Pages

பாஸானா என்ன, ஃபெயிலானா என்ன




ல்லூரிப் படிப்பு முடிந்ததும், அதே கல்லூரியில் இரண்டரை வருடங்கள் போல ஆசிரியையாக வேலைப் பார்த்த சமயம் அது.  சம்பாதித்துக் கொண்டே படிப்பது போன்ற இரண்டாம் கல்லூரி காலம் அது.  அதே கல்லூரி என்பதால், படிக்கும்போது இருந்ததைவிட அதிக ஜாலியாக இருந்தது.

ஒரு நாள்  வேறு துறையைச் சேர்ந்த ஒரு மூத்த பேராசிரியர் திடீரென்று என்னை வரச் சொன்னார். அப்படியொரு ஆசிரியர் அங்கு இருக்கிறார் என்பது முன்பே தெரியும் என்றாலும், வேறு துறை என்பதால் எனக்கு எந்த சம்பந்தமும் இல்லாத ஒருவர் எதற்கு வரச் சொன்னார் என்று குழப்பத்தோடு சென்றேன். 

சென்றதும் நலம் விசாரித்துவிட்டு, “ஏம்மா, இந்த வருஷம் உங்க ஊர்லருந்து ஒரு பையன் நம்ம காலேஜ்ல சேந்திருக்கானே, உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். அவ்வ்வ்... அதெல்லாம் யாருக்குத் தெரியும்.. நான் உண்டு, என் வேலை உண்டு, வகுப்பெடுக்கும் நேரம் போக, என் சக தோழியரோடு மாணவிகளையே மிஞ்சுமளவுக்கு நாங்கள் அடிக்கும் கொட்டம் உண்டு என்று “அடக்கமாக” இருக்கும் எனக்கு அதெல்லாம் எப்படித் தெரியும்? “நான் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  பாடம் எடுக்கிறதில்லை சார்” என்று ”பொறுப்பாக”ப் பதில் சொன்னேன்.

சிரித்துவிட்டு, “சரி போகட்டும். இன்ன வகுப்பில் இன்ன மாணவன்தான் உங்க ஊர்க்காரன். அவன் அப்பா என்னைப் பார்க்க வந்திருந்தார். படிப்பு கஷ்டமாருக்கு, இனி காலேஜுக்கு வரமாட்டேன்னு பையன் சொல்றானாம். அவர் வந்து வருத்தப்பட்டார். உங்க ஊர்ப் பையந்தானே, நீங்க பேசிப்பாருங்களேன்” என்றார்.

”கண்டிப்பாப் பேசுறேன் சார்”னு சொல்லிட்டு வந்தேன்.

ரசு பொறியியற் கல்லூரிகளில், இப்போது போலவே அப்போதும் அட்மிஷன் கிடைப்பது கொஞ்சம் சிரமமே . நுழைவுத் தேர்வு இருந்த காலம் என்பதால், ப்ளஸ் டூ மார்க் மட்டுமல்லாது, நுழைவுத் தேர்விலும் சிறப்பான மதிப்பெண் பெற்றால்தான் அரசு கல்லூரியில் இடம் கிடைக்கும். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளும் மிக மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் அன்று இருந்தன. 

தமிழ்வழி பள்ளிக்கூடங்கள்தாம் அதிகம் அன்று. ஆங்கில வழி பள்ளிகளில் படித்தவர்களுக்கே, பொறியியற் கல்லூரிகளின் டெக்னிக்கல் ஆங்கிலம் வெகு சிரமப்பட்டுத்தான் ”கை வரும்”.  என் உடன் படித்த மாணவர்களில், வேறு துறையில் ஒரு மாணவி இரண்டாம் வருடத்தோடு படிப்பை நிறுத்தி விட்டாள். ஒரு மாணவர் பாஸ் பண்ண முடியாமல் (Break system இருந்ததால்) மூன்றாம் வருடம் தற்கொலை செய்துகொண்டார்.  அதற்கு முன்பும் சில சீனியர் மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இறுதி வருடம் படிக்கும்போது ஒரு பரிட்சை நாளன்று பரிட்சை தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன், இன்னொரு மாணவி படித்தது எதுவுமே நினைவில் இல்லை என்று, நானும் இன்னொரு தோழியும் எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அழுதுகொண்டே வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள்.

