நெல்லையிலுள்ள என் ஊரில், முன்காலங்களில், விவசாயம் செய்பவர்கள்தான் பெரும்பணக்காரர்கள். அடுத்ததாகத்தான் வணிகம் செய்பவர்கள். அதல்லாமல், பெரும்பாலானோர் நெசவு செய்பவர்கள்.
agritech.tnau.in
நெசவுத் தொழில் செய்பவர்கள் வீட்டிலேயே ஒரு (6x6x4' approx) பள்ளம் தோண்டி அதிலே நெசவுத்தறி வைத்திருப்பார்கள். அதில் மேலே தொங்கும் ஒரு கயிரைப் பிடித்து இழுத்துஇழுத்து விட்டால் சல்லக்-புல்லக் என்று சத்தம் போட்டுக் கொண்டு நூல்கண்டுகள் அங்குமிங்கும் ஓடுவதும், நூல்வரிசைகள் அப்படியே பசைபோட்டதுபோல ஒட்டிக்கொண்டு துணியாக மாறிவிடுவதும் பார்க்க மேஜிக் போல இருக்கும். பெரும்பாலும் லுங்கிகள்தான் நெய்யப்பட்டன. இப்போது நினைவுபடுத்திப் பார்க்கும்போது, தறிக்குழிகள் இருக்கும் வீடுகளில் சிறு குழந்தைகளை எப்படி அதில் விழாமல் வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
wikipaedia
வாரம் ஒருநாள் ஒருவர் பாவுகள் காய வைப்பார்கள். அதற்கு, மரக்கட்டைகளால் செய்யப்பட்ட ஸ்டாண்டுகளில் நெசவு செய்யவேண்டிய நூல்வரிசைகளை (பாவுகள்) விரித்து, அதில் கஞ்சி தடவுவார்கள் (என்று நினைக்கிறேன்). மிகச்சிறிய வயது என்பதால் அதிக விவரங்கள் தெரியவில்லை. இதற்கு, அந்தத் தெருவில் இருக்கும் நெசவுசெய்பவர்கள் எல்லாரும் வந்துநின்று ஆளுக்கொரு வேலை செய்வார்கள். தெருவின் முழுநீளத்திற்கு இந்த பாவுகள் பரப்பப்பட்டிருக்கும் என்பதால், பாவு காயும் அந்த அரைநாளும் தெருவில் நடமாட சிரமமாக இருக்கும் என்றாலும் யாரும் ‘நியூசென்ஸ்’ வழக்கு போட்டதில்லை!! :-))))
ஆனால், எனது பள்ளிக்காலங்களில் இந்த மாதிரி தறிசத்தமோ, பாவு காயவைப்பதோ பார்த்ததாக ஞாபகம் இல்லை; பவர்லூம்களின் வருகை காரணமாகவோ என்னவோ? தறிகள், ஒன்று சும்மா இருந்தன, அல்லது விற்கப்பட்டு குழிகள் மட்டும் இருந்தன.
ஆனால், எங்கள் ஊரில் நெசவுத்தொழில் முடங்க ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்தின் முன்னர் தொடங்கிய ஒரு தொழில் பீடித்தொழில்!! இக்காலத்தின் ஐடி கம்பெனிகளும், கால் சென்டர்களும் அதிகச் சம்பளம், சாப்பாடு, ஜிம், இலவச போக்குவரவு என சலுகைகள் தந்து இளவயதினரை வளைத்துப் போடுவதுபோல, அக்காலத்தில் வறுமையில் இருந்தவர்களை - அதுவும் பெண்களை- வளைத்துப் போட்டது இந்த பீடித் தொழில் எனலாம்!! பீடி சுற்றுவதற்கான மூலப்பொருட்களான இலை, புகையிலைத்தூள், நூல் எல்லாமே இலவசம்; ஆனால் சுற்றித்தரும் பீடிக்குக் கூலி தருவோம் என்றால் இக்கால “நிலம் வங்கினால் தங்க நாணயம் இலவசம்” ஆஃபரைவிட கவர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்?
காஜா பீடி, செய்யது பீடி, அஞ்சுப்பூ பீடி, கணேஷ் பீடி, நூர்சேட் பீடி, ஜோதிமான் பீடி, பத்தாம் நம்பர் பீடி என்று விதவிதமான பீடி கம்பெனிகள் (பிராண்டுகள்) உண்டு. இப்பீடிக் கம்பெனிகளின் ஓனர்கள் எல்லாருமே (அல்லது ஒருசிலர்தவிர) மலையாளிகள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
ஆக, எங்கள் ஊரில் ஒருகாலத்தில் பீடி சுற்றாத வீடுகளே இல்லை எனலாம். வறுமையில் இருந்தவர்களுக்கும், நெசவுத் தொழில் செய்து நசிந்தவர்களுக்கும் இது வருமானத்திற்குச் சிறந்த வழியாக இருந்தது என்றால், பணக்கார வீட்டுப் பெண்களுக்கு பீடி சுற்றுவது வருமானமும் தரும் பொழுதுபோக்காக அமைந்தது.
