நெல்லையிலுள்ள என் ஊரில், முன்காலங்களில், விவசாயம் செய்பவர்கள்தான் பெரும்பணக்காரர்கள். அடுத்ததாகத்தான் வணிகம் செய்பவர்கள். அதல்லாமல், பெரும்பாலானோர் நெசவு செய்பவர்கள்.
agritech.tnau.in
நெசவுத் தொழில் செய்பவர்கள் வீட்டிலேயே ஒரு (6x6x4' approx) பள்ளம் தோண்டி அதிலே நெசவுத்தறி வைத்திருப்பார்கள். அதில் மேலே தொங்கும் ஒரு கயிரைப் பிடித்து இழுத்துஇழுத்து விட்டால் சல்லக்-புல்லக் என்று சத்தம் போட்டுக் கொண்டு நூல்கண்டுகள் அங்குமிங்கும் ஓடுவதும், நூல்வரிசைகள் அப்படியே பசைபோட்டதுபோல ஒட்டிக்கொண்டு துணியாக மாறிவிடுவதும் பார்க்க மேஜிக் போல இருக்கும். பெரும்பாலும் லுங்கிகள்தான் நெய்யப்பட்டன. இப்போது நினைவுபடுத்திப் பார்க்கும்போது, தறிக்குழிகள் இருக்கும் வீடுகளில் சிறு குழந்தைகளை எப்படி அதில் விழாமல் வளர்த்தார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது.
wikipaedia
ஆனால், எனது பள்ளிக்காலங்களில் இந்த மாதிரி தறிசத்தமோ, பாவு காயவைப்பதோ பார்த்ததாக ஞாபகம் இல்லை; பவர்லூம்களின் வருகை காரணமாகவோ என்னவோ? தறிகள், ஒன்று சும்மா இருந்தன, அல்லது விற்கப்பட்டு குழிகள் மட்டும் இருந்தன.
ஆனால், எங்கள் ஊரில் நெசவுத்தொழில் முடங்க ஆரம்பிக்கத் தொடங்கிய காலத்தின் முன்னர் தொடங்கிய ஒரு தொழில் பீடித்தொழில்!! இக்காலத்தின் ஐடி கம்பெனிகளும், கால் சென்டர்களும் அதிகச் சம்பளம், சாப்பாடு, ஜிம், இலவச போக்குவரவு என சலுகைகள் தந்து இளவயதினரை வளைத்துப் போடுவதுபோல, அக்காலத்தில் வறுமையில் இருந்தவர்களை - அதுவும் பெண்களை- வளைத்துப் போட்டது இந்த பீடித் தொழில் எனலாம்!! பீடி சுற்றுவதற்கான மூலப்பொருட்களான இலை, புகையிலைத்தூள், நூல் எல்லாமே இலவசம்; ஆனால் சுற்றித்தரும் பீடிக்குக் கூலி தருவோம் என்றால் இக்கால “நிலம் வங்கினால் தங்க நாணயம் இலவசம்” ஆஃபரைவிட கவர்ச்சியாகத்தானே இருந்திருக்கும்?
காஜா பீடி, செய்யது பீடி, அஞ்சுப்பூ பீடி, கணேஷ் பீடி, நூர்சேட் பீடி, ஜோதிமான் பீடி, பத்தாம் நம்பர் பீடி என்று விதவிதமான பீடி கம்பெனிகள் (பிராண்டுகள்) உண்டு. இப்பீடிக் கம்பெனிகளின் ஓனர்கள் எல்லாருமே (அல்லது ஒருசிலர்தவிர) மலையாளிகள் என்பதும் குறிப்பிடப்பட வேண்டியது.
ஆக, எங்கள் ஊரில் ஒருகாலத்தில் பீடி சுற்றாத வீடுகளே இல்லை எனலாம். வறுமையில் இருந்தவர்களுக்கும், நெசவுத் தொழில் செய்து நசிந்தவர்களுக்கும் இது வருமானத்திற்குச் சிறந்த வழியாக இருந்தது என்றால், பணக்கார வீட்டுப் பெண்களுக்கு பீடி சுற்றுவது வருமானமும் தரும் பொழுதுபோக்காக அமைந்தது.
