Pages

சைவப் புலிகள்

ம்.. எங்க விட்டேன்?

புதுசா வந்த அக்பர் அலியும் பார்ட்-டைம்னாலும், நாங்க ”மகளிர் அணி”ங்கிறதாலயும், அவர் எங்க டிபார்மெண்ட்களில் இல்லாததாலயும் எங்கள்ல யாரும் அவரைக் கண்டுக்கலை. ஆனா, அவரும் ரோஸியைப் போல பி.ஹெச்.டி. பண்ண ஆரம்பிச்சிருக்காருங்கிறது அப்புறமாத் தெரிஞ்சதும், அந்த வகையில் ரோஸியும் அவரும் அடிக்கடி அதுகுறிச்சுப் பேசிக்கிடுவாங்க. அப்படியே ஆரம்பிச்சு, யெஸ், கொஞ்ச நாளில் பத்திகிச்சு. காதலை எதிர்க்கிறவங்க இல்லைன்னாலும், இது முஸ்லிம்-கிறிஸ்டியன் காதல்ங்கிறதால ஆச்சர்யம். ரோஸியிடம் இருவரின் வீட்டிலும் சம்மதிப்பார்களா என்று கேட்டோம். இருவரின் வீட்டிலும் சம்மதிப்பது மிகக் கஷ்டம், ஆனாலும் வேறு வழியில்லை என்றார். எனக்கு அதில் உடன்பாடு இல்லைன்னாலும், சம்பாதிக்கிறவங்க, ஓரளவு வாழ்க்கைனா என்னன்னு தெரிஞ்சவங்க, இவ்வளவு உறுதியாயிருக்காங்கன்னா, நல்லாருந்தாச் சரிதான்னு நினைச்சுகிட்டேன்.

படிச்சிட்டிருந்த ஸ்டூடண்ட்ஸ் மத்தியிலயும், ரஷீதா-ரஞ்சித், சித்தீக்-காயத்ரினு இன்னும் ரெண்டு புரட்சிக்காதல் ஜோடிகளும் இருந்தாங்க. பம்பாய் படம் வந்த காலம் அது. மொபைல்கள் இருந்திருந்தா, ‘அந்த அரபிக் கடலோரம்’தான் எல்லாரோட காலர் டியூனா இருந்திருக்கும். இதுல ரஷீதாவும், சித்தீக்கும் எனக்கு ஏற்கனவே பழக்கம்கிறதால, அவங்ககிட்டயும் அதத்தான் கேட்டேன், “வீட்டில ஒத்துப்பாங்களா?”. ம்ஹூம், சான்ஸே இல்லையாம். ஓடிப்போறதுதான் வழியாம். எல்லாரும் கேட்கிற அதே கேள்வியை நானும் கேட்டேன், “பெத்தவங்களுக்கே துரோகம் செய்ய நினைக்கலாமா?”ன்னு. ம்ஹூம், தெய்வீகக் காதலாம், மதங்களைக் கடந்த காதலாம், புண்ணாக்காம், புடலங்காயாம். இதில ரஷீதாவுக்கு எம்மேல பயங்கரக் கோவம், “உங்களுக்கெல்லாம் காதல்னா என்னான்னு தெரியுமா? காதலிக்காத நீங்கள்லாம் இதப்பத்திப் பேசுறதே தப்பு. உங்க வேலையை மட்டும் பாருங்க.”ன்னு எனக்கே அட்வைஸ்.

அதே சமயத்துலதான் நம்ம ரோஸி சொன்னாங்க, அக்பர் அலிக்குக் கல்யாணம் நிச்சயமாகிடுச்சாம். வழக்கம்போல, அம்மா தற்கொலை மிரட்டல் etc. etc. காரணமா கல்யாணத்துக்குச் சம்மதிக்க வேண்டியதாப் போச்சாம்; ஆனாலும் ரோஸியை மறக்க மாட்டாப்லயாம்; கொஞ்ச நாள் கழிச்சு அந்தக் கல்யாணத்துலருந்து வெளியே வந்து ரோஸியோடக் கல்யாணமாம். உருகி உருகிச் சொன்னாங்க ரோஸி. “படிக்காத மேதைகளைப் போல படிச்ச அடிமுட்டாளும் இருப்பாங்கன்னு புரிஞ்சுகிட்டேன்”னு சொன்னேன். “இல்லப்பா, இது பேருக்குத்தான் கல்யாணம். வேற ஒண்ணுமேயில்லை தெரியுமா?”ன்னாங்க. நான் அப்பச் சொன்ன பதில இங்க எழுதமுடியாது.

