்லது போய்த் தொலைகிறது என்று)  விட வழிவகுக்கும் நிலையில், நீதித்துறையிலும், காவல்துறையிலும் இன்று நடப்பவை மக்களுக்கு மேலும் நீதிமன்றங்களின் மீது அவநம்பிக்கையை வளர்க்கும் வாய்ப்புகளைத்தான் உருவாக்குகின்றன.

ஒரு கட்டப்பஞ்சாயத்து தாதா நடத்திய தனியார் நீதிமன்றம் அண்மையில் வெளியே வந்தது. அதிகளவு மக்களும் அதில் பயனாளிகனாக இருந்திருக்கிறார்கள்.  நீதித்துறை மீதிருக்கும் அவநம்பிக்கையாலேயே மக்களும் இத்தகைய கட்டபஞ்சாயத்து தாதாக்களையும், தனியார் நீதிமன்றங்களையும் நாட வேண்டிய கட்டாயத்திற்கு விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்படுகிறார்கள்.
 
சரியான சீர்திருத்தங்கள் அரசால் சட்ட/நீதித் துறையில் கொண்டுவரப்பட்டு, புனரமைக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற
தனியார் நீதிமன்றங்கள் பெருகி, அரசின் நீதித்துறையும் “அரசு கேபிள் நிறுவனம்” போலாகிடும்!!
  
 

Post Comment

எப்படி இருந்த நான், இப்படி..
  
 
”பாடினியார்” ஜெயந்தி  மூணுமாசம் முன்னாடி ”திருமணத்தில் உங்களளவில் நிகழ்ந்த காம்ப்ரமைஸ்கள் அல்லது நிராசைகள், முதல் பிரச்சினைகள், தர்மசங்கடங்கள், உரிமை நிலைநாட்டல்கள் - சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் “மருமகளின் டைரிக்குறிப்புகளை பற்றி எழுத அழைச்ச தொடர்பதிவு இது; ஸாரி ஃபார் த லேட் கமிங்!!

கல்லூரியில் படிக்கும்போதுதான் பெண்ணீயம், பெண்ணுரிமை, பெண் சுதந்திரம்   எல்லாம் குறித்தும் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்தேன். பெண்கள் சுதந்திரம் குறித்த மீட்டிங்குகள் கல்லூரியிலோ, சுற்று வட்டாரத்திலோ (வெளியூர்னா வீட்டில விடமாட்டாங்கல்ல)  நடக்கும்போதெல்லாம் நானும் ஆஜர்!! அதுவுமில்லாம எங்கம்மாவுக்கும் மாமியார்-நாத்தனார் கொடுமைகள் நடந்ததுண்டு. இன்னும் சில நெருங்கிய உறவுகளில் மாமியார் கண்டிப்பினையும் கண்கூடாகக் கண்டு வந்ததால், புகுந்த வீட்டினர் என்றாலே இப்படித்தான் இருப்பார்கள் போல என்று புரிந்துகொண்டேன். பத்திரிகைகள், கதைகள், சினிமாக்களிலும் சித்தியைப் போல மாமியாரும் கொடுமையானவராகவே இருந்தது இன்னும் பயம் ஏற்படுத்தியது.

அதனாலேயே இன்னுமதிகம் பெண்ணுரிமைக் கூட்டங்களில் கலந்துகொண்டேன்.  இந்தப் பெண் விடுதலை குறித்த சந்திப்புகளும் எனக்கு நல்ல தைரியத்தையும் ஊட்டி, முற்போக்கு எண்ணங்களையும் வளர்த்து, எனது உரிமைகளையும் தெளிவாக அறியவைத்த அதே சமயம், மாமியார், நாத்தனார்கள்தான் பெண்களின் எதிரிகள் எனவும் அறுதியாகப் புரிய வைத்தன. இப்படியாக நானும் என்னைத் தயார் செய்துகொண்டேன்.

என்ன தயார் செய்துகொண்டாலும், வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம்தான் வேண்டும் என்ற என் விருப்பங்களை வெளிப்படையாகச் சொல்லமுடியாத அளவு கட்டுப்பாடான, கண்டிப்பான  அம்மா!!  அப்பாவிடம் சொல்லலாம் என்றாலும், வெட்கமாக இருந்தது. தத்துபித்தென்று ஏதோ கொஞ்சம் சொல்ல, “அப்படியொரு வரன் அமைந்தால் எனக்கும் சந்தோஷம்தான்; ஆனால், அதற்காக அப்படி இடம்தான் வேண்டும் என்று என்னால் காத்திருக்க முடியாது” என்று சொல்லிவிட, எனக்கும் பிடிவாதமாக இருக்க முடியவில்லை. ஏனெனில், வேறுசில காரணங்களோடு, என் படிப்பு மற்றும் வேலையாலும் வரிசையாகத் தட்டிப் போன வரன்களும், என் மூன்று தங்கைகளும்!!

எங்களின் எந்தவித முயற்சியுமில்லாமலேயே, என் விருப்பப்படியே, ஆசைப்பட்ட படியே வரதட்சணை, சீர், செனத்தியென்று எதுவும் எதிர்பாராத இடம் அமைந்தது. இது எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது என்றுகூடச் சொல்லலாம். ஆமா, பின்னே? கஷ்டப்பட்டு டியூஷன், கோச்சிங்லாம் போய்ப் படிச்சு, எப்பேர்பட்ட ‘டஃப்பான’ கொஸ்டின் பேப்பரா இருந்தாலும் சமாளிச்சுடலாம்னு தெனாவட்டா பரீட்சைக்கு ரெடியா இருந்தா, ரொம்ப ஈஸியா கேள்வித்தாள் அமைஞ்சா “புஸ்”னு ஆகுமே அதுபோல ஆகிடுச்சு எனக்கு!! இருந்தாலும் அவங்க வீட்டில உள்ளவங்க எப்படி இருந்தாலும் நான் முதல்ல உறுதியா இருந்து என் உரிமைகளை நிலைநாட்டிக்கணும்னு நினைச்சுகிட்டேன்.