பீடிசுற்ற ஆரம்பிக்க, ஏதேனும் ஒரு பீடி கம்பெனியில் கணக்கு துவங்கவேண்டும். இப்போதெல்லாம் வங்கியில்கூட அக்கவுண்ட் சுலபமாகத் துவங்கிவிடலாம்; ஆனால், பீடி கம்பெனிகளில் அக்கவுண்ட் துவங்குவதற்கு அதிர்ஷ்டக்காற்று வேண்டும். காரணம், அவர்களிடம் ஏற்கனவே தேவைக்கதிகமான ஆட்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் நீங்கினால் மட்டுமே இன்னொருவர் சேர்த்துக் கொள்ளப்படுவார்.
முதல்நாள் கொடுக்கப்படும் பீடி இலையை - காய்ந்த சருகு போல இருக்கும் - தண்ணீரில் பக்குவமாக ஊறச்செய்து, ஈரப்பதத்தோடு இரவுமுழுதும் வைத்தால், காலையில் பஞ்சுதோசை போன்ற பதத்தில், வெட்டுவதற்கு ஏற்ற பருவமாக இருக்கும். அதில், “ஆஸ்” எனும் செவ்வக அளவுகோலை வைத்து, கத்தரியால் ஒரு பீடி சுற்றுவதற்குரிய இலையை வெட்டவேண்டும். ஒரு முழு இலையில், எத்தனை பீடிக்கான இலைகள் வெட்டமுடியுமென்பது வெட்டுபவரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது. (மேலே படத்திலுள்ள இலையில் 4 வெட்டினால், சராசரி. 5-good, 6-excellent!!) பின், அதனுள் புகையிலை வைத்துச் சுரிட்டி, நூலால் கட்டினால் பீடி ரெடி!! இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரு நாளைக்குக் குறைந்தது ஆயிரம் பீடிகளாவது சுற்றினால்தான் அடுப்பு எரிக்க முடியும். (ஆண்கள் கொண்டுவரும் 3000/4000 மாதச்சம்பளம் என்பது வாடகை, ஸ்கூல் ஃபீஸ் போன்ற பெரிய செலவுகளுக்கே போதாது).
பீடி சுற்றுவதை முழுமையாகப் பார்க்க, இங்கே சுட்டவும்.
ஒரு குடும்பத்தில் வேலைகளைப் பார்த்துக் கொண்டே அம்மாவால் 500 பீடி சுற்றமுடிந்தால் அதிகம். இளம்பெண்கள் தாய்க்கு உதவிக்கொண்டே 1500. வீட்டுக்கு வந்த மருமகள் என்றால், ஆயிரமாவது சுற்றினால்தான் முணுமுணுப்புகளிலிருந்து பாதுகாப்பு. கணவனைப் பிரிந்தவர் அல்லது விதவை அல்லது முதிர்கன்னிகள் என்றால் 2000மாவது சுற்றினால்தான், வீட்டுச் செலவுக்கு தம் பங்கைக் கொடுத்து, பின் சுயதேவைகளையும் பார்த்துக் கொள்ளமுடியும்.
ஆயிரம் பீடிக்குக் கிடைப்பது 70 ரூபாய். அட, எழுபதா, பரவாயில்லையே என்று நினைப்பீர்கள். இன்னும் உண்டு: வார விடுமுறை, பெருநாட்களுக்கு போனஸ், கணக்கு முடித்தால் பி.எஃப். பணம் எல்லாம் உண்டு. ஆனால், இவற்றின் பின்னால் எத்தனையோ கதைகள் உண்டு - எக்ஸ்போர்ட் கம்பெனிகள்/ அங்காடித் தெருக்களின் அராஜகத்திற்குச் சற்றும் குறைந்தவையல்ல இந்த பீடிக் கம்பெனிகள்!!
பீடிக்கம்பெனியில் நிறுத்துத் தரப்படும் இலைகள் தரமானவையாகக் கூட இருந்துவிடலாம் என்றாவது; ஆனால், போதுமானவையாக ஒருநாளும் இராது. தினமும் பற்றாக்குறையை நிறைவு செய்ய தனியார் கடைகளில் இலையைக் காசுகொடுத்து வாங்கவேண்டும். அது என்ன ரேஷன் கடையா, மலிவாய் கிடைக்க?
