Pages

கண்ணுறங்கும் காலம்!!








ஸ்லாமிய வரலாறுகள், ஹதீஸ்கள் வாசிக்கும்போதெல்லாம் அடிக்கடி நம் கண்ணில் படும் ஒரு விஷயம்,   நபி(ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் இரவில் அதிக நேரம் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்பதுதான். உதாரணமாக, கலீஃபா உமர்(ரலி) அவர்கள், இரவில் மூன்றிலொரு பகுதி முழுதும் தஹஜ்ஜத் தொழுதார்கள் என்று வாசித்த போது ஆச்சரியம் தாளவில்லை எனக்கு!!
ஓர் இரவின் மூன்றிலொரு பகுதி என்பது குறைந்தது இரண்டு மணி நேரம் என்று வைத்துக் கொண்டாலும்எப்படி அவர்களால் அவ்வளவு நேரம் தொழ முடிகிறது என்று யோசிக்கத் தோன்றுகிறதல்லவா?
நமக்கெல்லாம் சுபுஹூ தொழ எழும்பவே மிகக் கஷ்டமாக இருக்கும்.  கட்டாயத்துக்காகத்தான் சுபுஹுவே எழுந்து தொழுகிறோம். இதில் எங்கே தஹஜ்ஜத் தொழ? அப்படியே தொழுதாலும், சுபுஹுவுக்குப் பத்து நிமிஷம் முன் எழுந்து அவசர அவசரமாகத் தொழுமளவுதான் இருக்கிறது நம் நிலை.
அதிலும் உமர்(ரலி) அவர்கள் தஹஜ்த் தொழுவது மட்டுமல்லஇரவின் இன்னொரு  மூன்றிலொரு பகுதியில் நகர்வலமும் சென்று வருவார்களாம்.
அப்படின்னா அவர்கள் இரவில் தூங்குவதே இல்லையோ என்று சந்தேகம் வருமல்லவா? எப்படி அவர்களால்  போதிய தூக்கமில்லாமல் தாக்குப் பிடிக்க முடிகிறது?
ருத்துவ உலகம், ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் குறைந்த பட்சம் ஆறு - ஏழு மணி நேர தூக்கம் கண்டிப்பாக வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அப்படி இல்லையென்றால், அது பலவித உடல் உபாதைகள் மற்றும் மன நல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று கடுமையாகக் கண்டிக்கிறது. அது உண்மையே என்று பலரின் அனுபவங்கள் உறுதிப்படுத்துகின்றன.

ஒரே ஒரு நாள் சரியாகத் தூங்கவில்லையென்றால் கூட, அடுத்த நாள் பகலில் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டே இருக்கும். மனம் நிலையாக இருக்காது. எதைப் பார்த்தாலும், யாரிடம் பேசினாலும் எரிச்சல் எரிச்சலாக, கோபமாக வரும். 
எனில், எப்படி நபிகளும், சஹாபாக்களும் தொடர்ந்து போதிய அளவு தூக்கம் இல்லாமல் தாக்குப் பிடிக்க முடிந்ததுஅவர்களால் முடிந்தது நம்மால் ஏன் முடிவதில்லை என்ற கேள்வி மனதைக் குடைந்து கொண்டே இருந்த சம்யத்தில்தான், கீழ்க்கண்ட ஹதீஸ் கண்ணில் பட்டது!!
இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதும்இஷாத் தொழுகைக்குப் பின்னர் பேசுவதும் வெறுக்கத்தக்க செயலாகும்.  568. அபூ பர்ஸா(ரலி) அறிவித்தார்.

'
நபி(ஸல்) அவர்கள் இஷாவுக்கு முன் உறங்குவதையும் இஷாவுக்குப் பின் பேசுவதையும் வெறுப்பவர்களாக இருந்தனர்.'  Book : 9  ஸஹீஹ்  புஹாரி

இதற்குப் பின்புதான், இப்புதிருக்கு விடை கிடைத்தது.  இஷாவுக்குப் பிறகு பேசக்கூடாதென்றால், உடனே உறங்கிவிட வேண்டும் என்று பொருள்.  இஷா என்பது நமக்கான நாள் முடிந்துவிட்டது என்பதற்கான வரையறை. நமது அனைத்து வேலைகளையும் அத்தோடு முடித்துவிட்டுஉறங்கிவிட வேண்டும்.
அவ்வாறு உறங்கினால், தஹஜ்ஜத் நேரம் வரை தாராளமாக ஆறு முதல் ஏழு மணிநேர தூக்கம் கிடைக்கும்.  தஹஜ்ஜத்திற்கு எழுவது இலகுவாக இருக்கும்.
மருத்துவ ரீதியாகச் சொல்லப்படும் ஏழு மணி நேரத் தூக்கம்என்பதும் இதன் மூலம் சாத்தியப்பட்டு, அறிவியலும், இஸ்லாமும் எப்போது ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல என்றும் நிரூபணமாகிறது.

சில அறிவியல் ஆய்வுகளும், இரவுத் தூக்கம் எவ்வளவு இன்றியமையாதது என்று வலியுறுத்துகின்றன. உதாரணமாக, இரவு நேரத்தில்தான், நம் உடலின் மிக முக்கியமான மெலடோனின்என்ற ஹார்மோன் சுரக்கின்றது. 