அப்புறம், என் சார்பா நான் தனியா பத்திரிகை அடிச்சுகிட்டேன். எங்க ஊர்லயே மணப்பொண்ணு தனியா பத்திரிகை அடிச்சுகிட்டது முதமுதல்ல எங்க வீட்லதான்னு நினைக்கிறேன்!! அதுல என் பேர் முதல்ல வந்ததப் பாத்து சந்தோஷப்பட்டுகிட்டே வந்தா, எங்க வீட்டில் அடிச்ச கல்யாணப் பத்திரிகையிலயும் என் பேருதான் முதல்ல!! இதுவும் “புஸ்”!! அதனால, என் வீட்டு சார்பா வச்ச அலங்காரத் தட்டிகள்ல என் பேரு முதல்ல வர்ற மாதிரி பாத்துகிட்டேன். ஆனா, அதை ஒரு ஈ, காக்கா கூட கண்டுகிடாததினால, அதுவும் ”புஸ்”!!

கல்யாணத்துக்கு முன்னாடி நாத்தனார் கூப்பிட்டு என்ன கலர் புடவை வேணும்னு கேக்க, நான் ”பட்டெல்லாம் வெறும் கலர் பார்த்தா எடுக்க முடியும், டிஸைன், கலர் காம்பினேஷன்லாம் பாத்துதான் எடுக்கணும்”னு பந்தா விட, உடனே அவங்க, “நானும் அப்படித்தான் நினைச்சேன்; ஆரெம்கேவிதானே, பேசாமே நீயும் அங்க வந்துடு, சேந்தே பாத்து எடுத்துக்கலாம்”னு சொல்ல, இதுவும் புஸ்!! “சே, நமக்கு சான்ஸே கொடுக்க மாட்டேங்கிறாங்களே”ன்னு நொந்துகிட்டேன். ஆனாலும் விடாமல், அவங்க எடுக்க நினைச்ச விலைக்கு, கிட்டதட்ட பாதி விலைக்குத்தான் எடுப்பேன்னு அடம்புடிச்சு நிறைவேத்திகிட்டேன்.

இதெல்லாம் ஆரம்ப ஜோர். இதுக்கெல்லாம் மசிஞ்சுடாதே; கல்யாணத்துக்கப்புறம் கண்டிப்பா (போராட) நல்ல வாய்ப்பு கிடைக்கும்னு என் மனச நானே சமாதானப்படுத்திகிட்டேன். இன்னும் ஆழமா என்னைத் தயார் பண்ணிகிட்டு, புகுந்த வீட்டுல அடியெடுத்து வச்சேன். ஆனா, நான் எவ்வளவோ தயார் பண்ணிகிட்டு வந்தாலும், அவங்க கையில வச்சிருந்த  ஆயுதத்துக்கு முன்னாடி என்னோட  முன்னேற்பாடுகள் எதுவுமே செல்லுபடியாகலை!! ஆமாம், அவங்களோட அந்த பயங்கர ஆயுதம் “அன்பு”!! அதற்குமுன் எது செல்லுபடியாகும்? இப்பவும் “புஸ்”!!

இத்தோடு, எந்த பண்டிகைச் சீரும் வேண்டாமென்று மறுத்ததும் என் வேலையைச் சுலபமாக்கியது. ஏன், நானே விரும்பிக் கேட்டும், வளைகாப்புகூட நடத்தவில்லை என் மாமியார். “மற்ற மருமகள்களுக்கும் செய்ததில்லை; உனக்கு மட்டும் செய்தால், அது பாரபட்சம் பார்ப்பது போலாகிவிடும்” என்று சொல்லிவிட்டார்.

இப்படி நான் செய்ய வேண்டியதெல்லாம் எனக்கு முந்தி அவங்களே செஞ்சு, என் வேலையைச் சுளுவாக்கி, in-lawsக்கெதிரா புரட்சி பண்ணி ஒரு ஜான்ஸி ராணியா வந்திருக்க வேண்டியவளை பிளான் பண்ணி அன்பால அடிச்சு “புஸ்” ஆக்கி,  இப்படி ஒரு சாதாரண பதிவராக்கிட்டாங்களோன்னு இப்பத்தான் எனக்கு சந்தேகம் வருது! :-)))))

இதனால் எனக்கு புகுந்த வீட்டில் எப்பவும் அன்பு மழைதான் என்று அர்த்தமில்லை; சிலபல சங்கடமான சுழ்நிலைகளும் வரும்; ஆனால், அப்பொழுதெல்லாம், தளர்ந்துவிடாமல், என் நிதானம் தவறிவிடாமல், சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து, மாமியார், நாத்தனார், ஓரகத்திகளைப் பேணி ஒற்றுமையாய் இருக்கும் பொறுமையை எனக்கு இந்தச் சம்பவங்கள் தருகின்றன.

உதாரணமாக,  திருமணமான சில வருடங்களில் வீடு கட்ட ஆயத்தமான போது, இயற்கை விரும்பியான எனக்கு வேறு விதமாக வீடு கட்ட ஆசை; ஆனால் என் மாமியார் உட்பட மற்றவர்களுக்கு அதில் விருப்பமில்லையென்று புரிந்துகொண்டேன். என் ஒருத்திக்காக அத்தனை  பேரின் ஆசையை நிராசையாக்குவதைவிட, அவர்கள் விருப்பத்திற்கு விட்டுவிடுவதே நல்லது; இறைவனருளால் வசதிவாய்ப்புகள் வாய்த்தால் என் விருப்பப்படி இன்னொரு வீடு கட்டிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன். அதன் விளைவு, தனது நான்கு மகன்கள் கட்டிய வீடுகளில், என் மாமியாருக்கு மிக விருப்பமான வீடு இதுதான். “என் இறுதிப் பயணம் இந்த வீட்டில்தான் நடக்கவேண்டும்” என்று அவர் சொல்லுமளவுக்கு!!

’நான்’, என் பணம், என் கணவர், என் வீடு, என் இஷ்டம்தான் பிரதானம் என்று இருந்திருந்தால் இந்தப் பாக்கியம் கிடைத்திருக்குமா? ஒன்று கிடைக்க ஒன்றை இழந்தே ஆக வேண்டும். எது கிடைப்பதற்காக எதை இழக்கிறோம் என்பதுதான் நம் முடிவில்!!