மேலும், சுற்றிக்கொண்டுபோய் கொடுக்கும் பீடிகளையும் தரம்பார்த்துத்தான் எடுத்துக்கொள்வார்கள் கம்பெனியினர். சுற்று சரியில்லை, கட்டு சரியில்லை, குத்து சரியில்லை, உயரம் குறைவு என்ற (சிலசமயம், கட்டாயக்) காரணங்களால் கம்பெனிக்காரரால் உடைத்து எறியப்படும் பீடிகள் சில நூறைக்கூடத் தாண்டும் சிலசமயம். பீடி சுற்றிக் கொடுக்கும் பெண், அதைக் கண்டித்து எதிர்க்குரல் எழுப்பினாலோ, பழிவாங்கும் நடவடிக்கைகளாக இன்னுமதிகம் பீடிகள் ஒடிக்கப்படும். தரப்படும் இலை, புகையிலை அளவுகளிலும் தண்டிக்கப்படுவர். மிகச்சில இடங்களில், “சகஜமாக” பேசிக்கொள்ளவில்லையென்றாலும்கூட இத்தண்டனைகள் உண்டு.
கழிக்கப்படும் அளவு பீடிகளை மறுநாள் மீண்டும் புதிதாகச் சுற்றிக் கொடுத்தால்தான் அவரது கச்சாத்தில் (அக்கவுண்ட்டில்) கரும்புள்ளிகள் இராது; முழுக்கூலியும் கிடைக்கும். (இக்கரும்புள்ளிகள் பின்னர் அவரது வருடாந்திர போனஸ், பிஎஃப் ஆகியற்றைப் பாதிக்கும் சாத்தியம் உண்டு; அதிகமானால், கச்சாத்து க்ளோஸ் செய்யப்படும் அபாயமும் உண்டு!!) ஆனால், அதற்கெனத் தனியே இலை, புகையிலை கொடுக்கப்படாதென்பதால் சொந்தக் காசில்தான் வெளியே வாங்க வேண்டும்.
பணத்தட்டுப்பாடு வருமெனில், வட்டிக்காரர்களிடம் கடன் வாங்குவதும், பின் வட்டி கட்டி, அசலில் முங்குவதும் தொடர்கதைகள். பணத்தை வட்டிக்கு வாங்கலாம்; விரயமாகும் நேரத்தை? அதற்கு, இதுபோன்றவர்களைக் குறிவைத்து இயங்கும் ’ரெடிமேட் பீடி’ விற்கும் கடைகளில் (கடன்வாங்கிய) அதிகப் பணத்திற்கு பீடிக்கட்டாகவே வாங்கிக் கொள்ளலாம்.
பீடிக்கம்பெனி வேலைகளுக்கு (பீடி சரிபார்க்கும், இலை/புகையிலை அளக்கும்) சில (படிக்காத) இளைஞர்களிடையே போட்டியும் உண்டு. இந்த இளைஞர்களைப் போலவே, தனிக்கச்சாத்து வைத்திருக்கும் இளம்பெண்களுக்கும் கல்யாண மார்க்கெட்டில் வேல்யூ உண்டு!!
இவ்வளவு சிரமங்கள் இருந்தாலும், பெண்கள் பீடி சுற்றுவதைக் கைவிடாதிருக்கக் காரணம், இந்த வேலையில் இருக்கும் வசதிகள்: வீட்டிலிருந்தே செய்யலாம் - குழந்தைகளை மற்றும் டிவியை பார்த்துக் கொண்டே. உடலை வருத்தும் உழைப்புத் தேவையில்லை.
