தலைப்பைக் கண்டு பதறவும் வேண்டாம், மனசுக்குள் ரகஸியமாகக் கொண்டாடவும் வேண்டாம். தலைப்பிற்கானக் காரணம் கீழே!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார் என்ற வழக்காடலில், இனி ‘வீட்டை மாற்றிப் பார்’ என்பதையும் சேத்துக்கணும்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
”ஏன் இப்படி லொட்டு லொசுக்கு சாமான்களையெல்லாம் சேத்து வச்சுருக்கீங்க? பெரிய்ய மெக்கானிக்னு நெனப்பு!! எந்த காலத்துல இதெல்லாம் தேவைப்பட்டுச்சு? இத்தோட தூக்கிப் போடுங்க. புதுவீட்டுக்கும் இதைத் தூக்கிட்டு வந்து இடத்தை அடைக்காதீங்க!!”
“நீயுந்தான் கிச்சன் சாமான்கள் எவ்ளோ சேத்து வச்சிருக்கே? !! ”போகாத போருக்கு இத்தனை ஆயுதம் தேவையா?”ன்னு நான் உன்னைக் கேட்டேனா?”
“!!!!!!!!!!!!?????.....”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
”கிச்சன்ல இவ்வளவு இடம் இருக்குல்ல, அப்புறம் ஏன் மிக்ஸியை மூலையில கொண்டு வைக்கச் சொல்ற? அந்தப் பக்கமே வைக்கிறேன்.”
“சொல்றதைக் கேளுங்க. இத்தனை வருஷமா சமைக்கிறேன், எனக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரியும்?”
“ஏன், வாஸ்துப்படி ’மிக்ஸி மூலை’ அதுவா?”
”ஸ்ஸப்பா... விடமாட்டீங்களே... ஓரமா வச்சாத்தான், மிக்ஸி அரைக்கும்போது தண்ணி அதிகமாகி வெளியே தெறிச்சாலும் இந்தக் கார்னரை மட்டும் சுத்தம் பண்ணாப் போதும். நட்ட நடுவுல வச்சா, எல்லாப் பக்கமும் தெறிச்சு, கழுவி விடுறது பெரிய வேலையாகிடும்”
‘இதான் உன் அனுபவ அறிவா?’ - இது அவர் மைண்ட் வாய்ஸ்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
“இந்த அலமாரித் தட்டுகளைக் கொஞ்சம் ஈரத்துணியால் துடைச்சுத் தாங்களேன்”
“நீயே துடைச்சிடு. நான் தொடச்சா, சரியா தூசி போகலைன்னு சொல்லுவே.”
“சரி, பெரிய பெட்டியில் இருக்கற சாமான்களை இந்த ஷெல்ஃபில அடுக்கிடுங்க”
அலமாரியையும், பெட்டியையும் சில நொடிகள் ஆராய்ந்தவர், “இல்லே நீயே வச்சுடு. நான் வச்சா அப்புறம் அது சரியில்ல, இது இப்படி வைக்கணும்னு எதாவது சொல்லுவே...”
“க்ர்ர்ர்.... சரி, போய்ச் சாப்பிடுங்க..”
போனவர் உடனே திரும்பி வர... ”என்னாச்சு... சாப்பிடலையா?”
“இப்ப சாப்பிட்டா, என்னை வேலை செய்ய விட்டுட்டு, நீங்க மட்டும் சாப்பிட்டீங்களான்னு திட்டுவே. நீ வர்ற வரை நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன். அப்புறம் சாப்பிடுவோம்.”
“!!!!!!!!!!!!?????.....”
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
"நாந்தான் வருவேன்ல... அதுக்குள்ள நீ ஏன் பெட்டியெல்லாம் தூக்கி வச்சுகிட்டு இருக்க...”
“என்கிட்ட சொல்றதுதானே... நான் வந்து கிரைண்டர் தூக்கித் தந்திருப்பேனே....”
கரெக்டாகக் கடைசிப் பாத்திரம் கழுவும்போது ஓடிவந்து, “தள்ளு, தள்ளு.. .நான் கழுவித் தர்றேன்...”
”நான் இங்கதானே இருக்கேன். சொல்லிருந்தேன்னா ஃபோன் பேசும்போதே அப்படியே துணி காயப் போட்டிருப்பேன்ல...”
தமிழ் சினிமாவுல போலீஸ் வேஷத்துக்குப் படு பொருத்தமான ஆளு இவர்தான்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
ஒருவழியா புதுவீட்டில் செட்டிலாகி, ஆற அமரக் கையக் காலை நீட்டி உக்காரத்தான் ஆரம்பிச்சேன்... அதுக்குள்ளே ஊருக்குப் போய்ட்டு வரலாம்னு ஐடியா வந்துடுச்சு.... அடுத்த பரபரப்புகள் ஆரம்பம்.... வீடு மாத்துறதைவிட இவை மஹா டென்ஷன் தரக்கூடியவை. தலைப்புக்குக் காரணம் இதுதான்!!
ஆமா, என்னவோ வாரம் ரெண்டு பதிவு எழுதுற மாதிரி ‘விடைபெறுகிறேன்’னு பந்தா வேறயான்னு நினைப்பீங்க. கல்யாணம் ஆன புதுசுல அம்மா வீட்டுக்கு அடிக்கடி போய்ட்டு வருவோம். அதுவே வருஷங்கள் பல கழிந்த பின், அரிதாகிவிடும். இருந்தாலும் அந்த அரிதான சந்திப்புதான் அருமையானதாக இருக்கும். அதுபோலத்தான், ஃபேஸ்புக்கில் என்னதான் எழுதினாலும், வலைப்பதிவில் எழுதியது போன்ற திருப்தி வருவதில்லை.
அப்புறம், அதென்ன தொடர்கதை மாதிரி 1,2ன்னு நம்பர்னு கேக்குறீங்களா? அதுக்குக் காரணம் இங்கே இருக்கு!!
இறைவனருளால், போய் வந்து சந்திப்போம்!!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
|
Tweet | |||