Pages

ஸ்கைப் அம்மா






www.ithacalibrary.com

ஸ்கைப்பில் வந்தாள் அம்மா
ஸ்கைப்பினால் நன்மை பல
தினமும் அம்மாவைப்
பார்க்கலாம் பேசலாம்
சமையல் குறிப்பு
வீட்டு மருத்துவம்
கூடவே அன்பும்
இன்ஸ்டண்ட்டாய்க் கிடைக்கும்

எழுதப் படிக்கவும் அறியா
அம்மா இப்போ
கணினி ஆன்செய்து
ஸ்கைப்பில் தானே
லாகின் ஆகுமளவு
மேதை!!

பாட்டியைப் பார்த்து
பேத்தி ஓடிவந்தாள்
அரிசி காய்கறிகள்
சூப்பர்மார்க்கெட்டில்
விளைகிறது
பால் கொடுப்பது
பாக்கெட் ஃபாக்டரி
போலவே
தாத்தா பாட்டி
வசிப்பிடம்
கணினி நாட்டில்
ஸ்கைப் ஊரில்

சேமநலம் விசாரித்து
இன்றைய சமையல் கேட்டு
கூடுதல் டிப்ஸ் சொல்லி
உற்றார்கள் நலசேதி
கல்யாணம் விவாகரத்து விவரம்கூறி
பின் அம்மா கேட்டாள்

உன் ஓர்ப்படியா அப்பா
கீழே விழுந்து இப்போ
எல்லாம் படுக்கையிலயாமே
வயசுபோன காலத்துல
அவ அம்மாதான்
பாத்துக்கறாளாம்
ஒத்தாசைக்கு
ஒருத்தரும் இல்லையே

அங்க இருக்க
உன் ஓர்ப்படியாகிட்ட
ஒரு எட்டு வந்துபாத்துட்டுப்
போகச் சொல்லக்கூடாதா


பரீட்சைநேரம்
பள்ளிக்கூடம் போறப் பசங்களை
லீவும்போடச் சொல்ல முடியாது
விட்டுட்டும் வர முடியாது
வீட்டுக்காரரும் டூர் போவார்
அதான் வரமுடியல
நாளை எனக்கும் தேவைப்படுமோவென
காரணங்களைச் சேர்த்து
எங்கோபார்த்து நான் சொல்ல

நினைத்ததுபோல அம்மா
அதைச் சொல்லியேவிட்டாள்
என்னவோ போ
இப்படியெல்லாம் கிடையில
கிடக்காம கைகால் நல்லாருக்கும்போதே
நான் போய்ச் சேந்துடணும்
என்றவளை நிமிர்ந்துப் பார்க்கத்
தெம்பில்லாமல்
இந்தா உன் பேத்திகிட்ட பேசு
அவசரமாய் நகர்ந்தேன்


Post Comment