Pages

யானை வருடம்




இச்சம்பவத்தின் முதல் பகுதியான கஃபாவை அழிப்பதற்காக அப்ரஹா யானைப்படையுடன் வந்ததை இங்கே   பார்த்தோம்.

அப்ரஹா, அப்துல் முத்தலிப் தன்னிடம் கஃபாவை இடிக்க வேண்டாமென்று கெஞ்சுவார், மன்றாடுவார் அல்லது சவால் விடுவார் என்று எதிர்பார்த்திருக்க, அவரோ நிதானமாக, கஃபாவை இறைவன்  பார்த்துக்கொள்வான் என்று சொல்லக்கேட்டு அதிர்ந்து விட்டான். இவ்வளவு உறுதியாக அவர் பதிலளித்தது அப்ரஹாவை மட்டுமல்ல, அவன் படையினரின் தைரியத்தையும் ஆட்டிப் பார்த்தது என்பதே உண்மை. கெஞ்சவுமில்லாமல், மிஞ்சவுமில்லாமல், நீ செய்வதை செய்துகொள் என்று சொல்பவரிடம் என்ன பேசுவதென்று அறியாமல் அவரின் ஒட்டகங்களைத் திருப்பிக் கொடுத்தனுப்பினான்.

அப்துல் முத்தலிப் சொன்னதிலும் காரணமுண்டு. பாலைவனத்தில் யானைகள் கிடையாது. அரேபியர்கள் அதற்குமுன் யானையைப் பார்த்ததுமில்லை. அப்ரஹா யானைப்படையுடன் வருகிறான் என்று அவர்கள் அறிந்திருந்தனர்.  வழக்கமான ஆயுதங்களான வாள், கேடயம், வில், அம்பு போன்றவைகளைக் கொண்ட போர்முறையையே அவர்கள் அதுவரை பின்பற்றி வந்திருந்தனர்.  மிகப்பெரிய மிருகமான யானையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அறிந்திராததாலும், அதற்கு ஈடான படைகள்  தம்மிடம் இல்லாததாலும், அவர் ஏற்கனவே தம்மின தலைவர்களுடன் ஆலோசனை செய்திருந்தார்.

அந்த கலந்தாலோசனையில் எடுக்கப்பட்ட முடிவே அவர் அப்ரஹாவிடம் கூறியது.  அனுபவ அறிவினால் விளைந்த விவேகத்தினால் எடுக்கப்பட்ட முடிவு.

மறுநாள் , தன்னை எதிர்க்க யாரும் வருவதாக இல்லை என்ற இறுமாப்புடன் அப்ரஹா தனது பெரும்படையுடன் இறையில்லமான கஃபா நோக்கிக்  கிளம்பினான். மக்கமா நகரத்து மக்கள் செய்வதறியாமல் மலைகளின் பின் நின்று பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அப்ரஹாவும், வீரர்களும் யானைகளை  கஃபாவை நோக்கிச் செலுத்த, அவை நகர மறுத்தன!! பல்வேறு வகைகளிலும் முயன்றும் அவை மக்கா நோக்கி நடக்க மறுத்தன; ஆனால் எதிர் திசையில்,  ஏமனை நோக்கி நடத்தினால் நடந்தன!! அதனால், அவற்றை எதிர்திசையில் கொண்டுபோய், மக்காவை நோக்கி நடக்க வைத்தனர்.

அதுவரை தெளிவாய் இருந்த வானம், திடீரென்று கருமேகம் சூழ்ந்ததுபோல் இருட்டியது.  ஆனால் உண்மையில் சூழ்ந்தது கருமேகம் அல்ல; கருமை நிற பறவைகள்தாம் கூட்டம்கூட்டமாகப் பறந்துவந்தன. அபாபீல் என அரபிமொழியில் அழைக்கப்படும் மிகச்சிறிய உருவிலான அப்பறவைகள் ஒவ்வொன்றின் இரு கால்களிலும், அலகிலும் சிறுசிறுகற்கள் இருந்தன. கஃபாவை அழிக்க வந்த யானைப்படையின் நேர்மேலே வந்ததும் அவை அக்கற்களைப் போட்டன.

ஆயிரமாயிரம் பறவைகளால் தொடர்ந்து வீசியெறியப்பட்ட கற்கள் யானைகள் மீதும், வீரர்கள் மீதும் இடியென விழுந்து அவர்களை நசுக்கி மண்ணோடு மண்ணாகப் புதையச் செய்தன. அப்ரஹாவும் அழிந்தான்!!

அரேபியர்கள் இச்சம்பவம் நடந்த வருடத்தை  ”யானை வருடம்” (Year of the elephant) என்று பதிந்திருக்கின்றனர்!!

இச்சம்பவத்தை இறைவன் தனது திருமறையில் இவ்வாறு கூறுகிறான்:

(நபியே!) யானைப் படையை உமது இறைவன் என்ன செய்தான்  என்பதை நீர் அறியவில்லையா? 

அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? 

மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். 

சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. 

அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (திருக்குர்ஆன், 105:1-5)


திருக் குர் ஆனில் வரும் இச்சம்பவம் பெரும்பாலானோர் அறிந்ததே. பிற்பகுதியில் வரும் யானைப்படை பறவைக்கூட்டத்தால் அழிக்கப்படும் கதை எல்லாரும் தத்தம் பெற்றோரிடம் கேட்டறிந்து, தமது பிள்ளைகளுக்குக் கூறிய முதல் கதையாகவும் இருக்கும். கதை கூறும் நீதியாக, இறைவன் நினைத்தால் மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் நீங்கிவிடும் என்பது பெரியவர்களான நமக்கும் மன தைரியத்தைத் தரும்.

