Pages

காய்கறித் தொழிற்சாலை!!

சென்ற பதிவின் தொடர்ச்சி....
  
1. நம்ம ஊர் சாமியார்கள் காத்துலருந்து விபூதி வரவழைக்கிறதைப் பாத்திருப்பீங்க. இந்த மெஷின், காத்திலருந்து தண்ணீர் வரவழைக்கும்!!
ஆமா, வெறும் காத்து மட்டும் இருந்தாப் போதும், தண்ணி செஞ்சிடலாம்!!

ecoblue.com


 
இந்த மெஷின், காற்றை உறிஞ்சி, அதிலிருக்கும் ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றிக் கொடுக்கும்!! ஒரு நாளில் 30லி கொடுக்கும். காற்றில் 30% ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன். (இல்லைன்னாலும் பரவால்லை, அதுக்குத் தனியா "Humidifier"னு ஒரு மெஷின் ஆல்ரெடி மார்க்கெட்டுல இருக்குது!!) விலை 1300$ லருந்து ஆரம்பிக்குது. இந்தத் தண்ணீர், குழாய்த் தண்ணீர் போல கெமிக்கல்கள், கிருமிகள் இல்லாமல், மிக சுத்தமானது என்பதுதான் இதன் ஸ்பெஷல்!!

2. எலெக்ட்ரிக் கார்கள்:hybridcars.com


 முழுக்க முழுக்க சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளால் ஓடும் கார். (இந்தியாவிலும் முன்பே இது அறிமுகப்படுத்தப்பட்டது; நடிகர் பார்த்திபன் வீட்டில்கூட ஒருமுறை எரிந்துபோனதே?) தற்போது நன்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பிலும் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. விலை, பெட்ரோல் கார்களை விட மிக அதிகம் என்பதால் இன்னும் பிரபலமாகவில்லை. ரெகுலர் பராமரிப்பு தேவையில்லை, மிகக் குறைந்த கார்பன் எமிஷன் போன்ற அனுகூலங்கள் இருந்தாலும், அதிக விலையின் பயனை நீண்டநாள் பயன்பாட்டுக்குப் பின்தான் (ஸோலார் பேனல் போல) பெற முடியும் என்பதால் மிகுந்த தயக்கம் உள்ளது மக்களிடையே. 

பிரபல கார் கம்பெனிகளான டொயொட்டா ‘பிரியஸ்’ என்ற பெட்ரோல், மின்சாரம் இரண்டும் பயன்படுத்தப்படுகிற ஹைப்ரிட் காரையும், நிஸ்ஸான் “லீஃப்” என்ற EV (Electric vehicle)யையும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற பிரபல கம்பெனிகளும் விரைவில் செய்யவுள்ளன.

3. காய்கறித் தொழிற்சாலை!!ஆமாங்க, காய்கறியை இந்த மெஷினை வைத்து உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக, நோய் நீக்கப்பட்டு,  சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட விதைகளை (ஆனால் geneticaly modified இல்லையாம்), இதனுள் வைத்தால் 30 முதல் 45 நாட்களில் காய்கறிகள் ரெடி!! குழாய்கள் மூலம் தண்ணீர், தேவையான சத்துக்களும், எல்.இ.டி. லைட்டுகள் மூலம் வெளிச்சமும், கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பதமும் கொடுக்கப்பட காய்கறிகள் விளைகின்றன. கிட்டத்தட்ட Green House முறைதான் என்றாலும், முழுக்க மூடியே இருப்பதால், காற்றினாலும், பூச்சி, கிருமிகளாலும் பரவும் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான காய்கறிகள் ரெடி!! இன்னொரு விஷயம், எல்லா காய்கறிகளையும், எல்லா பருவங்களிலும் விளைவிக்கவும் முடியும். மேலும் கிச்சனில் கண்ணெதிரே காய்கறி விளையும்!!

4. பாசி டூ பெட்ரோல்:

பாசி அதான் Algae - தண்ணீரில் பாசி பிடிக்குமே, அந்தப் பாசியிலருந்து எரிபொருள் எடுக்கலாமாம்!! பயோ-ஃப்யூயல் எனப்படும் உயிரி-எரிபொருட்கள் இதுவரை கரும்பு, சோளம் போன்ற உணவுப் பொருட்களிலிருந்துதான் தயாரிக்கப் படுகிறது. அதைத் தவிர்த்து, பாசியிலிருந்து எடுத்தால் உணவுப்பொருளை வீணாக்க வேண்டாமே. மேலும், முன்பு சொன்ன CCS - Carbon capture-லும் பாசி பயன்படுகீறதாம்.

எந்த வகைப் பாசிகள் எதெதற்கு உகந்தவை என்று ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னொரு தகவல், பிரேஸிலில்,1977லிலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டதன் விளைவாக,  பெட்ரோலை விட எத்தனால் என்ற பயொ-ஃப்யூயல் சீப்பாகக் கிடைக்கிறதாம். இது குறித்த ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு பேராசிரியர்தான் அங்கே பின்னாளில் அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சராக வெகுகாலம் பதவி வகித்தாராம். ஹூம்...

5. வெறுங்கால் கல்லூரி - Barefoot College

சில சமூக சேவை அமைப்புகள் இணைந்து, உலகம் முழுவதிலும் இவ்வகைக் கல்லூரிகளை நிறுவி வருகின்றன. இந்தியாவிலும் உள்ள இக்கல்லூரியில் பட்டப் படிப்புகள் இல்லை, ஆனால் வாழ்வியல் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏழைகளுக்காக, ஏழைகளால் என்ற குறிக்கோள் கொண்ட இதில், படிப்பறிவில்லாத யாரும் இணைந்து, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் அடிப்படை அறிவு பெற்றுக் கொள்ளலாம். இங்கு வேலை செய்பவர்களும் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக மின்சார வசதியில்லாத ஒரு கிராமத்தில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஸோலார் செல்களைப் பற்றிப் பயிற்சியளித்து, பின் அவர்களைக் கொண்டே அக்கிராமத்திற்கு சோலார் எனர்ஜி மூலம் விளக்கேற்றுகின்றனர். இவர்கள் உருவாக்கிய சூரிய சக்தியால் இயங்கும் மணிக்கு 600லி குடிநீர் தரும் ஒரு RO plant-ம், இரண்டு Micro-hydel power plants-ம் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.

மேலும் அடிப்படைத் தேவைகளான குடிநீர், வீடு, உடல்நலம், வேலை, கல்வி போன்றவைகளை இயற்கை முறைகளைக் கொண்டு குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ளப் பயிற்சியளிக்கின்றனர். 38 வருடங்களுக்குமுன் ராஜஸ்தானில் தொடங்கப் பட்ட இந்தக் கல்லூரி, இந்தியாவில் 14 மாநிலங்களில் பரவியுள்ளது.

6. மிதக்கும் வீடு:

அமெரிக்காவில் அடிக்கடி சூறாவளித் தாக்குதல் ஏற்படக்கூடிய நியூ ஆர்லியன்ஸில் மாகாணத்தில் மிதக்கும் வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர் "Make it Right foundation" என்ற அமைப்பினர். காத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் கட்டித் தரும் முயற்சியில் உள்ளனர். முழுக்க சூரிய ஒளி பயன்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பும் உண்டு.

