Pages

உண்டி சுருங்குதல்...




ட்டை எடுத்துக் கொண்டு அம்மாவுக்காகக் காத்திருந்தேன். நான் காத்திருப்பதாலேயே உடனே சாப்பிட வந்தார். இல்லையென்றால் அம்மா சாப்பிட இன்னும் எத்தனை மணிநேரம் ஆகும் என்று தெரியாது. 


எனது தட்டில் கரண்டியை நிறைச்சு, சிந்தச் சிந்த மட்டன் வைத்த அம்மா, தனது தட்டில் அரை கரண்டியளவு கூட வைக்கவில்லை. ”என்ன இத்துணூண்டு வச்சிருக்கே” என்றவாறே நான் ஒரு கரண்டி எடுத்து வைத்ததும், உடனே பதறிப்போய், “இவ்வளவெல்லாம் என்னால சாப்பிட முடியாது” என்று வைத்ததை எடுத்து பாத்திரத்திலேயே போட்டார். 

ந்தக் காட்சி, இடம், ஆட்கள் மாறினாலும், வீட்டுக்கு வீடு நடப்பதுதான். அசைவம் என்றில்லை, சைவ உணவு என்றாலும் இதுதான் நிலை. சாப்பிட முடியாதது என்பதல்ல காரணம்.  பெண்கள் என்றால் எல்லாரும் உண்டபிறகு இருப்பதைக் கொண்டு குறைவாக உண்ண வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதல் ஊட்டப்பட்டதே காரணம்!! ”பெண்டிர்க்கழகு உண்டி சுருங்குதல்” என்று ஔவைப் பாட்டியே சொல்லியிருக்காங்களே.....

இந்தியக் கலாச்சாரத்தில், கணவர் உண்டபின், அதுவும் அவன் மீதம் வைத்தவற்றோடுதான் மனைவி உண்ண வேண்டும் என்பது பெண்களுக்கான வழிகாட்டல். அதிலும், மனைவி மீதான அன்பின்காரணமாக, மனைவிக்குப் பிடித்த உணவுகளைத் தன் இலையில் வேண்டுமென்றே மீதம் வைத்திருப்பராம். ஏனெனில் அனைவரும் உண்டு முடித்தபின், கடைசியில் மனைவி உண்ணுவதால் அவளுக்கு உணவு மிஞ்சாமல் போய்விடுமோ என்ற கரிசனமாம்!! 

அந்தக் கரிசனத்தை மனைவியை தன் உடன் வைத்து ஒன்றாக உண்ணவைத்து காட்ட  வேண்டியதுதானே... என்று கேட்கவும் முடியாது!! ஏனெனில், இன்றைய தனிக்குடித்தனக் காலத்தில்கூட உடன் இருந்து உண்ணுமாறு கணவன் அழைத்தால், “பிள்ளைகளுக்குக் கொடுத்துட்டு, மத்த வேலைகளை முடிச்சுட்டு நான் சாப்பிட்டுக்குவேன், நீங்க சாப்பிடுங்க” என்று மனைவியிடமிருந்து ஒரு அதட்டல் வரும்.  இதுவும்  வீட்டுக்கு வீடு நடப்பதுதான்!!!

தென்னவோ எல்லாரும் உண்டு முடித்தபின், மிச்சம் மீதி இருப்பவற்றை வழித்து பாத்திரங்களை ஒழித்துவிட்டு உண்டால்தான் பெண்களுக்கு ஒரு திருப்தி. பெரும்பாலும் கூட்டுக் குடும்பங்களில் கடைசியாக உண்ணும் பெண்களுக்கு காய், கறி வகைகள் கண்டும் காணாமல்தான் இருக்கும். தனிக்குடித்தனங்களில் அப்படி இல்லை என்றாலும், தனக்கென இருப்பதை “சின்னவனுக்கு பொறிச்ச கறி பிடிக்கும், இருந்தா ராத்திரிக்கு கொடுக்கலாம்” என்றோ; “இது இருந்தா நாளை டிஃபன் பாக்ஸுக்கு ஆச்சு” என்றோ மிச்சம் பிடிப்பதே வழக்கமாக இருக்கிறது. மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.