பீடிசுற்ற ஆரம்பிக்க, ஏதேனும் ஒரு பீடி கம்பெனியில் கணக்கு துவங்கவேண்டும். இப்போதெல்லாம் வங்கியில்கூட அக்கவுண்ட் சுலபமாகத் துவங்கிவிடலாம்; ஆனால், பீடி கம்பெனிகளில் அக்கவுண்ட் துவங்குவதற்கு அதிர்ஷ்டக்காற்று வேண்டும். காரணம், அவர்களிடம் ஏற்கனவே தேவைக்கதிகமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீங்கினால் மட்டுமே இன்னொருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார்.

முதல்நாள் கொடுக்கப்படும் பீடி இலையை - காய்ந்த சருகு போல இருக்கும் - தண்ணீரில் பக்குவமாக ஊறச்செய்து, ஈரப்பதத்தோடு இரவுமுழுதும் வைத்தால், காலையில் பஞ்சுதோசை போன்ற பதத்தில், வெட்டுவதற்கு ஏற்ற பருவமாக இருக்கும். அதில், “ஆஸ்” எனும் செவ்வக அளவுகோலை வைத்து, கத்தரியால் ஒரு பீடி சுற்றுவதற்குரிய இலையை வெட்டவேண்டும். ஒரு முழு இலையில், எத்தனை பீடிக்கான இலைகள் வெட்டமுடியுமென்பது வெட்டுபவரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. (மேலே படத்திலுள்ள இலையில் 4 வெட்டினால், சராசரி. 5-good, 6-excellent!!) பின், அதனுள் புகையிலை வைத்துச் சுரிட்டி, நூலால் கட்டினால் பீடி ரெடி!! இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் பீடிகளாவது சுற்றினால்தான் அடுப்பு எரிக்க முடியும். (ஆண்கள் கொண்டுவரும் 3000/4000 மாதச்சம்பளம் என்பது வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போன்ற பெரிய செலவுகளுக்கே போதாது).
பீடி சுற்றுவதை முழுமையாகப் பார்க்க,
இங்கே சுட்டவும்.

ஒரு குடும்பத்தில் வேலைகளைப் பார்த்துக் கொண்டே அம்மாவால் 500 பீடி சுற்றமுடிந்தால் அதிகம். இளம்பெண்கள் தாய்க்கு உதவிக்கொண்டே 1500. வீட்டுக்கு வந்த மருமகள் என்றால், ஆயிரமாவது சுற்றினால்தான் முணுமுணுப்புகளிலிருந்து பாதுகாப்பு. கணவனைப் பிரிந்தவர் அல்லது விதவை அல்லது முதிர்கன்னிகள் என்றால் 2000மாவது சுற்றினால்தான், வீட்டுச் செலவுக்கு தம் பங்கைக் கொடுத்து, பின் சுயதேவைகளையும் பார்த்துக் கொள்ளமுடியும்.
ஆயிரம் பீடிக்குக் கிடைப்பது 70 ரூபாய். அட, எழுபதா, பரவாயில்லையே என்று நினைப்பீர்கள். இன்னும் உண்டு: வார விடுமுறை, பெருநாட்களுக்கு போனஸ், கணக்கு முடித்தால் பி.எஃப். பணம் எல்லாம் உண்டு. ஆனால், இவற்றின் பின்னால் எத்தனையோ கதைகள் உண்டு - எக்ஸ்போர்ட் கம்பெனிகள்/ அங்காடித் தெருக்களின் அராஜகத்திற்குச் சற்றும் குறைந்தவையல்ல இந்த பீடிக் கம்பெனிகள்!!
பீடிக்கம்பெனியில் நிறுத்துத் தரப்படும் இலைகள் தரமானவையாகக் கூட இருந்துவிடலாம் என்றாவது; ஆனால், போதுமானவையாக ஒருநாளும் இராது. தினமும் பற்றாக்குறையை நிறைவு செய்ய தனியார் கடைகளில் இலையைக் காசுகொடுத்து வாங்கவேண்டும். அது என்ன ரேஷன் கடையா, மலிவாய் கிடைக்க?
மேலும், சுற்றிக்கொண்டுபோய் கொடுக்கும் பீடிகளையும் தரம்பார்த்துத்தான் எடுத்துக்கொள்வார்கள் கம்பெனியினர். சுற்று சரியில்லை, கட்டு சரியில்லை, குத்து சரியில்லை, உயரம் குறைவு என்ற (சிலசமயம், கட்டாயக்) காரணங்களால் கம்பெனிக்காரரால் உடைத்து எறியப்படும் பீடிகள் சில நூறைக்கூடத் தாண்டும் சிலசமயம். பீடி சுற்றிக் கொடுக்கும் பெண், அதைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினாலோ, பழிவாங்கும் நடவடிக்கைகளாக இன்னுமதிகம் பீடிகள் ஒடிக்கப்படும். தரப்படும் இலை, புகையிலை அளவுகளிலும் தண்டிக்கப்படுவர். மிகச்சில இடங்களில், “சகஜமாக” பேசிக்கொள்ளவில்லையென்றாலும்கூட இத்தண்டனைகள் உண்டு.