7. தொங்கும் தோட்டம்!!

BEFORE
AFTER


இதுதான் என்னை ரொம்பக் கவர்ந்த பிராஜக்ட். முழுக்க முழுக்க ஒரு பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, அவர்கள் பள்ளியினால் செயல்படுத்தப்பட்டது என்பது கூடுதல் ஸ்பெஷல். அமீரகத்தில் அல்-அய்னில் உள்ள “லீவா இண்டர்நேஷனல்” என்ற பள்ளியின் மாணவர்கள், தம் பள்ளியின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பள்ளி முழுக்கச் சுற்றுச் சுவரில் தோட்டம் அமைத்துள்ளனர். அத்தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்ச பள்ளியின் கிச்சனில் இருந்து வரும் கழிவுநீரைச் சேகரித்து, சுத்திகரித்து, குழாய்கள் மூலம் செடிகளுக்குத் தருகின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு, ஸோலார் எனர்ஜியைப் பயன்படுத்துகின்றனர். வெளிப்புற விளக்குகளுக்கான மின்சாரமும் இதிலேயே கிடைக்கிறதாம். பயன்படுத்தத் தொடங்கிய ஆறே மாதத்தில், 20% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாம்.

சுவற்றில் பிளாஸ்டிக் ரேக்குகள் அடித்து, அதில் துணிப்பைகளில் மணல் நிரப்பி, செடிகள் வைத்துள்ளனர். குறைந்த பராமரிப்பு தேவைப்படுபடியான, அதிகம் பூச்சி புழுக்களை ஈர்க்காதவையாகவும், மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தாதவண்ணம் இருக்கவேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட சில அலங்காரச் செடிகளை மட்டுமே  தேர்ந்துத்துள்ளனர். சொட்டுநீர்ப் பாசனமுறையில் நீரூட்டப்படுகிறது.

முடிவுரை:

கொஞ்ச நாள்ல உலகத்துல பெட்ரோல், தண்ணீர், உணவு எல்லாம் காலியாகிடும், அது இருக்காது, இது இருக்காதுன்னெல்லாம் பயமுறுத்துறாங்க.  ஆனா, மனித இனம் இதுபோன்ற பல சவால்களை எதிர்கொண்டுதானே இத்தனைக் காலம் வாழ்ந்துள்ளது? அதுபோல இப்பவும், மாற்றாக பலவற்றையும் கண்டுபிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. “மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்”னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க? ஆனா அதுக்காக நாம நம்ம பொறுப்புகளையும் மறந்துடக் கூடாதுதான்!!

  

Post Comment

கண்காட்சி, இல்லயில்ல பொருட்காட்சி, நோ நோ, எக்ஸிபிஷன்!!


கடந்த வாரம் இங்கே அபுதாபியில் "World Future Energy Summit" நடந்தது. (முழிபெயர்ப்பு: உலக எதிர்கால எரிசக்தி உச்சி மாநாடு??) ரங்க்ஸ் ஆப்பீஸிலிருந்து போய்ட்டு கொண்டுவந்திருந்த brochures பாத்துட்டு, எனக்கும், பெரியவனுக்கும் ஆர்வம் தொத்திகிடுச்சு. போய்ப் பார்த்துட்டு வந்ததும், நாலு வருஷமா இது இங்கே  நடக்குதுன்னாலும், ரொம்ப டெக்னிக்கலா இருக்குமோன்னு நினைச்சு, கண்டுக்காம விட்டுட்டோமேன்னு தோணுச்சு.

நாம பதிவருல்ல, என்ன பாத்தோம்னு எழுதிடணும்ல. நாளைக்கு வரலாறுல நம்ம பேர் வரவேண்டாமா?

இதை மாநாடுன்னு சொன்னாலும், இது சம்பந்தமா நடக்குற கண்காட்சிதான் ரொம்ப விசேஷம். குறைந்து வரும் எண்ணெய் வளம், அழிந்து வரும் சுற்றுச் சூழல், பெருகி வரும் உலக வெப்பமயமாதலும், அதன் விளைவுகளையும் முன்னிருத்தி, இவற்றிற்கு மாற்றாகவும், சுற்றுச் சூழலை அழிக்காமல், வெப்பமயமாதலைத் தடுக்கவும் விழிப்புணர்வை மேம்படுத்தி, நாம் என்னென்ன செய்யலாம் என்பதைக் கலந்துரையாடி, , அவற்றிற்கான பொருட்களைச் சந்தைப்படுத்துவதுமே இதன் நோக்கம்.

http://algarvedir.com
 நிலத்தடி நீர் போல, எண்ணெய் வளமும் குறைந்து கொண்டே வருவதாலும், பெட்ரோல் போன்ற எரிபொருட்களால் வெளிப்படும் நச்சுப் புகைகளால் சுற்றுச்சூழல் மாசைத் தடுக்கவும் வேறு எரிபொருட்கள் கண்டுபிடித்து, பயன்படுத்த வேண்டிய சூழலில் உள்ளோம். அந்த இன்னொரு எரிபொருளும் பெட்ரோல் போல அல்லாமல், Renewable energy-ஆக, அதாவது, தீர்ந்துபோகாமல், மீண்டும் மீண்டும் புதுப்பிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்; அதேசமயம், சுற்றுச் சூழல் மாசையும், உலக வெப்பமயமாதலைக் குறைப்பதாகவும் இருக்க வேண்டும்.

http://johnsoncontrols.com
அந்த வகையில் சூரிய ஒளி, காற்று, மின்சாரம், உயிரி-எரிபொருள் (bio-fuel) ஆகியவை மாற்றாகக் கண்டறியப் பட்டுள்ளது மட்டுமல்ல, பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் அவற்றைப் பெருமளவில் பயன்படுத்தவும் ஆரம்பித்துவ்ட்டன. ஸோலார் பேனல்கள், காற்றாலை, கழிவுகளிலிருந்து மின்சாரம், கரும்பு, சோளம் போன்றவற்றிலிருந்து கிடைக்கும் பயோ-ஃப்யூயல் போன்றவை இன்னும் பரவலாகாததற்குக் காரணம், அவற்றின் விலை மற்றும் efficiency rate. ஆனால், அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் அரசே இதற்கு பெருமளவில் மானியம் மற்றும் வரிவிலக்கு போன்ற சலுகைகளித்து ஊக்குவித்ததாலும் அங்கே இவை இன்றியமையாதவையாகிவிட்டன. உதாரணமாக, ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் 40% மின்சாரம் இவற்றிலிருந்தே பெறப்படுகிறது. மேலும், மொத்த வாகனங்களில் 10% மின்சார சக்தியினால் (Electric cars) ஓடுகின்றன.

உலக Carbon footprint-ல் அமீரகத்தின் பங்கு அதிகமென்பதால், அமீரகமும் இவ்வுண்மைகளை உணர்ந்து, இங்கே அபரிமிதமாகக் கிட்டும் சூரிய ஒளியின் மீது தற்போது தீவிர கவனம் செலுத்தத் துவங்கியுள்ளது. மேலும், அமீரகத்தின் முதல் முயற்சியாக, அபுதாபியில் முற்றிலும் இயற்கை எரிபொருள் மற்றும் குறைந்த கார்பன் வெளியீடு என்ற அடிப்படையில் “மஸ்தார்” என்ற சிறு நகரத்தையே உருவாக்கி வருகிறது.

