மருத்துவமனை போக வேண்டியிருந்தது. அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் பண்ணிட்டுப் போனாலே, குறைஞ்சது ஒருமணிநேரமாவது காவல் காத்தாத்தான் ”தரிசனம்” கிடைக்கும். நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ்சிட்டாங்களான்னு புரியலை. அதனால், ஒவ்வொரு ஹாஸ்பிட்டலா கூப்பிட்டு, டாக்டர் யாராவது நம்ம வசதிப்படி ‘ஃப்ரீயா’ இருக்காங்களான்னு கேட்டப்போ, ஒரே ஒரு ஆஸ்பத்திரியில மட்டும் இருக்காங்கன்னு சொன்னாங்க. அதுவும், இந்திய டாக்டராம். ஹை, டபுள் டமாக்கான்னு நினைச்சுகிட்டே பேரைக் கேட்டேன்.
வேற நாட்டு டாக்டரா இருந்தா, மொழிப் பிரச்னை என்பதால்தான் இந்திய டாக்டரா தேடுறது. அப்புறம் ‘ஜீன்ஸ்’ பட லட்சுமிப்பாட்டிக்கு நடந்த மாதிரி, இடது மூளைக்குப் பதிலா வலது மூளைல ஆபரேஷன் பண்ணி வைக்கவா? எனக்கு இருக்கிறதே ஒரேயொரு ‘குட்டி’ மூளை. ஏன்னா, ஒண்ணு நான் பேசுற ‘இங்லிபீஸ்’ அவங்களுக்குப் புரியாது; அல்லது, அவங்க பேசுற ’அரபுலீஸ்’ எனக்கு தகராறு ஆகும். இதுவாவது பரவால்ல, டாக்டர் ஆங்கிலத்தைத் தாய்மொழியா கொண்ட நாட்டவரா இருந்துட்டா இன்னும் சிக்கல். அவரோட ’தூய’ ஆங்கிலம் நம்ம ‘சிற்றறிவுக்கு’ ..ஊஹூம்.... பிரியவே பிரியாது!!
இந்த யோசனையில இருந்ததாலயோ என்னவோ, ஃபோன்ல பேசுன ‘ஃபிலிப்பைனி’ மேடம் சொன்ன பேரைச் சரியா கவனிக்காம விட்டுட்டேன். ஒரு எச்சூஸ்மி போட்டு, மறுக்காச் சொல்லச் சொன்னா.. என்ன பேர் இது? “ஏஸிசாய்”!! இப்படி ஒரு இந்தியப் பேரா? ஒரு வேலை கோவாக்காரப் பெண்ணா இருப்பாரோ டாக்டர்?
இப்படித்தான், ரொம்ப நாள் முன்னாடி, வேறொரு மருத்துவமனையில் ஒரு டாக்டர் பேரை, “டேங்காமேனி போன்யா” என்றார் இன்னொரு ஃபிலிப்பைனி அக்கா. போய்ப்பார்த்தால், அவர் “தங்கமணி பொன்னையா”!! அதுலயும் அக்மார்க் தின்னவேலிக்காரர் வேற. நல்லவேளை, அவர் பேர் “நேசமணி பொன்னையா” இல்லை; இருந்தா, அதையும் கவுண்டமணி மாதிரி, ’நாசமா’ ஆக்கிருப்பாங்கன்னு நினைச்சுகிட்டேன். சரி,அந்த அதிர்ச்சியையே தாங்கிட்டோம். இது முடியாதான்னு நினைச்சுகிட்டு ஆஸ்பத்திரி போனேன்.
அதான் சொன்னோம்ல, அவங்க பேர் என்ன தெரியுமா? எனி கெஸ்?
