இருதினங்களாக எங்கு பார்த்தாலும் மகளிர்தின சிறப்புப் பதிவுகள். மகளிரின் பெருமை பேசும் கட்டுரைகள். பத்திரிகைகளிலும் மகளிர்தின சிறப்பிதழ்கள், பேட்டிகள். டிவி சேனல்கள் இதையொட்டி எந்தெந்த நடிகைகளின் பேட்டிகளை ஒளிபரப்பினார்களோ தெரியவில்லை.
மகளிர் தினத்தையொட்டி சிறப்பு தள்ளுபடிகள், புதிய மாடல் நகைகள் - நகைக்கடைகளில் பல தினங்கள் முன்னதாகவே விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
அந்த விளம்பரங்களும், பேட்டிகளும் இடம்பெறும் அதே பக்கங்களில், கடந்த ஒருவாரமாக இன்னொரு செய்தியும் பரபரப்பாக எழுதப்பட்டு வருகிறது. அருணா ஷான்பாக்!! எல்லாருக்குமே தெரிந்தவர் இப்போது. அறிமுகம் தேவையில்லை. நான் பிறந்து, வளர்ந்து, படித்து, கல்யாணம் செய்து, பிள்ளைகள் பெற்று, அவர்களின் எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கவும் தொடங்கிவிட்ட இத்தனை வருடகாலங்களாகப் படுக்கையிலேயே சுயநினைவற்று கிடக்கிறார். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு எனக்கென்று பல நினைவுகள் இருக்க, அவருக்கோ எதுவுமே நினைவில்லாமல்.
தெரிந்ததெல்லாம் அலறல் மட்டுமே - அவர் சுயநினைவோடு இருந்தபொழுது கடைசியாக செய்த செயல் அபயம் தேடி அலறியது என்பதால் அதுவே இன்றும் தொடர்கிறதோ என்னவோ? இவரைப் பார்க்கும்போது, நல்லவேளை சௌம்யா இறந்துவிட்டார் என்று தோன்றுகிறது. சௌம்யா - சென்ற மாதத்தில் கேரளாவில், ஒரு திருடனால், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டு பின் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுபோல, இன்னும் எத்தனையோ பேர் - கோவை சிறுமிகள் அனுசுயா, முஸ்கன், தர்மபுரி கனகலட்சுமி - இவர்களெல்லாம் சமீபத்திய உதாரணங்கள்தான். இன்னும் எத்தனையோ கணக்கிலடங்கா உதாரணங்கள் உண்டு. தற்கொலைக்குத் தள்ளப்பட்டவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம் கணக்கில்.
பெண்கள் முன்னேற்றத்தை ஊக்குவிக்கக் கடைபிடிக்கப்பட்டு வரும் மகளிர்தினம் எனக்கு வெறுமையைத்தான் தருகிறது இவர்களைப் பார்க்கும்பொழுதில். எனக்குள் அச்சத்தையேற்படுத்திவிடுமோ என்றும் அச்சமாகவும் இருக்கிறது. பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள், சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. முன்னேற்றப் புள்ளிவிவரங்களைப் போலவே, பெண்களின் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் இருக்கும்தானே? எனில் எதை கணக்கிலெடுப்பது?
எவ்வகை ஆண்களும், பெண்களின் மீதான தன் கோபத்தை, வஞ்சத்தை, வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இந்தப் பாலியல் வன்முறை. ஏன், ஒரு ஆணைப் பழிதீர்க்கவும் அவர்சார்ந்த குடும்பத்தின் பெண்ணையே வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர் அல்லது பழி போடுகின்றனர்.
தனிப்பட்ட மனிதர்களின் அல்லாமல், அமைப்புகள் சார்ந்த வன்முறைகளும் பெண்களின்மீதே கட்டவிழ்த்து விடப்படுகின்றன. குஜராத் - அந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண், காஷ்மீர் - ஆசியா, நிலோஃபர் இன்னும் எண்ணிலடங்கா பெண்கள், வடமாநிலங்களில் கௌரவக்கொலை செய்யப்பட்ட பெண்கள் - பத்திரிகையாளரான நிரூபமா பதக் போல. மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா எதிர்த்துப் போராடுவதும் எதை? பெண்ணைத் தெய்வமாகவும், ஆறுகளாகவும், சக்தியின் வடிவமாகவும், ஏன் தேசத்தையே தாயாகவும் கொண்டாடும் நாட்டில்தான் இவையும் நடக்கின்றன.