இந்தக் கண்காட்சியில் நான் அறிந்துகொண்ட புது விஷயம் "Carbon capture and storage" - CCS என்ற இதன் அடிப்படை என்னவென்றால், தொழிற்சாலைகள், எண்ணெய்க் கிணறுகள், வாகனப் புகை போன்றவற்றிலிருந்து வெளிப்படும் நச்சான கார்பனை பிரித்தெடுத்து, சேமித்து, அதை வேறு பயன்பாட்டிற்கு உட்படுத்துவது. புதிய விஷயம், இன்னும் வாசிக்க வேண்டும் இது குறித்து.

இந்தக் கண்காட்சியில், 80% ஸோலார் பேனல்கள் மற்றும் காற்றாலைகள் மட்டுமே இருந்தாலும், கண்ட சில புதிய ஐடியாக்கள் புதுமையாகவும், ஆச்சர்யமாகவும், கவரக் கூடியதாக இருந்தது. ஓரளவு Feasible கூட!! ஒண்ணொண்ணா பாப்போம் - அடுத்த பதிவுல!!
  
 

Post Comment

இதுவும் முன்னேற்றம்தானோ
இன்றைய அட்வான்ஸ்ட் உலகத்துல சகட்டுமேனிக்கு முன்னேறியிருக்கிற நாகரீகத்துக்கும், தொழில்நுட்பங்களுக்கும் கொஞ்சமும் குறைவில்லாம அதிகரிச்சிருக்கிற இன்னொரு விஷயம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்முறைகள்!!

கோவை சிறுமி முஸ்கானுக்கு நேர்ந்த கொடூரத்திலிருந்து நாம கொஞ்சம் மீண்டு இருக்கிற இந்த சமயத்துல, அதேபோல இன்னொரு சம்பவம்!! நடந்தது இங்கே துபாயில் - ஆமாம், தண்டனைகள் கடுமையா இருக்கிற துபாயில்தான்!!

ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயது சிறுமியை மூன்று பேர் சேர்ந்து கொடுமைக்கு ஆளாக்கியிருக்கிறார்கள். செய்தது சிறுமி வழக்கமாகச் செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டர் இருவர். மூவருமே இந்தியர்கள், முறையே 26, 31, 44 வயதுள்ளவர்கள். இச்சிறுமிதான் கடைசியில் இறக்கி விடப்படுவதால், துணிந்து செய்துள்ளார்கள். குற்றவாளிகள் தற்போது போலீஸின் பிடியில்.

குற்றத்தை ஒப்புக் கொண்ட குற்றவாளிகள் சொன்ன காரணம் என்ன தெரியுமா? குழந்தை வீட்டில் எதுவும் சொல்ல மாட்டாள்; சொன்னாலும் பெற்றோர் தம் அவமானம் கருதி வெளியில் சொல்ல மாட்டார்கள் என்பதால்தான் செய்தோம் என்று!!

அவர்கள் சொல்லியிருப்பது சரியே. ஏனெனில், சம்பவம் நடந்தது நவம்பர் 11 அன்று, ஆமாங்க 2010ல்தான். கோவையில் மோகன்ராஜ் சுட்டுக் கொல்லப்பட்டானே அதே சமயத்தில்தான். ஆனால், பெற்றோர் இதை வெளியில் சொல்லத் தயங்கி, ஜனவரியில்தான் பள்ளி நிர்வாகத்திடம் சொல்ல, அவர்கள் போலீஸுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருக்கிறார்கள். பின்னரே இது பத்திரிகைகளில் வந்தது.

எனில், அந்த டிரைவர் கூட்டம் அக்குடும்பத்தினரை எவ்வளவு சரியாகக் கணித்து வைத்திருக்கிறார்கள்? அதுவும் துணிவாக, சம்பவத்தன்று, ஒரு மணிநேரம் தாமதமாகத்தான் பஸ் வரும் என்றுவேறு தாயைத் தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த குழந்தை அழுதுகொண்டிருந்ததால், விசாரித்தபோதும் எதுவும் சொல்ல மறுத்திருக்கிறாள். உடைகளின் கறைகளையும், குழந்தையின் வலியின் காரணமாகவும் மருத்துவரிடம் சென்றபோது, அவர் குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதைத் தெரிவித்தார். ஆனால், பெற்றோரோ மேல்நடவடிக்கை எடுக்காமல், இந்தியா சென்று சிகிச்சை எடுத்திருக்கின்றனர்.

பின்னர், ஒருவழியாக ஜனவரி 5ம் தேதி பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்திருக்கின்றனர். ஏன் இந்தத் தயக்கமோ? குழந்தையின் தாய் சொல்வதைப் பார்த்தால், தந்தைதான் தயங்கியிருக்கிறார் போலத் தெரிகிறது. தந்தையோ, சின்னக் குழந்தைக்கு இப்படியொரு கொடூரம் செய்ய யாருக்காவது மனம் வருமா என்றுதான் நினைத்துத் தயங்கினேன்; மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட பிறகுதான் நம்பினேன் என்கிறார்.

அக்குழந்தை படிக்கும் பள்ளியில் மாதக்கட்டணம் 25,000 ரூபாய்; பேருந்துக் கட்டணமோ 4000 - முதல் 6000 வரை மாதத்திற்கு. எனில், அப்பள்ளியில் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் மேல்தட்டு மக்களாகத்தானே இருக்க முடியும்? அவர்களுக்கே இவ்வளவு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள் என்றால் என்ன சொல்ல? இடைப்பட்ட இரண்டு மாதங்களில், குற்றவாளிகள் தப்பியிருந்தாலோ அல்லது இச்சம்பவம் தந்த தைரியத்தில் இன்னும் சில குழந்தைகளைக் கொடுமைபடுத்தியிருந்தாலோ?

நல்லவேளையாக, குழந்தை அச்சமயத்தில் அணிந்திருந்த உடைகள் சலவை செய்யப்படாமல் இருப்பது கூடுதல் ஆதாரமாக உள்ளது. நிச்சயமாக மரண தண்டனைதான் என்பதில் சந்தேகமேயில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன் நடந்த, 4 வயது பாகிஸ்தானியச் சிறுவனைப் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் தந்த அதிர்ச்சியே இன்னும் நீங்காத நிலையில் (குற்றவாளி போதைக்கடிமை, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது), இன்னுமொரு சம்பவம், அதுவும் இந்தியக் குழந்தை, குற்றம் புரிந்தவர்களும் இந்தியர்கள் என்பது அமீரக வாழ் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, கோவை முஸ்கன் மரணத்திற்குப் பின் ஏற்பட்டதைப் போல. குற்றவாளிகள் கிட்டத்தட்ட 7 முதல் 14 வருடங்கள் வரை இங்குதான் வேலை செய்கிறார்கள்.