கழிக்கப்படும் அளவு பீடிகளை மறுநாள் மீண்டும் புதிதாகச் சுற்றிக் கொடுத்தால்தான் அவரது கச்சாத்தில் (அக்கவுண்ட்டில்) கரும்புள்ளிகள் இராது; முழுக்கூலியும் கிடைக்கும். (இக்கரும்புள்ளிகள் பின்னர் அவரது வருடாந்திர போனஸ், பிஎஃப் ஆகியற்றைப் பாதிக்கும் சாத்தியம் உண்டு; அதிகமானால், கச்சாத்து க்ளோஸ் செய்யப்படும் அபாயமும் உண்டு!!) ஆனால், அதற்கெனத் தனியே இலை, புகையிலை கொடுக்கப்படாதென்பதால் சொந்தக் காசில்தான் வெளியே வாங்க வேண்டும்.
பணத்தட்டுப்பாடு வருமெனில், வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதும், பின் வட்டி கட்டி, அசலில் முங்குவதும் தொடர்கதைகள். பணத்தை வட்டிக்கு வாங்கலாம்; விரயமாகும் நேரத்தை? அதற்கு, இதுபோன்றவர்களைக் குறிவைத்து இயங்கும் ’ரெடிமேட் பீடி’ விற்கும் கடைகளில் (கடன்வாங்கிய) அதிகப் பணத்திற்கு பீடிக்கட்டாகவே வாங்கிக் கொள்ளலாம்.
பீடிக்கம்பெனி வேலைகளுக்கு (பீடி சரிபார்க்கும், இலை/புகையிலை அளக்கும்) சில (படிக்காத) இளைஞர்களிடையே போட்டியும் உண்டு. இந்த இளைஞர்களைப் போலவே, தனிக்கச்சாத்து வைத்திருக்கும் இளம்பெண்களுக்கும் கல்யாண மார்க்கெட்டில் வேல்யூ உண்டு!!
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், பெண்கள் பீடி சுற்றுவதைக் கைவிடாதிருக்கக் காரணம், இந்த வேலையில் இருக்கும் வசதிகள்: வீட்டிலிருந்தே செய்யலாம் - குழந்தைகளை மற்றும் டிவியை பார்த்துக் கொண்டே. உடலை வருத்தும் உழைப்புத் தேவையில்லை.
பெண்களுக்கு தோதான நல்ல வேலைதானே என்று தோன்றும். ஆனால், புகையிலை பீடி/சிகரெட் குடிப்பவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அதைத் தயாரிப்பவர்களையும்தான். "Passive smoking”-ஆல் புகைப்பவர்களின் அருகிலிருப்பவர்களும் பாதிப்படைவதுபோல, பீடி சுற்றுபவர்களோடு, வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயதானவர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள். புகைப்பதினால் வரும் அலர்ஜிகள், இருமல், ஆஸ்துமா முதல் டிபி, புற்றுநோய் வரையான பாதிப்புகளோடு, அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்திருந்து செய்யும் வேலையால் முதுகு-தோள்-இடுப்பு வலிகளும் நிரந்தரம் இவர்களுக்கு. இலவச கலர் டிவி திட்டம் தெரிந்த இவர்களுக்கு, தம் நோய் தீர்க்க இலவசக் காப்பீட்டு திட்டம் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்பதும் சோகம்.
பீடிசுற்றி தம்மைப் படிக்க வைத்த தாய், சகோதரிகளின் உழைப்புக்குப் பிரதிபலனாக, தாம் தலையெடுத்தபின் அவர்களை பீடிசுற்றுவதிலிருந்து ஓய்வு கொடுத்துவருகின்றனர் பல இளைஞர்கள். எனினும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழேயேயிருப்பதால், இத்தனை பாதிப்புகள் இருக்கிறதென்று தெரிந்தாலும் விட விரும்பவில்லை. பகரமாக, வீட்டுவேலை, அல்லது சுயதொழில் என்று அதிக உடலுழைப்பு கோரும் எதிலும் ஈடுபட விரும்புவதுமில்லை. பெண்குழந்தைகளையும் இதில் சிறுவயதுமுதலே ஈடுபடுத்துகின்றனர்.
ஒருகட்டத்தில் பீடிகம்பெனிகளின்மூலம் ஊருக்கு உள்ளே வந்தவர்கள், தற்போது பல்வேறு தொழில்களிலும் தம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர், கல்வி உட்பட. சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல.