சென்ற பதிவின் தொடர்ச்சி....
1. நம்ம ஊர் சாமியார்கள் காத்துலருந்து விபூதி வரவழைக்கிறதைப் பாத்திருப்பீங்க. இந்த மெஷின், காத்திலருந்து தண்ணீர் வரவழைக்கும்!!
ஆமா, வெறும் காத்து மட்டும் இருந்தாப் போதும், தண்ணி செஞ்சிடலாம்!!
![]() | ||
ecoblue.com |
இந்த மெஷின், காற்றை உறிஞ்சி, அதிலிருக்கும் ஈரப்பதத்தைத் தண்ணீராக மாற்றிக் கொடுக்கும்!! ஒரு நாளில் 30லி கொடுக்கும். காற்றில் 30% ஈரப்பதம் இருக்கவேண்டும் என்பதுதான் ஒரே கண்டிஷன். (இல்லைன்னாலும் பரவால்லை, அதுக்குத் தனியா "Humidifier"னு ஒரு மெஷின் ஆல்ரெடி மார்க்கெட்டுல இருக்குது!!) விலை 1300$ லருந்து ஆரம்பிக்குது. இந்தத் தண்ணீர், குழாய்த் தண்ணீர் போல கெமிக்கல்கள், கிருமிகள் இல்லாமல், மிக சுத்தமானது என்பதுதான் இதன் ஸ்பெஷல்!!
2. எலெக்ட்ரிக் கார்கள்:
![]() |
hybridcars.com |
முழுக்க முழுக்க சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரிகளால் ஓடும் கார். (இந்தியாவிலும் முன்பே இது அறிமுகப்படுத்தப்பட்டது; நடிகர் பார்த்திபன் வீட்டில்கூட ஒருமுறை எரிந்துபோனதே?) தற்போது நன்கு தொழில்நுட்ப ரீதியாகவும், பாதுகாப்பிலும் மேம்படுத்தப்பட்டு பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. விலை, பெட்ரோல் கார்களை விட மிக அதிகம் என்பதால் இன்னும் பிரபலமாகவில்லை. ரெகுலர் பராமரிப்பு தேவையில்லை, மிகக் குறைந்த கார்பன் எமிஷன் போன்ற அனுகூலங்கள் இருந்தாலும், அதிக விலையின் பயனை நீண்டநாள் பயன்பாட்டுக்குப் பின்தான் (ஸோலார் பேனல் போல) பெற முடியும் என்பதால் மிகுந்த தயக்கம் உள்ளது மக்களிடையே.
பிரபல கார் கம்பெனிகளான டொயொட்டா ‘பிரியஸ்’ என்ற பெட்ரோல், மின்சாரம் இரண்டும் பயன்படுத்தப்படுகிற ஹைப்ரிட் காரையும், நிஸ்ஸான் “லீஃப்” என்ற EV (Electric vehicle)யையும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளன. மற்ற பிரபல கம்பெனிகளும் விரைவில் செய்யவுள்ளன.
3. காய்கறித் தொழிற்சாலை!!
ஆமாங்க, காய்கறியை இந்த மெஷினை வைத்து உருவாக்கிக் கொள்ளலாம். இதற்காக, நோய் நீக்கப்பட்டு, சிறப்பாகத் தயாரிக்கப் பட்ட விதைகளை (ஆனால் geneticaly modified இல்லையாம்), இதனுள் வைத்தால் 30 முதல் 45 நாட்களில் காய்கறிகள் ரெடி!! குழாய்கள் மூலம் தண்ணீர், தேவையான சத்துக்களும், எல்.இ.டி. லைட்டுகள் மூலம் வெளிச்சமும், கட்டுப்படுத்தப்பட்ட ஈரப்பதமும் கொடுக்கப்பட காய்கறிகள் விளைகின்றன. கிட்டத்தட்ட Green House முறைதான் என்றாலும், முழுக்க மூடியே இருப்பதால், காற்றினாலும், பூச்சி, கிருமிகளாலும் பரவும் நோய்கள் இல்லாமல் ஆரோக்கியமான காய்கறிகள் ரெடி!! இன்னொரு விஷயம், எல்லா காய்கறிகளையும், எல்லா பருவங்களிலும் விளைவிக்கவும் முடியும். மேலும் கிச்சனில் கண்ணெதிரே காய்கறி விளையும்!!
4. பாசி டூ பெட்ரோல்:
பாசி அதான் Algae - தண்ணீரில் பாசி பிடிக்குமே, அந்தப் பாசியிலருந்து எரிபொருள் எடுக்கலாமாம்!! பயோ-ஃப்யூயல் எனப்படும் உயிரி-எரிபொருட்கள் இதுவரை கரும்பு, சோளம் போன்ற உணவுப் பொருட்களிலிருந்துதான் தயாரிக்கப் படுகிறது. அதைத் தவிர்த்து, பாசியிலிருந்து எடுத்தால் உணவுப்பொருளை வீணாக்க வேண்டாமே. மேலும், முன்பு சொன்ன CCS - Carbon capture-லும் பாசி பயன்படுகீறதாம்.