அவ்வப்போது இங்கு 7 முதல் 10 வயது சிறுமிகள் (சில சமயம் சிறுவர்களும்) மால்களின் பாத்ரூம்களில், அல்லது பில்டிங் லிஃப்ட்களில் சிலர் முத்தம் கொடுத்தனர், அல்லது முறையற்று தொட்டனர் என்பது போன்ற செய்திகள் வரும். அதிலும் ஆசியாவைச் சேர்ந்தவர்கள்தான் பெரும்பாலும் குற்றவாளிகளாக இருப்பர். அதற்கே 10 வருடங்கள் சிறைத் தண்டனை வரை கிடைக்கும். இதுதான் முதல்முறை ஒரு பெண்குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டது.

குற்றவாளிகள் தைரியமாக இக்குற்றத்தைச் செய்வதற்குமுன், குழந்தையிடம் முன்னோட்டமாகச் சில சில்மிஷங்கள் செய்திருக்கக்கூடும்; அது குறித்து எந்த விசாரணையும் யாரும் செய்யாததாலேயே, துணிந்து தங்கள் திட்டத்தை நிறைவேற்றியிருப்பார்கள் என்று தோன்றுகிறது. குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் சொல்லிக் கொடுப்பதின் முக்கியத்துவம் மேலும் கூடுகிறது. அவ்வப்போது, குழந்தை தினப்படி வாழ்வில் எதிர்கொள்ளும் இதுபோன்ற ஆண் பணியாளர்கள் (டிரைவர், கண்டக்டர், ஆண் ஆசிரியர்கள், சுத்தம் செய்பவர்கள், லிஃப்ட் ஆபரேட்டர்கள், பில்டிங் வாட்ச்மேன்கள், வீட்டருகில் உள்ள கடை சிப்பந்திகள் போன்றவர்கள்) குறித்து சிறுவர்களிடமும் விசாரிக்க வேண்டும்.

அமீரகங்களில் கீழ்நிலைத் தொழிலாளர்கள் தனியே, கடும் வேலைப்பளுவால் துயரப்படுகின்றனர் என்பதால், எல்லாருக்குமே அவர்கள்மீது ஒரு பரிவு வரும். அதுவும் நம் குழந்தைகளின் பள்ளி பஸ் டிரைவர்கள் போன்றவர்கள் நமது நம்பிக்கைக்குரியவர்கள். இவ்விழிந்தவர்களின் செயலால், நல்லவர்களையும் சந்தேகமாகப் பார்க்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
   
  Dubai Police investigates child's rape  

Rapist bus driver worked at school for 14 years

 

Post Comment

நம்பிக்கை மருந்து
 

ஹாஸ்பிட்டலில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுவதற்காக ரிஸப்ஷனில் காத்திருந்தபோதுதான் அப்பெண்மணி என் கண்ணில் பட்டார். அப்படியே சகுந்தலா டீச்சர் போல இருந்தார். சகுந்தலா டீச்சராக இருக்குமோ என்று தோன்றினாலும், அவருக்கு இப்போது வயது எழுபதாவது ஆகியிருக்குமே, இவர் அப்போது பார்த்த டீச்சர் போலல்லவா இருக்கிறார் என்று தோன்றியது.  நாலாவது வகுப்பின் கடைசி நாளில் ரேணுகா சொன்னாள், “அடுத்த வருஷம் 5-Aக்குப் போகக் கூடாதுன்னு ப்ரே பண்ணிக்கோ. 5-A கிளாஸ் டீச்சர் சகுந்தலா மிஸ் பயங்கர ஸ்ட்ரிக்ட் தெரியும்ல?”. தெரியும்தான். ஆனால், அவங்களைப் பார்த்தால் அப்படித் தெரியவே தெரியாது. சிலர் ஒரு பார்வை பார்த்தாலே நடுங்கிவிடுவோமே, அந்த டைப் அவங்க. டீச்சருக்கே இலக்கணமான கொண்டையும், எளிமையான தோற்றமுமாக, ஆனால் கண்களிலே கண்டிப்பும், அன்பும் ஒருசேர தெரியும்.

காலேஜ் நாட்களில் வழக்கம்போல பங்குபெற்ற ஒரு மகளிர் கலந்துரையாடலில் பங்குபெற பல கல்லூரி, பள்ளிகளிலிருந்து வந்திருந்தனர். ரேண்டமாகக் குழுக்கள் அமைத்தபோது என்னருகில் சகுந்தலா டீச்சர்!! அவ்வ்வ்வ்வ்வென்று அழுகைதான் வந்தது. அப்புறம் நான் ஒண்ணுமே பேசலை. அவங்க முன்னாடி என்னப் பேசறது? எங்கக் குழுவிலிருந்த,  சென்னையிலிருந்து வந்த ஒரு பெண், ரொம்பத் தீவிர பெண்ணீயவாதி போல.   குழந்தை பெறுவதற்கான உறுப்புகள் நமக்கு இருப்பதால் நாம்தான் குழந்தைகளுக்கு முழு பொறுப்பா எனச் சத்தமாகக் கேட்டதும், ‘அச்சச்சோ, என்ன இந்தம்மா, டீச்சர் முன்னாடி இப்படிலாம் பேசுது’ என்று ஒரு பதட்டம் வந்ததில், டீச்சர் அதற்குச் சொன்ன பதிலை நான் கவனிக்கவேயில்லை. ஆனால், அந்தக் கேள்வி பின்னர் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது.

முன்பணம் கட்டிவிட்டதாக வாப்பா வந்து சொன்னதும், சிந்தனை தடைபட்டது. அடுத்தடுத்த பரிசோதனைகள், சிகிச்சைகள் என்று தொடர்ந்தன. அடுத்த நாள் மாலை ஐ.ஸி.யூ.வில் கண்விழித்தேன். 

சுற்றிப் பார்த்தால், ஏழெட்டுப் படுக்கைகள்,  எல்லாவற்றிலும் ஆட்களுடன். எல்லாருக்குமே கைகளில் டிரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது. படுக்கைகளுக்கு நடுவில் திரைகள் இருந்தாலும், அவை மூடி வைக்கப் படவில்லை.  எல்லாருமே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்படித்தான் நினைத்தேன். பின்னர்தான் நர்ஸ் சொன்னார், எல்லாருமே கோமாவில இருக்க பேஷண்டுகளாம். ஒருவித பயம் வந்தது. ”என்னை எப்ப ரூமுக்குக் ’கொண்டு’ போவீங்க?”ன்னு கேட்டேன். அவர் சிரித்துக் கொண்டே, ”ஒரு நாள் மட்டும் அப்ஸர்வேஷன்ல வச்சுட்டு நாளைக்கு சாயங்காலம் போயிடலாம், சரியா? என்றார்.

சரியில்லைன்னாலும், எழுஞ்சு ஓடியாப் போகமுடியும்? தூங்கிய நேரம் போக மீதி நேரம் மற்றவர்களை வேடிக்கைப் பார்த்தேன். பெரும்பாலும் வயதானவர்கள்தானாம். சிகிச்சைகள் காரணமாகவோ, முதுமை காரணமாகவோ நினைவிழந்தவர்களாம். சிலர் நாட்கணக்கில், சிலர் மாதக் கணக்கில், ’அதோ அந்தக் கடைசி பெட்டில் உள்ள கேஸ் வந்து ஒரு வருஷமாச்சு’ என்று  ஒருவர். 

