Pages

நான் சமையல் குறிப்பு எழுதினால்...





(தலைப்பைக் கண்டு டெரராகிவிட வேண்டாம். நான் பதிவுலகத்துக்கு வரும்போதே செய்த சத்தியங்களில் ஒன்று, சமையல் குறிப்பு எழுதமாட்டேங்கிறதும்!!)

என்னவரின் நெருங்கிய நண்பர் ஒருவர்.  மனைவி, ஒரு வயசுக் குழந்தையோடு அபுதாபியில் எங்கள் வீட்டருகில் வசித்து வந்தார். வார விடுமுறை நாளான ஒரு வெள்ளிக்கிழமை மதிய ஜும் ஆ தொழுததும் வீட்டுக்குப் போகாமல் நேரே எங்கள் வீட்டுக்கு வந்தார். ஒருமணிநேரம்போல பேசிக்கொண்டிருந்துவிட்டுச் சென்றார். சாப்பிடச் சொல்லியும் சாப்பிடவில்லை. (ஹலோ, என் சமையலுக்கு  பயந்தெல்லாம் இல்லை). இது அன்றுமட்டுமில்லாமல், வாராவாரம் வெள்ளிதோறும் அப்படியே தொடர்ந்தது.

எங்களுக்கோ ஒரே புதிராக இருந்தது. நேரே வீட்டுக்கும் போகாமல், எவ்வளவு வற்புறுத்தினாலும் இங்கேயும் சாப்பிடாமல், அதுவும் எல்லா வெள்ளியும் இப்படி சும்மா வந்துட்டுப்  போறாரேன்னு. என்ன காரணம்னு கேட்டாலும் சும்மா பேசிட்டுப் போலாம்னுதாங்க வர்றேன்னு சொன்னார். இப்படியே சிலபல வாரங்கள் போச்சு. நான் அவரிடம் ஒருநாள் நீங்க நேரத்தோட வீட்டுக்குப் போனா உங்களைச் சமைக்க விட்டுடுவாங்கன்னுதானே இங்க வர்றீங்கன்னு கிண்டல் பண்ணேன். அவ்வளவுதான் பொங்கி எழுந்துட்டார்!!

“அட, சமைக்கச் சொன்னாகூடப் பரவால்லைங்க. நல்ல சாப்பாடு சாப்பிடலாமேன்னு செஞ்சுடுவேன். நான் வீட்டுக்குப் போற நேரம், சமையலை முடிச்சிட்டு, கரெக்டா பிள்ளைக்குச் சாப்பாடு குடுக்கிற டைம். நான் போனவுடனே, பையன் சாப்பிடணும்; அவனுக்கு வெளாட்டு காமிங்கன்னு என்னை சர்க்கஸ் பஃபூன் ரேஞ்சுக்கு ஆக்கிடறாங்க.  ஆடுறா ராமான்னு குச்சி எடுக்காத குறைதான்”னு புலம்பித் தள்ளிட்டார் போங்க!!

இந்தக் கதை எதுக்குன்னா: “ரொம்ப நாளா  உன் பிளாக்ல ஆப்பம் பதிவே இருக்குது. வேற எழுதலையா?”ன்னு கேட்டுகிட்டிருந்தார் ரங்க்ஸ். ரெண்டுமூணு தரம் கேட்டதும் “அதுவா, எழுதுற மாதிரி வீட்டுல நீங்க எந்த ‘பஞ்ச் டயலாக்’கும் சொல்லலியே, அதான்”னு சும்மா அடிச்சுவிட்டேன். உடனே மேலே சொன்ன மாதிரியே புலம்ப ஆரம்பிச்சுட்டார்.  உடனே “அட, என்னங்க நீங்க, நான் பிளாக் எழுதுறதுக்கு ஆதாரசுருதியே நீங்கதான்னு மறைமுகமாச் சொன்னா, புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்களே?”னு ஐஸ் வச்சேன். (வேற வழி?)

