Pages

டிரங்குப் பொட்டி - 15






பதிவுக்குள்ளாற டீப்பாப் போறதுக்கு முன்னாடி, ஒரு பொது அறிவுக் கேள்வி: இலங்கையின் தலைநகர் எது? என்னா நக்கல் சிரிப்பு? (சரியான) பதிலச் சொலுங்கப்பு.

()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

உலகக் கோப்பை க்ரிக்கெட் போட்டி ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுது, எங்கப் பாத்தாலும் கிரிக்கெட் மயம்!! வீட்டிலே டிவி இல்லேன்னாக் கூட, நெட்டைப் பிடிச்சுகிட்டு பாக்க உக்காந்துட்டாங்க அப்பாவும், புள்ளையும். ஒரு வழியா உலகக் கோப்பை முடிஞ்சுது, ஹப்பாடான்னு மூச்சுவிட நினைச்சா, அடுத்த நாளே ஐபிஎல் தொடங்கிடுச்சாம்ல. அதே கதை தொடருது.

ஆனாலும்,  பாகிஸ்தான், இலங்கை ரெண்டு எதிரி நாடுகளையும் ஜெயிச்சுட்டோம்னு சந்தோசமாத்தான் இருக்கு. இந்தியாவில் பாகிஸ்தான் செய்யும் தீவிரவாதம், ஈழத் தமிழர்கள், மீனவர்கள் படுகொலை எல்லாத்துக்கும் சேத்துவச்சு பழி வாங்கிட்டோம்ல!! இனி தகராறு பண்ணுவீங்க? அதே மாதிரி ஐபிஎல்லிலும், நம்ம சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸையும், டஸ்கர்ஸையும் தோக்கடிச்சுட்டா, தண்ணி தராததுக்கு தண்ணிகாட்டுன மாதிரி ஆகும். செஞ்சிடுங்கப்பா.

உலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு, வீரர்களுக்கு பரிசு மழை பொழியுது. தனியாரோடு, மத்திய/மாநில அரசாங்கங்களும் சேந்து அள்ளியள்ளிக் கொடுக்கிறாங்க. ஏழைகளுக்கு இலவசம் கொடுக்கிறதையே எதிர்த்தோம். இத என்னச் சொல்ல?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

வாப்பா, உம்மா வந்திருக்காங்க. வாப்பா, இந்தியாவின் லஞ்ச ஊழல் மகிமைகளைப் பற்றிச் சொன்னாங்க. லஞ்சம் வாங்குவதும், குடிப்பழக்கமும் குற்றம் என்கிற மனப்பான்மையே இல்லாதுபோய், அவை சகஜம் என்ற நிலை வந்துவிட்டதாம். லோக்பால் எந்த அளவு பலன் தரும் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது. அம்மா விலைவாசி உயர்வைக் குறித்துப் புலம்புகிறார். பதிலுக்கு நானும், இங்குள்ள விலைவாசி, வீட்டு வாடகை, ஸ்கூல் ஃபீஸ் என்று புலம்பினேன். பின்னே, நாம ஒண்ணும் புலம்பாம இருந்துட்டா நம்ம கௌரவம் என்னாகிறது?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஒரு நல்ல நியூஸ் சொல்லவா? பீஹார்ல “கயா”ங்கிற இடம் தெரியுமா? அதேதான், புத்தருக்கு ஞானம் கிடைச்ச இடம். அங்க, ஒரு நாளைக்கு நாலஞ்சு மணிநேரத்துக்குத்தான் கரண்ட் சப்ளை இருக்குமாம். நம்மூர்லயெல்லாம், நாலஞ்சு மணிநேரம்தான் இல்லாமப் போகும். அப்ப கலைஞ்சரும், ஆற்காட்டாரும் எம்பூட்டு நல்லவங்க?


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் ஏற்பட்டு ஒரு மாதம் ஆனதால், கதிர்வீச்சும், பாதிப்புகளும் குறைந்திருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இவ்விபத்துகள், செர்னோபில் விபத்தின் அளவுகளுக்கு ஈடானவை என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. ஜப்பான் அணு உலை விபத்தின் வீரியத்தை, அதற்கென உள்ள உலக அளவீட்டு முறையில் ( international scale ) 5-லிருந்து, ”7”-ஆக உயர்த்தியுள்ளனர்.  திருநெல்வேலி, நாகர்கோவில் இரண்டுக்கும் நடுவில்தான் கூடங்குளம் உள்ளது என்ற நினைப்பே நடுங்க வைக்கிறது.

பூகம்பம் வந்தால் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரியுமா? உடனே வெளியே ஓடிவர வேண்டும். முடியாத பட்சத்தில், கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் மறைந்துகொள்ள வேண்டும் என்றுதானே அறிந்திருக்கிறோம்? ஆனால், கட்டில்/மேஜை போன்றவை இடிந்து விழும் கட்டிடத்தினால் நொறுங்கிவிடுமே என்று நினைப்பதுண்டு. சமீபத்தில் வந்த ஃபார்வேர்ட் மெயிலில் பதில் கிடைத்தது.

பல நாடுகளிலும், பூகம்ப விபத்துகளில் மீட்புப் பணி செய்த ஒருவர் எழுதிய கட்டுரையில்,  ஒருபோதும் கட்டில்/மேஜை போன்றவற்றின் கீழ் ஒளியக்கூடாது. ஆனால், அவற்றை ஒட்டி, பக்கத்தில் கை, காலை மடக்கி (கருவில் உள்ள குழந்தையைப் போல்) படுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.  கட்டிடம் இடிந்து உயரமான பொருளின்மீது விழும்போது, அருகில் ஒரு வெற்றிடம் உருவாக்கப்படும். அது பாதுகாப்பாக இருக்கும் என்று குறிப்பிடுகிறார். படங்களைப் பாருங்கள், புரியும்.




()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

என்னவர் ஆஃபிஸிலிருந்து வீட்டிற்கு வரும் வழியில் ஃபோன் பண்ணினார். பேசும்போது, ஜிபிஎஸ்ஸின், "turn left", turn right" என்ற பெண்குரல் கேட்டது. “வீட்டுக்குத் தினமும் வழக்கமா வர்ற வழிதானே, அப்புறம் ஏன் ஜிபிஎஸ்?”னு கேட்டதுக்கு வந்த பதில், “டிரைவ் பண்ணும்போது தூக்கம் வந்துது. அதான் அதை ஆன் பண்ணேன். அது பேசினா நீ அதட்டுற மாதிரியே இருக்குதா, தூக்கம் போயிடுது”!!


()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()()

ஆமா, இலங்கை தலைநகரம் என்ன? கொழும்புவா?  ஹூம்.. இப்படித்தான் நானும் என் பெரியவன்கிட்டச் சொல்லி மாட்டினேன். ”ஸ்ரீ ஜெயவர்த்தனபுரக் கோட்டை” தான் நிர்வாகத் தலைநகரமாம். கொழும்பு, வியாபாரத் தலைநகரம்தானாம். கரெக்டா?


Post Comment