அங்கே இருந்த இரண்டு நர்ஸ்களுக்கும் ஒரு ‘பேசும் கேஸ்’ வந்தது மகிழ்ச்சியே என்று அவர்கள் என்னோடு நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததில் புரிந்தது. அவ்வப்போது இப்படியொரு கேஸ் வந்துபோகுமாம். ஜுனியர் (ட்ரெயினிங்) டாக்டர்கள் சலிக்காமல் சந்தேகங்களுக்குப் பதில் சொன்னார்கள். ரவுண்ட்ஸ் வந்த சீனியர்கள், ‘எவ்ரிதிங் ஓகே?” என்ற ஒற்றைக் கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டு  நடந்து(ஓடிக்)கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச நேரம் கழித்து, செவிலியர் இருவரும் ஒவ்வொரு நோயாளியாகச் சென்று, டெம்ப்ரேச்சர், பிபி, இன்னபிற செக் செய்து எழுத ஆரம்பித்தார்கள். அதில் ஒரு பரிசோதனை, நோயாளிகளின் மூடிய விழிகளைத் திறந்து, டார்ச் அடித்து, அதற்கு அவர்களின் ரெஸ்பான்ஸைப் பதியவெண்டும்.  இதற்குத்தான் ரொம்பக் கஷ்டப்பட்டார்கள். நினைவிழந்தவர்களுக்கு கண்முன் உள்ள ஒளிவெள்ளம் எப்படித் தெரியும்? அதற்காகப் பலமுறை அவர்களை எழுப்புவதுபோலத் தட்டி, அதற்கும் பதிலில்லை என்றால், ஓங்கி அடிப்பதும்.... இப்படியே தொடர்ந்தது. பக்கத்துப்  படுக்கையில் இருந்த ஒரு மூதாட்டி எதற்குமே அசையவில்லை. சட்டென்று அவர் கையில் டிரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்த ஊசியை அழுத்த, அவர் உடனே வலியின் அதிர்வில் கண்திறந்து அகல விரித்தார். பார்த்துக் கொண்டிருந்த நான் அதிர்ச்சியில் அய்யோவென அலற,  அவசரமாக நர்ஸ் திரையை இழுத்து மூடினார்.

சகலமும் கலங்கிப் போனது எனக்கு. அப்படியே தூங்கிப் போனேன். சிறிது நேரம் கழித்து கண்விழித்த போது நர்ஸ்கள் இருவரும் மீண்டும் அனைவருக்கும் மூக்கு அல்லது வாய் வழியே குழாய் மூலம்  திரவ உணவு கொடுத்து, வயிற்றை அமுக்கிக் கழிவுகள் நீக்கி, சுத்தம் செய்து, உடலைத் துடைத்து, உடை மாற்றி, படுக்கைப் புண் வராமல் இருக்க முதுகில் யுடிகோலன் தேய்த்து விடுவதுமாக பிஸியாக இருந்தனர்.அவர்களின் கஷ்டங்களைப் பார்த்ததும் புரிந்தது, ஏன் ‘பேசும் கேஸ்கள்’ அவர்களுக்கு மகிழ்வைத் தருகின்றன என்று.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை யாரோ பார்ப்பதுபோல இருந்தது. திரும்பினால், எதிர்ப் படுக்கையில் இருந்த ஆண் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஐம்பது வயதிருக்கும்.  கொஞ்சம் சங்கோஜமாக இருந்தாலும், லேசாகச் சிரித்தேன். பேசினால் நேரம் போகுமே? எவ்வளவு நேரம்தான் நர்ஸ்களையே தொணதொணப்பது? அவர் பதிலுக்கு சிரிக்கவில்லை. ஆனால், பார்த்துக் கொண்டேயிருந்தார். இதென்னடா வம்பு? ஐ.ஸி.யூ. விலயுமா இப்படி இருப்பாங்கன்னு தோணுச்சு. சரி, அவருக்கு என்ன கஷ்டமோன்னு நினைச்சு, மறுபடி வேடிக்கை பார்க்கத் தொடங்கினேன்.

மறுநாள் காலையில் விழிக்கும்போதே எதிர்ப் படுக்கையின் திரை மூடப்பட்டிருந்தது. அங்கிருந்து பேச்சுச் சத்தமும் வந்தது. சன்னமான பெண் குரல். “கேட்டீங்களா...  அவன் ஊருக்குப் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. லதாவுக்கு அடுத்த வாரம் பரீட்சை.  அப்புறம் ப்ராஜக்ட் பண்ணனும்னு சொன்னா. நீங்க இருந்தா என்ன செய்யலாம்னு சொல்லிருப்பீங்க. சரி, இப்ப என்ன எல்லாம் சரியானதும் வீட்டுக்கு வந்துடப் போறீங்க.... “  இந்த ரீதியில் போன பேச்சில் இருந்து புரிந்தது, பேசுவது அவரின் மனைவி என்று. சிறிது நேரம் கழித்து  திரை விலக்கி அப்பெண் வெளியில் வந்தார்.  அதே பெண்!! சகுந்தலா டீச்சர் போலவே இருந்தாரே, அவரேதான்.

எதிர்ப் படுக்கைக்காரரின் நெற்றியில் விபூதி, குங்குமமும், தலையில் எண்ணெய் மினுமினுப்பும் தெரிந்தது.  அப்போத்தான் உறைத்தது, அவங்கதானே பேசிகிட்டே இருந்தாங்க, இவர் ஒண்ணுமே பதில் சொல்லலையே; ஒருவேளை பேச்சு வராதோ? ஊசிபோட வந்த நர்ஸிடம் கேட்க, “ ஆக்ஸிடண்ட் கேஸ். அவரும் கோமாலதான் இருக்கார். கண்ணு மட்டும் சில சமயம் திறந்து பார்ப்பார். அஞ்சு மாசமாச்சு. அவங்க வைஃப் தினம் வந்து அரைமணிநேரம் அவர்கிட்ட உக்காந்து பேசுவாங்க. வீட்டுல நடக்கிறதெல்லாம் சொல்வாங்க. அவருக்கு எதுவுமே புரியாதுன்னு தெரியும். ஆனாலும், அவங்களுக்கு நம்பிக்கையா, இல்லை அவர்மேல பாசமோ.  எதுவோ ஒண்ணு, மருந்துல குணமாகாதது, இதிலயாவது ஆகட்டுமே?”
  
மூன்று மாதம் கழித்து செக்-அப்புக்குச் சென்றபோதும், வரவேற்பறையின் இருக்கையில் அதே பெண், சகுந்தலா டீச்சர் போல இருந்தாரே, அவர்   அமர்ந்திருந்தார்.

 
   
 

Post Comment

இன்றைய கடைசி
டூரிங் தியேட்டரில் படம் கடைசி நாளுக்குத்தான் பயங்கர விளம்பரம் இருக்கும்; முதல் நாளை விட அதிகமாக!! அதுபோல, ஆஃபீஸில் கடைசி நாளும் ரொம்ப செண்டியாக இருக்கும். ஏதோ பிறந்த வீட்டை விட்டுப் போகும் பெண்ணைப் போல எல்லோரும் பார்ப்பார்கள். ‘ஹா,ஹா எதிரி ஒழிந்தாள்/ன்’ எனும் தம்பி/தங்கை போல ஆஃபீஸிலும் சிலர் இருப்பார்கள். சமீபத்தில்தான் அந்த அனுபவம் கிடைத்தது என்பதால், அனைவரும் பயன்பெறும் வகையில், பதிவர் ட்ரேட்மார்க் பத்து டிப்ஸ் எழுதி பதிவுலகில் என் இருப்பை இன்னமும் இறுக்கமாகப் பதிந்து கொள்கிறேன்.