பெண்களுக்கு தோதான நல்ல வேலைதானே என்று தோன்றும். ஆனால், புகையிலை பீடி/சிகரெட் குடிப்பவர்களை மட்டும் பாதிப்பதில்லை. அதைத் தயாரிப்பவர்களையும்தான். "Passive smoking”-ஆல் புகைப்பவர்களின் அருகிலிருப்பவர்களும் பாதிப்படைவதுபோல, பீடி சுற்றுபவர்களோடு, வீட்டிலிருக்கும் குழந்தைகள், வயதானவர்களும்கூட பாதிக்கப்படுகிறார்கள். புகைப்பதினால் வரும் அலர்ஜிகள், இருமல், ஆஸ்துமா முதல் டிபி, புற்றுநோய் வரையான பாதிப்புகளோடு, அதிக நேரம் ஒரே இடத்தில் குனிந்திருந்து செய்யும் வேலையால் முதுகு-தோள்-இடுப்பு வலிகளும் நிரந்தரம் இவர்களுக்கு. இலவச கலர் டிவி திட்டம் தெரிந்த இவர்களுக்கு, தம் நோய் தீர்க்க இலவசக் காப்பீட்டு திட்டம் குறித்த விவரங்கள் தெரியவில்லை என்பதும் சோகம்.
பீடிசுற்றி தம்மைப் படிக்க வைத்த தாய், சகோதரிகளின் உழைப்புக்குப் பிரதிபலனாக, தாம் தலையெடுத்தபின் அவர்களை பீடிசுற்றுவதிலிருந்து ஓய்வு கொடுத்துவருகின்றனர் பல இளைஞர்கள். எனினும், பெரும்பான்மையான மக்கள் இன்னும் வறுமைக்கோட்டிற்கு கீழேயேயிருப்பதால், இத்தனை பாதிப்புகள் இருக்கிறதென்று தெரிந்தாலும் விட விரும்பவில்லை. பகரமாக, வீட்டுவேலை, அல்லது சுயதொழில் என்று அதிக உடலுழைப்பு கோரும் எதிலும் ஈடுபட விரும்புவதுமில்லை. பெண்குழந்தைகளையும் இதில் சிறுவயதுமுதலே ஈடுபடுத்துகின்றனர்.
ஒருகட்டத்தில் பீடிகம்பெனிகளின்மூலம் ஊருக்கு உள்ளே வந்தவர்கள், தற்போது பல்வேறு தொழில்களிலும் தம் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தியிருக்கின்றனர், கல்வி உட்பட. சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல.
|
Tweet | |||
36 comments:
பதிவு அருமை.
வாசித்துக்கொண்டே வந்தப்ப நெஞ்சு அடைச்சதென்னவோ உண்மை:(
எங்கள் ஊரிலும் இந்த பீடி சுற்றும் பெண்களை அதிகமாக பார்க்க முடியும்...
ரெம்ப பேமஸான சொக்கலால் பீடியை விட்டுவிட்டீர்கள்... :))))))))
பீடித்தொழிலைப் பற்றி விளக்கமா சொல்லிருக்கீங்க,இதனால் ஏற்படும் அபயாத்தை பற்றி இன்னும் உங்கள் பார்வையில் நிறைய எழுதியிருக்கலாம்னு தோனுது...பகிர்வுக்கு நன்றிங்க!!
ஸலாம் சகோ..
வழக்கம் போல் நல்ல பதிவு..
நெசவைப்பற்றியெல்லாம் அத்தனை தெரியாது..நான் கல்லூரிசெல்லும் போது,எனது வகுப்புத்தோழன் ஒருவனது வீட்டுத்தொழில் நெசவுதான்..அவன் வீட்டிற்கு போய் இருக்கிறேன்..ஒரே ஹால் தான் இருந்தது..அதில் இந்த முனையில் இருந்து அந்த முனைவரை தறி தான் வியாபித்திருந்தது..அந்த அறையை எப்படி பயன்படுத்துவார்கள் என்றே விளங்கவில்லை.ஆனால் தறியை முதன்முதலில் நேரில் பார்க்கும் ஆர்வத்தில் அப்போது அதெல்லாம் தோனவில்லை...அவன் தலையெடுத்து இப்போ அவர்கள் நல்லாவே இருக்கிறார்கள்.கண் முன்னே நூல் துணியாவது உண்மையிலேயே மேஜிக் மாதிரித்தான் இருந்தது சகோ.
பீடி:அத்தொழிலில் இருக்கும் நிறைய குறைகளை அறியத்தந்திருக்கிறீர்கள்.. எங்க ஊர் பக்கம்,இந்த இரண்டுமே இல்லை..70 ரூபாய்க்கு எத்துனை சிரமங்களை ஏற்கவேண்டியிருக்கிறது??