அவங்க பேர் “ஏழிசை”!! பக்கா தமிழச்சிங்க .. அட.. தமிழ்நாட்டவங்கன்னு சொன்னேன்!! ஆங்கிலத்துல பேரை ”Ezhisai" னு எழுதினதால வந்த வினை!! அட, ரஹ்மானேன்னு நொந்துகிட்டு, பரிசோதனைலாம் முடிஞ்சப்புறம் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப, டீனேஜர்ஸ் பத்தி பேச்சு வந்துது. அவர்களின் லேட்டஸ்ட் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களின் மீதான மோகம், எதிர்வாதங்கள், வீட்டு வேலைகளில் பங்கெடுத்தல் குறித்த எதிர்ப்புகள் இப்படி பேசிக்கிட்டிருந்தோம். எனக்கும் டீனேஜ்ல ஒரு வாரிசு இருக்கதால, நானும் கொஞ்சம் புலம்பினேன்.
அப்ப அவங்க எதிர்கொண்ட சில நிகழ்வுகளை உதாரணமாச் சொன்னாங்க.
அபுதாபியில் அவரது டீனேஜ் மகளின் இந்தியத் தோழி அபுதாபியில் தன் பெற்றோர் வாங்கிய புதிய வீட்டுக்கு குடிபோயிருப்பதாகச் சொன்னாளாம். குறிப்பிட்ட அந்த ஏரியாவில், வெளிநாட்டினர் வீடு வாங்க முடியாதென்பதுகூட அவளுக்குத் தெரியவில்லையே என்று மகள் சொல்ல, வாடகைக்கு வீடு எடுப்பதற்கும், சொந்த வீடு வாங்குவதற்கும் உள்ள வித்தியாசம்கூட தெரியாமல் அவளை வளர்த்திருப்பது பெற்றோரின் தவறே என்று அவர் சொன்னாராம்.
விடுமுறைக்கு தமிழகம் சென்றிருந்தபோது, அதற்கு மூன்றே மாதங்கள் முன்னர் நடந்த இரு திருமணங்களுக்கான பரிசுபொருட்களுடன் இரு தம்பதியரையும் சந்திக்கப் புறப்பட்டால், அதிர்ச்சி.. இரு ஜோடிகளுமே பிரிந்துவிட்டிருந்தனர் என்று தகவல் வந்ததாம்!! அவர் கணித்த காரணம், செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது.
இன்னொண்ணும் சொன்னார். சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிறதில்லை. பின்னாளில் அவன் மேல்படிப்பு/வேலை விஷயமா, வெளிநாடுகளில், தன் அறைத் தோழர்களோடு சேர்ந்து வேலை செய்தாக வேண்டிய நிர்பந்தம் வரும்போது, எதுவுமே தெரியாததால் பாத்திரங்கள்/அறை சுத்தம் செய்யும் பொறுப்பு தரப்படுகிறது. இந்த வேலையில் தவறில்லை என்றாலும், இந்தச் செல்லப் பிள்ளைகளுக்கு அதுவும் அவமானமாகத் தெரியும். மேலும், சிலரால், ’கைப்புள்ள’ ரேஞ்சுக்கு நடத்தப்படுகிறார்கள்.
இப்படிப் பலதும் பேசிட்டு, கடைசியில் அவர் சொன்னார், “நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ”நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். அதனால், குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது பெற்றோர்களின் கட்டாயக் கடமை” என்று முடித்தார்.
வீட்டுக்கு வந்து, என்னவரிடம், இதையெல்லாம்சொன்னேன். பின்னே, அவர்தானே எனக்கும் பெரியவனுக்கும் நடுவுல ‘அம்பயர்”!! ”கேட்டீங்களா? நானும் இதத்தானே தெனைக்கும் சொல்வேன் வீட்டில, யார் கேக்கிறீங்க? படிச்ச டாக்டரே அதத்தான் சொல்றாங்க பாருங்க. இனிமே நீங்க என்ன சொன்னாலும், நான் சொல்றதச் சொல்லத்தான் செய்வேன்”னு பெருமையாச் சொல்லிகிட்டேயிருக்க...
பாருங்க, பாருங்க, நான் என்ன பல்பு வாங்கினேன்னு ஆவலா நீங்க எல்லாரும் தேடுறீங்க... ஹூம்...
கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”
|
Tweet | |||
43 comments:
பல்பை எல்லாம் விடுங்க...உண்மையிலேயே இது மிகவும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயம்...எது கேட்டாலும் 'நாம்தான் அனுபவிக்கவில்லை, அவர்களாவது அனுபவிக்கட்டும்' என்றும், 'காசுக்கா பஞ்சம்' என்றும் உடனே உடனே நிறைவேற்றி விடுவது பல பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.