Post Comment

வீடு
 

நியூசிலாந்து நாட்டில் சென்ற 4-ம் தேதியன்று பூகம்பம் ஏற்பட்டது நினைவிருக்காது பலருக்கும். (சரியாத்தான் எழுதியிருக்கேன்).  நினைவிருக்காததற்குக் காரணம், அதில் உயிரிழப்பு எதுவுமில்லை!! அப்படின்னா ஏதோ சின்ன அளவிலதான் பூமி அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என்று நினைத்தீர்களானால்...தவறு.. வந்தது, 7.1 ரிக்டர் அளவு!!

ஜனவரியில் ஹைட்டியில் (Haiti) 7.0 ரிக்டர் அளவுக்கு வந்த பூகம்பத்தில் இறந்தவர்கள் 2,30,000 - இரண்டு லட்சத்துக்கும் மேலே!!

எப்படி? ஏன்?ன்னு கேள்வி வருதில்லியா? வரணும். இந்த வித்தியாசத்துக்கு முக்கிய காரணம் - கட்டிடங்கள்!! நியூசிலாந்தில் ஒரு உயிரிழப்பு கூட நிகழாததற்கு, அங்குள்ள வீடுகள், அந்நாட்டின் கட்டிட விதிகளுக்குற்பட்டு கட்டப்பட்டிருப்பதுதான் காரணம். அந்நாடு பூகம்ப பகுதியில் அமைந்திருப்பதால், அதற்குரிய விதிகளுக்குட்பட்டுத்தான் கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என்பதில் அந்நாட்டு அரசு கண்டிப்பாக இருப்பதால்தான் உயிரிழப்புகள் தவிர்க்கப்படுவது சாத்தியப்பட்டது.

ஆனால், ஏழை நாடான ஹைட்டியில் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையென்பதால்தான் இத்தனை மரணங்கள்.

பூகம்ப சமயத்தில் கட்டிடங்களின் கான்கிரீட் தளங்கள் இடிந்து மனிதர்கள் மேல் விழுவதுதான் மரண எண்ணிக்கையை அதிகரிக்க வைக்கிறது.இதைத் தவிர்க்க, கட்டிடங்கள் பூகம்பத்தின் அதிர்வுகளை உள்வாங்கிக் கொள்ளும்படி அமைய வேண்டும்; உடைந்து விழும் பகுதிகள், அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தா வண்ணம் இருக்க வேண்டும் என்பதுதான் இதன் அடிப்படை விதி.

www.nasa.gov

An earthquake-resistant building includes such structures as shear walls, a shear core, and cross-bracing. Base isolators act as shock absorbers. A moat allows the building to sway. (Image & text: www.nasa.gov)


வீடுகள் கட்டும் விதம் பற்றி பேசும்போது, கட்டுமானச் செலவை அதிகரிப்பவை பெரும்பாலும் சிமெண்டும், கம்பிகளும், டைல்ஸ், மார்பிள் போன்றவைதான். பதிவர் திரு.கண்ணா என்ற பொறியாளர்-பதிவர் எழுதிய “லாரி பேக்கர் கட்டுமான முறைகள்” பற்றி படித்தபின், அவற்றைப் பெருமளவில் தவிர்த்து கட்டிடம் கட்ட முடியும் என்று தெரிந்து ஆச்சர்யம் அடைந்தேன். மேற்கூறிய கட்டுமானப் பொருட்களை இறக்குமதி செய்வதுதான் கட்டுமான விலையை அதிகப்படுத்துகிறது. வீடு கட்டும் இடத்தில் கிடைக்கும் பொருட்களை மட்டுமே வைத்து வீடு கட்டுவதுதான் சரியான முறை என்பதே இம்முறையின் சாராம்சம்.  


இம்முறையில் கட்டப்பட்ட வீடுகளை இங்கு போய் பார்வையிடலாம். கேரளாவில் அதிகம் கட்டப்பட்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் கட்டப்பட்டனவா, எங்கே என்பதுகுறித்த தகவல்கள் தெரிந்தால் சொல்லுங்கள். 


இன்னுமொரு ஆச்சர்யத் தகவல் கிடைத்தது, இந்தத் தளத்தில்!! அதாவது, சிமெண்ட் கட்டிடங்கள் 60  - 70 ஆண்டுகள் வரையே தாங்கும், அதுவே களிமண்ணால் கட்டப்பட்ட வீடு என்றால் நூறாண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்கும் என்பது!! 
இதப் படிக்கும்போது, முன்காலங்கள்ல சுண்ணாம்பு, கருப்பட்டி கலந்து கட்டப்பட்ட வீடுகள் நல்ல உறுதியாகவே இருந்தன என்பதை நம் தாத்தா காலத்து வீடுகளை இடிக்கும்போது அறிந்திருப்போம்.  ஏன், திருச்சியில் இதே முறையில் கரிகாலன் கட்டிய கல்லணை,  இதோ 1900 வருடங்களாக நிற்கிறதே!!


www.trekearth.com

 
ஊருக்குப் போயிருந்தப்போ, உறவினரின் “கட்டை குத்திய கூரை” வச்ச வீட்டுக்கு  (படத்தில் இருப்பது போல - கூரைப்பகுதியில் இடைவெளிவிட்டு மரக்கட்டை வைத்திருப்பார்கள் - இப்ப இதெல்லாம் பாக்கிறதே அபூர்வம்!!)  போயிருந்தேன். ஏ.ஸி. ஃபேன் இல்லாமலே, வீட்டுள்ளே இருக்கும்போது என்னா குளிர்ச்சி!!  இப்ப சிமெண்ட், டைல்ஸ்னு போட்டுட்டு கூடவே ஏ.ஸி.யும் தேட வேண்டியிருக்கு!!


சென்னை ராயப்பேட்டையில் நண்பரின் சொந்த வீடு இருக்கிறது. பத்து வருடம் முன்னே அவர் அங்கே குடிபோனபோது, கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு. ஆழ்துளைக் கிணறு இருந்தாலும், தண்ணீரில்லை. கார்ப்பரேஷன் தண்ணீருக்கும் தட்டுப்பாடு அப்போது. சென்ற மாதம் அங்கு போயிருந்தபோது, போர் வாட்டர் தாராளம் என்றார்கள். எப்படி? மழைநீர் சேகரிப்புத் தொட்டி சரியானபடி அமைத்து, முறையாகப் பராமரித்ததில், தண்ணீரின் அளவு மட்டுமின்றி, சுவையும் அருமை!!