இதற்கிடையில், என்னுடன் வேலைபார்த்த சங்கரி தன்னுடன் படித்த செல்வத்தை மணப்பதற்கே (வேறு ஜாதி) பெரும் போராட்டம் நடத்தி, பெற்றோர் சம்மதத்தோடு மணந்தாள். ஜானகியோ, தன் தங்கைகளின் திருமணம் முடிந்தபின், தான் விரும்பிய இலங்கைத் தமிழரை மணந்தாள். அக்பர் அலியின் கல்யாணத்துக்குப் பிறகும், ரோஸியுடனான காதல் தனி ட்ராக்கில் தொடர்ந்தது. எங்களின் அறிவுரைகள் ரோஸியின் அறிவுக்குப் புரிந்தாலும், ’மனது’ ஏற்கவில்லை.

ஒரு வருஷம் போல கழிஞ்சு, எங்க வீட்டுக்கு ஒரு வயசான அம்மா வந்தாங்க. அந்த அக்பர் அலியின் மாமியாராம்!! அவன் மனைவிக்கு எங்க ஊர்தானாம். நானும் அதே காலேஜிலதான் வேலைபாக்கிறேன்னு தெரிஞ்சு வந்திருக்காங்க. ஒரு குழந்தை இருக்காம் - அடப்பாவி!!! கல்யாணமான ஆரம்பத்துலயெல்லாம் நல்லாத்தான் இருந்தானாம், இப்பல்லாம்தான் மனைவிகிட்ட சரியாப் பேசறதில்லையாம். எவளோ மருமகனை கையிலப் போட்டுகிட்டாளாமேன்னு பதறிப்போயி வந்து விசாரிக்க வந்திருக்காங்க. நான், ரோஸியிடம் அவன் ’கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி’ என கதைவிட்டு ஏமாத்திக் கொண்டிருப்பதையும், ரோஸி மீது (முழுத்)தவறில்லையென்பதையும் விளக்கி அனுப்பினேன். பின்னர் ரோஸியிடம் அவன் குழந்தையும், குடித்தனமுமாய் சுகவாழ்வு வாழ்வதைச் சொன்னதும் பயங்கர அதிர்ச்சி ரோஸிக்கு.

விடுமுறையில் ஊருக்குச் சென்ற ரோஸியின் வீட்டில் முழுவிவரம் தெரிந்ததால், ஹவுஸ் அரெஸ்ட். அதேபோலத்தான் ரஷீதா, காயத்ரி வீட்டிலும். பையன்கள் வீட்டில் பிரச்னைகள் இருந்தாலும், சுதந்திரமாகவே வலம்வந்தார்கள். பெண்களோ, காவலோடு வந்து பரீட்சை மட்டும் எழுதிவிட்டுப் போனார்கள். எனக்குத் தெரிந்து இந்த மூன்று காதலுமே நிறைவேறியதாய்த் தெரியவில்லை.

கல்லூரிப் பருவம் என்பது, விடலை விளையாட்டுப் பருவம் போலல்லாது, கொஞ்சமாவது வாழ்வின் எதார்த்தங்கள் புரிய ஆரம்பிக்கும் வயது. அப்பா, அம்மாவின் அருமைகள், குடும்பச் சூழ்நிலைகள் புரிந்து, காதல் செய்வது சரிவருமா, வீட்டில் ஏற்றுக் கொள்வார்களா என்பது கண்டிப்பாகத் தெரியும் வயது. அதைவிட, தன் நிலையைப் பெற்றோருக்கு உணர்த்தி, அதைப் புரிந்துகொள்ள வைக்கும் பக்குவம், ஏற்றுக்கொள்ளவைக்கும் திறன், ஏற்றுக்கொள்ளும்வரை மாறாமல் உறுதியாக இருக்கும் திடம் இருக்கிறதா என்று தன்னைப்பற்றிக்கூடவாத் தெரியாமல் இருக்கும்? இதில் ஆண்களைவிட பெண்கள் பொறுப்புமிக்கவர்களாகவே இருக்கக் காண்கிறேன். ஆனால், சில விதிவிலக்குகளும் உண்டு என்று அறிந்துகொண்டேன், மேற்சொன்ன அனுபவங்களிலிருந்து.