நெசவு அழிந்துவிட்டாலும்,இந்த பீடித்தொழில் அழியவில்லை என்பது வருத்தமே..இருந்தாலும்,வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை தரும் குறைந்த பட்ச பயன் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது...
அன்புடன்
ரஜின்
நெல்லை டவுணிலும் இதே போல் பீடி சுற்றும் பெண்களை பார்த்து இருக்கிறேன். வயது பெண்கள் விடிகாலையில் எழுந்து பீடி சுற்ற உட்கார்ந்து விடுவார்கள்.அவர்கள் இருக்குமிடத்தில் சாப்பாடு அவர்களின் அம்மாக்காளால் கொடுக்கப்படும். பழையது தான் பெரும்பாலும்.நிறைய பெண்களாக அமர்ந்து கதை பேசிக் கொண்டே சுற்றுவார்கள். டி.பி.ஆஸ்த்துமா வந்து பிறகு கஷ்டப்படுவார்கள்.இருமிக் கொண்டே சுற்றுவார்கள்.மிகவும் பாவமாய் இருக்கும்.
"தம்"மைப் படிக்க வைத்த - இங்கயும் தம் மா? :-) ஒரே மூச்சில் தம் கட்டி படிக்கவேண்டிய கட்டுரை.
நெல்லை பக்கம் பேட்டையில் இந்த தொழில் செயும் பெண்களை பார்த்திருக்கேன்.. அவர்களை பார்க்கும் பொழுது
வீட்டு தொழில் என்று மட்டுமே பார்த்து எதிர் வரும் நோய்களை அறியாமல் செய்யும் இந்த தொழிலை மாற்றி வேறு தொழில் செய்யலாமே என்று எண்ண தோன்றும்..
விளக்காமன பகிர்வு
பீடி சுற்றுதலை போலவே, ஊருக்கு தகுந்து பெண்களுக்கென்று பல வேலைகள் உள்ளன. அப்பளம் போடுவது, பாசி கோர்ப்பது என்று. ஆனால் பீடி சுற்றுதல் - உடல் நலத்தை கெடுத்து கொண்டு செய்தாக வேண்டிய தொழில்... வறுமை வாழ்க்கை துணையாகி விட்டால் வேறு வழி.
பவர் லும் வந்தப்பிறகு , தறி போடுவது குறைந்துப் போய் விட்டது. சேலம், பொன்னம்மாப்பேட்டை பகுதிகளில் வீதி முழுவதும் பாவு காய வைத்திருப்பார். இப்பொழுது அவை காணவில்லை.
பீடி சுற்றும் தொழிலில் இருப்போர் பற்றிய விஷயம் நெஞ்சை கணக்கா வைக்கிறது
அன்புடன் அழைக்கிறேன்... அன்புமணி... http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.html
பிடி சுற்றுபவர்களின் வாழ்க்கை முறையையும், பீடி சுற்றுதல் பற்றியும் அருமையான் பதிவு.
//வாசித்துக்கொண்டே வந்தப்ப நெஞ்சு அடைச்சதென்னவோ உண்மை:(//
எனக்கும் தான் கோபால் சார்.
இன்னும் கொஞ்சம் பீடி சுற்றுவதால் ஏற்படும் பாதிப்பு பற்றியும் சொல்லி இருக்கலாம் சகோ. கண்டிப்பாக இதை பற்றி விழிப்புணர்வு மக்களை சென்றடய வேண்டும். பணம் முக்கியம் தான், ஆனால் அதை விட விலைமதிப்பில்லா உயிரும், ஆரோக்கியமும் முக்கியம் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை, விழிப்புணர்வு ஏற்படுத்த விழையும் முன் அதற்கான மாற்று வழியை சொன்னால் தான் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க முடியும் சகோ
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,
பீடி சுற்றும் தொழிலில் ஏற்படும் இடர்பாடுகளை மிக ஆழமாக சொல்லியிருக்கிறீர்கள். இத்தகைய துன்பங்கள் ஏற்படும் என்று தெரிந்தும் இந்த பீடி சுற்றும் தொழிலை பெண்கள் தெரிவு செய்ய பெரும்பாலும் வறுமை தான். ஆனால் வறுமையில் வாடும் மக்களுக்கு வேற்று தொழிலை ஏற்பாடு செய்ய வேண்டிய அரசோ வாய்மூடி மவுனமாக இருக்கிறது. இத்தகைய புகையிலை கம்பெனிகளை நடத்துபவர்களை நன்றாக ஒரு தடவை கவனித்து பாருங்கள். அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.