ஹிஹிஹ் செம பல்ப்
//“நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ”நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். அதனால், குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது பெற்றோர்களின் கட்டாயக் கடமை” என்று முடித்தார்.//
நிதர்சனமான உண்மை சகோ. நானும் செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகளை பார்த்து இருக்கிறேன். சில பெண் பிள்ளைகள் மாமியார் வீட்டில் போய் வாழ்வதற்கு சிரமப்படுகிறார்கள், சில வெளிநாட்டில் இருக்கும் ஆண்களும் வீட்டில் வேலை செய்து பழகாததால் அறையில் ஏதாவது வேலை செய்வது என்றால் அவர்களால் survive பண்ண முடிவதில்லை. காரணம் பெற்றோர்கள் எந்த வேளையுமே சொல்லாமல் பிள்ளைகளை செல்லம் கொடுத்து வளர்த்துவிடுகின்றனர். இதன் காரணமாக வெளி உலகில் settle ஆவதற்கு பிள்ளைகள் கஷ்டப்படுகின்றனர்.
//அதையும் கவுண்டமணி மாதிரி// sorry சகோ. அது ஜனகராஜ், கவுண்டமனி இல்லை.
அன்ந்தராமன் சுப்புராமன் என்ற பெயரை anotherman superman என்று கூறியது தான் கேட்டுருக்கிறேன், டேங்காமேனி போன்யா புதுசாக இருக்கிறது.
பதிவு அருமை சகோ
ஹுஸைனம்மா, டாக்டர் கரைக்டாகத்தான் சொல்லி இருக்கிறார்.குழந்தைகளுக்கு நாம் அவர்களை வளர்க்க படும் கஷ்ட நஷ்டங்களையும் சொல்லி வளர்க்க வேண்டும்.அப்பொழுதுதான் அவர்களுக்கு பொறுப்பு என்பது வரும் என நான் நினைக்கிறேன்.
நல்ல பகிர்வு.
@அபுநிஹான்:
//சில வெளிநாட்டில் இருக்கும் ஆண்களும் வீட்டில் வேலை செய்து பழகாததால்//
இதுபத்தியும் பேசினோம். எழுத விட்டுப்போச்சு. உங்க கமெண்ட் பாத்ததும், சேத்துட்டேன். நன்றி!!
கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”//
ஆஹா ! நல்லா சொன்னார் உங்கள் கணவர். சிரித்து ரசித்தேன் ஹீஸைனம்மா.
நாம் நல்ல கருத்தை சொன்னால் யார் கேட்கிறார்கள்!
டாக்டரின் அறிவுரைகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய நல்ல கருத்துக்கள்.
//விடுமுறைக்கு தமிழகம் சென்றிருந்தபோது, அதற்கு மூன்றே மாதங்கள் முன்னர் நடந்த இரு திருமணங்களுக்கான பரிசுபொருட்களுடன் இரு தம்பதியரையும் சந்திக்கப் புறப்பட்டால், அதிர்ச்சி.. இரு ஜோடிகளுமே பிரிந்துவிட்டிருந்தனர் என்று தகவல் வந்ததாம்!! அவர் கணித்த காரணம், செல்லமாக வளர்க்கப்பட்ட பிள்ளைகள் என்பது.//
மிகவும் உண்மையான விஷயம்..சமீபத்திய என் தமிழக விஜயத்திலும் இது போன்ற நிகழ்வுகள் தான்...அதிகச் செல்லம் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுவதால்தான் பல குழந்தைகள் இன்று சகிப்புத்தன்மையே இல்லாமல் எடுத்ததற்கெல்லாம் வீவாகரத்து என்று முடிவு செய்யும் நிலைமை..