1. வேலை மாறுவதற்கு குறைந்த பட்சம் ஒரு மாதம் நோட்டீஸ் என்பதால், ஹெச்.ஆர்.ல் ராஜினாமா லெட்டர் கொடுத்த கையோடு, அப்போவே உடன் பணிபுரிபவர்களிடம் விஷயத்தைச் சொல்லிவிடக்கூடாது. வேறு வேலையில் சேரப் போகிறீர்கள் என்றால், அதைக் குறித்து அதிகத் தகவல்கள் தெரிவிக்க வேண்டி வரும். சம்பளம் இதைவிட எவ்வளவு கூட, கார், மொபைல், ஏர்டிக்கட், இன்ஷ்யூரன்ஸ் உண்டா என்று தினம் ஒன்றாக, அதுவும் ஒவ்வொருவராகக் கேட்பதற்கு விளக்கம் சொல்லிக் கொண்டே இருப்பதற்குப் பதில் பிட் நோட்டீஸ் அடித்து விடலாம்!! அத்தோடு, புகைமண்டலம் அதிகமாகும் வாய்ப்பும் உண்டு.

2. முன்பே சொல்லிவிட்டால், முடித்துக் கொடுக்க வேண்டிய வேலைகளோடு, அவர்களின் பெண்டிங் வொர்க்கையும் சேர்த்து நம் தலையில் தள்ளிவிடுவார்கள். மெதுவாக, கடைசிப் பத்து நாட்களுக்கு முன் சொன்னால், இதிலிருந்து தப்பிப்பதோடு, மிச்ச நாட்களையும் விஸா மாத்தணும், மெடிக்கல் இருக்கு, வீடு தேடணும், ஃபேமிலியை ஊருக்கு அனுப்பணும் என்று சாக்குச் சொல்லித் தப்பித்துக் கொள்ளலாம்.

3. செட்டில்மெண்ட் லேட்டாகாமல் இருப்பதற்காக, ரிஸைன் பண்ணுவதற்கு முன்பே அக்கவுண்ட்ஸில் ஒருவரை சிநேகமாக்கிக் கொள்வது உசிதம். (அக்கவுண்ட்ஸில் இருப்பது ஃபிலிப்பைன்ஸ் நாட்டவராக இருந்தால் ஒரு பாக்ஸ் Doughnut அல்லது ஒரு பக்கெட் கே.எஃப்.ஸி. போதும். இந்தியராக இருந்தால், செலவு அதிகமாகும்!!).

4. நமக்குத் தேவையான ஃபைல்களை நம் கம்ப்யூட்டரிலிருந்து ஃப்ளாஷ் டிஸ்க்கில் காப்பி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, எழுத ஆரம்பித்து பாதியில் நிற்கும் பதிவுகள், டவுண்லோட் செய்த படங்கள், பாடல்கள்.

5. அடுத்துச் சேரப்போகும் வேலையில், கொஞ்ச நாளாவது வேலை செய்வதுபோல ஃபிலிம் காட்ட வேண்டியிருக்கும் என்பதால், கொஞ்ச நாளுக்குத் தேவையான பதிவுகளை முழுதும் எழுதி ரெடி செய்து கொள்ளவும்.

6. மறக்காமல், ப்ரவுஸரில் நம்முடைய புக்மார்க்குகள், ப்ரவுஸிங் ஹிஸ்டரி, சேமித்து வைத்திருந்த பாஸ்வேர்டுகள் எல்லாம் டெலீட் செய்துவிட வேண்டும். பின்னர் பாஸ்வேர்டுகளைக் கட்டாயம் மாற்றியும் விட வேண்டும். சக அலுவலரோ அல்லது நமக்குப் பதில் வருபவரோ, பதிவராகவும் இருந்து நம் ட்ராஃப்டில் உள்ள ஐடியாக்களைச் சுட்டாலும் பரவாயில்லை. நம் சாட் ஹிஸ்டரியைத் திறந்து பார்த்துவிட்டால்??

7. இனி அடுத்து, ஆஃபீஸிலிருந்து கொண்டு போக வேண்டிய பொருட்கள். நோ, நோ, அப்படி சீப்பாவெல்லாம் பாக்கக்கூடாது. இதெல்லாம் நமக்குத் தரப்படும் சீர்வரிசை மாதிரி, நம் உரிமை. இவ்வளவு நாள் வேலை பாத்ததுக்கு இதாவது மிச்சமாகட்டும்னோ அல்லது இந்த ஆஃபீஸோட ஞாபகார்த்தமாவோன்னு வச்சிக்கோங்களேன். அத்தோட, அடுத்த ஆஃபிஸில கொஞ்ச நாள் வாலைச் சுருட்டிகிட்டு இருக்கணுமே, அதுவரை வீட்டுக்குத் தேவையான ஸ்டேஷனரீஸ்க்கு என்ன செய்றதாம்? அதனால, மெதுவா நம்ம டேபிள்லருந்து, ஒவ்வொரு நாளும் ஒண்ணொண்னா எடுத்துட்டுப் போறதிலதான் நம்ம சாமர்த்தியமே இருக்கு. அழகான பென் ஸ்டாண்ட், நோட் பேட், அஃபிஷியல் யூ.எஸ்.பி., காலி டி.வி.டி.... இதுக்கெல்லாம் எல்லையே இல்லை. நம்ம ஆஃபீஸ்தானே?

இதுல ஒரே ஒரு ட்ராபேக் என்னன்னா, வீட்டுல குழந்தைங்க இருந்தாச் சமாளிக்கறதுதான். அதுவும் உங்க ஆஃபீஸுக்குக் குழந்தைகளை கூட்டிட்டுப் போயிருக்கீங்கன்னா, வீட்டுக்கு பொரு(ட்க)ளை எடுத்து வந்தவுடனே “அப்பா, இது உங்க ஆஃபிஸ்ல உள்ளதுல்லா?”ன்னு கேட்கக்கூடும். அதைப் போல இது வேற என்றோ, ஆஃபிஸுக்கே நாந்தான் வாங்கி வச்சேன் என்றோ சமாளித்தாலன்றி, விருந்தினர் வரும்போது, ”இதெல்லாம் எங்க அப்பா ஆஃபீஸ்ல தந்தா தெரியுமா?”வென்று கடை பரப்பும் அபாயம் உண்டு.

9. ரிஸஷனால் வேலை இழக்கிறீர்கள் என்றால், ஆஃபீஸ் பாய் முதற்கொண்டு பார்ப்பவர்களெல்லாம், “அந்த ஆஃபிஸ்ல ஒரு வேகன்ஸி இருக்காம்; இந்த ஆஃபீஸ்ல ரெண்டு இருக்காம்” என்று நடமாடும் ”அப்பாயிண்ட்மெண்ட்ஸ் பேஜஸ்” & தற்காலிக ரெக்ரூட்மண்ட் கன்ஸல்டண்டாக மாறி நம்மைத் தினமும் அங்கே அப்ளை செஞ்சியா, இங்கே செஞ்சியா என்று நச்சு செய்யும் வாய்ப்புண்டு. இதற்கு ஒரே வழி, எல்லோரிடமும் ஒரு செட் பயோடேட்டா கொடுத்து, எங்கெல்லாம் வேகன்ஸி இருக்கோ, அங்கே நீயே ஒரு காப்பி எடுத்துக் கொடுத்திடு என்று சொல்லி, கொடுத்தியா, கொடுத்தியா என்று நாம் அவர்களை நச்சரிக்க ஆரம்பிப்பதுதான்.

10. கடைசி நாளன்று, மறக்காமல், உருகி உருகி எல்லாருக்கும் ஒரு மெயில் அனுப்ப வேண்டும். அலுவலர்களுக்குத் தனியேவும், மேனேஜ்மெண்டுக்குத் தனியாகவும் எழுதுதல் நலம். “நீங்களில்லையென்றால்... உங்களால்தான்... இனி எப்போ... இந்தக் காலம் போல்...” இப்படிப் போக வேண்டும் கடிதம். அடுத்தடுத்த வேலைகளில் எம்ப்ளாயி ரெஃபரன்ஸ் தேவைப்படலாம் ஒருவேளை.  காதல் கடிதம் எழுதிய அனுபவம் இருந்தால் எளிதாக இருக்கும்.

11. கடைசி நாளுக்கு உங்களை ட்ரீட் கொடுக்கச் சொல்லும் முன், உங்களுக்கு மற்றவர்களை ட்ரீட் தர வைப்பதும் உங்கள் சமத்து. ஒரு ஐடியா: கடைலெல்லாம் எதுக்கு ஸார்? வீட்டில சொல்லி பிரியாணி செஞ்சு கொண்டு வர்றேன்னு சொன்னா, அவர்களே ட்ரீட் தந்துவிடுவார்கள்.

12. சிலர் மிகவும் பாசமாக, “இனி என்ன வேணும்னாலும் என்னைக் காண்டாக்ட் பண்ணு. எனக்கு நீயும் ஒரு சகோதரி/தரன்தான்” என்று பாசமழை பொழிவார்கள். உடனே, “சார், ஒரு தௌஸண்ட் ருபீஸ்/திர்ஹம் கடனாக் கிடைக்குமா? அடுத்தச் சம்பளம் வர்ற வரைக்கும் என்ன செய்றதுன்னு நினைச்சேன். எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு?”னு நீங்களும் அந்த மழைக்குக் குடைபிடிக்கவும். திருப்பிக் கொடுக்கிற அவசரமோ, அவசியமோ இல்லாத கடனை ஏன் விடணும்?

 உங்க அனுபவங்களையும் சொல்லலாம்..
 
   

Post Comment

இதற்குத்தானே ஆசைப்பட்டாய்....
 
பள்ளியில் படிக்கும்போது வீட்டிற்கு அரிசி வயலில் இருந்து வரும். ஒரு முழு வயலில், ஒரு சிறிய பாகத்தில் மட்டும் நெற்பயிரிட்டு இரண்டு போகம் விளைவிக்கப்படும். வயலின் மீதி இடம்? சும்மா கிடக்கும்!! அம்மாக்கும், மேற்பார்வையிடுபவருக்கும் நடக்கும் விவாதங்கள் (ஏமாற்றப்படுவதால்), அரிசியின் தரம் (தீட்டப்படாத அரிசி என்பதால் நிறம் குறைவு, ஆனால் அதுதான் சத்தானது என்று தெரியாது :-( ), குறைந்த விளைச்சல், அதிகச் செலவு, அதிக விழிப்புணர்வில்லாமை இன்னும் எல்லாம் சேர்ந்து, “காசைக் கொடுத்தா கடையில் அரிசி கிடைக்கும்; மல்லிப்பூ மாதிரி சோறு இருக்கும். அதை விட்டுட்டு இப்படி அல்லாடணுமா?” என்று அம்மாவிடம் சண்டை போடுவதுண்டு. இருக்கும்போது அருமை தெரியவில்லை!! இப்படி எல்லாப் பக்கமும் ஆதரவின்மையால் அம்மாவும் விட்டுவிட்டார்!!

பிறகு, வீட்டில் ரோஜாச் செடிகள் என்ற அளவில் ஆர்வம் இருந்தது. கல்யாணம் என்ற நாற்றுப் பிடுங்கி நடுதலால், அதுவும் விட்டுப் போனது.  அபுதாபி வந்தப் பிறகு, மெல்ல ஆர்வம் தலைதூக்கினாலும், இடமின்மையால், வீட்டுத் தோட்டம் ஒன்று உருவாக்கினேன்.

அடுத்து, என்னவரின் வேலை காரணமாக, ஒரு பாலைவனக் கிராமத்துக்கு குடிபோனோம் அங்கே  என்னைத் தின்ற நேரத்தை நான் தின்னுவதற்காக வீட்டின் முன் இருந்த காலி புறம்போக்கு நிலத்தை வளைத்து (தமிழேண்டா!!), சிறு தோட்டம் உருவாக்கினோம். வேம்பு, அகத்தி, கருவேப்பிலை, முருங்கை, வெண்டை, தக்காளி, லவ் பேர்ட்ஸ், முயல், ஊஞ்சல் என்று அந்த ஐந்து வருடங்களும் ஒரு பொற்காலம் என் வாழ்வில்!!

தோட்டத்துல ஆவியுமா!!

இந்தத் தோட்டம் உருவாக்கும்போது, இந்தப் பாலைவனத்தில்  இதெல்லாம் முளைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. பாலைவனமாக இருந்த அமீரகம், பசுந்தோட்டமாகக் காட்சியளிப்பதின் காரணகர்த்தாவான மறைந்த அதிபர் ஷேக் ஸாயத் அவர்கள் அதிபராயிருந்தபோது பாலைவனத்தில் தோட்டங்கள் உருவாக்க எண்ணி, ஆங்கிலேயர்களைக் கொண்டு மண்ணைப் பரிசோதித்தபோது, “இம்மண்ணில் உயிரேயில்லை; ஒன்றுக்குமே லாயக்கில்லாத மண் இது.” என்று சொன்னார்களாம். அதற்கவர், “இறைவன் பெயரைச் சொல்லி (பிஸ்மில்லாஹ்) வையுங்கள். எல்லாம் வரும்” என்று உத்தரவிட்டாரம். அதுபோலவே பாலைவனம் பசுஞ்சோலையானதாம்!!