மற்ற நாடுகளும் விதிவிலக்கல்ல என்று சொல்லும் உதாரணங்கள், இலங்கை - இசைப்பிரியா, ஆஃப்கன் - மூக்கறுக்கப்பட்ட ஆயிஷா, முன்னேறியதாகச் சொல்லப்படும் ஐரோப்பிய நாடுகளில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தந்தையாலேயே வன்புணரப்பட்ட மகள்கள்...
எங்கு நோக்கினும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள். அல்லது அடக்குமுறைகள். உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்களில்லையென பல நாட்டினரும், இனத்தவரும் பாகுபாடில்லாமல் போட்டியிடுகின்றனர்.
பெண்ணையும், அதன்மூலம் சமூகத்தையும் பாதுகாக்கவென ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அவளை ஆதிக்கம் செலுத்தத் தமக்குத் தரப்பட்ட அதிகாரமெனத் தவறாக அர்த்தப்படுத்தி, அடக்கி வைக்கும் ஆணினம் விழிப்புணர்வு அடையும் வரை பெண்களுக்கு விடிவில்லை!!
எனக்கு நீங்கள் சம உரிமை தரவேண்டாம், 33 சதவிதம் வேண்டாம், படிப்பு, வேலைகளில் முன்னுரிமை வேண்டாம். ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம். உங்கள் படங்களில், பத்திரிகைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், பாடல்களில், விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள். அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் காட்சிப் படுத்தாதீர்கள். இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள் எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.
|
Tweet | |||
37 comments:
உண்மையாக எழுதி இருக்கிறிர்கள். ஒவ்வொரு சாமானியர்களின் மனதில் உள்ளதை தந்து விட்டீர்கள்,
ஹரம்,ஹரீம். பெண்கள் கஃபாவைப் போல் பாதுகாக்கப் படவேண்டும்.
பெண்களின் பாதுகாப்பில் பெண்களுக்கும் பங்குண்டு.
தன் பெண் குழந்தைகள் அதீத அழகுடன் இருப்பதற்காக ஆடையும்
ஆபரணமும் அணிவித்து அழகு பார்ப்பதோடு நிறுத்திக் கொள்ளலாம், பாதகமில்லை. ஆனால் அதே சமயம் வெளியில் செல்லும் போது
அதிகமாகவே அலங்கரிப்பது சரியல்லவே. பாதுகாக்கப் பட
வேண்டுமென்று நினைப்பை விட பிறர் பாராட்ட வேண்டும்
என்ற நினைப்புதான் மேலோங்கி நிற்கிறது.
இப்பவே இப்படி இருக்கே, முன்பெல்லாம் போர்களினால்
எத்தனை லட்சங்கள் சீரழிந்தன என்பதை நினைக்கும் போது ...:(
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. கடைசிப் பத்தியை பிரிண்ட் பண்ணி, பிட் நோட்டீஸாக வெளியிடலாம் மகளிர் தினத்தில்! சொல்லத் தெரியாமல் இருந்த என் எண்ண அலைகளை நீங்கள் அச்சில் வார்த்தமாதிரி உணர்ந்தேன். அருமையான கட்டுரை, நன்றி ஹுஸைனம்மா!
எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம்.//
நல்ல வரிகள்.
மீடியவால வெளியே வந்தது இது வராதது இன்னும் எத்தனை இருக்கோ..!!
ஹ்ம் :(
\\எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம்//
நெருங்கிய சொந்தம்,தமக்கேயான நட்பு இவைதாண்டி மற்ற பெண்களிடம் கண்ணியம் காப்பதில்லை என்பதை ஆண்கள் விளையாட்டாகவே நினைக்கிறார்கள்.