பெண்கள் தாம் உண்ணும் உணவில் சமரசம் செய்வது என்பது தொன்று தொட்டு தொடங்கி, ”பெண் சமத்துவம்” கண்ட இன்றைய காலத்திலும் தொடரத்தான் செய்கிறது. கணவன் டூர் போனாலோ, அல்லது ஆஃபீஸ் பார்ட்டி என்றாலோ வீட்டில் சமைப்பதே இல்லை பல பெண்கள். சோம்பேறித்தனம் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் உண்மையில் தன்னைக் குறித்த அலட்சியமே காரணம்.

ஆண் எவ்வளவு செலவு செய்தாலும், அது அவன் சம்பாத்தியம் என்பதால், கண்டுகொள்ளப்படுவதில்லை. (பெண் சம்பாதித்தாலும் அது அவளது ஆணுக்குரியதே இங்கு).  பெண்கள் சிக்கனமாக இருப்பது அவர்களின் திறமைக்குச் சான்று என்ற சமூக எண்ணமும் காரணம்.  அதன் வெளிப்பாடுதான் சேர்த்த பணத்தைச் சிக்கனமா, செலவு பண்ண பக்குவமா, அம்மா கையில கொடுத்துப் போடு செல்லக்கண்ணு... அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு!’ என்பதும்!!

அந்த எண்ணம் பெண்களுக்கும் ஊறிப்போனதினாலோ என்னவோ, மற்றதைவிட தமது உணவில் அந்தச் சிக்கனத்தை அதிகமாகக் காட்டுகிறார்கள்போல.... சிலசமயங்களில் எனக்கும் அது அதீதமாகிப் போய், “மட்டனே இல்லாமல் மட்டன் குழம்பு” வைக்குமளவு ஆகிப் போயிருக்கிறது!! 

ப்படியான சூழலில், கடந்த சில வாரங்களாக “பேலியோ டயட்”டுக்கு மாறியிருக்கிறேன்.  இதில்,  அரிசி, கோதுமை போன்ற தானிய வகைகளை முற்றிலும் தவிர்த்து, அசைவ உணவு, காய்கறிகள் மற்றும் நெய்-வெண்ணெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் போன்றவைகளை அதிகமாக எடுக்க வேண்டும்.  பொதுவாக பெண்கள், குழம்பு-கறி-பொரியல் வகைகளைக் குறைவாக எடுத்துக் கொண்டு, அதை ஈடு செய்யுமளவு சோறு-இட்லி-சப்பாத்தி போன்றவைகளை உண்டுகொள்வார்கள்.  

ஆனால், இந்த டயட்டில் சோறு-இட்லி-சப்பாத்திக்கு இடமில்லை என்பதால், முன்பு தொடுகறியாகக் குறைவாக உண்டவற்றை இப்போது வயிறு நிறைய உண்ண வேண்டியுள்ளது. உண்மையில் இது மனதளவில் ஒரு  குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதுதான் அதிர்ச்சி!! அந்த மனத்தடையைத் தாண்டி வந்து, தேவையான அளவு உண்ணுவதற்கு மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டி இருக்கிறது. 

எனக்கு மட்டுமல்ல, இந்த டயட்டைப் பின்பற்றும் சில பெண்களிடம் பேசியபோதும் இதையே உணர்ந்தேன். அதற்கு இன்னுமொரு காரணம், அசைவ உணவுகளின் விலையும் ஒரு காரணம். காலங்காலமாக சிக்கனம் பெண்களின் பொறுப்பு என்ற எண்ணம் ஊறிவிட்டதால், ஆரோக்கியத்தைவிட செலவு பெரிதாகத் தெரிகிறது.  ஆகையால், இந்த டயட்டை ஆரம்பிக்கும் பெண்கள் பலரும், தேவையான அளவு எடை குறைந்தவுடன் விட்டுவிட்டு பழைய டயட்டுக்குத் திரும்பி விடுகிறார்கள்.  ஆண்கள் பொதுவாக ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், விலையைப் பொருட்படுத்துவதில்லை. மேலும், முறையான திட்டமிடல் இருந்தால் செலவு அதிகமாவதில்லை.

பெண்களுக்குப் பொதுவாக அதிகமாக இருக்கும் இரும்புச் சத்து குறைபாடு, கால்ஷியம் குறைபாடு ஆகியவற்றிற்குக் காரணம் அவர்கள் பால் பொருட்கள், அசைவம் மற்றும் காய்கறி வகைகளைக் குறைவாக உண்ணுவதே முக்கியமான காரணம்!! இக்குறைபாடுகளைத் தவிர்க்க மாத்திரைகளை நாடுமளவுக்குத்தான் இன்றும் பெரும்பாலான பெண்களின் நிலை உள்ளது. 

