Pages

விட்டுவிடலாமா?






இந்த வருடத்தின் நோன்புக்கான ரமலான் மாதம் ஆரம்பித்து, இதோ நான்கு நோன்புகள் ஆகிவிட்டது. 


இஸ்லாமியக் கடமைகளான ஸகாத்(தானம்) மற்றும் ஹஜ் பயணம் ஆகியவை, அதற்கான வசதி உள்ளவர்களுக்கு மட்டுமே கட்டாயக் கடமையாக இஸ்லாம் கூறுகிறது. இதுவரை,  மறுமைக்கான பலன்களோடு, நோன்பு நோற்பது பசியின் தாக்கத்தை உணர்ந்து, அடுத்தக் கடமையான ஸகாத்தைச் சிறப்புற நிறைவேற்றவும் ஊக்கமளிக்கிறது என்று நினைத்திருந்தேன். ஆனா, நோன்புங்கிறது ஸகாத் செலுத்துறவங்களுக்கு மட்டும் கடமையில்லையே? ஐவேளைத் தொழுகையைப் போல, இதுவும் ஆண்-பெண், ஏழை-பணக்காரர் பேதமில்லாமல் எல்லாருக்குமேதானே.

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (திருக்குர்ஆன் 2:183)

நோன்பு, நம்மை தூய்மையடையச் செய்யும் வணக்கச் செயல் என இறைவன் திருமறையில் கூறுகிறான்.

அல்லாஹ் கூறுகிறான்: 'ஆதமுடைய சந்ததியினர் செய்யக்கூடிய எல்லா நல்லறங்களும் அவர்களுக்கே சொந்தமானது, ஆனால் நோன்பு மாத்திரம் அவர்களுக்குச் சொந்தமானதல்ல. நோன்பு எனக்குரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். (நோன்பின் போது ஒரு மனிதன்) தனது மன இச்சை, உணவு, குடிப்பு ஆகியவற்றை எனக்காக விட்டு விடுகிறான். மேலும் நோன்பு ஒரு கேடயமாகும்.....  அறிவிப்பாளர்: முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபுஹூரைரா (ரழி) நூல் அஹ்மத், முஸ்லிம்,   திர்மிதி

நம் எல்லாச் செயல்களின் விளைவுகளும் நமக்கே என்று சொல்லும் இறைவன், நோன்பை மட்டும் தனக்கானது என்று சொல்லுவதிலிருந்தே நோன்பின் மாண்பை உணரலாம். இன்னும்,

ஒவ்வொரு தொழுகையும் அடுத்த நேர தொழுகை வரும் வரை பாவங்களைப் போக்கக் கூடியதாகும். ஒரு ஜும்ஆ தொழுகை மறு ஜும்ஆ தொழுகை தொழும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்கக்கூடியதாகும். ஒரு ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது அடுத்த வருடம் வரும் ரமலானில் நோன்பு வைக்கும் வரை ஏற்படும் பாவங்களைப் போக்ககூடியதாகும். எனினும் இக்காலங்களில் பெரும் பாவங்கள் எதுவும் செய்யாமலிருப்பது மிக்க அவசியமாகும். ஆதாரம்: முஸ்லிம்

பொதுவாவே ‘பசி வந்தா, பத்தும் பறக்கும்’னு சொல்லுமளவு பசிதான் மிகவும் கொடுமையான விஷயமா உலகத்தில் சொல்லப்படுவது. ’தானத்தில் சிறந்தது அன்னதானம்’னு பசிக்கு உணவளிப்பதைச் சிறப்பித்திருப்பதிலிருந்தும் பசியின் பாதிப்பு எப்படிப்பட்டதுன்னு புரியும். இன்னும், ‘எண்சாண் உடம்புக்கு வயிறே பிரதானம்’,  'சோறுகண்ட இடம் சொர்க்கம்’, ‘தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்’, "If you want to enter into a man's heart, enter through his stomach' -  இப்படி வழங்கப்படும் பல சொல்லாடல்கள் உணவின் அத்தியாவசியத்தைச் சொல்லும்.
ஆனா, நோன்பு சமயத்தில், உணவு நம்முன்னே இருந்தாலும், நம்மருகில் யாரும் இல்லைன்னாலும், இறைவனுக்காக, மிகுந்த மனக் கட்டுப்பாட்டோடு, உண்ணாமல், தண்ணீர்கூட நாவில் படாமல் இருக்கிறோம். இப்படியொரு  சுய கட்டுப்பாட்டைக் கொண்டு (self-control) நம்மை மேலும் உறுதிபடுத்திக் தருவது இந்த ஒரு மாத ஆன்மீகப் பயிற்சிதான்.

வருஷத்துக்கொரு முறை வரும் பரீட்சைபோல வரும் இந்த நோன்புகாலத்தில் நம் புலன்களை அடக்கி, வெற்றி பெறுவது, அடுத்த நோன்புகாலம் வரை நம்மைப் பண்படுத்திக் கொள்வதற்கான ஒரு “rigorous training" போல!! ஆனானப்பட்ட பசியையே அடக்கியாண்டுட்டா, மத்த உணர்வுகள் எம்மாத்திரம்? பசியைக் காரணம் காட்டித்தானே இந்த உலகத்துல பல தவறுகள் நடக்குது அல்லது நடத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள இந்த ‘ஒரு மாதப் பயிற்சி முகாம்’ உதவுகிறது.

மேலும், நோன்பு காலத்தில், உணவில் மட்டுமல்ல, இன்னும் பல விஷயங்களிலும் ஒரு முஸ்லிம் கட்டுப்பாட்டோடு நடந்துகொள்ள வேண்டியது கட்டாயம். அதனால, எப்பேர்ப்பட்டவரும், இந்த ஒரு மாசம் மட்டுமாவது ’திருந்தி’யே ஆகணும். உதாரணமா, சிகரெட், பொய் பேசுதல், கோபம் கொள்ளுதல், தீய எண்ணங்கள் - எல்லாமே புனித மாதமாக முன்னிறுத்தப்படும் இந்த மாதத்தில் கண்டிப்பாகத் தவிர்க்கப் படவேண்டி இருப்பதனால், மற்ற காலங்களிலும் அவற்றை முழுமையாகத் தவிர்க்கவும் நோன்பு காலத்தில் பயிற்சி கிடைக்கிறது.

ஆக, நோன்பு மாதம் என்பது, இறைவன் கட்டளைப்படி நோன்பிருந்து மறுமைக்கான நன்மைகள் பெற்றுத்தரும் பயிற்சிக் களமாய் மட்டுமல்லாமல், பசியை மட்டுமல்லாது, ஒருவரின் எல்லா உணர்வுகளையும்   கட்டுப்படுத்தும் திறனை அதிகரிக்கச் செய்து, இவ்வுலக வாழ்வையும் நேர்வழியில் வாழ இறைவன் தந்த அருட்கொடையாகவும் காண்கிறேன்.

நோன்பாளிகளுக்குப் பல சிறப்புகளை மறுமையில் வாக்களித்திருக்கும் இறைவன், இம்மையில் நோன்பாளி கேட்கும் பிரார்த்தனைகளையும் மறுக்காமல் நிறைவேற்றித் தருவதாக நபிமொழி கூறுகிறது.  விட்டுவிடலாமா இந்த அழகிய சந்தர்ப்பத்தை?

Ref: http://www.ottrumai.net/TArticles/10-FastingIsObligation.htm

Post Comment