அதே மாதம், கேரளாவில் ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். தோட்டத்தில் ஆழமில்லாத சிறு கிணறு போன்ற பள்ளம் வெட்டியிருந்தார்கள். மழைநீர் சேகரிப்புக்கா என்று கேட்டேன். “ஆமாம். ஆனால், சேகரிக்கப்பட்ட மழைநீரை டிரெயினேஜோடு சேர்த்து விடுவதற்காக.” என்றார்கள்!! ஏனாம்? அங்கே செம்மண் என்பதால், மழைநீர் எவ்வளவானாலும் உள்ளே உறிஞ்சப்பட்டுவிடும்; அது வீட்டின் அடித்தளத்துக்கு (ஃபவுண்டேஷன்) கேடு என்பதால் இப்படியாம்!! அவ்வ்வ்....னு அழத்தான் தோணுச்சு!!    


ஏன் இப்ப வீடு பத்தி புலம்பல்ங்கிறீங்களா? ஒண்ணரை மாசமா வீடு தேடுறேன் - அதான்!! 

 
 

Post Comment

மீண்டும் வரலாறு!!
http://www.secretwomenssociety.com/
1 & 2) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் - காரணம்?

இணையத்தில் வலம்வந்தபோது, சில இடங்களில் கருத்து தெரிவிக்க/ சந்தேகம் கேட்க வேண்டியது வந்தபோது, ”முன் ஜாக்கிரதை முத்தம்மா”வான நான் மிஸஸ்.ஹுஸைன் என்ற பெயரில் “பாதுகாப்பாக” வலம் வந்தேன்.  அது டைப்ப கஷ்டமாக இருந்ததால், “ஹுஸைனம்மா”வாக அவதாரம் எடுத்தேன். அப்படியே வலைப்பூவிலும்!!

மிஸஸ். ஹுஸைன் எப்படி ஹுஸைனம்மா ஆக முடியும் என்று கேட்டால்: சின்னக் கவுண்டரின் அம்மாவை கவுண்டரம்மா என்றும் சொல்லலாம், மிஸஸ்.கவுண்டர் என்றும் சொல்லலாம் என்ற அரிய தத்துவத்தை நினைவில் கொள்ளவும்!!

3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...

அது பதிவுலகம் பெற்ற பேறு!!

(ஏற்கனவே அந்த மொக்கையை இங்க போட்டாச்சு: வரலாறும், பொறியலும் ... தில் இருந்தா போய்ப் படிச்சுக்கோங்க!!)

4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?

அப்படின்னா நான் பிரபலமாகிட்டேனா?

5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்துகொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன?  இல்லை என்றால் ஏன்?

ஒன்லி சொந்த விஷயம், சொந்தக் கதை, சொந்தக் கருத்து, சொந்தப் பார்வைதான் இங்கே!! ஏன்னா, கதை விடற அளவுக்கு கற்பனை வளம் இல்லை!!

விளைவென்னா பெரிய விளைவு, பல விஷயங்களின் மாறுபட்ட கோணங்களும், பல மனிதர்களின் முரண்பட்ட குணங்களும் கண்டுகொள்ள முடிகிறது.

6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?..

பதிவெழுதி என்னாத்த பெரிசா சம்பாதிச்சுட முடியும் - ஒரு பத்தாயிரம், இருவதாயிரம்? நான் அவ்வளவு சீப்பாவெல்லாம் ஓசிக்கிறதில்ல.

பதிவெழுதி, மக்கள் மனசுல மெதுவா, வலுவா இடம் புடிச்சி, அப்படியே ஜெ.வுக்கோ இல்லை கனிமொழிக்கோ நெருங்கின தோழியாவோ அல்லது முடிஞ்சா நேஷனல் லெவல்ல சோனியாம்மாவுக்கு அஜிஸ்டெண்டாவோ சேந்துட்டா, அப்புறம் நம்ம லெவல் கேடி.. சீ... சீ.. கோடிகள்ல போயிடாது???

7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?

ஒண்ணுத்துக்கே என்னைப் புடி உன்னைப் புடின்னு இருக்குது, இதில எங்கே இன்னொன்னு?

8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?..

சில சமயம் கோவம் வரும். ஆனாலும் உப்பைத் தின்னவன் தண்ணியக் குடிப்பான்கிற விதிப்படி நடக்கும்னு கண்டுக்கிறதில்ல.

ஆனா, ஒரு விஷயம் பாத்து ரொம்ப ஆச்சர்யப்படுவேன்: எதாச்சும் ஒரு சண்டை வரும்; உடனே குரூப் குரூப்பாப் பிரிஞ்சு அடிச்சுக்குவாங்க. அப்புறம், கொஞ்ச நா கழிச்சு இன்னொரு சண்டை வரும்; அதுல பாத்திங்கன்னா, முன்னாடி அடிச்சுகிட்டவங்க ஒண்ணா சேந்துகிட்டு இன்னொரு குரூப்பை துவைப்பாங்க. இதுல அவங்க முன்னாடி அடிச்சுகிட்டது, திட்டிகிட்டதெல்லாம் மறந்து, தேனே மானேன்னு ஒருத்தருக்கொருத்தர் பாராட்டிக்குவாங்க!! மக்களை ஒத்துமையா வக்கிறதுக்குப் பதிவுலகப் பிரச்னைகளும் ஒதவுது போல!!

9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..

”தொடர்புகொண்டு பாராட்டிய” ன்னா - தொலைபேசி அல்லது மெயிலிலா? அப்படி யாரும் தனிப்பட்ட முறையில் பாராட்டவில்லை;  ஆனால், ஆரம்ப காலம் தொட்டு இன்றுவரை, மேலும் இனியும் என் பதிவுகளைப் படித்து/ பின்னூட்டமிட்டு/ ஓட்டளித்துச் செல்லும் ஒவ்வொருவருமே எனக்கு அவ்வாறான மகிழ்ச்சியளிப்பவரே!!

10) கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

தனியா வேற சொல்லணுமாக்கும்??!!
 
 

Post Comment

தேசிய நெடுஞ்சாலைகள்
 
 
(இந்தக் கட்டுரை, “நியூஸ் விகடனில்” “பாஸிடிவ் நியூஸ்” பகுதியில்  செப்டம்பர் 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது.)