இந்த டயட்டைக் குறித்து நான் வாசித்தவரை, முறையாகப் பின்பற்றினால், மருந்து மாத்திரைகள் அல்லாமல், உண்ணும் உணவே இயற்கையாக உடலின் இரும்புச் சத்து, கால்ஷியம்தேவைகளைப் பூர்த்தி செய்யும்!! தேவையற்ற கொழுப்பிலிருந்து உடலைக் காக்கவும் செய்யும். இதற்காகவாவது பெண்கள் இவ்வுணவு முறையை பின்பற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், பெண்களால் - இந்தியப் பெண்களால்- முடியுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!!

Post Comment

13 comments:

துளசி கோபால் said...

வீட்டில் கணவன் & மனைவி இருவரும் பேலியோவுக்கு மாறினால் சமாளிக்கலாம். இல்லையெனில் குறிப்பாக கணவன் மட்டும் பேலியோவுக்கு மாறலைன்னா ரொம்பக் கஷ்டம். ரெண்டு சமையல் செய்யப் பொறுமை இல்லை :-(

Angel said...

நானும் பேலியோ தான்ப்பா சமீபத்தில் தான் ஆரம்பிச்சேன் .ரொம்ப கஷ்டப்பட்டு பல வருஷமா தொடாத முட்டை ,பால் மட்டும் சாப்பிடறேன் .கூட்டா சாப்பிட்ட எல்லா காய்களும் தட்டு நிறைச்சி இப்போ .வின்டருக்கு தான் நம்மூர்ர் கீரை கிடைக்குமான்னு தெரில ..இன்னும் அங்கே போஸ்ட் போடல்லை .ஆனா உடம்பு ரொம்ப ஹெல்த்தியா இருக்கு ..அலர்ஜி முந்தி அடிக்கடி வரும் அதெல்லாம் இல்லவேயில்லை இப்போ ..BECAUSE wheat ,whole grain chapatti flour ,quinoa ,soy were the main cause of my food allergies .

ஸ்ரீராம். said...

என்னவோ டயட் எல்லாம் சொல்கிறீர்கள். ரஞ்சனி மேடம் கூட இதுபற்றி எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். எங்களுக்கு இதெல்லாம் தெரியாது! பச்சைக் காய்கறி, ஓட்ஸ் கஞ்சி டயட்தான் எனக்கு!

Flavour Studio Team said...

நானும் இந்த டயட் முறை பின்பற்றி குறைந்த காலகட்டத்துலயே கணிசமான எடைக்குறைத்தேன் ஹுசைனம்மா.. ஆனால் இரட்டை சமையல் பெரும்பாரமாக தெரிவதாலும் (இது எடை குறைஞ்ச பின் என்பது முக்கியமான தகவல் :p) எடைக்குறைப்பு இலக்க அடைந்து விட்டதாலும் நார்மல் உணவுக்கே திரும்பிட்டேன்..

குடும்பத்தில் அனைவரும் பேலியோக்கு மாற்ற ஆசை இருந்தாலும் எகிறும் பட்ஜெட்ட நினைச்சா பகீர்ன்னு சொல்லுது.... :(

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார்!! டயட் பற்றி மட்டுமா எழுதிருக்கேன்? பெண்கள் உணவுப் பழக்கம் குறித்தும் எழுதிருக்கேனே... அதைப் பற்றியும் கருத்து சொல்லுங்களேன்... :-)

துளசி டீச்சர் & ஏஞ்சலின் நீங்களும்தான்!! :-)

ஸ்ரீராம். said...

கணவனின் இலையில் மிச்சம் வைத்துச் சாப்பிடும் வழக்கங்கள் எங்கள் வீட்டில் இல்லை. இப்போதெல்லாம் எங்கும் இருக்காது என்றே நம்புகிறேன். நீங்கள் சொல்வது போல பெண்களை தியாகம் செய்ய மனதளவில் தயார் செய்து விடுகிறார்கள் என்றுதான் தோன்றுகிறது. என் அம்மாவும் அப்படித்தான் இருந்தார். 'அரச்சவளுக்கு அம்மி' என்பார் அடிக்கடி. அதாவது (சமையல்) செய்தவர்களுக்குக் கடைசியில் எதுவும் பெரிய அளவில் மிஞ்சாது என்பதைப் போல. இன்னொன்று சொல்ல வேண்டும். வீட்டில் நான் அடிக்கடி சமைப்பேன். சமைத்த எனக்கு அதை உடனே அல்லது முதலில் சாப்பிடப் பிடிக்காது; தோன்றாது. எல்லோரும் சாப்பிடுவதைப் பார்த்து ரசிக்கவே தோன்றும். நிச்சயம் வெள்ளை எலி சோதனை அடிப்படையில் இல்லை. அவர்கள் நாம் சமைத்ததை எப்படி ரசிக்கிறார்கள் என்று பார்ப்பதில் ஒரு சுவாரஸ்யம்.