ஆனால், இச்சம்பவத்தின் முற்பகுதியாகிய அப்ரஹா, அப்துல் முத்தலிப்பைச் சந்திப்பதும், அவரின் பதிலும் நான் சமீபத்தில்தான் வாசித்து  அறிந்தேன். பிற்பகுதியைவிட முற்பகுதியே என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.

பலசமயங்களில் நம் மனம் பிரச்னைகளின் தாக்கத்தால் கட்டுக்கடங்காமல் அலைபாயும். நம்மைமீறி எதுவும் செய்துவிடாமல் அணைபோடுவதற்கு “அதனதன் உரிமையாளன் அதனதன் பொறுப்பு” என்ற வாக்கு உதவும்.

சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன்.

Post Comment

15 comments:

அ.மு.செய்யது said...

//சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன்//

ஏற்றுக் கொள்கிறேன்.

ஆனால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிவுரை கொண்டோ,கைக‌ளை கொண்டோ த‌டுப்ப‌து ந‌ம் க‌ட‌மை.

எதுவும் ப‌ய‌ன்ப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் தான் இறுதியில் ம‌ன்றாடுவ‌து..!!

இன்னும் எதிர்ப்பார்க்கிறோம்...தொட‌ர்ந்து எழுதுங்க‌ள் !!!

Prathap Kumar S. said...

சூப்பர்... :-)

ஜெய்லானி said...

\\\பிற்பகுதியைவிட முற்பகுதியே என் மனதை வெகுவாகக் கவர்ந்தது.\\என்ன இப்படி சொல்லிட்டீங்க!!!!

பாத்திமா ஜொஹ்ரா said...

அக்கா,குர் ஆன் கூறும் உண்மை சம்பவத்தை,அழகுபட சொல்லியுள்ளீர்கள்.இன்னும் இது போல் குர் ஆன் கூறும் சம்பவங்களை எதிர்பார்க்கிறேன்,அக்கா.

S.A. நவாஸுதீன் said...

நல்ல விளக்கவுரை. நல்லதொரு பகிர்வுக்கும் நன்றி.

///ஆனால் சில‌ விஷ‌ய‌ங்க‌ளை அறிவுரை கொண்டோ,கைக‌ளை கொண்டோ த‌டுப்ப‌து ந‌ம் க‌ட‌மை.

எதுவும் ப‌ய‌ன்ப‌டாத‌ ப‌ட்ச‌த்தில் தான் இறுதியில் ம‌ன்றாடுவ‌து..!!////

இதற்கு நானும் உடன்படுகிறேன்.

Jaleela Kamal said...

//கதை கூறும் நீதியாக, இறைவன் நினைத்தால் மலைபோல் வரும் துன்பமும் பனிபோல் நீங்கிவிடும் என்பது பெரியவர்களான நமக்கும் மன தைரியத்தைத் தரும்.//

முற்றிலும் உண்மையே அருமையா பகிர்வை எங்களுடன் பகிர்ந்து இதை பற்றி தெரியாமல் இருபப்பவர்களும் இதன் மூலம் தெரிந்து கொள்வார்கள்..
ஆண்டவன் உங்களுக்கு நல் கிருபை புரிவானாக.

SUFFIX said...

//“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” //

ஆமாம் ஹுசைனம்மா, நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.

SUFFIX said...

உண்மையான வரலாறு, பதிவில் இருப்பதைக் கொண்டு, மற்றவர்களுக்கு சொலவதுற்கு எளிதாக எப்போழுதும் ரெஃபர் பண்ணலாம். நன்றி சகோதரி.

எல் போர்ட்.. பீ சீரியஸ்.. said...

//சிலசமயம் நம் எல்லைக்குள் வராத சில விஷயங்களில் நாம் எதுவும் செய்யமுடியாமல் கையறுநிலையில் இருப்போம். அச்சமயங்களிலும் “பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” என்று நம்மை அமைதிப்படுத்திக் கொள்ள இச்சம்பவத்தை நினைவுகூறுவேன். //

நல்ல கருத்தைச் சொல்லி கதையையும் பகிர்ந்ததுக்கு நன்றி..

Anonymous said...

தமிழ்ப்பெண்கள்

Center for Tamil Female Bloggers பெண் தமிழ் வலைப்பதிவாளர்களின் வலைமனை
http://www.tamilpenkal.co.cc/

ஷாகுல் said...

மிக அழ்காக கூறியிருக்கிறீர்கள்.

//“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” //

நிச்சயமாக

ஹுஸைனம்மா said...

செய்யது - அதேதான் என் கருத்தும். ஆனால் இடம், பொருள், ஏவல் பொறுத்தே அதுவும்.

பிரதாப் -நன்றி.

ஜெய்லானி - எனக்கு அந்தப் பதில் காரணமாகத்தான் முதற்பகுதி ரொம்பப் பிடிக்கும்.

ஃபாத்திமா - நன்றி.

நவாஸ் - நன்றி. செய்யதுக்கான பதிலே இங்கும்.

ஜலீலாக்கா - நன்றி.

ஷஃபி - நன்றி.

எல் போர்ட் - வருகைக்கு ரொம்ப நன்றிப்பா. இது இஸ்லாமியச் சம்பவம் என்றாலும் கதை கூறும் கருத்து எல்லாருக்குமே பொதுவானவைதானே?

ஷாஹுல் - நன்றி.

நட்புடன் ஜமால் said...

சம்பவம் அழகாய் சொல்லியிருக்கீங்க

Faizal said...

//“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” //

ஆமாம் நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.

Faizal said...

“பொறுப்பாளன் இருக்கிறான்; அவன் பார்த்துக்கொள்வான்” ஆமாம் நிச்சயமாக. நமது காரியங்களில் எல்லை மீறி போகும்போது, இதுவே தீர்வு.