இதைச் சுரக்கும் பீனியல்சுரப்பி, கண்ணோடு இயைந்து செயலாற்றுகிறது. அதாவது கண்ணில் ஒளிபடாவிட்டால் மட்டுமே, இச்சுரப்பி மெலடோனினைச் சுரக்கச் செய்யும். இந்த ஹார்மோன், நம் உடலின் தூக்கம்-விழிப்பு சுழற்சியைக் கட்டுப்படுத்தவும், இரத்த அழுத்தத்தைச் சீராக்கவும் செய்வதோடுபெரும் நோய்களான ஹெச்ஐவி, கேன்ஸர் போன்ற நோய்களும் நம் உடலைத் தாக்காவண்ணம் எதிர்ப்பு சக்தியாகச் செயல்படுகிறது. 

இன்ஸுலின்என்ற இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் ஹார்மோனும் இரவு தூக்கத்தைப் பொறுத்தே சிறப்பாகச் செயல்படும். போதிய தூக்கமின்மை, தாம்பத்திய வாழ்வையும், குழந்தை பிறப்பையும் கூட பாதிக்கும்.  மறதி அதிகரிப்பதும், விரைவில் உடலில் வயதாகிப் போன தன்மைகள் வருவதும்இதய நோய்சர்க்கரை நோய், எதிலும் மனம் ஒன்றி கவனம் செலுத்த முடியாமை,  ஆகியவையும் தூக்கமின்மையின் பின்விளைவுகளே. 

ஏன், தூக்கமின்மை  அகோரப்பசியை உண்டாக்குவதால், உடற்பருமனுக்கும் காரணமாகிறது.  சுருக்கமாக, தூக்கமின்மை பாதிக்காத செயற்பாடுகளே நம் உடலில் இல்லை எனலாம். அதன் தொடர்ச்சியாக நம் குணத்தில் - எண்ணங்களிலும் பாதிப்பு ஏற்படுத்தும். ஆம், போதிய தூக்கமின்மை உடல் பாதிப்புகளை மட்டுமல்லாது, மன நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லது. 

சமீபகாலமாக, தமிழகத்தில் மிக இளவயதினர் - எந்த நோயுமில்லாதவர்கள்கூட - திடீர் திடீரென மரணிப்பதைக் காண்கிறோம். இவ்வாறான திடீர் மரணத்திற்கும், தூக்கமின்மைக்கும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்கக் கூடும் என்பதை முழுமையாக மறுக்க முடியாது. 

தனால்தான் அல்லாஹ் தனது திருமறையில்பல இடங்களில்  இரவு தூக்கத்திற்கானது  என்று  மீண்டும் மீண்டும்வலியுறுத்தியுள்ளான்.  இதைக்கூடச் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்று அன்று அதை வாசிக்கும்போது தோன்றினாலும், இன்று இதன் அத்தியாவசியம் புரிகிறது. இன்றைய சமூகம் புரிய வைத்துள்ளது. அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!! 

30:23இன்னும், இரவில்  உங்களுடைய (ஓய்வும்) உறக்கமும்;  பகலில்அவன் அருளிலிருந்து நீங்கள் தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளினின்றும் உள்ளன - செவியுறும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. 

 [78:9]   மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.   

25:47] அவன்தான் உங்களுக்கு இரவை ஆடையாகவும், நித்திரையை இளைப்பாறுதலாகவும் ஆக்கியிருக்கின்றான்; இன்னும், அவனே பகலை உழைப்பிற்கு ஏற்றவாறு ஆக்கியிருக்கிறான்.

தையெல்லாம் அறியாமல், இன்றைய சமூகம் இரவுத் தூக்கத்தையே விட்டொழிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது.  செல்ஃபோன், டிவி, லேப்டாப், பார்ட்டி, சினிமா என்று ஏதாவது ஒன்றில் நம் தூக்கத்தைத் தொலைக்கிறோம்.  

வணக்க வழிபாடுகளில் இரவைச் செலவழித்த நபிமார்கள், கலீஃபாக்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் வழி வந்த நாம் இன்று, வெற்றுக் கேளிக்கைகளில் நம் இரவுகளை - தூக்கத்தைத் தொலைக்கின்றோம்!! இரவுகளில் அதிகமதிகம் வணக்க வழிபாடுகள் செய்தபின்பும்கூட அவசியமான அளவு தூங்கி, உடலையும் மனதையும் பாதுகாத்துப் போஷித்த நம் முன்னோர்கள் எங்கே?

இரவுத் தொழுகை என்ற ஒன்றே இல்லாமல், இரவுகளில்  விழித்து  வீண் காரியங்களில் ஈடுபட்டு உடலையும் மனதையும் சீர்கெடுத்துப் பாழாக்கிக் கொண்டிருக்கும் நம் தலைமுறை எங்கே?

சமரசம் 16-30 ஏப்ரல் 2018 இதழில் வெளியான கட்டுரை.

Post Comment

0 comments: