Pages

ப்ராஜக்ட் காலம்




ரு காலம் அது... நிச்சயமாக இனிய கனாக்காலம் இல்லை!! பெரியவன் - சின்னவன் இரண்டு பேருக்கும் பள்ளியில் வாரத்துக்கொரு “ப்ராஜக்ட்” செய்யக் கொடுத்துக் கொண்டிருந்த “கஷ்ட்ட்ட்ட்ட்டக் காலம்” அது!! :-(
 
எப்போ, என்ன ப்ராஜக்ட் கொடுப்பார்கள் என்று தெரியாது, ஆகையால், பார்க்கும் படங்களையெல்லாம் (ஸ்டிக்கர்ஸ்) வாங்கிச் சேகரித்துக் கொள்வேன். படிக்கும் செய்தித் தாட்கள், இதழ்களிலெல்லாம் அழகான - அரிதான படங்கள் இருந்தால் உடனே “சின்னவனின் சோஷியல் சயின்ஸில் ஏழாவது பாடத்துக்கு ப்ராஜக்ட் கொடுத்தாங்கன்னா இந்தப் படம் தேவைப்படும்” என்றோ, பெரியவனுக்கு சயின்ஸில் பயாலஜிக்கு இந்தப் படம் வேணும் என்றோ, எங்கு, எதைப் பார்த்தாலும் “ப்ராஜக்ட் கண்” கொண்டு பார்த்த "இண்டர்நெட்-இல்லா" காலம் அது!! 

அவ்ளோ ஏன், ரெண்டு பெண்கள் சந்தித்தால், ஸ்கூல் ப்ராஜக்ட்ஸ் பத்தித்தான் பேசிக்குவோம்னா பாருங்களேன்!!

படங்கள் மட்டுமே ஒட்டச்சொல்லி ப்ராஜக்ட் கொடுத்தார்கள் என்றால் சமாளித்து விடுவேன். ஆனால், “மாடல்கள்” செய்யச்சொல்லி விட்டால் தொலைந்தேன்!! பின்னே, இட்லியைக்கூட சில சமயம் சொதப்பும் என்னிடம் - ”கலை” என்றால் கிலோ என்ன விலை கேட்கும் என்னிடம் வெட்டி, ஒட்டி, வரைந்து, மாடல் செய்யச் சொன்னால், என் செய்வேன் இப்பேதை?
எனக்கு மட்டுந்தான் ”கலை”யோடு பகைன்னா பரவால்லை, கணவர் - மகன்கள் எல்லாருக்குமேல்ல ஜென்மப்பகை!! ஒரு படத்தில் விஜயகாந்த் ”பாகிஸ்தான்” தீவிரவாதி வச்ச வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்ய பச்சை வயரைக் கட் பண்ணனுமா, சிவப்பு வயரைக் கட் பண்ணனுமான்னு கை நடுநடுங்க யோசிப்பாரே... .அதே பதட்டத்தோடு குடும்பமாக, இறுக்கமும், நடுக்கமுமாக சேர்ந்து உக்காந்து ப்ரஜாக்ட் செய்வோம்!!

ஆனா, எனக்கு ஒரேயொரு ஆறுதல் இதில் என்னன்னா.... எங்கூட்டுக்காரரால என் சமையலை குறை சொல்ல முடியாது. ஏன்னா, “ஆம்மா... நீங்க மட்டும் என்னவாம்... புள்ளைக்கு ஸ்கூல்ல அரண்மனை மாடல் செய்யச் சொன்னா, குச்சு வீடு செஞ்சு கொடுத்திருக்கீங்க"ன்னு பதிலுக்கு வாரிடுவேன்கிற பயம் இருக்கும்ல....