பெண்களின் பாதி வியாதிகள் உண்டி சுருங்குதலால் அல்லாமல், ஸ்ட்ரெஸ் எனப்படும் மன பாதிப்பால் வருவதாகக் கூட இருக்கக் கூடும். அந்தக் காலத்து நம் சமையல்களில் மிளகு, சீரகம், பெருங்காயம் போன்றவை காரணமாகவே சேர்க்கப் பட்டன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மருத்துவ குணம். மாதத்துக்கு ஒருமுறை பாட்டி கொழுந்து வேப்பிலைப் பறித்து அம்மியில் அரைத்துத் தருவாள். இந்தக் காலத்தில் எல்லாமே ஆகாத உணவாகி விட்டது. வேலைக்குப் போகும் பெண்கள் பாதி நேரம் ஒரு வாரத்துக்குச் சமைத்து கு.சா.பெட்டியில் வைத்து உபயோகிக்கிறார்கள். யாரைச் சொல்லி என்ன பயன்? நம் வழக்கு தீர்வதில்லை...!

ஸ்ஸ்ஸ்... அப்பாடா... மூச்சு வாங்குது...

ஹுஸைனம்மா said...

ஏயப்பா.. வாசிக்கிற எனக்கே மூச்சு வாங்குது.... இருங்க, கொஞ்சம் கழிச்சு வந்து பதிலளிக்கிறேன் சார்!! :-)

வெங்கட் நாகராஜ் said...

உண்டி சுருங்குதல்..... நல்ல கட்டுரை.

Unknown said...

நல்லா இருக்கு இந்த பதிவு :)

Ranjani Narayanan said...

//மற்றவர்களுக்குப் பிடிக்காததால் உண்ண மறுத்ததை வீணாக்கக்கூடாது என்று அவற்றையும் உண்டு எடையைக் கூட்டிக் கொள்வதும் ஒருபக்கம் நடக்கிறது.// என்னைப் பற்றித்தான் எழுதியிருக்கீங்களா?


எங்க வீட்டுல நான் அடிக்கடி சொல்கிற வசனம்: 'சமைக்கறத விட எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும், காலியான பாத்திரங்களை கொண்டுபோய் தேய்க்க போடும்போது வரும் சந்தோஷம் பெரிது' என்பது தான். பெண்களுக்கு மிச்சம் மீதி தான்.
ஆனா பேலியோ ஆரம்பித்ததிலிருந்து எனக்கு என்று சமைத்துக் கொள்ளுகிறேன். சுடச்சுட சாப்பிடுகிறேன். எப்போதும் குற்ற உணர்ச்சி வருவதில்லை. ஆனா கணவரிடம் வெண்ணெய் வேணும், பனீர் வேணும், சீஸ் வேணும் அப்படீன்னு சொல்லும்போது அதிகம் செலவாகுதேனு மனசுக்கு சங்கடமாத் தான் இருக்கு.என்னோட அக்கா மாதிரி வேலைக்குப் போயிருந்தா இப்போது பென்ஷன் வரும். கவலைப்படாம பாதாம் வாங்கிக்கலாம் அப்படின்னும் தோணுது. Late realization!


ஆனா உடம்பு லேசா ஆகியிருக்கிறது; சுறுசுறுப்பு அதிகமாகியிருக்கிறது. சமீபத்துல அக்கா பாத்துட்டு இளைச்சிருக்கியேன்னு சொன்னா. சந்தோஷமா இருந்தது. என்னோட பிரச்னை மாதத்திற்கு ஒருமுறை சென்னை போய் வருவது. அப்போதெல்லாம் பேலியோ கட்! இரண்டு மாதமாகத்தான் பேலியோ கடைப்பிடித்து வருகிறேன். மொத்தமாக 5 கிலோ குறைந்திருக்கிறேன்.