மேற்கூறியவர்களில், ஒரு பெண்ணின் மண வாழ்வு, முந்தையக் காதல் காரணமாகவே ரணப்பட்டுப் போனதாகவும் அறிந்தேன். அந்த ரணம் அவளை மட்டுமா பாதித்திருக்கும்? பெற்றவர்களையும் சேர்த்தல்லவா? பிற்காலங்களில் அப்பெண்கள் நிச்சயம் தம் தவறையெண்ணி மிக வருந்தியிருப்பார்கள். ஆனால், சம்பந்தப்பட்ட ஆண்கள்? கொஞ்சம்கூட வருத்தப்பட்டிருக்கமாட்டார்கள். ஒருவேளை காதலர் தினங்களில் இவற்றை நினைவுகூர்ந்துகொண்டிருக்கலாம். தம் மனைவியரிடமே.

இவ்வகையான தவறுகளில் இருபாலருமே சம்பந்தப்பட்டிருந்தாலும், முடிவில் அதிக பாதிப்பென்பது பெண்களுக்கே என்பது உலக வாழ்வில் மாறாத நியதியாகிப் போனது. அதில் நியாயமில்லையென்றாலும், ஆண்கள் விரிக்கும் வலையைக் கண்டு அதில் வீழாமல் எச்சரிக்கையாகத் தாண்டிப் போகும் பொறுப்பு பெண்களுக்கே உரியது. எவ்வயதினரானாலும்.

புலிகள் ஒருபோதும் சைவமாவதில்லை என்பது புள்ளிமான்களுக்குத் தெரியும், காட்டில்.


Post Comment

கல்லூரிக் காலம்

 
நான் கல்லூரியில் வேலை செய்துகொண்டிருக்கும்போது “பார்ட்-டைம் லெக்சரர்ஸ்"  என்று ஒவ்வொரு துறையிலும், அப்போத்தான் படிச்சு முடிச்சு வேலைக்குச் சேந்த ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். பேருதான் பார்ட்-டைம், ஆனா வேலை ஃபுல் டைம்தான், அதுவும், நாங்கல்லாம் ஜூனியர்ஸ் என்பதால் எக்ஸ்ட்ராவாவும் வேலை செய்ய வேண்டி இருக்கும். ஹெச்.ஓ.டி. & அஸோஸியேட் ப்ரொஃபஸர்ஸ்களோட பேப்பர் வொர்க்ஸ், கிளாஸ் ரீப்ளேஸ்மெண்ட், யுனிவர்சிடி எக்ஸாம் பேப்பர் கரெக்‌ஷன், இப்படி எப்பவும் பிஸிதான். வேறு வேலை கிடைக்கும்வரை ஒரு ஸ்டாப்-கேப் அரேஞ்ச்மெண்டாகச் சிலரும், எப்படியும் வேலை பெர்மெனெண்டாகிவிடும் என்ற நம்பிக்கையில் பலரும் என்று இந்த வேலையில் தொடர்ந்து கொண்டிருந்தனர். அந்தக் குழுவில் நானும்.

எங்கள் கம்ப்யூட்டர் துறை இருந்த கட்டிடத்தில்தான் ஆங்கிலம், வேதியியல், இயற்பியல், கணக்கு துறைகளும் இருந்ததால் (துறைன்னா சட்டுனு ஆற்றுத்துறை, படித்துறை ஞாபகம் வருதா உங்களுக்கு? எனக்கு பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை... ஹி..ஹி.. ) அங்கே இருக்கும் எல்லா ‘யூத்’துகளும் - அதான் பார்ட்-டைம் லெக்சரர்ஸ் - எல்லாம் ஒண்ணா சேந்து ஒரே ஜமாதான்!! நான் கல்லூரியில் படிச்ச காலத்தைவிட, அதிகம் அனுபவிச்ச காலம்னும் சொல்லலாம். படிச்சு முடிச்சு பட்டதாரி ஆகிட்டதால் கிடைச்ச கூடுதல் ‘சுதந்திரம்’ பிளஸ் சொந்தக் கால்ல நிக்கிறோம்கிற நெனப்பும் (அந்தச் சம்பளம் ஒரு மாசம் (அப்பத்திய) வாடகைக்குக்கூட வராதுன்னாலும்) சேந்து ஒரு பறக்கற உணர்வுதான் எப்பவும். இதே உணர்வு கொண்ட நாங்க எல்லாரும் ஒரு குரூப்பாச் சேந்து பண்ணுன அலப்பறைகள் இருக்கே... எங்க ஸ்டாஃப் ரூமைப் பாத்து (கேட்டு), நிறைய பேர் ஸ்டூடன்ட்ஸ் டைனிங் ரூம்னு ஏமாந்துபோனது ஞாபகம் வருது!! அது ஒரு இரண்டாவது கல்லூரிக்காலம்!!