சின்னவன் எட்டாங்கிளாஸ் வந்ததும் துணிஞ்சுட்டேன்... இனி மாடல் ப்ராஜக்ட்லாம் சொன்னா செய்ய முடியாது... மார்க் போனாலும் பரவால்லன்னு முடிவெடுத்துட்டேன்!! அது டீச்சர்ஸ்கெல்லாம் தெரிஞ்சுதோ என்னவோ, அப்படிலாம் மாடல் எதுவும் கொடுக்கலை. அவங்க கொடுக்கலையா, இல்லை இவன் வீட்டில் வந்து சொல்லலியான்னும் தெரியலை. நானும் கண்டுக்கலை. கேட்டுக்கவுமில்லை. வாண்டடா எதுக்கு வண்டில ஏறனும்?

ந்த வருஷம் பத்தாங்கிளாஸ். பழைய புத்தகங்களையெல்லாம் களைந்து,  அலமாரியைச் சுத்தம் செய்வதற்காக அகழ்வாராயும்போது, இரண்டு பேருக்கும் செஞ்ச ப்ராஜக்ட்ஸ், மாடல்கள் சிலபலன்னு வெளியே வந்தன. அதையெல்லாம் பார்த்து நோஸ்டால்ஜியாவுல ஆழ்ந்து உணர்ச்சி வசப்பட்டு அதைத் தூரப்போட மனசில்லாமல் அழகா அடுக்கி வச்சு ஃபோட்டோ எடுத்துகிட்டேன். தேவைப்படும் யாருக்காவது கொடுத்து அவங்க பாரத்தைக் குறைக்கலாம்னு முடிவெடுத்து ஒரு பையில் பத்திரமா போட்டு வச்சுகிட்டு....

அடுத்த நாள் பேப்பர் பாத்தா..... அமீரக அரசு இனி பள்ளிகளில் மாணவர்களுக்கு ப்ராஜக்டுகள் கொடுக்கக்கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காம்!!!

http://gulfnews.com/news/uae/education/resource-intensive-homework-to-be-banned-1.2191081?utm_source=facebook&utm_medium=post

இந்த உத்தரவை ஒரு பத்து வருஷம் முன்னாடியே போட்டிருந்தா, எங்க குடும்பத்திலயும் சிலபல சண்டைகள் குறைஞ்சிருக்கும்ல???!!

தட் #மாவு_விக்கப்_போனா_காத்து_அடிக்குது_உப்பு_விக்கப்_போனா_மழை_பெய்யுது மொமண்ட்!!!

இப்ப அதெல்லாம் மறுபடி அலமாரில அடுக்கவா அல்லது குப்பையில் போடவா?

Post Comment

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சேர்த்து வையுங்கள்... அவைகள் பொக்கிஷங்கள்...!

Anuprem said...

என்ன கஷ்ட காலம் உங்க ப்ராஜெக்ட் காலம்...ஹா ஹா ரசித்தேன்..


ஆன எனக்கு ரொம்ப பிடிக்கும் ..இந்த மாதரி குப்பைகளை நிறைய சேர்த்து வச்சுருக்கேன்..வாலண்டியரா நானே பசங்களுக்கு செய்வது உண்டு...

கோமதி அரசு said...

பத்திரபடுத்தி வையுங்கள் நாளை உங்கள் நினைவுகளுக்கு.
நான் பத்தாவது ப்டிக்கும் போது வரலாற்றை சிறப்பு பாடமாய் எடுத்த போது எவ்வளவு ப்ராஜக்ட் வெளிய செய்து இருக்கிறேன்.
அது இன்னும் பத்திரமாய் நினைவாய் வைத்து இருக்கிறேன்.

கோமதி அரசு said...

//ஆனா, எனக்கு ஒரேயொரு ஆறுதல் இதில் என்னன்னா.... எங்கூட்டுக்காரரால என் சமையலை குறை சொல்ல முடியாது. ஏன்னா, “ஆம்மா... நீங்க மட்டும் என்னவாம்... புள்ளைக்கு ஸ்கூல்ல அரண்மனை மாடல் செய்யச் சொன்னா, குச்சு வீடு செஞ்சு கொடுத்திருக்கீங்க"ன்னு பதிலுக்கு வாரிடுவேன்கிற பயம் இருக்கும்ல....//

வாருவதில் எவ்வளவு இன்பம்.

Unknown said...

wantada wandila yeranum semma