சைவர்களுக்கு ரொம்பவும் குறைந்த ஆப்ஷன்ஸ் இந்த டயட்டில். அதனாலும் எடை அத்தனை அதிகமாக எடை குறைவதில்லை என்று நினைக்கிறேன்.

ஆனாலும் விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

சிக்கனமாக இருப்பது பெண்களின் திறமைக்கு சான்று - சரியாகச் சொன்னீர்கள்.
ரொம்ப நன்றாக எழுதியிருக்கிறீர்கள், ஹூசைனம்மா, பாராட்டுக்கள்.
@ஸ்ரீராம் 'அரச்சவளுக்கு அம்மி' இன்றுதான் கேள்விப்படுகிறேன்.

ஹுஸைனம்மா said...

ஸ்ரீராம் சார்!! சமைத்தவுடன் உண்ண ஆர்வம் வருவதில்லை என்பது உண்மையே. எங்க ஊரில் விருந்து விசேஷங்களில் ச்மைக்கும் ஆண் சமையல்காரர்கள், விருந்தை உண்ணாமல் தங்கள் வீட்டிற்குப் போய் மனைவி சமைத்ததை உண்ணுவார்கள்.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் பாதிப்புக்குள்ளானதில் சமையலும் ஒன்று. நானும் வேலைக்குப் போகும்போது, வீட்டு சமையலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், மாலை முழுவதும் சமையற்கட்டில்தான் கழியும்!! ஒரு சமயம், கடையில் வாங்கியோ பழையதையோ உண்ணும்போது மிகுந்த குற்ற உணர்வு வரும்.

கணவனின் இலையில் உண்ணும் பழக்கம் இப்போது இல்லையென்றாலும், தன் தட்டில் அதிகமான உணவை, மனைவி வீணாக்காமல் நிச்சயம் தானே உண்டு விடுவாள் என்பதாலேயே மிச்சம் வைக்கும் கணவன்மார்கள் இப்போதும் உண்டு!!

ஹுஸைனம்மா said...

ரஞ்சனி மேடம்!! கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்!!

// 'சமைக்கறத விட எல்லோரும் சாப்பிட்டு முடிச்சதும், காலியான பாத்திரங்களை கொண்டுபோய் தேய்க்க போடும்போது வரும் சந்தோஷம் பெரிது'// - ரொம்ப கரெக்ட் மேடம்.

நான் எனக்கென்று தனியாக சமைப்பது அவ்வளவாக இல்லை. மற்றவர்களுக்கு வைக்கும் கூட்டு, பொறியல், குழம்பு ஆகியவற்றையே கொஞ்சம் அதிகமாக சமைத்து சாப்பிடுகிறேன். சில சமயங்களில் தனியாக சமைக்க வேண்டி வருவது கடுப்பாக இருக்கும். ஒரு சில சமயங்களில், அவகடோ, ப்ரக்கோலி போன்ற விலை அதிகமானவற்றை எனக்கு மட்டுமே வாங்கும்போது சங்கடமாக இருக்கும்.

கணவரும் (கிட்டதட்ட) பேலியோவில் இருக்கிறார் என்பதால் ரொம்பவே வசதியாக இருக்கீறது.

கோமதி அரசு said...

துளசி சொல்வது போல் கணவரும், மனைவியும் ஒரே மாதிரி உணவு பழக்கம் கை கொள்வது வசதிதான். இல்லை என்றால் நமக்கு ஒரு சமையல் அவர்களுக்கு ஒரு சமையல் என்றால் கஷ்டம் தான். கணவருக்கு , குழந்தைகளுக்கு வரும் உறவினர்களுக்கு என்று பிடித்ததைப் பார்த்து பார்த்து செய்யும் நாம் நமக்கு என்றால் செய்ய வணங்காது.

ஸ்ரீராம் சொல்வது போல் நாம் சமைத்த உணவை மற்றவர்கள் ரசித்து சாப்பிட்டாலே நாம் சாப்பிட்டது போல் ஒரு மனநிறைவு வந்து வயிறு நிறைந்து விடும்(மனமும்)

வீணாகுது என்று அதிக உணவை உண்பதும், உடல் உழைப்புக்கு ஏற்ற உண்வை உண்ணது இருப்பதும் தப்புதான். எல்லோருக்குமே உண்டிசுருங்குதல் நல்லது தான்.
அருமையான பதிவு .



.