தெல்லாம் நினைவுக்கு வர, உடன் அம்மாணவனைச் சந்தித்து, அவனிடம் மற்ற விபரங்கள் எதுவும் கேட்காமல், சும்மா பேசுவதுபோல பேசினேன். அதே ஆங்கிலப் பிரச்னைதான். என் துறை என்பதால், என்னுடைய நோட்ஸ், புத்தகங்களைக் கொடுத்தேன்.

பேராசிரியரும் அவனை அழைத்து வைத்து பேசி, ஆலோசனைகள் தந்தார் என்று அறிந்தேன்.  பின்னர் மேற்படிப்பும் முடித்து, தற்போது நல்லதொரு வேலையில் இருப்பதாகக் கேள்வி. :-)

இது எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கதைதான். இது போல எத்தனை பேர்களை அவர் கைகொடுத்து தூக்கிவிட்டாரோ!!

ப்போ இந்த கொசுவர்த்தி ஏன்னு கேட்டா.... சென்ற வருட கல்வி ஆண்டு ஆரம்பத்தில் உறவினர் ஒருவர், அவரது நெருங்கிய நண்பர் - மிக வசதிக் குறைவானவர், பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர் - தனது மகனுக்கு கவுன்சலிங் வழியாகவே ஒரு முன்ணணி அரசு கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டதாக மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதாகச் சொன்னார். “அப்பாவோட கஷ்டம் புரிஞ்சு, நல்ல காலேஜ்ல இடம் கிடைக்கிற அளவுக்கு மகன் நல்லாப்  படிச்சுட்டான்” என்று உறவினர் சந்தோஷப் பட்டார்.

அது மிகவும்  பிரபல கல்லூரி என்பதால், அதில் இடம் கிடைக்குமளவு சிரமப்பட்டு படித்த மாணவனின் உழைப்பை நாங்களும் பாராட்டி பேசிக் கொண்டோம். உறவினரும், நண்பனின் மகனுக்கு தேவையான சில கல்வி சாதனங்கள் வாங்கி பரிசாக அனுப்பி வைத்தார்.

சென்ற மாதம் இந்தியா சென்று வந்த அவர், அந்த அதிர்ச்சிச் செய்தியைச் சொன்னார். ஆம், அந்த மாணவன் மொழி மற்றும் பாடம் சிரமமாக இருக்கிறது என்பதால் படிக்க முடியாது என்று திரும்பி வந்துவிட்டானாம்!!

மாணவனின் தந்தை சென்று ஆசிரியர்களைப் பார்த்துப் பேசியபோது, அவர்களோ ”சார், அவன் படிக்க முடியாதுன்னு சொன்னா நீங்க கட்டாயப் படுத்தாதீங்க. சில பசங்க இப்பிடித்தான் சீட் கிடைச்சிதுன்னு படிக்க வந்துட்டு, அப்புறம் படிக்க முடியலைன்னு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அதனால நீங்க உங்க பையனைக் கூட்டிட்டு போயிடுறதுதான் நல்லது” என்று சொன்னார்களாம்!!

குறிப்பிட்ட மாணவன், தேர்வுகளை எழுதி,  நல்ல மதிப்பெண்கள் பெற்றதால்தான் அந்தக் கல்லூரியில் சேர முடிந்திருக்கிறது. அப்படியொன்றும் படிக்க முடியாத தகுதியற்ற மாணவன் அல்ல. விருப்பமில்லாமல் சேர்ந்த படிப்பும் அல்ல. மிகவும் விரும்பி ஆசைப்பட்டுத்தான் சேர்ந்திருக்கிறான். சற்றே பட்டை தீட்டினால் வைரமாய் ஜொலித்திரா விட்டாலும், இமிடேஷன் கல் அளவுக்காவது ஆகியிருக்க மாட்டானா?