அதைப்போலவே நாங்களும் (ரங்ஸ், அவரின் நண்பர்கள் இருவர் மற்றும் நான்) தொடங்கினோம். பெரும்பாலும் நன்றாகவே வந்தது. அப்போதெல்லாம் இயற்கை உரம், விவசாயம் என்பது குறித்து எந்தத் தெளிவும் கிடையாது எனக்கு. அந்தத் தோட்டம் மெல்ல வளர்ந்து வந்தபோது, அந்த வீட்டில் எங்களுக்குமுன் குடியிருந்தவரை என்னவர் சந்திக்க நேர்ந்தது. அவர் எங்கள் தோட்டத்தைக் குறித்துப் பாராட்டிப் பேசும்போது, என்னவர், “இந்த மரமெல்லாம் வைத்தாலும் ஒரு நாள் இந்த ஊரைவிட்டுப் போய்த்தானே ஆகவேண்டும்?” என்ற ரீதியில் ஏதோ சொன்னபோது, அவரின் பதில், “ஏன் அப்படி நினைக்கிறாய்? நீ எங்கு சென்றாலும், இங்குள்ள அந்த மரத்தால் ஒரு சிறு குருவி பயனடைந்தாலும் அது உனக்கு நன்மை தரும்.” என்று சொன்ன அவர் அப்போது இரத்தப் புற்றுநோய்க்குச் சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தார்!!

பின்னர் பெரியவனின் படிப்புக்காக (புடலங்காய்ப் படிப்பு - ரெண்டாங் கிளாஸ்தான்) மீண்டும் நகரத்தில் கான்கிரீட் சிறைவாசம். ஆனாலும், ருசி கண்ட பூனை என்பதால், பால்கனியில் கருவேப்பிலை, துளசி, ஓமவல்லி, செம்பருத்தி, சோற்றுக் கற்றாழை என்று “விரலுக்கேத்த வீக்கத்துடன்” அடைக்கலமானேன். ரியல் எஸ்டேட் விஸ்வரூபமெடுத்து, வீட்டைச் சுற்றி நாலாபுறமும் கட்டிடங்கள் கட்டப்பட ஆரம்பிக்க, கிளம்பிய தூசிதும்பில் செடிகள் வாடி, வதங்கத் துவங்கின. துளசியும், ஓமவல்லியும் கசந்துப் போயின - ஆமாம்!!  தூசிப்படலத்திலிருந்து தப்பிக்க பால்கனியை நிரந்தரமாக மூடவேண்டிவர, செடிகளுடன் ஆசைகளும் மடிந்தன!!

 வேலை நடப்பது அடுத்த வீட்டிலயா, எங்க (முன்னாள்) பால்கனியிலயா?
 

வீடு மாற்றலாமா, வேண்டாமா என்று ஒரு ஆண்டாக யோசித்து, யோசித்து, ஒரு வழியாக “லாம்” என்றபோது, நான் “தோட்டத்தோட வீடு” என்று அடுத்த கல்லைத் தூக்கி ரங்ஸ் தலையில் போட்டேன். மகள் வேலைக்காரனைக் காதலிப்பதைக் கேட்ட சினிமா அப்பா போல நெஞ்சைப் பிடிச்சுட்டு உக்காந்துட்டார் என் ரங்ஸ்!! பின்னே, எங்கள் பட்ஜெட்டில் மூன்று அறை அபார்ட்மெண்ட் வீடே தக்கிமுக்கித்தான் முடியும்; இதில் தனிவீடா? எவ்வளவோ கெஞ்சினார். ம்ஹும்.. “மணந்தால் மகாதேவி; இல்லையேல்...” என்று நானும் உச்சாணிக் கொம்பில் நின்றேன். மீண்டும் காத்திருந்தோம்.. ஒண்ணரை வருஷம்.. ரியல் எஸ்டேட் அடிவாங்கி, வாடகை குறைய ஆரம்பிக்க... என் ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கையும் வர, தேட ஆரம்பித்தோம்.

அப்பத்தான் புரிஞ்சுது, இந்த குளோபல் வார்மிங், சப்புச் சவரெல்லாம் ஏன் வருதுனு!! பாத்த நூத்துக்கணக்கான வீடுகள்ல (எல்லாமே புதுசாக் கட்டினது)  தோட்டம் வைக்கிறதுக்கு இடமே இல்லை!! எண்ணி மூணே விடுகள்லதான் தோட்டத்துக்குன்னு இடம் விட்டிருந்தாங்க. அதுவும் எங்க பட்ஜெட்டுக்கு ஒத்து வராம, ஆசையைக் கைகழுவிவிட வேண்டியதுதானோன்னு ”சரிப்பா, நீங்க பாக்கிற மாப்பிள்ளையையே கட்டிக்கிறேன்”னு கண்ணைத் தொடச்சிக்க ரெடியானா,  ரங்ஸின் இடைவிடாத முயற்சியால் (ஃபோன் தொல்லையால்) இந்த வீட்டு ஓனர் வழிக்கு வந்தார்!!

இப்ப, ஒரு போகம் நெல்லே போடற அளவு இடமிருக்கு; ஆனா நேரமில்லையே; ஆஃபிஸையும், தோட்டத்தையும் எப்படிக் கவனிக்கப் பொறோம்னு (அடுத்த) கவலையோட நின்னா, என் மனசைப் புரிஞ்சிகிட்ட ஆஃபிஸ் மேனெஜ்மெண்ட், இப்ப வருமோ, அப்ப வருமோன்னு ஒன்றரை வருஷமா நான் எதிர்பார்த்துகிட்டிருந்த ”உங்கள் சேவைக்கு நன்றி” கடிதத்தை அனுப்பி வச்சாங்க!! சே, என்னைச் சுத்தி எல்லாருமே நல்லவங்களாவேயிருக்காங்க!!

இந்தப் புது வருஷத்துலருந்து நானும் ஃப்ரீ!! தோட்டத்துல உக்காந்து, ரசிச்சு ஒரு காஃபி குடிக்க ஆசைப்பட்டதெல்லாம் அந்தக் காலம். இப்போ தோட்டத்துல உக்காந்து பிளாக் வாசிக்க/எழுதத்தான் ஆசை!! அது நிறைவேற கொஞ்சம் மாசமாகும். ஏன்னா, இப்ப வெறும் மண்தரைதான் இருக்கு. இப்போ குளிர்காலம்கிறதால, செடிகள் வச்சாலும் சரியா வளர கோடை வரணும். கொளுத்தும் வெயிலில் மனிதர்கள் வாடிவதங்க, செடிகள் பச்சைப் பசேலென்று நிற்கும் அதிசய பூமி இது!! அதுவரை காய்கறிக் கழிவுகளைச் சேகரித்து உரமாக்க வேண்டும்.

ஏழைக்கேத்த எள்ளுருண்டையா, வலை ஊஞ்சல்தான் இப்ப!!

இது போரடிக்கும்போது, இடையிடையே பதிவெழுதலாம்; அதுவும் போரடித்தால், அடுத்த வேலை தேடலாம்!! “நான் ஸ்கூல்ல இருந்து வரும்போது நீ ஏன் வீட்டுல இருக்கமாட்டேங்குற”ன்னு முன்னெல்லாம் கேட்ட சின்னவன், இப்போ, “அப்ப நாங்க டெய்லி ஸ்கூல் போணும்; நீ மட்டும் ஜாலியா வீட்டுல இருப்பியா?”ன்னு சொல்லி அவங்கப்பாவுக்குச் சரியான வாரிசுன்னு நிரூபிக்கிறான். இதுக்காகவே வேலைக்குப் போணும்னு தோணினாலும், காடு (தோட்டம்தான்) வா, வா-ங்குது!!
   
    

Post Comment