எந்த வகைப் பாசிகள் எதெதற்கு உகந்தவை என்று ஆராய்ச்சிகள் நடக்கின்றன. இன்னொரு தகவல், பிரேஸிலில்,1977லிலிருந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டதன் விளைவாக, பெட்ரோலை விட எத்தனால் என்ற பயொ-ஃப்யூயல் சீப்பாகக் கிடைக்கிறதாம். இது குறித்த ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகித்த ஒரு பேராசிரியர்தான் அங்கே பின்னாளில் அறிவியல்-தொழில்நுட்பத் துறை அமைச்சராக வெகுகாலம் பதவி வகித்தாராம். ஹூம்...
5. வெறுங்கால் கல்லூரி - Barefoot College
சில சமூக சேவை அமைப்புகள் இணைந்து, உலகம் முழுவதிலும் இவ்வகைக் கல்லூரிகளை நிறுவி வருகின்றன. இந்தியாவிலும் உள்ள இக்கல்லூரியில் பட்டப் படிப்புகள் இல்லை, ஆனால் வாழ்வியல் படிப்புகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஏழைகளுக்காக, ஏழைகளால் என்ற குறிக்கோள் கொண்ட இதில், படிப்பறிவில்லாத யாரும் இணைந்து, தங்களுக்கு விருப்பமுள்ள துறையில் அடிப்படை அறிவு பெற்றுக் கொள்ளலாம். இங்கு வேலை செய்பவர்களும் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. உதாரணமாக மின்சார வசதியில்லாத ஒரு கிராமத்தில் சிலரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஸோலார் செல்களைப் பற்றிப் பயிற்சியளித்து, பின் அவர்களைக் கொண்டே அக்கிராமத்திற்கு சோலார் எனர்ஜி மூலம் விளக்கேற்றுகின்றனர். இவர்கள் உருவாக்கிய சூரிய சக்தியால் இயங்கும் மணிக்கு 600லி குடிநீர் தரும் ஒரு RO plant-ம், இரண்டு Micro-hydel power plants-ம் வெற்றிகரமாக இயங்கி வருகின்றன.
மேலும் அடிப்படைத் தேவைகளான குடிநீர், வீடு, உடல்நலம், வேலை, கல்வி போன்றவைகளை இயற்கை முறைகளைக் கொண்டு குறைந்த செலவில் நிறைவேற்றிக் கொள்ளப் பயிற்சியளிக்கின்றனர். 38 வருடங்களுக்குமுன் ராஜஸ்தானில் தொடங்கப் பட்ட இந்தக் கல்லூரி, இந்தியாவில் 14 மாநிலங்களில் பரவியுள்ளது.
6. மிதக்கும் வீடு:
அமெரிக்காவில் அடிக்கடி சூறாவளித் தாக்குதல் ஏற்படக்கூடிய நியூ ஆர்லியன்ஸில் மாகாணத்தில் மிதக்கும் வீடு ஒன்றைக் கட்டியுள்ளனர் "Make it Right foundation" என்ற அமைப்பினர். காத்ரினா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுபோன்ற வீடுகள் கட்டித் தரும் முயற்சியில் உள்ளனர். முழுக்க சூரிய ஒளி பயன்பாடு மற்றும் மழைநீர் சேகரிப்பும் உண்டு.
7. தொங்கும் தோட்டம்!!
BEFORE |
![]() |
AFTER |
இதுதான் என்னை ரொம்பக் கவர்ந்த பிராஜக்ட். முழுக்க முழுக்க ஒரு பள்ளி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டு, அவர்கள் பள்ளியினால் செயல்படுத்தப்பட்டது என்பது கூடுதல் ஸ்பெஷல். அமீரகத்தில் அல்-அய்னில் உள்ள “லீவா இண்டர்நேஷனல்” என்ற பள்ளியின் மாணவர்கள், தம் பள்ளியின் மின்சாரப் பயன்பாட்டைக் குறைப்பதற்காக பள்ளி முழுக்கச் சுற்றுச் சுவரில் தோட்டம் அமைத்துள்ளனர். அத்தோட்டத்திற்கு நீர்ப் பாய்ச்ச பள்ளியின் கிச்சனில் இருந்து வரும் கழிவுநீரைச் சேகரித்து, சுத்திகரித்து, குழாய்கள் மூலம் செடிகளுக்குத் தருகின்றனர். இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு, ஸோலார் எனர்ஜியைப் பயன்படுத்துகின்றனர். வெளிப்புற விளக்குகளுக்கான மின்சாரமும் இதிலேயே கிடைக்கிறதாம். பயன்படுத்தத் தொடங்கிய ஆறே மாதத்தில், 20% மின்சாரக் கட்டணம் குறைந்துள்ளதாம்.
முடிவுரை:
கொஞ்ச நாள்ல உலகத்துல பெட்ரோல், தண்ணீர், உணவு எல்லாம் காலியாகிடும், அது இருக்காது, இது இருக்காதுன்னெல்லாம் பயமுறுத்துறாங்க. ஆனா, மனித இனம் இதுபோன்ற பல சவால்களை எதிர்கொண்டுதானே இத்தனைக் காலம் வாழ்ந்துள்ளது? அதுபோல இப்பவும், மாற்றாக பலவற்றையும் கண்டுபிடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருக்கிறது. “மரம் வச்சவன் தண்ணி ஊத்துவான்”னு சும்மாவா பெரியவங்க சொன்னாங்க? ஆனா அதுக்காக நாம நம்ம பொறுப்புகளையும் மறந்துடக் கூடாதுதான்!!
|
Tweet | |||