Pages

உயிர்ப்பித்தல்




லறிக் கொண்டே வேகமாக வந்த ஆம்புலன்ஸ் பிரேக் அடித்து நிலைய வாசல் முன் நின்றது.... வேக வேகமாக வந்த ஊழியர்கள், ”சிறப்பு நோயாளியை” ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, சிகிச்சை அறைக்கு எடுத்துச் சென்றார்கள். தயாராக இருந்த மருத்துவர்கள், தம் பணியைத் தொடங்கினார்கள்.
அது என்ன சிறப்பு நோயாளி? முதலில், வந்தது நோயாளியே அல்ல, நோயால் இறந்து போய்விட்ட பிணம்!! இதென்ன மற்றொரு “ரமணா” கதையா என்று யோசிக்கிறீர்களா? இல்லை, உயிர்போன பின்புதான் இங்கு கொண்டு வருவார்கள். ஆகையால் ஏமாற்று வேலை ஒன்றும் இல்லை. எனில், என்ன செய்கிறார்கள் உயிரற்ற உடலை வைத்து? உறுப்பு மாற்று சிகிச்சையா? மூச்...அதெல்லாம் செய்ய முடியாது இங்கு.
முதலில் அந்த உடலில் இருக்கும் இரத்தத்தை வெளியேற்றி.... வெயிட், வெயிட்!! எம்பால்மிங்-லாம் இல்லை.... இது வேற லெவல்... பொறுமையா வாசிங்க! இரத்தத்தை முழுமையாக வெளியேற்றிவிட்டு, உடல் பாகங்கள் உறைந்து போகாதிருக்கவும், கெட்டுப் போகாதிருக்கவும் தேவையான சிறப்பு மருந்து கலவையை உடலின் ஒவ்வொரு இண்டு இடுக்குக்கும் பரவுமாறு செலுத்துவார்கள். இப்போது, கண்ணாடி போல உள்ளிருப்பது தெரியக்கூடிய “vitreous" நிலைக்கு மாறியிருக்கும் உடலை, பெரிய ஃப்ளாஸ்க் போன்ற குடுவையில், -196 டிகிரி செல்சியஸில் இருக்கும் திரவ நைட்ரஜனில் வைப்பார்கள். இப்போ குடுவையை மூடிவிட்டுப் போய்விடுவார்கள்.
ப்போ திறப்பார்கள், உடலை எப்போ வெளியே எடுப்பார்கள்? யாருக்குத் தெரியும்? உள்ளே வைக்கும் அவர்களுக்கே தெரியாது எனும்போது, உங்களுக்கும் எனக்கும் எப்படித் தெரியும்?
என்ன குழப்புதா? இறந்து போன இந்த உடல், “CRYONICS” என்ற முறையில் கடுங்குளிர் நிலையில் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது!! ஆனால், இது எம்பால்மிங் அல்ல. எம்பால்மிங் உடலை அடக்கம் செய்யும் வரை பாதுகாப்பதற்காகச் செய்யப்படுவது. “CRYONICS” என்பது - தொடர்ந்து வாசிக்குமுன் மனதைத் திடப்படுத்திக் கொள்ளுங்கள் - இறந்தவரை மீண்டும் உயிர்ப்பிக்கும் வரை அவ்வுடலைக் கெட்டுப் போகாமல் பாதுகாக்க செய்யபடுவது!!
ஙே....!!! ஆனால், அதுதான் உண்மை!!
#CRYONICS” என்றால் மிக மிக மிகக் குறைந்த வெப்பநிலையில் பாதுகாப்பது (குறைந்த பட்சம் -136 டிகிரி செல்ஷியஸ்) என்று பொருள். 1962-ல் Robert Ettinger என்பவர், இறந்து போனவரை உயிர்ப்பிக்கும் மருத்துவ முன்னேற்றம் எதிர்காலத்தில் சாத்தியமாகும் என்றும், அந்த கண்டுபிடிப்புகள் சாத்தியமாகும்போது, உயிர்ப்பிப்பதற்காக இறந்த உடல்களை உறைய வைத்து பாதுகாக்கலாம் என்றும் The Prospect of Immortality என்ற தனது புத்தகத்தில் எழுதினார். அதற்கு முன்பும், பின்புமான ஆய்வுகளைத் தொடர்ந்து, முதல் உடல் 1967-ல் உறைய வைக்கப்பட்டது.