/////கேட்டுக்கோங்க, இதத்தான் சொன்னார் என்னவர்: “சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”/////
வயிறு வலிக்க சிரித்து மகிழ்ந்தேன். இப்போ வயிற்று வலிக்காக நான் டாக்டரை தேடுகிறேன். டாக்டர் செலவுக்கான பில்லை செட்டில் பண்ணுவது உங்கள் பொறுப்பு. அடுத்த தடவை பதிவு போடும் போது படிப்பதினால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பு அல்ல என்று எச்சரிக்கை செய்தியை முதலில் போடவும்.
வாழ்த்துக்கள்.
//பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும்//
Very true. Even we follow this.
நேர்த்தியாக நகைச்சுவை ததும்பும் வகையில் எழுதி இருக்கிறீர்கள் . இது உண்மையாகவே உங்களுக்கு நிகழ்ந்ததா இல்லை புனைவா ?
அன்பின் ஹூஸைனம்மா - மருத்துவர் கூறியது அனைத்துமே கடைப் பிடிக்க வேண்டிய ஒன்று தான். வாங்குன பல்பு சூப்பர் - பேய்னு சோனதுதான் வருத்தம் - சரி சரி அவர் தானே சொன்னார். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நல்ல கருத்துக்கள்.
டாக்டரின் பகிர்வு உண்மையிலேயே சிந்திக்க வைக்கிறது.
பிள்ளைகள் வளர்ப்பில் கவனம் தேவைதான்.
சிரிக்கவும் சிந்திக்கவும் வச்சிடீங்க...பதிவு மிகவும் பிடித்தால் இரண்டு முறை படித்தேன்.
கடைசில ம்...சான்சே இல்ல...சிரிச்சிட்டே இருக்கிறேன்...
:))
“நம் பிள்ளைகளுக்கு “இல்லை” என்ற வார்த்தையை ஏற்றுக் கொள்ள நாம்தான் பழக்கப்படுத்த வேண்டும். பெற்றோரிடம் ”நோ” கேட்டுப் பழகினால்தான், வெளியுலகம் தரும் ஏமாற்றங்கள் அவர்களுக்கு சோர்வைத் தராமல், உறுதியைத் தரும். //well said .
ஆனா இத சொன்ன எங்க வீட்டுக்காரர் கேக்க மாட்டேன்கிறார்
//சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிறதில்லை. //
சரியா சொன்னிங்க .எனக்கு தெரிஞ்சு சமையல் தெரியாதவர கட்டிக்கிட்டு ஒரு அப்பாவி ரொம்பவே கஷ்டபட்டுச்சி
அருமை!நல்ல கருத்து..
// நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ் சிட்டாங்களான்னு புரியலை.//
இந்த டவுட்டு ரொம்ப முக்கியம். வாட்ச் பண்ணனும். நோட்ட்.
// சிலர் ஆம்பளைப் பிள்ளைங்கன்னு சமையல், வீட்டு வேலைகள் எதுவுமே சொல்லிக் கொடுக்கிற தில்லை. பின்னாளில் அவன் மேல்படிப்பு/வேலை விஷயமா, வெளிநாடுகளில்....//
பெண்பிள்ளைகளுக்கு கணவரும், ஆண் பிள்ளைகளுக்கு மனைவியும்
செல்லம் கொடுப்பதாக தகவல்கள் சொல்கின்றன. காலப்போக்கில் அவரவர்கள் உண்மைநிலையை உணர்ந்து கற்றுக்கொள்வார்கள்.ஆனா குறிப்பறிந்து நேரம் பார்த்து நாம் படித்துணர்ந்தவைகளையும் அவர்களின் காதில் படும்படியும் போட்டு வைக்கவும் மறக்கக் கூடாது ஹுசைனம்மா!!
எப்ப 'நோ' சொல்லணும்.. எப்ப சொல்லக்கூடாதுன்னும் நமக்கும் தெரிஞ்சிருக்கணும். சில அறிவுஜீவிகள் ரெண்டையும் குழப்பிக்கிட்டு பசங்க அவங்களைவிட்டு விலகிப்போறதுக்கும் காரணமாகிடறாங்க.