நம்பிட்டார். (அவருக்கும் வே.வ?)  “சரி, சரி, என்னவானாலும் சமையல் குறிப்பு மட்டும் எழுதிடாதே”ன்னதும், பெரியவன் “ஏன் வாப்பா?”ன்னான். “உங்கம்மா சமையல் குறிப்பு எழுதினா எப்படிருக்கும்னு சொல்லவா?”

”முதலில்  தேவையான பொருட்களைக் குறிப்பெடுத்துக் கொண்டு, வீட்டில் இல்லாதவற்றை ரங்கமணியை அனுப்பி உடனே வாங்கிவரப் பணிக்கவும். பின்னர், அதில் உள்ள வெங்காயம், காய்கறிகளை சுத்தம் செய்து, வெட்டும் பொறுப்பை ரங்கமணியிடம் கொடு்க்கவும். மல்லி, புதினா, கருவேப்பிலையை பிள்ளைகளிடம் கொடுத்துச் சுத்தம் செய்யச் சொல்லவும். மட்டன், சிக்கன் போன்றவை இருந்தால் அதைக் கொழுப்பு நீக்கிச் சுத்தம்செய்கிறேன் பேர்வழி என்று விலைவாசியை நினைக்காமல் ஒரு கிலோ மட்டனை அரைகிலோவாக்கி, ரங்கமணியின் பி.பி.யை எகிற வைக்கவும்.

பின்னர், அடுப்பில் எல்லாவற்றையும் ஒரு குத்துமதிப்பாகக் போட்டு வைத்துவிட்டு, உப்பு, காரம், புளியை ரங்கமணியிடம் சரிபார்க்கச் சொல்லவும். இதுமிக முக்கியம்; அப்போத்தான் "end product" எப்படியிருந்தாலும் ரங்கமணியின்மீது “நீங்கதானே காரம் சரியாருக்கான்னு பாத்தீங்க; அப்பவே சொல்லிருக்கலாம்ல?”னு பழிபோட முடியும்.

பிறகு, அது வேகும்நேரத்தில் அஞ்சாறு பிளாக் பார்த்து, பின்னூட்டங்கள் இடவும். இடையிடையே ரங்கமணியிடம் அடுப்பிலுள்ளதைக் கிண்டிவிடச் சொல்ல மறக்கவேண்டாம். (இதுவும் ப.போ. உதவும்).

எல்லாம் முடிந்த பிறகு, சமையல் மேடை, அடுப்பு மற்றும் பாத்திரங்களை ரங்கமணி மற்றும் பிள்ளைகளின் உதவியோடு கழுவவும் (அதாவது மேற்பார்வை செய்யவும்).”

கேட்டுக்கொண்டிருந்தவன், “எல்லாம் சரி. ஆனா முக்கியமான ஒண்ணை மறந்துட்டீங்களே?”ன்னான். என்னவாம்? “என்ன ஐட்டம் செய்யறதுன்னே சொல்லலியே?”

” அதானா? முதலில் லேப்டாப்பைத் திறந்து,  நீங்கள் செய்ய விரும்பும் உணவு பதார்த்தத்தின் பெயரை கூகிளில் டைப் செய்யவும். வரும் பக்கங்களில் கலர்ப் படங்களோடு அழகாக இருக்கும் ஒன்றைத் தேர்ந்துகொள்ளவும். அவ்வளவுதான்!”

இதையெல்லாம் கேட்டுகொண்டிருந்த நான் கொதிச்சு, பொங்கியெழுந்து “என் சமையலையா கிண்டல் பண்றீங்க? இனி நான் சமைக்கவே மாட்டேன்”னு வேலைநிறுத்தம் செஞ்சுருப்பேன்னுதானே நினைக்கிறீங்க? நோ, நோ. நான் சொன்னது என்னன்னா, “ இனி தினம் மூணுவேளையும் என் சமையல்தான்.   வாரா வாரம் போகும் ஹோட்டல் விஸிட் ரெண்டு மாசத்துக்கு கட்!!”


 

Post Comment