தற்போது, இந்த “உயிர்ப்பித்தல்” ஐடியா அமரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பரவி வருகிறது. அமெரிக்காவில் இரண்டு நிறுவனங்கள் மற்றும் ரஷ்யாவில் ஒரு நிறுவனம் இந்தச் “சேவையை” வழங்கிவருகின்றன. அமெரிக்காவின் Alcor Life Extension Foundation நிறுவனம், முழு உடலைப் பாதுகாக்க $200,000 -மும், தலையை மட்டும் பாதுகாக்க $80,000 One time fees ஆக வாங்குகிறது. ரஷ்யாவின் KrioRus நிறுவனம் உடலுக்கு $36,000, தலைக்கு $18,000 கட்டணம் பெறுகிறது.
தலைதானே உடலுக்குப் பிரதானம். மூளையில்தான் எல்லா செய்திகள் - தகவல்கள் -அறிவுசார் விஷயங்கள் பதிந்து காணப்படுகின்றன. உயிர்வாழ, மூளை மிக அவசியம். அல்லது மூளை மட்டுமாவது அவசியம் என்பதால், பொருளாதார காரணம் கருதி தலையை மட்டும் பாதுகாக்கிறார்கள். உயிர்ப்பிக்கும் தொழில் நுட்பம் வந்ததும், மூளையிலிருக்கும் தகவல்களை ஒரு ரோபோவில் டவுன்லோட் செய்து ரோபாவாக வாழலாமாம்!! அட, நீங்க சுவத்துல தலைய முட்டிக்காதீங்க.... உங்க மூளை சேதாரமாச்சுன்னா பதப்படுத்த முடியாது!!
இறந்தவரை உயிர்ப்பித்தல் என்பது எவ்வளவுக்கு சாத்தியம் என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி எனச் சொல்லலாம். சென்ற நூற்றாண்டில் சாத்தியமேயில்லை என்று உறுதியாக நம்பப்பட்ட எத்தனையோ விஷயங்கள் சாத்தியமாகும் அளவுக்கு இன்று தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியிருக்கிறது உலகம். ஆனால், எப்போது சாத்தியமாகும் என்பதும் விடை தெரியாத கேள்வியே.
சிக்கலான அறுவை சிகிச்சைகளின்போது, மூளைக்கு இரத்தம் செலுத்த முடியாத நிலையில், பாதிப்பிலிருந்து பாதுகாக்க, மூளையை +20டிகிரி செல்ஷியஸுக்குக் கீழ் குளிர வைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஹைப்போதெர்மியா என்ற இந்த முறையில், அதிகபட்சம் அரை மணி நேரம் வரை அவ்வாறு வைத்திருக்கலாம்.
மாரடைப்பால் நின்று விடும் சில இருதயங்கள், அதிக அளவில் மின் அதிர்வு கொடுத்து மீண்டும் இயங்க வைத்திருக்கிறார்கள்.
மேலும், தற்போதைய மருத்துவ உலகில், விந்தணு, கருமுட்டை, embryo என்ற ஆரம்பநிலை கரு போன்றவை உறைநிலையில் வைக்கப்பட்டு, பின் தேவைப்படும்போது எடுத்து பயன்படுத்தப் படுகின்றன.
ஆகையால், பிற்காலத்தில் இதுவும் நடக்கலாம் என்று நம்புபவர்களும் உண்டு. பிறப்பும், இறப்பும் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரங்கள். அவற்றை மனிதன் வெற்றிக் கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை. அப்படியே செய்தாலும், முழுமையாக இராது. சில குறைபாடுகளோடுதான் சாத்தியம் என்போரும் உண்டு.

தொழில்நுட்ப ரீதியாக முடிந்தாலும், உளவியல் ரீதியாக இத்திட்டம் மன நலப் பாதிப்புகளையே ஏற்படுத்தும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். இறந்த ஒருவரை, கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழித்து உயிர்ப்பிக்கும்போது, அக்கால கட்டத்தோடு அவரால் பொருந்திப் போக முடியாது என்றும், தனக்குத் தெரிந்த யாருமே இல்லாத உலகில் உயிர்வாழ்வது மிகுந்த மன நெருக்கடியையே அவருக்குத் தரும்; ஆகவே இத்திட்டம் தொடரக்கூடாது என்றும் கடுமையாக எச்சரிக்கின்றனர்.
மனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.
ஆனால், இறந்த உடல் முழுதும் மண்ணோடு மண்ணாக மக்கிப் போனாலும், எரிந்து போனாலும், எதுவுமே இல்லாமல் மனிதர்களை உயிர்ப்பிப்பவன் இறைவன் ஒருவனே!! ஆனால், மனிதர்களின் அறிவை நம்புபவர்களால், இறைவனின் ஆற்றலை நம்பமுடியாது போகிறது!!
56:47. மேலும், அவர்கள்: “நாம் மரித்து மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகி விட்டாலும், நாம் மீண்டும் நிச்சயமாக எழுப்பப்படுவோமா?” என்று கேட்டுக் கொண்டு இருந்தனர்.
 
PS: டீக்கடை என்னும் முகநூல் குழுமம் நடத்திய அறிவியல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த கட்டுரை.
 

Post Comment

3 comments:

Angel said...

அங்கேயும் வாழ்த்தியாச்சு இங்கும் மறுபடியும் வாழ்த்துகின்றேன் ..தொடர்ந்து எழுதுங்கள் .

ஸ்ரீராம். said...

எகிப்தியர்கள் இந்த நம்பிக்கையில்தானே மம்மியில் உடலை வைத்து, செலவுக்கு பொன்னும், பொருளும் வைத்தார்கள்? உதவிக்கு ஒரு பணியாளரையும் சேர்த்துப் புதைத்ததாகவும் கூடக் கேள்விப்பட்டதாக நினைவு!

ரொம்ப நாட்களுக்குப் பிறகு பதிவு எழுதி இருக்கிறீர்கள். சுவாரஸ்யம். ஊர் திரும்பி விட்டீர்களா? தளத்தின் தோற்றம் கூட மாறியுள்ளதோ?

கோமதி அரசு said...

மனிதனுக்கு இறந்தவனை உயிர்ப்பிக்க வேண்டுமானால், இறந்த உடல் தேவை. அதற்கான தொழில்நுட்பங்கள் தேவை. எல்லாம் சரியாக இருந்தாலும், முழுமையாக வெற்றியடைவார்கள் என்றும் சொல்ல முடியாது.//

எதுவும் நடக்கும் விந்தை உலகில்.
இருக்கிறவர்கள் பத்தாது என்று மாண்டவர்களை உயிர்ப்பித்தல் வேண்டுமா என்று நினைத்தாலும், அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு உயிர்ப்பித்து கொடுத்தால் நல்லது தானே?

தொடருங்கள்.