எந்த விசாரணையும் இல்லாமல், “தற்கொலை செஞ்சுக்கப் போறான்” என்று தீர்ப்பையும் இவர்களே வழங்கிவிட, பதறிப் போன அந்த பாவப்பட்ட தந்தை, “நீ படிக்கவே வேணாம் ராசா. நான் வச்சு காப்பாத்தறேன் வா”ன்னு கூட்டிட்டு கெளம்பிட்டார்!! :-(

நான் கல்லூரி படிக்கும்போது, ஒரு ஆசிரியர் - மிக நல்லவர், மாணவர்கள் தம் பொறுப்புணர்ந்து படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் - அடிக்கடி வகுப்பில், “நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை. ” என்பார். அதுதான் நினைவுக்கு வருகிறது.

Post Comment

3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

மாணவர்களைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம்.

எனக்குத் தெரிந்த ஒருவருக்கு மூன்று பிள்ளைகள். மூவரில் நடுப்பையன் படிப்பில் எப்போதுமே நம்பர் ஒன் ஆக வந்துகொண்டு இருந்தான். மூவரும் மேற்படிப்பு தொழிற்கல்வி கற்றனர். படிப்பு முடிந்ததும் மூவரும் வெவ்வேறு ஊர்களுக்கு வேலைக்குச் சென்றனர்.

மிக நன்றாகப் படித்து கேம்பஸ் செலக்‌ஷன் ஆகி வேலைக்குச் சென்ற நடுப்பையன் ஓராண்டுக்குள் அந்த நல்ல வேலையை + நல்ல சம்பளத்தை விட்டுவிட்டு ஓடி வந்துவிட்டான். உள்ளூரில் குறைந்த சம்பளத்தில் ஏதேதோ வேலைக்குச் சென்றான். எல்லாவற்றையுமே ஓர் ஆறு மாதங்களுக்குள் விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தான்.

இப்போது எந்த வேலைக்குமே போகாமல் ஓர் மன நோயாளிபோல வீட்டில் இருந்து வருகிறான். உலகத்தாருடன் ஒட்டி அனுசரித்து நடக்க அவனால் இயலவில்லை.

மற்ற இரு மகன்களும் படிப்பில் கொஞ்சம் அவனைவிட சுமார்தான் என்றாலும், நல்ல வேலைகளில் அமர்ந்து இன்று கை நிறைய சம்பாதித்து வருகிறார்கள். உழைப்பால் உயர்கிறார்கள். உலகம் தெரிந்து நடந்துகொள்கிறார்கள்.

எனவே நல்ல படிப்போ, நல்ல மார்க்குகளோ, நல்ல வேலையோ, நல்ல சம்பாத்யமோ எதுவும் யாருக்கும் நிரந்தரம் இல்லை. மூளையுடன் நன்கு உழைக்கவும், உலகோடு ஒட்டி வாழவும் பழகிக்கொள்ள வேண்டும் என்பதே மிகவும் முக்கியமாகும்.

Jaleela Kamal said...

நல்லதொரு பகிர்வு.

பானு said...

ஆரம்பம் முதல் இறுதி வரை அதிர்ச்சி...

// நீ பாஸ் பண்ணாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் கூடப் போறதில்லை; நீ ஃபெயிலானாலும் வாத்தியார்களுக்கு சம்பளம் குறையப் போறதில்லை//

இப்படி கூறுவதால் ஆசிரியர்களின் பொறுப்பின்மைதானே வெளிப்படுகிறது?? நமக்காக ஆசிரியர்களும் உதவப்போவதில்லை என்றுதானே மாணவர்கள் புரிந்துகொள்வர்??? :(