Pages

இட்லியும், நெய்ச்சோறும்




எங்க ஊரில்,  குடும்பத்துக்கொருவராவது வெளிநாடுகளில் இருப்பதால், செல்வச் செழிப்புடன் இருக்கும் இன்று போலல்லாது, அன்று, அன்றன்றைக்குச் சம்பாதித்து, அன்றைய உணவைத் தேடிக்கொள்ளும் குடும்பங்களே அதிகம்.  ஓரளவு வசதியானதாக சில குடும்பங்கள்  இருந்தாலும், கிராமத்தினருக்கே உரிய சிக்கன குணத்தாலும், “ஊரோடு ஒத்து வாழ்”கின்ற பெரிய மனதினாலும், வசதியான வீடுகளிலும்கூட உணவுகளில் அளவோடு இருந்த காலம்.

உழைத்தால்தான் உணவு என்ற காரணத்தால், பெரும்பாலான வீடுகளில் காலை உணவு என்பது பழைய சோறு அல்லது தெருவில் வரும் இட்லிக்காரம்மாவின் இட்லி அல்லது ஆப்பம்தான். வீட்டில் செய்தால், உழைக்க நேரம் இருக்காதே. அதுபோல, வசதியானவர்கள் எல்லாருமே பெரிய பெரிய கூட்டுக்குடும்பங்கள் என்பதால், சமைக்க அதிக நேரம் பிடிக்கும் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது மிக மிக அரிது. சேமியா, உப்புமா, கொழுக்கட்டை, புட்டு (குழாப்புட்டு அல்ல) போன்ற “Mass food"தான் எல்லா வீட்டிலும் பெரும்பாலும். செய்வதும் எளிது.

காரணம், ஒவ்வொரு கூட்டுக் குடும்பத்திலும் குறைந்த பட்சம் 10-15 பேராவது இருப்பார்கள். அவ்வளவு பேருக்கும் இட்லியோ தோசையோ வார்த்து முடிவதற்குள் மதியமாகிவிடும். இப்பப் போல, டயட் என்ற பெயரில் 3-4 இட்லி சாப்பிடும் காலமா அது? அத்தோடு விறகு அடுப்பும், கெரசின் ஸ்டவ்வும்தான் உண்டு. அதனால்தான் “mass food"!!  செய்வதும் எளிது; சாப்பிடும் அளவு குறித்தும் கவலையில்லை!!

அதுபோல, பண்டிகை மற்றும் விசேஷ தினங்களில்தான் நெய்ச்சோறு, தேங்காய்ச் சோறு, பிரியாணி போன்ற உணவுகளும். அதுவும்கூட தனித்தனியே வீடுகளில் ஆக்குவது கிடையாது. ஊர்கூடி, ஒவ்வொரு தெருவுக்கும் சேர்த்து ஊர்ப் பெரியவர்கள் பொறுப்பெடுத்து, பணம் வசூலித்து மொத்தமாக ஆக்கி, பங்கிட்டுத் தருவார்கள். ஏழை, பணக்காரன் வித்தியாசமின்றி பண்டிகை நாட்களில் எல்லோர் வீட்டிலும் ஒரே உணவு. பெரிய பெரிய சட்டிகளில் தெருவில் வைத்து சமைப்பதை வேடிக்கை பார்ப்பதுதான் எங்களுக்குப் பொழுதுபோக்கு. பண்டிகை வந்தால்தான் நெய்ச்சோறு என்பதால் அதற்கும் ஆவலாக காத்திருப்போம்!! எக்ஸ்ட்ரா சைட் டிஷ் மட்டும் அவரவர் வசதிப்படி வீடுகளில் செய்துகொள்வார்கள்.

அந்தக்காலக் கூட்டுக் குடும்பங்களில் இட்லி, ஆப்பம், இடியாப்பம், சப்பாத்தி, பூரி போன்றவையெல்லாம் செய்வது வருடத்தில் சில முறைகளாகத்தான் இருக்கும். அதற்கு முந்தைய தினமே அதற்கான தயாரிப்புகளில் இறங்கி,  வீடே பரபரப்பாக இருக்கும்!! வீட்டுத் தலைவியான பாட்டி, தன் மகள்களிடம் ”இட்லி செய்யப் போறோம்; பேரப்பிள்ளைகளை இங்கே அனுப்பிவிடு. மருமகனுக்கும், உன் மாமானாருக்கும் காலைல கொடுத்து விடுறேன்” என்று சேதி சொல்லி விடுவதும் உண்டு.

என் சின்ன வயதில், எங்கள் வீட்டில் இட்லி செய்தால், தாத்தாவுக்குக் கொடுத்து விடுவோம். அதேபோல, அங்கே செய்தால் இங்கே வரும்!! கைக்குழந்தைகள் இருக்கும் சாச்சி, மாமி வீடுகளுக்கும் இட்லி கொடுத்தனுப்பப்படும். இட்லிக்கு மட்டுமல்ல, தோசை, ஆப்பம், இடியாப்பம் போன்ற மற்றவைகளுக்கும் இதே கதைதான்!! அந்த இட்லியைச் சாப்பிடுவதும் தனி சுகம்தான். சாம்பார், பச்சை/ சிவப்புச் சட்னிகளோடு ரசித்து, ருசித்துச் சாப்பிடுவேன்.

கிரைண்டர் வந்தபின், 2-3 மாதத்திற்கு ஒரு நாளாவது இட்லி, தோசை, ஆப்பம் தரிசனங்கள் கிடைத்தது.

பிறகு, சில வீடுகளில் இட்லிக்கு மாவு அரைத்துத் தர ஆரம்பித்தார்கள். இப்ப அடிக்கடி இட்லி செய்ய முடிந்தது. அரிசியும், உளுந்தும் ஊற வைத்துக் கொடுத்துவிட்டால், அரைத்துத் தருவார்கள். அதைக் கொண்டு கொடுக்கும்போது, அம்மாக்கள் சொல்லி அனுப்பும் கண்டிஷன்கள் இருக்கே!! “வேற வீட்டு அரிசி, உளுந்தோட சேத்துப் போடக்கூடாது, தனியாத்தான் போட்டு அரைச்சுத் தரணும்ன்னு சொல்லு; கிரைண்டர் நல்லா கழுவி சுத்தமாருக்கான்னு எட்டிப் பாரு; போன தரம் மாவு ரொம்பக் குறைய இருந்துச்சுன்னு மறக்காமச் சொல்லு” என்று ஆயிரத்தெட்டு கண்டிஷன்கள்!!

பின்னர் வந்த டேபிள்-டாப்/ டில்டிங் கிரைண்டர்கள் மற்றும் ஃப்ரிட்ஜ் தயவாலும், தனிக்குடித்தனங்களாலும் இட்லி தினசரி உணவாகிப் போனது.

இட்லி ஆரோக்கியமான உணவு, செய்வதற்கு எளிதானதும்கூட (!!) என்று பிள்ளைகளுக்குக் காலை உணவாகத் தருகிறேன். அதனால் அவர்களுக்கு இட்லி பிடிப்பதில்லை இப்போது. அவர்களுக்குப் பிடிப்பதில்லை என்பதால், என் அம்மா, மாமியார், தங்கைகள், உறவினர்கள் யாரும் நாங்கள் செல்லும்போது இட்லி செய்வதேயில்லை. பிரியாணிக்காகப் பெருநாளுக்குக் காத்திருப்பதுமில்லை.
 
  
 

Post Comment