என்னே ஒரு பசுமை! அதுவும் திருச்சி - மதுரை (NH45B) சாலையில்! 
சென்னையை விட அதிகம் வெயில் கொளுத்தும் திருச்சிக்கு அருகில் இப்படி மரங்களடர்ந்த மலைகள், தோப்புகள், பசுந்தோட்டங்கள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. மதுரையும் வெக்கையில் சளைத்ததில்லையே, அதனால் ஒரு இன்ப அதிர்ச்சிதான்!!

சாலைவழிப் பயணங்களை விபத்து மற்றும் வாந்தி பயத்தால் அடியோடு வெறுப்பவள் நான். அதிகபட்சம் திருநெல்வேலி - திருவனந்தபுரம்தான் சாலை வழி செல்வது, அதுவும் நேரடி ரயில் இல்லாத காரணத்தால்தான். 

திருநெல்வேலியிலிருந்து திருச்சி, சென்னை செல்வதற்கு ரயில் பயணம்தான் வசதி என்று இத்தனை வருடங்களாக அப்படியே போயாகிவிட்டது. ரயிலில் போகும்போது மதுரை, திருச்சி நகரங்கள் நடுஇரவில்தான் வரும் என்பதால் இவற்றை இதுவரைக் கண்டதும் கிடையாது.

இப்பவும் தவிர்க்க இயலாத ஒரு சந்தர்ப்பத்தில்தான் மதுரைக்கு இந்தச் சாலைப் பயணம். திருச்சி - மதுரை எப்படியும் 3 - 4 மணிநேரம் ஆகும், அதுவும் குண்டும் முழியுமாக வாந்தி வேறு வந்துடுமே என்று பயந்துகொண்டேதான் காரில் ஏறினேன். வரும் வழி முழுவதும் அதிசயம், ஆச்சர்யம், இன்ப அதிர்ச்சிகள்தான்!

முதல் ஆச்சர்யம் - வழு வழு இருவழிச்சாலை! பொதுவாகவே தேசிய நெடுஞ்சாலைகளும்கூட பல இடங்களிலும் குண்டும் குழியுமாக இருக்கும்; மேலும் எதிரெதிரே வாகனங்கள் செல்லும் "single carriage way" என்பதால் விபத்துக்கான வாய்ப்புகள் அதிகம்; அதுவும் இடையில் நகரங்களின் வழியே சாலை செல்லும் இடங்களில் நெரிசலும் அதிகம்.ஆனால், தற்போது புதிதாகப் போடப்பட்டிருக்கும் இருவழிச் சாலை (dual carriage way)  இருபக்கமும் தலா இரு லேன்களுடன் பரந்து விரிந்து, பளபளவென்றிருந்தது. 120 கி.மீ. வேகத்தில் சென்றபோதும் ஒரு  குலுக்கலில்லாமல் வழுக்கிக் கொண்டு போனதில் வாந்தியின் நினைப்புக் கூட வரவில்லை; இயற்கை அழகையும் ரசித்துக் கொண்டு செல்ல முடிந்தது. ஒன்றரை மணி நேரத்தில் மதுரையை அடைந்துவிட்டோம்!!

திருச்சி - மதுரை மட்டுமல்ல, திருச்சி-புதுவை, சென்னை - புதுவை, திருநெல்வேலி - நாகர்கோவில் என்று பல நெடுஞ்சாலைகளில் செல்வதற்குக் கிடைத்த வாய்ப்புகள்,  தமிழகத்தில் சாலைப் பயணம் ஒரு புதிய ரசனையான அனுபவமாக மாறி வருவதைக் கட்டியம் கூறியது.

இந்தியாவிலிருக்கும் நண்பர்கள், உறவினர்களும் சாலைப் பயணங்களையே தற்போது அதிகம் விரும்புகின்றனர். ஆயினும், இவ்வாறான இருவழிச் சாலைகள் வந்தபின்னும் விபத்துகள் நிகழ்வது குறையவில்லை. 

காரணங்கள்...
 
இரு திசைகளிலும் செல்லும் சாலைகளுக்கு நடுவில் மீடியன் இருப்பதால், ஒரு திசையிலிருந்து எதிர்த்திசைக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள், சற்று தூரம் பயணித்து, நிர்ணயிக்கப் பட்ட இடங்களில் மட்டுமே யூ-டர்ன் எடுக்க வேண்டும். ஆனால், குறுக்கு வழியிலேயே பயணப்பட்டுப் பழகியதாலோ என்னவோ, அவ்வாறு செய்யாமல், பலரும் அதே சாலையில் எதிர்த் திசையில் செல்கின்றனர். 

அதாவது வரும் வாகனங்களுக்கு எதிராக அதே சாலையில் சென்று, தம்முயிரை மட்டுமல்லாமல், எதிரே வரும் வாகனங்களில் இருப்பவர்களையும் ஆபத்துக்குள்ளாக்குகின்றனர். 120 கி.மீ. வேகத்தில் சென்றுகொண்டிருக்கும்போது, நேரெதிரே அதே வேகத்தில் இன்னொரு வாகனம் வந்தால் எப்படியிருக்கும்? இதுதான் விபத்துகளுக்குப் பெருமளவில் காரணம்!!

நாங்கள் செல்லும்போது, முழு லோடு ஏற்றிய ஒரு "piaggio" எதிரே வந்து தடுமாற வைத்தது!! 

 www.team-bhp.com

அதுபோல இடையில் உள்ள சிற்றூர்களிலிருந்தோ, இணைப்புச் சாலைகளிலிருந்தோ வந்து நெடுஞ்சாலையில் இணையும் வாகனங்களும் சற்றும் கவனமின்றி, முறையற்ற வகையில் அதிவேகத்தில் வந்து இணைகின்றன!

கிராமங்களில் சாலையைக் கடக்க விழையும் மக்களும் இவ்வாறே எவ்வித கவனமுமின்றிக் கடக்கின்றனர். நாங்கள் செல்லும்போது, ஒரு தாத்தா, கம்பு ஊன்றிக் கொண்டு நிதானமாகச் சாலையைக் கடந்தார். கருமமே கண்ணாகத் தலையைக் குனிந்தே இருந்தார், இந்தப் பக்கம் அந்தப் பக்கம், ம்ஹும், திரும்பவேயில்லையே!மேலும், தடம் பின்பற்றுவது (lane maintaining) என்பதும் ஓட்டுநர்களிடையே குறைவாக இருக்கிறது.  தடம் மாற்றும்போது  முறையான இண்டிகேஷன் இன்றி மாறிச் செல்வது தவறென்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் எப்படிக் களைவது?
 