கடைசிவரி'பீடம் இல்லாமலே சாமியாடுறவன் சல்லடம் கட்டுனா சும்மாயிருப்பானா'ங்கற நம்மூரு பொன்மொழியை நினைவுபடுத்துச்சு :_))))))
ஏழிசைக்கு 'Alhisai'ன்னு ஸ்பெல்லிங் எழுதுனா குறைஞ்சபட்சம் ஏலிசைன்னாவது புரிஞ்சிருக்க வாய்ப்பிருக்கே. எங்கூர்லயும் தண்டபாணியை 'தண்டா பானி'யாக்குறது ஜகஜம் :-)))))
அன்பு ஹுசைனம்மா
,
அதைத்தான் இங்கே சொல்லப் பழக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.
அதீதச் செல்லம் கொடுத்துக், கஷ்டப்படப் போவது குழந்தைகள் தானே.
தேவைக்கு மீ எதுவும் வேண்டாம் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். உங்களூரில் அது கொஞ்சம் கஷ்டம்தான்:)
வெகு நல்ல பதிவு.
குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது பெற்றோர்களின் கட்டாயக் கடமை” என்று முடித்தார்.
NELLAI P. NADESAN
DUBAI
குழந்தை ஆசைப்படுறாளே/னேன்னு கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்த்து, வீட்டுச் சூழல் அறிந்து நடக்கவும், வீட்டில் சின்னச் சின்ன உதவிகள் செய்து தரவும் பழக்கப் படுத்துவது பெற்றோர்களின் கட்டாயக் கடமை” என்று முடித்தார்.
ARUMAI
NELLAI P. NADESAN
DUBAI
வெளிநாட்ல பேர மாற்றி சொல்வதை விடுங்க
நம்ம ஊர் ரேஷன் கார்ட்லையும், வோட்டர் ஐடிலையும் பேரு எழுதியிருக்கும் பாருங்க ...
ஆண் / பெண் பிள்ளைகளுக்கு சமையலரையை கொஞ்சமேனும் காட்டியாவது வளர்க்கனும் ...
“இல்லை” என்பதை கேட்டு மட்டுமல்ல சொல்லவும் பழக்கனும்
When you want say "NO" don't say yes ...
நல்ல அறிவுரைதான், அதுவும் என்ன மாதிரி ஆளுங்களுக்கு :).. நானும் இப்பமே கொஞ்சம் கொஞ்சம் என் மகனுக்கு நோ சொல்லி பழக்கிக்குறேன்
ம்ம்ம்ம்ம் பதிவு நல்லாயிருக்கு மேடம்..
நல்ல பகிர்வுங்க.
சலாம் சகோ.ஹுசைனம்மா,
நல்ல கருத்துக்களை சொன்ன டாக்டர்.ஏழிசைக்கு மிக்க நன்றி.
// ‘ஃப்ரீயா’ இருக்காங்களான்னு கேட்டப்போ, ஒரே ஒரு ஆஸ்பத்திரியில மட்டும் இருக்காங்கன்னு சொன்னாங்க.//
---அட..! இப்போதுதான் புரிகிறது... அந்த டாக்டரம்மா ஏன் ‘ஃப்ரீயாவே’ இருக்காங்கன்னு..!
தனியாக பிராக்டிஸ் பண்றவங்கள், நம் நோய் சம்பந்தமாக கேட்டால்கூட அதிகம் பேசி நேரத்தை விரயமாக்குவதில்லையே..?
அவங்களுக்கு சம்பளம் தருவது ஆஸ்பத்திரியா..?
நல்ல பகிர்வு...
குழந்தைகள் கேட்பதற்கு எல்லாம் யெஸ் சொல்லக்கூடாது என்பது நல்ல விஷயம்...
பிள்ளைகளுக்கு நம் கஷ்டங்களை சொல்லி வளர்ப்பது தான் சிறந்தது. பிள்ளைகளின் நடவடிக்கையில் பெற்றோர்கள் கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயம்.
உங்களை பேய்ன்னு சொல்லிட்டாங்களா ஆத்துக்காரர் ஹாஹா ....
எங்க வீட்டிலை பெரும்பாலும் நோ தான். இருந்தாலும் எனக்கு ஏமாற்றங்களைத் தாங்க முடிவதில்லை.
