அபுதாபியில் எஃப்-1 ரேஸ் நடந்துகொண்டிருக்கிறது. இன்று கடைசி நாள். ரேஸ் டீம்களில் நமக்குத் தெரிந்த ஷூமேக்கர், நரேன் கார்த்திகேயன் பெயர்களெல்லாம் இல்லை. ”Force India F1 team" என்ற பெயரில் ஒரு டீம் இருக்கிறது. ஆனால் அணி உறுப்பினர்கள் இந்தியர்கள் இல்லை. (ஷூமேக்கர் வேறொரு பைக் பந்தயத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக பங்கு பெறவில்லையாம். என் வீட்டுக்காரர் ரேஸ் நடக்கும் யாஸ் தீவில் ( Yas Island) வேலை பார்ப்பதால் ஃபிரீ பாஸ் கிடைக்குமா என்று நிறைய விசாரிப்புகள். ம்ஹூம், பயங்கர டைட் செக்யூரிட்டி. அங்கே உள்ள எல்லா கம்பெனிகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை விட்டுவிட்டார்கள் என்றால் பாருங்கள், எவ்வளவு பாதுகாப்பு என்று. எமெர்ஜன்ஸி ட்யூட்டியில் இருப்பவர்களுக்கு சிறப்பு செக்யூரிட்டி பாஸ் என்று ஏக அமர்க்களம்.
போன வாரம் வெள்ளி, சனி இரண்டு நாளும் டிரையல் ரேஸ் நடந்தது. அதற்குத்தான் ஃபிரீ பாஸ் கிடைத்தது. அப்பாவும் பிள்ளைகளும் போய் வந்தார்கள். சின்னவனுக்கு அங்கு இருந்த பயங்கர சத்தம் பிடிக்கவில்லை. அவன் சொன்னது சரிதான், டிரையல் ரேஸில் எடுத்த வீடியோவைக்கூட சவுண்ட் ம்யூட் போட்டுவிட்டுத்தான் பார்க்க முடிகிறது. ஜெட் பிளேன் போவதுபோல என்னா சத்தம். சின்னவன் வீடியோவில் காதை மூடிக்கொண்டே இருக்கிறான், பாவம். பெரியவன் நன்றாக இருந்தது என்றான். ஆனாலும் பத்து, பதினைந்து நிமிடங்களுக்கு மேல் இருக்கப் பொறுமையில்லை இருவருக்கும். “சும்மா சும்மா காரெல்லாம் வந்து வந்து போயிட்டிருக்கு. இதைப் போய் யார் அவ்வளவு நேரம் உக்காந்து பாக்கறது?” என்றார்கள். அதனால்தானே நான் போகவேயில்லை. ரேஸ் சாலைகள், ஹோட்டல்கள், மெரினா என்று யாஸ் தீவில் உள்ள மற்ற இடங்களை நன்றாகச் சுத்திப் பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள்.
இந்திய அணி
சில பதிவர்கள் இந்த ரேஸ் பார்த்து, பதிவு எழுதப் போவதாகச் சொல்லியிருந்தார்கள். பார்ப்போம், யார் யார் எழுதுகிறார்கள் என்று. ஆனால் நாந்தானே ஃபர்ஸ்ட்!! (பாக்கலைன்னாலும் எழுதிட்டேன்ல!!)
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துச் சில பத்திரிகையாளர்கள் ஆச்சரியம் தெரிவித்திருக்கிறார்கள். முதல்முறையாக இவ்வளவு அதிகம் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்ப்பதாகவும், மற்ற நேரங்களில் பத்திரிகையாளர் என்றால் கேள்வியே இல்லாமல் கிடைக்கும் அனுமதி, சலுகைகள், இலவசங்கள், எதுவும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்கள். ஒரு மூத்த பத்திரிகையாளர் கூறுகையில், யூ.ஏ.இ. யில் தனது 18 வருட சர்வீஸில், ஒரு நிகழ்ச்சியை கவர் செய்யும்போது, முதன்முறையாக உணவுக்குக் காசு கொடுத்ததாக எழுதியிருக்கிறார். (”And for the first time in my 18 years in the UAE, media persons will also have to pay for their snacks and food!”) ஹூம் அவர் கவலை அவருக்கு!!
இந்த ரேஸை வைத்துதான் இனி யாஸ் தீவிலும், பக்கத்தில் உள்ள ராஹா பீச், சாதியாத், ஃபலாஹ் தீவுகளில் சரிந்து கிடக்கும் ரியல் எஸ்டேட் நிலவரத்தை நிமிர்த்த வேண்டிய கட்டாயம் அபுதாபிக்கு. இந்த ரேஸ் எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல் வெற்றிகரமாக நடத்திக் காட்டினால்தான் அது சாத்தியம். அவர்கள் ஆசை நிறைவேறட்டும், நிறைவேறினால்தான் பொருளாதாரச் சீர்குலைவால் வேலை இழந்த/ இழக்கும் அபாயத்தில் உள்ள நம்மவர்களுக்கும் நல்வாழ்வு மலரும்.
|
|
Tweet | |||