சிறப்பான சாலைகள் அமைத்து, அவற்றைப் பயன்படுத்துவதற்கு வரிகள் வசூலிக்கும் தனியார் நிறுவனங்களும், அதற்கு அனுமதி கொடுத்திருக்கும் நெடுஞ்சாலைத் துறையும், சாலை ஒழுங்கு பராமரிப்பிற்குப் பொறுப்பான போக்குவரத்துக் காவல் துறையினரும் இணைந்து இவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 

மக்களுக்குப் போதியளவு விழிப்பு உணர்வு ஊட்ட வேண்டும். விளம்பரத் தட்டிகள், நோட்டீஸ்கள் போன்றவை மட்டுமல்லாது, காவல்துறை நெடுஞ்சாலைகளிலும் தொடர்ச்சியாகப் பாரா வந்து (police patrol) விதிகளை மீறுபவர்களைப் பிடித்து கடுமையான அபராதம் மற்றும் தண்டனைகள் வழங்கினால் விபத்துகளை வெகுவாகக் குறைக்கலாம். நிச்சயம் குறைக்க முடியும்!

மேலும், நெடுஞ்சாலைகளில்  நடுவில் வந்து இணைவதற்கு வாகாக சர்வீஸ் ரோடுகள், பாதசாரிகள் கடப்பதற்கு நடைபாலங்கள், கால்நடைகள், மக்கள் மற்றும் பிற வாகனங்கள் சாலையில் குறுக்கிட முடியாதபடி சாலையோரம் மற்றும் சாலை நடுவில் தடுப்புவேலிகள் போன்றவையும் விபத்துகளைத் தவிர்ப்பதற்கு அவசியமானவை. Police patrol-ஐ உடனடி நடவடிக்கையாக மேற்கொண்டாலே பெருமளவில் விபத்துகள் குறைய வாய்ப்புண்டு!
  
 

Post Comment

பசியும், தானமும்
நோன்பு காலமான புனித ரமலான் மாதம் இப்பத்தான் ஆரம்பித்தது போல இருந்தது; இதோ இன்னும் 2,3 நாள்ல முடியப் போகுது.  நோன்பு மட்டுமல்ல இம்மாதத்தின் சிறப்பு, இரவு நேர ‘தராவீஹ்’ என்ற தொழுகையும்தான்.


நோன்பு திறந்ததும், வேலைகளை வேகமாக முடித்துவிட்டு, தராவீஹ் தொழுகையைப் பள்ளியில் கூட்டாகத் தொழுவதற்காக, நேரத்தில் இணைந்து கொள்ளவேண்டி விரைந்துச் செல்வதும் ஒரு சுகம். கூட்டுத் தொழுகையில் என்னைக் கவர்ந்தது, தொழுகைக்கு நிற்கும் அனைவரும் ஒத்திசைந்து, ராணுவ ஒழுங்கோடு, தொழுகையை முன்னின்று நடத்துபவரைப் பின்பற்றி ஒரே நேரத்தில் குனிந்து நிமிர்ந்து இறைவனைத் தொழுவது!


மக்காவில் நடக்கும் கூட்டுத் தொழுகைகளைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும்போது, எந்நாட்டினராயிருந்தாலும், வரிசையில் எறும்புபோல ஒழுங்குடன் நிற்பதும், இமாமின் குரலைப் பின்பற்றி, ஒரு சீராகக் கைகட்டி, குனிந்து நிமிர்ந்து, அமர்ந்து பிரார்த்தனை செய்யும் அழகு மெய்சிலிர்க்க வைக்கும்.  கூடி நிற்பவர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டினர்; வெவ்வேறு கலாச்சாரங்கள்; வெவ்வேறு பழக்க வழக்கங்கள். எனினும், அவர்களை இணைப்பது ஒரே இறைவன். இதுதான் “வேற்றுமையில் ஒற்றுமை”யோ? ஹஜ் காலத்தைவிட, ரமலான் மாதத்தின் கடைசிப் பத்து தினங்களில்தான் மக்காவில் அதிகக் கூட்டம் இருப்பதாகச் சொல்லப் படுகின்றது.ஒரு சமயம் தொழும் விதம் (சரியான/தவறான முறைகள்) குறித்து என் தந்தையிடம் விவாதித்த உறவினரிடம், தந்தை கூறியது, “ஹரத்தில் (மக்காவில் உள்ள கஃபா வளாகம்) வந்து பாருங்கள். எத்தனையெத்தனை நாட்டினர் வருகிறார்கள். ஒவ்வொருவரும் தக்பீர் சொல்வதே (கைகளை நெஞ்சில் கட்டி தொழுகையை ஆரம்பிப்பது) ஒவ்வொரு விதமாக இருக்கும். ஒருவர் நெஞ்சின்மேல் வைப்பார்; ஒருவர் வயிற்றில் வைப்பார்; ஒருவர் கழுத்துக்குக்கும் நெஞ்சுக்கும் இடைப்பட்ட இடத்தில் வைப்பார். எப்படித் தொழுதாலும், வல்ல இறைவனை மனதாரத் தொழுகிறோமா என்பதுதான் முக்கியம்.”

அமீரகம் வந்து இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் கலந்து கொண்ட போதும், மக்கா சென்று வந்த போதும் எனக்கும் அதை உணரும் வாய்ப்புகள் கிடைத்தன. இதுபோன்ற கூட்டுத் தொழுகைகளில் பலதரப்பட்ட மக்களைக் காணும்பொழுதில் நாம் நம்மைக் குறித்துக் கொண்டிருக்கும் செருக்கு உதிர்ந்து விடும் என்பதே உண்மை; பலவித உடல் உபாதைகளைக் கொண்டிருந்தாலும் தவறாமல் தொழுகைக்கு வந்துவிடுபவர்கள், நடக்கவே முடியாத வயோதிகமாக இருந்தாலும் நமக்கு முன்பே வந்து நிற்பவர்கள், “அதிகம் அறிந்த” என்னைவிட பயபக்தியுடன் தொழும் சிறுவயதினர் என்று என்னை  வெட்கப்படவைக்கும் தருணங்கள் அதிகம். கூட்டுத் தொழுகையின் பலன்கள் இவை.


நோன்பு காலங்களில் அமீரகத்தில் இருப்பதே தற்போது என் விருப்பமாக இருக்கிறது.  பல காரணங்கள்:  நோன்பு காலங்களில் நாடு முழுவதுமே அதற்குரிய எண்ணங்களோடு காணப்படுவது, வீட்டு அருகாமையிலேயே அதிக வழிபாட்டுத் தலங்கள் (பள்ளிவாசல்கள்), வேலை/பள்ளி நேரம் குறைப்பது - இவ்வருடம் பள்ளியின் கோடை விடுமுறை நோன்பினால் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று பல்வேறு வசதிகள் இருப்பதால் இருக்கலாம். எனினும், இச்சலுகைகள் எதுவுமல்லாத இந்தியாவிலும் நான் பல வருடங்கள் இருந்தபோது, இறையருளால் நோன்புகால சிறப்பு வணக்கங்களில் குறைபடாமல் ஈடுபட முடிந்தது. மனமிருந்தால் மார்க்கம்!!

மேலும் நோன்பு காலங்களில் நான் இங்கு மிகவும் வியப்பது, ஈகை!! இந்நாட்டின் பள்ளிவாசல்கள் எல்லாவற்றிலுமே இலவசமாக இஃப்தார் உணவு வழங்கப் படுகிறது; பல தனியார்களின் வீடுகளிலும் தினமும் மாலை நேரம் உணவு வழங்கப் படுகிறது.  இந்த ஈகை, நிறைய பேச்சிலர்களுக்கும், Skilled labourersகளுக்கும்  உதவியாக இருக்கிறது. சில நாட்களில் என்னைப் போன்ற குடும்பத்தினர்களுக்கும்கூட!! முன்பெல்லாம் பள்ளிகளில் தரும் உணவை அங்கேயே உண்ணும்படி தட்டுகளில் விளம்பி வைத்திருப்பார்கள்; ஆனால் அம்முறையில் உணவு அதிகம் வீணாகியதால், சென்ற வருடத்திலிருந்து,  மிஞ்சியதை வீட்டிற்கு எடுத்துவர வசதியாக ஃபாயில் பாக்கெட்டுகளில் உணவைத் தருகிறார்கள்.

ரமலான் மாதத்தின் இன்னுமிரு சிறப்புகள் “ஸகாத்” மற்றும் “ஃபித்ரா”  வழங்குவது. அதாவது நம் அன்றாடத் தேவைக்குப் போக, சேமிப்பாக நம்மிடம் இருக்கும் சொத்து/நகைகளின் அளவுகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட  தொகையைக் கணக்கிட்டு, தேவைப்படுபவர்களுக்கு வழங்குவது “ஸகாத்”. நோன்பினால் உணரவைக்கப்படும் பசியின் தாக்கம்,  நம்மைத்  தாராளமாகவே ஈகையளிக்க வைக்கும். இதுவும் வல்லோனின் கணக்கு!!

பெருநாள் தினத்தன்று, யாரும் பசித்திருக்கக் கூடாது என்ற அடிப்படையில்,  ஒன்று அல்லது சில குடும்பங்களுக்கு அரிசி/கோதுமை வழங்குவது “ஃபித்ரா”.

மொத்தத்தில், நமது உறுதியை, மனவலிமையை, நம் எண்ணங்களை, நம்மை (வசதியில் குறைந்த) மற்றவர்களோடு ஒப்பிட்டு நம் நிலையை நமக்கு உணர்த்தி, நம்மை நாமே எடைபோட்டுக் கொள்ள உதவுவது இந்த நோன்பு காலம்!!


   

Post Comment

சுரங்கமே வீடாக..
 
 
தென் அமெரிக்க நாடான சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் அமைந்துள்ள பல்வேறு தாமிரம், தங்க சுரங்கங்களில் ஒன்றான ஸான் எஸ்டீபன் சுரங்க நிறுவனத்திற்குச் சொந்தமான சுரங்கத்தில் ஆகஸ்ட் 5 அன்று நிலச்சரிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வழிகள் அடைக்கப்பட்டதால், அதனுள்ளே 2300 அடி ஆழத்தில் பணியில் இருந்த 33 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் பல்வேறு தடங்கல்கள் ஏற்பட்டதில், 17 நாட்கள் கடந்த நிலையில் அவநம்பிக்கை ஏற்பட்ட நிலையில், ஆகஸ்ட் 22 அன்று அவர்கள் உயிரோடு இருப்பதை அறிந்த போது, அவர்களின் உறவினர்களோடு, உலகமும் உற்சாகமடைந்தது.

சுரங்கத்தில் அவசரத் தேவைக்கென வைத்திருந்த 2 நாளுக்கான உணவை, 33 பேரும் 17 நாட்கள் கட்டுப்பாட்டோடு பகிர்ந்து உண்டதில் பிழைத்து இருந்தனர்!! சுரங்கத்தில் அவர்கள் இருக்கும் இடத்தில் 2 கி.மீ. பரப்புக்கு புழங்குவதற்கு இடம் இருந்தாலும் பாதுகாப்பு கருதி 50 ச.அடி. உள்ள பாதுகாப்பான இடத்தில் குழுமி இருக்கின்றனர்.  தம்மில் ஒருவரை குழுத் தலைவராகக் கொண்டு, அவரது ஆலோசனைகளின்படி கட்டுக்கோப்பாக நடந்து கொண்டுள்ளனர்.


 www.bbc.co.uk

இப்போதான் கண்டுபிடிச்சாச்சே, வெளியே வந்துடலாமேன்னு நினைக்கிறீங்களா? ம்ஹூம்.. அதுக்கு இன்னும் 3 - 4 மாதங்களாகும்!! 2300 அடி (700 மீ) ஆழத்திலிருக்கும் அவர்கள் வெளிவர இருந்த ஒரே வழியும் அடைபட்ட நிலையில், அவர்களின் இருப்பைக் கண்டுபிடிக்க போடப்பட்டது 12 செ.மீ. அளவுள்ள துளை மட்டுமே. அவர்கள் வெளிவருமளவு பெரிதாக துளையிடுவதென்பது சாமான்ய காரியமில்லை. கல்லைக் குடைந்து, வரும் தடங்கல்களைக் கடந்து பாதை ஏற்படுத்த இந்தக் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதறகான வேலைகள் துவங்கப்பட்டு விட்டாலும், மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பவர்களின் முன்னிருக்கும் கவலை, அதுவரை சுரங்கத்தில் இருப்பவர்களை உடல்நலத்தோடும், மனநலத்தோடும் வைத்திருப்பது!!

ஆமாம். மீட்பு நடவடிக்கைகள் நம்பிக்கையூட்டினாலும், அனல் தெறிக்கும் பாலைவனத்தில் இருக்கும் சுரங்கத்தில், வெளியுலகத் தொடர்பு இல்லாமல், இனியொரு அசம்பாவிதமும் நேராமல் இருக்க வேண்டுமே என்ற பயத்தோடு, வெப்பமான சூழ்நிலையில் நான்கு மாதங்கள் அவர்கள் இருக்க வேண்டுமே? அதற்குமுன் சீனாவில் ஏற்பட்ட ஒரு சுரங்க விபத்தில், அதன் பணியாளர்கள் கரியைத் தின்று, கலப்பட நீரைக் குடித்து 25 நாட்கள் வரை உயிரோடிருந்தனர்.  இவர்கள் அந்த சாதனையையும் முறியடித்து விட்டார்கள்.

தற்போது, முதலில் போட்ட துளையைப் போன்று, மேலும் இரு துளைகள் போடப்பட்டுள்ளன. ஒன்று, அடர்த்தியான ஆக்ஸிஜன் அனுப்ப, இன்னொன்று வீடியோ தொலைத்தொடர்புக்கு. முதலில் போட்ட துளை வழியாக, அவர்களுக்குத் தேவையான மருந்துகள், உடை, பாய் போன்ற தேவைகள், உணவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதில் இருக்கும் முக்கிய சவால், துளையின் சிறிய அளவு (12 செ.மீ.) காரணமாக, எதை அனுப்பினாலும் அதை விட சிறிய அளவில் செய்து அனுப்ப வேண்டும்!! அதற்கெனவே நிபுணர்களை அமர்த்தியிருக்கிறது அரசு!! இவர்களது நிலை, விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் இருப்பவர்களின் நிலையை ஒத்திருப்பதால், நாஸாவும் ஆலோசனை வழங்க தனது உறுப்பினர்களை அனுப்பி வைத்துள்ளது!!

www.bbc.co.uk

பாலும், குளுக்கோஸும் மட்டுமே உண்டு வந்த அவர்களுக்கு, இன்று முதல் முறையாக சோறு, மட்டன், சிக்கன் போன்றவை அவர்களுக்கு அனுப்பப்படது!! (படத்தில் காண்க).

அவர்களின் உடல்நலத்தைப் பேண, அவர்களுக்கு முதல் கட்ட நடவடிக்கையாக டெட்டனஸ் மற்றும் டிப்தீரியாவுக்கான தடுப்பூசிகள், அவர்களில் ஒருவரைக் கொண்டு எல்லோருக்கும் போடப்பட்டுள்ளன. வெப்பம் காரணமாக சிலருக்கு தோல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதற்கான மருந்துகளும் தரப்பட்டுள்ளன. மேலும் ஆலோசனைகளும், மருந்துகளும், க்ளுகோஸும் கொடுக்கப்பட்டுள்ளன.

www.guardian.co.uk

அவர்கள் உற்சாகமாக, உத்வேகமாக இருந்தால்தான் இந்த நாலுமாத காலத்தை அவர்களால் மனநல பாதிப்பு ஏதுமில்லாமல் கடந்து வர முடியும். அதற்கான முயற்சிகளாக, மனநல மருத்துவர்கள் அவர்களுடன் உரையாடவும், குடும்பத்தினருடன் தினமும் பேசவும் தொலைத்தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டு அட்டைகள், பைபிள்கள் கொடுக்கப்பட்டுள்ளன. சிறு உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது, மேலும் நிலச்சரிவு ஏற்படாமல் இருப்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் போன்ற வேலைகளை, அவர்கள் தம்மைக் குழுக்களாகப் பிரித்துக் கொண்டு,  பகிர்ந்து செய்கின்றனர்.

www.bbc.co.uk

இதனிடையே, பெரிய துளை தோண்டும் திங்களன்று வேலையும் தொடங்கி, ஒரு நாளைக்கு 20மீ என்ற அளவில் நடைபெற்று வருகிறது. முதலில் ஒரு குறுகிய துளையிட்டு, பின் அதனை அகலமாக்கி, அதன் வழியே ஒரு கூண்டு ஒன்றை அனுப்பி, ஒவ்வொருவராக வெளியேற்ற திட்டம்.  துளையிடும்போது, டிரில் பிட் உடைவது போன்ற வேறு தடங்கல்கள் வராமல் இருக்க வேண்டும் என்பதோடு,  மேலும் நிலச்சரிவு ஏற்படுத்தாத வகையிலும், உள்ளிருப்பவர்களுக்கு பாதிப்பேற்படுத்தாத வகையிலும் செயல்படவேண்டிய கட்டாயத்தில் மீட்புப் படையினர் உள்ளனர். எனினும் உள்ளே விழும் மணல், கற்களை உள்ளிருப்பவர்கள் அகற்ற வேண்டியதிருக்கும்.

இதற்கு நாலு மாதங்கள் ஆகும் என்பது இன்னும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை!! எனினும், சில நாட்களில் பக்குவமாகத் தெரிவிக்கப்படுமாம். வெளியே இருக்கும் மீட்புப் படையின் உழைப்பு மட்டுமின்றி, உள்ளே சிக்கியவர்களின் முழு ஒத்துழைப்பும் வெற்றிக்குத் தேவைப்படுவதால், இது அனைவரின் கவனத்தையும், கவலையையும் ஈர்த்துள்ளது. எல்லாம் இனிதே நடக்கப் பிரார்த்திப்போம்.

 

Post Comment