”அல்ஹம்துலில்லாஹ், என் பிள்ளைகள் எல்லாரின் கடமைகளையும் நிறைவேற்றிவிட்டேன். நம் வீட்டு விசேஷம் ஒவ்வொன்றிலும் என்னிடம் பிரச்னை செய்தவர்களை இனி பார்த்துக் கொள்கிறேன்!!” என் கடைசி தங்கையின் கல்யாணம் முடிந்த இரண்டு நாட்களில் இப்படிச் சொன்ன என் வாப்பாவை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். என் வாப்பாவோடு பழகியிருந்தால் நீங்களும் அப்படித்தான் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள்.
நான்கு மகள்கள், மூன்று தங்கைகள், வயதான பெற்றோர், மனைவி இவர்களோடு, முதுகுத்தண்டில் மேஜர் ஆபரேஷன்கள் காரணமாக மாதக்கணக்கில் படுக்கையில் இருந்துப் பிழைத்து, பரம்பரை சொத்து என்று எதுவுமில்லாத ஆனால் குடும்பப் பொறுப்பு முழுதும் தலையில் ஏற்றுள்ள ஒரு ஆண் என்ன நினைப்பார்? எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் தங்கைகளையும், மகள்களையும் கட்டிக் கொடுத்துக் கடமையைக் கழிக்க வேண்டும் என்றுதானே?
பெண்கல்வி என்பது அர்த்தமில்லாத வார்த்தையாகிவிட்ட இந்நாளில், அரிதாக மிகச்சில இடங்களைத் தவிர, ஆண், பெண் வித்தியாசமில்லாமல் எல்லாருமே படிக்கிறார்கள் இன்று. ஆனால் 1980களில் கிராமங்களில் பெண்கள் படிப்பது என்பது கொஞ்சம் அபூர்வமான விஷயம்தான். அதிலும், தன் உடல்நிலையும் சரியில்லாமல், தன் சம்பாத்தியம் மட்டுமே கொண்டு எல்லாரையும்/ எல்லாவற்றையும் நடத்த வேண்டிய சூழலில், தன் இரண்டு தங்கைகளையும், நான்கு மகள்களையும் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்ததென்பது ஆச்சர்யமென்ன, அதிசயமேதான் அப்போ.
உறவினர்களிடமிருந்து வந்த எதிர்ப்புகளைத் தான் தாங்கிக் கொண்டு, எங்களை அந்த வீச்சுக்கள் எதுவும் அண்டாதவாறு காத்தவர் என் தந்தை. அதே சமயம், “பெண்பிள்ளைகளை நான் எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்க வைக்கிறேன் பாத்தீங்களா” என்று எந்த பெருமைவார்த்தைகளும் சொல்லியதில்லை ஒருபோதும். அதுவே ஊக்கமாகி, நாங்கள் ஆறு பேரும் பட்டங்கள் பெற்றோம். எங்கள் ஊரின் மூன்றாவது பெண் பொறியியல் பட்டதாரி எங்கள் குடும்பத்திலிருந்து என்பதிலிருந்தே பெண்கல்வி அந்நாட்களில் எந்த அளவில் இருந்தது என்பது புரியும். ஏன், வியாபாரப் பிண்ணனி கொண்ட குடும்பத்தில் வந்ததால், படிப்பதற்கு என் வாப்பாவும் இதே அளவு போராட வேண்டியிருந்தது. ஸ்காலர்ஷிப் புண்ணியத்தில், என் வாப்பாவும் ஊரின் முதல் பத்து இஞ்சினியர்களில் ஒருவரானார்.
ஆண் குழந்தைகளும் உடைய என் தந்தையின் நண்பர்களெல்லாம், மகன்களைப் பெரிய படிப்பெல்லாம் படிக்க வைத்துவிட்டு, மகள்களைப் பள்ளிப் படிப்புகூட முடிக்காமல் திருமணம் செய்து கொடுத்து கடமையை நிறைவேற்றியதாய் நிம்மதிப் பெருமூச்சுவிட, தனியொரு ஆளாய் எல்லா பாரத்தையும் சுமந்து நின்றார் என் வாப்பா.
