தாய்லாந்து நாட்டில், கால்பந்து விளையாடச் சென்ற 13 சிறுவர்கள், தம் பயிற்சியாளரோடு சேர்ந்து வழியிலிருக்கும் மலைக்குகைகளைச் சுற்றிப் பார்த்து வரலாம் என்று ஆசையாக உள்ளே நுழைந்து பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மழை வர.... மழை விடும் வரை காத்திருப்போம் என்று ஒதுங்கினார்கள்!! ஆனால் மழை விட்டாலும், வெள்ளம் குகைகளில் புகுந்து விட, வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டார்கள்.
இதோ தண்ணீர் வடிந்து விடும், வெளியே போய்விடலாம் என்று காத்திருந்த நிலையில், வெள்ளம் மேலும் மேலும் அதிகரிக்க, உயிரைக் காப்பாற்ற குகையின் உள்பகுதிக்குச் சென்று உயரமான பகுதிகளில் ஏறி உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலை!!
குகை என்பது நாம் நினைப்பது போல சாதாரணக் குகை அல்ல. பத்து கிலோ மீட்டர் நீளம்; வளைந்து நெளிந்து செல்லும் பாதை; மேடு பள்ளம் என சமமில்லாத தளம்; பயிற்சியில்லாதவர்கள் உள்ளே போனால் சாதாரண நாளிலேயே மாட்டிக் கொள்ள நேரிடும். இப்போது மழை வேறு!!
உள்ளே போனவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே சந்தேகமாகிப் போன நிலையில், பத்து நாட்கள் தீவிர தேடுதலுக்குப் பின், அவர்களை உயிரோடு கண்டுபிடித்து விட்டார்கள்!! பத்து நாட்களாக உணவு எதுவும் உண்ணாமல், குளிரில் இருக்கும் அவர்கள் சோர்ந்து போயிருக்கிறார்கள்.
அதான் கண்டுபிடித்துவிட்டார்களே, வெளியே அழைத்து வரவேண்டியதுதானே என்றால்... அப்படிப்பட்ட சாதாரணமான குகை அல்ல.... தண்ணீரால் முழுதும் சூழப்பட்டுள்ளது என்பதால், தண்ணீர் வடியும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை!!
தண்ணீர் எப்போது வடியும்?
அதற்கு நான்கு மாதங்கள் வரை ஆகுமாம்!! அதுவரை குகைக்குள் இருப்பதைத் தவிர வேறு வழியில்லை அவர்களுக்கு!! வேறு வழிகளும் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதனால் பரபரப்பாக உள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன், தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் ஒரு பாலைவனச் சுரங்கத்திற்குள் 2300 அடி ஆழத்தில் 33 பேர் அகப்பட்டுக் கொள்ள, அவர்களை மீட்க இரண்டு மாதங்கள் ஆனது!! அதுவரை அவர்கள் அந்த இடிந்த சுரங்கத்திற்குள்தான் இருந்தார்கள்.
இச்சம்பவம் அதை நினைவு படுத்தினாலும், சிலியில் அனைவரும் நடுத்தர வயதுள்ள, பக்குவப்பட்ட ஆண்கள். ஆனால், தாய்லாந்து குகையில் இருப்பவர்களோ, 11 - 16 வயதிலான சிறுவர்கள்!! எப்படித்தான் தாக்குப் பிடிக்கப் போகிறார்களா? நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது!! இறைவன் இலகுவாக்குவானாக!!
______________________________________________________________
ஜூலை 10, 2018:
அனைத்துச் சிறுவர்களும், ஆசிரியரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்!! குகையில் சிக்கிய 18 தினங்களுக்குள் அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டது பேரதிசயம். இறைவனின் பெருங்கருணை!!
வீடியோ: https://www.youtube.com/watch?v=x_kiX0uUDNI
சிலி சுரங்கம் குறித்த எனது பதிவு:
http://hussainamma.blogspot.com/2010/09/blog-post.html
மேலதிகத் தகவல்களுக்கு:
https://www.bbc.com/news/world-asia-44692813
https://www.youtube.com/watch?v=2BpaaSzq3-I
https://edition.cnn.com/.../thai-rescue-next.../index.html
|
Tweet | |||
0 comments:
Post a Comment