 google.com

அந்தக் குழுவுல நான், பூரணி, சங்கரி, ஜாய், ஜானகி, ஷபீனாவும்தான் பிரதானம். இதில பூரணி ரொம்ப ரொம்ப அப்பாவி; வெறும் சாட்சியா மட்டுமே இருந்தா. இருந்தாலும், கலா போல எங்களை ஒதுக்கவில்லை. கலாவும் யூத்துதான்னாலும், எங்களுக்கே பாடம் எடுத்த சீனியர்ங்கிறதாலயும், “அய்யோ, எனக்கு இன்னும் கல்யாணமாகிலேயே”ன்னு எப்பவும் புலம்பறதாலயும் நாங்க சேத்துக்கிறதில்லை. அத்தோட, நாங்களும் ‘அடக்கமான’ பொண்ணுக இல்லைங்கிறதால, அவங்களும் வந்து சேர மாட்டாங்க!!

“மேம், கல்யாணமானா ஃப்ரீடம் போயிடும்; அதனால ஜாலியா லைஃபை எஞ்சாய் பண்ணுங்க”ன்னு சொன்னா, “எங்க பெரிப்பா பொண்ணு என் வயசைவிட குறைவுதான்; ஆனா, அவளுக்கே கல்யாணமாகிடுச்சு”ன்னு பதிலுக்குப் புலம்புவாங்க. ரொம்பக் கடுப்பாருந்தாலும், அவங்க வறுமையான மற்றும் பொறுப்புகள் அதிகமான குடும்பப் பிண்ணனி தெரிஞ்சதால, பாவமாகவும் இருக்கும்.

அப்புறம் கல்யாணமானதும் அதிகமான வீட்டுப் பொறுப்புகளால புலம்பல். அப்புறம் குழந்தை உண்டானதும் பெரிப்பா பொண்ணுக்கு ஆம்பளைப் பிள்ளை பிறந்திருக்கு, எனக்கும் ஆண்குழந்தை பிறக்கணுமேன்னு புலம்பல்... அங்க வேலைபாத்த ரெண்டு வருஷமும் இவங்கதான் எங்களுக்கு டிவி சீரியல்!!


பசங்க யாரும் இந்த வாத்தியார் வேலைக்கு வர்றதில்லை. தப்பித் தவறி வந்தவங்களும் ரெண்டு மாசத்துக்கு மேலே தாங்க மாட்டாங்க; பின்ன, முன்வினை தன்னைச் சுட ஆரம்பிப்பதைத் தாங்க முடியுமா?

அப்பத்தான் இங்லீஷ் டிபார்ட்மெண்டில ரோஸலின் வந்து சேந்தாங்க. ‘ங்க’வுக்குக் காரணம், வயசு ஒண்ணுரெண்டுதான் முன்னபின்னன்னாலும், ஓங்கி வளர்ந்த உயரமும், ஒரு ஹெ.ஓ.டி.க்கு இருக்கவேண்டிய அதிகாரமான குரலும் கூட. ஆனாலும், உங்களுக்குக் கொஞ்சம் கூட பயம் வராது அவங்களைப் பாத்தா, உடனே ஒரு சிநேகமான சிரிப்பு வந்துடும். அவ்வளவு கலகலப்பு. எங்க (கொள்ளை) கூட்டத்துக்கு தலைவி பொறுப்பு எடுத்துகிட்டப்புறம் அட்டகாசங்கள் தாங்க முடியாத அளவு போக ஆரம்பிச்சுச்சு.

அவங்கமேல மதிப்பு வர இன்னொரு காரணம், அப்பவே எம்.ஃபில். முடிச்சிருந்தாங்க. அடுத்து பி.ஹெச்.டி. பண்ணவும் ரெடியாகிட்டிருந்தாங்க. இத்தனைக்கும் திருநெல்வேலியில ஒரு கடைக்கோடி கிராமம்தான் சொந்த ஊர். ஆனா, அவங்களுக்கு அது பெரிய விஷயமே இல்லை. அவங்க அக்கா ரெண்டு பேரும் ஏற்கனவே இன்னொரு கல்லூரியிலும், ஸ்கூலிலும் டீச்சர்ஸா இருந்தாங்க. அடுத்து, மாணவர்களோட அவங்க பழகற விதம். சின்ன வயசு டீச்சர்ஸ்கிட்ட இது ஒரு அனுகூலம். டீச்சர்ஸ்கிட்ட ஸ்டூடண்ட்ஸ் நல்லா ஜோவியலா பேசத் தயங்கமாட்டாங்க. சில பிரச்னைகளை மனம்விட்டுச் சொல்வாங்க. நமக்குத் தெரிஞ்ச ஆலோசனைகளைச் சொல்லமுடியும். காதுகொடுத்தும் கேட்பாங்க, சீனியர் ஸ்டாஃபைப் போல அலட்சியப் படுத்த மாட்டாங்க இந்த வகையில ஜாய்க்குத்தான் ஸ்டூடண்ட் ஃபேன்ஸ் நிறைய.