இத்தகைய போதையூட்டும் புகையிலை வியாபாரத்திற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை என்று தெரிந்திருந்தும் இதை இவர்கள் விடாமல் தொடர்ந்து செய்து வருகிறார்கள். இவர்களுடைய பீடி விளம்பரங்கள் பெரும்பாலான முஸ்லிம் இதழ்களில் இன்று வரை வந்து கொண்டுதானிருக்கிறது. அதாவது மார்க்கத்தை போதிக்க கூடிய இஸ்லாமிய இதழ்கள் மார்க்க முரணான புகையிலை வியாபாரத்திற்கு விளம்பரம் கொடுக்கின்றன. அதிலும் ஒரு பீடி கம்பெனி இஸ்லாமிய சரியத் பைனான்ஸ் ஒன்றை வேறு நடத்துகிறார்கள். இதையெல்லாம் கண்டிக்க வேண்டிய இஸ்லாமிய அறிஞர்கள் வாய்மூடி மவுனிகளாக இருக்கின்றனர். இந்த உண்மையை எடுத்து சொல்பவர்களை வஹாபிகள், தவ்ஹீத் காரர்கள் என்றும் இலக்கிய நடையில் கடுங்கோட்பாட்டாளர்கள் என்றும் பொதுவாக மார்க்க குழப்பவாதிகள் என்றும் தூற்றுகின்றனர் பலர்.
சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல.
......இவர்கள் உலகமும் அந்த பீடிகட்டுக்குள்ளேயே அடங்கி விடுகிறதே.....பதிவை வாசித்து முடித்ததும், மனதில் ஒரு சோகம் படர்ந்தது.
அருமையான பகிர்வு..பகிர்வுக்கு ரொம்ப நன்றி...
பல தகவல்களோடு அழகாக பீடி சுற்றியிருக்கிரீர்கள். சற்றே சோகத்துடன்தான் படித்தேன், .
ஷேக் தாவூத் - வ அலைக்கும் ஸலாம். அரசு கூலியை சற்று அதிகப்படுத்தியும், பி.எஃப். - போனஸ் போன்றவைகளை முறைப்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால், இதன் உடல்நல விளைவுகளைக் குறித்த விழிப்புணர்வு பரப்ப ஏதும் செய்யவில்லை என்பது உண்மையே.
பீடி கம்பெனி உரிமையாளர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே என்பது வலிதரும் உண்மையே. அதனால்தான் முஸ்லிம்கள் நிறைந்த எங்கள் ஊரில் அவர்களால் காலூன்ற முடிந்தது. ஷரியத் ஃபைனான்ஸ், இஸ்லாமிய இதழ்களில் விளம்பரம் - ம்ம்ம்.. என்ன சொல்ல..
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.. அரசைக் குறைகூறுகிறோம்.. இறைபிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள் எங்கள் ஊரில் நிறைய உண்டு. ஆனால், அவர்கள்கூட, இவ்வடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அவர்களை உடலுக்கு ஊறு செய்யும் இத்தொழிலைவிட்டும் விலக்க எந்த முயற்சிகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
ரொம்ப உபயோகமான தகவல்கள் ஹுசைனம்மா.. பீடியில் இவ்வளவு இருக்கா..
மிக அற்புதமான நடையில். அவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்த உணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள் ஹுஸைனம்மா.
அது போலவே பீடித்தொழிலாளர்களுக்காக இன்று வரை போராடி பல நலத்திட்டங்களை பெற்று கொடுத்த கம்யூனிஸ்டு தோழர்களுக்கும் நன்றி செலுத்த கடமை பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் குறிப்பிட்ட நூலுக்கு பாவு போடும் வேலையை சிறு வயதில் மேலப்பாளையத்தில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
ம்ம்ம்ம். காலம்தான் எவ்வளவு மாறி விட்டது.
