”உலக சினிமாக்கள்” என்ற பதமே நமக்கு ஒரு அந்நியப்பட்ட விஷயம் போலத் தோன்றும். அதுவும் இணையம் வந்து, அதைக் குறித்து இங்கு சில பெரிய தலைகள் - பின்நவீனத்துவ வாதிகள் என்றும் சொல்லலாம் 😂😀 - உலக சினிமா, உலக சினிமா என்று பேசி, அதை பற்றி ரொம்ப ஆழமா விவாதித்துக் கொள்ளும்போது இதெல்லாம் நமக்கு எட்டாத - புரியாத விஷயங்கள் என்று ஏக்கத்தோடு பார்த்துவிட்டுப் போய்விடுவேன்.
இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன், இங்கு அபுதாபியில், ஒரு அமைப்பினால் இது போல “உலக சினிமாக்கள்”, வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று படங்கள்- அதுவும், இலவசமாகத் திரையிடப் படுகிறது என்று தெரிய வந்த போது ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஏற்பட்டன!!
எல்லாமே நல்ல படங்கள் என்றாலும், நம் தேர்வு சில சமயம் ஏமாற்றிவிடுவதுண்டு. சில மாதங்கள் முன், பிறந்த குழந்தையை சர்வாதிகாரிக்குப் பயந்து ஆற்றில் விடுவதாக வந்த ட்ரெய்லர் பார்த்து, மூஸா (மோசஸ்) நபியின் கதை போல இருக்கிறதே என்று ஆவலோடு போனால்... குள்ள மனிதர்கள், சூனியக்காரி, மந்திரவாதி என்று சூர மொக்கைப் படமாகிவிட்டது அது!!
இருந்தாலும் பல நல்ல படங்கள் பார்த்திருக்கிறேன். அதில் இரண்டைப் பற்றிப் பகிர ஆசை. ஒன்று இன்று...
LEAVE NO TRACE:
நகரத்தை விட்டு ஒதுங்கி வாழ நினைக்கும் ஒரு அப்பா-மகள்; இவர்களை அமெரிக்க அரசாங்கம் கட்டாயப்படுத்தி நகரத்தில் தங்க வைக்கிறது என்று சொன்ன இந்தப் படத்தின் ட்ரெய்லர்/ கதைச் சுருக்கத்தைப் பார்த்து, அமெரிக்கர்கள் சிவப்பிந்திய பழங்குடி மக்களின் பிள்ளைகளைப் பிடித்து வந்து கல்வி கற்றுக் கொடுக்கிறோம் என்ற பெயரில், அவர்களது இயல்பான வாழ்வையும், நிலத்தையும் ஆக்கிரமித்த கதையை ஒத்திருக்குமோ என்ற ஆவலில் படம் பார்க்கச் சென்ற எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்... ரொம்ப ஓவர் திங்கிங் ஆகிப்போச்சு இப்பலாம்...😎
ஒரு அப்பா, தன் 12-13 வயது மகளோடு, காட்டுப் பகுதியில் இயற்கை வாழ்வு வாழ்கிறார். அடிப்படைத் தேவைகளுக்காக மட்டுமே எப்போதாவது ஒரு முறை நகரத்திற்குச் சென்று வருகிறார். ஏன் அவ்வாறு இருக்கிறார் என்பதற்கான காரணம் எதுவுமே படத்தில் கடைசி வரை சொல்லப்படவில்லை. ஆனால் நிறைய க்ளூக்கள் கொடுத்து நம்மையே ஊகிக்க வைக்கிறார்கள்.
வசனங்களும் மிகக் குறைவு. ஆனால், ஒவ்வொன்றும் ஆணியடித்தது போன்று கருத்து கூறுகிறது. அவர்களின் பயணத்தில், வழியில் சின்னச் சின்ன நிகழ்வுகளாகத் தெரிபவை சொல்லும் சேதிகள் பெரிது.
அவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர். அமெரிக்கா, பல நாடுகளின் மீது தொடுத்த போர்களில் பங்கெடுத்துள்ளார். பலஸ்தீனியர்கள் அணியும் வெள்ளை-கறுப்பு கட்டம் போட்ட ஸ்கார்ஃபை தன் கழுத்தில் அணிந்திருக்கிறார். ராணுவ வீரர்களுக்கான சலுகையாக Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகள் போன்றவை இலவசமாகக் கொடுக்கப்படுகின்றன. அவற்றைப் பிறருக்கு விற்று தன் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்.
காட்டிலேயே ஒரு மிகச்சிறிய கூடாரத்தில் தங்கி உணவு தயாரித்துக் கொள்கிறார்கள். தன் மகளுக்கு கல்வியுடன், சதுரங்கம் போன்ற விளையாட்டுக்களும் கற்றுக் கொடுக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருக்கும் வாழ்க்கை, அவர்களைப் பிடித்துக் கொண்டு செல்ல வரும் அமெரிக்க சமூக நல அலுவலர்களால் தடைபடுகிறது. அமெரிக்க சட்டப்படி, அதன் குடிமக்கள் வாழ்விடம், கல்வி, அடிப்படை மருத்துவ உதவி எல்லாம் கிடைக்கப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிப்படி அவர்களை அழைத்துச் சென்று, விசாரணை செய்கிறார்கள்.