நல்ல பதிவு.
// நோயாளிங்க கூடிட்டாங்களா இல்லை மருத்துவர்கள் குறைஞ் சிட்டாங்களான்னு புரியலை.//
நிறைய டாக்குடருங்க (அப்டின்னு அவங்களே சொல்லிக்கறாங்க) இப்போ அரசியல்ல தொபுக்கடீர்னு குதிச்சுட்டாங்க.. அது ஒரு காரணமோ?
// எனக்கு இருக்கிறதே ஒரேயொரு ‘குட்டி’ மூளை. //
//அவரோட ’தூய’ ஆங்கிலம் நம்ம ‘சிற்றறிவுக்கு’ ..ஊஹூம்.... பிரியவே பிரியாது!!//
ஹா...ஹா...ஹா... கலக்கல்....ரசித்தேன்...
//“ஏஸிசாய்”!!//
ஏழிசை ஆன கதை கலகலகல...
//“தங்கமணி பொன்னையா” - “டேங்காமேனி போன்யா” //
// “நேசமணி பொன்னையா” - நாசமா நீ போனியா// பெயர் மாற்றங்கள் படு டெர்ரர்...
//“சும்மாவே ஆடுற பேய், கொட்டுமேளத்தைக் கண்டா விடுமா?!!”//
ஹா..ஹா...ஹா... வழக்கம் போலவே மற்றுமொரு கலக்கலான கலகல பதிவு ஹூஸைனம்மா...
Salam husainamma ur posting was good.. even i m from abudhabi...can u say in which hospital dr.ezhisai works bcos first she were in zayed hospital and now she left...i m just searching for her..she s really a nice doctor
@Jalal,
Salam. She is now in GDC.
நியூஸி போன புதுசுலே மகளின் வகுப்புத் தோழியின் தாய் இந்த 'நோ' பற்றிச் சொன்னாங்க. வெள்ளைக்காரம்மா. நாங்கதான் 'வராது வந்த மாமணி'ன்னு மகளைச் செல்லம் கொடுத்துத் தலைமேல் தூக்கிவச்சுக்கிட்டு ஆடிக்கிட்டு இருந்தோமுல்லே!
அஞ்சரை வயசுக்குத் தனியா சினிமாப் பார்க்கத் தோழிகளுடன் போவேன்னு பிடிவாதம் பிடிச்சு நிக்கறாள். அவளுடைய வேறொரு தோழிக்கு அன்னிக்குப் பிறந்தநாள். இந்த சினிமா போறது பார்ட்டியின் ஒரு பகுதி.
'நோ' கத்துக்கிட்டு வந்துட்டேனில்ல..... அன்னிக்கு நம்ம வீட்டில் பாரதப்போர்தான்:-)
Thanks for ur info
நகைச்சுவை உங்களுக்கு சாதாரணமாகவே சரளமாக வரும்! அதுவும் ஒரு வசமான பழமொழி கிடைத்தால் சும்மாவா விடுவீர்கள்? வழக்கம்போல் சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்!!
ஹாஹாஹாஹாஹா அ ஒண்ணுமில்லை லேடி வீரப்பா மாதிரி நானும் சிரிச்சு உங்க ஆனந்தத்தைக் கொண்டாடினேன் ஹுசைனம்மா..:))
நல்ல விசயம் சொன்னீங்க.. இந்த விடுமுறையில் ஒரே நோ நோ வா சொல்லி எனக்கே கஷ்டமாகிப்போச்சு.. ஆனா நோ சொல்றது நல்லதுன்னு இப்ப மனசைத்தேத்திக்கிறேன்.
டாக்டர் அடிச்ச கொட்டுமேள பலருக்கு கண் திறந்திருக்கும். பகிர்வுக்கு நன்றி.
பல்பு வாங்குவது நமக்கு புதுசு இல்லையே. அதனால அதைப்பத்தில்லாம் கண்டுக்கப்டாது!!
கொட்டுமேளத்துடன் ஆடிட்டீங்களா :))
அம்மாக்கள் ஆடவும் பழகிக்கணும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய நல்ல விவரமான பதிவு.
Post a Comment