கணவனைப் பிரிந்தவர் அல்லது விதவை அல்லது முதிர்கன்னிகள் என்றால் 2000மாவது சுற்றினால்தான், வீட்டுச் செலவுக்கு தம் பங்கைக் கொடுத்து, பின் சுயதேவைகளையும் பார்த்துக் கொள்ளமுடியும்.
too sad ...
நீங்கள் சொன்ன பாவு விவரங்களை மதுரையில் பார்த்திருக்கிறேன்.
பூக்கட்டி விற்பவர்களை பார்த்திருக்கிறேன் பீடி சுற்றுபவர்களை நேரில் பார்த்தில்லை..
உடலுக்கு தீங்குதரும் தொழிலும் அத்தியாவதிய தேவைக்கு உதவுகிறது என்றபோதும் சற்று வருத்தமளிக்கிறது..
பீடிசுற்றும் தொழில் பற்றி விளக்கமாக தெரிந்து கொண்டதில் மனம் கனத்ததென்னவோ உண்மை.
//சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல//
உண்மைதான்:(! இதனால் ஏற்படும் வியாதிகள் அவஸ்தைகள் எல்லாவற்றையும் கைக்கு வரும் சொற்பத் தொகைக்காகப் பொறுத்துக் கொண்டு தொடர்கிறார்கள். ஊதுபத்தி தொழிலையும் இது போல சொல்லுவார்கள்.
நல்ல பதிவு ஹுஸைனம்மா.
:((
சித்ரா - நன்றிப்பா.
கீதா ஆச்சல் - ரொமப் நன்றிப்பா.
வித்யா மேடம் - மிக்க நன்றி மேடம்.
ஷேக் தாவூத் - வ அலைக்கும் ஸலாம். அரசு கூலியை சற்று அதிகப்படுத்தியும், பி.எஃப். - போனஸ் போன்றவைகளை முறைப்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால், இதன் உடல்நல விளைவுகளைக் குறித்த விழிப்புணர்வு பரப்ப ஏதும் செய்யவில்லை என்பது உண்மையே.
பீடி கம்பெனி உரிமையாளர்கள் பெரும்பாலும் முஸ்லிம்களே என்பது வலிதரும் உண்மையே. அதனால்தான் முஸ்லிம்கள் நிறைந்த எங்கள் ஊரில் அவர்களால் காலூன்ற முடிந்தது. ஷரியத் ஃபைனான்ஸ், இஸ்லாமிய இதழ்களில் விளம்பரம் - ம்ம்ம்.. என்ன சொல்ல..
இன்னொன்றையும் சொல்ல வேண்டும்.. அரசைக் குறைகூறுகிறோம்.. இறைபிரச்சாரம் செய்யும் இஸ்லாமிய இயக்கங்கள் எங்கள் ஊரில் நிறைய உண்டு. ஆனால், அவர்கள்கூட, இவ்வடித்தட்டு மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தி, அவர்களை உடலுக்கு ஊறு செய்யும் இத்தொழிலைவிட்டும் விலக்க எந்த முயற்சிகளும் எடுத்ததாகத் தெரியவில்லை.
தமிழ் உதயம் - நீங்க சொல்லியிருப்பவைகளில் வேலை அதிகம்; வருமானமும், லாபமும் நிரந்தரமில்லை; அதனால்தான் பீடித்தொழில் இங்கே ஊன்றிவிட்டது. நன்றிங்க.
எல்.கே. - ஆமாங்க, தறி என்பதே எங்க ஊரிலயும் இல்ல இப்ப. நன்றிங்க.
அன்புமணி - நன்றி.
அபுநிஹான் - //விழிப்புணர்வு ஏற்படுத்த விழையும் முன் அதற்கான மாற்று வழியை சொன்னால் தான்// ரொம்பச் சரி. ஆனா, இலகுவான வேலை - நிரந்தர வருமானம் என்பதால், பெண்கள் பின்விளைவைக் குறித்து யோசிப்பதே இல்லை. நம்மால் முடிந்தது, வீட்டு வேலை பணி தருவதுதான். ஆனால், இதைவிட அது சிறந்ததாகத் தெரிகிறது.
மகளிர் சுய உதவிக் குழு திட்டமும் ஈர்க்கவில்லை அவர்களை.
ரஜின் - ஆமா, ரஜின், சில வீடுகளில் தறியைத் தவிர இடமே இருக்காது. எப்படி வாழ்ந்தாங்கன்னு ஆச்சரியமாத்தான் இருக்கு. வளரவேண்டிய நெசவு அழிந்து, அழியவேண்டிய பீடித்தொழில் தழைத்தோங்கி வருகிறது. //வீட்டில் உள்ள பெண்களுக்கு ஒரு வேலைவாய்ப்பை தரும் குறைந்த பட்ச பயன் கொஞ்சம் யோசிக்கவைக்கிறது.// அதேதான், ஆனா ஆபத்தும், அழிவும் நிறைந்தது எனபதால்தான் வருத்தம்.
அமுதாக்கா - நீங்கள் சொல்லும் காட்சிகள் தினப்படி பார்த்து பழகிவிட்டது எங்கள் ஊரில். முதுகு ஒடிய ஒரு 8 மணிநேரமாவது இருந்தால்தான் 1000 தேறும். நன்றிங்க.
உழவன் - கொஞ்சம் பெரிய பதிவுதான். எழுதி, நிறைய குறைத்து, பின் பதிவிட்டேன். ஆனாலும்... நன்றிங்க.
சிநேகிதி - ஆமா, பேட்டையிலும் இது உண்டு.
துளசி டீச்சர் - நன்றிங்க. குடும்பத் தொழில்போல பல தலைமுறைகளாய் பீடி சுற்றும் குடும்பங்களும் உண்டு. தொழிலைப் போல, வறுமையும் தலைமுறைகளைத் தாண்டித் தொடரத்தான் செய்கிறது.
நாடோடி - ஆமாங்க, சொக்கலாலுல் ஃபேமஸ்தான். மறந்துட்டேன். இன்னும் நிறைய உண்டு. நன்றிங்க.
மேனகா - பாதிப்புகள் நிறைய இருக்குதான் மேனகா. ஒரு பொதுவான விளக்கமாகத்தான் எழுதிருக்கேன். நன்றிப்பா.
ஸ்ரீராம் சார் - நன்றி.
மலிக்கா - பூகட்டுறதும் இதேபோல முதுகு/கை ஒடியும் வேலைதான்னாலும், புகையினால் வரும் உடல்நல பாதிப்புகள் போல மோசமா இருக்காதுன்னு நினைக்கிறேன்.
ஜமால் - ம். வருத்தம்தான். இதிலே குழந்தைங்க இருந்தா, இன்னும் கொடுமை!!
கோவை2தில்லி - நன்றிங்க.
இதுதான் முதல் முறையாக இவ்வளவு தகவல்களோடு படிக்கிறேன் தொழிலில் உள்ள சிரமங்கள்.. வருவாயை விட அதிகம் என்று புரிகிறது
நல்ல விழிப்புணர்வு தரும் பதிவு.
ரொம்ப கழ்டமாவும் இருக்கு.
நிறைய பேர் அதை நம்பி தானே வாழ்க்கையே ஓட்டு கிறார்கள்
சுற்றுபவர்கள் சுற்றிக்கொண்டே இருக்கிறார்கள், உலகத்தைப் போல//
புகைப்பது மட்டுமல்ல சுற்றுவதும் அரோக்கியத்திற்கு கேடுதான்.
Very thoughtful post akka... நெஞ்சை கனக்கவும் வைத்தது
ரிஷபன் சார் - நன்றி.
இராஜ ராஜேஸ்வரி - நன்றிங்க.
அப்பாவி தங்ஸ் - நன்றிப்பா.
ஜலீலாக்கா - நன்றிக்கா.
பீடிசுற்றி தம்மைப் படிக்க வைத்த தாய், சகோதரிகளின் உழைப்புக்குப் பிரதிபலனாக, தாம் தலையெடுத்தபின் அவர்களை பீடிசுற்றுவதிலிருந்து ஓய்வு கொடுத்துவருகின்றனர் பல இளைஞர்கள்.
Ennaium ariyamal azhuthuvitten....
Post a Comment