அவர் காட்டுக்குள் வாழ்வதால், மரம் செடிகளோடு வாழ விரும்புகிறார் என்று முடிவு செய்து, அவருக்கு அதே போன்றதொரு காடு சார்ந்த பெரும் தோப்பில் வேலையும், வீடும் கொடுக்கிறார்கள். விருப்பமின்றி அங்கு தங்குகிறார் அவர். பதின்மத்தில் நுழையும் மகளுக்கோ இப்படியும் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்று ஆச்சரியம். அங்கே தொடங்குகிறது சின்னஞ்சிறிய விரிசல்.
அவளை முறைப்படி பள்ளியில் சேர்க்க அரசு ஏற்பாடு செய்கிறது.அதுவரை அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்து அங்கிருக்கும் சக வயதினருடன் நட்பு கொள்கிறாள். ஒரு முறை வீடு வர நேரமாகும்போது, அப்பாவிடம் ஒரு மொபைல் இருந்தால் நான் உங்களைத் தொடர்பு கொள்ள வசதியா இருந்திருக்கும் என்று சொல்ல, “இவ்வளவு வருடங்கள் நாம் அது இல்லாமல்தானே தொடர்பில் இருந்தோம்” என்கிறார் தந்தை!!
இன்னொரு சமயத்தில், அடிக்கடி நண்பர்களைச் சந்திக்கச் செல்வது பற்றி தந்தை கேள்வி எழுப்ப, பள்ளிக்குச் செல்லுமுன் தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்காகச் செலவதாகவும், ஒன்றும் தெரியாமல் பள்ளிக்குப் போனால், சக மாணவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று மகள் பதில் சொல்ல, “மற்றவர்களின் அபிப்ராயம் நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?” என்று தந்தை கேட்கிறார்!! நகரத்தில் வாழும் மக்களின் மனநிலை ஒற்றை வரியில் சொல்லப்படுகிறது!!
அங்கிருந்து தப்பிச் செல்கிறார்கள் இருவரும் - மகள் அரை மனதோடு உடன் வருகிறாள். பல தடங்கல்கள், போராட்டங்கள் தாண்டி, அடர்ந்த காட்டு வழி செல்லும்போது, தந்தை ஆபத்தில் சிக்கிக் கொள்கிறார். எப்படியோ சிறிது தூரத்தில் இருக்கும் ஒரு பண்ணையில் சிகிச்சை கொடுக்கப்பட்டு பிழைக்கிறார். உடல் தேறும் வரை அங்கு தங்கி இருக்கிறார்கள். மகள் பண்ணை வேலைகளில் உதவுகிறாள்.
உடல் தேறியதும், தந்தை வேதாளமாய் மீண்டும் முருங்கை மரம் ஏற, மகள் மறுக்கிறாள். மிகப் பெரிய வாக்குவாதம், கூச்சல் களேபரமெல்லாம் இல்லை.... ஒரு சில வரிகள் மட்டுமே... இருவரும் அமைதியாய்ப் பேசிக் கொள்கிறார்கள்... பின்னர் தந்தை மட்டும் தன் பயணத்தைத் தொடர்கிறார்!!
அந்தக் கடைசி உரையாடலில் மகள் சொல்லும் ஒரு வாக்கியம்... “What is wrong with you is not wrong with me!!" படம் முழுவதையும் விளக்கி விடுகிறது.
இப்படம், ஒரு தந்தை-மகள் உறவு, இயற்கை வாழ்வு குறித்த படம் என்பதைவிட அமெரிக்காவின் போர்களில் பங்கு பெறும் இராணுவ வீரர்களின் மனச்சிக்கல்கள் குறித்த கதை என்பதே என் கருத்து.
தனக்குக் கொடுக்கப்பட்ட Post-traumatic stress disorder (PTSD) மாத்திரைகளை, தன்னைப் போன்ற ஓய்வு பெற்ற சக இராணுவ வீரர்களிடம் விற்க முயலும்போது அதில் ஒருவர் சொல்கிறார், “இந்த மாத்திரைகளால் எந்தப் பயனும் இல்லை. பல வருடங்கள் பயன்படுத்திப் பார்த்து விட்டேன். இரவுகள் இன்னும் பயங்கரமானவைகளாகவே இருக்கின்றன” என்பார்!!
வலுக்கட்டாயமாகத் தொடுக்கப்படும் போர்களில் பலி கொடுக்கப்படும் வீரர்கள்... “எல்லையில் இராணுவ வீரர்கள்...” என்று சொல்லியே வளர்க்கப்படும் தேச பக்தியுடன் மக்களும்...
ட்ரெய்லர்: https://youtu.be/Y28oII_G688
|
Tweet | |||
2 comments:
Not to publish - just check the typo
தேவையானவற்றைக் கற்றுக் கொள்வதற்காகச் செலவதாகவும் ...
சிறப்பான எழுத்தமைப்பு நன்றி
Post a Comment