நான் 12ம் வகுப்பு படிக்கும்போது, தோழிகளோடு அடுத்தது என்ன படிப்பது என்று அரட்டை நடந்துகொண்டிருந்தது. எல்லோரும் அப்போதைய கனவான இஞ்சினியர், டாக்டர் படிப்பைச் சொல்லிக்கொண்டிருக்க, நல்லா படிக்கக்கூடிய ஒரு தோழி, ”எங்கம்மாப்பா, நீ சம்பாரிச்சு எங்களுக்காத் தரப்போறே; அதனால வெறும் பி.ஏ. இல்ல பி.எஸ்ஸி. படி போதும்னு சொல்லிட்டாங்க” என்றபோது எனக்கு அவளிடம் ஏற்பட்ட பரிதாபத்தைவிட, என் தந்தையிடம் ஏற்பட்ட ஆச்சர்யம்தான் அதிகம்.
அதுமட்டுமல்ல, ஆண்மக்கள் இல்லை என்பதால், பொம்பளப்புள்ளயள படிக்கவச்சு காசைக் கரியாக்கிட்டு, கடைசி காலத்துல அதுககிட்டத்தான் கையேந்தப் போறார் என்ற எதிர்பார்ப்போடு இருந்த பலரின் எண்ணத்திலும் மண்ணைத் தூவி, இறையருளால், இன்றும் தன்னிறைவோடு வாழுகின்றார். (இதற்கு என் தாயின் சிக்கனமும்கூட காரணம்). ஆண்மக்கள் பெற்றதற்காக பெருமையுற்றவர்கள் பலர் இன்று மகன்கள் அனுப்பும் பணத்தை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
படித்துமுடித்து என் வாப்பாவோடு அமீரகத்தில் இருந்த போது, நண்பரொருவர் என்னிடம் காஷ்மீர் பற்றி பேசும்போது, தவறான தகவல்கள் தந்து குற்றம் சாட்ட, என் வாப்பாவிடம் நானும் ஏன் இப்படி என்று கேட்டபோது ஒன்றும் சொல்லாமல் புன்னகைத்துவிட்டு அமைதியாகிவிட்டார். சில மாதங்கள் கழித்து, "Plebiscite" என்ற கவர்ஸ்டோரியுடன் வந்த இந்தியா டுடே பத்திரிகை அந்நண்பரின் விஷமத்தனத்தை விளக்கியது. அன்று என் வாப்பா விளக்கியிருந்தால்கூட ஒருசார்பாகப் பேசுவதாக நினைத்திருப்பேனோ என்னவோ.
நெருங்கிய உறவுகளில் சிலர் அவ்வப்போது ஏதாவது பிரச்னை கிளப்பி, அங்கேயிங்கே சென்று அவதூறு பேசிக்கொண்டு இருந்தாலும் அதைப் பற்றி எதுவுமே கேட்கமாட்டார். வாப்பாவிடம் நீங்க ஏன் எதிர்க்காம இருக்கீங்க என்று கேட்டாலும், இதையெல்லாம் கண்டும்காணாம விட்டுர்றதுதான் நல்லது; பெரிசா எடுத்தா நம்ம நிம்மதிதான் கெடும்; அதுதான் அவங்க எதிர்பார்ப்பு என்று சொல்லி, "Ignorance is the best policy" என்று கற்பித்தவர். சிலர், சரியாக எங்கள் நால்வரின் திருமணங்களின்போதெல்லாம் பிரச்னையை உண்டாக்கி, வரமாட்டேன் என்று முறைத்துக் கொண்டு நிற்கும்போதெல்லாம், எதுவுமே நடக்காததுபோல, சென்று அழைத்துவிட்டு வருவார். அவர்களும் பெட்டிப்பாம்பாக அடங்கி வருவார்கள்.
அப்படிப்பட்ட என் வாப்பாவிடமிருந்து அவ்வார்த்தைகள் வந்தபோதுதான் எனக்கு ஆச்சர்யம் வந்தது. சரி, சாது மிரண்டால் கதையாக, என் வாப்பாவும் பொங்கி எழுந்துவிட்டார்கள் என்று நினைத்தேன். சில நாட்கள்முன், அவ்விதம் பிரச்னை செய்வதையே வழக்கமாகக் கொண்ட ஒருவரின் வீட்டு நிச்சயதார்த்தம் முதல் திருமணம் வரை தம்பதி சமேதராக முன்னின்று நடத்திக் கொடுத்துவிட்டு வந்திருக்காங்க!! இதைத் தோழியிடம் சொல்லியபோது, “இன்னா செய்தாரை..?” என்றாள். நான், “மேன்மக்கள் மேன்மக்களே!!” என்றேன்.
|
Tweet | |||