பொதுவாவே, அந்தக் கல்லூரியில கிராமத்தைச் சேந்த பசங்கதான் அதிகம் இருப்பாங்கங்கிறதால, திடீர்னு எல்லாப் பாடங்களையும் ஆங்கிலத்துல படிக்க வேண்டி வந்ததும் மிரண்டுபோய் இருப்பாங்க. அதில, இங்க்லீஷ் சப்ஜெக்ட் வேற, வழக்கமான லெட்டர் ரைட்டிங், எஸ்ஸே, காம்ப்ரிஹென்ஷன்னு இல்லாம ரொம்ப டெக்னிக்கல் ஓரியண்டடா இருக்கவும் பயந்து நடுங்கிடுவாங்க. அந்தப் பயத்தைப் போக்க ஆங்கில ஆசிரியர் ரொம்ப ஃப்ரெண்ட்லியா இருந்தாத்தான் முடியும். அந்த வகையில ரோஸலினும், அவங்க துறைத் தலைவர் செல்லப்பா சாரும் பாராட்டப்பட வேண்டியவங்க.

இதுபோல ஆங்கிலத்துல படிக்கக் கஷ்டமாருக்குன்னு காலேஜுக்குப் போகமாட்டேன்னு சொன்ன ஒரு ஸ்டூடண்டை நானும் சேந்து எடுத்துச் சொல்லி, என் பழைய புக்ஸ் & நோட்ஸெல்லாம் கொடுத்து, இப்ப அவரும் ஒரு காலேஜுல லெக்சரரா இருக்கார்!! (நேரம்!!)
 
எங்க குரூப்ல இருந்தவங்க எல்லாருமே நல்லா படிச்சவங்க. ரொம்ப விவரம் தெரிஞ்சவங்கன்னு சொல்ல முடியாதுன்னாலும், ப்ளஸ்-மைனஸ்களை யோசிச்சு செயல்படக்கூடிய அளவுக்கு அறிவுள்ளவங்கதான். இதிலே ரோஸி பாக்கிறதுக்கு அம்மா மாதிரி இருக்கதுனாலயும், எங்க எல்லாரையும்விட பெரிய படிப்பு படிச்சதாலயும் அவங்ககிட்டதான் முதல் ஆலோசனை கேட்போம். நல்ல ஐடியாஸ் கிடைக்கும்.

இப்படி போயிட்டிருக்க சமயத்துல,  எங்களைப் போலவே, ஃபிஸிக்ஸ் டிபார்ட்மெண்டில அக்பர் அலினு ஒருத்தர், எம்.ஃபில். பண்ணவர், பார்ட்-டைமாச் சேந்தார்.

  --  கதை ரொம்பப் பெரிசு.  மிச்சத்தை ஞாயிறு தொடர்கிறேன்.
  

Post Comment

டிரங்குப் பொட்டி - 15


பதிவுக்குள்ளாற டீப்பாப் போறதுக்கு முன்னாடி, ஒரு பொது அறிவுக் கேள்வி: இலங்கையின் தலைநகர் எது? என்னா நக்கல் சிரிப்பு? (சரியான) பதிலச் சொலுங்கப்பு.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

உலகக் கோப்பை க்ரிக்கெட் போட்டி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது, எங்கப் பாத்தாலும் கிரிக்கெட் மயம்!! வீட்டிலே டிவி இல்லேன்னாக் கூட, நெட்டைப் பிடிச்சுகிட்டு பாக்க உக்காந்துட்டாங்க அப்பாவும், புள்ளையும். ஒரு வழியா உலகக் கோப்பை முடிஞ்சுது, ஹப்பாடான்னு மூச்சுவிட நினைச்சா, அடுத்த நாளே ஐபிஎல் தொடங்கிடுச்சாம்ல. அதே கதை தொடருது.