நல்ல கருத்துகள்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
//ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம்.//
போலிகளை வெளிக்கொணர்ந்து விளக்கி, அவற்றை விலக்கி, மிக மிக அழுத்தந்திருத்தமாக, தீர்க்கமான வார்த்தைகளுடன் தெளிவாக உண்மைகளை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்துள்ளீர்கள், சகோ ஹுசைனம்மா. இது ஓர் உயர்ந்த தரமான பெண்ணுரிமைக்கான சிறந்த பதிவு.
அல்ஹம்துலில்லாஹ்... படித்துவிட்டு வந்த சுவடே தெரியாத மாதிரி நைசாக நழுவும் நிலையில் இல்லாமல், தைரியமாக தலையை நிமிர்த்தி எந்த குற்றவுணர்ச்சிக்கும் அவசியமின்றி பதிவை ஆதரித்து ப்ரோஃபைலுடன் பின்னூட்டமிடுகிறேன் என்றால்... எல்லா புகழும்
என்னை இப்படி ஒரு வாழ்வியல் நெறியில் வைத்திருக்கும் இறைவனுக்கே உரித்தாகுக.
சூப்பர்ர் பகிர்வு ஹூசைனம்மா!! கடைசி வரிகள் அருமை!!
எனக்கு நீங்கள் சம உரிமை தரவேண்டாம், 33 சதவிதம் வேண்டாம், படிப்பு, வேலைகளில் முன்னுரிமை வேண்டாம். ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள்//
உண்மையான வரிகள்....அருமையான பதிவு...
//மகளிர் தினத்தையொட்டி சிறப்பு தள்ளுபடிகள், புதிய மாடல் நகைகள் - நகைக்கடைகளில் பல தினங்கள் முன்னதாகவே விளம்பரப்படுத்தத் தொடங்கிவிட்டார்கள்.
//எங்கேயோ போய் கொண்டு இருக்கின்றது....
ஹுசைனம்மா, மாதவம் செய்தல்லவா மங்கையராகப் பிறந்திருக்கிறோம்!
கவரிங் நகைகளைப் பறித்துக் கழுத்தை அறுப்பவர்கள் இருக்கிறார்கள் அம்மா.
.
எப்பொழுது மாறியது இந்த உலகம் ஏன் மாறியது.4 வயது சிறுமியிலிருந்து 70 வயதுக் கிழவி வரையிலுமா அவதிக்குள்ளாவது;(
நல்ல பகிர்வு.
உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் . சில வரிகள் சாட்டயடியாக இருந்தன
ஒவ்வொரு வரிக்குள்குள்ளும் உண்மைகள் உரக்க பேசுகிறது
மெளனத்தை மொழியாக கொண்டவர்கள் பெண்கள் என்ற நிலையை மாற்றியமைக்க
இன்னும் காலம்பிடிக்குமோ.
கயவர்களில் கள்ளத்தனங்களாலும். காட்டுமிராண்டி செயல்களாலும் பெண்மைகள் பறிபோகும் அவலங்கள் என்று மாறுமோ.
உண்மைகள் வெளிவந்தும் வாயடைத்து நிற்பதுதான் வேதனையாக உள்ளது..
இறைவன் அனைவரையும் காக்கவேண்டும். அனைவரையும் நேர்வழியில் செலுத்தவேண்டும்..
எவ்வகை ஆண்களும், பெண்களின் மீதான தன் கோபத்தை, வஞ்சத்தை, வக்கிரத்தைத் தீர்த்துக்கொள்ளத் தேர்ந்தெடுக்கும் வழிமுறை இந்தப் பாலியல் வன்முறை. ஏன், ஒரு ஆணைப் பழிதீர்க்கவும் அவர்சார்ந்த குடும்பத்தின் பெண்ணையே வன்புணர்ச்சிக்கு ஆளாக்குகின்றனர் அல்லது பழி போடுகின்றனர்.
......சுடும் அவல நிஜங்கள்..... :-(
நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.
.... a good point to ponder upon.
அஸ்ஸலாமு அலைக்கும்
உண்மையை அருமையாக எழுதியிருக்கீர்கள்.
//எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம்.//
நடக்குமென்று நம்புவோமாக..
//இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள் எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும்//
ரொம்ப கரெக்டுங்க. ரௌடியிசம்தான் ஹீரோவுக்கான தகுதின்னு சினிமாக்களே கத்துக்கொடுக்குதே..
பெண்ணாய்ப் பிறந்த சந்தோஷம் என்றாலும் இன்னும் விடுபடாத விலங்குகளின் நுனி ஆண்கள் கைகளில் !
Nice post Akka
//அருணா ஷான்பாக்!!//
Talks about her comes up every women's day or other occassions, then nothing about it... Atleast God should give her a relief by taking her...
மிக அருமையாக உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள். பெண்களின் மீதான வன்முறையிலிருந்துதான் முதலில் பாதுகாப்பு வேண்டும். மற்றவை எல்லாம் அதன்பிறகுதான்.
நல்லதொரு பதிவு. அருணா பற்றிய செய்தியை ஊடகங்களில் பார்த்த போது மனம் பதைத்தது. அவன் செய்த உணவுத் திருட்டை தட்டிக் கேட்ட பாவத்துக்கு அவனால் ஏற்பட்ட தண்டனை ஒரு வாழ் நாள் அவஸ்தை. இந்த மாதிரி கொடுமைகளை நிறுத்தவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒரு பதிவு ஒரு நாளில் போதாது.
உண்மைகள் கசக்கின்றன...33 சதவிகிதம் என்று சொல்லியே ஓய்த்து விடுவார்கள் பல விஷயங்களில்...சுதந்திரம் கிடைக்காதவர்கள் கதை, வன்முறைக் கொடுமைகளுக்குப் பலியாகிறவர் கதை... என்றுதான் முடியுமோ...
அட இதே கருத்துக்களையே நான் இந்த மகளிர் தினத்தில் சென்னை துறைமுகப் பெண்கள் நல சங்க கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது சொன்னேன் ஹுசைனம்மா.. !!!
//உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம். உங்கள் படங்களில், பத்திரிகைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், பாடல்களில், விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள். அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் காட்சிப் படுத்தாதீர்கள். இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள் எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.//
மிகவும் சரி. இதெல்லாம் இல்லாமல் இருந்தாலே பெண்கள் தாமே முன்னேறிவிடுவார்கள்.
ஆனால் சம உரிமை வேண்டாம் என்று முதலில் சொல்லியிருப்பதில் சற்றும் உடன்பாடில்லை :)
திருடனாகப் பார்த்து திருந்துவது என்பது நடக்கிற காரியமா? :) இது போன்ற விடயங்களைக் கண்டு பயப்படாமல் பெண்கள் துணிந்து செயல்பட வேண்டும்.
//பெண்ணையும், அதன்மூலம் சமூகத்தையும் பாதுகாக்கவென ஏற்படுத்தப்பட்ட சட்டங்களையும், விதிகளையும் அவளை ஆதிக்கம் செலுத்தத் தமக்குத் தரப்பட்ட அதிகாரமெனத் தவறாக அர்த்தப்படுத்தி, அடக்கி வைக்கும் ஆணினம் விழிப்புணர்வு அடையும் வரை பெண்களுக்கு விடிவில்லை!!//
ம்ம்..
Last para speaks out ...
I still can't recall that Gujarat ... :(
Alhamdulillah! Really happy to see one more excellent post from you. Thanks for sharing........
நல்லா உணர்ச்சி கலந்து எழுதி இருக்கீங்க...
மீடியா மூலம் வெளிவருவது குறைவு தான்.. இன்னமும் எங்கெங்கும் என்ன்னவோ நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது...
//பெண்கள் பல துறைகளில் முன்னேறியிருக்கிறார்கள், சாதனைகள் புரிந்திருக்கிறார்கள். மகிழ்ச்சி. முன்னேற்றப் புள்ளிவிவரங்களைப் போலவே, பெண்களின் மீதான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் இருக்கும்தானே?//
உண்மை...நிதர்சனமான உண்மை...
சலாம் ஹுஸைனம்மா...,நலமா..?
நல்ல நச்சென்ற கருத்துக்களோடு உங்கள் ஒவ்வொரு பதிவையும் பார்க்கின்றேன்.
\\எனக்கு நீங்கள் சம உரிமை தரவேண்டாம், 33 சதவிதம் வேண்டாம், படிப்பு, வேலைகளில் முன்னுரிமை வேண்டாம். ஆனால், எனக்கு வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு தாருங்கள் - உங்கள் பார்வைகள், எண்ணங்கள் மற்றும் செயல்களில் கண்ணியமாக இருப்பதன் மூலம். உங்கள் படங்களில், பத்திரிகைகளில், கவிதைகளில், கட்டுரைகளில், பாடல்களில், விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள். அவளை வெறும் போகப்பொருளாக மட்டும் காட்சிப் படுத்தாதீர்கள். இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள் எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.//
இந்த வரிகள் ஒவ்வொன்றும் உலக பெண்கள் அனைவரும் சேர்ந்து சொல்வதற்க்கு சமமாய் இருக்கின்றது.ஒவ்வொரு பெண்ணின் குமுறல்கள் என்று கூட சொல்லலாம்.அதை அழகாக ஆணி அடித்தாற் போல் சொல்லியிருப்பது உங்கள் சிறப்பு.
பாராட்டுக்கள் ஹுஸைனம்மா...
அன்புடன்,
அப்சரா.
ஸலாம் சகோ ஹுஸைனம்மா,
மகளிர் தின சிறப்பாக சிறப்பான வித்யாசமான கட்டுரை,..
கடைசியில் உள்ள ஒன்பது வரிகள்..என்ன சொல்வதென்றே தெரியவில்லை சகோ..
அனைத்தும் உண்மை,,உண்மையிலும் உண்மை..
சகோ அஸ்மா சொல்லியது போல..நோட்டீஸாகவே தரலாம்..
அல்லாஹ் தங்களின் அறிவை விசாலமாக்க போதுமானவன்..
அன்புடன்
ரஜின்
நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்.
இப்போதைய சினிமாக்களில் இவைதான் அதிகம். அதற்கு சப்பைக்கட்டு வேறு..
வன்முறையிலிருந்து பாதுகாப்பு அவசியம் தேவை. ஆக்கபூர்வமான பதிவு.
"விளம்பரங்களில், பேச்சில், செயலில் பெண்ணைத் துகிலுரிக்காதீர்கள்." இதுபோன்ற உங்கள் ஆக்கங்கள் எளிதில் பலரின் மனதில் ஊடுருவி, ஏற்கனவே அலைபாய்ந்துகொண்டிருக்கும் அல்லது தூங்கிக் கொண்டிருக்கும் மிருகத்தைத் தூண்டிவிடும். நல்ல ஆக்கங்கள், எங்கேயேனும் ஒருவரின் மனதிலாவது நல்ல விளைவை ஏற்படுத்துவதைவிட, இவை ஏற்படுத்தும் பாதிப்புகள் அதிகம்."
well said husainamma ,
fantastic post.
Hussainamma...
I salute!!!
வார்த்தைகள் வேறெதுவுமே எழ முடியாதவாறு ஒரு பதிவு. ஆண்கள் எல்லொரும், ஏன் பெண்களுமே கூட படித்து யோசிக்க வேண்டிய ஒரு பதிவு :)
Hats Off Mam :)
வருகை தந்து, கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
அரபுத் தமிழன் - சரியே, கவனமான உடை அணிதலும் அவசியமே. ஆனால், நடந்த/ நடக்கும் பல அநியாய சம்பவங்களில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்கள் உடலைக் காட்டும் உடை அணிபவர்கள் அல்ல. மானத்தைப் பெரிதாக நினைக்கும் சாமான்யர்களே. ஆனால், குற்றவாளிகள் தூண்டப்பட்டதற்கு முதற் சொன்ன வகையில் வருபவர்கள் முக்கீயக் காரணம் எனலாம்.
முத்தக்கா, நீங்கள் சொன்னதும் மிகச் சரி.
எல் போர்ட் - சம உரிமையைவிட எனக்கு இந்த அடிப்படை உரிமை முக்கியமாகத் தெரிகிறது சந்தனா. திருடனாய்ப் பார்த்து திருந்துவதென்பது ஒருபோதும் நடக்காத காரியம் என்பதுதான் என் கருத்தும்.
Post a Comment