ஆனாலும்,  பாகிஸ்தான், இலங்கை ரெண்டு எதிரி நாடுகளையும் ஜெயிச்சுட்டோம்னு சந்தோசமாத்தான் இருக்கு. இந்தியாவில் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதம், ஈழத் தமிழர்கள், மீனவர்கள் படுகொலை எல்லாத்துக்கும் சேத்துவச்சு பழி வாங்கிட்டோம்ல!! இனி தகராறு பண்ணுவீங்க? அதே மாதிரி ஐபிஎல்லிலும், நம்ம சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸையும், டஸ்கர்ஸையும் தோக்கடிச்சுட்டா, தண்ணி தராததுக்கு தண்ணிகாட்டுன மாதிரி ஆகும். செஞ்சிடுங்கப்பா.

உலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு, வீரர்களுக்கு பரிசு மழை பொழியுது. தனியாரோடு, மத்திய/மாநில அரசாங்கங்களும் சேந்து அள்ளியள்ளிக் கொடுக்கிறாங்க. ஏழைகளுக்கு இலவசம் கொடுக்கிறதையே எதிர்த்தோம். இத என்னச் சொல்ல?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

வாப்பா, உம்மா வந்திருக்காங்க. வாப்பா, இந்தியாவின் லஞ்ச ஊழல் மகிமைகளைப் பற்றிச் சொன்னாங்க. லஞ்சம் வாங்குவதும், குடிப்பழக்கமும் குற்றம் என்கிற மனப்பான்மையே இல்லாதுபோய், அவை சகஜம் என்ற நிலை வந்துவிட்டதாம். லோக்பால் எந்த அளவு பலன் தரும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது. அம்மா விலைவாசி உயர்வைக் குறித்துப் புலம்புகிறார். பதிலுக்கு நானும், இங்குள்ள விலைவாசி, வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் என்று புலம்பினேன். பின்னே, நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு ஒரு மாதம் ஆனதால், கதிர்வீச்சும், பாதிப்புகளும் குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவ்விபத்துகள், செர்னோபில் விபத்தின் அளவுகளுக்கு ஈடானவை என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் அணு உலை விபத்தின் வீரியத்தை, அதற்கென உள்ள உலக அளவீட்டு முறையில் ( international scale ) 5-லிருந்து, ”7”-ஆக உயர்த்தியுள்ளனர்.  திருநெல்வேலி, நாகர்கோவில் இரண்டுக்கும் நடுவில்தான் கூடங்குளம் உள்ளது என்ற நினைப்பே நடுங்க வைக்கிறது.

பூகம்பம் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரியுமா? உடனே வெளியே ஓடிவர வேண்டும். முடியாத பட்சத்தில், கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் மறைந்துகொள்ள வேண்டும் என்றுதானே அறிந்திருக்கிறோம்? ஆனால், கட்டில்/மேஜை போன்றவை இடிந்து விழும் கட்டிடத்தினால் நொறுங்கிவிடுமே என்று நினைப்பதுண்டு. சமீபத்தில் வந்த ஃபார்வேர்ட் மெயிலில் பதில் கிடைத்தது.

பல நாடுகளிலும், பூகம்ப விபத்துகளில் மீட்புப் பணி செய்த ஒருவர் எழுதிய கட்டுரையில்,  ஒருபோதும் கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் ஒளியக்கூடாது. ஆனால், அவற்றை ஒட்டி, பக்கத்தில் கை, காலை மடக்கி (கருவில் உள்ள குழந்தையைப் போல்) படுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  கட்டிடம் இடிந்து உயரமான பொருளின்மீது விழும்போது, அருகில் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படும். அது பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். படங்களைப் பாருங்கள், புரியும்.
()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

என்னவர் ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஃபோன் பண்ணினார். பேசும்போது, ஜிபிஎஸ்ஸின், "turn left", turn right" என்ற பெண்குரல் கேட்டது. “வீட்டுக்குத் தினமும் வழக்கமா வர்ற வழிதானே, அப்புறம் ஏன் ஜிபிஎஸ்?”னு கேட்டதுக்கு வந்த பதில், “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!!


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஆமா, இலங்கை தலைநகரம் என்ன? கொழும்புவா?  ஹூம்.. இப்படித்தான் நானும் என் பெரியவன்கிட்டச் சொல்லி மாட்டினேன். ”ஸ்ரீ ஜெயவர்த்தனபுரக் கோட்டை” தான் நிர்வாகத் தலைநகரமாம். கொழும்பு, வியாபாரத் தலைநகரம்தானாம். கரெக்டா?


Post Comment